ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் – தீபச்செல்வன்

நேர்காணல்கள்

கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும்  தீபச்செல்வனுடனான இந்நேர்காணல் மின்னஞ்சலூடாகக் கேள்விகளை அனுப்பியும்; பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகளை அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.

– ஷோபாசக்தி
23.07.2010

  • யுத்தத்திற்கும் உங்களிற்கும் ஒரே வயது, அதிலிருந்து தொடங்குவோமா?

1983இல் இனக்கலவரம் நடந்து முடிந்த காலத்தில் நான் பிறந்தேன். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் காலத்தில் நான் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் தெரியத் தெரிய அந்தச் சூழலைத்தான் பார்க்கத் தொடங்கினேன். போராளியாக இருந்த அண்ணாவை (பெரியம்மாவின் மகன்), இளைஞர்களை அழைத்துச் செல்லும் இந்திய இராணுவத்தை, இலங்கை இராணுவத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்ந்தேன். யுத்தமோ குழந்தையாக இருந்த எனக்கு முன்னால் சாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. ஏன் யுத்தம் நடக்கிறது என்பது முதலில் தெரியாதுவிட்டாலும் பின்னர் ‘ஆமி’ வந்து ஹெலிகப்டரில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபொழுது எங்கள் ஊரில் உள்ள மக்களுடன் குழிகளுக்குள் பதுங்கிக் கிடந்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வயதில் ஏன் யுத்தம் நடக்கிறது, எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்கு பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.

யுத்தத்திற்கும் எனக்கும் ஒரே வயது என்று நீங்கள் குறிப்பிடுவதுபோல வெற்றியும் தோல்வியும் நிறைந்த, கனவுகள் – ஏமாற்றங்கள் நிறைந்த யுத்தம் எனது குழந்தை வாழ்வு முதல் இன்று வரை தொடர்ந்து வந்து என்னைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது முதல் இன்றுவரை சிதைவடைந்த தேசத்தை, சூழலைத்தான் பார்த்து வருகிறேன். பள்ளியில் குண்டு வீசப்பட்டு உடைந்த வகுப்பறை, காணியில் வெற்றுத் துப்பாக்கி ரவைகளைப் பொறுக்கி விளையாடுவது, இராணுவம் அலைந்த சப்பாத்துகளின் அடையாளங்களைக் காலையில் தேடுதல் என்றுதான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. இப்படி நடந்த யுத்தம் என்னை அழிவுகளால், சத்தங்களால், இராணுவங்களால் அஞ்சும் ஒரு குழந்தையாக்கியது. சிறிய வயதில் இராணுவம் ஷெல் மழை பொழியப் பொழிய பொதிகளைத் தூக்கிக்கொண்டு ஓடும்பொழுது எனக்கு முன்னால் நிகழ்ந்த துயர் வாழ்க்கை யுத்தம் கையளித்த பெரு அபாயங்களாக, அச்சுறுத்தல்களாக மனதில் படிந்து விட்டன.

யுத்தம் மீண்டும் மீண்டும் துயர் மிக்க வாழ்க்கையை விரித்துக் கொண்டே சென்றது. யுத்தம் மீண்டும் மீண்டும் அலைச்சல்களையும் இழப்புகளையும் தந்தது. பதுங்குகுழிகளை வெட்ட முடியாத வயதில் தரைகளில் பதுங்குவதும் பின்னர் நிலமெங்கும் பதுங்குகுழிகளை வெட்டுவதுமாகக் கழிந்தது எங்கள் வாழ்க்கை. எனது சனங்களை வதைத்த யுத்தத்தைக் கண்டு நான் அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் பொழுது எனது ஒரே அண்ணன் யுத்தத்திற்கு எதிராகப் போராடும் மனநிலையில் இருந்தான். தனது பத்தாவது வயதிலேயே அவன் இயக்கத்தில் சேர்ந்தான். 16 வயது வரை அவன் ஐந்து தரம் போராட்டத்தில் சேர்ந்து சேர்ந்து திருப்பி அம்மாவுடன் இணைக்கப்பட்டான். விமானங்களைக் கண்டு நான் ஒளிந்து கொண்டிருக்கையில் அண்ணா கோடரியின் பிடியை எடுத்துத் துப்பாக்கி மாதிரி வானை நோக்கி நீட்டி ‘பட பட’ என்று சுட்டு விளையாடிக் கொண்டிருப்பான்.

இறுதியில் அண்ணா கனவுக்காக வீரமரணம் அடைந்த பொழுதுதான் நான் நிறைய விடயங்களைப் புரிந்து கொண்டேன். அண்ணாவின் நெஞ்சார்ந்த கனவு என்னை மிகவும் பாதித்தது. அதுநாள்வரை இருந்த யுத்த அனுபவங்கள், அண்ணாவின் மனம் என்பன என்னை படிக்கத் தூண்டியதோடு சமூக, தேசபற்றுக் கொண்ட பொறுப்பான மாணவனாக வாழ வளரத் தூண்டியது. அந்தக் காலத்தில் வன்னியில் என்னைச் சுற்றி உணர்வு மிக்க போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஈழம் பற்றிய கனவுடன் வன்னியில் போராளிகள் மிக உன்னதமாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி இரத்தினபுரத்தில் எனது சிறிய பருவத்தில் இருந்த போராட்ட சூழல், பின்னர் மணியங்குளம் ஸ்கந்தபுரத்தில் இருந்த அகதி வாழ்க்கை, மீண்டும் சிதைவடைந்த கிளிநொச்சி நகரத்திலிருந்த வாழ்க்கை, பின்னர் கொலை நகரமாயிருந்த யாழ்ப்பாண வாழ்க்கை, அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அலைச்சல்கள், வறுமையென்று இவைகள் எல்லாமே யுத்தத்தினால் எப்பொழுதும் அச்சுறுத்தப்பட்ட வாழ்வைத்தான் தந்தன.

சிறிய வயதில் அப்பா எங்களைக் கைவிட்டுச் சென்றார். மரணித்த அண்ணாவைத் தவிர ஒரு தங்கை இருக்கிறார். அம்மா அத்தருணங்களில் வலிமை மிக்க பெண்ணாகயிருந்து எங்களை நம்பிக்கை ஊட்டி வளர்த்தாhர். என் அண்ணாவைப்போல, எங்கள் மக்களைப்போல அம்மாவும் தங்கையும்கூட கனவு மிகுந்தவர்கள். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். இடம்பெயர்ந்த இடங்களில் பல பாடசாலைகளில் படித்தேன். மீண்டும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் படித்தேன். யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புக் கலை கற்கையை கடந்த வருடம் முடித்திருக்கிறேன்.

  • ஒரு உக்கிரமான யுத்தச் சூழலுக்குள் வளர்ந்த நீங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து எவ்வாறு விலகியிருக்கக்  கூடியதாயிருந்தது?

யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது நான் குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்தேன். நான் வளர்ந்து சாதாரணதரம், உயர்தரம் படிக்கும் காலத்தில் சமாதானம் வந்தது. அண்ணாவின் மரணம் என்னிடமிருந்த அச்ச உணர்வுகளை அகற்றிவிட்டது. நான் ஆயுதம் தூக்கிப் போராடவில்லை என்றாலும் ஆயுதம் தூக்கிப் போராடிய எங்கள் நிலையை வலுவாக ஆதரித்தேன். இன அழிப்பிற்கு எதிராகவும் உரிமை மறுப்புகளிற்கு எதிராகவும் சிறுவனாய் நான் பார்த்துக்கொண்டிருக்க எத்தனையோ இளையவர்கள் அணிதிரண்டு சென்றார்கள். அவர்களது உணர்வுகள் மிக முக்கியமானவை. மதிக்கப்பட வேண்டிய உன்னதம். ஆனால் நான் ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்குத் தயாராக இருந்தேன். போராளிகளில் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அன்பழகன் என்ற எனது நண்பன் ஒருவன் விடைபெற்றுச் சென்று சில நாட்களிலேயே வீரமரணம் அடைந்திருந்தான். ‘என்னையும் களத்திற்கு கூட்டிச் செல்’ என்ற வார்த்தையை நான் அவனிடம் சொல்லாத நாட்களில்லை.

அப்பாவால் கைவிடப்பட்ட அம்மா மற்றும் தங்கையின் எதிர்காலம் என்பவற்றால் நானாகவே போராட்டத்தில் சென்று இணைய முடியாத நிலையிருந்தது. ஆனால அன்பழகனைப் போன்ற பல போராளிகள் துப்பாக்கிகளை ஏந்தியபடி எமது மக்களுக்காக வைத்திருந்த மனக் கனவு உன்னதமானது என்பதை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கிக் களத்திற்கு செல்லுவது எத்தனை உன்னதமானது. அதற்கான சூழல் எனக்கிருக்கவில்லை என்பது குற்ற உணர்வைத்தான் தருகிறது. போராட்டத்திற்கு செய்ய வேண்டிய வேறு பல பணிகள் இருந்தன. அவற்றைச் செய்துகொண்டிருந்தேன். மிக நெருக்கடியான காலத்தில் முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறேன்

ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப்படுவதுதான். உரிமைக்காக, கனவுக்காக மக்களுக்காக அதை எதிர்கொள்ளும் மனோதிடம் இயல்பாக ஏற்படும். நீங்களும்கூட அப்படித்தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பீர்கள்.

  • ஆயுதப் போராட்டத்தில் மரணம் எதிர்பார்க்கப்படுவது உண்மைதான். புலிகள் உன்னதமான போராட்டத்தை நடத்தினார்கள் என்றும் சொன்னீர்கள். ஆனால் பள்ளிச் சிறுவர்களைத் துப்பாக்கிமுனையில் துரத்திப் பிடித்துக் கட்டாயப் பயிற்சியைக் கொடுத்து அவர்களின் விருப்பமில்லாமலேயே அவர்களைப் புலிகள் போர்முனைகளில் நிறுத்தி மரணத்திற்குள் தள்ளியது என்னவகையான நியாயம், என்னவகையான உன்னதப் போராட்டம்?

வீட்டுக்கொருவர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை நமது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது சாதாரணமான உடன்பாடல்ல. மிகவும் கஷ்டமானது. பெற்றோர்களே பிள்ளைகளைப் போராட்டத்தில் இணைப்பது என்பது மிகத் துயரம் தருவது. ஆனால் அதைவிட எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை. வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை எப்படியாவது விடுதலை நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது. அதற்காகப் பல இழப்புக்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

பலவந்தமாகச் சிறுவர்களை இணைத்தது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. பல சம்பவங்கள் தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்கின்றன. போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் களங்கம் ஏற்படும் விதமாகக் குறித்த காரியங்கங்களில் ஈடுபட்டவர்கள் இன்று இராணுவத்தினருடன் நிற்கிறார்கள். போராட்டத்தில் இணைந்தவர்களில் சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து ஈழப் போராட்டத்தைத் தவறாக மதிப்பிட முடியாது.

அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் பல்லாயிரம் போராளிகள் கனவுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நெஞ்சார்ந்த கனவைப் பலவேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். போராடும் குரலை உன்னதமாகக் காட்டியதன் அடிப்படையில் ஈழப் போராட்டத்தை உன்னதமான போராட்டம் என நான் கருதுகிறேன். இப்பொழுது உள்ள நிலமையில் எமது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்.

  • எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி உங்களை எது நகர்த்தியது?

யுத்தம்தான் என்னை உன்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது. பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது படிக்காமல் கவிதை எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கால கட்டத்திலும் பாடக்குறிப்புக்களை எழுதும் கொப்பிகளுடன் எனது கவிதை எழுதும் கொப்பி ஒன்றும் இருக்கும். 2005 -இலிருந்து பத்திரிகைகளில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். 2006ல் யுத்தம் மீண்டும் மூண்டபொழுது எமது மக்களின் முன்னே விரிந்த துயர்தரும் காலம் என்னை எழுதத் தூண்டியது. 2006 -இற்கு முன்னர் இருந்த உற்சாகமான எழுத்து, இலக்கியச் சூழல் யுத்தம் தொடங்கிய பொழுது மிகவும் குறைந்துவிட்டது. மிகச் சிலரே எழுதிக்கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் அச்சுறுத்தல்களால் எழுத முடியாத சூழலில் இருந்தார்கள். வன்னியில் எழுத அவகாசமற்ற வகையில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பொன்காந்தன், அமரதாஸ், வேல்.லவன் போன்றவர்களுடன் பேராளிப் படைப்பாளிகளின் எழுத்துகள் பல அழிந்து விட்டன.

எனது மக்களின் இந்தச் சாபகரமான அலைச்சலும் அச்சுறுத்தலும் அவலமும் நிரம்பிய வாழ்க்கைதான் என்னை நிகழும் எல்லா கொடுமைகளைக் குறித்தும் எழுத வைத்தது. ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் அதை நான் ஒரு முக்கிய பணியாகவே எடுத்தேன். எந்தத் தருணத்திலும் எழுதிப் பதிவு செய்து கொண்டிருந்தேன். எழுத்தில் – இலக்கியத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும், விருது வாங்க வேண்டும்,; பரிசு வாங்க வேண்டும் என்றெல்லாம் எழுதவில்லை. எமது மக்கள் பற்றிய எனது பதிவுகள் நமது நாட்டு ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு அஞ்சும் எழுத்துகளாகின. யுத்தம் மூண்ட காலத்தில் யுத்தம் பற்றிய எனது கவிதைகள், எழுத்துகள் ஈழத்து – இலங்கை இதழ்களில்  மிகக் குறைவாகவே வெளியாகின. வலைப்பதிவிலும் தமிழக இதழ்கள் சிலவற்றிலும்தான் எழுதிக்கொண்டிருந்தேன். அம்மாவும் தங்கையும் எனது சனங்களும் மரணங்களும் யுத்தம் தின்ற வன்னிப் பெருநிலமும் அறியப்படாத கொலைகளால் உறைந்து போயிருந்த யாழ் நகரமும்தான் என்னை எழுதத் தூண்டின. நான் ‘கொல்லப்படுவேன்’ என்று எனக்கு நிகழ்த்தப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தும் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தேன். எழுத்துக்காகவும் கனவுக்காகவும் நான் மரணத்திற்குப் பயப்படவுமில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லா அனுபவங்களையும் எழுதிக்கொண்டிருந்தேன்.

  • உங்களின் இலக்கிய ஆதர்சம் என யாரைச் சொல்வீர்கள்?

இலக்கிய ஆதர்சம் என்று யாரும் இல்லை ஷோபா. நல்ல கவிதைகளைப் படிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. ஈழத்து கவிஞர்களான உருத்திரமூர்த்தி, நீலாவணன், சிவசேகரம், முருகையன் போன்றவர்களது கவிதைகளில் ஈழத்திற்கே உரிய வாழ்வைப் பாடியிருக்கிற தன்மை என்னை மிகவும் பாதித்தது. வன்னியிலிருந்து 1990களில் எழுதிய கவிஞர்களில் நிலாந்தன், கருணாகரன் மற்றும் போராளிக் கவிஞர்களான மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, மலரவன், புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்களது கவிதைகள் பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பாகப் போராளிகளின் கவிதைகளில் இருந்த மனித ஏக்கம், யுத்தகள வாழ்வு, விடுதலை பற்றிய கனவு என்பன மிகுந்த ஈர்ப்பைத் தந்தன.

நான் கவிதை எழுதத் தொடங்கிய பொழுது என்னை முதலில் நிலாந்தன், பின்னர் வ.ஐ.ச. ஜெயபாலன், பின்னர் கருணாகரன், பொன்காந்தன் முதலியவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவிர புலம்பெயர்ந்திருக்கும் பிரதீபா, றஞ்சனி, மாதுமை, ஹரிகரசர்மா, தமிழ்நதி போன்றவர்களும் ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும்கூட ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த ஊக்கப்படுத்தல்களும் கருத்துக்களும் கவிதை எழுதத் தூண்டியதுடன் செம்மைப்படுத்தவும் உதவியிருக்கின்றன.

நான் இங்கு குறிப்பிட்ட கவிஞர்களில், நண்பர்களில் உடன்பாடுகளுடனும் உடன்பாடுகளற்ற தன்மையுடனும் முரண்பாடுகளுடனும் ஈர்ப்புடனும் எல்லோரையும் வாசித்து வருகிறேன் – இப்பொழுது கருணாகரனைக் கடுமையாக நிராகரிக்கிறேன் என்ற விடயம் ஒன்று இருக்கிறது – ஆனால் என்னைச் செம்மைப்படுத்தியவர்கள்கூட எனது கவிதையின் வடிவத்தை – மொழியைத்தான் செம்மைப்படுத்தினார்களே தவிர எனது கவிதைகளின் பொருளை மக்களும் போராட்டமும் எனது வாழ்க்கைச் சூழலும்தான் தீர்மானித்தன. ஒருவரை ஆதர்சம் என்றிருப்பது விரிவான வாசிப்பை, சிந்தனையைத் தராது என நினைக்கிறேன். அது எனக்கு உடன்பாடான விடயமுமல்ல. போரும் அலைச்சலும் பிரிவுகளும் என்னை எழுதத் தூண்டின. ஒருவகையில் சொன்னால் ஈழ மக்களும் மக்களுக்குரிய கனவும்தான் எனது ஆதர்சம் எனச் சொல்லுவேன்.

  • இறுதி யுத்த நாட்களில் நீங்கள் எங்கிருந்தீர்கள், யுத்தத்தின் முடிவு இவ்வாறுதானிருக்கும் என அனுமானித்திருந்தீர்களா?

2006இல் நாலாம் கட்டப் போர் தொடங்கிய பொழுது  நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அப்பொழுது யாழ் – கண்டி வீதி மூடப்பட்டிருந்தது. பசியிலும் இருட்டிலும் யாழ் நகர மக்களுடன் வாழ்ந்தேன். கொலைகளும் இரத்தமும் அச்சுறுத்தலும் எனச் சுமார் 45 நாட்கள் வாழ்ந்த பிறகு கப்பல் மூலம் திருமலை ஊடாக கிளிநொச்சிக்குச் சென்றேன். கிளிநொச்சியில் யுத்த தாக்குதல்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்தேன். இரவிரவாக விமானங்கள் குண்டுகளைப் பொழிந்துகொண்டிருக்கப் பதுங்குகுழிக்குள் வாழ்க்கை கழிந்தது. சுமார் ஒரு வருடம் வன்னியில் யுத்த சூழலில் வாழ்ந்த பிறகு மீண்டும் படிப்பதற்காக யாழ்ப்பாணம் கப்பல் மூலம் சென்றேன். அன்று முதல் இறுதி யுத்த நாட்கள் வரை யாழ்ப்பாணத்தில்தான் தங்கியிருந்தேன்.

யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுதும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். நான் இறுதி யுத்தகளத்தில்தான் வாழ்கிறேன் என்று என்னை விசாரித்துப் பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. நான் யாழ்ப்பாணத்தில் வாழ்வதை வெளியில் குறிப்பிட முடியாத சூழலில்தான் இருந்தேன். யுத்தவலயத்தில் எமது இனத்தின்மீது திணித்த அதே மாதிரியான அழிப்பை, அச்சுறுத்தலை அரசு யாழ்ப்பாணத்திலும் திணித்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்தேன். அத்தோடு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகவும் இருந்தேன். நான் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்.

யுத்தத்தில் நாங்கள் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இருந்துகொண்டு போரை நிறுத்தவும் இன அழிப்புக்கு எதிராகவும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தோம். போரை நிறுத்தி, மனித அவலத்தை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்றும்படி கேட்டோம். ‘மௌனப் போராட்டம்’ என்று அன்றைய சூழலில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினேன். பல்கலைக்கழக மாணவர்களின் குரல்களும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தக் குரல்களுடன் நிராகரிக்கப்பட்டன. எல்லாவற்றையும் நான் கைவிட வேண்டும் என்றும் ஈழக்கனவில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும்  இராணுவம் அச்சுறுத்தியது. இலங்கை அரசு உலகில் உள்ள யுத்த அழிவுகளில் விருப்பம்கொண்ட எல்லா நாடுகளையும் இணைத்து எங்கள்மீது யுத்தம் நடத்தியது. மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற வகையில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு எதைச் செய்தாவது  யுத்தத்தில் வெற்றிபெறுவதென எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க நின்றது. தமிழ் மக்களின் வாழ்வுக்கான குரலை உலகம் புரிந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் கைவிடப்பட்டவர்களானோம். அதனால் எல்லோரும் சேர்ந்து எங்களைத் தோற்கடித்து அழித்து முடிக்கப்போகிறார்கள் என்று அனுமானித்திருந்தேன். இதற்குள்தான் எங்கள் மக்களின் கனவு நிறைவேறுமா என்ற ஏக்கமும் என்னை எப்பொழுதும் தொடர்ந்துகொண்டிருந்தது.

  • யுத்த நிறுத்தத்திற்காவும் இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிராகவும் குரல்கொடுத்த பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் புலிகளால் மனிதத் தடுப்பரண்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கிருந்து தப்பிவந்த மக்களைப் புலிகள் முதுகிற் சுட்டு வீழ்த்திய துரோகத்தைக் குறித்து ஏன் பேசவில்லை?

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நான் மறுக்கிறேன். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு மக்கள் இராணுவத்தினரிடம் சரணடையத் தொடங்கிவிட்டார்கள். சரணடைந்த மக்கள், படைகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் சரணடைந்தார்கள். அரசு உணவு, மருந்துத் தடைகளைப் போட்டுப் பல களமுனைகளைத் திறந்து மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கச் சதித் திட்டம் வகுத்துத் தாக்குதல்களை நடத்தியது. அவற்றை முகம் கொடுக்க முடியாத மக்கள் எதிரியாகப் பார்த்த படைகளிடம் சரணடைய நேரிட்டது. மக்கள் சரணடைவதற்குப் போராளிகள் பாதைகள் எடுத்துக் கொடுத்தாக நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது அம்மா யுத்தத்தின் இறுதிவரை அதாவது மே 17 அதிகாலை வரை யுத்தகளத்தில் இருந்தார். அம்மாவையும் தங்கையும் அவர்களுடன் பதுங்குகுழிகளில் இருந்த மக்களையும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. எனது அம்மா படைகளிடம் சரணடைய விரும்பாமல்தான் அங்கிருந்தார்.

யாழ் பல்கலைக்கழகம் சார்ப்பான நாங்கள் விடுதலைப் புலிகளைப் பகிரங்கமாக ஆதரித்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களுக்காக நடத்திய போராட்டத்தின் நியாயத்தின் பொருட்டு அவர்களை ஆதரித்தோம். நாங்கள் இணைந்து குரல் கொடுத்தோம். வன்னி யுத்தம் நடக்கும் பொழுது நான்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையாக இருந்தேன். நான் உட்பட பல மாணவர்களுக்கு, விரிவுரையாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்தது. என்னை நேரடியாக வந்து விசாரணை செய்து அச்சுறுத்தியது. எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம். எமது மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்து போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேசசு வார்த்தைக்கு போக வேண்டும் என்றும், உலகம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்தோம்.

விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு விருப்பம் தெரிவித்து அழிவற்ற பாதையை விரும்பிய பொழுது அரசு விடுதலைப் புலிகளை வேருடன் அழித்து ஈழ மக்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ள அழிவு யுத்தத்தை நடத்தி மக்களை அழித்தது. அதனால் அரசுதான் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் படைகள் மக்கள்மீது துப்பாக்கி சுடுகளை நடத்தியிருக்கின்றன. இதில் காயமடைந்த பலரை சிகிச்சையளிக்கக் கொண்டு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கொண்டுபோன இராணுவம் அவர்களை திருப்பிக் கொடுக்கவில்லை. ஈழப் போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் தவறாக காட்டுவதற்கு இராணுவம் இறுதி யுத்தகளத்தில் செய்த கொடுமைகள் குறித்து நான் நிறைய அறிந்திருக்கிறேன்.

  • புலிகளின் தோல்விக்கு முதன்மையான காரணமென எதனைச் சொல்வீர்கள்?

யுத்தம் முடிந்தவுடன் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று சொல்ல முடியாதளவில் ஈழத்துச் சூழல் குழம்பியிருந்தது. ஆனால் ஒரு வருடம் கடந்த இன்றைய நிலையில் இன்னும் வன்னி இறுதி யுத்தம் பற்றிய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது புலிகள் உண்மையில் தோற்றார்களா என்பதை மறுபடியும் யோசித்துப் பார்த்தால், நான் நினைக்கிறேன் புலிகள் தோற்கவில்லை. இப்பொழுது யுத்தம் நடந்த களங்கள், இடங்களுக்கு சென்று வருகிறேன். தவிர இலங்கை அரசு தாங்கள் எப்படி யுத்தம் நடத்தினோம் என்பதையும் யார் யார் யுத்தத்திற்கு உதவினார்கள் என்பதையும் அறிவித்துக்கொண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்த யுத்தம் அவர்களுக்குத் தோல்வியில்லை. ஈழப் பிரச்சினையை உலக அரங்கில் கொண்டு சென்றார்கள். எவ்வளவுதான் போராடினாலும் உலகம் எப்படிப் புரிந்து கொள்ளும், எப்படி அழிக்கும் என்பதையும் அரசுக்கும் உலகத்திற்கும் எப்படிச் செலவு வரும், எப்படி நெருக்கடிகள் வரும் என்பதையும் அவர்கள் புரிய வைத்திருக்கிறார்கள். உலகம் அமைத்த கொடுமையான யுத்தகளங்களுக்கு எப்படி முகம் கொடுத்தார்கள் என்று வியந்து பார்கிறேனே தவிர அவர்கள் தோற்றாக எனக்குத் தோன்றவில்லை.

புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு  தோற்கடித்திருக்கிறது. இந்தப் போராட்டத்திற்காக மக்கள் செய்த எல்லாவிதமான தியாகங்களும் சிதைக்கப்பட்டன. கனவுக்கான எல்லா முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. கடைசியில் போராட்டத்தின் தடங்களாக மண்ணிற்குள் இருந்த போராளிகளின் எலும்புக் கூடுகளைக்கூடப் படைகள் விட்டு வைக்கவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் மீண்டும் மீண்டும் இன, பண்பாட்டு, நில, அடையாள அழிப்புக்களை மேற்கொண்டு அரசு எங்களைத் தோற்கடித்து வருகிறது. மக்கள்தான் தோற்றார்கள் என்பதுதான் தாங்க முடியாதது. ஆனால் மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்குகின்றன என்று நான் கருதுகிறேன்.

  • இந்தத் தோல்வியில் புலிகளுக்குப் பங்கேயில்லையா? சகோதர விடுதலை இயக்கங்களை அவர்கள் ஆயுதபலத்தால் அகற்றியதும் ஈழப்பரப்பில் பிற அரசியற் போக்குகளைச் செயற்பட அனுமத்திக்க மறுத்ததும் அப்பாவிச் சிங்கள மக்களையும் இஸ்லாமிய மக்களையும் அவர்கள் கொன்றுபோட்டதும் அவர்களைத் தனிமைப்படுத்தவில்லையா? சர்வதேச நாடுகளில் அவர்கள் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளும் கொலைகளும் போதைப்பொருள் கடத்தலும் ராஜீவ் காந்தி கொலையும் அவர்களின் தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கவில்லையா?

ஷோபாசக்தி! நீங்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக நிரந்தரமான எதிர்ப்பை வைத்துக் கொண்டு என்னுடன் பேசுகிறீர்கள். நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக்கொண்டு பேசுகிறேன். விடுதலைப் புலிகள் சிதைக்கப்பட்ட ஒரு சூழலில்தான் நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். புலிகளைத் தாக்குவது மட்டும்தான் உங்கள் நோக்கம் போல எனக்குத் தெரிகிறது. இதைக் கடந்த காலத்தில் நீங்கள் மட்டுமல்ல பலர் செய்திருக்கிறார்கள். அவை விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது. அதுவே தமிழ் மக்களையும் அழித்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் எனபதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்.

இயக்கங்களில் முரண்பாடுகளை, சகோதரப்  படுகொலைகளை  யாரும் விரும்பவில்லை. அவைகள் நடந்து முடிந்து விட்டன. எங்கள் இனம் முதலில் தோல்வியடைந்தது அதனால்தான். ஆனால் மக்களின் கனவை விடுதலைப் புலிகள் முன்னெடுத்ததால் அதற்குப் பிறகு மக்கள் முழுமையாக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

  • 2002ல் தொடங்கி 4 வருடங்கள் நீடித்த சமாதான காலத்தில் உங்களது எண்ணப்பாடுகள் எவ்வாறிருந்தன?

சமாதானம் வரும்பொழுதுதான் சாதாரணதர வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புப் படிக்கப் பாடசாலை சென்றேன். சமாதானம் கடதாசிப் பூவைப்போல கவர்ச்சியாக இருந்தது. அது கிழித்தெறியப்படக்கூடியது என்று முதலில் தெரியவில்லை. சமாதானம் சூழ்ச்சியானது என்றும் தெரியவில்லை. ஆனால் கவர்ச்சியாக வந்தது. மூடுண்ட வன்னிக்குள் இருந்த எங்களுக்குப் பாதைகள் திறக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட பொருட்கள் வந்தன. அப்பொழுதுதான் கொகோகோலா, பெப்சி, பியர் எல்லாம் வந்தன. அத்தோடு பாரிய யுத்தம் ஒன்றுக்கான சூழ்ச்சியும் வந்தது.

சமாதானம் எங்கள் நகரங்களுக்குத் தந்த செழுமை பின்னர் அதைவிடப் பெரிய பன்மடங்கு அழிவைக் கொண்டு வந்தது. சிதைவைக் கொண்டு வந்தது. சமாதானம் தந்த ஆறுதல், அவகாசம் பின்னர் மாபெரும் அலைச்சலை, ஓட்டத்தை, இடரை வழங்கியது. சமாதான காலத்தில் கட்டப்பட்ட சுவர்கள் இருந்த இடத்தில் யுத்தம் பெருங் கிடங்குளைக் கிண்டியது. சமாதான காலத்தில் ஒரு வலிமையான பதுங்குகுழியை நாங்கள் கட்டியிருக்க வேண்டும். ஆனால் அதையும் சிதைத்துப்போடும் பலத்தையும் தந்திரத்தையும் சமாதானம் அரசுக்கு வழங்கிவிட்டது.

ஆனால் மக்களோ சமாதானத்தின் சூழ்ச்சியை அறியாதவர்களாய் இருந்தார்கள். சமாதானம் நீடிக்கும் என்றும் நீடிக்க வேண்டும் என்றும் யுத்த அழிவுகள் இனியில்லை என்றும் இருந்தார்கள். ஆனால் எப்பொழுதும் போர் மூண்டுவிடும் அவநம்பிக்கையையும் சமாதானம் வைத்திருந்தது. போராட்டத்திலிருந்து விடுபட்டுச் செல்லும் போலி வண்ணங்களாலான கனவுகளும்கூட சமாதானத்தின் மூலம் கடத்தப்பட்டிருந்தது. சமாதான காலம் ஒரு ஏமாற்ற காலமாகவும் தோல்வியின் முதல் காலமாகவும் தெரிகிறது.

  • அரசோ அல்லது புலிகளோ சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முழுமையான ஈடுபாட்டோடு இருந்ததாக நினைக்கிறீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டபபடி சமாதானம் யுத்தத்தின் விளைவாக இருப்பதைபோல சமாதானத்தின் விளைவாக யுத்தம் ஏற்படுவதையும் இரண்டு தரப்புக்களும் உணர்ந்திருந்தன. சமாதானப் பேச்சுகள் நம்பிக்கை தரும்படியாகவும் நேர்மையாகவும் அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் முதற்கட்டப் பேச்சுகளிலேயே இனப் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அரசோ  சமாதானத்தை வைத்துப் புலிகளின் போர்த் தந்திரங்களை அழித்து விடவும் சூறையாடவும் நினைத்தது. எங்கள் தலைவர் பிரபாகரன் பல தடவைகள் இலங்கை அரசை கால தாமதமின்றி தீர்வுக்கு வர வேண்டும் எனக் கேட்டார். குறைந்தபட்ச இடைக்கால தீர்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில்கூட அரசு ஒத்துழைக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிக்கவும் ஈழப்போராட்டத்தைச் சிதைக்கவும் சமாதானத்தை அரசு பயன்படுத்தியது. அத்தோடு சமாதானத்தை யுத்தகால ஓய்வாகவும் பயன்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் அதற்குரிய எதிர்வேலைகளில் ஈடுபட்டார்கள். சமாதானத்தில் இருந்த நம்பிக்கையீனங்களைப் பார்த்து போரில் நம்பிக்கை வைத்தார்கள். சமாதானத்தின் மூலம் போராட்டங்கள் சிதைக்கப்பட்ட பல பாடங்கள் நமக்கு முன்னாலிருக்கின்றன. தமிழர்களிடம் போராடும் பலமிருக்கிறது என்பதை உணர்ந்து அரசாங்கம் தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன்மூலம் கனவுக்காக தியாகம் செய்யும் உயிர்களைக் காப்பாற்றி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதை அரசு முழுமையாகத் தனது சூழ்ச்சியான தந்திரங்களுடன் பயன்படுத்தி சமாதானத்தில் ஈடுபாடற்று இழுத்துச் சென்றது. அப்படியான சமாதானத்தில் புலிகளும் முழுமையான ஈடுபாடு காட்டாமல் போராடித்தான் தீர்வை அடைய வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.

  • புலிகளும் தங்களது பங்குக்கு சமாதான முன்னெடுப்புகளைச் சிதைத்தார்கள் அல்லவா! சமாதான காலத்தில் மட்டும் அவர்கள் 400க்கும் மேற்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்களையும் கலைஞர்களையும் கல்வியாளர்களையும் கொன்றொழித்தார்கள். மாவிலாறு அணையை மூடிப் புலிகள்தானே மீளவும் யுத்தத்தைத் தொடக்கி வைத்தார்கள்?

சமாதானத்தைக் குழப்ப அரசு பல உபாயங்களைக் கையாண்டிருக்கிறது. சமாதான காலத்தில் யுத்தத்திற்கான எல்லாவிதமான தயார் நிலைகளையும் எடுத்துக் கொண்டது. சமாதான காலத்தில் பல மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த கொலைகளை யார் யார் நடத்தினார்கள் என்பது எப்படித் தெரியும்? அதை அரசே நடத்தி சமாதானத்தைக் குழப்பியிருக்கலாமல்லவா? மாவிலாறு அணையை மூடியதற்காக யுத்தம் தொடங்க வேண்டும் என்றில்லை. அதைப் பேசித் தீர்த்திருக்கலாம். அரசு எப்பொழுது யுத்தம் நடத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. மாவிலாறு அணை நோககித் தனது எறிகணைகளை, பல்குழல் பீரங்கிகளை எதிர்பாராதவிதமாகப் பெரு விருப்பத்துடன், வெறியுடன் திருப்பியது. அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு தொடர்ந்து களங்களைத் திறந்து யுத்தத்தை நடத்தியது. புலிகள் யுத்த வழிமுறைகளில் செல்வதை விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்திற்காக இறுதிவரை அழைத்தார்கள். அரசுதானே யுத்தத்தில் பெரிய ஈடுபாடு காட்டியது.

  • இன்றைய நிலையில் தமிழர்களிடையே நம்பிக்கை தரக் கூடிய சக்திகளாக யாரைச் சொல்வீர்கள்?

எங்கள் மக்களின் மனதை சரியாகப் புரிந்துகொண்டு செயற்படுவர்களைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் எங்கள் மக்களின் கனவை, உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். அரச தரப்பைவிட எங்களிடம் ஆளுமை மிக்க பல சக்திகள் இருக்கின்றன. ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்தச் சக்திகள் எல்லாம் ஓரணியில் நின்று மக்களின் கனவை நிறைவேற்ற முற்பட்டன. இன்று தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகப் பிரிந்து நிற்கிறார்கள். சுயநலன் உள்ளவர்கள் நிச்சயமாக மக்களின் கனவை நிறைவேற்றிவிட முடியாது. மக்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக எமது மக்களின் அரசியலைப் பலியிடுவது, புதிய புதிய குழப்பங்களை ஏற்படுத்துவது, அரசின் இனவாத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவது என்பனதான் எங்கள் மக்களை தோல்வியடைய வைத்த எம்மிடம் தோன்றிய ஒற்றுமையீனங்கள்.

எமது மக்கள் அடையாளமற்ற, தனித்துவமற்ற வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் ஆக்கிரமிப்பின்றி, அச்சுறுத்தலின்றி வாழ விரும்புகிறார்கள். நிவாரணங்களும், அனர்த்த கால சேவைகளும் எமது மக்களின் அரசியல் உரிமைகளாகிவிட முடியாது. யுத்தகளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, சரணடைய வைக்கப்பட்ட மக்கள் அரசின் கொள்ளைகளுக்கு உடன்பட்டவர்களாகி விட்டார்கள் என்று கருத முடியாது. ஈழ மக்கள் இராணுவப் பிரசன்னமற்ற விடுதலையுடன் அமைந்த தங்களது வாழ்வைத் தாங்களே இயக்கும் அதிகாரங்கள் கொண்ட வாழ்வைத்தான் விரும்புகிறார்கள். இதற்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நம்பிக்கை தரும் விதமாகச் செயற்பட வேண்டும்.

ஈழமக்கள் பலர் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு ( TNA) ஆதரவளிக்கிறார்கள். தமிழ் மக்களின் கனவைக் குறித்து நன்கு புரிந்து அதற்காக போராடி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் நம்பிக்கையான அமைப்பாக பார்க்கிறேன். ஏனெனில் மக்கள் அந்த அமைப்புமீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அரசும் உலகமும் எமது மக்களுக்கு அநீதி இழைத்துவரும் சூழலில் TNA அதை மக்களின் குரலாக நின்று எதிர்ப்பதால் அவர்களை நம்பிக்கை மிக்க சக்தி என்று நான் குறிப்பிடுகிறேன். தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஏனைய சக்திகள் செயற்பட வேண்டும் என்பதையும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையும் விரிந்த நுண்தன்மை மிக்க ஒரு சிந்தனையாளர்கள் கூட்டமைப்பும் செயற்பாடுகளில் இணைய வேண்டும் என்பதையும் மக்களின் எதிர்பார்ப்பு சார்பாக முன்வைக்கிறேன்.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்தான் என்ன? புலிகளிருந்தவரை புலிகளின் ஊதுகுழலாய் இருந்துவிட்டு இப்போது அவர்கள் இந்திய அரசின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. வாக்குப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறு முற்போக்கான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தெரியவில்லையே?

விடுதலைப் புலிகளால் ஈழப் போராட்ட சிந்தனையுடன் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று இந்த விடயம் தொடர்பாக நாம் விரிவாகப் பேசுவது அந்தக் கட்சியை இல்லாமல் செய்யும் விடயமாக அமைந்து விடக்கூடாது. அது புலிகள்மீது மாற்றுக் கருத்து வைக்கிறோம் என்று விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்த நடவடிக்கை போலத்தான் இருக்கும். புலிகள் பேசும் விடயத்தைப் பேச வேண்டும் என்றுதான் அவர்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அது எமது போராட்டத்திற்கு ஜனநாயக வழிமீது இருந்த ஈடுபாடும் பயணமும்.

இன்று புலிகள் இல்லாத சூழலில் கூட்டமைப்புத்தான் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு இனி வகிக்க வேண்டிய பங்கை எடுத்துக் கூற வேண்டும். அது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசுடனும் பேச வேண்டும். இலங்கை அரசு என்ன செய்கிறது, என்ன சொல்கிறது எம்முடன் எதைப் பகிர வருகிறது என்பதற்கு அப்பால் மக்கள் சார்பாக அதைப் பேச வேண்டி நிர்ப்பந்தம் கூட்டமைப்பிற்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது, தமிழ் மக்களின் வாக்குகளை காப்பாற்றுவது என்பது முக்கியமானது. இப்பொழுது ஈழத்தில் உள்ள முக்கியமான வேலை இது என்று நான் நினைக்கிறேன்.

  • இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் நீங்கள் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் போன்ற பல மிதவாத தமிழ்த் தலைவர்களைக் கொன்றொழித்ததை இன்று எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்தேன். யாரையும் கொலை செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பது பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் இருந்தேன்.

  • ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து முற்போக்கான புதியதொரு அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புகளுள்ளதாகக் கருதுகிறீர்களா?

ஈழத்தமிழ் மக்களை அரசு எந்தளவுக்கு ஏமாற்றுகிறதோ அந்தளவுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. உலகம் எந்தளவுக்குப் பின்தள்ள நினைக்கிறதோ அந்தளவுக்கு வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை உலகம் மறுக்கிறது. வாழ்வின்மீது மிக நுட்பமாக ஆக்கிரமிப்புக்களை, வன்முறைகளை, மீறல்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இவைகளால் காலமும் சூழலும்தான் அதற்குரிய விடயங்களை, வடிவங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களை வழங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெறும் அரசியல் கட்சியாக அது இருக்க முடியாது. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடிய எமது மக்கள் உண்மையில் மக்களுக்கான இயக்கத்தைச் சுலபமாகக் கண்டு பிடிப்பார்கள்.

  • ஈழப் போராட்டம் கணிசமான பெண்களை வீடுகளிலிருந்து அரசியல் வெளிக்கு அழைத்து வந்தது. இந்நிகழ்வு சமூகத்தில்  பெண்ணடிமை நிலையில் எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது?

ஈழப்போராட்டம் பெண்களுக்கு வழங்கிய அனுபவமும் இடமும் முக்கியமானது. தமிழ்ச் சூழலிலே பெண்களுக்குப் புதிய அனுபவத்தைப் போராட்டம் வழங்கியது. முக்கிய பதவிகளுக்குப் பெண்கள் வருவதற்கிருந்த தடைகள் ஒழிக்கப்பட்டன. பெண்கள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். பெண்ணெழுச்சியின் வடிவங்களாக வீரம் மிகுந்த பல பெண்கள் ஈழத்தில் தோன்றினார்கள். மாலதி, சோதியா, அங்கயற்கண்ணி போன்ற மாவீரர்கள் பெண்கள் பற்றிய புதிய அர்த்தத்தைத் தந்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் பெண்களை வீட்டிற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒடுக்குமுறை நிலமையிருக்க இலங்கைப் படைகள் வடக்குக் கிழக்கில் நுழைந்த பொழுது பாலியல்ரீதியான வன்முறைகளையும் நிகழ்த்தத் தொடங்கியது. இவை பெண்களைப் பொதுவான சமூக அநீதிகளுக்கு எதிராக எழுச்சி கொள்ள வைத்தன.

பெண்குரல்கள் தீவிரமாக வலுப்பெற்றன. ஈழ வரலாற்றையும் யுத்தகால அனுபவங்களையும் மனிதாபிமானம் மிக்க வகையில் பெண்குரல்கள் எடுத்துச் சொல்லின. பெண் கவிதைகளில் வீரியம் மிக்க எழுத்துகளை தமிழுக்கு ஈழத்துக் கவிதைகள் கொடுத்திருக்கின்றன. ஈழத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு யுத்தகளங்களில் மக்களுக்கு பல்வேறு பணிகளையும் ஆற்றினார்கள். ஈழத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்கும் அவலத்திற்கும் எதிராகப் பணியாற்ற ஏராளமாகப் பெண்கள் திரண்டிருந்தமை முக்கியமான விடயம். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வதைக்கும் சூழல் இன்னும் இருக்கிறது. முக்கியமாக வன்னியில் பெண்கள்மீது மேற்கொள்ளப்படும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் வெளியில் சொல்லப்படாத நிலையில் அமுங்கியிருக்கின்றன. ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மீண்டும் பெண்களை வதைக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. ஈழத்தில், தமிழ் பெண்களிடம் இப்பொழுது எழுத்து – ஊடகத்துறை  மீதான ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விட்டது.

  • பெண்கள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நின்ற நிகழ்வு ஈழத்து ஆணாதிக்கச் சமூகக் கட்மைப்பில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே பெண்கள் ஆயுதத்தை இழந்திருக்கும் இன்றைய சூழலில் அவர்கள் மறுபடியும் அதே கிடுகு வேலிக் கலாசாரத்துக்குள்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றால், சீதனம் போன்ற கொடுமைகள் தொடருமெனில் இடைப்பட்ட 20 ஆண்டுகாலப் போராட்டம் நிகழ்த்திய மாற்றம்தான் என்ன?

தமிழர்களிடமிருந்த ஆயுதம் பாதுகாப்பையும் நிமிர்வையும் வழங்கியிருந்தது. இப்பொழுது பெண்கள்மீது துன்புறுத்தல்கள், மீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன. பொதுவாக எங்கள் மக்கள்மீது நிகழ்த்தப்படுகின்றன. அது ஆயுதப் போராட்டச் சூழலை இழந்திருப்பதனால் ஏற்பட்ட நிலமை. பெண்களை கிடுகுவேலிகளுக்கு நிலமை தள்ளியதாக நான் குறிப்பிடவில்லை. ஊடகத்துறை, எழுத்துதுறையில் ஈடுபடும் இளம் பெண்களைத்தான் காண முடியவில்லை. பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள். தலைமைத்துவம் வகிக்கிறார்கள். ஈழப்போராட்டம் பெண்களைத் தலைமை தாங்கும், நிர்வாகிக்கும் தன்மைகளில் வலுவாக வளர்த்திருக்கிறது.

  • இன்றைய நிலையில் ஈழத்தில் சாதியம் எவ்வாறிருக்கிறது. தீண்டாமை இன்னும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அறிகிறோமே?

ஈழப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதைப் பார்த்திருக்கிறேன். யுத்தமும் அவலமும் அந்த மக்களை ஒற்றுமையாகத் திரட்டி வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் தீண்டாமை சில இடங்களில் இன்னும் இருந்து வருகிறது. கோயிலுக்குள் பிரவேசிக்கவும், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் சில மக்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தனிப் பாத்திரங்களில் உணவு கொடுக்கப்படுகின்றன. சாதிய  ஒடுக்குமுறையை, மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை.

  • சாதியத்துக்கும் இந்துமதத்துக்குமான தொடர்புகள் குறித்துப் புலிகளுக்கு அரசியல் புரிதல் இருந்ததாகக் கருதுகிறீர்களா? சாதியத்தின் வேரே இந்துமதம்தான் என்ற புரிதல் அவர்களிடமிருந்ததா? சாதியத்தை ஒழிப்பதற்கான என்ன அரசியல் வேலைத்திட்டத்தைப் புலிகள் வைத்திருந்தார்கள்?

புலிகள் ஏதும் மதத்தை அமைப்பின் அந்தஸ்து மதமாக அறிவித்தார்களா? இல்லைத்தானே. அவர்கள் தமிழ் மக்களின் கனவான தமிழத் தேசியம், தமிழர் தாயகம், உரிமை இந்த விடயங்களைத்தான் புரிந்து முன்வைத்தார்கள். சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது.  அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். நான் அறிந்தவரை வன்னியில் அப்படி ஒரு பாகுபாடு இருக்கவில்லை. தொடக்க காலத்தில் சாதியத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். நீங்கள் உட்பட பல போராளிகள் அதில் ஈடுபட்டிருந்தீர்கள் என்று அறிந்தேன். யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்.

  • விடுதலைப் புலிகள் குறித்து நமது மக்களின் இன்றைய மதிப்பீடு எதுவாயிருக்கிறது?

ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் போராடும் விதம், அவர்களது அர்ப்பணிப்பு, தியாகம், வாழ்க்கை என்பன எனக்குச் சிறிய வயதிலிருந்து மிகுந்த வியப்பை ஏற்படுத்தின. ஈழத்திற்காகப் போராடுபவர்கள் புலிகள் மட்டும்தான் என்ற நிலைதான் என்னிடம் சிறிய வயதில் இருந்தது. வேறு இயக்கங்கள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. போராளி இயக்கங்களிற்கிடையில் எத்தனையோ விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்து அந்த இலட்சியத்திற்காக இறுதிவரை போராடினார்கள். விடுதலைப் புலிகள் மரணத்தை முக்கியமான ஆயுதமாக எடுத்தார்கள். அவர்களை மரணம் எப்பொழுதும் கௌரவித்தது. புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவை பெற்றது. எமது மக்கள் போராடி வீழ்ந்த போராளியின் முன் அவரை வணங்கினார்கள். நான் பிறந்து வளர்ந்த காலங்களில் இப்படித்தானிருந்தது.

அதேமாதிரித்தான் இன்றும் நிலமையிருக்கிறது. இலங்கை அரசின் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும்தான் ஈழப் போராளிகளை உருவாக்கின. அரசாங்கம் இந்தத் தீவில் அதை என்றுமே நிறுத்தப் போவதில்லை. அதனால் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்றும் இந்த மண்ணில் இருக்கும். புலிகளின் காலம் எங்களுக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தந்தது. பாதுகாப்பைத் தந்தது. நம்பிக்கையை ஊட்டியது. மக்கள் இப்பொழுது “நாங்கள் எல்லோரும் செத்துப் போயிருக்கலாம்” என்று கூறுகிறார்கள். “புலிகள் காலத்தில் குப்பி விளக்கிலும் வெளிச்சம் மிகுந்திருந்தது” என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது வன்னி எங்கும் நிலமை மோசமாக இருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த உதவிகள், வாழ்க்கைகள் துயரைத்தான் வழங்கியிருக்கின்றன. முகாங்களிலும் சொந்த நிலத்திலும் அடிமைகளைப்போல மக்கள் நடத்தப்படுகிறார்கள்.

ஆனால் “புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களைச் சுட்டார்கள், மனிதக் கேடயங்களாக வைத்திருந்தார்கள்” என்று பல இடங்களில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியொரு சூழலை அரசும் உலகமும்தான் உருவாக்கியது. கண்மூடித்தனமான யுத்தகளத்தை உலகின் வல்லமையுள்ள நாடுகள் பலவற்றைத் திரட்டி மகிந்த ராஜபக்சவின் அரசு ஏற்படுத்தியிருந்தது. யுத்தம் போராளிகளை நிலைகுலையச் செய்தது. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரம் மக்கள் இறுதிப் போரில் இறந்து போனார்கள். போராட்டம் என்றால் இரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாதது. நாங்கள் எங்களுக்கான வாழ்வை வாழ இதைவிட என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு குறிப்பட்டதைப் போலவே விடுதலைப் புலிகள் ஈழமக்களின் நெஞ்சில் இருக்கிறார்கள். கல்லறைகளைத் தடயங்களை அழித்தாலும் எமது மக்களின் நினைவுகளை அழித்துவிட முடியாது.

  • நமது மக்களின் மரணம் குறித்து இனவாத இலங்கை அரசுக்கும் சர்வதேச அரசுகளுக்கும் அக்கறையில்லை. ஆனால் அந்த அக்கறை தமது சொந்த மக்களின்மீதே புலிகளுக்கு இல்லாமல் போனதுதானே அவர்கள் கடைசியில் நமது மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்துவைத்திருக்கக் காரணமாயிருந்தது? இதில் புலிகளுக்குப் பொறுப்பில்லை என எப்படிச் சொல்ல முடியும்?

விடுதலைப் புலிகள் எமது மக்களை அழிக்கவில்லை. அரசும் உலகமும்தான் எமது மக்களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் அந்த அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள். தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மக்களிடமிருந்துதான் போராளிகள் உருவாகினார்கள். விடுதலைப் புலிகள்மீது எமது மக்கள் கொண்ட விருப்பமும் தேவையும்தான் இன்றும் அவர்கள் தேவை என்ற நிலமையையும், அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

  • யுத்தம் முடிந்ததின் பின்பாகவும் நமது இளைஞர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் விருப்பங்களுடனா இருக்கிறார்கள்?

இளைஞர்கள் வடக்கு – கிழக்கின் பாதுகாப்பற்ற தன்மைகளால் புலம்பெயர நினைக்கிறார்கள். இராணுவமயமும் புலனாய்வு நடவடிக்கைகளும் இளைஞர்களைப் பயமுறுத்துகின்றன. தொழில் இல்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.  சில இளைஞர்கள் புலம்பெயர விரும்புகிறார்கள். ஆனால் யுத்தகாலத்தில் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லை. நமது மண்ணை விட்டுச் சென்று எல்லோரும் புலம்பெயர்ந்து வாழ்வது நல்லதில்லை என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆக்கிரமிப்பு அன்றாடம் நிகழ்த்தும் வாழ்க்கைச் சவால்களை முறியடித்துச் சமாளித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கிருக்கிறது.

உரிமை மறுக்கப்படுதலுக்கும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் புலம்பெயர்வது ஒரு தீர்வாகாது. ஏனென்றால் புலம்பெயர்ந்த பின்னர் தாயகத்தை நினைத்து மீண்டும் திரும்பி வரத் தவிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். முப்பது வருடங்களாக நாம் வாழ்வுக்காகப் போராடியிருக்கிறோம். எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுத் தொழில் இல்லாத நிலை, அச்சுறுத்தல், குடும்பநிலை என்பன நீங்கள் கேட்பதைப்போல மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர இளைஞர்களை நிர்பந்திக்கின்றன.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எது காரணம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்றதற்கு காரணம் அந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் சிந்தனைகளுடன் அவர்களால் உருவாக்கப்பட்டதும் அந்த அமைப்பில் உள்ள மூத்த அரசியல்வாதிகள்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும்தான். அந்த வகையில் மக்கள் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் பேசும் ஈழ  மக்களினது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான மரபு வழித் தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்ற வாழ்வுரிமைகளை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க எமது மக்கள் தயாராக இல்லை. அது எமது மக்களின் அடையாளம். அதற்காகவே எமது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள். தமிழத் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களை நிதானமாகத் தெளிவாக உண்மையாகக் கொண்டு செயற்படுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

தமிழர் தாயகத்தை, அவர்களது கனவை நிராகரிக்கும் எந்த நிலையையும் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த தேர்தல் சூழலில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடிப்  பிரதிநிதித்துவங்களை அள்ளிச் சென்று தமிழ் மக்கள் விரும்பாத கதைகளை அளக்கவே அரசு முயன்றது. அரசு எங்கள் மண்ணில் நடத்தும் எந்தத் தேர்தலையும் நாங்கள் புத்தி சாதுரியமாக எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின் பின்னர் இப்பொழுது அரசின் அடுத்த போர் தமிழ் மக்களின் வாக்குகளை, பிரதிநிதித்துவத்தை இலக்குவைத்து நடந்துகொண்டிருக்கிறது. போர் தந்த வலிகள், போராட்டத்தின் தோல்வி நிலை என்பன எமது மக்களின் வாக்களிக்கும் மனிநிலையை பாதித்துவிட அதையும் தமக்குச் சாதகமாக அரசு பயன்படுத்த நினைக்கிறது. இதில் எமது மக்கள் தொடர்ந்து தெளிவாக இருக்க வேண்டும்.

  • யாழ் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கிழக்கின் அரசியற் குரல்களை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

மட்டக்களப்பு, வன்னி மக்கள் மீதான மேலாதிக்கப் போக்கு சில பின்தங்கிய இடங்களில் இருக்கின்றது. ஆனால் முழுமையாக அப்படியொரு ஆதிக்கம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எங்களுடன் பல்கலைக்கழகத்தில் கிழக்கிலிருந்து வந்து படித்த தமிழ் – முஸ்லிம் மாணவர்களுடன் மிக நெருக்கமான உறவு இருந்தது. அறை நண்பர்களாக இருந்திருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவிகளில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பில்கூட கிழக்கைச் சேர்ந்தவர்கள் முக்கிய இடங்களில் இருந்தார்கள். ஈழப் போராட்டத்தில் கிழக்கு உறவுகள் முக்கிய இடம் வகித்தார்கள்.

அண்மையில் கிழக்கில் கிரான் என்ற இடத்திற்குச் சென்றபொழுது மக்களுடன் பேசினேன். அவர்களும் எங்களைப்போலவே வாழ்கிறார்கள். அவர்களது விருப்பம், கனவு, நிலைப்பாடு எல்லாம் எங்களைப்போலவே ஒன்றாக இருந்தது. போக்குவரத்துகள் ஓரளவு சீரடைந்திருப்பதால் இப்பொழுது மீண்டும் வடக்கு – கிழக்கு உறவு வலுவடைந்து வருகிறது.

நீங்கள் குறிப்பிடும் அரசியற் குரல்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் நடவடிக்கைகளின் காரணங்களுக்காக, தங்கள் அரசியலுக்காக அப்படிச் சொல்கின்றன. ஆனால் அப்படியான வாதங்கள் எங்களை, பொதுவாகத் தமிழ் சமூகத்தை தோற்கடித்து விடும். எங்களது தோல்விக்கு இப்படியான ஆதிக்கப் பிரச்சனைகளும் காரணமாகின்றன.

  • நீங்கள் வடக்குக்கும் கிழக்குக்குமான உறவுக்கு மிக எளிமையான சில சம்பவங்களை உதாரணமாகச் சொல்கிறீர்கள். ஆனால் யாழ் மையவாத அரசியல் காலங்காலமாகக் கிழக்கை ஒடுக்கிவருவதற்கு வலுவான வரலாற்று ஆதாரங்களே பலவுண்டு. நமது அரசியல் கட்சிகள், நமது விடுதலை இயககங்கள் எல்லாமே யாழ் மையவாதத் தலைமையைத்தானே கொண்டிருந்தன. கருணா புலிகளிலிருந்து பிரிந்து சென்றபோது ‘கிழக்குக்குப் புலிகளால் நியமிக்கப்பட்ட 33 நிர்வாகிகளில் ஒருவர்கூட கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை” என்ற குற்றச்சாட்டையும் சொல்லியிருந்தார். தவிரவும் வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதில் கிழக்கிலிருக்கும் இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் ஆகியோருடைய விருப்பத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

கருணா அம்மான் இயக்கத்தில் முக்கியமான இடத்திலேதான் இருந்தார். போராட்டத்தை தொடக்கிய தலைவர் யாழ்ப்பாணமாக இருந்தார். அதனால் அது யாழ் மையவாதம் என்று குறிப்பிட்டுவிட முடியாது. தலைவருக்கு நெருங்கிய தோழனான சாள்ஸ் அன்ரனி திருமலையைச் சேர்ந்தவர். எமது போராட்டத்தில் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் முக்கியமான இடத்தில் இருந்திருக்கிறார்கள். அப்படியொரு வாதத்தை நான் பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கிழக்குத்தானே. கிழக்கைச் சேர்ந்தவர் தொடர்ந்தும் தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இப்பொழுது தாயகத்தில் இருக்கிறது. கருணா அம்மான் போராட்டத்தில் இருந்து பிரிந்து சென்றதை வடக்கு மக்களோ கிழக்கு மக்களோ விரும்பவில்லை. தான் செய்த எல்லா தவறுகளையும் நியாயப்படுத்தவும் தனது அரசியலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து முன்னெடுக்கவும் அப்படி நிறையச் சொல்வார். தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியம் உள்ளதைப்போல முஸ்லீம் மக்களுக்கு முஸ்லீம் தேசியம் என்பது உண்டு. வடக்கு – கிழக்கு முஸ்லீம்கள் தமிழீழத்து முஸ்லீம்கள் எனப்படுவார்கள். வடக்கு – கிழக்கை இணைப்பத்தில் முஸ்லீம்களின் ஒத்துழைப்பு இருக்கிறது. வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற வகையில் அது தமிழ் பேசும் மக்களின் கனவும் கோரிக்கையும் என்று நான் கருதுகிறேன்.

  • முறிந்துபோன தமிழர் – இஸ்லாமியர் உறவை மறுபடியும் சரி செய்வதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றனவா?

தமிழர் – முஸ்லீம் உறவுகள் மனதளவில் முறியவில்லை என்பதை உணர்கின்றேன். எங்களது போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு முக்கியமானது. தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழுக்காவும் அவர்கள் பல பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது மிகுந்த துயரமான சம்பவம். முஸ்லீம் மக்களால் மறக்க முடியாதது. மீண்டும் முஸ்லீம்கள் தாயகம் திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் யுத்தம் நடக்கலாம் என்ற அச்சத்தினால் முஸ்லீம்கள் பெரியளவில் திரும்பவில்லை. சில இடங்களில் முஸ்லீம்கள் மீள் குடியமர இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அண்மையில் கிளிநொச்சி ‘ கோணாவில்’ பாடசாலைக்குச் சென்றபொழுது இரண்டு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். பூங்காவில் தமிழ்க் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தமிழர் – முஸ்லீம் உறவுகள் மனதளவில் முறியவில்லை. அவர்கள் தமிழ் மக்களை அழித்த யுத்தத்திற்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ் மக்களை ஒடுக்குவதைப்போலவே முஸ்லீம் மககளையும் அரசு ஒடுக்கிக்கொண்டுதானிருக்கிறது. முஸ்லீம் மக்களின் குரல்களும் சிறுபான்மை  இனத்தின் குரல்களாக ஒடுக்கப்படுகின்றன. தமிழ் – முஸ்லீம் உறவுகள் வலுவடைவதன் வாயிலாகவே தமிழ் பேசும் மக்களின் குரல் வலிமைபெறும்.

  • புலிகளின் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையென்பது வடக்குக் கிழக்கில் இஸ்லாமியர்களின் அரசியல் இருப்பை நிராகரித்த செயல். நீங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றை அடையாளத்தினூடே இஸ்லாமியர்களையும் தமிழ்த் தேசிய அடையாளத்துள் அடைக்க முயற்சிக்கிறீர்களா?

தமிழ் பேசும் மக்கள்  அவர்கள் என்று குறிப்பிட்டேனே தவிர தமிழ் தேசியத்திற்குள் முஸ்லீம்களை அடக்கவில்லை. அவர்களின் இனம், சமயம், அடையாளம், பண்பாடு என்று அவர்களுக்குரிய தேசிய அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றை யாரும் நிராகரிக்கவும் அடக்கவும் முடியாது

  • மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு எதிராகச் சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?

மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவோ, அரசியலுக்கு எதிராகவோ எந்த இயக்கம் தோன்றினாலும் அதை அழித்து அகற்றவே ஜனாதிபதி முற்படுவார். ஜே.வி.பி மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்திருந்து விட்டுப் பின்னர் பிரிந்து மகிந்தவின் சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பதாகச் சொன்னது. ஜே.வி.பியிடம் ஏற்பட்ட எதிர்ப்பு எந்தளவுக்கு முற்போக்கானது என்பதுதான் பிரச்சினை. இன்று தமிழ் மக்களின் சில பிரச்சினைகள் குறித்தும் ஜே.வி.பி பேசுகிறது. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் கோரிக்கையும் அது ஏற்றுக் கொள்ளாது. தன்னுடைய கட்சி அரசியலிற்காக முற்போக்கு என்ற ஆயுதத்தை அது எடுத்திருக்கிறது. அது இன்னொரு சர்வாதிகாரத்தை ஆதரிக்கக்கூடியது. மகிந்த ராஜபக்சவோ தனக்கு எதிராக ஜே.வி.பி செயற்படுகிறது என்பதால் அந்தக் கட்சியைச்
சின்னாபின்னமாக்கியிருக்கிறார். ஜே.வி.பிற்கு மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளுக்கு இப்படி நடந்திருக்கின்றது. ‘முற்போக்கு’ ஜே.வி.பி விடுதலைப் புலிகளுடனான சமாதானத்தைக் கிழித்தெறிந்து யுத்தத்தை நடத்த ஆணையிட்டதை நாம் மறந்து விடமுடியாது.

இயக்கமாக அல்லாது தனிப்பட முற்போக்குக் குரல்கள் பல இருக்கின்றன. அவை தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த பொழுது அதற்கு எதிராகப் பேசின. ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முற்போக்கு சக்திகள் இல்லை. அல்லது எந்த சக்திகளின் குரல்களுக்கும் சர்வாதிகார அரசு அசையாது என நினைக்கிறேன். தமிழர்களின் பிரச்சனைகளையும் பொதுவாக மக்களின் பிரச்சினைகளையும் பேசிய, மகிந்தவின் சர்வாதிகாரத்தை எதிர்த்த பல குரல்கள் நசுக்கப்பட்டுவிட்டன. முற்போக்கு இயக்கமாகச் செயற்படும் வாய்ப்புகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்கான சூழலை சர்வாதிகார அரசு இல்லாமல் செய்துவிட்டது.

  • தமிழ் இளைஞர்களிடையே மார்க்ஸியத்தின் மீதான ஆர்வம் காணப்படுகிறதா? வடக்கு கிழக்கில் ஒரு மார்க்ஸிய இயக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?

வடக்கு கிழக்கில் அப்படி ஒரு இயக்கம் தோன்ற வாய்ப்பில்லை. 90களுக்குப் பின்னரான போரும் அரசியல் நிலமைகளும் தமிழ்த் தேசியப் போராட்டம் பற்றிய பிரக்ஞையைத்தான் இளைஞர்களுக்கு ஊட்டியிருக்கின்றன. மார்க்ஸியம் தொடர்பான கல்வி வெறும் கல்வியாகவே இருக்கிறது. அது மாணவர்களுக்கு ஒரு சமூகப் பார்வையை, ஈடுபாட்டை வழங்கவில்லை. மார்க்ஸியத்தை ஈழப் போராட்டத்துடன் பொருத்திப் பார்த்த பலர் இப்பொழுது ஈழத்தில் இல்லை. ஆனால் மார்க்ஸியத்தின் தாக்கம் மிகக் குறைவான சிலரிடம் இருக்கிறது. இளைஞர்களிடம் மார்க்ஸியம் மீதான ஆர்வம் முற்று முழுதாக இல்லை என நினைக்கிறேன்.

  • இந்த உலகமயமாக்கல் சூழலில் மார்க்ஸிய அரசியலின் மீதான நிராகரிப்பு நமக்குப் பெரும் அபாயமல்லவா?

ஆனால் மார்க்ஸியம் என்று இலங்கையில் – ஈழத்தில் பலர் அரசியல் கட்சியாகப் பிரசாரம் செய்கிறார்கள், தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதைப் புரிந்துகொள்ளவோ ஈடுபாடு காட்டவோ முடியவில்லை. ஏனென்றால் ஈழக் கனவுடன்தான் தொடர்ந்தும் எமது மக்கள் வாழ்கிறார்கள்.

  • உலகமயமாக்கல் வடக்குக் கிழக்கை எந்தவகையில், எவ்வாறு எட்டியுள்ளது? அதன் விளைவுகள் என்ன?

உலகமயமாக்கல் வடக்குக் கிழக்கை அதன் அடையாளங்களைத் தகர்க்கும் அளவில் எட்டியிருக்கிறது. அந்நிய மேலாதிக்கங்கள் மக்களின் போராட்ட உணர்வையும் சுதேச உணர்வையும் சிதைக்கும் எண்ணத்துடன் உலகமயமாக்கலைத் திணித்திருக்கின்றன. 2000 -இற்கு முன்னர் உலகமயமாக்கலின் தாக்கம் மிக குறைந்திருந்தது என நினைக்கிறேன். இப்பொழுது அது மனிதர்களிடையே இருக்கும் நெருக்கத்தைக் குறைக்குமளவில், சுதேச உணர்வைச் சிதைக்குமளவில் ஈழத்தைப் பாதித்திருக்கிறது. அதன் விளைவாக எங்களுக்குப் போராட்டரீதியாக, வரலாற்று ரீதியாக, பண்பாட்டுரீதியாகப்  பல தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன.

  • ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு எதுவாயிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உண்மையுணர்வுடன் இந்தியா பங்கு வகிக்க வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் போராட்டம் அழியவும், மக்கள் கொல்லப்படவும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. யுத்தத்திற்கான ஆசியையும், ஆதரவையும், உதவியையும் வழங்கியது. பலிக்குப் பலி என்று எத்தனை இலட்சம் மக்களை இந்தியா பலியெடுத்து விட்டது. ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியா நன்கு புரிந்து கொண்ட நாடு. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாடு. தனது வல்லமையை தமிழர்களைக் கொல்லவே இந்தியா பயன்படுத்தியது. இப்படியான பங்கையே இந்தியா இதுவரை வகித்தது.

இனியாவது இந்தியா ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவ வேண்டும். தனது அரசியல் – பொருளாதார நலன்களிற்காக எங்களைப் பலியிடாமல் இருக்க வேண்டும். இந்தப் பங்கை எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணம் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் உறவும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதும்தான். இந்தியா அவ்வாறான பங்கை வழங்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

  • ஈழப் பிரச்சினையில் வைகோ, சீமான், திருமாவளவன் போன்றோர் செய்யும் அரசியலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

தாயகத்தில் இருக்கும் மக்களைப் பொறுத்த வரையில் நமது பிரச்சினையில் வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்கள் எழுப்பும் குரல் ஆறுதலைக் கொடுக்கிறது. ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதியின் சுயநலமிக்க ஆட்சி பூனையைப்போல அமைதியாக இருந்தது. தமிழக மக்கள் எத்தனை உயிரை தியாகம் செய்து ஈழத் தமிழர்களை காப்பாற்றும்படி கோரினார்கள். எதற்கும் கருணாநிதி அசையவில்லை. தன்னலமிக்க, ஆற்றலற்ற கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்பொழுது தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைக் கொண்டுசென்று அவற்றுக்காக வைகோ, சீமான் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள் எமது மக்களை ஆறுதலடையச் செய்திருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக மக்களிடம் இருக்கும் எல்லயைற்ற நெருக்கம் முக்கியமானது. ஈழப் பிரச்சினையில்  வைகோ, சீமான் போன்றவர்களது செயற்பாடுகள் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை என நினைக்கிறேன்.

  • வெறும் பேச்சுகள் என்பதைத் தவிர்த்து ஈழத்து அரசியலில் அவர்கள் இதுவரை எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லையே. தவிரவும் அவர்கள் தம்மளவில் நேர்மையற்ற அரசியல்வாதிகளாயும்தானே இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் திருமாவளவன் காங்கிரஸையும் வைகோவும் சீமானும் ஜெயலலிதாவையும் ஆதரித்தார்களே? காங்கிரஸ் அப்போது இலங்கையில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது. ஜெயலிலதா ஈழத்து மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மானுட இனத்துக்கே விரோதியல்லவா?

அவர்களது பேச்சுகள் சாதாரணமானவையல்ல. தாக்கத்தை, அதிர்வை உண்டு பண்ணக்கூடியவை. அவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமையுடன் குரல் கொடுக்கிறர்கள் என்ற அபிப்பிராயம் இங்கு பரவலாக இருக்கிறது. ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அவர்கள் மாற்றம் பெற்று உண்மையில் மக்களுக்காகச் செயற்பட வேண்டும் என்பதற்காக அவரை ஆதரித்திருக்கலாம். தமிழகத்தில் எல்லா வழிகளிலும் ஈழத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் குரல்கள் அழுத்தங்களைக் கொடுக்கின்றன, கேள்விகளை எழுப்புகின்றன என்ற அபிப்பிராயம் இங்கு இருக்கிறது. விடுதலைப் புலிகள்கூட அதை விரும்பினார்கள்.

  • மறுபடியும் நமது மக்களிடமிருந்து தமிழீழக் கோரிக்கை வீரியமுடன் கிளம்ப வாய்ப்பிருக்கிறதா? ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எது தீர்வாகயிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஈழம்தான் தீர்வு என நான் கருதுகிறேன். அதற்குரிய சூழலைத்தான் இலங்கை அரசும் உலகமும் தமிழர்களுக்கு மீண்டும் நிர்ப்பந்திக்கிறது. வடக்குக் கிழக்கை சிங்கள, இராணுவமயமாக்க வேண்டும் என்பதும் வடக்குக் கிழக்கு மக்களின் அதிகாரங்களை வழங்காமல் பேரினவாத்தின் பிடியில் வைத்திருக்க நினைப்பதும் தமிழ் மக்களை மீண்டும் ஈழத் தீர்வுக்கு வலிறுத்துகின்றன. தமிழ் மக்களை அரசு ஏற்றுக் கொள்ளாதவரை, ஏமாற்ற நினைக்கும்வரை, தமிழ் மக்களின் உரிமையை வைத்து நாடகம் போடும்வரை இந்தப் பிரச்சனை நீளத்தான் போகிறது.

விடுதலைப் புலிகளை சிதைத்ததன் வாயிலாக ஈழக் கோரிக்கையை அழித்து விட்டதாக நினைத்துக் கொண்டு அரசு செயற்படுகிறது. ஈழக் கோரிக்கை என்கிற கனவு எமது மக்களிடம் ஒரு பொழுதும் அழிந்து விடாது. அரசு தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்குமானால் மீண்டும் நமது மக்களிடமிருந்து தமிழீழக் கோரிக்கை தோன்ற வாய்ப்பிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை வெறுமனே அரசு ஆக்கிரமித்து நிற்கவில்லை. வடக்கு கிழக்கிலிருந்து நிலங்களைச் சுருட்டவும், தமிழர்களின் உரிமையைப் பறிக்கவும் அரசு நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்திருக்கையில் எமது மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலமைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

  • யுத்தத்தின் பின்னான இந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து?

யுத்தத்தின் பின்னர் என்பதைவிட யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே தனது செயற்பாடுகளை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது. அதற்கு முதலிலும்கூட ஆரம்பித்துவிட்டது. தமிழர்களின் தாயகத்தை அழித்து மாற்றிக் கொண்டிருப்பது. தமிழர்களுக்கு மகிந்தவினால் தரக்கூடிய தீர்வையும் தராமலிருப்பது. உரிமைகளை மறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டிருப்பது. இப்படி பல நடவடிக்கைகளை அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னர் வதை முகாங்களைத் திறந்து தமிழ் மக்களை அடைத்துச் சித்திரவதை செய்தது.

தமிழர் நிலங்களில் அழிப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு பல்வேறு வதைகளுடன் மீண்டும் மக்களை ஆடுமாடுகள் போலச் சாய்த்துக்கொண்டு போனது. ஆயுதப் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்று வெற்றிக் கூச்சல்களுடன் அரசியல் உரிமையை அழிக்கத் தொடங்கியது. நம்பிக்கை தரக்கூடிய எந்தச் செயற்பாடுகளுக்கும் அரசு இடமளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் செயற்பாடுகளை நடத்திக்கொண்டிருக்கிறது. அகதி மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைக்கூட அரசு சூறையாடியிருக்கிறது. கூடாரத் துணி கூட வழங்கப்படாமல் பல இடங்களில் மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

வதை முகாங்களிலிருந்து மக்களை விடுவிக்கிறோம் என்று விழாக்கள் நடத்திக்கொண்டு, அறிக்கைகள் விட்டுக்கொண்டு மீண்டும் வேறு முகாங்களுக்குக் கொண்டு சென்றதும் கூரையில்லாத கட்டிடங்களுக்கு கூரைபோட்டு, சிறிய உடைவுகளுக்கு சீமென்ட் பூசி மூடிவிட்டு திறந்து வைத்ததும்தான் இந்த ஓர் ஆண்டுக்குள் அரசாங்கம் செய்த சாதனைகள். கூடாரங்கள் நிரம்பிய நிலமாக மாற்றியதும், மரங்களுக்குக் கீழாக மக்களைக் கொண்டு சென்றதும், சிதைவுகளை மேலும் சிதைத்ததும்தான் இந்த ஓர் ஆண்டுக்குள் அரசாங்கம் செய்த சாதனைகள்.

  • நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துத் தாயக மக்கள் என்ன கருதுகிறார்கள்?

உண்மையில் தாயகத்தில் உள்ள பல மக்கள் நாடு கடந்த அரசு பற்றி அறியவில்லை. தலைவர், பொட்டம்மான் தப்பிச் சென்றிருக்கிறார்கள், போராளிகள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகிறார்கள் என்ற கதைகளை என்னிடமே பல மக்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசோ நாடு கடந்த தமிழீழ அரசால் மிகப் பீதியடைந்து போயிருக்கிறது. ஈழத் தமிழர்கள் ஈழம் பற்றி எங்கு கதைத்துக்கொண்டிருந்தாலும் அது அரசாங்கத்திற்குப் பீதியை உண்டாக்கிறது.

நான் நினைக்கிறேன், நாடு கடந்த அரசு தாயகத்தில் அரசியல் நிலையில் அதிர்வை ஏற்படுத்தக்கூடியது. அரசாங்கத்தை மறைமுகமாக நிர்ப்பந்திக்கும். அதை நாடு கடந்த தமிழீழ அரசு நிகழ்த்த வேண்டும். தோற்கடிக்கப்பட்ட சில நாட்டுக் கனவுகள் நாடு கடந்த அரசு மூலம் வெற்றி பெற்றிருக்கின்றன. நாடு கடந்த அரசு பற்றி அறிந்த மக்கள் அது தாயத்தில் மகிந்த அரசை நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்து அழுத்தத்தை தரும் என நினைக்கிறார்கள். நாடு கடந்த அரசால் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முடியாது என நினைக்கிறேன்.

  • ஆனால் இங்கே நாடு கடந்த அரசு என்பதே பெரும் கோமாளித்தனமாயல்லவா உள்ளது. நாடு கடந்த அரசு குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கிய குமரன் பத்மநாபன் இப்போது இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குகிறார். புலிகளின் நெடியவன் அணியினர் நாடு கடந்த அரசுக் குழுவினரை எதிர்த்து நிற்கிறார்கள். நாடு கடந்த அரசு என்ற கதையாடலில் மக்களுக்கும் ஆர்வமில்லை. வெறும் 100 வாக்குகள் பெற்றவரெல்லாம் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளானார்கள். இதில் கள்ள வாக்குகள் வேறு. நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் ஊழல். வாக்குப் பெட்டிகள் கடத்தல். பின்பு அவர்களுக்குள் லண்டனில் அடிதடியும் வன்முறையும். இதில் எப்படி அவர்களால் இலங்கை அரசுக்குப் பீதியை உண்டாக்க முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடு கடந்த அரசாங்கத்தை ஏற்கவில்லையே?

நாங்கள் அனைவரும்  ஒன்றுபட்டு மக்களுக்காகச் செயற்பட வேண்டும். போர் காரணமாக மக்களுக்குச் சில குழப்பங்கள் ஏற்பட்டதனால் வாக்களிப்புக் குறைந்திருக்கலாம். இலங்கை அரசு நாடு கடந்த அரசினால் மிகப் பதற்றமடைந்து அதைக் குழப்ப பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. அதனால்கூட இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். இது தொடர்பாக மேலதிகமாக உண்மையான நிலவரங்களை நாடு கடந்த உறவுகள்தான் பேச வேண்டும்.

  • ஈழத்து அரசியலில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் பங்கு எவ்வாறிருக்க வேண்டும், அல்லது எவ்வாறிருக்கக் கூடாது எனக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழினத்தில் கால்வாசிப்பேர் புலம் பெயர்ந்து விட்டார்கள் என நினைக்கிறேன். இன்று தாயகத்து மக்கள் அடிமைகளாக்கப்பட்டு இருக்கும்பொழுது புலம்பெயர்ந்த மக்கள் குரல் கொடுக்கும் சூழலில் இருக்கிறார்கள். நம் உறவுகள் எவ்வளவோ குரல் கொடுத்துமிருக்கிறார்கள். ஆனால் எதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது வேறு விடயம். புலம் பெயர்ந்திருக்கும் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் ஈழத்து மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளைப் பகிரங்கப்படுத்துகிறார்கள். மக்களுக்காக வலுவான குரல்கள் ஒலிக்கின்றன.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவிகள் பல வழிகளில் கிடைத்து வருகின்றன. அப்படி உதவிகளைப் புரிந்து மக்களின் வாழ்வை மீட்டெடுக்கப் புலம் பெயர் மக்களின் வேலைத் திட்டங்கள் அவசியமானவை. நமது மக்களிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்ற புலம் பெயர்ந்த உறவுகளின் கடுமையான உழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

தாயகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை புலத்தில் பல பிரிவுகளைத் தூண்டியுள்ளன. அப்படியான விரோதங்கள், கரிபூசல்கள், பொறாமைகள், வசைபாடல்கள் பொதுவாக ஈழ மக்களின் குரலையே பாதிக்கவல்லவை. ஈழப் பிரச்சினையை முன்னிருத்தி ஒவ்வொருவரும் ஆளாளுக்குக் குற்றம்சாட்டித் தனிப்பட்ட நலன்களைக் கவனிப்பது அபாயமானது. அதை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். நாங்கள் முப்பது வருடங்களாகத் தோற்றுக்கொண்டிருப்பதற்கு அதுதானே முக்கிய காரணம்.

2 thoughts on “ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் – தீபச்செல்வன்

  1. நன்றி ஷோபா
    தீபச்செல்வன் தொடர்பான அறிதலில் நான் எதிர்பார்ப்போடிருந்தேன். ஈழத்தில் இப்படி துணிவான இளைஞனை இப்போதய சூழலில் பார்ப்பது அரிது. நன்றி தீபச்செல்வன் உங்கள்பதில் மனத்திருப்தியை தருகிறது

  2. எங்கள் துன்பம் மறைத்து போக முடியாது நாம் சிறுபான்மை என்று பிறந்தது தான் நாம் செய்த பாவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *