– ஷோபாசக்தி
நான் 1993 மார்ச் மாதம் பிரான்ஸுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர்கள் தங்கியிருந்த சிறிய அறையில் எனக்கும் படுத்துக்கொள்ள ஒரு மூலை கிடைத்தது. நண்பர்களும் விசா, வேலைப் பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்தார்கள். நான் அகதித் தஞ்சம்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தேன். அகதித் தஞ்சம் கிடைக்கும்வரை வேலை செய்ய அனுமதி கிடையாது. நண்பர்களின் உதவியால் ‘பேப்பர்’ போடும் வேலையொன்று கிடைத்தது. சட்டவிரோதமான வேலையென்பதால் மிகக் குறைந்தளவு ஊதியமே கிடைத்தது. அதையும் இழுத்தடித்துத்தான் தருவார்கள். அந்த வேலையில் கிடைத்த சொற்ப ஊதியம் நண்பர்களுடன் அறைவாடகையையும் சமையல் செலவுகளையும் பகிர்ந்துகொள்ள மட்டுமே போதுமானதாயிருந்தது.
அப்போது அகதித் தஞ்சம்கோரிய முதல் விண்ணப்பம் அநேகமாக நிராகரிக்கப்படுவதே பிரான்ஸில் வழமையாயிருந்தது. அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யும்போது வழக்கறிஞருக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அப்போது ‘பாரிஸ் தமிழர் கல்வி நிலையத்தினர்’ கவிதை, சிறுகதைப் போட்டியொன்றை நடத்தினார்கள். முதற்பரிசாகத் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. நான் போட்டிக்கு ஒரு சிறுகதையை எழுதி அனுப்பிவிட்டு நண்பர்களிடம்
“வழக்கறிஞருக்குப் பணம் ரெடி, எனக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கும்” என்றேன். ஆனால் எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது. சிறுகதைக்கான முதற்பரிசு ரமேஸ் சிவரூபனுக்குக் கிடைத்தது. கவிதைப் போட்டியிலும் அவருக்குப் பரிசு கிடைத்தது.
ரமேஸ் எனக்கு மூன்று வயதுகள் இளையவர். கவிதை, சிறுகதை, நாடகம், திரைப்படம், பட்டிமன்றம் என எந்தத்துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவரின் கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன. ‘வான்மதி’ என்றொரு இதழையும் நடத்தினார். எனினும் அவரின் அரசியல் தளும்பல்களே அவரை ஒரு தோல்வியுற்ற கலைஞனாக்கின. அரசியல் தளும்பல்களாலும் சந்தர்ப்பவாதங்களாலும் அரசியலில் வேண்டுமானால் வெற்றியைச் சாதிக்கலாம். ஆனால் அவை ஒரு கலைஞனின் ஆன்மாவைச் சிதைத்து அவனை முடக்கக்கூடியவை. ‘குமுதம்’ பாணியில் எழுதினால்தான் மக்களைச் சென்றடையலாம் என்று ரமேஸ் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவரின் ‘வான்மதி’ இதழையும் அவ்வாறுதான் நடத்த முயற்சித்தார். எனினும் அவர் நவீன இலக்கியங்களையும் தேடித் தேடிப் படித்தார்.
நீண்டகாலமாக என்னுடன் பட்சமாகவும் இனிமையாகவும் பழகி வந்த ரமேஸை என்னுடைய கறாரான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக என்னால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. வழிதெருவில் கண்ட இடத்தில் கதைப்பது, அப்படியே ஒரு ‘அரை’யை வாங்கி இருவரும் பகிர்த்து குடித்து இலக்கியமும் அரசியலும் பேசிவிட்டுப் பிரிவது என்றளவிலேயே எங்கள் நட்பு இருந்தது. அவரின் அழைப்பின் பெயரில் ஒரேயொருமுறை நானும் கவிஞர் அருந்ததியுமாக அவரின் வீட்டுக்குப் போனோம். அன்று அவரின் வீட்டில் ஒடியற் கூழ் விருந்து. நண்பர்கள் பானையைச் சுற்றவர இருந்து மதுவும் கூழும் குடித்தோம். இன்று ரமேஸைக் கொன்றதாகக் காவற்துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவரும் அன்று எங்களுடனிருந்து கூழ் குடித்தார்.
ரமேஸின் கொலைச் செய்தியை அறிந்தவுடனேயே ‘ரமேஸ் புலிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என இலங்கை அரசு சார்பான ஊடகங்கள் ‘அவசர’ச் செய்தியை வெளியிட்டுள்ளன. ‘இனியொரு’, ‘தமிழரங்கம்’ ஆகிய இணையங்கள் நண்பர்களுக்குள் நடந்த சண்டையின்போதுதான் ரமேஸ் அடிக்கப்பட்டுப் பின் இறந்திருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு நடந்திருக்கத்தான் வாய்ப்பு உள்ளதாக நானும் கருதுகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பாக கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காகப் பாரிஸ் வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு மதுவிடுதி ஒன்றில் நானும் ஜெயபாலனும் இருந்தபோது அங்கே ரமேஸ் வந்தார். ஜெயபாலனுக்கும் ரமேஸுக்குமிடையில் தொடங்கிய புலம் பெயர் திரைப்படங்கள் குறித்த உரையாடல் விவாதமாக மாறிச் சண்டையில் வந்து நின்றது. ஜெயபாலன் மிகவும் புண்பட்டிருந்தார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் என்னுடன் அதுகுறித்தே பேசிக்கொண்டிருந்தார். ரமேஸும் அது குறித்து வருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அடுத்தநாள் நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்குள் நுழைந்த ரமேஸ் முதல் வேலையாக ஜெயபாலனைத் தேடிச்சென்று அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு இரவு தான் நடந்துகொண்ட முறைக்காக மன்னிப்புக் கேட்டார்.
ஒரு சண்டைக்கும் ஒரு மன்னிப்புக்கும் இடையில்தான் கொலை மறைந்திருக்கிறது.
தோழன் ரமேஸ் சிவரூபனுக்கு அஞ்சலி!
//ஒரு சண்டைக்கும் ஒரு மன்னிப்புக்கும் இடையில்தான் கொலை மறைந்திருக்கிறது.//
நீண்டகாலம் என்னுடன் இருக்கும் இந்த வாக்கியம்