கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாகத் தனது எழுத்துகளாலும் அரசியற் செயற்பாடுகளினாலும் ஈழச் சமூகத்திலும் அனைத்துலகத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் தனது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அறிமுகம் தேவையற்றது. எனினும் இளைய வாசகர்களிற்காகச் சில குறிப்புகள்: 1944ல் ஈழத்தின் உடுவில் கிராமத்தில் பிறந்தவர் ஜெயபாலன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். மரபு அளித்த கொடையாக சந்தங்களாலும் ஓசைநயத்தாலும் நவீன கவிதையை எழுதிய ஈழத்தின் முதன்மையான கவிஞன். 1984ல் ‘ தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்’ என்ற ஜெயபாலனின் முதல் நூல் வெளியாகியது. சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், பெருந்தொகை, தோற்றுப் போனவர்களின் பாடல், சேவல் கூவிய நாட்கள், அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. கலை – இலக்கிய விமர்சகர் இந்திரனுடன் ஜெயபாலன் நடத்திய கவிதை சார்ந்த உரையாடல் ‘கவிதை அனுபவம்’ என்ற பெயரில் 2004ல் நூலாக வெளியாகியது. ஜெயபாலனின் நேர்காணல்களின் தொகுப்பு ‘ ஈழம்: நேற்று – இன்று – நாளை’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிரவும் அரசியல் நாடகப் பிரதிகளையும் பல இசைப் பாடல்களையும் ஜெயபாலன் எழுதியுள்ளார். தற்போது நோர்வேயில் தரித்து நிற்கும் ஜெயபாலனோடு மின்னஞ்சலூடாகவும் தொலைபேசியிலும் இந்நேர்காணல் நிகழ்த்தப்பட்டது.
– ஷோபாசக்தி
09.09.2010
- ஜெயபாலனின் தனித்துவமான மண்சார்ந்த, மக்களின் பண்பாடு சார்ந்த கவிமொழி எங்கிருந்து உருவாகியது?
எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது எனது மூதாதையரின் ஊரான நெடுந்தீவுக்கு வந்தேன். நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயருக்கும் டச்சுக்காரருக்கும் எதிராகக் கிளர்ந்த என் மூதாதையர்களது கதைகளை இங்குதான் அறிந்து கொண்டேன். இந்தத் தீவில் மக்கள் – குறிப்பாக முதியவர்களும் பெண்களும் – பேச்சு மொழியில் கவிதை கலந்து பேசுவதைக் கேட்டேன். எனக்குக் கவிதை சொல்லும் ஆற்றல் இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.
என்னுடைய அப்பா நெடுந்தீவு. அம்மாவுக்கு ஒரு அடி நெடுந்தீவு, மறு அடி உடுவில். நானும் என்னுடைய மூத்த சகோதரியும் உடுவிலில்தான் பிறந்தோம். என்னுடைய இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் நெடுந்தீவில் பிறந்தார்கள்.
1824ல் ஆசியாவிலேயே முதலாவது பெண்கள் பாடசாலை உடுவிலில் தான் ஒருசில அமெரிக்க மிஷன் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. மழைக்கு ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தான் முதல் மாணவிகள். அமெரிக்கச் சுதந்திரப் போரின் பின்னர் ஒப்பீட்டுரீதியாகக் கிளர்ச்சிப் போக்குள்ள ஒரு காலம் அமெரிக்க மிஷனுக்கு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் விடுதலையின் பொறி அங்குதான் மூண்டது எனலாம். என்னுடைய அம்மாவும் வீட்டுக்கு எதிராகக் கிளர்ந்த போதெல்லாம் உடுவில் ‘பெண்கள் பாடசாலை விடுதி’ அம்மாவுக்குப் புகலிடமாயிற்று. பின்னர் அம்மா அங்கு ஆங்கில ஆசிரியையாகவும் இருந்தார். அப்பா மத்துகமவில் பிரபல வணிகர். அம்மாவை அடித்து முடக்கிப்போட அவர் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். மோசமாக அடிபட்ட போதும் அம்மா எப்போதும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான சமூகப் பணிகளைக் கைவிடவில்லை. அம்மா தலித் சமூகத்தின் மீது வெறும் இரக்கத்தைத் தாண்டிய நட்புணர்வையும் மரியாதையையும் வைத்திருந்தார். இவையெல்லாம் தான் என் எழுத்துகளின் கருவறையானது. சண்டைகள், கருத்து மோதல்களுடனும் தனிப்பட்ட நட்பைப் பேணும் பண்பையும் அம்மாவிடம் இருந்துதான் வரித்துக் கொண்டேன்.
அம்மா 1920களிலிருந்து 1940களின் ஆரம்பம் வரைக்கும் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்த ஆங்கில, தமிழ்க் கதை – கவிதைப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். பாரதியாரின் ‘ தேசிய கீதம்’ முதற் பதிப்புப் பிரதியும் அவரிடம் இருந்தது. அம்மா எனது சிறு வயதிலேயே ஆங்கிலக் கதைகளையும் கவிதைகளையும் மொழி பெயர்த்து எனக்குச் சொல்லுவார். அம்மாவும் அப்பாவும் தாங்கள் வாசிக்கும் நல்ல கவிதைகளை வெட்டிச் சேகரிப்பார்கள். அவற்றை அம்மா நோட்டு புத்தகத்தில் பிரதி பண்ணி வைப்பார். இவற்றையெல்லாம் வாசித்தபடிதான் நான் வளர்ந்து விடலைப் பையனானேன். மோதல் வாழ்வில் அம்மாவும் அப்பாவும் சந்தித்த ஒரே காதல் புள்ளி கவிதைதான் எனத் தோன்றுகிறது. நெடுந்தீவிலும் பின்னர் வன்னியிலும் பல அற்புதமான கதை சொல்லிகளைச் சந்திக்க முடிந்தது. தொடர்ச்சியான கேள்வியும் வாசிப்பும் தான் என்னை இலக்கியத்தில் ஈடுபட வைத்தது என்று தோன்றுகிறது.
- உங்களுடைய அரசியல் ஈடுபாட்டின் தொடக்கப்புள்ளியாக எது அமைந்தது?
1968ல் வன்னிக்கு வந்தபோது அந்த இயற்கையும் வளமும் பண்டாரவன்னியன் கதைகளும் என்னை ஈர்த்தன. காடுகளைப் பார்த்துவிட்டு இலங்கைத் தீவில் புரட்சி சாத்தியம் என்று கருதினேன். இதனால் விரைவில் வருகிறது என நம்பிய புரட்சிக்கான ‘இராணுவ புவியியல்’ (Military geography) பற்றிய தேடல்களில் சின்ன வயதுகளிலேயே என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த நாட்களில் திரு. SJV செல்வநாயகம் அவர்களது தலைமையில் தமிழரசுக் கட்சி தமிழருக்கு இணைப்பாட்சி கோரிப் போராடியது. எனது தந்தையாரும் ஒரு தீவிர ‘பெடரலிஸ்ட்’. லெனினின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இணைப்பாட்சி பொதுவுடமையே எனது கொள்கையாக இருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான புரட்சியை நான் கனவு கண்டேன். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற சிங்கள மிதவாதிகளதும் இடதுசாரிகளதும் மத்தியில் சிங்களத் தேசியவாதிகளோடு சமரசம் செய்வது அவசியம் என்கிற கருத்து வலுபெற்று வந்தது. இத்தகைய போக்கு அதிகரிக்க அதிகரிக்க இடதுசாரி அமைப்புகளுக்குள் இணைப்பாட்சிக் கருத்துக்கு எதிர்நிலை உருவானது.
1970ல் இருதய நோயாளியாக இருந்த ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீரவை வைத்தியசாலையில் சந்தித்து, தமிழரது போராட்டத்தையும் புரட்சியையும் இணைப்பது தொடர்பாகப் பேசினேன். அவர் என்னை எஸ்.டி.பண்டாரநாயக்கவை சந்தித்து இது குறித்துப் பேசுமாறு சொன்னார். எஸ்.டி.பண்டாரநாயக்க “சோவியத் யூனியன் போல இணைப்பாட்சி அடிப்படையிலான பொதுவுடமை சமூக அமைப்பு இலங்கைக்கு ஏற்றதல்ல” என்று கூறினார். சீனா மாதிரியில் அமைந்த கிராமிய கொம்யூன்கள் அமைப்பில் இனப் பிரச்சினைக்கு இடமே இருக்காது என்பதே அவரது விவாதமாக இருந்தது. இதனால் அவர்களோடு என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.
அரசியல் வேறுபாடுகளுக்கு வெளியே புதுவை இரத்தினதுரை, டானியல் அண்ணா, தோழர் எம்.சி சுப்பிரமணியம், தோழர் இக்பால், மகாகவி, காசி ஆனந்தன், சண்முகம் சிவலிங்கம், சுபைர் இளங்கீரன், மு.நித்தியானந்தன், நிர்மலா, புஸ்பராசா, மாவை சேனாதிராசா காரைநகர் அ.தியாகராசா என்று பரந்த அரசியல் புலத்தில் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தமக்கு எதிரானவர்களோடு நான் நட்புப் பாராட்டுவது தொடர்பாக யாரும் என்னைச் சந்தேகப்பட்டதோ புறக்கணித்ததோ இல்லை. இந்தப் பாக்கியம் என் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. “சண்டை பிடித்துக்கொண்டே நண்பர்களாய் இருக்கலாம்” என்பதை ஜெயபாலனிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ‘மூன்றாவது மனிதன்’ பௌசர் சொல்லுவான். அவனும் நானும் போடாத சண்டையா!
இந்தக் காலங்களில் சாதி – வர்க்கச் சிக்கல்களில் நிர்வாகச் சேவைகளிலிருந்த அதிகாரிகளையும் பொலிஸ்காரர்களையும் நான் தாக்கியதாக வழக்குகளில் பலதடவைகள் கைது செய்யப்பட்டு நான் விளக்க மறியலில் இருக்க நேர்ந்தது. பொலிசாரும் நிர்வாக சேவை அதிகாரிகளும் என்னைக் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்க வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். 1972ல் பொலிசார் என்னைச் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டிருந்தனர். எல்லாத் தரப்பிலும் என்னை விரும்புகிறவர்கள் இருந்ததால் எப்போதும் எனக்கு எதிரான நகர்வுளைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டேயிருந்தன. என் சாதுரியத்தாலும் தற்செயல்களாலும் நான் பல தடவைகள் என் உயிரைக் காப்பாற்றியுள்ளேன்.
கொஞ்சம் கிளர்ச்சிக்காரன், கொஞ்சம் சமூகச் சண்டியன், கொஞ்சம் புரட்சிச் சிந்தனை, கொஞ்சம் ரொமான்டிக்கான கவிஞன் என வாழ்ந்த காலங்களவை.
1970பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கைலாசபதி அவர்களை நான் சந்தித்தபோது அவர் என்னைப்பற்றி உலாவும் கதைகளை வைத்து இ.சிவானந்தன் ‘காலம் சிவக்கிறது’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பதாகச் சொன்னார். பின்னர் சிவானந்தனும் இதனை என்னிடம் சொன்னார். ஷோபா, நீங்களும் என் இளவயதுக் கிளர்ச்சிகள் குறித்து உலாவும் கதைகளைக் கொண்டு உங்களது ‘ம்’ நாவலில் கலைச்செல்வன் என ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருப்பதாகச் சொன்னீர்களல்லவா. ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் விரும்புகிறவர்களைக் கதைகளாகக் கொண்டாடுவார்கள். எனது பதின்ம வயதுகளில் என்னைப் பற்றி உலாவிய கதைகளைக் கேட்டு நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என்னைபற்றி உருவாக்கிய பிம்பங்கள் தான் என்னை எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாத அரசியல் சூழலுக்குள் வைத்திருந்தன. எனது தன்னிலையை மக்கள் தீர்மானித்துக்கொண்டேயிருந்தார்கள்.
என்னுடைய பதின்மப் பருவத்தில் தம்முள் மோதிக் கொண்ட ருஷ்ய சார்பு – சீனச் சார்பு இடதுசாரி அமைப்புகளுக்கு வன்னியில் தளம் இருக்காததால் இரு தரப்பினருக்குமே நான் பயன்பட்டேன். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் ஏழை விவாசாயிகளுக்குச் சார்பான வன்முறையாளனாகவே என்னுடைய இளைய வயதுகள் எனக்கு ஞாபகம் வருகிறது. சிறு வயதிலிருந்தே தோழர்களதும் பெண்களதும் அன்பும் நிழலும் எனக்கு எப்போதுமே வாய்த்தது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளில் எனக்குத் தோழர், தோழியர்கள் இருந்தார்கள். என் இளம்வயதுத் தோழர்களுள் டானியல் அண்ணாவும் தோழர் எம்.சி.சுப்பிரமணியமும் மிகவும் முக்கியமானவர்கள்
என்னுடைய கல்வி அறுந்து அறுந்து தொடர்ந்தது. 1960ல் இருந்து 1974 வரைக்கும் நான் மிகத் தீவிரமாக இருந்த காலம். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் கல்வி முற்றாகத் தடைப்பட்டது. அம்மா வீட்டில் களவெடுத்து என்னை ஆதரித்தார். எனது தோழர்களின் ஆதரவு எனக்கு எப்போதுமிருந்தது. இவை பற்றியெல்லாம் என்னுடைய ‘சேவல் கூவிய நாட்கள்’ குறுநாவலில் சிறிது பேசியிருக்கிறேன். எனினும் என்னுடைய இளமைக் காலம் குறித்து இன்னும் விரிவாகச் சுய விமர்சனங்களோடு எழுதவேண்டும் என்பது எனது விருப்பம்.
- மொழிவாரித் தரப்படுத்தல், புதிய இனவாத அரசியல் யாப்பு, தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள், சிவகுமாரனின் மரணம் எனக் கொந்தளித்துக்கொண்டிருந்த 70களில் ‘தமிழ் இளைஞர் பேரவை’ போன்ற அமைப்புகளில் நீங்கள் இணையாமலிருந்தது எப்படி?
நான் தமிழரசுக் கட்சியின் இணைப்பாட்சிக்கான போராட்டத்தை ஆதரித்தேன் ஆனால் சாதி – வர்க்கப் பிரச்சினைகளில் இடதுசாரிகளோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியை எதிர்த்தேன். ஆனாலும் சிங்களப் பேரினவாதிகள் பலம்பெறப் பலம்பெற இடதுசாரிகள் மத்தியில் அதிகரித்த இணைப்பாட்சி தொடர்பான தளம்பல்களை விமர்சிக்கவும் நான் தவறியதில்லை. தமிழ் இளைஞர் பேரவையினர் சாதிய ஒடுக்குமுறைகள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் தீர்ந்துவிடும் என்கிற கொள்கையையே வைத்திருந்தனர். தமிழ் இளைஞர் பேரவையின் அத்தகைய வலதுசாரித் தேசியவாதப் பார்வையே என்னை அவர்களோடு இணையவிடாமல் தடுத்தது.
- அரசியல் உணர்மையுள்ள தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகங்களைத் துறந்து ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைந்த காலத்தில் நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றீர்கள்..?
ஏறக்குறைய 14 வருட அஞ்ஞாதவாசத்தின் பின்னர், என்மீது எஞ்சியிருந்த வழக்குகளை அவற்றைத் தொடுத்த பொலிஸ் அதிகாரிகளையும் நிர்வாக சேவை அதிகாரிகளையும் துப்பறிந்து அவர்களை மிரட்டியே வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வைத்தேன். என்னை விடுதலை செய்த நீதிபதி சுந்தரலிங்கம் ‘உன் கொள்கைகள் சரி, வழிகள் பிழை, மேலே படித்து முறைப்படி அரசியல் செய்’ என்று நன்னெறிச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தியே என்னை விடுதலை செய்தார். அதனால் தான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை எழுதினேன். பல்கலைக்கழகம் போகும் போது நான்கு வருடங்கள் அமைதியாக இருக்கத் தீர்மானித்தேன். ஆனால், பகடிவதைக்கு எதிராக முதல்நாளே கலகமாகி விட்டது. ராக்கிங் நடந்துகொண்டிருந்த போது மாணவர் தேர்தலும் வந்தது. தமிழ் மாணவர்கள் – சிங்கள மாணவர்கள் எனப் பிளவுபட்டுத் தேர்தலில் நின்றார்கள். ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றவர்கள் துப்பாக்கி இளைஞர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்கினர். துப்பாக்கி இளைஞர்கள் பலரோடு நான் விவாதங்களில் ஈடுபட்டேன். தமிழர்களின் உரிமை வேறு, இனவாதம் வேறு என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இந்தச் சூழலில் யாழ் – வன்னி – கிழக்கு – மலைய தமிழர்களையும் முஸ்லிம்களையும் பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை உருவாக்கித் தேர்தலில் வென்றோம். அப்போது விரிவுரையாளர்களாக இருந்த மு.நித்தியானந்தனும், நிர்மலாவும் எங்களோடு துணை நின்றார்கள். தமிழ்த்துறையிலிருந்த சிவலிங்கராசா போன்ற பல சக மாணவர்கள் துப்பாக்கி மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எனது மெய்க்காப்பாளர்கள் போலவே என்னுடன் திரிந்தார்கள். இந்தக் காலங்களில் தான் எனக்கு மலையக மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதுமான ஈடுபாடு ஏற்பட்டது.
- நீங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் வளாகம் இலக்கியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் நிரம்பியிருந்தது. உங்கள் பல்கலைக்கழக வாழ்வு உங்களது இலக்கியம் – அரசியல் குறித்த நிலைப்பாடுகளில் செழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததா?
ஆம். யுத்தமில்லாமல் இருந்திருப்பின் அவற்றுக்கு ஒரு செழுமையான தொடர்ச்சி அமைந்திருக்கும். யுத்தம், அகதி இடப் பெயர்வுகளால் அறிவு மற்றும் கலை – இலக்கியத் தலைமுறைகளின் தொடர்புக் கண்ணிகள் உடைந்து போய்விட்டதுதான் பெரும் சோகம். நான் பெரிதும் மதிக்கும் கலாநிதிகளும் மற்றும் ஆற்றல் மிக்கவர்களுமான கைலாசபதி, சிவத்தம்பி, சு.வித்தியானந்தன், மௌனகுரு, சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான், மு.நித்தியானந்தன், நிர்மலா, மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் அங்கிருந்தனர். விரிவுரையாளர்கள் மௌனகுரு, மு.நித்தியானந்தன், நிர்மலா போன்றவர்கள் தார்சீசியஸ், சண்முகம் சிவலிங்கம், பாலேந்திரா போன்றவர்களது ஆதரவுடன் நாட்டுப்புற மற்றும் நவீன நாடகங்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் விரிவுரையாளரும் கவிஞருமான எம்.ஏ.நுஃமான் தமிழில் மொழி பெயர்த்த ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், யாழ்ப்பாணச் சமூகம் தொடர்ச்சியாக அவர்களுக்கு நிறையக் கொள்கை சார்ந்த சவால்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. ஆறுமுக நாவலரை மறுத்து யாழ்ப்பாண ‘உயர்’ சமூகங்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் அக முரண்பாடுகளின் ஆரம்பப் புள்ளிகளுள் ஒன்றாக இருந்தது என்பதையும் இங்கே கசப்புடன் பதிவுசெய்ய விரும்பகிறேன். மார்க்ஸிய கலாநிதிகளான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களே விமர்சனமின்றி ஆறுமுக நாவலரின் புகழ் பாட ஆரம்பித்தபோது என்னுள் பல தங்கக் கோபுரங்கள் சரிந்துபோயின.
ஈழத் தமிழ்க் கவிதையின் உருவம், உள்ளடக்கம் மட்டுமன்றி தளமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. ஆண்கள் அகப்படுத்தி வைத்திருந்த கவிதை உலகம் மெல்ல மெல்ல பெண்களின் கைகளிற்குப் போக ஆரம்பித்தது அப்போதுதான். ஊர்வசி, செல்வி, அவ்வை, மைதிலி அருளய்யாவிலிருந்து சிவரமணி வரைக்கும் மிகத் தீவிரமானதொரு கவிஞர்களது அணி முளைத்துச் செழித்தது.
போராட்டங்களில் மாணவர்கள் மட்டுமல்ல, கலை இலக்கியத்துறையினரும் பங்கு பற்றினோம். அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பிய மாதிரித்தான் கலைஞர்கள் எழுத வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் கமிஷார்த்தனமான நாட்டாமைகளும் அப்போது அதிகம் இருக்கவில்லை.
தமிழர் மத்தியில் செழுமையான விவாதங்கள் நடந்த கடைசிக் காலக் கட்டங்களவை. எனினும் ஆரோக்கியமான விவாதங்களைவிட அதிகரித்து வந்த இன ஒடுக்குதலும் போரும் புலபெயர்வுகளும் தான் வந்த நாட்களில் எங்கள் வாழ்வைத் தீர்மானித்தன என்பது எங்களது கெடுநேரம்.
- ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் தோற்றத்தின் போது இயக்கங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு எவ்வாறிருந்தது?
சிறு வயதில் இருந்தே ஆயுதப் போராட்டம் தொடர்பான ஆர்வத்தோடும் தேடலோடும் அலைந்த மூத்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களுள் பலர் சுபாஸ் சந்திரபோஸ் அபிமானிகள். சிலர் மா சே துங் அபிமானிகள். இரண்டு அணிகளிலும் ஆயுதப் போராட்ட கனவுகளும் சிறு முயற்சிகளும் நிறையவே இருந்ததன. ஏற்கனவே சாதி ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்த மாவோயிஸ்ட்டுகள் நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டும் வேட்டைத் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறு சிறு தற்காப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்ட்டுகளும் தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கங்களும் – குறிப்பாக பஸ் தொழிலாளர்கள் – ஆயுதங்களைச் சேகரித்தனர். இரண்டு தரப்போடும் எனக்குச் சின்ன வயதுகளில் இருந்தே தொடர்பிருந்தது. இணைப்பாட்சி அடிப்படையிலான பொது உடமைப் புரட்சியே என்போன்ற சிலரின் கனவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளிடம் தமிழர் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இனத்துவ நீதி நிலைபாடும் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளிடம் ஒடுக்கப்பட்ட சாதி வர்க்க மக்களுக்கான சமூக நீதி நிலைப்பாடும் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கிற விருப்பமுள்ளவர்கள் அன்றும் இருந்தார்கள். பின்னர் சிங்களப் பேரினவாதத் தலைமையுடனான சமரசப் போக்கால் இடதுசாரிகள் பலவீனப்பட்டார்கள். தமிழ்த் தேசியவாதிகளைக் கொழும்புத் தமிழர் சிங்களப் பேரினினவாதத் தலைமையுடன் சமரசப்படுத்திய போது இடதுசாரிகளைப் போலவே தமிழ்த் தேசியவாதிகளும் இணைப்பாட்சிக் கொள்கையைக் கவிட்டார்கள். இப்படித்தான் நாடாளுமன்ற தேசியவாதத் தலைமையும் மக்கள் மத்தியில் பலவீனப்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் எதிர்ப்பு அரசியலில் முன்னிலைப்பட்டார்கள். 1971 ஜேவிபி கிளர்ச்சியும் எங்கள் தலைமுறை கிளர்ச்சிக்காரர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் என் போன்ற சிலரின் இணைப்பாட்சி அடிப்படையிலான இனசமத்துவமும் புரட்சியும் என்ற கனவு வெற்றி பெறவில்லை.
- நம்முடைய இயக்கங்களின் இயங்குமுறைக்கும் சனநாயகத்திற்கும் ஏதும் தொடர்பில்லை என அவர்களிடம் பேசியுள்ளீர்களா?
உலக வரலாற்றின் விடுதலை மற்றும் புரட்சிகர ஆயுத இயக்கங்களின் பிரச்சாரங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஜனநாயகம் பற்றிய பிரச்சினைகள் பல பொதுவாக இருந்தமை புலப்படும். விடுதலை – புரட்சி வரலாறு நெடுகவே எதிரியோடு மட்டுமன்றி விமர்சிக்கும் ஜனநாயக சக்திகள்மீதும் துரோகி என்றோ எதிர்ப் புரட்சியாளர்கள் என்றோ முத்திரை குத்தப்பட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. போராளிகளின் சர்வாதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக அடித்தளமும் ஜனநாயக நோக்கமும் இருந்ததா என்கிற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்குச் சாதகமான பதில் என்னிடம் இல்லை. நான் முஸ்லிம் மக்களதும் மலையக மக்களதும் உரிமைகள், பெண்களதும் தலித்துகளதும் உரிமைகள், ஆயுதப் போராட்டத்தில் சாத்தியமான ஜனநாயகம் போன்ற விடயங்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
சிறுவயதில் வீட்டில் களவெடுத்து அம்மாவும் , பின்னர் வறுமையுடன் போராடி என் மனைவி வாசுகியும் என்னை ஆதரித்ததால் எனக்கு நிமிர்ந்து நிற்பது சாத்தியமாக இருந்தது. இப்போது எனது பிள்ளைகளது ஆதரவும் எனக்கு உள்ளது.
தோழன் புதுவை இரத்தினதுரை என்னிடம் ‘உனக்கு என்ன வேண்டுமென்றாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். பிறகு ஏன் காடையன் போல இயக்கத்தில் எல்லோருடனும் சண்டை போடுகிறாய்?” என்று கேட்டார். வேறு பலரிடமும் உதாரணத்துக்கு, லண்டனில் அ.இரவியிடமும் இது பற்றிக் கூறிக் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் கஸ்ரோவுக்கும் கடுமையான கருத்து முரண்பாடும் மோதலும் இருந்ததும், கஸ்ரோ என்னை அழித்துவிட முயன்றதும் ஒன்றும் இரகசியமல்ல. சாவுக்கு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். முன்னர் ஈரோஸ் தவிர்ந்த ஏனைய இயக்கங்களோடும் ஒரிரு சந்தர்பங்களில் ஆயுதம் தாங்கிய ஓரிரு முஸ்லிம் குழுக்களோடும் இதே சிக்கல் இருந்தது. ஆனாலும் யாருக்கும் நான் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன் என்கிற சந்தேகம் இருக்கவில்லை. அதுதான் வாழ்நாள் முழுவதும் என் கவசமாய் இருந்தது.
- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (PLOTE) உங்களுக்குமான உறவுகள் குறித்து?
வெளிவாரியான உறவுகள்தான். எட்டத்தான் வைத்திருந்தார்கள். நான் பெரும்பாலும் டெல்லியில் இருப்பதையே தலைமை அதிகம் விரும்பியது. இராணுவ புவியியல், அரசியல் உத்திகள் தொடர்பாக என்னிடம் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். சமகாலத்தில் நான் ஏனைய இயக்கங்களோடும் சுதந்திரமாகத் தொடர்பில் இருந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. உமாமகேஸ்வரனுக்கும் வே.பாலகுமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது நான் பாலகுமாரை ஆதரித்ததை அவர்கள் இரசிக்கவில்லை. பல்வேறு இயக்கத் தலைவர்களிடையே ஒத்த பண்புகள் அதிகமாக இருந்தன. சிலர் வென்றார்கள், சிலர் வெல்லவில்லை அதுதான் வேறுபாடு. பின்னர் உட்கொலைகள் மலிந்தபோது எனக்கு புளொட்டின் உளவுத்துறைப் பொறுப்பாளர் கந்தசாமியுடன் மோதல் ஏற்பட்டது. இயக்கத்தைப் பலவீனப்படுத்தி உள்ளே அகப்பட்டவர்களை தப்பவைக்க ஈஸ்வரன், அசோக் போன்றவர்கள் முனைந்தபோது அவர்களை ஆதரித்தேன். முரண்பட்டு எட்ட இருந்த என்னைத் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்காகப் போக அழைத்தபோது எனக்குப் பதிலாக ஒரு முஸ்லிம் தோழரை அனுப்பும்படி கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தது இன்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.
- புதியதோர் உலகம் நாவல் குறித்து?
நாவல் வடிவம் தொடர்பாகப் பேசவில்லை. வரலாறு தொடர்பாக ‘லங்காராணி’க்கும் ‘புதியதோர் உலகத்துக்கும்’ நிரந்தரமான இடம் உள்ளது. ஒன்று இயக்கங்களின் ஆரம்ப சூழலையும் அடுத்தது இயக்கங்கள் அழியத் தொடங்கும் ஆரம்ப சூழலையும் விவரிக்கின்றன.
- இதுவரை எத்தனை கொலைமுயற்சிகளிலிருந்து உயிர் தப்பியுள்ளீர்கள்? எவ்விதம் தப்பினீர்கள்?
1960பதுகளின் பிற்பகுதியில் சாதி ஒழிப்புப் போராட்ட காலங்களிலேயே நான் இந்த வன்முறைக்கும் கொலை முயற்சிகளுக்கும் பழக்கப்பட்டுவிட்டேன். 1972ல் ஜேவிபி கிளர்ச்சியின் ஆண்டு நிறைவைச் சாக்காக வைத்து என்னைச் சுட்டுக்கொல்ல காவல்துறை முயன்றது. அந்த நாள்பார்த்து என்னைப் பார்க்க அமெரிக்க தத்துவ மாணவர் ஒருவர் வந்திருந்தார். அந்தத் தற்செயல் என் உயிரைக் காப்பாற்றிற்று. வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் தப்பினேன்.
1986 – 1987களில் இந்தியாவில் வைத்தும் யாழ்ப்பாணத்தில் வைத்தும் வன்னியில் வைத்தும் கொழும்பில் வைத்தும் புளொட் கந்தசாமியின் ஆட்கள் என்னைக் கொல்ல முயன்றனர். யாழ்ப்பாணத்தில் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த மெண்டிஸ் “உங்களைக் கொலை செய்ய உத்தரவு. ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன்” என்று என்னிடம் கூறினார். பின்னர் இத்தகைய ஓர் உத்தரவு தொலைத்தொடர்பில் வேலை செய்த தோழர்களால் அப்படியே அமுக்கப்பட்டு தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைப் போல இலங்கை அரசுத் தரப்பினால் எனக்கு ஆபத்திருந்த போதெல்லாம் நான் அறிந்த, அறியாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிங்களத் தோழர்களும் எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் என்னை காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை உளவுத்துறையில் இருந்த முஸ்லிம்கள் நான் வாழவேண்டுமென்று விரும்பினார்கள் என்று அறிந்தேன். தெற்கில் பசீர் சேகுதாவுத், ஜனாப் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கிங்ஸ்லி பெரேரா, ஜோதிகுமார் போன்ற சிங்கள மற்றும் மலையக நண்பர்கள் என் பாதுகாப்பில் அக்கறையாக இருந்தார்கள்.
வடகிழக்கு முஸ்லிம்களின் பெரும் தலைவரான ஜனாப் அஸ்ரப் அவர்கள் 1984ல் நான் வெளியிட்ட ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ என்ற ஆய்வு நூல் தன்னில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் சிந்தனைக்கு அது உதவியது என்றும் சொல்லுவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பசீர் சேகுதாவுதில் இருந்து ‘மூன்றாவது மனிதன்’ பௌசார் வரைக்கும் பலர் இதனை என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள். காலமெல்லாம் இத்தகைய சொற்கள் மந்திரம்போல என்னைப் பாதுகாத்துக் காப்பாற்றின.
1990 ஓகஸ்டில் முஸ்லிம்களை நான் குழப்புவதாகக் குற்றம்சாட்டி மட்டக்களப்பில் வைத்து என்னைப் புலிகள் கடத்தினார்கள். தடுப்புக்காவலில் கருணா வந்து என்னைப் பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டியோடு அழைத்துச் சென்றனர். அவர்களோடு போராடிச் சாகத் தயாராகவே இருந்தேன். கடைசி நேரத்தில் வன்னியில் இருந்து அழைப்பு வந்ததால் வன்னிக்கு அனுப்பப்படடேன். அங்கு மன்னிப்புக்கோரி விடுவித்தார்கள்.
1990 செப்டம்பரில் நோர்வேஜியத் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள அதிகாரி லீனசேனவின் தூண்டுதலால் இலங்கை இராணுவம் என்னைக் கடத்தும் முயற்சி நல்வாய்ப்பாகத் தோல்வியடைந்தது. பின்னர் அவரது தூண்டுதலால் என்னைக் கைது செய்து ஒரு பகல் தடுத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து நோர்வேஜியத் தூதரகம் என்னை மீண்டும் ஒஸ்லோவுக்கு அனுப்பிவைத்தது.
ஒரு குத்து மதிப்பாக ஏறக்குறைய 16 கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கிறேன் என நம்புகிறேன்.
- கருணா கொல்ல முயன்றாரென்றும் வன்னி விடுதலை செய்யச் சொன்னதுமென்றால் உங்களைக் கொல்ல எடுத்த முடிவு கருணாவின் தனி முடிவா? ஏன் கேட்கிறேன் என்றால், கிழக்கில் நடந்த இஸ்லாமியர்கள் அழிப்பு போன்ற புலிகளின் அட்டுழியங்களுக்கு கருணாவே பொறுப்பென்றும் அதற்கும் தலைமைக்கும் எந்தப் பொறுப்புமில்லை என்றொரு கருத்து இப்போது சிலரால் சொல்லப்படுகிறதல்லவா?
கருணாவென்று சொல்லவில்லை. கருணாவின் கீழ் பணிபுரிந்த டேவிட் என்னைக் கைது செய்தார். கருணா வந்து பார்த்தார். பின்னர் கிரான் சுடலைக்கு என்னைக் கொலை செய்ய அழைத்துச் சென்றனர். வன்னியில் இருந்துவந்த கடைசி நிமிட அழைப்பு என்னை விடுவித்தது.
முஸ்லிம் அழிப்புக்கு இயக்க தலைமையல்ல கருணாவே முழுப் பொறுப்பென்றால் இயக்கத்தலைமை 1990களிலேயே கருணாமீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், வடபகுதி முஸ்லிம் மக்களை இயக்கத் தலைமை காப்பாற்றி இருக்க வேண்டும் அப்படி ஏதும் நடக்கவில்லையே.
- தொண்ணூறுகளின் இறுதிப் பகுதிகளில் நீங்கள் புலிகளை ஆதரித்துப் பேசினீர்கள். விமர்சனத்துடன்தான் ஆதரித்தீர்கள். எனினும் புலிகளின் அரசியல் வேலைத்திட்டமே முழுமையாகத் தவறானது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லையா?
முஸ்லிம் மக்களுக்குப் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான எனது விமர்சனங்கள் பலர் அறிந்ததே. பாரிஸில் கொல்லப்பட்ட சபாலிங்கத்திற்கான அஞ்சலிக் கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். அதில் முன்னுதாரணமில்லாத அளவுக்குக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அது போலவே கொலை செய்யப்பட்ட தோழி ராஜினி திரணகம, மறைந்த தோழன் புஸ்பராசா போன்றவர்கள் மீதான அஞ்சலிக் கவிதைகளும் நேரடி விமர்சனப் பாங்கானவை. இவற்றைவிடக் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வன்னியில் நேரடியாகப் புலிகள் முன் வைத்து வந்திருக்கிறேன்.
1996ல் மட்டக்களப்பு முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளது கோரிக்கைகளோடு ஒரு சில தடவைகள் படுவான்கரையில் நான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தேன். அத்தகைய சந்திப்பு ஒன்றின்போது கிழக்கிற்கு வந்திருந்த யாழ்வேந்தன் என்னைச் சந்தித்துச் சில உதவிகளைக் கேட்டார். இராணுவ புவியியல், இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவது, மேற்கு நாடுகளுடனான உறவுகள் தொடர்பாக தங்களது வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளை வைக்காமல் நேரடியாகத் தங்களிற்கு உதவுமாறு புலிகளின் தலைமை சார்பாகக் கேட்டார். இதுதான் எனக்கும் புலிகளிற்குமான உறவின் அடிப்படை. முஸ்லிம் மக்கள் தொடர்பாகச் சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. ஆனால் புலிகளின் மட்டக்களப்புச் செயலகம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. என்னுடைய விமர்சனங்களை நான் தொடரவே செய்தேன்.
மக்களது அரசியல் எப்போதும் தெரிவுகளுக்கூடாகவே செயற்படுகிறது. ஒருபோதும் தெரிவுகள் தூய்மையானதாக இருப்பதில்லை. இத்தகைய பருமட்டான தெரிவுகளுக்கூடாகத்தான் என்னுடைய வாழ்வும் அரசியலும் நகர்கிறது. வன்னியில் கவிஞர் கருணாகரனின் நூல் வெளியீட்டு விழாவில் புலிகளின் ‘நந்தவனம்’ செயலகத்தையும் புலிகளின் காவற்துறையையும் கடுமையாகக் கண்டித்துப் பேசினேன். வன்னி வரலாற்றில் அவ்வாறான விமர்சன முன் உதாரணம் இல்லை என்றார்கள். நான் பேசி முடிய நண்பன் மு. திருநாவுக்கரசு ‘உனக்குப் பிரச்சினையில்லை விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கல்லவா பிரச்சினை” என்றார். ஆச்சரியப்படத்தக்க வகையில் பாலகுமாரனும் கூட்டத்துக்கு வந்திருந்த சில பெண் போராளிகளும் பார்வையாளர்கள் சிலரும் என் பேச்சைத் துணிந்து பாராட்டினார்கள்.
- வன்னிக்குச் சென்று புலிகளுக்காக சில வேலைகளைச் செய்தீர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். என்னவகையான வேலைகளை அவர்களுக்காகச் செய்தீர்கள்?
புலிகள் என்னிடம் ‘”எங்களை விமர்சித்தபோதும் நீங்கள் தேச பக்தன் என்பதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். இத்தகைய கருத்து ஆரம்பத்தில் புதுவை இரத்தினதுரையால் சொல்லப்பட்டு வந்ததுதான். ஆனால் 1996ல் யாழ்ப்பாணம் விழுந்த பிற்பாடு அவர்களது அணுகுமுறையில் பாரிய வேறுபாடு தெரிந்தது. “உங்கள் விமர்சனங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பாக உங்களது அறிவுபூர்வமான விமர்சனங்கள் எங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் உணர்வுபூர்வமாகப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டுவதுதான் பிரச்சினை” என்று என்னிடம் சொன்னார்கள். ஜெயதேவன் பிரச்சினையில் வன்னியில் வைத்தே நான் கஸ்ரோவின் நந்தவனம் செயலகத்தைக் கடுமையாக விமர்சித்தேன். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனது விமர்சன அறிக்கைகளை அவர்கள் கோரினார்கள். இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன்..
- உங்களது நெருங்கிய தோழராயிருந்த தராகி சிவராம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
எனக்கு அவன்மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவன் கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரும் அறிவாளன் என்பதில் சந்தேகமில்லை. அவன் யாழ் மையவாதத்தை எதிர்த்தான் என்பதிலும் கிழக்கு மாகாணத்தை நேசித்தான் என்பதிலும் வடகிழக்கு இணைப்புக்காகப் பணியாற்றினான் என்பதிலும் சந்தேகமில்லை. கருணாவின் பிளவின்போது “பிரபாகரனுக்கு மட்டக்களப்புப் போராளிகளைச் சுட மக்கள் ஆணை இல்லை, போராளிகள் வீடுகளுக்கு அனுப்பப்படவேண்டும், கருணா பிரச்சினையை உள்ளேயே பேசித் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்” என்கிற எனது அறிக்கையை ‘சூரியன் F.M’மில் வெளியிட்டார்கள். அப்பொழுது ‘குளோபல் தமிழ் நியூஸ்’ குருபரன் சூரியன் F.Mமில் பணியாற்றினார். அந்த அறிக்கையை வீரகேசரியும் வெளியிட்டது. அதன்பின்னர் நான் வன்னிக்குப் புறப்பட்டபோது எனது நண்பர்களும் உறவினர்களும் கண்ணீருடன் தடுத்தார்கள். சிவராமும் என் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட்டான். பின்னர் நான் வன்னியில் இருந்து திரும்பி வந்ததும் எனக்கு மது விருந்து தந்து கொண்டாடினான். அவனுடைய மரணம் அவனைப்போல பணியாற்றிய புத்திஜீவிகள் அனைவரையும் பாதித்தது.
- முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னால் ஏதாவது சதி முயற்சிகள் உள்ளதாகக் கருதுகிறீர்களா?
புலம் பெயர்ந்தவர்களில் பலர் திரு. பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் தாயகத்தில் பலர் அவர் இறந்துவிட்டதாகவும் நம்புகிறார்கள். சர்வதேச அரங்கிலும் இறந்துவிட்டார் என்கிற கருத்தே உள்ளது. இதுபற்றிச் சந்தேகம் கிளப்பப்பட்ட புகைப்படங்களைத் தவிர விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் கொல்லப்பட்ட சூழல் குறித்துத் தெரியாமல் பதில் சொல்ல முடியாது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் கொல்லப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றச் செயலாகும்.
- அப்படியானால் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்றா சொல்ல வருகிறீர்கள்?
இரண்டு கருத்துகள் உள்ளன என்றேன். எனது கவலை எல்லாம் மக்கள் உயிர்த்தெழுந்து மீள் குடியமர வேண்டும், அவர்களது வாழ்வு சுதந்திரமாக மேம்பட வேண்டும் என்பதுதான்.
- இந்தியாவை ஈழத் தமிழர்களின் நட்பு சக்தி என்றே சொல்லிவருகிறீர்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசு என்ற நிலையிலிருந்தே அரசியலை நடத்தி வருகையில் அவர்கள் எமக்கு எசமானர்களாகப் பார்க்கிறார்கள் என்று சொல்வதை விடுத்து நட்பு சக்தி என அழைப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்?
நான் இதை மேலெழுந்தவாரியாக இலட்சிய நோக்கில் மட்டுமே பார்க்கவில்லை. கொஞ்சமும் நெகிழ்வில்லாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள், எமது பிராந்தியத்தில் நெடுங்காலமாக சிங்களப் பேரினவாதிகளின் மூல உபாய அடிப்படையிலான உறுதியான நண்பனாக சீனா இருப்பது, வளர்ந்துவரும் இந்திய – சீன முரண்பாடு, இதன் ஆடுகளமான இந்து சமுத்திர அரசியல், உலகமயமாதல் பின்னணியில் பலமடைந்து வரும் தமிழகத்துடனும் உலகத் தமிழர்களுடனுமான எங்களது கலாச்சார உறவுகள், மற்றும் எங்களது மட்டுப்பட்ட வளமும் வாய்ப்புகளும், எம் இனத்தின் மிக சிறிய மக்கள் தொகை, அதிலும் உழைக்கும் பருவ மக்களில் கணிசமான தொகையினர் அகதிகளாக வெளியேறி விட்டமை இப்படிப் பல காரணங்களை முன்வைத்தே நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறேன். குறுங்காலச் செயற்பாடுகளை விட இந்து சமுத்திர அரசியலில் எமக்குள்ள வாய்ப்புகள், உலகத் தமிழர்களது நீண்டகால வரலாறு, பொது நலன்கள் என்பவற்றை முன்னிலைப்படுத்தியே அவ்வாறு சொல்லி வருகிறேன்.
- யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் இசுலாமியர்களை வெளியேற்றியதற்கான காரணம் எதுவெனக் கருதுகிறீர்கள்? இனச் சுத்திகரிப்பா?
இந்த வன்கொடுமையை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் எதிர்த்தவர்களுள் நானும் ஒருவன். 1990களிலும் அதன் பின்னும் என்மீது நடந்த கொலைமுயற்சிகள் பலவற்றுக்கு எனது சமரசமில்லாத எதிர்ப்புக் காரணமாக இருந்தது. ஆனால் 1995ன் பின்பு விடுதலைப் புலிகள் என்னையும் என் விமர்சனங்களையும் மென்மையாகக் கையாண்டதற்கு முஸ்லிம் மக்கள் தொடர்பான ஒரு விடயம் முக்கிய காரணமாகும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது வருட நினைவு நிகழ்வில் கவிதை வாசிக்கும்படி வடபகுதி முஸ்லிம் அகதிகள் அமைப்பின் தலைவர் சுபியான் மௌலவி என்னை அழைத்திருந்தார். நான் அங்கு அழுது அழுது ‘அழுவதே விதியென்றால்’ என்கிற கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது.
பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு.
தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடங்கள் இரண்டாச்சு.
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா?
எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக் களர்வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றம் ஏதும் அறியா இக்
குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்.
இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா?
இதுதானா தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா?
ஆறாம் வருடமும் இவர்கள்
அழுவதே விதியென்றால்
அழியட்டும் இந் நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்.
இதுபற்றி அறிந்த எனது நண்பர் கவிஞர் வில்வரத்தினம் ‘கவிஞர்கள் அறம் பாடக்கூடாது, நீ அறம் பாடியிருக்கிறாய்’ என்று சொன்னார். இக்கருத்தே வன்னியில் பலருக்கும் இருந்தது. 1995ம் வருடம் தமிழர்களிற்கு ஆய்க்கினைகள் மிக்க வருடமாக ஆரம்பித்தது. 1995 ஒக்டோபரில், அய்ந்து வருடங்களற்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே மாதத்தில் – திகதியில் அதே வழியால் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேற நேர்ந்தது. இந்தத் தற்செயல் நிகழ்வுக்குப் பின்னர் என்னுடனான வன்னியின் அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள என்னுடைய கவிதை வரிகளில் உங்களது கேள்விக்கான பதில் உள்ளது.
- இன்று குமரன் பத்மநாதன் ஊடகங்களில் உதிர்த்துவரும் சொற்களை எவ்வாறு மதிப்பிடுகிறீரர்கள்?
இன்றைக்கு தமிழர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தோல்வியின் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, பாரம்பரிய நிலங்களைப் பாதுகாத்தல், சுயநிர்ணய உரிமை எனப் பல்வேறு விடயங்களையும் ஒரே அமைப்பால், ஒரே அரசியல் அணுகுமுறையால், ஒரே உத்தியால் கையாள முடியாது. இலங்கை அரசுடனும் இந்திய அரசுடனும் செயற்படக்கூடிய அமைப்புகள் மூலம்தான் நிவாரணப் பணிகளையும் நிர்மாணப் பணிகளையும் செய்ய முடியும். அதுதான் இன்றைய உடனடித் தேவை. ‘நாடு கடந்த அரசு’ போன்ற அமைப்புகள் சர்வதேசத்தை அணி திரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடமுடியும். இன்றைய சூழலில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிகிறவரைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்துக்குள்ளும் அரசின் சட்ட ஆட்சிக்குள்ளும் பணியாற்றக் கூடிய அமைப்புகளின் பணி தான் மிக முக்கியமாய் இருக்கும். அதே சமயம் போர்க் குற்றச்சாட்டு, மண் பாதுகாப்பு, சுயநிர்ணயம் போன்ற பணிகளில் புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் செயற்படுவதும் அவசியம். இலங்கை அரசு மீது போர்க் குற்றத்தை நிறுவுவது தொடர்பான முன்னேற்றத்துக்கு ‘ஹிரு’ போன்ற சிங்கள இடதுசாரி அமைப்புகள் உயிரைப் பணயம் வைத்துக் கடத்தி வந்த ஆதாரங்களே வழிவகுத்தன. இதனை எல்லாத் தரப்புகளும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடலையும் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம். பல்வேறு நிலைகளில் செயற்படுகையில் ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் சூட்டாமல் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியம்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வுப் பணிகள் முடிந்த பின்னர் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான – விடுதலைக்கான அமைப்புகள் முன்னிலைப்படுவதே சாத்தியம். இந்தியாவுடனான நல்லுறவை வென்றெடுப்பது எதிர்கால வெற்றிக்கான அடிப்படை என்றே கருதுகிறேன்.
- இலங்கையில் இன சமத்துவங்களை நோக்கிய வளர்ச்சிப் பாதை அல்லது இனமுரணுக்கான தீர்வு எதுவாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரியத் தாயகம் என்று எப்போதுமே உரத்துச் சொல்லி வருகிறேன். எனவே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்வு அமைய வேண்டும். வட கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் தீர்வு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய தீர்வின் போது கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் முக்கியமானவை.
அதாவது வட கிழக்கு மாகாணம் தமிழரதும் முஸ்லிம்களதும் பாரம்பரிய மண்ணாகும் இங்கு பாரம்பரியமாகச் சிறிய அளவில் பழைய சிங்களக் கிராமங்கள் சிலதும் வேடர்களது கிராமங்கள் சிலதும் இருக்கின்றன. இந்த விடயங்களை நாம் மனதில் இருத்தத் தவறக் கூடாது.
இன்று வட கிழக்கு மாகாண மனித வளத்தில் பெண்களது விழுக்காடு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலித்துகளது விழுக்காடு அதிகரித்துள்ளது ஆனால் தமிழ்க் கட்சிகளது தேர்தற் பிரதிநிதித்துவத்தில் இந்த மாற்றங்கள் ஒரு வகையிலும் பிரதிபலிக்கவில்லை. இந்தகைய சமூக அநீதிகள் களையப்பட வேண்டும்.
அண்மையில் வவுனியா நகரசுத்தித் தொழிலாளர்கள், இறந்து போன தங்களது சக தொழிலாளிக்கு நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் ஒழுங்கு செய்தார்கள். அதைச் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்திச் சில அதிகாரிகள் தடுத்துள்ளனர். இது பற்றி மேயரிடம் முறையிடச் சென்றபோது மேயரும் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்தி அனுப்பியுள்ளார். இத்தனை மிருகத்தனமான அந்த நகர மேயர் இனி அம்மணமாகத் திரியலாம். இதைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடதுசாரித் தலைவர்களும் அம்மணமாகத் திரியலாம். இவர்கள் முகத்தில் காறி உமிழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய? இத்தகைய நிலமையே இன்னும் தொடர்கிறது. சாதிவாரி ஏற்றத்தாழ்வின் அடிப்படைகள் தகர்க்கப்பட வேண்டும். தலித்துகள் தமிழ் மக்களில்லையா? தமிழருக்காகக் குரல் கொடுக்கிற புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இதைக் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. இதுபற்றி வெட்கித் தலை குனிகிறேன்.
வன்னித் தமிழர்களதும் வடபகுதி முஸ்லிம்களதும் மீள் குடியேற்றம் பாரபட்சமில்லாமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். வெளியேற்றப்பட்ட வடபகுதி முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார இழப்புகளுக்கு ஈடு செய்யும் வகையிலான மீள்குடியேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். மீள்குடியேற்றம் வரைக்கும் வடபகுதி முஸ்லிம்களின் காணிகளைத் தமிழர்கள் வாங்குவது தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம்களின் நலன்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை வெளியேற்றம் பெரும் தடைக்கல்லாக உள்ளது. நிலமை வடக்கில் மோசமாகவே உள்ளது. இதனைச் சரி செய்யும் நோக்குடன் மலையகத் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணம் மற்றும் தென்பகுதி முஸ்லிம் மக்களும் வடபகுதியில் குடியேற ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத் தமிழர்களது பிரச்சினையும் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் வடமாகாண முஸ்லிம்களது பிரச்சினையும் ஒரே மாதிரியான வகையில் தீர்க்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு முஸ்லிம் விவசாயிகளினது நிலப் பிரச்சினை பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவது முக்கியம்.
மகிந்த அரசு புலம் பெயர்ந்த தமிழர்களது ஒற்றுமைப்பட்ட அரசியலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ் மக்கள்மீது பாய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழ் மக்களை அவர்களது வழியில் விட்டுவிட்டு மெல்ல மெல்லத் தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வடபகுதியில் பாரிய சிங்கள – பௌத்த குடியேற்றங்களுக்கு வழி திறப்பதுதான் அவர்களது அணுகுமுறையாக உள்ளது. அதே சமயம் புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறை ‘அரசபடையினர் மக்களுக்கு அன்றாடம் தொல்லை கொடுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலான புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரச்சாரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியிலேயே பொய்யாக்கிவிடும் என்பதுதான் அவர்களது சதுரங்கம்.
புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பிளவுபட்டிருப்பதையும் அவை இன்னும் அறிவுத்துறையினரோடு சேர்ந்து சவால்களை எதிர்நோக்கத் தயாராக இல்லை என்பதையும் வைத்தே மகிந்தவின் அரச தரப்பினர் காய்களை நகர்த்துகிறார்கள். நாட்டில் வாழும் மக்களை நேரடியாகத் துன்புறுத்துவதைத் தவிர்த்தால், அறிவுத்துறையில்லாமல் மக்கள் தொகையைத் திரட்டிப் போராடும் புலம் பெயர்ந்த அமைப்புகள் ஸ்தம்பித்து விடும் என்பதே அவர்களது கருத்தாக உள்ளது போலத் தெரிகிறது.
இந்தச் சூழலைத் தாயகத்தில் மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் வடகிழக்கில் பரவலாகத் தேர்தலில் வாக்களிக்கும் சூழல் உருவாகவில்லை. இருந்தபோதும் வாக்களித்தவர்கள் வட – கிழக்கு இணைப்பையும் இணைப்பாட்சியையும் ஆதரிக்காதவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் வட – கிழக்கு இணைப்பின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையைக் கோருவதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதையே தமிழரதும் முஸ்லிம்களதும் சுயநிர்ணய உரிமை என்கிற திருத்தத்துடன் நானும் வலியுறுத்துகிறேன்.
தமிழர்களது சுயநிர்ணய உரிமை கொழும்பின் கீழ் சாத்தியம் என்று சிலர் நம்புகின்றனர். வேறு சிலர் பிரிவினை மூலமே சாத்தியம் என்கின்றனர். டெல்லியின் கீழ் மட்டும்தான் சாத்தியம், வேறு வகையில் சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்கிற கருத்தும் செல்வாக்குப் பெற்று வருகிறது. முஸ்லிம் மக்கள் இணைந்த ஒரு தீர்வு கொழும்புக்கு வெளியில் சாத்தியமா என்பது தெரியவில்லை. முஸ்லிம் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்வது எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவற்றை விட இந்தியாவுக்கு எதிராகச் சீனச் சார்பு நிலை எடுப்பதன் மூலம் மட்டும்தான் தமிழர் வெற்றி பெற முடியும் என்கிற புதிய ஒரு குரலும் இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது.
இவை பற்றிய தெரிவுகள் சிங்கள ஆளும் வர்க்கத்தினுடைய அணுகுமுறையில் மட்டுமல்லாமல் சிங்கள முற்போக்குச் சமூக சக்திகளதும் எதிர்கால அணுகு முறையிலேயே தங்கியுள்ளது.
- எதிர்வரும் சனவரியில் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா?
இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி களத்தில், மக்கள் மத்தியில் கலை – இலக்கிய, சமூக செயல்பாடுகள் தொடர்பான மாநாடுகள் இடம்பெறக் கூடாது என்று சொல்ல களத்திற்கு வெளியில் வாழும் யாருக்காவது உரிமையுண்டா என்பது. இரண்டாவது, குறிப்பிட்ட மாநாட்டின் அரசியல் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு விரோதமானதா?
இக்கேள்விகளில் முதற் கேள்விக்குக் களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். இதுதான் எனது நிலைபாடு.
குறிப்பிட்ட அந்த மாநாடு களத்தில் வாழும் தமிழ் மக்களினது நலனுக்கு எதிரானது என்பது ஐயம் திரிபற உறுதிப்பட்டால் மட்டுமே நாம் அந்த மாநாட்டை எதிர்க்கலாம்.
- காலமெல்லாம் கிளர்ச்சிக்காரனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஜெயபாலன் கோடம்பாக்கத்து வணிகச் சினிமாவில் பங்கெடுப்பது ஒரு வீழ்ச்சியா?
என்னுடைய வாழ்க்கை தொடர்ச்சியான திருப்பங்களைக் கொண்ட சமூகக் கலாச்சார சாகசப் பயணமாகவே அமைந்துவிட்டது. இவை குறித்து எப்போதும் விமர்சனங்கள் இருந்தன, இனியும் இருக்கும். ஷோபா, நாம் இருவருமே சினிமாவில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் பங்களித்த ‘செங்கடல்’, நான் நடித்த ‘ஆடுகளம்’ படங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆடுகளம் ஒரு ‘மிடில் பிலிம்’ வகை சினிமாவாகவே எடுக்கப்பட்டது. எனினும் நான் இன்னும் ‘ஆடுகளம்’ படத்தைப் பார்க்கவில்லை. இன்னும் சில வாரங்களின் பின்னர் படங்கள் வெளிவந்த பின்னர் நாமிருவரும் அவை குறித்துப் பேசுவதுதான் பொருத்தமானதாக இருக்கும், இல்லையா!
- காதல், குடும்பம், சுதந்திரப் பாலியல் தேர்வுகள் இவை குறித்தெல்லாம் உங்கள் கருத்துகள் என்ன?
காதலிக்கிற, காதலிக்கப்படுகிற வரைக்கும் தான் ஒருவர் உயிர்ப்புள்ள கலைஞராகச் செழிக்க முடியும் என்று நம்புகிறவன் நான். காதலும் வீரமும் தான் என் இருப்பின் அடையாளங்களாக இருந்தன. இதுவே என் கல்லறையிலும் எழுதப்பட வேண்டும் என்று விரும்புவேன் நான்.
பாலுறவில் ஜனநாயகம் மட்டும் தான் கற்பு. பாலியல் தேர்வுகள் மனிதர்களின் அடிப்படை உரிமையாகும். இதை விட்டுக் கொடுக்க முடியாது. அது சம்பந்தபட்ட இருவர் பிரச்சினை. பாலியல் தேர்விலும் உறவிலும் அதிகாரமும் வன்முறையும் செயற்படாதவரைக்கும் அது சமூகப் பிரச்சினையல்ல.
பாலியல் தேர்வுகள் அவரவர் சொந்த விசயம். குடும்ப அமைப்பை ஏற்றோ அல்லது நிராகரித்தோ பாலுறவுகளை அமைத்துக்கொள்ளல், ஒருபால் புணர்ச்சி போன்ற தெரிவுகள் இன்று சில மேற்கு நாடுகளில் சட்டரீதியாகிவிட்டன. மானிட வாழ்வில் பன்முகப்பட்ட வாய்ப்புகளும் தெரிவுகளுமுள்ளன. இது அவரவர் பிரச்சினை. ஆனால் துணையின் சுதந்திரத்தையும் அடிப்படைச் சமூக நலனையும் பாதிப்பதாக ஒருவருடைய பாலியல் தேர்வுகளும் உறவும் அமையக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது.
- இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
ஏதாவது ஒரு காதல் இல்லாமல் எந்தப் படைப்பாற்றலும் வாழாது. காதல் அதன் எல்லாப் பரிமாணங்களிலும் பெண் மையமானது.
‘ஆண் எழுத்தாளன் அரைக் குருடன்’ என்று நான் அடிக்கடி சொல்வேன். ஆண் குருடால் உலகில் பாதியான ஆண்கள் உலகை மட்டுமே பார்க்க முடியும். வேகமாக மாறி வருகிற பெண் உலகத்தினை பெண்களிடமிருந்துதான் சதா கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஆண்களின் அதிகாரத் தன்னிலை விடாது. ஆனால் பெண்கள் அதிகாரமில்லாமல் உறவாடி, தந்தை, சகோதரர்கள், தோழர்கள், ஆண் குழந்தைகள் என்று ஆண்களது உலகத்துக்குள்ளே போய் வரக்கூடியவர்கள். நான் என்னால் தரிசிக்க இயலாத உலகத்தைத் தொடர்ச்சியாகப் பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்று வருகிறவன். என்னுடைய எழுத்தில் ஏதாவது பலம் இருந்தால் அது இதுதான்.
காதலும் வீரமும் மண்ணும் பற்றிய கதைதான் என்னுடைய குறுங்காவியமான ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’. காதல் இல்லாத சமயங்களில் என்னால் போரிடவோ எழுதவோ முடிந்ததில்லை. காலனிவாதிகளான போர்த்துக்கேயருக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகளில் ஆரம்பித்து சாதி எதிர்ப்புப் போராட்டம், பின்னர் தேசிய விடுதலைப் போராட்டமென்று தொடர்ந்த எங்களது வாழ்வில் நிகழ்ந்த காதலும் வீரமும் கலந்த உண்மைச் சம்பவங்களைக் காவியங்களாகச் சொல்லும் முயற்சியிலிருக்கிறேன்.
__________________________________________________________________________________________________________________________
நட்புடன் சோபாசக்திக்கு….
ஜெயபாலனின் அறியாத பக்கத்தை அறியதந்நதமைக்கு நன்றிகள்.
பல கருத்துக்கள் அவரின் மிதான மதிப்பை மேலும் உயர்ந்தியுள்ளன…..
“பெரும்பாலான இடதுசாரிகளிடம் தமிழர் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இனத்துவ நீதி நிலைபாடும் பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளிடம் ஒடுக்கப்பட்ட சாதி வர்க்க மக்களுக்கான சமூக நீதி நிலைப்பாடும் இருக்கவில்லை. ”
“களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். ”
“பாலுறவில் ஜனநாயகம் மட்டும் தான் கற்பு. பாலியல் தேர்வுகள் மனிதர்களின் அடிப்படை உரிமையாகும். இதை விட்டுக் கொடுக்க முடியாது. அது சம்பந்தபட்ட இருவர் பிரச்சினை. பாலியல் தேர்விலும் உறவிலும் அதிகாரமும் வன்முறையும் செயற்படாதவரைக்கும் அது சமூகப் பிரச்சினையல்ல.”
“ஆண் குருடால் உலகில் பாதியான ஆண்கள் உலகை மட்டுமே பார்க்க முடியும். வேகமாக மாறி வருகிற பெண் உலகத்தினை பெண்களிடமிருந்துதான் சதா கற்றுக்கொள்ள வேண்டும்.”
நன்றி நட்புடன்
மீராபாரதி
விவாதத்திற்குரிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன..!
ஆயினும் ஜெயபாலன் அவர்களுடைய மனம் திறந்த கருத்துக்களுக்கும் பாசாங்கற்ற பதில்களுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் ஷோபா…
விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லீம்களுக்குமுடனான முரண்பாடு பற்றி கேட்ட நீங்கள்..அதே காலப்பகுதியில் எம் மட்டக்களப்பில் நடந்தேறிய சத்துருக்கொண்டான் படுகொலை,கிழக்கு பல்கலைகழக படுகொலை,வீதிகளில் கொன்று போட்டு கொழுத்திய சம்பவங்கள் உடன் நேரடியாக முஸ்லிம் துணைப்படைக்கு இருக்கும் சம்மந்தம் பற்றி கேட்காததன் காரணம் என்ன??? விடுதலைப்புலிகள் மேல் உங்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சியால் தமிழினத்தின் மேல் முஸ்லிகள் நடத்திய படுகொலையை இந்த இடத்தில் மறைத்தது அல்லது மறந்ததற்கான காரணம் என்ன??? தமிழ்மக்களை முஸ்லிம் கொன்றான் என்பதற்கு வெளிப்படையான காரணங்கள் இருந்தும் (இப்போது இருக்கும் அதாவுல்லா கூட)நீங்கள் அதுபற்றி எந்தவொரு இடத்திலும் பேசாதிருப்பதற்கு பிரதேசவாதம் அல்லது நீங்கள் ஒருசாரார் பக்கம் மட்டும் பேசுபவராக நாம் நினைக்கலாமா??? சத்துருக்கொண்டான் படுகொலை காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 2400 இளைஞர் யுவதிகளை பற்றி நீங்கள் பேசாதவரை காத்தான் குடியில் கொல்லப்பட்ட 190 முஸ்லிம்களின் கொலை தமிழ் மக்கள் மனதில் நியாயமானதாகவே இருக்கும். கிழக்கு தமிழ் மக்கள் மேல் நடாத்தப்பட்ட இந்த கொலைவெறியாட்டத்தைப் பற்றி நீங்கள் பேசுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
நல்லது ஷோபாசக்தி!. ஜெயபாலன் பல விசயங்களையும் திறந்து பேசுகிறார். தவிர, யதார்த்தமான பார்வை. பேட்டியை அனுப்பியதற்கு நன்றி.
சரூபன்,
இதே இணையத்தில் ‘இனப்படுகொலை ஆவணம்’ என்ற எனது கட்டுரையொன்று உள்ளது. அதைப் படித்துப்பாருங்கள். இது ஒரு அண்மைய எடுத்துக்காட்டு மட்டுமே. தேடுங்கள்..கண்டடைவீர்கள்.
எப்பொழுதும் போல ஜெயபாலன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
என்னை கவிஞனாக அறிமுகப்படுத்திய சிற்றிதழ் ஆசிரியர்களுள் தோழர் டொமினிக் ஜீவா முதன்மையானவர். என் கவிதைகளை ‘மல்லிகை’யில் வெளியிட்டு தெருத்தெருவாக எடுத்துச் சென்று விநியோகித்த
அந்த அன்பு தோழரை தவறுதலாக குறிப்பிட மறந்துவிட்டேன். ‘அலை’ யேசுராசா, ‘சிரித்திரன்’ சுந்தர் மற்றும் ‘விவேகி’ ஆசிரியராகயிருந்த செங்கை ஆழியன், மற்றும் ராதேயன் எல்லோரும் என் வளர்ச்சியில் பங்களித்தவர்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
ஜெயபாலனினன் கவிதைகள் எனக்கு எக்காலத்திலும் பிடித்தவை.ஆனால் ஆந்தக்கவிதைகளின் பின்னால் இருந்த மனிதனை நான் ஒரு முறை மட்டுமே சந்தித்தேன். பேசியது இல்லை. அவரைசுற்றி இருந்த புகைமூட்டமும் பேசப்பட்ட விடயங்களும் அவரது கட்டுரைகளும் அந்த ஆவலை எக்காலத்திலும் தரவில்லை. சோபா சக்தியின் நேர்காணல் அந்த புகைமூட்டத்தை கலைத்து விட்டது. மனிதர்களின் பன்முகத்தன்மையை மீண்டும் வலியுறுத்தி நான் கேள்விப்படாக ஜெயபாலனின் பக்கத்தை தெரியப்படுத்தியதற்கு சோபா சக்திக்கு நன்றி
நடேசன்
“சண்டை பிடித்துக்கொண்டே நண்பர்களாய் இருக்கலாம்”
பெண்கள் அதிகாரமில்லாமல் உறவாடி, தந்தை, சகோதரர்கள், தோழர்கள், ஆண் குழந்தைகள் என்று ஆண்களது உலகத்துக்குள்ளே போய் வரக்கூடியவர்கள். நான் என்னால் தரிசிக்க இயலாத உலகத்தைத் தொடர்ச்சியாகப் பெண்களிடமிருந்தும் இளையவர்களிடமிருந்தும் கற்று வருகிறவன். என்னுடைய எழுத்தில் ஏதாவது பலம் இருந்தால் அது இதுதான்.
உண்மை தான் ஜெயபாலன். பௌசர் மிக சரியாக சொல்லியிருக்கிறார். ஆனாலும் பெண்களின் கருத்துக்கு மதிப்பு தருவதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
ஷோபா உங்கள் நல்ல ஒரு முயற்சியான கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு மிக்க நன்றி
ஈழ தமிழ் உலகம் கண்ட ஒரு மனிதம் நிறை மானுடனை மனம் திறந்து பேசவைத்ததட்கும் சேர்த்துதான்
நன்றி ஷோபா
கவிஞர் ஜெயபாலன் மீது கவிதை சார்ந்தும், சிந்தனை சார்ந்;தும் எனக்கு தனிப்பட்ட பார்வையுண்டு. அவரது மனம் திறந்த பிதில்களுக்கு நன்றி;
//இன்று குமரன் பத்மநாதன் ஊடகங்களில் உதிர்த்துவரும் சொற்களை எவ்வாறு மதிப்பிடுகிறீரர்கள்? //
கவிஞரே,இந்த கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலை மறுவாசிப்புக்கு உட்படுத்துங்கள்.நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பது தெரியும்.இந்திய “காதல்” ஒருதலைமுறையை அழித்தது.மீண்டும்அடுத்த தலைமுறைக்கும் இந்தியாவை நம்ப வைத்துவிடாதீர்கள்.காஷ்மீரில் தொடங்கி பழங்குடிகள் வரை யும் இனஅழிப்பு நடத்திவரும் இந்தியாவை ? நம்பி பலிகடா ஆக்காதீர்கள் அல்லது ஆகாதீர்கள்.
வ.ஐ.ச வின் மனம் திறந்த உரையாடல் பார்த்தேன். அவரது சேவல் கூவிய நாட்கள்> மற்றும் அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது இரண்டு குறுநாவல்களும் இளமைக்கால வாழ்வைக் கூறுவதுபோல் உரையாடலின் முற்பகுதியில் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் ஜெயபாலனைப் பற்றி அடிக்கடி கூறுவர். இப்பொழுதுதான் அதற்கான காரணமும் தெளிவாகிறது.
அரசியல் விடயங்களை மனந்திறந்து கதைத்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோல் லங்காராணியும் புதியதோர் உலகமும் முக்கியமானவையும் கூட.
சு. குணேஸ்வரன்
வ.ஐ.ச வின் மனம் திறந்த உரையாடல் பார்த்தேன். அவரது சேவல் கூவிய நாட்கள்> மற்றும் அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது இரண்டு குறுநாவல்களும் இளமைக்கால வாழ்வைக் கூறுவதுபோல் உரையாடலின் முற்பகுதியில் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பேராசிரி…யர் சிவலிங்கராஜா அவர்கள் ஜெயபாலனைப் பற்றி அடிக்கடி கூறுவர். இப்பொழுதுதான் அதற்கான காரணமும் தெளிவாகிறது.
அரசியல் விடயங்களை மனந்திறந்து கதைத்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோல் லங்காராணியும் புதியதோர் உலகமும் முக்கியமானவையும் கூட.
சு. குணேஸ்வரன்
Will Shobasakthi answer the questions of Sarooban please?
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தில் நான் பணியாற்றியபோது நண்பர் ஜெயபாலனுடன் நிரம்ப வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்ததுண்டு. அவரது நட்பான போக்கு மனத்தாங்கல்களுக்கு இடந்தராது. அவரது கவிதைகளின் ஆழுமைச் செறிவும் அவரின் மனித நேயப் பாங்கும், ஈழத் தமிழர்-இஸ்லாமியர்களின் நீண்ட விடுதலைப் பயணத்தில் நிரந்தரமானவை.
ஜெயறாஜா (எலியாஸ்) – அமெரிக்கா