மே 17 – 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது.
படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். தனது மகனைச் சேர்த்து வைத்திருந்த இயக்கத்தின்மீது அவருக்கிருந்த கோபத்தையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் என் அப்பாவின் கோபம் ஒட்டுமொத்தத் தமிழீழப் போராட்ட இயக்கங்களின் மீதான பெருங்கோபமாக விரிவடைந்தது. போதாததற்கு 1985 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரவும் அவருக்குச் சினம் தலைக்கேறியிருக்க வேண்டும். ஏனெனில் போராளிகளின் சட்டதிட்டங்களும் தண்டனை வழங்கும் முறைகளும் மன்னர் காலத்தைச் சேர்ந்ததாயிருந்தன. ஏறுமாறாய் கதைத்தால் மண்டையில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். முன்னர் ஏதாவது பிரச்சினையென்றால் இலங்கைப் பொலிஸாரை அய்ந்து, பத்து ரூபா கொடுத்துச் சமாளிக்கலாம். போராளிகள் அதற்கெல்லாம் மசியமாட்டார்கள். அவர்களை மசியச் செய்வதென்றால் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏழைச் சண்டியரான எனது அப்பா இலட்சங்களிற்கு எங்கே போவார். எனவே அவர் வேறொரு திட்டத்தைக் கையாண்டு இயக்கங்களைச் சரிக்குச் சரியாக எதிர்கொள்வது என முடிவெடுத்தார்.
அப்போது சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. எனது அப்பாவும் தனது இரண்டொரு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு பெயர் பூனைப்படை. தலைவர், செயலதிபர், இராணுவத் தளபதி ஆகிய பொறுப்புகளுக்கு அப்பாவும் அவரின் கூட்டாளிகளுமிருந்தாலும் அரசியல் ஆலோசகர் பதவிக்கு பூனைப்படைக்கு யாருமே கிடைக்கவில்லை. அப்பா சற்றும் யோசியாமல் எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் குடியிருந்த தமிழாசிரியரை ஆசிரியரின் அனுமதியில்லாமலேயே பூனைப்படையின் அரசியல் ஆலோசகராக நியமித்துவிட்டார். எங்கள் வீட்டு வேலியில் ஒரு பெரிய அட்டையில் பூனைப்படைக்கான அறிவித்தலும் பதவி வரிசைகளும் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தன. பயந்துபோன தமிழாசிரியர் பதறியடித்து என்னைத் தேடி எங்களின் முகாமுக்கு வந்து முறையிட்டார். தனக்கும் பூனைப்படைக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என ஒரு நீண்ட மறுப்புக் கடிதத்தை எழுதி அதை அவர் தன்னோடு எடுத்து வந்திருந்தார்.
எனக்கு அவமானமாய் போய்விட்டது. ‘பூனைப்படை’ என்ற பெயரே நேரடியாக எங்களது இயக்கத்தைக் கிண்டல் செய்வதாகயிருந்தது. உடனடியாகவே பூனைப்படையைத் தடைசெய்ய வேண்டும் என்று நான் எனது பொறுப்பாளரிடம் சொன்னேன். பொறுப்பாளருக்கோ சிரிப்புத்தாங்க முடியவில்லை. எனினும் எனது நச்சரிப்புத் தாங்காமல் பொறுப்பாளர் பூனைப்படையைத் தடைசெய்ய முடிவெடுத்தார். கடுமையான போதையில் கள்ளுத் தவறணையிலிருந்து அலம்பிக்கொண்டிருந்த பூனைப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதலாவதாகத் தடை செய்யப்பட்ட இயக்கம் பூனைப்படைதான். தடை செய்ய எடுத்த நடவடிக்கையில் அப்பாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து நமது பொடியன்கள் அவரை ‘சும்மா’ மிரட்டியிருந்தார்கள். அதை ஒரு பெருத்த அவமானமாக எனது அப்பா இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எனது அப்பா பூனைப்படை அமைத்ததிற்கும் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைத்ததிற்கும் கால, இட, உருப்படி வித்தியாசங்கள் இருக்கின்றனவே அல்லாமல் தத்துவரீதியான வித்தியாசங்கள் எதுவுமில்லை. அப்படியிருந்தால் கூட எனது அப்பாவின் பக்கமே நியாயமிருக்க வாய்ப்புள்ளது.
மே 2 ம் தேதி நடந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக அவர்களது தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கள்ள வாக்குகள் போடப்பட்டதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் வாக்குப் பெட்டிகள் கடத்தப்பட்டதாகவும் அவர்களே அறிவித்திருக்கிறார்கள். இலண்டனில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இரு வேட்பாளர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட முன்னரே தேர்தலிலிருந்து விலகினார்கள். இன்னும் எத்தனை எத்தனை தேர்தல் ஊழல்கள் கண்டுபிடிக்கப்படாமலிருக்கின்றன, மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் தேர்தல் ஆணைக் குழுவுக்கே வெளிச்சம். அவர்கள் சுயாதீன விசாரணையொன்றை இம்முறைகேடுகள் மீது நடத்தப் போகிறார்களாம். யாரந்த ஆணைக்குழுவினர்? யார் இவர்களை நியமித்தார்கள்? யார் இவர்களிடம் இந்த அதிகாரங்களைக் கையளித்தார்கள்? இவர்கள் எந்த அதிகாரத்தின் பெயரால் தமிழ் மக்களுக்கு அதிகாரிகளானார்கள் என்பதற்கெலாம் விடையெதுவும் கிடையாது. இந்த ஆணைக் குழுவினரே ஊழல்கள் செய்தால் அதை யார் விசாரிப்பது?
தேர்தல் நடத்தப்பட்ட முறையே நாடு கடந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் சனநாயகப் பண்பின்மையையும் தில்லுமுல்லுகளையும் காட்டி நிற்கிறது. இவர்களது முப்பது வருட அரசியலே இதே தில்லுமுல்லுகள்தான். இம்முறை தில்லுமுல்லுகள் அவர்களுக்குள்ளேயே நடந்திருப்பதால் அவை வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
இந்தத் தேர்தல் முறைகேடுகளின் லிஸ்ட் அளவுக்கு கூட நீளமானதல்ல இந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் வாக்களித்தவர்களின் லிஸ்ட். எடுத்துக்காட்டாக இருபதாயிரம் ஈழத்தமிழர்கள் வாழும் பாரிஸ் நகரத்தில் இரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் வாக்களித்தவர்களின் தொகை வெறும் எண்ணூறு மட்டுமே. தேர்நதெடுக்கப்பட்ட முதலாவது உறுப்பினரான மகிந்தனுக்கு 547 வாக்குகளும் இரண்டாவது உறுப்பினரான சிவகுரு பாலசந்திரனுக்கு 165 வாக்குகளும் கிடைக்க அவர்கள் வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்தார்கள். 165 வாக்கோடு தமிழீழ அரசுக்கு ஒரு பிரதிநிதி. நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் பிரான்ஸில் 10 வீதத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளார்கள். இந்தப் பத்து வீதத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த கள்ள வாக்குகளும் அடக்கம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானமா? அல்லது நாடு கடந்த அரசா என்று புலிகளின் அடிப்பொடிகளுக்குள் நடந்த வெட்டுக் குத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாறி மாறித் தமக்குள்ளேயே துரோகிப் பட்டங்களை அவர்கள் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸில் க. வாசுதேவன் என்றொரு கவிஞர் இருக்கிறார். பெரிய கவிஞர். கவிதைக்காக கனடா தமிழ்த் தோட்டத்தின் விருதெல்லாம் பெற்றவர். விடுதலைப் புலிகளின் புகழ்பாடிக் கவிஞரான அவர் சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு புலிகள் புகழ்பாடிக் கவிஞரான கி. பி. அரவிந்தன் நடத்திய ‘அப்பால் தமிழ்’ என்ற இணையத்தில் ‘துரோகத்தின் பரிசு’ என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். துரோகிகளைக் கொல்ல வேண்டும் என்பது அவரது கட்டுரையின் சாரம். கவிஞரின் கருத்தை நடைமுறைப்படுத்தினால் இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் முழுப் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கொல்லப்பட வேண்டும். ஏனெனில் புலிகளினது அணிகள் ஒருவர்மீது மற்றவர் வைக்கும் துரோகிக் குற்றச்சாட்டிலிருந்து எவருமே தப்பிக்கவிலை. நெடியவனை ஏற்றுக்கொள்பவர்கள் உருத்திரகுமாரன் கும்பலுக்கு துரோகிகள். உருத்திரகுமாரனை ஏற்றுக்கொண்டவர்கள் நெடியவன் கும்பலுக்குத் துரோகிகள். குமரன் பத்மநாதன் துரோகி! ராம் துரோகி! கி.பி. அரவிந்தன் துரோகி! நெடியவன் துரோகி! சிவாஜிலிங்கம் துரோகி! தொல் திருமாவளவன் துரோகி!! எல்லாவிதமான அரசியல் முரண்களையும் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டிக் கொன்றொழிப்பதின் மூலம் தீர்த்து வைத்த புலிகளின் அரசியல் இன்று அவர்களையே பழிவாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குத்துவெட்டுக்குள்தான் நாடு கடந்த தமிழீழ அரசு இவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சரி, நாடு கடந்த தமிழீழ அரசின் வேலைத் திட்டம் என்ன என்றால் எவரிடமும் திட்டவட்டமான பதிலில்லை. உருத்திரகுமாரனோ இராசதந்திரரீதியில் செயற்படுவது என்கிறார். அதுவென்ன இராசதந்திரம் எனக் கேட்டால் அதற்குப் பதில் கிடையாது. இவர்களின் இராசதந்திரம் முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்த பேரழிவின் இரத்த வெடில் மறையும் முன்பே மறுபடியும் வெட்கமில்லாமல் இராசதந்திரம் என்று பிதற்றத்தொடங்கியிருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.
புலிகள் அறிவித்த அதே தமிழீழப் பிரதேசம்தானா இவர்கள் இப்போது முன் வைக்கும் தமிழீழம்? அதை அடைவதற்கான உங்களது வேலைத்திட்டம் என்ன? அப்படியானால் அந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் நிலையென்ன? உங்கள் அரசின் அரசியல் பண்பென்ன? திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? தமிழ் சமூகத்தின் முதன்மை முரண்பாடான சாதியம் குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? என்று ஆயிரம் கேள்விகளுள்ளன. இவை குறித்தெல்லாம் நாடு கடந்த அரசாங்கத்தினர் பேசுவதில்லை. சன்னி பிடித்தவர்கள் மாதிரி இராசதந்திர நகர்வு என்று ஆள்மாறி ஆள்மாறிப் பிதற்றிக்கொண்டுள்ளார்கள்.
நடந்துகொண்டிருப்பது ஊடும் பாவுமாக ஆயிரம் பிரச்சினைப்பாடுகளைக்கொண்ட இனமுரண் அரசியல். பிரச்சினையில் உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளும் ஏதோவொருவிதத்தில் தலையைப் போட்டுள்ளன. அந்நிய மூலதனமும் பன்னாட்டு நிறுவனங்களும் இலங்கை அரசின் இயங்குதிசையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பாத்திரங்களை வகிக்கின்றன. சர்வதேச அரசுகளிடம் பெருமளவு ஆதரவைப் பெற்ற சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மிருக பலத்துடன் இருக்கிறார். இதற்குள் உருத்திரகுமாரனும் ஈழநாடு பாலச்சந்திரனும் என்ன இராசதந்திரத்தை நிகழ்த்தப் போகிறார்கள்? ராஜபக்சவை சவால் செய்ய இவர்களிடம் என்ன அரசியல் வேலைத்திட்டம் உள்ளது? அமெரிக்கா அதிபருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் ‘பெட்டிசம்’ அனுப்புவதெல்லாம் ஒரு இராசதந்திரமா என்ன? இவர்களின் தந்திரத்தைப் பரிசோதிப்பதற்கு இது சீட்டு விளையாட்டல்ல. இது ஒரு இனத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் தனது கால்களைப் புகலிடத்தில் ஆழ ஊன்றிவிட்டது. சரிபாதித் தொகையினர் புலம் பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்க மறுபாதித் தொகையினர் குடியுரிமை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஈழத்து அரசியல்மீது இணையத்தில் செய்திகளைப் படிப்பது என்பதைத் தாண்டி வேறெந்த ஈடுபாடும் கிடையாது. அரசியல் ஈடுபாடுள்ளவர்களில் மிகப் பெரும்பகுதியினர் தமிழ்த் தேசிய உணர்வால் உந்தப்பட்டிருப்பவர்களே தவிர இவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட அணிகள் கிடையாது. இவர்கள் நெஞ்சார மனமுருகி வடிக்கும் கண்ணீருக்கு தார்மீகப் பெறுமதி மட்டுமேயுள்ளது. அரசியல்ரீதியாக இவர்கள் திறனற்றவர்கள். இவர்கள் தமது குற்ற உணர்ச்சியைத் தணிக்க எடுக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகள் ஈழத்தில் பாரம் சுமக்கும் மக்களை மேலும் அழுந்தவே வழிவகுப்பவை.
நாடு கடந்த அரசால் தமிழ் மக்களுக்கு எதுவும் விடியப்போவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. எதையாவது செய்ய வேண்டுமென்ற ஆவலாதியில் மிகச் சிறுபகுதி மக்கள் நாடு கடந்த அரசுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நாடு கடந்த அரசு என்ற நாடகத்தை அரங்கேற்றுபவர்களுக்குத் திட்டவட்டமான நலன்களுள்ளன. அவை பொருளியல் மற்றும் சமூக மதிப்பு சார்ந்த நலன்கள். இவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கப்போகிறவர்கள் ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் மட்டுமே.
“புலிகளுக்கு எதிரான முதற்கட்டப் போர் முள்ளிவாய்க்காலில் முடிந்துவிட்டாலும் அடுத்தகட்டப் போரை புலம் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது” என்கிறார் கோத்தபய ராஜபக்ச. இங்கே வெறும் விளையாட்டுக்கு நடத்தப்படும் நாடு கடந்த அரசு நாடகத்தை ஒரு காரணமாக வைத்து மேலும் ஈழத்தில் அடக்குமுறைச் சட்டங்களை வலுப்படுத்தத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. வெளிநாட்டிலுள்ள கொஞ்சப் பேரின் கௌரவ மயிருக்காக சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான போராளிகள் காலம் முழுதும் சிறையிலேயே கிடக்க வேண்டியிருக்கும்.
போராட்டங்களை நடத்தினால் அரசு அடக்குமுறையை அதிகரிப்பது இயல்புதானே, அதற்காக போராட்டத்தை விட்டுவிட முடியுமா என ஒருவர் கேட்கலாம். இல்லை விட்டுவிட முடியாது. கண்டிப்பாக போராட வேண்டும். அதற்கான விளைவைப் போராடுபவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடகம் ஒரு போராட்டம் கிடையாது. இது வெறும் ஏமாற்று வித்தை. இதன் விளைவுகள் இந்த நாடு கடந்த அரசுக்காரர்களை நேரடியாகப் பாதிக்கப் போவதுமில்லை. விளைவுகளை ஈழத்தில் வாழும் மக்களே சுமக்க நேரிடும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் நோகாத விருப்புகளை ஈழத்திலே மக்கள் செத்துச் சுமக்க முடியாது. உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பும் இயங்குதிசையும் அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு உறுதுணை செய்வது மட்டுமே உங்களது வேலை. நீங்கள் உறுதுணை நிற்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களிற்கு உபத்திரமாய் இராதீர்கள். உங்களுக்கு போராட்டம் என்பது இடது கையில் கொக்கோ கோலாவுடனும் வலதுகையில் சாண்ட்விச்சுடனுமான ஒரு மாலை நேர ஒன்றுகூடல். நந்திக் கடலின் கரைமுழுதும் மார்பில் ஆமி சுட முதுகில் புலி சுட போராட்டத்தை வாழ்ந்து பார்த்தவர்களிற்கும் தங்களது மழலைகளை இராணுவத்திடமும் புலிகளிடமும் பறிகொடுத்த தாய்மார்களுக்கும் நீங்கள் அரசியல் பிரதிநிதிகளல்ல, வழிகாட்டிகளுமல்ல.
நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வின் சிறப்புப் பிரதிநிதி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி க்ளார்க் என்பதிலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். புலிகளின் அத்தனை பாஸிசச் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்திவந்த பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் நாடு கடந்த அரசுக்கான மதியுரைஞர்கள். கடந்த முப்பது வருட அழிவுகளிலிருந்து நமது நாடு கடந்த அரசுக்காரர்கள் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பிறகும், பிறகும் அவர்கள் வல்லாதிக்க நாடுகளின் தொங்குசதைகளாகவே கிடக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அழிவுகளிலிருந்து நமது மக்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும். புலிகள் பாணியிலான வலதுசாரி அரசியலோ மாற்றுத் தரப்புகளைச் செவிமடுக்காத அரசியலோ நமது மக்களுக்கு மேலும் மேலும் அழிவையே உண்டுபண்ணும்.
பெயருக்காவது ஒரு அரசு, ஒரு மாநிலம், ஒரு முனிஸபலிட்டி எங்கேயாவது இதுவரை நாடு கடந்த அரசுக்கு நல்லெண்ண சமிக்ஞை காட்டியுள்ளதா? நாடு கடந்த அரசாங்கம் அங்கீகாரத்தைப் பெறும் என்று எந்த நம்பிக்கையில் மக்களின் பணத்தில் இந்தக் கூத்துகள் அரங்கேறுகின்றன? ‘எங்களுக்காகத் தலைவர் சிந்திக்கிறார்’ என்று மூட நம்பிக்கையில் அழுந்திய காலங்கள் போய் எங்களுக்காக உருத்திரகுமாரன் அண்ணா சிந்திக்கிறார் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன் கேட்டுக் கேள்வியில்லாமல் அடங்குவதாக இனிக் காலம் அமையக் கூடாது.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டவுடன் சர்வதேசமெங்கும் சிதறிக்கிடந்த புலிகளின் பில்லியன் கணக்கான சொத்துக்களைக் கைப்பற்றவும் புலிகள் இருக்கும்வரை அவர்களின் பெயரால் மக்களிடையே அனுபவித்துவந்த சமூக மதிப்பைக் காப்பாற்றவும் புலிகள் இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு அரசியல் சக்திகள் தலையெடுக்காமல் செய்யவும் நடத்தப்படும் நாடகமே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு. எனது அப்பா ஆரம்பித்த பூனைப்படை கிறுக்குத்தனமான ஒரு செயலாயிருக்கலாம், ஆனால் உருத்திரகுமாரன் தலைமை தாங்கும் நாடு கடந்த தமிழீழ அரசு போல அது கபடச் செயலல்ல, கயமை வழியல்ல.
அடுத்தமுறை அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.