இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் ‘மல்லிகை’ இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான ‘சுமையின் பங்காளிகள்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் ‘பறவைகள்’ நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனியனின் அழைப்பின் பேரில் உலக இளைஞர் – மாணவர் விழாவிலும் பங்கேற்றவர். 1987ல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த முருகபூபதி, தொடர்ந்து பல்துறை சார்ந்தும் எழுதிவருபவர். இதுவரை பதினெட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உதவும் அமைப்பை கடந்த 20 வருடங்களாக நடத்திவருகிறார். கடந்த பத்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் ‘தமிழ் எழுத்தாளர் விழா’வையும் முன்னின்று நடத்திவருகிறார்.
எதிர்வரும் ஜனவரியில் கொழும்பில் நடக்கவிருக்கும் ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு’ மீது விமர்சனங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கும் சூழ்நிலையில் அம்மாநாடு குறித்து மாநாட்டின் அமைப்பாளரான லெ.முருகபூபதியிடம் கேள்விகளை மின்னஞ்சலூடாக முன்வைத்தேன்.
ஷோபாசக்தி
09.10.2010
- சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வடக்கிலோ கிழக்கிலோ அல்லது மலையகத்திலோ நடத்தாமல் நீங்கள் கொழும்பில் நடத்துவதன் காரணம் என்ன?
எமது மாநாட்டை நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில் நடத்துவதற்கு எமக்கும் விருப்பம் இருந்தது. எனினும் அதற்கான ஒழுங்குகளை செய்வதில் பல சிரமங்கள் நீடிக்கின்றன. முக்கியமாகப் போர் முடிந்து மக்களின் மீள்குடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், தென்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் படிப்படியாக தமது சொந்த நிலங்களிற்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் அப்பகுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதிலிருக்கும் சிரமங்களை நேரடியாகவே பார்த்தேன். நாம் கள ஆய்வு செய்தபின்பே இந்த முடிவுக்கு வந்தோம். மிகவும் முக்கியமான காரணம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரவிருப்பவர்களுக்கான, குறிப்பாக அப்பகுதிகளில் உறவினர்கள் எவரும் இல்லாத தமிழக மற்றும் மலேசியா, சிங்கப்பூர் பிரதிநிதிகளின் வசதிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. கொழும்பில் வாராந்தம் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் நடந்தவண்ணமிருக்கின்றன. எமது மாநாட்டை நான்கு நாட்களுக்கு கொழும்பில் நடத்துவது பலவிதத்திலும் வசதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும். வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இட நெருக்கடிகளையும் பல்வேறு சிரமங்களையும் நாம் உட்பட வருகை தருபவர்களும் எதிர்நோக்க நேரிடும். வடக்கு – கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்வதெனில சிலவேளை பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதிகளைப் பெறவேண்டியுமிருக்கும். எனினும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களில் கொழும்பு மாநாடு முடிந்ததும் இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தும் யோசனை எம்மிடம் உண்டு. அவை இடத்துக்கிடம் ஒருநாள் நிகழ்வுகளாகவும் இலக்கியச் சந்திப்புகளாகவும் அமையலாம்.
- இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன தொடர்புகளுள்ளன?
இதுதான் அண்மைக்காலங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விசித்திரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதே எனது ஆணித்தரமான பதில்.
இலங்கையிலிருக்கும் பல எழுத்தாளர்களின் நீண்ட கால விருப்பம்தான் இந்த எழுத்தாளர் மகாநாடு. கடந்த பதினைந்து வருடங்களில் நான் இலங்கைக்கு பல தடவைகள் சென்று வந்திருக்கின்றேன். பல இலக்கிய சந்திப்புகளில் இவ்வாறு ஒரு மாநாட்டை நடத்துவது குறித்து நானும் சக எழுத்தாள நண்பர்களும் ஆலோசனை நடத்தியிருக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்தி வருகின்றேன். இலங்கை, தமிழகம், உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் வருகைதந்த பல எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியா ஒன்று கூடலில் கலந்துகொண்டிருக்கிறார்கள். புதுவை இரத்தினதுரை, சேரன் உட்படப் பலரை விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன். ஆனால் அவர்களுக்கு வர விருப்பம் இருந்தும் வரமுடியாமல் போனது. ஷோபா உங்களைக்கூட அழைத்திருக்கிறேன்.. நினைவிருக்கிறதா? ஆனால் இலங்கையிலிருந்து எத்தனைபேரைத்தான் எம்மால் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கமுடியும்? விமான டிக்கட்டுக்கான பணவசதி மற்றும் விஸா பிரச்சினைகள்… இப்படி எத்தனையோ இருக்கின்றன. அதனால் விடுமுறை காலத்திலாவது தாயகத்தில் அனைவரும் ஒன்று கூடலாம்தானே என்ற யோசனை உதித்தமையால்தான் இலங்கையைத் தெரிவுசெய்தோம். போர் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்துடன் பல தமிழகப் படைப்பாளிகள், கலைஞர்கள் மட்டுமன்றி புகலிடத் தமிழ் எழுத்தாளர்களும் தனிப்பட்ட பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சென்று திரும்பக்கூடிய சூழ்நிலை இருக்கும்போது எமது ஒன்றுகூடலிலும் அவர்களால் கலந்துகொள்ள முடியும்தானே என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. உதாரணமாக தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ளனர். அங்கு தமிழ் ஊடகங்களில் தமது நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை. அதுபோன்று கலை, இலக்கிய, ஊடகக் குடும்பங்களின் ஒன்றுகூடலாகவும் அதேசமயம் அனுபவப் பகிர்வு நிகழ்வாகவும் இந்த மாநாடு அமையவேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக இருக்கிறது.
- இந்த மாநாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவதற்கு ஏதாவது செயற்திட்டங்களை வைத்திருக்கிறீர்களா? அல்லது இந்த மாநாடு வெறும் ஒன்றுகூடலும் இலக்கியச் சுற்றுலாவும் மட்டுமா ?
இது வெறுமனே ஓர் ஒன்றுகூடல் கிடையாது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மாநாட்டுக் குழு மிகத் தெளிவாக பன்னிரெண்டு செயற் திட்டங்களை வகுத்துக்கொண்டுள்ளது
தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம் – Copy editing) கலையை வளர்த்தெடுப்பது, தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணி வளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேசரீதியாக அறிமுகப்படுத்தல், தமிழ் இலக்கிய படைப்புகளை ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது, இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (Trust Fund) உருவாக்குவது, தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது, தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல், நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலை – இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல், தமிழ் எழுத்தாளர்கள் – இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் – இதழாளர்கள் – ஊடகவியலாளர்கள் – ஓவியர்கள் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை உருவாக்குதல், இலங்கையிலும் சர்வதேசரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல், அத்துடன் சிறுவர் இலக்கியத்துறையை மேம்படுத்துதல், குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல், ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, கணினிக்கலை (Graphics ) முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்விதமான காட்சிப்படுத்தும் (Demonstration ) கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல், கூத்துக்கலை – நாடகம் – சிறுவர் நாடகம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறை ஆகியனவற்றையும் அரங்காற்றுகைகளையும் நடத்துதல் ஆகியவையே அந்தச் செயற்திட்டங்கள். இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இம்மாநாடு ஒரு திறப்பாகவும் களமாகவும் அமையும் என நம்புகிறோம்.
- விழாவிற்கான நிதியை எவ்விதம் திரட்டப்போகிறீர்கள்? விழாவின் முன்தயாரிப்பு வேலைகளிற்காக இதுவரை செலவிடப்பட்டிருக்கும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது?
27 டிசம்பர் 2009 தினக்குரல் இதழில் இதற்கான பதிலை நான் ஏற்கனவே விரிவாகக் கூறியுள்ளேன். அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியவாதிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கடந்த பத்து ஆண்டுகளாக எழுத்தாளர் விழாக்களை நடத்திய அனுபவம் எனக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் இருக்கிறது. அதேபோன்று உலகெங்கும் பரந்துவாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட கலை, இலக்கிய ஆர்வம் மிக்க நண்பர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றே இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நடத்தப்போவதாக அந்த நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். இதே கருத்தையே 03.01.2010 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்திருக்கிறேன். புலம் பெயர்ந்து வாழும் எமது கலை, இலக்கியவாதிகளான நண்பர்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக கொழும்பில் இம்மாநாட்டுக்காக நாம் ஒரு வங்கிக் கணக்கும் தொடக்கியுள்ளோம். இது குறித்துப் பலருக்கும் அறிவித்துமிருக்கின்றோம். இந்த தகவல்கள் சில இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இதுவரையில் நடந்த செலவுகளுக்கான நிதியுதவியை நானும், கொழும்பில் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கும், ‘ஞானம்’ ஆசிரியர் தி. ஞானசேகரனும் வழங்கியிருக்கிறோம். கடந்த ஜனவரி 3ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான செலவுகள் உட்பட பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை கூட்டத்திற்கு ‘ஓட்டோ’வில் ஏற்றி வந்த செலவுகளையும் நானே பொறுப்பேற்றேன். பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அனைவருக்குமான மதிய உணவுச் செலவுகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம், ஹட்டன், திருகோணமலை முதலான பிரதேசங்களில் நடந்த மாநாடு தொடர்பான தகவல் அமர்வுக் கூட்டங்களுக்கு ஞானசேகரன் தமது சொந்தச் செலவில் சென்றுவந்தார். இந்தச் செலவுகள் உட்பட மாநாட்டுச் செலவுகள் பற்றிய வரவு – செலவு அறிக்கை மாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரின் மேற்பார்வையுடன் நிதியுதவி, நன்கொடை தருபவர்களுக்கு வழங்கப்படும்.
இதுதான் உண்மையே தவிர இம்மாநாட்டுக்கு இலங்கை அரசே நிதி பெய்கிறது என்ற செய்திகள் வெறும் வதந்தியே. இந்த வதந்திச் செய்திகளைப் பரப்புவர்கள் அவர்கள் பரப்பும் செய்திகளிற்கு ஆதாரங்களை வழங்க முடியாத நேர்மையற்றவர்கள்.
- ‘குமுதம் ரிப்போட்டர்’ இதழ் விழாச் செலவுகளையும் பயணச்சீட்டுகளையும் எழுத்தாளர்களிற்கான சுற்றுலாவையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக எழுதியுள்ளதே. நீங்கள் குமுதம் ரிப்போட்டருக்கு எதிர்வினை செய்திருக்கிறீர்களா?
ஷோபா! கருத்துக்களுக்குப் பதில் சொல்லலாம். ஆனால் கற்பனைகளுக்கு எப்படிப் பதில் சொல்லமுடியும். குமுதம் ரிப்போட்டரில் அப்படியான அவதூறு தகவல் வருவதற்கு முன்னர் எங்களது மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரை, நாம் இலங்கை அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கி மகாநாடு நடத்தவிருப்பதாக ‘கீற்று’ இணையத்தில் அபாண்டமாகப் பழி சுமத்தினார். என்னைப்பற்றி நீண்டகாலமாக நன்கு தெரிந்த ஒருவரே இப்படி உண்மைக்குப்புறம்பாக அவதூறு பரப்பித் திரியும்போது என்னையோ மற்றும் இந்த மகாநாட்டில் இணைந்து பணியாற்றும் எவரையுமே தெரிந்திராத குமுதம் ரிப்போட்டருக்கு வழக்கம்போலவே பரபரப்புக்கு ஒரு செய்தி தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். எஸ்.பொன்னுத்துரை ‘தீராநதி’ இதழிலும் (செப்டெம்பர்) தனது எள்ளல்களைத் தூவியிருந்தார். அதற்கு ‘தீராநதி’ அக்டோபர் இதழில் எனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளேன். குமுதம் ரிப்போட்டரில் சொல்லப்பட்டிருப்பதுபோல் எவருக்கும் இலங்கை அரசு விமானச் செலவுக்கும் இதர சுற்றுலாச் செலவுக்கும் பணம் கொடுத்திருந்தால் அதனைப் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் விபரங்களை ‘குமுதம் ரிப்போட்டர்’ வெளியிடலாம்தானே? Investigation Journalism செய்யும் ‘குமுதம் ரிப்போட்டர்’ இதனையும் துப்புத்துலக்கி வெளியிடலாம்.
எதிர்க்கவேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முன் தீர்மானங்களுடன் இயங்குபவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு கீற்று இணையமும் குமுதம் ரிப்போட்டரும் இன்னுஞ் சில இணையங்களும் உதாரணங்கள். அவ்வளவுதான். இவர்களுக்கெல்லாம் உட்கார்ந்து வரிக்குவரி எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தால் எமது மாநாட்டுப் பணிகளை யார்தான் செய்வது? அப்படியாயின் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்கும் நாம் ஒரு குழுவைத் தெரிவுசெய்ய வேண்டும். மாநாட்டை சீரியமுறையில் நடத்தி முடிப்பதுதான் நாம் இவர்களுக்கெல்லாம் சொல்லும் பதிலாக இருக்கமுடியும்.
- விழாவில் இலங்கை அரசின் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கத்தினரோ கலந்துகொள்வார்களா?
இதுவரையில் நாம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இது எழுத்தாளர்களின் மாநாடு. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எமது மாநாட்டு நோக்கங்களில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.
- இலங்கையில் எழுத்தாளர்களால் எதையும் சுதந்திரமாகப் பேசிவிட முடியாத நிலையிருக்கையில் இந்த மாநாடு சாதிக்கப் போவது என்ன என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன?
மீண்டும் எமது நோக்கங்களையே பாருங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று நாம்தான் வெளியிலிருந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கின்றோம். இதே சுதந்திரம் போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர் வடக்கிலிருந்ததா? கிழக்கிலிருந்ததா? குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இருந்ததா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து சுதந்திரமாக எழுதுவது போன்று, பேசுவது போன்று உங்களால் வடக்கிலிருந்து முன்பு பேச முடிந்ததா? எழுத முடிந்ததா? இந்த அவலச் சூழல்களிற்கும் உள்ளேயிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களை நாம் கைவிட்டு விடுவதா?
இன்று இலங்கையில் எழுத்தாளர்களின் தேவைகள் என்ன? அவர்களில் போரினால் அல்லது வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? அவர்களின் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான எதிர்காலத்திற்கு நாம் தரப்போகும் நம்பிக்கைகள் என்ன? வன்னியில் எத்தனை பாடசாலைகள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.? இந்தக் கவலைகள் எத்தனை புலம்பெயர் எழுத்தாளனிடமிருக்கிறது? வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கையேந்திக்கொண்டிருக்கும் நாளைய தலைமுறை எமது படைப்புகளை, எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்றால் அவர்களைப் பார்ப்பதற்காகவாவது மனிதாபிமானம் பற்றி வெளிநாடுகளிலிருந்து எழுதுபவர்கள், பேசுபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது வந்து பார்க்கலாம்தானே. அந்தப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழ்வதற்கு, முதலில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பற்றி நாம் சிந்திக்கின்றோமா? எத்தனை புகலிட, ஈழத்துப் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த சிந்தனைகள் இருக்கின்றன? தங்கள் நூல்களை வெளியிடுவதிலும் அதற்கு விளம்பரம் தேடுவதிலும் ஆர்வம்கொண்டிருப்போர் ஈழத்தில் வருங்கால தலைமுறை குறித்து ஏதும் ஆக்கபூர்வமாக செய்ய முன்வருவார்களா?
நாம் மகாநாட்டு நோக்கங்களுக்காக ஒரு நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துள்ளோம். அதன் பிரகாரம் மாநாடு நடைபெறும். இம்மாநாடு இலங்கையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. முதலாவது மாநாட்டைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாநாடு எந்தெந்த நாடுகளில் நடைபெறப்போகிறதோ அதற்கான அமைப்புக் குழுக்களும் தெரிவுசெய்யப்படும். எனவே வருகைதரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இயங்கவேண்டியிருப்பதனால் நாம் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
- மாநாட்டின் மீது விமர்சனங்களை வைத்த நமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.மீதும் அதை வெளியிட்ட ‘கீற்று’ இணைய இதழ் மீதும் நீங்கள் வழக்குத் தொடுக்கப்போவதாக எழுதியிருந்தீர்கள். எழுத்தாளர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படும் விமர்சனங்களையும் நடக்கும் கருத்துப் போர்களையும் நீதிமன்றம்வரை எடுத்துச் செல்வது எவ்வளவு தூரம் சரியானது என நீங்கள் கருதுகிறீர்கள்? இவை எழுத்துப் பரப்பிலேயே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளல்லவா?
எஸ்.பொ. கீற்று இணைய இதழில் கருத்தா சொல்லியிருந்தார்? அவர் விஷம் கக்கியிருந்தார். நீங்களும் அவர் ஏதோ கருத்துச் சொல்லியிருப்பதாக அல்லவா பார்க்கிறீர்கள். ‘லஞ்சம்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியதன் மூலம் எமது எழுத்தாளர்கள் அனைவரையுமே அவமானப்படுத்தியிருக்கிறார். அவருடன் இந்த மகாநாடு சம்பந்தமாகத் தொடர்புகொண்டு பேசுவதற்குப் பல தடவைகள் முயன்றேன். அது அவருக்கு நன்கு தெரியும். ஒரு மூத்த படைப்பாளி என்ன செய்திருக்கவேண்டும்? என்னுடன் கலந்துரையாடியிருக்கலாம். அல்லது அவருக்கு நன்கு நெருக்கமான எமது மாநாட்டு இலங்கை இணைப்பாளர் ‘ஞானம்’ ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஆரோக்கியமான புரிந்துணர்வுடன் எதனையும் முன்னெடுக்காமல், நாம் கொழும்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஏழு மாதங்கள் கடந்தபின்னர் திடீரென்று ‘கீற்று’ இணைய இதழில் பரபரப்பாக, உண்மைக்குப் புறம்பாக எழுதும்போது நாம் என்ன செய்ய முடியும்? சொல்லப்பட்ட அவதூறை நிரூபியும் அல்லது மானநட்ட வழக்கைச் சந்திக்க நேரும் என்றுதானே சொல்லமுடியும்.
பொன்னுத்துரை எழுத்துப்பரப்பிலே தீர்த்துக்கொள்ளத்தக்க கருத்துக்களையா முன்வைத்தார்? தயவுசெய்து எனது ‘தீராநதி’ பதிலைப் படியுங்கள். ஒன்றுக்கொன்று முரணாக, பரபரப்புக்காகவே அவர் செய்த திருகுதாளம்தான் அந்த வஞ்சனையான கூற்றுகள். சகோதர எழுத்தாளர்களைக் காயப்படுத்துவதில் அவர் கைதேர்ந்தவர். அவரது வரலாற்றில் எத்தனைபேரை இப்படி அவதூறு பொழிந்து காயப்படுத்தியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஏன் சுமார் ஏழு மாதங்கள் கடந்து இப்படி விஷம் கக்கினார் என்பதன் ரிஷிமூலம் எமது மாநாட்டின் பின்னர் வெளியாகும். அதுவரையில் பொறுத்திருங்கள்.
- இந்த மகாநாட்டை நீங்கள் நடத்தத் திட்டமிட்டபோது யார் யாருடன் கலந்தாலோசனை செய்தீர்கள்? உங்களது திட்டத்திற்கு அவர்களின் எதிர்வினை எவ்வாறிருந்தது.?
இலங்கையில் மல்லிகை ஆசிரியரும் மூத்த படைப்பாளியுமான டொமினிக் ஜீவா, ஞானம் சிற்றிதழின் ஆசிரியர் உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை பிரதேசங்களையும் சேர்ந்த பல படைப்பாளிகள், இலக்கியவாதிகளான சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வீரகேசரி – தினக்குரல் – தினகரன் ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள்… இப்படிப் பலருடனும் இலங்கை செல்ல முன்னரே கடந்த வருடத்தின் இறுதியில் பல நாட்கள் உரையாடியிருக்கின்றேன். இந்தப் பட்டியலில் சுமார் நூறு பேர்கள் இருப்பார்கள். அத்துடன், அவுஸ்திரேலியா, கனடா, அய்ரோப்பிய நாடுகளில் வதியும் எழுத்தாளர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.
கனடாவில் பூரணி மகாலிங்கம், பொ.கனகசபாபதி, உட்பட பலருடனும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். சேரன், செல்வா கனகநாயகம். அ.முத்துலிங்கம், ரஞ்சகுமார், கனடா உதயன் லோகேந்திரலிங்கம், தேவா ஹெரால்ட், ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, நிலக்கிளி பாலமனோகரன், டென்மார்க் ஜீவகுமாரன், தருமகுலசிங்கம், நூலகர் செல்வராஜா, மு.நித்தியானந்தன் அளவெட்டி சிறிசு கந்தராஜா, நான்காவது பரிமாணம் நவம், வி.ரி. இளங்கோவன் உட்பட பலர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டனர். சிலர் வரமுடியாதிருப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விஸா சம்பந்தப்பட்ட காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருமே இது ஒரு நல்ல முயற்சி என்றுதான் பொதுவாகவே சொன்னார்கள்.
தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம் கூட கடந்த பெப்ரவரி மாதம் வரவேற்று எழுதியிருந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு பலரும் என்னுடன் கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தனி ஜீவா உட்பட பலர் எனக்குக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் மகாநாட்டுப் பணிகளில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். மேமன் கவி, ஸ்ரீதரசிங், திக்குவல்லை கமால், பேராசிரியர்கள் எம்.ஏ. நுஃமான், மௌனகுரு, மல்லிகை ஜீவா, ஓ.கே. குணநாதன், அன்னலட்சுமி ராஜதுரை, வசந்தி தயாபரன், தெணியான், கலாமணி, பத்மா சோமகாந்தன், ஜின்னாசரிபுதீன் மற்றும் பத்திரிகை – ஊடக நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசித் தொடர்பில் இருக்கின்றேன். சிலரது கடிதங்கள் ‘மல்லிகை’, ‘ஞானம்’ உட்பட சில ஊடகங்களிலும் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
நான் தொடர்புகொண்டவர்களிடமிருந்து எனக்குப் பெருத்த ஆதரவே கிடைத்தது. அவர்கள் பயனுள்ள யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
- இப்போது மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு விடயத்தில் செய்ததுபோலவே ஒரு அந்தர் பல்டியடித்து இந்த மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறதாகக் கருதுகிறீர்களா?
பேராசிரியர் சிவத்தம்பி நான் பெரிதும் மதிக்கும் கல்விமான். இலங்கை செல்லும்போதெல்லாம் அவரை நான் சந்திக்கத் தவறுவதில்லை. அவர் என்னிடத்தில் எத்தகைய அன்பு வைத்திருக்கிறார் என்பது பரஸ்பரம் எம்மிருவருக்குமே தெரியும். அவரிடம் நான் வைத்திருக்கும் அளவற்ற மரியாதை குறித்து என்னை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எனினும் அவரது முரண்பாடான சில கருத்துக்கள் சகிக்க முடியாதவைதான். கொழும்பில் ஜனவரி 3ம் திகதி மாநாட்டுக்கான திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் சொன்ன கருத்துக்கள், அவை வெளியான இதழ்கள் அனைத்தும் நான் கைவசம் வைத்திருக்கின்றேன். அவர் அந்தர்பல்டி அடித்து இந்த மாநாட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொன்னதும், நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “என்ன சேர்… இப்படிக் காலை வாரிவிட்டீங்களே?” என்றுதான் கேட்டேன். அதற்கு அவர், “”இந்த மகாநாட்டை நானும் சேர்ந்து நடத்துவதாகப் பொன்னுத்துரை சொல்றானடாப்பா! நீங்கள் வந்து பேசச் சொன்னீங்க… வந்து பேசினேன். இப்ப உன்னோட ரெலிபோனில எல்லாத்தையும் கதைக்க ஏலாது, யாரையாவது வந்து என்னைச் சந்திக்கச் சொல்லு.” என்றார். சிவத்தம்பி அப்படிச் சொன்னதற்கும் பொன்னுத்துரைதான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.
பொன்னுத்துரை, “பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களினால் நடத்தப்படும் மாநாடு” என்றும் சொல்லிவிட்டார் அல்லவா! ஏற்கனவே சிவத்தம்பி கலைஞருடைய அழைப்பால் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றுவந்து ஏச்சுப்பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார். பொன்னுத்துரை அப்படிச் சொன்னதும் அதிலிருந்து தப்பிக்க ஏதாவது சொல்லவேண்டும்தானே. அவர் மட்டுமல்ல, எஸ். பொன்னுத்துரை எமது மாநாட்டுக்கு வந்தாலும் நாம் அன்புடன் வரவேற்கத் தயாராகத்தான் இருக்கின்றோம்.
நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததைப் பகிர்ந்து, அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் தமிழ் இலக்கிய வளர்சிக்கான சில பணிகளை முன்னெடுக்கவுமே நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.
- நேரடியான அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று எழுதிக்கொண்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கூட மகாநாட்டுக்கு வர மறுத்துள்ளார்களே?
அவரது பெயரும் குறிப்பிடப்பட்டு ‘கீற்று’ இணையத்தில் அந்தச் செய்தி வெளியானதும் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்டநேரம் உரையாடினேன். அதுவரையில் நானும் இந்த மாநாட்டின் பின்னணியிலிருப்பது அவருக்குத் தெரியாது. ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் நான் அவருக்கு விளக்க நேர்ந்தது.
இப்படித்தான் ‘ஸீ தமிழ் தொலைக்காட்சி’ கலாநிதி மற்றும் ‘ஜூனியர் விகடன்’ கதிர், கவிஞர் தாமரை ஆகியோருக்கும் விளக்க நேர்ந்தது. அவர்களுக்கு மின்னஞ்சலூடாகவே கடிதங்களை அனுப்பியிருந்தேன். அதனால் தாமரைக்கு அனுப்பிய கடிதம் பா. செயப்பிரகாசம் உட்பட பலருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலிருக்கும் கருணாகரமூரத்தியுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசியிருக்கின்றேன். அவருக்கும் மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் இருந்தது. பொன்னுத்துரையின் அபாண்டப் பழிச்சொற்களுக்குப் பிறகு அவரும் உங்களைப் போன்று என்னிடம் துருவித் துருவி விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படியே பலருக்கும் விளக்கம் சொல்வதிலேயே எனது பொழுது கழிந்திருப்பின் எனது நிலை என்ன என்பதைச் சீர்தூக்கிப்பாருங்கள்.
சந்தேகம் பொல்லாத வியாதி. முதலில் எவருக்கும் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். பிறகு மற்றவர்கள் மீது புரிந்துணர்வுள்ள நம்பிக்கை தோன்றவேண்டும். இல்லையேல் தாமும் சோர்ந்து மற்றவர்களையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.
2020ம் ஆண்டளவில் உலகை இந்த ‘சோர்வு’ என்ற கொள்ளை நோய்தான் ஆக்கிரமிக்கப்போகிறது என்று சமீபத்தில்தான் படித்தேன்.
- இந்த மாநாடுக்கு எதிராக இதுவரை ஈழத்திலிருக்கும் எழுத்தாளர்கள் பகிரங்கமாகவோ அல்லது உங்களிடம் நேரடியாகவோ எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளார்களா?
ஒரே வார்த்தையில் ‘இல்லை’ என்பதுதான் எனது பதில்.
- எஸ்.பொ.வின் கண்டனம் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச எழுத்தாளர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை இவற்றின் பின்னால் உண்மைகள் இல்லாத பட்சத்தில் அவர்கள் இவ்வாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராகத் தீவிரமாகப் பரப்புரை செய்வதன் காரணமென்ன?
அவர்களைத்தான் கேட்கவேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக உணர்வுபூர்வமாகச் சிந்தித்தவர்கள் தமிழக எழுத்தாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பொன்னுத்துரை சகட்டுமேனிக்கு பொய்யும் புரட்டும் சொன்னதும் அவரது கூற்றுக்களை உண்மை என்று அவசரப்பட்டு நம்பிவிட்டார்கள். யாருக்காவது பொன்னுத்தரையிடம், நீங்கள் வைக்கும் குற்றசாட்டுகளிற்கு ஆதாரம் என்ன? என்று திருப்பிக் கேட்கத் தோன்றவில்லை. சரவணன் என்பவர் மாத்திரம் கீற்று இணையத்தில் நிதானமாகக் கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
- இதுவரை தமிழ்த் தேசியவாதச் சாயம் பூசிக்கொண்டவர்கள் மட்டுமே மாநாட்டை விமர்சித்தார்கள். ‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ என்றொரு அமைப்புக் கூட எழுத்தாளர் விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது இடதுசாரியச் சிந்தனைகொண்டவராக அறியப்படும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் கண்டனக் களத்திலும் கையெழுத்துச் சேகரிப்பிலும் இறங்கியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?
இந்த மாநாட்டோடு ஒபாமாவுக்கு என்ன கருத்துவேறுபாடு என்பது புரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல புதிய அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. இதில் பொதுநல நோக்கின்றி அவர்களது சுய தேவைகள் கருதி உருவான அமைப்புகளும் உள்ளன. ஈழத்து இலக்கிய உலகு பற்றியோ, புகலிட இலக்கியம் பற்றியோ இதுவரையில் அக்கறை காண்பிக்காதவர்களும்கூட எமது மாநாடு பற்றித் தெரிந்தவுடன் தத்தமது அமைப்புகளின் ஊடாக அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாவது அவர்களுக்கு ஈழத் தமிழ் இலக்கியம், எழுத்தாளர் ஒன்று கூடல் பற்றிய பிரக்ஞையை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்ற ஆறுதல் எமக்குண்டு.
யமுனா ராஜேந்திரனின் நிலையும் எஸ். ராமகிருஷ்ணனின் நிலை போன்றதுதான். பொய்யுரைகளை நம்பினார்களேயன்றி பகுத்தறிந்து, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் குறைந்தபட்சம் சிறு உரையாடலைக்கூட நடத்தாமல் உணர்ச்சி வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளனர். வெற்று உணர்ச்சிகளினாலேயே நாம் மிகப் பெரிய அவலங்களைச் சந்தித்திருக்கின்றோம். விவேகத்துடன் இயங்குவதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்காவது நம்பிக்கையைக் கையளிக்க முடியும் என நம்புகின்றேன்.
- இந்த மகாநாட்டை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதா? அவ்வாறு எடுத்தால் அது சரியானது என நீங்கள் கருதுகிறீர்களா?
மீண்டும் எமது நோக்கங்களைப் பாருங்கள். இலங்கை அரசு இலங்கை மக்களின் வரிப்பணத்திலும் மக்களின் வாக்குகளிலும் இயங்குகிறது. அரசிடம் எதனை முன்னிட்டும் மக்கள் கோரிக்கைகளை முன்வைப்பது அடிப்படை உரிமை. குறிப்பாக ‘மானியம்’ பற்றி அறிந்திருப்பீர்கள். மேலை நாடுகளில் அரசுகள் பல்தேசிய கலாசார ஆணையங்கள் மூலம் கல்வி, கலை, இலக்கிய, கலாசாரப்பணிகளுக்காக மானியங்கள் ஒதுக்குவதை அறிந்திருப்பீர்கள். இலங்கையில் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியனவற்றில் இயங்கும் நூலகங்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக மானியம் வழங்கி நூல்களைக் கொள்முதல் செய்ய உதவும் நடைமுறை இருக்கிறது. இது சீராக நடைபெறுகிறதா என்பது குறித்துச் சில விமர்சனங்கள் இருக்கின்றன என்பது வேறு. தமிழகத்தில் நூலக அபிவிருத்திச் சபை மூலம் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை அறிவீர்கள். வணிக இதழ்கள் தவிர்ந்த சில இலக்கிய சிற்றிதழ்களுக்கும் அரசின் ஆதரவு இந்த விநியோகத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையிலும் இப்படியான மானிய உதவியை அரசிடம் கோருவதில் ஏதும் தவறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? இதுவிடயத்தில் அரசுடன் பேசவேண்டிய தேவை இலங்கையில் நீண்டகாலம் சிற்றிதழ்களை நடத்துபவர்களுக்கு உண்டு. அதனால் அதனை வலியுறுத்துவதும் அதற்காக அரசுக்கு அழுத்தம் பிரயோகிப்பதும் எமது கடமைகளில் ஒன்றென நினைக்கின்றோம்.
- இந்த மகாநாடு குறித்து இதுவரை அரசு தரப்பிடமிருந்தோ அதிகார வர்க்கத்திடமிருந்தோ விழாக் குழுவினருக்கு ஏதாவது அழுத்தங்கள் வந்துள்ளனவா?
இதுவரையில் இல்லவே இல்லை. இப்படி ஒரு மாநாடு நடக்கவிருக்கும் தகவலே இனிமேல்தான் தெரியவரலாம். கலை, இலக்கிய ஆர்வம் உள்ள பல தமிழ், சிங்கள, முஸ்லிம் எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் கூட நாம் இதுவரையில் இதுபற்றி இன்னமும் பேசவில்லை என்பதும் உண்மை.
- எழுத்தாளர் மாநாட்டில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் மகிந்த குடும்பத்தினரின் அராஜக ஆட்சி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்புள்ளதா?
இதுதான் மிகமிகச் சுவாரஸ்யமான கேள்வி. கண்ணதாசனின் பாடல்வரி ஒன்று இருக்கிறது. “இருக்கும் இடத்திலிருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே”. வெளியிலிருந்துகொண்டு சௌகரியமாக எதுவும் கேட்கலாம். சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாமல், முடங்கியிருந்துகொண்டு ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும். சூப்பர் ஸ்டாரின் எந்திரன் பட வசனகர்த்தாவிடம் இப்படி ஒரு கேள்வியை நிச்சயமாகக் கேட்கமாட்டீர்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரின் படங்களில் என்ன வசனங்கள் எப்படி வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களிலும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வசூலைக் குவித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் ஒன்றுகூடல் போன்ற அனுபவப் பகிர்வின் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பும் படைப்பாளியோ, கலைஞனோ ஊடகவியலாளனோ நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்கள் கூட அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எரியும் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் தன்னைத்தானே தகனம் செய்துகொள்ளவேண்டும் என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள், கட்டளையிடுகிறீர்கள்.. இது என்ன நியாயம்? இது கொடுமை.
- இந்த மாநாட்டை இந்தியாவில் நிகழ்த்தாமல் யுத்தக் குற்றவாளியான இலங்கை அரசின் தலைநகரில் ஏன் நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வியில் நியாயமில்லை என்றா கருதுகிறீர்கள்?
இவ்வளவு காலமும் இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் இப்படி ஒரு மாநாடு பற்றிச் சிந்திக்கவில்லை.? இந்திய திரைப்படங்கள், இந்திய நூல்கள் இலங்கை வரலாம், விற்பனையாகலாம். ஆனால் ஈழத்து நூல்கள், ஈழத்துத் தமிழ் திரைப்படங்கள் அங்கு சந்தை வாய்ப்பை பெற முடியாது. இதுதான் இந்திய மத்திய அரசின் சட்டம். இதுபற்றி இதுநாள் வரையில் எந்தவொரு இந்தியத் தமிழ் எழுத்தாளனோ கலைஞனோ சிந்தித்திருப்பானா? தாய் நாடு – சேய் நாடு என்று சொல்லிச் சொல்லியே எங்களை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம். காலம்பூராவும் வல்லாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தொங்குதசையாகவே நமது ஈழத்து கலை, இலக்கிய உலகம் வாழவேண்டும் என்பது எழுதாத விதியா?
இப்படிச் சொல்வதனால் என்னைப் பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இந்தியா எமது அயல்நாடு. தமிழக படைப்பாளிகள் பலர் எமது இனிய நண்பர்கள். அவர்கள் இலங்கை வரும்போதும் புகலிட நாடுகளுக்கு வருகைதரும் போதும் ஏற்றிப்போற்றுகின்றோம்.
தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வித்திட்ட எங்களது அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரையே அவர்கள் மறந்துவிட்டார்களே!
நவாலியூர் சோமசுந்தரப் புலவரை தெரியாதவர்கள் பலர் தமிழகத்தில் ஊடகங்களில் இருக்கிறார்கள் என்ற தகவல்கூட சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. “ஆறுமுக நாவலரைத் தெரியாது, நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்” என்றாரே பயணக்கதை மன்னன் மணியன். ஈழத்துப் படைப்புகளுக்கு அடிக்குறிப்பு போட வேண்டும் எனறாரே கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா. இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இலங்கையில் தமிழர்கள் இரத்தம் சிந்தி உயிரைத் துறந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள், தக்கவைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழன் பாதுகாப்பின் நிமித்தம் ஏதிலியாக ஓடியபோதும் தமிழைக் கைவிடவில்லை. தமிழ் இலக்கியத்தை விட்டு விட்டு ஓடவில்லை. இந்தியச் சினிமா, இந்தியப் பதிப்பகங்களின் வெளிநாட்டு சந்தைக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்தான் இருக்கிறார்கள். இலங்கை தலைநகர் பற்றிக் கேட்கிறீர்கள், எண்பது வருடங்கள் கடந்தும் கொழும்பில் வீரகேசரி என்ற தமிழ்த் தேசிய தினசரி தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த எண்பது வருடகாலத்துள் 1958, 1977, 1981, 1983 வந்து போயிருக்கிறது. இனக் கலவரங்கள் வந்துற்றபோதும் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் விழாக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. வருடந்தோறும் ஆடி மாதம் வேல் ரதம் காலி வீதியில் நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஏராளமான தமிழ்ப் பாடசாலைகள் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன.
- முருகபூபதியின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் என்ன?
முருகபூபதி அரசியல்வாதியோ, வியாபாரியோ, பிரமுகரோ இல்லை. முழுமையான இலக்கியவாதி. சிறிதுகாலம் வீரகேசரியில் பணியாற்றியமையால் ஒரு பத்திரிகையாளன் என்ற முகமும் உண்டு. மனிதாபிமானம்தான் எனது இயங்குதிசை. அந்த நிலைப்பாடு என்னிடமிருப்பதனால்தான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் பணிகளில் பலருடன் இணைந்திருக்கின்றேன். எனது இலக்கிய செயற்பாடுகளும் மனிதாபிமானம் சார்ந்ததுதான். சுருக்கிச் சொல்வதெனில் மானிட நேயம்தான் எனது அரசியல்.
கக்கூசு சரியில்லை எண்டு காமன்வெல்த்துக்கு போக மறுக்கும் விளையாட்டு வீரர்களா எழுத்தாளர்கள்?அவர்கள் அப்படிச் சொல்வதற்கு கூட அடிப்படை தொழில் முறை சார்ந்த நியாயம் இருக்கிறது ஆனால் எழுத்தாளர்கள் இலங்கை வரை போகலாம் அனால் கிழக்குக்கோ வடக்குக்கோ செல்லவதற்கு வசதிகள் போதாது என்ற காரணத்தை எதால் சிரித்துக் கொண்டு ஏற்றுக்கொள்வது?
வெளி நாடுகளில் இருந்து வரும் எழுத்தாளர்களுக்கு வடக்கு கிழக்கில் உறவினர்கள் இருக்க மாட்டார்களாம் சரி அப்படியானால் வருகின்ற எல்லோருக்கும் கொழும்பில் உறவினர்கள் இருக்கிறார்களா அல்லது கொழும்பில் உறவினர்கள் இருப்பவர்கள் மட்டும் தான் அழைக்கப்படுகிறார்களா?
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கிழக்கு வடக்குக்கு பயணம் செய்ய பாதுகாப்பு அனுமதி பெற வேண்டி இருப்பதில் சிக்கல் இருக்குமாம் – ஏன் ஐயா நீங்கள் என்ன ஏஜென்சி மூலமாகவா எழுத்தாளர்களை கள்ளவிசாவில கொண்டுபோறீங்கள்? எல்லோரும் தங்கட நாட்டு எம்ம்பசியில போகும் காரணத்தை தெளிவாய் குறிப்பிட்டுதானே போகிறார்கள் பிறகு எப்படி அங்கை போறதில சிக்கல் எண்டுறியள். ஓகே அப்பிடி வெளிநாட்டு எம்பசியில ஒரு நடைமுறையும் உள்ளுரில வேறொரு நடைமுறையும் இருக்கிற ஒரு இழவெடுத்த நாட்டுக்கு எதுக்கு போறீங்க கூட்டம் போட?. மாநாடு நிறைவடைந்ததும் அகில இலங்கைச் சுற்றுலாவுக்கு எல்லா இடமும் போக முடியும் ஆனா மாநாட்டுக்குத்தான் கிழக்கேயும் வடக்கேயும் போக முடியாது எண்டா அவிப்பொருளுக்கு ஆசைப்படும் கூட்டத்தை வாழ்த்த முடியவில்லை! வணங்குகிறோம்!!.
மாநாட்டுத் திட்டங்களை பார்க்கும் போது இலக்கிய மறுமலர்ச்சி ஒன்றே எமக்கு இப்போது உடனடித் தேவையாயிருப்பது புலனாகிறது. இலங்கையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின், முடமானவர்களின், வாழ்வாதாரம் பறிக்கப்பட்டவர்களின், சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் உத்தேசக் கணக்கை கூட வெளியிட அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது – அது குறித்து பேசும் பத்திரிக்கை, ஊடகம், எழுத்து, பேச்சு எல்லாமே முடக்கப்பட்டிருக்கிறது இந்தப் பின்னணியில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (Trust Fund) உருவாக்குவது மட்டுமே மாநாட்டுதீர்மானமாக போனால் போகட்டும் என்று போர் குறித்து இயற்கைஅனர்த்தத்திற்கு பின்னால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது – இது குறித்து இலக்கியமோ எழுத்தோ மக்கள் வாழ்க்கை குறித்ததும் அதன் நுட்ப அரசியல் குறித்ததென்றும் நம்பும் எழுத்தாளர்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அடையலாம்.
// எழுத்தாளர் மாநாட்டில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் மகிந்த குடும்பத்தினரின் அராஜக ஆட்சி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்புள்ளதா? //
இந்தக் கேள்விக்கு அளிக்கப்பற்றிக்கும் பதிலில் // ஒன்றுகூடல் போன்ற அனுபவப் பகிர்வின் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பும் படைப்பாளியோ, கலைஞனோ ஊடகவியலாளனோ நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்// என்கிறார் பின்ன என்ன மயிருக்கு சமூகத்தின் மனச்சாட்சி எண்டும் அவலத்தின் கண்ணாடி எண்டும் எழுத்தைச் சொல்லிக்கொண்டு கூட்டம் போடுறியள்? வளைஞ்சு குடுக்கிறதுக்கும் வழிச்சு நக்கிறதுக்கும் எழுத்தாளப்பட்டம் ஒரு கேடோ?
// இதே சுதந்திரம் போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர் வடக்கிலிருந்ததா? கிழக்கிலிருந்ததா? குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இருந்ததா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து சுதந்திரமாக எழுதுவது போன்று, பேசுவது போன்று உங்களால் வடக்கிலிருந்து முன்பு பேச முடிந்ததா? எழுத முடிந்ததா? // ஐயா அந்தச் சுதந்திரம் ஆரிடமும் எங்கும் இருக்கவில்லை. இவன் நெஞ்சில குத்தினான் எண்டா அவன் முதுகில குத்தினான் எண்டது உண்மைதான். அதுக்காக இருந்தவரை அங்கேயிருந்து ஆரும் சமையல் குறிப்பு எழுதிப்போட்டு ஐய்ரோப்பாவுக்கோ வேறெங்கேயுமோ புலம்பெயர்ந்து மறுத்தோடி இலக்கியம் பேசவில்லை என்பதும் உங்களுக்கு விளங்காததல்ல.
நியாயத்தை பேச முடியாத இடத்தில் மௌனமாக இருப்பதும் – நியாயத்தை பேசக்கூடிய இடத்திலிருந்து நியாயத்தை பேச முடியாத இடத்துக்கு வலியப்போய் பேச வேண்டிய நியாயத்தை விட்டு விட்டு வேறேதோ பேசுவதும் ஒன்றா தோழர்களே? அதுவே அந்த நியாய மறுப்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையாதா? //தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்கள் கூட அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்// என்கிறீர்கள் எல்லாத்தையும் பேசக்கூடிய இடத்திலை விரும்பினதை பேசுறதும் – யாரோ விரும்பினதை மட்டும் பேச அனுமதிக்கபடுகின்ற இடத்தில அவயளுக்காய் பேச வேண்டியதை பேசாம விடுறதும் ஒண்டா இல்லையா எண்டு குழந்தைக்கு கூட தெரியும் இதில மயிர் பிளக்க ஒண்டும் இல்லை.
// எரியும் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் தன்னைத்தானே தகனம் செய்துகொள்ளவேண்டும் என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள், கட்டளையிடுகிறீர்கள்.. இது என்ன நியாயம்? இது கொடுமை.// இல்லை யாரும் யாரையும் தற்தகனம் செய்யச்சொல்லி குளிர்காய கேக்கையில்லை திரத்தி திரத்தி கொளுத்தினவனிட்ட ஒரு வார்த்தை நியாயம் கேக்க முடியாது அங்கபோய் கூடிப்பேச பன்னிரண்டு தீர்மானம் அல்ல பத்தாயிரம் தீர்மானம் இருந்தாலும் அது எழுத்தின் பேராலும் இலக்கியத்தின் பேராலும் நிகழும் அநீதியே எண்டதைத்தான் சொல்ல இருக்கு.
murugapoobathy otu manitha neyan,ellkiyavathi,anaal avar otu viyapaati alla.
s.raveendran.
நண்றீ சோபா
மீண்டும் ஜோசிக்கவீண்டோம்போல் உள்ளது
நிதாநாமாக பேசுகிறார் முரூகபூபதி
I have known Murugapoopathy for a long time and an admirer of his tireless work to provide funding for disadvantaged students in the Northeast of Sri Lanka.A well respected writer.
A writeup in a website, given below, presents opposing views. Have the related writes given any thought to the suffering Tamils? What is the necessity of having this conference now, when the Tamils cannot speak anything about their problems?
———- Forwarded message ———-
From: arasu ezhilan
Date: 2010/10/9
Subject: தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :
To: [email protected]
கணகுறிஞ்சி ;
கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.
வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.
படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.
யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.
தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.
சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.
நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.
நன்றி சோபா
பதில்கள் திருப்தியளிக்கவில்லை. உங்கள் முயற்சிக்கு நன்றி .
உண்மைகள் உறங்குவதில்லை .
எஸ். போ வால் பற்றவைக்கப்பட்ட இந்தப்பிரச்சினை சில தமிழக பிரமுகர்களாலும் கீற்று இதழினாலும் பெரிதுபடுத்தப்பட்டு எதிர்ப்புப் “போராட்டமாக” மாற்றப்பட்டது. வழக்கமான தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தமிழ்த் தேசிய அரசியல் போலவே இதுவும் கேள்விகளற்று ஆய்வுகளற்று வெற்றுச்சோடனை வார்த்தைகளாலும் ஊகங்களாலும் கட்டப்பட்டு பெருங்கோஷமாக மாறிப்போனது.
எஸ் போ வைத்த குற்றச்சாட்டின் அரசியல் என்ன, இதில் தன்நபர் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டுள்ளதா, அரசாங்கம் நிதி வழங்குவதற்கோ அல்லது அரசாங்கம் இம்மாநாட்டை நடத்துகிறது என்ற தகவலுக்கோ ஆதாரம் என்ன என்று கேட்டபோது அருள் எழில் அளித்த பதில்
//அரசியல் பிரச்சனையை தனி நபர் பிரச்சனையாக திர்ப்பதும். தனிநபர் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக திரிப்பதற்கும் பதில் சொல்லி பொழுதைப் போக்க முடியாது மயூரன். மாநாட்டை நிராகரிக்கிறோம். இதற்கு எதிராக முழு அளவில் தமிழகத்திலும் உலகெங்கிலும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் அவளவுதான். நன்றி//
என்பது
இதுதான் தமிழகத்தின் உணர்ச்சிகரத் தமிழ்த்தேசியம். ஓர் எதிர்ப்புக்கான ஆதாரங்கள், பின்னணிகள், நியாயங்களை ஆய்வு செய்யவோ பதிலளிக்கவோ பொழுதைப்பொக்க முடியாதளவுக்கு எதிர்ப்பில் மும்முரமாயிருப்பார்கள். கேள்விகேட்டால் கோபப்படுவார்கள்.
ஷோபாசக்தியின் இந்தப்பதிவு இணையச்சூழலில் இவர்களது வெற்றுக் கோஷ எதிர்ப்பினை எதிர்க்கேள்வி கேட்பதற்கும் எதிர்ப்பின் பின்னணிகள் பற்றி சிந்திப்பதற்கும் வழி திறந்து விட்டிருக்கிறது.
இதற்கு நன்றி. .
சமூகம் சார்ந்த ஒரு கலைஞன் அல்லது எழுத்தாளனனின் பணி என்ன என்பது பற்றிய ஒரு ஆழமான பார்வையோ அதன் வரலாற்று ஆதாரப்படுத்தல்களோ அற்ற மேம்போக்கான விருப்புவெறுப்புகள் நிறைந்த சொல்லாடல்களால் பின்னப்பட்ட முருகபூபதியின் பதில் எமது தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்த அறிவியல் பரப்பின் இலட்சணத்தைக் காட்டிநிற்கிறது. மானிட நேயம்தான் எமது அரசியல் என்ற பதத்தை முருகபூபதி விளக்கமாக முன்வைக்க முயல்வது நல்லது. மானிட நேயம் சார்ந்து அதற்கு எதிராக செயற்படும் அதிகார சக்திகளோடு எழுத்தாளர்களுக்கான உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என பேச அவர் முன்வருவாரா?. போர் முடியமுன் (புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த) வடக்கு சிழக்கில் அந்தச் சுதந்திரங்கள் எல்லாம் இருந்ததா என (இன்று புலிகளின் இறப்புக்குப் பின்) துள்ள முடிகிற அவரால் மகிந்த அரசின் ஊடகசுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள் கடத்தல்கள் பற்றி பேசாமல் தவிர்ப்பதிலிருந்து அவரின் சமூப் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. ஒருவேளை மகிந்த அரசின் வீழ்ச்சிக்குப்பின்தான் பேச முன்வருவாரோ என்னவோ?? இதையெல்லாம் அங்கிருந்து பேச முடியாது என்றால் அங்கு மாநாடு நடத்த வேண்டிய தேவை என்ன?. புகலிடத்தில் இருந்து கொண்டு அதற்கான குரலை வெளிப்படுத்தும் ஊடக நேர்மை அல்லது சமூகம் சார்ந்த செயற்பாட்டைவிட கொழும்பில் ஒரு மாநாடுதான் முக்கியமாகப்படுகிறதா? புலிகளின் வால்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தமிழ்த்தேசியம் என்ற பரப்புக்குள் மட்டும் வைத்து எதையுமே மறுதலிக்கும் வசதியை முருகபூபதியும் பயன்படுத்துகிறாரா?. சிங்கள ஊடகவியலாளர்களும்கூட நேர்மையாக தமது குரலை பதிவுசெய்யவிடாமல் நசுக்கும் அரசிடம் மான்யம் கோருவது பற்றிப் பேசத்தலைப்படும் முருகபூபதிக்கு மானிடநேயம்தான் எமது அரசியல் என்ற கோசம் எப்படிப் பொருந்திவருகிறது? எழுத்தாளர்களை வளர்ப்பதற்கு இந்த வெட்டியோடல் உதவும்தான். எந்தவகை எழுத்தாளர்களுக்கு என்பதுதான் கேள்வி? சமூகம்சார்ந்த எழுத்தாளர்களை வளர்க்கும் முறையல்ல இது என்ற சிறிய புரிதலாவது இருக்க வேண்டும் நமக்கு. வைரமுத்து அவருக்கு ஆதாரப்படுத்தலுக்காக வரநேர்ந்திருக்கிறது பாருங்கள். – வழிப்போக்கன்
இது எஸ்.பொ. என்ற குட்டி முதலாளிக்கு மாலை போடாததால் வந்த வினை.அவருடைய பணமும், பதிப்பகமும் பாதாளம் வரைக்கும் பாயும் என்ற உண்மைதான் இங்கு வெளிப்படுகிறது..அவர் இந்த மாநாடு சீன சார்பு கம்யூனிஸ்டு களால் நடாத்தப் படுகிறது என்றும் எழுதியிருந்தார்.. அப்படி எழுதினால் தான் தன்மானமுள்ள இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சோத்துக்காக இலங்கைக்கு ஓட மாட்டார்கள் எனவும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஒரு பெரும் ராஜதந்திர பனிப்போர் ஒன்றை தான் உருவாக்கி விடுவதாகவும் தனக்கேயுரிய அறிவிலித்தனத்துடன் புலம்பியிருந்தார். தனக்கு மாலை மரியாதை கிடைக்கவில்லை என்றால் எத்தகைய நல்ல விஷயமாயிருந்தாலும் அதைக் குழப்புவதுதான் எஸ்.பொ.வின் நனவிடை தேய்தல் எனும் இலக்கிய சேவை..
யமுனா ராஜேந்திரன் போன்றோர்கள் யாராவது பணம் கொடுத்தால் எதுவும் பேசுவார்கள்..அவர்கள் எவுத்தை வைத்து பேரம் பேசிப் பிழைப்பவர்கள்..தற்போது புலிப் பினாமிகளிடம் பணம் வாங்கி வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பவர்கள்.. இவர்கள் எல்லாம் தமிழ் எழுத்தாளர் ச்சர்பில் கருத்துக் கூறுவது தமிழரின் தலைவிதியே..
புலம் பெயர் தமிழருக்கு கொழும்பில் ப்ளாட் மட்டும்தான் தேவை.. மாநாடு சமாச்சாரமென்ப்றால் அது வடக்கிலும் கிழக்கிலும் தான் தேவை..
நிதானமாகச் சிந்திப்பவர்களுக்கு புரியும், மாநாடு கொழும்பில் நடப்பதாலோ அல்லது அதற்காக அரசாங்கத்திடம் உதவி பெறுவதாலோ தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று.. எமது ஒரேயொரு பிரச்சனை தமிழாராய்ச்சி மாநாட்டு காலத்திற்குப் பின் எமது அரசியல் சிந்தனையில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதே..
முருகபூபதி தனது அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி அபத்தமானது.. அரசியல் நிலைபாடு ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம்.. அவர் எங்களுக்கு பிடித்தமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் தான் அவருக்கு மாநாடு நடாத்தை அருகதை உண்டு என்பதில்லை.. இந்தியாவில் பிழைப்பு நடத்த இந்திய அரசுக்கு தலையையும் புலிப் பினாமிகளுக்கு வாலையும் காட்டும் எஸ். பொ. போன்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஈழத்தமிழரைப் பற்றிப் பேச?
இது எஸ்.பொ. என்ற குட்டி முதலாளிக்கு மாலை போடாததால் வந்த வினை.அவருடைய பணமும், பதிப்பகமும் பாதாளம் வரைக்கும் பாயும் என்ற உண்மைதான் இங்கு வெளிப்படுகிறது..அவர் இந்த மாநாடு சீன சார்பு கம்யூனிஸ்டு களால் நடாத்தப் படுகிறது என்றும் எழுதியிருந்தார்.. அப்படி எழுதினால் தான் தன்மானமுள்ள இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சோத்துக்காக இலங்கைக்கு ஓட மாட்டார்கள் எனவும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஒரு பெரும் ராஜதந்திர பனிப்போர் ஒன்றை தான் உருவாக்கி விடுவதாகவும் தனக்கேயுரிய அறிவிலித்தனத்துடன் புலம்பியிருந்தார். தனக்கு மாலை மரியாதை கிடைக்கவில்லை என்றால் எத்தகைய நல்ல விஷயமாயிருந்தாலும் அதைக் குழப்புவதுதான் எஸ்.பொ.வின் நனவிடை தேய்தல் எனும் இலக்கிய சேவை..
யமுனா ராஜேந்திரன் போன்றோர்கள் யாராவது பணம் கொடுத்தால் எதுவும் பேசுவார்கள்..அவர்கள் எழுத்தை வைத்து பேரம் பேசிப் பிழைப்பவர்கள்..தற்போது புலிப் பினாமிகளிடம் பணம் வாங்கி வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பவர்கள்.. இவர்கள் எல்லாம் தமிழ் எழுத்தாளர் சார்பில் கருத்துக் கூறுவது தமிழரின் தலைவிதியே..
புலம் பெயர் தமிழருக்கு கொழும்பில் ப்ளாட் மட்டும்தான் தேவை.. மாநாடு சமாச்சாரமென்றால் அது வடக்கிலும் கிழக்கிலும் தான் னடக்க வேண்டும்..
நிதானமாகச் சிந்திப்பவர்களுக்கு புரியும், மாநாடு கொழும்பில் நடப்பதாலோ அல்லது அதற்காக அரசாங்கத்திடம் உதவி பெறுவதாலோ தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று.. எமது ஒரேயொரு பிரச்சனை தமிழாராய்ச்சி மாநாட்டு காலத்திற்குப் பின் எமது அரசியல் சிந்தனையில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதே..
முருகபூபதி தனது அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி அபத்தமானது.. அரசியல் நிலைப்பாடு ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம்.. அவர் எங்களுக்கு பிடித்தமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் தான் அவருக்கு மாநாடு நடாத்த அருகதை உண்டு என்பதில்லை.. இந்தியாவில் பிழைப்பு நடத்த இந்திய அரசுக்கு தலையையும் அவுஸ்திரேலியாவில் கிராக்கி பிடிக்க புலிப் பினாமிகளுக்கு வாலையும் காட்டும் எஸ். பொ. போன்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஈழத்தமிழரைப் பற்றிப் பேச?
நண்பர் ஷோபாசக்தி உரிய கேள்விகளையும், அதற்கான பதிலை எழுத்தாளர் முருகபூபதியும் தந்திருக்கிறார்கள். இவை சார்ந்து தமது இடுகைகளை தந்த சிலருக்கு ஈழத் தமிழனின் உண்மை நிலை கொஞ்சமும் புரியவில்லை என்றே எமக்குத் தெரிகிறது. காரணம்:
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது எமது கருத்து. எழுத்தாளர் முருகபூபதியும் அவரோடு இணைந்தவர்களும் முருகபூபதியின் பிறந்த ஊருக்கு அண்மையில் இந்த மாநாட்டை நடாத்த விரும்புகிறார்கள் போலும். இதில் பேராசிரியர் சிவத்தம்பி செய்யாததையா எழுத்தாளர் எஸ்.பொ செய்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி எத்தனை வகையான விலாங்குத் தனங்களை தில்லுமுல்லுகளை இதுவரை செய்திருக்கிறார் என்ற பட்டியலை எழுதினால் அதனையே ஒரு பெரிய புத்தகமாக வெளியிடலாம். நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் அவர் சொன்ன ஈழம் என்ற சொல்லுக்கான திருகுதாளமே போதும் அவரொரு பொறுப்பற்ற மேதாவி என்பதற்கு.
எஸ்.பொ ஏழு மாதங்கள் கழித்து இந்த மாநாட்டுக்கான எதிர்ப்பை தெரிவித்தார் என்கிறார் முருகபூபதி. சரியான ஆதாரம் தேடாமல் உடனே கருத்துத் தெரிவித்தல் அறிவிலித் தனமாகிவிடாதா? அவருக்கு சரியான ஆதாரங்கள் கிடைத்ததும், அந்த எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்திருக்கிறார். அதுதான் உண்மை என நாம் நம்புகிறோம்.
மற்றும் நீங்கள் யார்மீதும் சேறு பூசுங்கள். சேறு பூசுவது ஒரு சிறந்த வைத்தியம் பாருங்கோ. அந்தச் சேறுகளை உங்களின் உடுப்புகளை உரிஞ்சுபோட்டு, உங்களுக்கு நீங்களே பூசுவதுதான் நல்லது. மற்றவைக்கு நீங்கள் பூசுகிற சேறு உங்கள் மீதும், தலையில கையிலசரி கொஞ்சம் பிரண்டிருக்கும். ஒருக்கால் உங்கடை முதுகையும் பாருங்கோ.
சிறந்த தேடல், சிந்தனை உள்ள சமூகப் பற்றாளரே தெளிந்த கருத்துகளை சமூகத்துக்குப் படைக்கின்றனர். அப்படிப்பட்ட கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் குறைந்த எமது ஈழத்தில், இன ரீதியான முரண்பாடுகள் தீர்க்கப்படாது பூதாகரமாகியும், ஒரே நாட்டின் சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இன அரச இயந்திரம், சரிநிகர் சமானம் காண மறந்து, எங்களை துவம்சம் செய்திருக்கிற வேளையில், அந்தக் காடையரிடம் சரணடைந்த, கைதான, கடத்தப்பட்ட, ஒழித்து வைக்கப்பட்டோர் நிலை என்னவென்று தெரியாமல் இருக்கின்ற இக்காலத்தில், எங்களை மனிதராகப் பார்க்கத் தெரியாத அரசின் சொர்க்க புரியில், நீங்கள் எழுத்தாளர் மாநாடு என்பதை மாற்றி கருத்திறன் கருகியோர் மாநாடு என நடாத்துங்கள்.
மேற்படி மாநாட்டை இணைந்து நடாத்துவோரும், இதற்கு ஆதரவு தெரிவிப்போரையும் நாம் ஈழத்தமிழர் என ஏற்றுக்கொள்ள எமது மனங்கள் மறுக்கிறது. இவர்களின் குடும்பங்கள், சொந்த பந்தங்கள், தெரிந்தோர்கள் எவருமே நடந்து முடிந்த தமிழின அழிப்புக்குள்ளால் தப்பிவிட்டார்கள் போலத் தெரிகிறது. நாம் ஒருபோதும் புலிக்குக் கொடி பிடித்தவர்களோ அல்லது புலிக்கு ஒத்தாசை புரிந்தவர்களோ இல்லை. ஆயினும் எமது குடும்பங்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள், தெரிந்த முகங்கள் என பல நூறுபேர் அறுபட்டும், எரிபட்டும், புதைபட்டும், தடைபட்டும், ஒழிபட்டதுமாக.., இப்படி இருக்கும்போது..!?
நீங்கள் மட்டும் பல நட்சத்திர விடுதிப் பஞ்சணையில் படுத்துறங்கி, ஆளாளுக்கு மாறி மாறி பட்டங்கள் சூட்டி, பட்டையங்கள் – கேடையங்கள் வழங்கி, அன்பாக ஆதரவாக குட்டிப் பூர்சுவாத் தமிழினத்தை புலியோடு சேர்ந்து அழித்தமைக்கு நன்றிகளும், இனி வடக்கு கிழக்கு மலையகத்தில் தமிழனுக்கு சிறு நிலமும் இல்லாது ஒழிப்பதற்கு..!! அந் நாட்டின் மாபெரும் சக்திவாய்ந்த தலைவருக்கு வாழ்த்துக் கூற நடாத்துங்கள், நடாத்துங்கள் அறிவிலிகளே..! உங்கள் மாநாட்டை நடாத்துங்கள்.
செம்மைத்தமிழ்
ஐரோப்பிய செம்மைத்தமிழர் ஒன்றியம்
முதலில் எஸ் பொ வும் அவர் மனைவியும் இன்னும் இலங்கை அரசினால் வழங்கப்பட்டு மட்டக்களப்பு வங்கிக் கணக்கில் போடப்படும் ஓய்வூதியத்தை (பென்சனை) வேண்டாமென மறுதலிக்கட்டும். அதற்கான கடிதத்தை அவர் பகிரங்கமாக வெளியிடட்டும். அதன் பின்னர் அவர் தமிழ் மாநாடு பற்றிப் பேசலாம். அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரியுள்ள எஸ் பொ இலங்கைக்குச் சென்று நாட்டாமை காட்டுவதற்குப் பிரச்சனையாக இருக்கும் என்பதால் அவர் இவ்வாறு புரளி கிளப்பியுள்ளார். எல்லாம் எஸ் பொ வின் இருப்புக் குறித்த பிரச்சனையே. அப்படியானால் இலங்கையில் தமிழ்ப் பாடசாலைகள் நடத்துவதும் தமிழில் பரீட்சைகள் நடத்துவதும் இலங்கை அரசின் சதித் திட்டங்களெனவும் இவர் சொல்வார்.
ஐயா மறவன் அவர்களே..! நீங்கள் எந்த நாட்டிலிருந்து இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறீர்கள்..? நானறிந்த வகையில் எஸ்.பொவும் அவரது துணைவியும் இலங்கையில் கல்விகற்று, தொழில்புரிந்து அதற்கான ஊதியம் பெறும்போதே தமது வயோதிபக் காலத்துக்கான ஓய்வூதியக் காப்புறுதி செலுத்தியவர்கள். அது அவர்களது சொந்தப் பணம். அந்த ஓய்வூதியத்தை அவர்கள் எதற்காக மறுதலிக்கவேண்டும்..!?
தற்சமயம்; வேலைவெட்டி இன்றி வாழ்கின்ற தங்களது நிலையில், நீங்கள் எடுக்கின்ற சமூக உதவிப்பணத்தினை அதாவது பிச்சைக் காசை நான் எடுப்பதில்லை என தாங்கள் ஆதாரத்துடன் இதிலொரு அறிக்கை தாருங்களேன்.
மற்றது கொழும்பு – சர்வதேச தமிழ்மாநாடு பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் பேரா. கா.சிவத்தம்பிக்கு அருகதை இருக்கும்போது, எழுத்தாளர் எஸ்.பொவுக்கே முழு உரிமையும் உண்டு. இந்த வயதில் எந்த ஈழத் தமிழனும் செய்யமுடியாத சாதனையை தமிழுக்கு அடிமைப்பட்டு, அதில் புதுமைகளை எழுதியிருக்கிறார். இன்றும் எழுதிக்கொண்டேயிருக்கிறார். ஓர் தமிழூழிய அடிமையை, நீங்கள் நாட்டாமை என்கிறீர்கள். சரிதான், அவர் தமிழ் மொழியாடலில் நாட்டாமைதான். அவர் யாரையும் அடிமையாக வைத்திராத நாட்டாமைதான். இன்றுவரை அவரது இருப்புக்கு எந்தப் பங்கமும் இல்லை. அவரது இருப்பு பற்றிய சிந்தனையெல்லாம் தமிழில் இன்னும் பல புதுமைகளைப் படைக்கவேண்டும் என்பதாகும்.
எஸ்.பொ என்பவர் தனித்து எழுத்தாளன் மட்டுமல்லவே. அவர் முன்னை நாள் இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடவிதானக் குழுவில் ஒருவர். எஸ்.பொன்னுத்துரை என்பது அவரது பெயர். சிறிலங்கா அரசு தமிழருக்கு கற்பித்த தமிழ் மொழியில் மறைமுகமான சதி இருந்தது என்பதை நீங்கள் இன்னுமா புரிந்துகொள்ளவில்லை..!? எடுத்துக்காட்டாக: கதிரவன் என அழகிய தமிழ்ச் சொல் இருக்கும்போது, அதற்கு சூரியன் என்ற பிற மொழிச் சொல்லை அவர்கள் எதற்காக எமது மொழிக்குள்..!? இப்படி ஆயிரக் கணக்காக உண்டு. சிந்தியுங்கள்.
உண்மையாக உங்களைப் போன்றோர்தான் புரளிக் குட்டைகளை குளப்பி, ஏதேதோ பிடிக்கப் பார்க்கிறீர்கள்.
ஐயா செல்லத்தம்பி அவர்களே,
பாடசாலைப் புத்தகங்களை எழுதும் பாடவிதானக் குழுவில் இருந்ததாக நீங்கள் கூறும் இதே எஸ் பொ, ஏன் சூரியனைக் கதிரவன் எனப் பரிந்துரை செய்யவில்லை? அப்போது அவருக்கு இலங்கை அரசாங்கமும் அது வழங்கிய சம்பளமும் இனித்ததால் அவர் சத்தமே செய்யாமல் இருந்தாரோ? அந்தச் சொல்லை மாற்றக்கூடிய பதவியில் இருந்தும் அவர் அதனைச் செய்யவில்லை. சூரியன் தவறெனத் தெரிந்தும் அவர் அதனை மாற்ற முயற்சிக்கவில்லைப் போலும்.
இலங்கையில் ஆசிரியப் பணி செய்த காலத்தில் எஸ் பொ எங்கே படிப்பித்தார்? கொட்டாஞ்சேனை விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அவர் படிப்பித்த? காலத்தில் பாடசாலை நேரத்தை மொழிபெயர்ப்புச் செய்வதற்கும், அரசு வெளியீடுகளின் புறூஃப் பார்ப்பதற்கும் செலவிட்டாரே தவிர எங்கே படிப்பித்தார்.
இப்போது எஸ் பொவுக்குள்ள ஒரே பிரச்சனை அவரால் இலங்கைக்கு வரமுடியாது என்பது மட்டுமே!!!. காரணம் அவரின் முன்னாள் போராளி மகன்!!
எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களை பிழை சொல்லி அவர்களுக்கு அநீதி செய்தவர்களை போர்ரியதே தமிழ் எழுத்தாளர் வரலாறு..இந்த மாநாடு மகிந்தவை கருத்து ரீதியாக பலப்படுத்தும்..தமிழன் கெட்டவன்..மகிந்த நல்லவன்….என்ன ஒரு மனித நேயம் நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு. தீபனின் கருத்தை நான் ஆமோத்திக்கிறேன்.