புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும்

கட்டுரைகள்

-ஆளூர் ஷாநவாஸ்

.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்.தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத செயல்களை அவர் அதிகம் அதிகம் பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார் . தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.தமிழர்களின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு,அங்கெல்லாம் சிங்களவர்களின் ஆதிக்கம் பெருகி வருவதையும், புலிகளின் கல்லறைகள் கூட சிங்களவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை என்பதையும் கூர்மையாக பதிவு செய்துள்ளார். அதைப் போலவே தமிழ் முஸ்லிம்களின் வாழ்விடங்களின் தற்போதைய நிலையையும், அவர்களின் இன்றைய அகதி முகாம் வாழ்க்கையையும், அதற்கு காரணமான புலிகளின் அன்றைய வன்முறையையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.

ஒரு ஆய்வாளர் எப்படி பிரச்சனைகளை அனுகுவாரோ ,தாம் கண்டவற்றை எப்படி பகுத்துப் பார்ப்பாரோ, அப்படித்தான் அவர் இலங்கையைப் பார்க்கின்றார்.அப்படியான அவரது ஒளிவு மறைவற்றப் பார்வையில் – வரலாற்றுப் பிழை செய்தவர்களின் செயலைக் குறிப்பிடாமல், அத்தகையப் பிழைகளின் காரணமாக இன்றைக்கும் தொடருகின்ற அவலங்களைப் பற்றி பேசாமல் இருக்க.. அவரால் மட்டும் அல்ல; வேறு எவராலும் முடியாது.

தற்போது புலிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு, ஈழமே துயரமான சூழலில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளைக் கிளறி ஆத்திரமூட்டுவது நியாயமா என்பதுதான் அ.மார்க்சை எதிர்க்கும் புலி ஆதரவாளர்களின் ஒருமித்த கேள்வி.ஒரு துயரத்தையோ அல்லது நிகழ்வையோ இன்றைய நிலையில் மட்டுமே பார்ப்பது பாமரப் பார்வை. ஒரு துயரம் எதனால் நிகழ்ந்தது ,அதற்கு யார் யார் காரணம், எந்தெந்த வகையில் காரணம், அதன் தொடக்கம் என்ன,அதற்க்கு தீர்வு என்ன, எதிர்காலத்தில் அது நிகழாமல் இருக்க வழி என்ன, என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதுதான் ஒரு சிந்தனையாளனின் பார்வை. அ.மார்க்ஸ் அப்படித்தான் பார்க்கிறார்.

ஒரு தரப்பினருக்கு கசக்கிறது என்பதற்காக, அவர் கண்ட உண்மையை பொய் என்று சொல்லி விட முடியாது. அல்லது ஒரு தரப்பினருக்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்காக எந்த ஒரு தகவலையும் அவர் மிகைப் படுத்தியும் கூறிவிட முடியாது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்பவன்தான் உண்மையான ஆய்வாளன். அந்த அடிப்படையில் தான் அவர், அங்கே புலிகளால் துரத்தப்பட்டு அகதி முகாம்களில் அல்லல்படும் முஸ்லிம்களின் துயரங்களை உலகிற்கு சொல்கின்றார். அம்மக்களின் கண்ணீரை காட்சிப் படுத்துகிறார். அவர்களுக்காக பேச, தமிழ்ச் சூழலில் யாருமே முன் வராத நிலையில், பொது அரங்கில் துணிச்சலாக குரல் எழுப்புகின்றார். ஒரு மனித உரிமைப் போராளி என்ற வகையில் தமது தார்மீக கடமையை அவர் ஆற்றிவருகின்றார். இதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் அ.மார்க்சை விமர்சிக்கும் தோழர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி.

அ.மார்க்சை மூர்க்கமாக எதிர்த்து, அவரைப் பேச விடாமல் தடுத்ததில் “நாம் தமிழர்” இயக்கத்தினர் ஈடுபட்டதாக அறிகின்றோம். ஒடுக்கப்படும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் தோழர் சீமானின் ‘தம்பிகள்’ அப்படியான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். அப்படி அவர்கள் ஈடுபடுவது உண்மை என்றால் அது சீமான் பேசி வருகின்ற பெரியாரிய கொள்கைக்கே எதிரானது என்பதுதான் எமது தோழமையான கருத்து.

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், புலிகளை எதிர்த்துப் பேச காங்கிரஸ் காரனுக்கு உரிமை இருக்கும் போது, புலிகளை ஆதரித்துப் பேச தமக்கு உரிமை இல்லையா என்றும் கலைஞரைப் பார்த்து கேள்வி எழுப்புகின்ற தோழர் சீமானுக்கு, அதே கருத்து சுதந்திரம் பேராசிரியர் அ.மார்க்சுக்கும் உண்டு என்கிற நியாயம் மட்டும் புரியாமல் இருப்பது ஏன் என்பதுதான் நமக்கு புரியவில்லை.அ.மார்க்ஸ் பேசும் கூட்டங்களில் எல்லாம் புகுந்து ரகளை செய்து இடையூறு ஏற்படுத்தும் அவர்கள், புலிகளை எதிர்த்து மிக மோசமாகப் பேசி வரும் காங்கிரஸ்காரர்களின் கூட்டங்களில் புகுந்தும் இதே வகையான ரகளைகளை செய்வார்களா என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.

அ.மார்க்ஸ் அதிகாரப் பின்புலம் அற்றவர் என்பதனாலேயே அவரின் கூட்டங்களுக்கு சென்று கலகம் புரிவது எந்த வகை நியாயம். புலிகளுக்கு எதிரான கருத்தியலைப் பரப்பி வரும் இளங்கோவன், ப.சிதம்பரம் உள்ளிட்ட ஆளும் அதிகார வர்க்கத்தின் கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்கவும், ரகளை செய்யவும் வலிமை அற்றவர்கள், அ.மார்க்சைப் போன்ற எளிய மனிதர்களிடம் சென்று மோதிப் பார்ப்பது எந்த வகை வீரம்?

புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் காரர்களைக் கூட, கருத்தால் எதிர் கொள்ளும் “நாம் தமிழர்” இயக்கத்தினர், புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் மீது மோசமாகப் பாய்வது கண்டனத்திற்குரிய ஒன்று.

புலிகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பாவித்து, அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் தமிழரென்றும் பாராமல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்து குதறியது தான் ஈழத்தின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். ஈழத்தில் சாதி வெறியை ஒழிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்ததும், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களையும் இணைத்த, அவர்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் உத்தரவாதமளித்த தனி ஈழத்தை கட்டமைக்க மறுத்ததும் தான் புலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.இது பற்றி எல்லாம் பேசினால், அது புலிகளுக்கு எதிரானது என்ற கற்பிதம் புலி ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்பிதம் உடையாத வரை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது.

2002 – ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானம் தழைத்திருந்த அந்த அமைதியான சூழலில், சுதந்திரமாக இலங்கையை சுற்றி வந்தவன் என்ற முறையில், அப்போதே புலிகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்த உரையாடலை தமிழ் நாட்டில் தொடங்கினோம்.

அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஒன்றில் இது குறித்தெல்லாம் விரிவாக அலசி உள்ளோம். தமிழகத்தில் முஸ்லிம்களின் தோழமை சக்தியாகவும் அதே நேரம் தீவிர புலி ஆதரவாளர்களாகவும் செயல்படும் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.பாவலர் இன்குலாப், சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன், தோழர் தியாகு என பல தரப்பினரையும் சந்தித்து, முஸ்லிம்களை அடித்து துரத்திய புலிகளின் செயல் குறித்து கருத்துக்களை கேட்ட போது, பலரும் அது தவறு என்பதை ஒப்புக் கொண்டனர்.

தவறு என்றால் அதை ஏன் புலிகளுக்கு நீங்கள் சுட்டிக்காட்டவில்லை என்று திருப்பிக் கேட்ட போது, சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து களத்தில் நின்று கொண்டிருப்பவர்களை கேள்விகளால் காயப்படுத்த விரும்பவில்லை என்று பதில் அளித்தனர்.

அப்போது புலிகள் களத்தில் நின்றதனால் இது பற்றிக் கேட்கவில்லை. இப்போது புலிகள் களத்தில் இல்லாததனால் அது பற்றி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் புலிகளின் தவறுகளை எப்போது தான் கேள்வி கேட்பது?

புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தி, புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளாத வரை அவர்களின் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு புதிய அணுகு முறையை கையில் எடுக்கும் போதுதான், மறுமலர்ச்சி சாத்தியமாகும்.

தோழர் சீமான் தமிழ் இனத்தின் மீள் எழுச்சிக்காக களமாடிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் புலிகளைப் போலவே பிரச்சனைகளை அணுகினால் வீழ்ச்சிதான் விடையாக கிடைக்கும்.

[மீனா தொகுத்த ‘அ.மார்க்ஸ் – சில மதிப்பீடுகள்’ என்னும் நூலிருந்து)



6 thoughts on “புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும்

  1. அ.மார்க்ஸ் அவர்களும் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர் அல்ல. அவரின் திடீர் புலி எதிர்ப்பும் சிங்கள ஆதரவும் பாதிக்கப்பட்டு முள்சிறையில் இருப்பவர்களை மேலும் கிழிக்கிறது என்பதைதான் நாங்கள் உணர்த்துகிறோம்.

    இடம்பொருள் ஏவல் இல்லாமல் இப்போதைய புலி எதிர்ப்பிற்கு என்ன காரணம் இது தகுந்த சூழலா? இப்படி எழுதுவதால் யாருக்கு அ.மார்க்ஸ் அவர்களால் லாபம் என்பதும் தெரியாதா?

    முஸ்லீம்களின் இடப்பெயர்ச்சியினை தொடர்ந்து பேசும் அன்பர்கள் அதேவேலையில் முஸ்லீம்களால் புலிகளுக்கு நிகழ்ந்த இடையூறுகளையும் சேர்த்தே பேசவேண்டும் அல்லவா?

    நீங்கள் குறிப்பிடும் .பாவலர் இன்குலாப், சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன், தோழர் தியாகு என அனைவரும் இதை நேர்மையாகவே பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்.குறிப்பாக இன்குலாப் அய்யா அவர்கள் ஈழத்தமிழர் கனடாவில் நிகழ்த்திய “மாவீரர்நாள்” கூட்டத்தில் நேரடியாகவே இதை பதிவு செய்திருக்கிறார்.புலிகளை ஆதரிக்கும் சிந்தனையாளர்களே இந்த விமர்சனத்துடன் தான் ஆதரிக்கின்றனர் ஆனால் அ.மார்க்ஸின் முஸ்லீம் ஆதரவும்,புலி எதிர்ப்பும் என்பதை இந்த சிந்தனையாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்க இயலவில்லை.

    தோழர் சீமான் தமிழக மீனவர்களை இந்தியராக பார்க்காத இந்திய அரசை கண்டித்தால் அது தேசதுரோம்.ஈழத்தமிழரை ஒரு மனிதராகக்கூட பார்க்கமால் இத்தருணத்தில் தங்கள் எழுத்து திறமையையும், கருத்து திறமையையும் நிரூப்பித்துக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்களை பார்த்து ஈழவிடயத்தில் ஒன்றுமே செய்ய இயலாத இந்திய குடிமக்கள் கேட்கிறோம்.

    உங்களின் விருப்பப்படியே புலிகள்தான் இல்லையே நீங்கள் இப்போதாவது தலையிட்டு எங்கள் உறவுகளை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த முடியுமா?

  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் கவிமதி,
    //முஸ்லீம்களின் இடப்பெயர்ச்சியினை தொடர்ந்து பேசும் அன்பர்கள் அதேவேலையில் முஸ்லீம்களால் புலிகளுக்கு நிகழ்ந்த இடையூறுகளையும் சேர்த்தே பேசவேண்டும் அல்லவா?//
    முஸ்லிம்களால் புலிகளுக்கு எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டன என்பதை தாங்களால் இங்கே பட்டியலிட முடியுமா?
    புலிகள் முஸ்லிம்கள் மீது நடத்திய மத அடிப்படையிலான பயங்கரவாதத்தை பற்றிய பேச்சுக்கள் எழும்போதெல்லாம் அதை நீர்த்து போக செய்ய புலியபிமானிகளால் இத்தகைய பொய் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.

    எதிர்காலத்தில், குஜராத்தில் இந்துத்துவா வெறியன் நரேந்திர மோடியால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள் என்று அ.மார்க்ஸ் போன்ற நடுநிலையாளர்கள் மக்களுக்கு சொல்லும் போது “முஸ்லிம்களால் இந்துத்துவாக்கள் பாதிக்கப்பட்டதை பேச வேண்டும்” என்று உங்களை போன்று ஏதாவது அறிவுஜீவி அன்றைக்கு சொல்லும் காலமும் வரலாம்.

    ஆகையால் முஸ்லிம்களால் எப்போது எந்தெந்த வகையில் எவ்வாறு புலிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று தாங்கள் பட்டியலிட வேண்டும். அதை முன்னின்று நடத்திய முஸ்லிம் கட்சிகள், இயக்கங்கள் அல்லது குழுக்கள் யாவை என்பதையும் இங்கே பட்டியலிட வேண்டும்.

  3. நண்பர் கவிமதி எங்கிருந்தாலும் உடனே விவாதக் களத்திற்கு வரவும்.

  4. ////தோழர் சீமான் தமிழ் இனத்தின் மீள் எழுச்சிக்காக களமாடிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் புலிகளைப் போலவே பிரச்சனைகளை அணுகினால் வீழ்ச்சிதான் விடையாக கிடைக்கும்//// நாம் தமிழர்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருனம் இது

  5. ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா? ஆம் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமானமுறையில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள், அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம் கூட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் Google இல் நிறைய உண்டு, நான் சொல்வதை மட்டும் நம்பத் தேவையில்லை. எந்தக் கிராமத்தில் முஸ்லீம்களை மட்டும் தெரிவு செய்து தமிழர்கள் அழித்தார்கள்?, இன்றும் கிழக்கில் மட்டுமல்ல, 95% தமிழர்கள் மட்டும் வாழும் வடக்கில் கூட முஸ்லீம் கிராமங்கள் உண்டு, மூதூருக்கு முஸ்லீம்களை அழிக்கப் போனதாக ஈழத்தமிழர்களில் உள்ள வெறுப்பில் சிங்கள அரசாங்கத்துக்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் பல வலைப்பதிவாளர்கள். முஸ்லீம்களை அழிக்க விரும்பினால் மூதூருக்கு ஏன் போக வேண்டும், யாழ்ப்பாணத்தில், மன்னாரில், தாராபுரத்தில், எருக்கலம்பிட்டியில், வவுனியாவில், விடத்தல் தீவில் எல்லாம் செய்ய முடியாதா?, சும்மா பம்மாத்துக் கதை விடுகிறார்கள், தமிழைப் பேசிக் கொண்டே தமிழினத்தின் முதுகில் குத்துகிறார்கள். முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா? முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென அவர்களே வாதாடும் போது, தமிழ்மணத்தில் உள்ள ஒருவர் மட்டும் அவர்கள் வந்தேறு குடிகள் இல்லையாம், தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களென பெருமைப்படும் இலங்கை முஸ்லிம்களை, இல்லையென மறுதலிக்கும் இவர் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் மூக்கையுடைத்து விடுவார்கள். இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்று வாதாடி, முஸ்லீம்களைத் தமிழர்களாக தம்மோடு இணையுமாறு, இன்று நேற்றல்ல 1880 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் கேட்டது மட்டுமல்ல, அவர் Royal Asiatic Society யின் முன்பு “The Ethnology of the Moors of Ceylon என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் சேர் இராமநாதன் வாதாடியது என்னவென்றால், எப்படித் தமிழர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களோ, அதே போல் தான் முஸ்லீம்களாகவும் இருக்கின்றார்கள் என்றும், மொழி, கலை, கலாச்சார, பண்பாடு, பெரும்பாலான தமிழ் முஸ்லீம்களின் ஒருவமைப்பு எல்லாவற்றையும் ஆதாரம் காட்டி, இலங்கை முஸ்லீம்கள், தென்னிந்தியாவின் தமிழர்கள், ஒரு சில அரேபிய வியாபாரிகளின் திருமணத் தொடர்பு ஏற்பட்டுக் கலப்பேற்பட்டிருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் கலப்பற்ற, இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் சேர் இராமநாதன். ஈழத்தமிழர்கள் மதரீதியில் பிளவு படுவதை 1880 யிலேயே ஈழத்தமிழ்த்தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் சேர் ராமநாதனின் இந்த தமிழ்ச்சகோதரத்துவத்தை மலே முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார்கள் இலங்கையின் “தமிழ்” முஸ்லீம்கள். கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையிருப்பதை மறுக்காத முஸ்லீம்கள், தாங்கள் தமிழர்களல்ல என்பதை மிகவும் உறுதியாகக் கூறியதுடன், இதற்குக் காரணம் ‘inevitable process of acculturation of a minority people’ என்று கூறினார்கள்.முஸ்லீம்கள் தமிழைப் பேசுவதற்குக் காரணம், இலங்கையின் துறைமுகங்களிலும், தென்னிந்தியத் துறைமுகங்களிலும், தமிழ் தான் வர்த்தகத்தின் மொழி( lingua franca’ of commerce) அதனால் தான் தமிழைப் பேசுகிறோம் என்று சேர் இராமநாதனுக்குத் *** பதிலளித்தார்கள் “தமிழ்” முஸ்லீம்கள். அதே வேளையில் தம்முடைய உடலில் தமிழ் இரத்தக் கலப்புள்ளதையும் அவர்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர்களில் சிலருக்கு தமது உடலிலுள்ள சிறியளவு அரபு, அல்லது ஆப்கானிகளின் இரத்தம், தமிழை விட முக்கியமானது. இலங்கை முஸ்லீம்கள் தொப்பி பிரட்டிகளா? ஓம், தொப்பி பிரட்டிகள் தான் முஸ்லீம்களைத் “தொப்பி பிரட்டிகள்” என்று இலங்கையில் அழைப்பதற்குக் காரணம், அவர்கள் எங்கு போகிறார்களோ, அங்கு சூழ்நிலைக்கேற்றவாறு, சுயலாபத்துக்காக அடையாளத்தையும், விசுவாசத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பது தான். நான் சொல்லுவதென்னவென்றால் தமிழர்கள், இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுயநலத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் அவர்கள் தமது தமிழடையாளத்தை மறுதலித்தார்கள் என்பது தான் சரியானதாகும். யாழ்ப்பாணத்தில் தம்மைத் தமிழர்கள் எனவும், சிங்களப்பகுதிகளில் தாம் சிங்கள ஆதரவு முஸ்லீம்கள் எனவும், எங்கெல்லாம் ஒரு ரூபாய் கிடைக்குமோ, அங்கெல்லாம் தொப்பியைப் பிரட்டியவர்கள் இவர்கள், தாம் தமிழர்களல்ல என மறுத்தவர்கள் இவர்கள். நாங்களாவது முஸ்லீம்களை தமிழர்கள், எங்களின் சகோதரர்கள் என அரவணைக்கத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களவ்ர்கள் இன்றும் “மரக்கல மினுஸ்”* அதாவது கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று தான் அழைக்கிறார்கள். அதைக்கூட முஸ்லீம்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்கள். இலங்கை முஸ்லீம்களும் தாம் முஸ்லீம்கள் அதாவது அரபுக்கள் மட்டும் தான் என்று ஒரு அடையாளத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே, அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் ஒரு கதையென தொப்பியைப் பிரட்டுவதால் தான் இந்தப் பிரச்சனையே. அவர்களின் சந்தர்ப்பவாததைத் தான் இலங்கைத் தமிழர்கள் வெறுக்கிறார்கள், தமிழநாட்டில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கையில் மட்டும் எப்படி அரபுக்களானார்கள், வெறும் சுயலாபத்துக்கான சந்தர்ப்பவாதம் தானே, எந்த இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களைத் தமிழராகும் படி கேட்கவில்லை, நானும் கூடக் கேட்கவில்லை, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் நான் வெறுக்கிறேனே தவிர முஸ்லீம்களையல்ல. முஸ்லீம்களின், தாம் தமிழரல்ல எனும் தமிழெதிர்ப்பைத் தான் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால் தான் சிங்கள ராணுவம், Muslim Home Guards ஐ உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் “தமிழ்” முஸ்லீம்கள், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, எத்தனை தமிழ்க்கிராமங்களைப் பூண்டோடழித்துப் படுகொலை செய்து, தமிழர்களைத் தமிழ்க்கிராமங்களை விட்டு வெளியேற்றினார்கள், எத்தனை தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, புலிகளுக்கெதிராக உளவு பார்த்தற்காக, பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிய போது, யாராவது முஸ்லீம்கள் கொல்லப் பட்டார்களா? எந்த முஸ்லீம் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டாரா. சத்துருக்கொண்டான் கிராமத்தில் முஸ்லீம்கள் என்ன செய்து, தமிழர்களே இல்லாமல் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் நான் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக இதைச் சொல்லவில்லை, பிரபாகரன் கூட யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார், எந்த முஸ்லீமும் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா? முஸ்லீம்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்கள். ஆம், காட்டிக் கொடுத்தார்கள், ஈழவிடுதலையின் ஆரம்பகால கட்டத்தில் தமிழர்களுடன், தமிழைப் பேசிக்கொண்டு தாயும், பிள்ளையும் போல், தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கெதிராக யாழ்ப்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள், அதனால் சிங்கள இராணுவத்துக்கு வெற்றியையும், பல இளந்தமிழர்களின் சாவுக்கும் காராணமாக இருந்தார்கள், அதனால் ஈழவிடுதலைப் போரைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால். பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார். அப்படி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை வெளியேற்றும் போதும், முஸ்லீம்களின் உயிருக்கோ, மானத்துக்கோ, உடைமைக்கோ எந்த விதப்பாதிப்பையும் ஏற்படுத்த ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையும், சகோதரவுணர்வும் இடங்கொடுக்கவில்லை. 2003 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்குப் பிரபாகரன் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்த போது, முஸ்லீம் தலைவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டைக், கண்ணியத்தை, சகோதரவுணர்வை மெச்சியதை இத் தருணத்தில் நினைவு கூர்வது நல்லது. மூதூரில் முஸ்லீம்களைக் கொல்வது தான் விடுதலைப் புலிகளின் நோக்கமென்றால், இந்தியப் பிரிவினையின் போது முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்றது போல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்றது போல், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் போது விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றிருக்க முடியாதா? மூதூருக்குப் போய்த்தான் கொல்ல வேண்டுமா, சொல்லுகிறவன் சொன்னா சொந்தப் புத்தி எங்கு போனது. ஈழத்தமிழர்களின் மேலும், திராவிட இயக்கங்களிலும், விடுதலைப் புலிகளிலுமுள்ள காழ்ப்புணர்வால், ஈழவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி, வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கச் சிலர் முனைவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம், இப்படிச் செய்து, தமிழனென்று தம்மை அழைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும் ஈனத்தனத்தை தமிழர்களின் சரித்திரம் ஒரு போதும் மன்னிக்காது

  6. மார்கஸ் என்னும் பெரிய மனிதருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்
    மலையாக மக்களுக்காகவும் அவர்களையும் தமிழர்கள் என்று அதைபற்றியும் கதைத்த
    மனிதர் என்பதற்காக யாரும் தமிழர் என்றால் யாழ்பனதமிழரை மட்டும் தான் பெசிக்கொளுவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *