மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும்
‘முகவரி’ எனும் மாதத்திற்கு இரு முறை வெளிவரும் இதழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட தமிழ் மொழிக்கான ‘இளம் கவிஞர் விருது’ நவீனுக்குக் கிடைத்தது. ‘தாமான் மெலாவாத்தி’ தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.– ஷோபாசக்தி
18.07.2010
நான் பிறந்தது மலேசியாவின் ‘கெடா’ மாநிலத்தில். 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை கெடா மாநிலத்தின் ஒரு பகுதியில் (கடாரம்) கடல் வழி வாணிபம் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்து மதம், பௌத்தம், சமண மதம் போன்றவை அங்கு இருந்ததற்கான தடயங்களும் சிலைகளும் சிவலிங்கங்களும் இன்னும் அரசால் வேறு வழியில்லாமல் ‘பூஜாங் பள்ளத்தாக்கு’ எனும் இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் படைகள் அங்கு வந்ததாகவும் தகவல் உள்ளது. பண்டைக் காலத்தில் தமிழ் மொழி அங்கு புழக்கத்தில் இருந்ததற்கும் சான்றுகள் உண்டு. கெடா மாநிலத்தில் உள்ளவர்கள் பொதுவாகவே தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் ஆளுமை மிக்கவர்களாக உள்ளதற்கு இம்மண்ணின் வரலாற்றுத் தன்மையைக் காரணமாகக் கூறுவதால் மட்டுமே இத்தகவலை இங்கு பதிவு செய்கிறேன். எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான், யுவராஜன், சிவா பெரியண்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் பிறந்த மாநிலம்.
அம்மாநிலத்தில் ‘லுனாஸ்’ எனும் சிற்றூரில் இன்று முழுதுமாக இல்லாமல் போய்விட்ட செட்டி கம்பத்தில் எங்கள் வீடு. எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் அப்பா பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். அனைத்தும் சிறு சிறு வணிகம் சம்பந்தப்பட்டவை.பொருளாதார போதாமையால் சிங்கப்பூருக்கு பிறகு கோலாலம்பூருக்கு என அவர் வேலைகள் தொடர்ந்தன. அப்பாவைப் பின்பற்றி நாங்களும் கோலாலம்பூர் சென்றோம்.ஆரம்பகாலம் தொட்டே கல்வி குறித்து எனக்கு எந்தப் பிரக்ஞையும் இருந்ததில்லை. நாவலும் சிறுகதையும் கவிதையும் படிப்பது போன்று பாட புத்தகங்களைப் புரட்டுவது உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் உள்ளோர் தூண்டுதலால் ஆசிரியர் வேலைக்குப் படித்தேன். கல்லூரி எனக்கு நிறையச் சொல்லிக் கொடுத்தது.அடிப்படையில் எனக்கிருந்த கோபமும் வன்முறை சார்ந்த மனமும் இந்தச் சமூகத்தின் மேல் ஒட்டுமொத்தமாகத் திரும்பியது. நான் எவ்வளவு சுரணையற்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஆரோக்கியமான அடுத்தத் தலைமுறையை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் கொஞ்சம் கூட சமூக அக்கறையும் மொழிப்பற்றும் இல்லாமல் அரசாங்க சம்பளத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டுமே இருந்தனர்.கல்லூரியில் தனிமையானேன். ஒரு மனிதன் தீவிரமாகச் சிந்திக்க இந்தத் தனிமை போதும் என்று தோன்றுகிறது.
- பூஜாங் பள்ளத்தாக்கை ‘வேறு வழியில்லாமல் பராமரிக்கின்றனர்’ என்று சொல்வதன் காரணம் என்ன?
நான் சிறுவனாக இருந்தபோது அங்கு சென்றுள்ளேன். அதன் பின்னர் மூன்று – நான்கு முறை அங்கு சென்றபோது தொடர்ச்சியான ஏதோ வெறுமை உருவாகி வருவதை உணர்கிறேன். ‘பூஜாங் பள்ளத்தாக்கு’ தொடர்ச்சியான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு பகுதி. அதற்கு மலேசிய அரசாங்கம் நிச்சயம் வாய்ப்பளிக்காது. மலேசிய வரலாறு இஸ்லாம் மதத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகின்றது. அதற்காகவே பாடப் புத்தகங்களில் மலாக்காவின் முதல் மன்னனான பரமேஸ்வரர் என்ற இந்து அரசனின் பெயரை வரலாற்றிலிருந்து இருட்டடித்து பரமேஸ்வரர் இஸ்லாம் மதத்திற்கு மாறியபின் வைத்துக்கொண்ட இஸ்கண்டார் ஷா எனும் பெயரையே வரலாறாக்குகிறது. வரலாற்றை தனக்கு சாதகமாக மாற்றும் ஒரு தேசத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகம்தான். பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்து நானறிந்து முழுமையாக ஆய்வு செய்தவர் டாக்டர் ஜெயபாரதி. மூன்று முறை நடந்த உரையாடலில் அவரிடம் நான் பெற்றத் தகவல் சொற்பம்தான். பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்துள்ள அவர் பூஜாங் பள்ளத்தாக்குத் தொடர்பான பல உண்மைகளை சேகரித்திருந்தும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். அந்த ஆய்வுகள் வெளிவரும்போது பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என்றே நம்புகிறேன்.
- உங்களுடைய முன்னோர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து மலேசியா வந்தார்கள் எனத் தெரியுமா? தமிழகத்திலுள்ள உங்களது உறவுகளுடன் இப்போதும் தொடர்புள்ளதா?
அம்மாவின் தந்தை தஞ்சையில் பட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். அம்மாவின் தாயார் திருநெல்வேலிப்பகுதி. இருவரும் இங்குதான் -மலேசியாவில் – திருமணம் செய்து கொண்டனர். என் தாயார் மலேசியாவில்தான் பிறந்தார். என் அப்பாவின் பூர்வீகம் தெரியவில்லை.என் அப்பாவின் தாத்தாவும் பாட்டியும் மலேசியாவில் பிறந்ததால் அவருக்கு முந்தைய தலைமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. இப்போது தமிழகத்தில் உள்ள உறவுகளோடு எந்தத் தொடர்பும் இல்லை.
- எதன் வழியே யார் வழியே இலக்கியத்தை வந்தடைந்தீர்கள்?
16 வயதில் பெரும் தாழ்வு மனப்பான்மையால் எழுதத் தொடங்கினேன். அப்போது எனது நண்பர்களுக்கு மாணவிகளின் மத்தியில் தங்களை அடையாளம் காட்ட காரணமாக இருந்த காற்பந்து விளையாட்டு எனக்கு வராமல் போனதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை அது. ஒழுங்காகப் பேசவும் வராது. மூன்று வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்குவேன். அப்போதுதான் மலேசியாவில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எம்.ஏ.இளஞ்செல்வன் நான் பயின்ற தமிழ்ப் பள்ளிக்குத் தலைமையாசிரியாராக வந்தார். என் ஆர்வத்தை அறிந்து எனக்கு முறையான வாசிப்புப் பழக்கத்தை அறிமுகம் செய்தார். யாரையெல்லாம் படிக்கலாம் என்று ஆலோசனைக் கூறி ஒரு புத்தகக் கடையிலும் வேலைக்குச் சேர்த்துவிட்டார். பின்னாளில் தீவிரமான வாசிப்பும் சக நண்பர்களுடனான உரையாடல்கள் மூலம் எழுதும் நோக்கம் மாற்றம் கண்டது. எல்லையில்லா உரிமை கொடுத்து விவாதிக்கவும் கருத்து கூறவும் எனக்கு வாய்ப்பளித்தவர் டாக்டர் சண்முகசிவா. அவர் என் வாசிப்பை மேலும் தீவிரப்படுத்த உதவினார். என் போதாமைகளை உணரச்செய்தார். இவை குறித்தெல்லாம் ‘வல்லினம்’ அகப்பக்கத்தில் ‘திறந்தே கிடக்கும் டைரி’ எனும் தொடரில் எந்த பலவீனங்களையும் மறைக்காமல் எழுதி வருகிறேன்.
- இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து?
முன்னிலும் ஆரோக்கியமாக இருக்கிறது. முன்பு ஊடகங்கள் தனிப் பெரும் சக்திகளாக, வேண்டியவர் – வேண்டாதவர் என்ற பாகுபாடுடன் படைப்புகளை வெளியிட்டு வந்தன.முற்போக்கான அல்லது மாற்றுச் சிந்தனை கொண்ட எழுத்துகளை அவை பொருட்படுத்தியதில்லை. பெரு.அ.தமிழ்மணி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘காதல்’ இதழ் இதற்கு ஒரு நிவாரணியாக இருந்தது. பழம் பெரும் பத்திரிகையாளரான அவர் ‘காதல்’ இதழை உருவாக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தார். நான், மணிமொழி, யுவராஜன், தோழி, சந்துரு எனப் புதிய சிந்தனை கொண்ட குழுவினரால் ‘காதல்’ இதழ் உருவானது.மாற்றுச் சிந்தனைகள் கொண்ட இலக்கியப் பிரதிகள் இதில் வெளிவந்தன. இதை தொடர்ந்து ‘வல்லினம்’ இதழ் மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்கள் ஒன்றிணைய ஒரு களமாக இருந்தது. அதன் பின்னர் ‘அநங்கம்’ வந்தது. இதேபோல ‘மௌனம்’ எனும் கவிதைக்கான சிற்றிதழும் மலேசியாவின் கவிதை போக்கை மாற்றியமைக்க முனைப்புக் காட்டி வருகிறது. நான் இங்கு இலக்கியம் பற்றி கூறாமல் இதழியல் தொடர்பாகக் கூறக் காரணம் மலேசியாவில் ஒட்டுமொத்தமாக மலேசிய இலக்கியப் போக்கை அடையாளம் காட்ட இதுபோன்ற இதழ்கள் துணை நிற்பதால்தான்.
இன்று மலேசியாவில் மரபான சிந்தனையை உடைத்துக்கொண்டு நவீனப் போக்குகள் கொண்ட, மாற்றுச்சிந்தனை கொண்ட பிரதிகள் அதிகம் வருகின்றன.அவை இன்னும் ஈழத்து எழுத்துகள் போன்றோ தமிழக எழுத்துகள் போன்றோ தீவிரமான ஒரு தளத்தில் இயங்காவிட்டாலும் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் போதாமையை அறிந்து வைத்துள்ளனர். நமது போதாமையை அறிவதே அடுத்தடுத்த நகர்வுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
- தமிழ்நாட்டு இலக்கியப் போக்குகள் மலேசியத் தமிழ் இலக்கியத்தை எவ்விதம் பாதித்துள்ளன?
மலேசியாவிற்கு வந்து சென்ற பிறகு, சுந்தர ராமசாமி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வழங்கிய ஒரு நேர்காணலில் “மலேசிய இலக்கியம் அதிகம் உற்சாகம் கொள்ளும்படி இல்லை. நம் ஜனரஞ்சக இதழ்களில் நடக்கும் காரியங்கள் அவர்களுக்குத் தெரிகின்றது. சிற்றிதழ் சூழலில் நடக்கும் காரியங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை” என்றார். இந்நிலை இன்றும் தொடர்கிறது.
ஒரு வசதிக்காக நாம் மலேசிய இலக்கியப் போக்குகளை மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது ரகத்தினர், சுந்தர ராமசாமி சொன்னது போன்று இன்னமும் தமிழக ஜனரங்சக இதழ்களை அடியொட்டி வருபவர்கள். இவர்கள் இன்னமும் குமுதம், குங்குமம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளைப் படித்தும் அது போன்று எழுதியும் தங்கள் ‘எழுத்தாற்றலை’ நிரூபித்து வருகின்றனர்.
இரண்டாம் ரகத்தினர், தமிழகச் சிற்றிதழ்களாகத் தங்களை வருணித்துக் கொள்ளும் பிரதிகள் முன்வைக்கும் கருத்தையும் தமிழக நவீன இலக்கியத்தின் அடையாளமாகத் தங்களை பிரதிநிதித்துக்கொள்ளும் இலக்கியவாதிகளின் விவாதிப்பையுமே இறுதியான இலக்கியக் கருத்தெனக் கொண்டு தங்கள் மூளையிலும் எழுத்திலும் வலிந்து திணிப்பவர்கள்.தமிழக இலக்கியவாதி விடும் குசுவிற்குக் கூட தீவிரமான அர்த்தம் உண்டென வாதடுபவர்கள். எல்லா விவாதங்களின் இறுதியிலும் தான் நம்பும் இலக்கியவாதியின் கூற்றை முழுமுற்றான தீர்ப்பாக நிறுவ முயல்பவர்கள்.
மூன்றாம் ரகத்தினர் மலேசியாவில் எல்லாக் காலத்திலும் இருந்தே வருகின்றனர். இவர்கள் சிறு குழுவினர். எல்லாப் பிரதிகளையும் விமர்சனங்களோடு அணுகுபவர்கள். ஒருவேளை சுந்தர ராமசாமி கண்களுக்கு இவர்கள் அகப்படிருக்க மாட்டார்கள். மற்றபடி இவர்கள் படைக்கும் இலக்கியம் மலேசிய வாழ்வின் அசலான தன்மையை அதன் அரசியலோடு வெளிப்படுத்தியே வருகின்றது.
- அயலக தமிழ் எழுத்தாளர்களின் வருகை மலேசிய இலக்கியத்திற்கு எவ்விதம் பங்களிக்கிறது?
என்னளவில் நிறைய ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. ‘காதல்’ இதழ் மூலமாக 2006ல் மனுஷ்ய புத்திரனை மலேசியாவிற்குக் அழைத்திருந்தோம். அப்போது மனுஷ்ய புத்திரன் ஒரு கவிஞராக இருந்ததாலும் வியாபாரியாக இல்லாததாலும் அவருடனான கலந்துரையாடல்கள் மிகுந்த உற்சாகம் ஊட்டக்கூடியவையாக இருந்தன. அவருடன் கவிதை குறித்தான உரையாடல்கள் எனக்குள் பல திறப்புகளுக்குக் காரணமாக இருந்தன. அதே போல கவிஞர் சேரனுடனான உரையாடல்களும் கவிதை தொடர்பான புரிதல்களுக்கு வித்திட்டன. அண்ணன் அறிவிமதியின் நட்பும் கவிதை தொடர்பான சில எளிய அறிமுகங்களை வழங்கியது.
‘காதல்’ இதழ் மூலமாக அழைத்துவரப்பட்ட மற்றுமொருவர் ஜெயமோகன். ஜெயமோகனுடனான உரையாடல்கள் எந்த திசையில் வேண்டுமானாலும் பயணிக்கும் சுதந்திரம் கொண்டது. பயணம் தோறும் ஜெயமோகன் ஒரு வழிகாட்டியாக பாதைகளை முன் நின்று விளக்கியபடி செல்வார். இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு வந்து ஒரு வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.ஏ.நுஃமானின் ஆளுமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவரது அத்தனை ஆளுமைகளை விடவும் ஆழ்ந்த அன்பும் பிரியமும் அடிக்கடி அவரைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களைக் கொடுத்தது.அவரிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய. சட்டென யோசிக்கையில் அவையெல்லாம் நினைவுக்கு வராமல் அவரும் அவர் துணைவியாரும் வழங்கிய பிரியத்தின் கணங்கள் மட்டும் நினைவுக்கு வருகிறது.
இதேபோல சிங்கை இளங்கோவனின் வருகை கொழுந்து விட்டெரியும் தீ ஜுவாலை போல உஷ்ணங்களை ஏற்றியது. ஒரு படைப்பாளியினுடைய ரௌத்திரத்திடனும் ஆயுதங்களுடனும் தன்னந்தனியாக அதிகாரத்தை எத்தி உதைக்கும் அவர் படைப்பின் வீரியம், எழுத்தின் படைப்பின் படைப்பாளியின் அசல் தன்மையை அதன் ரத்தக்கவுச்சி மாறாமல் கண்முன் கொண்டு வந்தது.
சோர்ந்து போயிருக்கும் மன நிலையில் புதிய சிந்தனையும் பார்வையும் கொண்ட அயலக எழுத்தாளர்களின் வருகை என்னளவில் உற்சாகம் கொள்ளக்கூடியதே. இவையெல்லாம் எனக்குமட்டுமல்ல ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இணைந்திருந்த எழுத்துலக நண்பர்களுக்கும் நடந்திருக்கும். அவர்களின் மனநிலை மாற்றங்களை நான் சொல்வது சரியாக இருக்காதென்பதால் என் கருத்தை மட்டும் பதிவு செய்துள்ளேன்.
- மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் எழுத்துகளின் வீச்சுக் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
மலேசியாவில் பெண் எழுத்து என எதை அடையாளப்படுத்துவதென தெரியவில்லை. ஆரம்ப காலங்களில் இருந்தே மலேசியாவில் உள்ள பெண் படைப்பாளிகளின் நாவல்களைச் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். பாவை, க.பாக்கியம், நா.மகேஸ்வரி, நிர்மலா பெருமாள், நிர்மலா ராகவன், கல்யாணி மணியம், பாமா, சு.கமலா, வே.ராஜேஸ்வரி என இன்னும் சிலர் மலேசியாவில் பல காலமாக எழுதிவருகிறார்கள். இவர்களில் சிலரை பலகாலமாக எழுதுவதால் மட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன். மற்றபடி இவர்களின் படைப்பிலக்கியத்தில் எந்த வகையான ஈர்ப்பும் எனக்கு இருந்ததில்லை. இவர்கள் கதைகளில் வரும் பெண்களின் குரல் சமையல் அறையிலிருந்து ஒலிப்பதும் ஆண்களின் குரல் வரவேற்பறையிலிருந்து ஒலிப்பதுமே காலம் காலமாக நடந்து வருகிறது.
இது போன்ற பார்வை ஒருபுறம் இருக்க, எழுதப்பட்டக் காலத்தைக் கணக்கில் கொண்டு எழுத்தாளர் பாவையின் எழுத்துகளை முக்கியமானவையாகக் கருதுகிறேன். அவருக்கு சுவாரசியமாகக் கதை சொல்ல தெரியும். க.பாக்கியம் போன்று எழுத்து மட்டும் அல்லாது இயக்கவாதிகளாகவும் உற்சாகமாகச் செயல்படும் ஆளுமைமிக்கவர்களும் மலேசிய இலக்கிய உலகத்துக்கு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கக்கூடியது. இதுமட்டும் அல்லாது எனது தனிப்பட்ட உரையாடல்களில் கணவனிடம் கொடுமை அனுபவித்து எழுதுவதற்குப் பல தடைகள் வந்தபோதும் பல நாவல்களை எழுதி வெளியிட்ட ஒரு சில மூத்தப் படைப்பாளிகளையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.
இவர்களோடு ஒப்பிடும்போது இன்றைக்கு எழுதுபவர்களின் நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது. எளிய உணர்வுகளையும் எளிய அனுபவங்களையும் சின்னச் சின்ன சிலிர்ப்புகளையும் கவிதைகளில் மட்டுமே இன்றைய பெரும்பாலான பெண் படைப்பாளிகள் பகிர்கிறார்கள். தோழி, மணிமொழி,யோகி, தினேசுவரி, பூங்குழலி,சிதனா, ராஜம் ரஞ்சனி என மலேசியாவில் எழுதும் ஒரு சிலருக்கு நல்ல வாசிப்பும் கருத்துகளும் இருந்தாலும் அவற்றை எழுத்தில் கொண்டுவர தீவிரம் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எழுதுவதற்கான விரிந்த களமும் வாசிப்புக்கான நிறைய மூலங்களும் உள்ள இச்சூழலை அவர்கள் தவறவிடுவது வருத்தமளிக்கிறது. வாசிப்புக்கான, எழுதுவதற்கான இவர்கள் கொண்டிருக்கும் சோம்பலுக்கு அவ்வப்போது தரும் தத்துவப்பூர்வமான காரணங்கள் மட்டும் எப்போதும் என்னை எரிச்சலடையச்செய்யும்.
- கவிதைகளின் போக்கு எவ்வாறு உள்ளது ?
ஆரோக்கியமாக உள்ளது. அகிலன் மற்றும் சிவத்தின் கவிதைகள் தனித்துவமானவை.ஆரம்பத்தில் அகிலனிடம் இருந்த சில எழுத்தாளர்களின் பாதிப்பு இப்போது இல்லாததை உணர்கிறேன். பரந்த வாசிப்பு பலரது கவிதை சொல்லும் மொழியை மாற்றமடைய வைத்துள்ளது. அதில் முக்கியமாக ஏ.தேவராஜன் மற்றும் பச்சைபாலனைக் குறிப்பிடலாம்.சிவத்தின் கவிதைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தவை. தோட்ட வாழ்வு சார்ந்த அவரது கவிதைகள் அதில் முக்கியமானது. ஆனால் கடந்த தீபாவளிக்கு அவரும் ‘தீபாவளி கவிதை’ எழுதியதுதான் எனக்கு அச்சத்தை அளித்தது. பெரும்பாலும் எனக்கு விழாக்கால கவிஞர்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் அது. அதே பத்திரிகையில் அவர் ம.இ.கா கட்சியில் இளைஞர் பிரிவில் முக்கியப் பொறுப்பில் படத்துடன் வெளிப்பட்டபோது நடுநடுங்கிப் போனேன். எனக்கு மட்டமாகத் தெரியும் ம.இ.கா அவருக்கு மகத்தானதாகத் தெரிவதில் தவறில்லை.அதே போல எனக்கு மகத்தானதாகத் தெரியும் ஒன்று சக இலக்கியவாதிகளுக்கு மட்டமாகத் தெரியலாம்.ஆனால் ஒரு கவிஞன் தான் கொண்டிருக்கும் கட்டற்ற சுதந்திரத்தை மதமும், கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் பறித்துக்கொள்ளும் என தீர்க்கமாக நம்புகிறேன். நான் வாழும் காலத்தில் ஒரு நல்ல கவிஞன் இவ்வாறு சிறைபடுவதால் ஏற்படும் நடுக்கமாக அது இருக்கலாம்.
மணிமொழி , தோழி, தினேஸ்வரி, யோகி, போன்றவர்களும் நல்ல கவிதைகளைத் தொடர்ந்து படைத்து வருகின்றனர். அவர்களின் கவிதை குறித்தான பார்வை இன்னும் தீவிரமடைந்தால் மேலும் நல்ல கவிதைகள் பிறக்கும். ரேணுகா என்பவரும் இப்போது அதிகம் எழுதிவருகிறார். கவனிக்கப்பட வேண்டிய கவிஞராக இருக்கிறார்.
- மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தனி அடையாளமாக எதைக் கருதுவீர்கள்?
காலம் காலமாக தமிழக இலக்கியங்களையும் எழுத்துகளையும் படித்துப் பழகிவிட்டவர்கள் மலேசியத் தமிழர்கள். பல்கலைக்கழகங்களிலும் தமிழக இலக்கியங்கள்தான் பாடங்களாக உள்ளன.அதுவும் மு.வ, ந.பா, அகிலன் இப்படி. இந்தச் சூழலில் தனித்துவமான இலக்கிய மொழிரீதியான மாற்றம் உடனடியாக நிகழாது. சிலர் முயன்றுள்ளனர். சீ.முத்துசாமியும் கோ.முனியாண்டியும் அதில் முக்கியமானவர்கள். சு.யுவராஜனின் கதைகளில் அசலான தோட்ட வாழ்வின் உயிர் இருக்கும். அவரின் மற்றெல்லா படைப்புகளை விடவும் தோட்ட வாழ்வு சார்ந்த சிறுகதைகள் என் வாசிப்புக்கு நெருக்கமானவை. தோட்ட வாழ்வை தவிர நகர நெருக்கடியால் சிதறுண்ட நவீன மனிதனின் மனதை மஹாத்மனின் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. அவர் அனுபவமே அவர் கதைகளின் அடையாளம். இதே போல நவீன மனிதனின் அகம் சார்ந்த சிக்கல்களைப் பேசும் சண்முகசிவாவின் கதைகளும் தனி அடையாளத்தைக் கொண்டுள்ளன. மலேசிய இலக்கியவாதிகள் உண்மையான தங்கள் வாழ்வை எழுதுவது மட்டுமே மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு தனி அடையாளம் தர முதற்படி என நினைக்கிறேன்.
- தமிழகத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகப் சை.பீர்முகமது போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்களே?
‘மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘வேரும் வாழ்வும்’எனும் தொகுதியைச் சொந்த செலவில் போட்டார்; ஜெயகாந்தனை அழைத்து வந்தார்; தமிழக மேடைகளில் மலேசிய எழுத்துகளைப் பற்றி உரக்கச் சொல்கிறார்’ இது போன்ற காரணங்களுக்காக சை.பீர்முகமது அப்படி அடையாளம் காட்டப்படுகிறார் என்றால் கருணாநிதியையும் கலைஞர் என்று கூறுவதிலும் எந்தக் கூச்சமும் நாம் அடைய வேண்டியிருக்காது. பொதுவாகவே தமிழர்கள் ஓர் இலக்கியவாதியையும் இயக்கவாதியையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பதால் ஏற்படும் கோளாறுகள் இவை. சை.பீர்முகமதுவின் இலக்கியத் தரம் என்ன? எனும் கேள்விக்கு சாதகமான பதில் சொல்ல முனையும் ஒருவர் கடக்க வேண்டிய அவமானங்கள் ஏராளம்.
இங்கே இன்னுமொரு பிரச்சனையும் உண்டு. இன்றைய தமிழகச் சிற்றிதழ்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு வெளிவரும் ஏடுகளுக்கு கமிஷன் வாங்காமல் மலேசியாவில் இதழ்களை அறிமுகப்படுத்தவும் சந்தா வாங்கி அனுப்பவும் படைப்புகளை சேகரித்துத் தரவும் மொத்தத்தில் அவர்களது இதழ் தமிழர்கள் வாழும் இதர நாடுகளில் விற்றுத்தரும் புரோக்கர்களாகச் செயல்பட சில எழுத்தாளர்கள் தமிழகப் பதிப்பகங்களுக்குத் தேவை.எழுத்தாளர்களுக்குக் கமிஷன் தர அவசியம் இருக்காது. வாயார நாலு வார்த்தைப் புகழ்ந்தால் போதும்.கூடுதலாக நன்மை செய்கிறேன் என்று போகிற போக்கில் அவர்கள் பதிப்பகத்திலேயே இந்த எழுத்தாளர்களின் புத்தகத்தையும் அடித்துக் கொடுத்தால் புளங்காகிதம் அடைந்துவிடுவார்கள். அதில் சில நூறு புத்தகத்தை அதே எழுத்தாளர் தலையில் கட்டி விற்றுவிட்டால் பதிப்பகங்களின் பிரச்சனை தீர்ந்தது.
தமிழகப் பதிப்பகங்களால் கொண்டாடப்படும் வெளிநாட்டு தமிழர்களைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாலும் அவர்கள் மேல் இந்த ஏஜெண்ட் கறை படிந்திருப்பதைக் காணலாம். என்ன… சை.பீர்முகமது பல ஆண்டுகளாக ஏஜண்டாக இருப்பதால் கறை கொஞ்சம் அதிகம்.
- கருணாநிதியைக் கலைஞராக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, அவரை ஒரு திரைப்பட, நாடகக் கலைஞராகக் கூட ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?
ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது. தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு முன் ‘காலச்சுவடு’ கண்ணனை ஓர் எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வரும்…அவரும் புத்தகம் வெளியிட்டுள்ளார் அல்லவா! சுந்தர ராமசாமியை நவீன மொழி நடையின் தந்தை என ஏற்றுக்கொள்ளவேண்டி வரும்; வைகோவை ஒரு போரளி என ஏற்றுக்கொள்ளவேண்டி வரும்; எங்க ஊர் கார்த்திகேசுவின் நாவல்கள் தீவிரமானவை என நம்பவேண்டிவரும், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவரை மலேசிய இலக்கியத்தைக் காக்க வேண்டி அவதாரம் எடுத்தவர் என வணங்க வேண்டி வரும்; இப்படி நிறைய ‘வரும்’கள் வரும். கலை என்பதை அது உருவாகும் நோக்கம், அதன் அரசியல், அதன் உள் அடுக்குகளை ஆராயாமல் காற்றழுத்தத்தில் குபீரென உப்பும் பலூனை கண்டு எழும் வியப்போடு மட்டுமே அவதானிப்போமேயானால் மேற்கண்ட எல்லோரையுமே தங்குத்தடையின்றி அவரவர் இருக்கும் பிம்பங்களுடன் கொண்டாடலாம்.
- ஓர் இலக்கியவாதி கூர்மையான அரசியல் உணர்வுள்ளவராக இருக்கவேண்டும் எனக் கருதுகிறீர்களா?
அப்படி இல்லாமல் போனால் அவன் இலக்கியவாதியாக இருப்பதற்கான பொருள்தான் என்ன? அதிகார வர்க்கங்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும் எதிர்ப்பைவிட நட்புகரத்தையே சந்தேகம் கொண்டு பார்க்கவேண்டியுள்ளது. நான் பார்த்தவரையில் எந்த ஒரு சட்டத் திருத்தமோ அமுலாக்கமோ அதிகாரம் உள்ளவர்களுக்கே இறுதி பலனை தருவதாக உள்ளதே தவிர சிறுபான்மை மக்களுக்கு அல்ல. எந்த நேரமும் பாதுகாப்பற்ற ஓர் உணர்வில்தான் சிறுபான்மை மக்களுடன் கலந்துள்ள ஓர் இலக்கியவாதி இருக்க வேண்டியுள்ளது. காலங்காலமாக அதிகாரத்தில் உள்ளவர்கள் எழுத்தாளர்களையே தங்களுக்குச் சாதகமானவர்களாக்கிக் கொள்ளவும் விரும்புகிறார்கள். எழுத்தே அதிகார வர்க்கங்களின் நாடித்துடிப்பை மக்களிடம் முதல் அறிமுகம் செய்வதால் எழுத்தாளனை சுற்றிலும் விதவிதமான கண்ணிகள் அவன் பயணம் தோறும் விரிக்கப்படுகின்றது. கண்ணியில் சிக்குவதா இல்லையா என்பது எழுத்தாளனின் தேர்வுதான்.
- இன்று மலேசியாவில் தமிழ் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு எவ்விதமுள்ளது?
அரசியலில் ஈடுபட ஆர்வம் செலுத்துகின்றனர். ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என அனைத்திலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால் அரசியலில் அவர்களுக்கான இடம் கிடைத்தவுடன் நீங்கள் கூறிய ‘தமிழ் இளைஞர்களாய்’ அவர்கள் இருப்பதில்லை.அவர்கள் இரத்தங்களில் ஏதோ ஒரு அசுத்தமான இரசாயனம் கலந்துவிட்டதுபோல சராசரி தமிழர் வாழ்விலிருந்து விலகிவிடுகின்றனர். தேர்தல் காலங்களில் ஓட்டுகளைப் பெற தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதோடு சரி. தேசிய வளர்ச்சியில் மலேசியத் தமிழர்கள் விடுபட்டுள்ளதை அறிந்தும் அதற்காக எந்த ஆரோக்கியமான செயல்திட்டங்களையும் இவர்கள் முன்னெடுப்பதாக இல்லை. தங்களுக்கு மேல் இருக்கும் தலைமையின் தாளங்களுக்குத் தப்பாமல் அபிநயம் பிடிக்கும் இவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சமூக சிந்தனையும் இவர்கள் தலைமை பீடங்களுக்கு வரும்போது முற்றிலும் இறந்திருக்கும். இதில் சிலர் குண்டர் கும்பல்களை வழிநடத்தியும் வருகின்றனர் என்பது நான் நேரில் அறிந்த உண்மை. இந்த நிலையில் சுய சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரும் அரசியல் ஈடுபட்டு தானாக விலகிக் கொள்வது விலக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.
- ‘ம.இ.கா’ டத்தோ சாமிவேலுவின் அரசியல் குறித்துச் சொல்லுங்கள்…
நான் சின்ன வயதாக இருக்கும் போதிலிருந்தே அவரை எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் இருந்தே வருகின்றனர். இதில் விசேஷம் என்னவென்றால் நான் வளர வளர அவரை எதிர்த்த பலரும் அவருடன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து கொள்வதைக் காண்கிறேன். பக்கா அரசியல் சந்தர்ப்பவாதம் உள்ளவர்களால்தான் இவ்வாறு எளிதில் எவரையும் ஏற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கை முழுதும் ஒரு வில்லனாகவே வாழ்ந்து எதிரிகளை வெல்வது இவ்வளவு சாத்தியமா என ஆச்சரியமாக உள்ளது. அமைச்சர் பதவியில் அவர் இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு அவர் செய்யவேண்டியதை முறையாகச் செய்யாமல் விட்டதோடு அரசாங்கம் தமிழர்களுக்குக் கொடுத்த கொஞ்ச நஞ்ச சலுகைகளையும் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தியதை இன்றளவும் எந்த மலேசியத் தமிழனும் மறந்திருக்கமாட்டான். மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் கட்சியின் தலைவராக பல ஆண்டுகள் இருந்துவிட்டார். எந்த அரசு பதவியிலும் இப்போது இல்லாத அவர் இன்னும் ம.இ.கா கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என ஆவல் கொண்டுள்ளார்.இவை ஒரு புறம் இருக்க அவருக்கு சற்றும் சளைக்காத வேறொரு கூட்டத்தினர் அவர் ம.இ.காவில் தலைவர் பதவியில் இருப்பதையும் எதிர்க்கின்றனர். எதிர்க்கும் கூட்டத்தினரையும் அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஒத்து ஊதும் டத்தோ சுப்ரமணியத்தையும் ஒருதரம் நினைத்துப் பார்க்கும் போது சாமிவேலு பரவாயில்லையோ எனத் தோன்றுகிறது.
- மலேசியாவில் தமிழர்கள் சமஉரிமைகளுடன் மலேசிய அரசால் நடத்தப்படுவதாகக் கருதுகிறீர்களா?
எப்போது ‘பூமி புத்ரா’ என்ற அந்தஸ்தை மலாய்க்காரர்களுக்கு மட்டும் வழங்கி அந்த உரிமையைக் கேள்வி கேட்பது சட்ட விரோதம் எனும் சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியதோ பின்னர் எங்கிருந்து வரும் சம உரிமை. பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைப்பதில் தொடங்கி , கல்விக் கடனுதவித் திட்டம், அரசாங்க வேலை வாய்ப்பு என எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு இருட்டடிப்பே நிகழ்கிறது.
தொலைவிலிருந்து பார்ப்பவர்கள் மலேசியாவின் அகன்ற சாலைகளும் உயர்ந்த கட்டடங்களும் தரும் பிரமிப்போடுதான் மலேசியத் தமிழர்களையும் அணுகுகின்றனர். உண்மையில் மலேசியத் தமிழனுக்கும் அந்தப் போலி அலங்காரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது புதிதாக வந்த பிரதமரும் இந்த வேற்றுமைகளில் எதையும் மாற்றம் செய்யாமல் ‘ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டை நாடு முழுதும் போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்கிறார்.பாவப்பட்ட தமிழர்களுக்கு ஆதிக்க வர்க்கத்தினரின் போலி அரசியல் குறித்து விளக்க ஊடகவியலாளர்கள் பலரும் தயார் இல்லை. சமூகத்திற்கு சம உரிமை கிடைக்க புறப்பட்ட பலரும் அரசின் கைக் கூலிகளாக மாறிவிடும் சூழலில் உங்கள் கேள்வி ஓர் அற்புதமான கனவு தரும் சுகத்தை ஏற்படுத்துகிறது.
- மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து இரண்டு நூற்றாண்டுகளாகிவிட்டன. இன்னும் சமூகத்தில் சாதியம் உள்ளதா?
இரண்டு நூற்றாண்டுகளாக எதை பாதுகாத்தார்களோ இல்லையோ சாதியை மட்டும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் சமூகமாக மலேசியத் தமிழர்கள் இருக்கிறார்கள். நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது சாதி குறித்தான பேச்சுகள் ஒரு கொச்சை வார்த்தைக்கு நிகராக மிக ரகசியமாகவும் குசுகுசுப்பாகவுமே பலராலும் பேசப்பட்டது. இப்போது பகிரங்கமாகவே சாதிச் சங்கங்கள் மலேசியாவில் உருவாகி வருகின்றன. அதில் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஈடுபட்டு வருகின்றனர். ம.இ.கா எனும் இந்தியர்களின் அரசியல் கட்சியிலும் இந்த சாதி அடையாளம் பெரும் பங்கு வகிக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன் சஞ்சிக்கூலிகளாக வந்து ஒருவேளைச் சாப்பாட்டுக்கு ஆங்கிலேயனிடமும் ஜப்பானியனிடமும் கூழைக்கும்பிடு போட்ட ஒரு சமூகத்தினர், கொஞ்சம் தலையெடுக்கத் தொடங்கியதும் எங்கிருந்துதான் இந்த மயிரு ஜாதியைத் தேடி அடைகிறார்களோ என்று தெரியவில்லை. தமிழகம் போன்று இங்கு தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் பெரும்பாலும் திருமணங்களின் போது ஜாதி தலை நீட்டிவிடுகிறது. பத்திரிகைகள் ஜாதி சங்க விளம்பரங்களை இப்போதெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்கின்றன. எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்கவும் முடியாது. ஏதாவது செய்தாகத்தான் வேண்டும்.
- ஹிண்ட்ராப் அமைப்புக் குறித்து?
ஆரம்பத்தில் எனக்கு அவ்வமைப்பின் மீது நிறைய சந்தேகங்களும் விமர்சனங்களும் இருந்தன. அது ஆர். எஸ். எஸ்சுடன் தொடர்புடைய அமைப்பு என்பது அதில் முக்கியமானது. மேலும் அந்த அமைப்பில் ஏற்பட்டிருந்த பிளவுபாடுகளும் என்னைப் பெரும் சந்தேகம் கொள்ளச் செய்தது. இவற்றையெல்லாம் மீறி அவ்வமைப்பு மலேசியத் தமிழர்களின் உண்மையான மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக 25 நவம்பர் 2007ல் ஏற்பாடு செய்திருந்த பேரணி, மலேசிய அரசாங்கம் ‘அரசியல்’ நடத்த அதுவரை வெளிதோற்றத்தில் கட்டமைத்திருந்த சமுதாய ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கியது. மலேசியாவில் நடந்துவரும் பாரபட்சமிக்க ஆட்சிமுறையை அப்போதுதான் அறிந்துகொண்ட உலக நாடுகள் அனேகம். தொடர்ந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகும் பலத்த பாதுகாப்புக்குப் பிறகும் 25 நவம்பர் 2007ல் குழுமிய பல லட்சம் தமிழர்களுக்கு உண்மையில் ஹிண்ட்ராப் குறித்த எந்தக் கேள்வியோ சந்தேகமோ விமர்சனமோ இருந்திருக்காது. பல வருடங்கள் அழுத்தப்பட்டு வந்த சாமன்ய மக்களின் வெடிப்பு அது. அந்த உணர்ச்சி வெளிப்பட வழியமைத்த ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமார் மீது எனக்கு நிரம்பிய மரியாதை இருந்தது. அந்த மரியாதையுடனும் மனதில் தேங்கிய விமர்சனங்களுடனுமே அவரைக் கடந்த சில மாதங்களுக்கு முன் நண்பர்களோடு இணைந்து ஒரு நேர்காணல் செய்தேன்.
மற்றெல்லா ஊடகங்களையும் விட ஹிண்ட்ராப் மற்றும் அதன் இன்றைய நிலை குறித்து ‘வல்லினம்’ நேர்காணலில் விரிவாக வாசிக்கலாம். மற்றொரு விசயத்தையும் இங்கு சொல்லவேண்டிய அவசியம் உண்டு. மலேசியத் தமிழர்களின் மனம் மொழியைவிட மதத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கக்கூடியது. அதற்கு முக்கியக் காரணம் இன்றைய மலேசியத் தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களில் தமிழைப் பின்புலமாகக் கொள்ளாதவர்கள். மலாய் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். இவர்களுக்கு தங்கள் இனத்தின் அடையாளமாக நம்புவது கோயிலையும் மதத்தையும் மட்டுமே. என் அனுமானத்தில் ஒருவேளை மொழியை மையமாக வைத்து ஹிண்ட்ராப் நகர்ந்திருந்தால் அதற்கு பரவலான ஆதரவு கிடைத்திருக்காது. அண்மையில் நடந்த ‘எஸ்.பி.எம் பாட விவகார பேரணியே’ அதற்கு ஒரு சான்று. ஹிண்ட்ராப் பேரணி கோயில் உடைப்பு மற்றும் சிறையில் தமிழர்கள் கொல்லப்படுவதை முன்வைத்து நகர்த்தப்பட்டது. ஹிண்ட்ராப் போரட்டத்தை வெறும் இந்துத்துவ பின்புலத்தைக் கொண்டு மட்டும் பார்ப்பது சரியாகாது என அந்த நேர்காணலுக்குப் பின் உணர்ந்தேன். ஹிண்ட்ராப் பேரணியால் மலேசியத் தமிழர்களுக்கு ஓரளவேனும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். தமிழகத்தோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் மதம் பங்காற்றும் விதம் வேறாக உள்ளது. வெறும் இனக் கட்சிக்குள் நடக்கும் சர்ச்சைகளை மட்டுமே பேசித் திரிந்தவர்களுக்கு மத்தியில் ஹிண்ட்ராப் நேராக அரசாங்கத்திடமே எம் உரிமைக்காக வாதாடுகிறது. ஒரு அதிகார சக்தியை எதிர்க்க அதற்கு ஆயுதம் ஒன்று தேவைப்படுகிறது. அது மதமாக இருக்கும் பட்சத்தில் தற்காலிகமாகக் கையில் எடுப்பது தவறில்லை என்றே நினைக்கிறேன்.
- மலேசியாவைப் பொறுத்தவரை இந்துமதம் அரசால் ஒடுக்கப்படும் மதம் என்பது உண்மைதான் என்றாலும் இந்து மதம் தனக்குள்ளேயே சாதி போன்ற ஒடுக்குமுறைகளைக்கொண்ட மதமாகவும்தானே உள்ளது. தவிரவும் தமிழர்கள் இந்து மதத்தால் இணைகிறார்களெனில் தமிழ்மொழியைப் பேசும் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அந்த இணைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்கள் ஆகிவிடமாட்டார்களா?
நீங்கள் கேட்பதில் நியாயம் உண்டு. ஆனால் நான் நடைமுறைச் சிக்கல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழ்மொழி அல்லது தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான சிக்கல்கள் மலேசியாவில் எழும்போதெல்லாம் அதற்காகக் குரல் கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கை பரிதாபமானது. அப்படியே வருபவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாமல் இருக்கும். இங்கு மொழியை வைத்துப் பிழைப்பவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் வானொலி – தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள், தமிழ்ப் பத்திரிகை நடத்துபர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள்,அரசியல்வாதிகள் என அடுக்கலாம். இவர்களில் எத்தனைப் பேர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்?; எத்தனை பேரின் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்கத் தெரியும்?; எத்தனை பேரின் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசினால் புரியும்? என்பது என் கேள்வி. மிக எளிதாக என்னால் பேராசிரியர்கள் தொடங்கி தமிழ் எழுத்தாளர்கள் வரை அவரவர் பிள்ளைகளின் நிலை குறித்துக் கூற முடியும்.
இதை நான் சொல்லவந்ததற்குக் காரணம், சமூகத்திற்கும் மொழிக்கும் நன்றியுடன் இருக்கவேண்டியவர்களின் நிலை மிகக் கேவலமாக இருக்க சாமானியர்களின் மன நிலையின் இயக்கம் எப்படி இருக்கும்? மாணவர்கள் போதாமையால் 1200லிருந்து 800 ஆகி இப்போது 523 என்றளவுக்கு தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.. இது இன்னும் குறையும். இது தொடர்பான அபாயம் குறித்து விழிப்புணர்வு பரப்பப்பட்டாலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இதில் நான் இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள் என்ற அடிப்படையில் பேசவில்லை.பொதுவாகவே தமிழர்களின் மனப்போக்கு அப்படிதான் உள்ளது.
இந்து மதம் தன்னுள் சாதி ஒடுக்குமுறைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். அது சாதி ஒடுக்குமுறையை மட்டுமே கொன்டிருக்கிறது என்பது உண்மையல்லவே. ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் ஒன்றிணைய ஒரு தளம் தேவைப்படுகிறது.இதில் உள்ளே புகுந்து மத ஒழிப்பு பிரச்சாரமெல்லாம் செய்ய முடியாது. ஹிண்ட்ராப் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எந்த சாதியையும் மனதில் கொண்டு களத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள்.
- மலேசியாவில் தமிழர்களுக்கான ஒரு தமிழ்த் தேசியவாதக் கட்சி உருவாகுவதற்கு வாய்ப்புகளுள்ளனவா?
உருவாகி என்ன செய்வது? மலேசியாவில் அத்தகையதொரு கட்சியை உருவாக்குவதற்கு பெரிய தடை இருக்காது. ஆனால் செயலற்று கிடக்கின்ற எக்கச்சக்கமான கட்சிகளோடு அதுவும் இணைந்துகொள்ளும்.1.8 மில்லியன் மக்களைக் கொண்ட மலேசிய இந்திய சமூகம் பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இச்சிறுபான்மையினர் தேர்வு செய்வதற்கு குறைந்தது ஆறு அரசியல் கட்சிகளாவது உள்ளன.மஇகா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்), பிபிபி (பல இனக் கட்சியாக இருந்தாலும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்), ஐபிஎப் (இந்தியர் முன்னேற்ற முன்னணி), மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள மலேசிய மக்கள் சக்திக் கட்சி, ஹிண்ட்ராப் குழுவினரின் எச்.ஆர்.பி எனப்படும் மனித உரிமை கட்சி என இருக்கும் இவற்றால் எளிய தமிழ் மக்கள் சந்திக்கும் நிராகரிப்புக்கு முழுதுமாகத் தீர்வு பிறக்கவில்லை. இதில் தமிழ்த் தேசியவாதம் எனப் பேசும்போது இருக்கின்றவர்களும் பயந்து ஓடிவிடுவர். தலைமையேற்று நடத்தத் தமிழ் தெரிந்த தலைவர் யாரும் இருக்க மாட்டார்கள். தலைவரின் மகன் ஆங்கிலப் பள்ளியில் பயின்றுகொண்டு மேட்டுக்குடி மனதுடன் இருப்பான். தமிழ் தெரிந்த தமிழருக்கு இன்றைய அரசியல் சித்து புரியுமா என்பதும் சந்தேகம்தான். இதில் சாதி அடையாளங்கள் வேறு புகுந்துகொள்ளும். இப்படி ஒரு கட்சி மலேசியாவில் உண்டு என கூற மட்டும் அது பயன்படலாம்.மற்றபடி ஆக்ககரமான ஒரு நகர்வுக்கு கட்சி பயன்படும் என எனக்குத் தோன்றவில்லை.
- இரண்டாம் உலகப்போர் காலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸட் இயக்கத்தைக் கொண்டிருந்த மலேசியாவில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலையென்ன? சிறியளவிலாவது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இயங்குகின்றனவா?
மலேசிய சோசலிசக் கட்சி என்று ஒரு கட்சி உள்ளது. 1998ல் உருவாக்கம் கண்டது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் என பல காலமாக அரசாங்கப் பதிவு நிராகரிக்கப்பட்டு 2008ல் பதிவு பெற்றது. அதன் செயற்பாடுகள் வீரியமாக இல்லை. நிச்சயம் அக்கட்சி மலேசியாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியும் என நான் நம்பவில்லை.
- மலேசியாவில் வாழும் இலங்கை வம்சாவளித் தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குமிடையேயான உறவுகள் எவ்விதமுள்ளன?
எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இங்கு நடைபெரும் எவ்வகையான மொழி, இலக்கிய, அரசியல் கூட்டங்களிலும் அவர்களின் பங்களிப்பை நான் பார்த்ததில்லை. பெரும்பாலோர் செல்வந்தர்கள்தான். இயல்பாகவே அவர்கள் மேட்டுக்குடி மன நிலையில்தான் உள்ளனர். பெரும் பணம் செலவு செய்து கோயில்களில் அன்னதானம் செய்வதை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவர்களுக்கென்று சங்கம்கூட உள்ளது. அவர்கள் தங்களைத் தனித்து அடையாளம் காட்ட எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன். இருந்துவிட்டுப்போகட்டுமே.
- நீங்கள் பத்திரிகையாளராகவுமிருக்கிறீர்கள், உங்கள் பத்திரிகை அனுபவங்கள் குறித்து?
எனது இதழியல் செயல்பாடுகள் ‘மன்னன்’ எனும் சனரஞ்சக இதழிலிருந்து தொடங்கியது. மாத இதழான அதில் பணியாற்ற அதன் ஆசிரியர் எஸ்.பி.அருண் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்திருந்தார். சம்பளம் என்று எதுவும் இல்லை. மதிய வேளை உணவு கிடைக்கும். எந்த சம்பளமும் இல்லாமல் முழு நேரமாகப் பணியாற்றும் அளவிற்கு எனக்கு ஆர்வமும் வீட்டில் எந்தப் பொறுப்பும் இல்லாமலும் இருந்தது. சில கருத்து வேறுபாடுகளால் அவ்விதழிலிருந்து விலகினேன்.
அதன் பிறகு ‘காதல்’ எனும் இலக்கிய இதழ் மலேசியாவில் முதன்முதலாக உருவானது. பத்திரிகையாளர் பெரு.அ.தமிழ்மணி அவர்களோடு ஏற்பட்டிருந்த நட்பில் அவர் நிர்வாக ஆசிரியராக இருக்க நானும் மணிமொழியும் இணைந்து இதழை நடத்தினோம். நவீன சிந்தனை கொண்ட மலேசிய எழுத்தாளர்கள் ஒன்றிணைந்தது அவ்விதழ் மூலம்தான். சுமார் பத்து இதழ்கள் வெளிவந்த பின்னர் பொருளாதாரப் பிரச்சனையால் இதழ் நின்றது. மலேசியாவில் நவீன சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் பலரும் இருப்பதை அறிந்தபின் நான் ‘வல்லினம்’ எனும் இதழை அரசாங்கத்திடம் பதிவு செய்து தொடக்கினேன்.
முதல் இதழ் வெளிவர தமிழகத்திலிருந்து மனுஷ்ய புத்திரனும், சிங்கையிலிருந்து லதாவும், லண்டனிலிருந்து என்.செல்வராஜாவுமே காரணம் என்பதை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.சுமார் எட்டு இதழ்கள் வெளிவந்த பின்னர் வல்லினத்தை இணைய இதழாக மாற்றினோம். இணைய இதழாக உருவாக நண்பர் சிவா பெரியண்ணன் துணைப்புரிந்தது போலவே வல்லினத்தின் தளத்தை மேலும் விரிவாக்க நண்பர் யுவராஜனின் ஆலோசனைகள் துணைபுரிந்தன. உண்மையில் வல்லினம் எங்கள் மூவரின் கூட்டணியில் புதிதான ஒரு பரிமாணத்தை எடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.
வல்லினம் ஒரு குறிப்பிட்ட வாசகர்களையே சென்றடைவதாக இருந்தது. தீவிர இலக்கிய முத்திரை விழுந்துவிட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். இலக்கியம் தவிர்த்து நாங்கள் – இங்கு நாங்கள் என்பது இளம் தலைமுறை எழுத்தாளர்களைக் குறிக்கிறது -சமகால மலேசிய அரசியல் குறித்தும் எழுதத் தொடங்கியிருந்த ஒருநிலையில் எங்கள் எழுத்தை மலேசிய தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல ஓர் அச்சு ஊடகத்திற்குக் காத்திருந்தோம்.’முகவரி’ உருவானது. மாதம் இருமுறை வெளிவரும் அதில் என்னோடு யுவராஜன், மணிமொழி, தோழி என இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர்.
இதைதவிர யுவராஜன் ஆசிரியராக இருக்கும் தும்பி எனும் ‘அறிவியல்’ இதழில் ஆசிரியர் குழுவில் என் பெயரையும் ‘சும்மா’ இணைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இதழுக்கும் ஒரு அறிவியல் கதை எழுதிக்கொடுப்பதோடு சரி. மற்றெல்லாவற்றை விடவும் இதழியல் என் ஆன்மாவோடு மிக நெருங்கி இருப்பதாகப்படுகிறது. ஒரு வேளை நான் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியராக இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ முழுநேரப் பத்திரிகையாளனாகியிருப்பேன். பத்திரிகையைவிட என் சமூகத்தை மிக நெருங்கிப் பார்க்கும் பரப்பை தமிழ்ப்பள்ளிகள் எனக்குத் தருகின்றன.
- இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
எழுதுவது குறித்து நிறைய கேள்விகள் எழுந்தபடி உள்ளன. மொழி, தீவிர இலக்கியம், தமிழ் எனப் பேசிக்கொண்டு அதிகாரத்திடம் கூனிக்குறுகி இருக்கும் ஏதாவது ஓர் எழுத்தாளனைச் செருப்பைக் கழற்றி அடித்துவிட்டு பிறகு எழுதுவதுதான் சரி என்றும் படுகிறது. மலேசிய தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தராமல் தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்முறை ஒன்றுதான் சரியான தீர்வோ என்றுகூட அவ்வப்போது தோன்றுகிறது. கசகசப்பான இந்த அரசியல் இலக்கியச் சூழலில் அவ்வப்போது சில கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி படைப்பு மனத்தை உயிர்ப்பித்துக் கொள்கிறேன்.
ஒரு சமயம் ஒரு தோழியிடம் கூறினேன். “நான் ஒரு பென்சில் போலவோ என ஆழ் நிலையில் சிந்திக்கும் போது தோன்றுகிறது. ஒரு பக்கம் இருக்கும் அழிப்பான் சதா எதையாவது அழிக்கவே முற்படுகிறது; கூறிய கரிமுனையும் தன் பங்குக்குக் வன்முறையோடே காகிகத்தைக் கிழிக்கிறது…ஆக மொத்தத்தில் என்னில் இரண்டு பக்கமும் அழிக்கும் சக்திதான்” என்றேன் . அதற்கு அவர் நிதானமாக “இரண்டுமே விரைவில் தேய்ந்து அழிந்து இல்லாமல் போய்விடும்” எனக்கூறிச் சிரித்தார். நடக்கப்போகும் உண்மைகளைப் பெண்கள் எப்படியோ தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.
மிக மகிழ்ச்சியாக உள்ளது, ம.நவீனை பார்க்கும் போது ,ஏனெனில் நான் இருந்த வரை , சமூக அக்கறை கொண்ட பொருப்பான மனிதர்களை பெரும்பாலும் அங்கு பார்க்கவில்லை..!
தமிழ் சினிமாக்களில் தோன்றும் நாயகர்கள்தான் ,உண்மையான தமிழர்கள்,என்று எண்ணும் விதம் ..அவர்களை பின்பற்றுபவர்களையே அதிகம் பார்த்தேன்..!
லெம்பா பூஜாங் ஒரு வருட இடைவெளியில் இருமுறை , சென்ற போதும் வெறுமையை உணர்ந்தேன்,
இரண்டு கட்டிடங்கள் மட்டும் மீதி உள்ளது..!
வாழ்த்துகள் நவீன்