– ஷோபாசக்தி
1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள் வானொலியில் செய்திகளை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தேடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு கிழமைக்குப் பின்பு கட்டிய துணியுடன், இரத்தக் காயங்களுடன் கிராமத்திற்கு ஒருவர் பின் ஒருவராக வரத்தொடங்கினார்கள். சிலர் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை.
தப்பி வந்தவர்கள் சொல்லிய கதைகள் நெஞ்சைப் பதற வைத்தன. வீதிகளில் தமிழர்கள் சிங்கள இனவெறியார்களால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டதையும் உயிருடன் தீவைத்துக் கொழுத்தப்பட்டதையும் பெண்கள் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டதையும் வன்முறையாளர்களிற்குப் பொலிசாரே பாதுகாப்பாக இருந்ததையும் அவர்கள் கூடியிருந்த கிராமத்தினர் மத்தியிலிருந்து சாட்சியம் சொன்னார்கள். 1977ம் வருடப் படுகொலைகளையும் வன்செயல்களையும் விசாரிக்க நீதிபதி சன்சோனி தலைமையில் ஒரு விசாரணைக்குழு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசால் அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் நடந்த படுகொலைச் சம்பவங்களில் 300 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்த இனப்படுகொலைக்கு காவற்துறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வற்ற பேச்சுக்களும் அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட வதந்திகளுமே காரணமெனவும் நீதிபதி சன்சோனி அறிவித்தார். அரசு சார்பற்ற அமைப்புகள் திரட்டிய விபரங்களின்படி கொல்லப்பட்டவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமாயிருக்கலாம் எனத் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடு வழங்குமாறு சன்சோனி கொமிஷன் அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அரசு உதாசீனம் செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. ஆனால் நடந்து முடிந்த படுகொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா “போர் என்றால் போர், சமாதானமென்றால் சமாதானம்” என்று இனவெறி கொப்பளிக்கப் பகிரங்கமாச் சவால்விட்டார்.
1979 ஜுலை மாதம் இலங்கை நடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (P.T.A) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பிடியாணை இன்றியே ஒருவரைக் கைதுசெய்யவும் 18 மாதங்கள்வரை விசாரணையின்றி சிறையிலடைக்கவும் காவற்துறைக்கு அதிகாரத்தை வழங்கியது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு அய்ந்து வருடங்கள் முதல் ஆயுள்சிறைவரை தண்டனை விதிக்க இச்சட்டம் வழி செய்தது. இந்தச் சட்டம் பிரிவினையைக் கோரிய அல்லது பிரிவினையை நியாயப்படுத்தும் கருத்துகளையும் எழுத்துகளையும் பயங்கரவாதமென வரையறுத்தது.
இச்சட்டம் நிறைவேறிய அதே மாதத்தின் ஒரு அதிகாலையில் எங்கள் கிராமத்தையும் யாழ் நகரத்தையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தால் கிராமத்தினர் அச்சத்துடன் கொஞ்சத்தூரம் நடந்துபோய்ப் பார்த்தபோது இன்பமும் செல்வமும் கொலைசெய்யப்பட்டு இலந்தையடி எனச் சொல்லப்படும் பாலத்தின் ஓரத்திலே உருக்குலைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் வீசப்பட்டிருப்பதைக் கண்டனர். சிறுவர்களான எங்களை அந்தப் பகுதிக்குச் செல்லக் கிராமத்தவர்கள் அனுமதிக்கவில்லை. இன்பம் – செல்வம் கொலை குறித்துப் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருந்தோம். விஸ்வஜோதிரத்தினம் என்ற இன்பம் ஈழப் போராளிகளில் ஒருவர். யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுதலையானவர். அவரும் அவரது உறவினருமான செல்வமும் இலங்கைப் பொலிசாரால் கொலைசெய்யப்பட்டே பண்ணைப் பாலத்தின் ஓரத்தில் வீசப்பட்டனர்.
1981 மே மாதத்தின் இறுதி நாளன்று யாழ் நகரத்தில் இலங்கை அரசபடையினர் படுகொலைகளையும் வன்முறையையும் தொடக்கியபோது தேர்தல் பரப்புரை வேலைகளிற்காக யாழ்நகரில் தங்கியிருந்த பேர்பெற்ற இனவெறியர்களும் அமைச்சர்களுமான சிறில் மத்தியூ, காமினி திசநாயக்கா ஆகிய இருவரின் வழிகாட்டலில் அந்த வன்முறை தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. தேர்தல் வேலைகளிற்காகத் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு துரையப்பா விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்த இனவாதக் காடையர்களும் பொலிசாருமாக யாழ் நகரத்தை எரியூட்டினர். நகரத்தின் மத்தியிலிருந்த திருவள்ளுவர், சோமசுந்தரப்புலவர், அவ்வையார்,காந்தியார் சிலைகளுடன் யாழ் முற்றவெளியிலிருந்த தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் நினைவாக நிறுவப்பட்டிருந்த தூபியும் உடைத்து நொருக்கப்பட்டன. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு முற்றாக எரியூட்டப்பட யோகேஸ்வரன் மயிரிழையில் கொலைஞர்களிடமிருந்து தப்பித்தார். தமிழர்களின் வீடுகள், கடைகள் இவற்றுடன் நாச்சிமார் கோயில், யாழ் கூட்டுறவு நிலையம், பஸ்நிலையம், 97 000 நூல்களுடன் பெருமை வாய்ந்த யாழ் பொதுநூலகமும் இனவெறியர்களால் எரியூட்டப்பட்டன. நாங்கள் ஒட்டுமொத்தக் கிராமமும் கடற்கரையில் கூடியிருந்தோம். கடலுக்கு அப்பால் யாழ் நகரம் எரிவதை எங்களால் பார்க்கக் கூடியதாயிருந்தது.
இதற்குப் பின் தமிழர்கள் கொல்லப்படாத நாளென்று ஒருநாளும் இருக்கவில்லை. வீதியோரங்களிலும் வீடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசபடையினரால் சுட்டுக்கொல்லப்படும் செய்திகளே தமிழ்ப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாயின. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு குருநகர், ஆனையிறவு, பனாகொட இராணுவ முகாம்களிலும் வெலிகட, மட்டக்களப்பு போன்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். 1983 யூலையில் மிகத் திட்டமிட்டவகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இரண்டாயிரத்துக்கும் மேலான தமிழர்கள் நாடு முழுவதும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்கள். வெலிகடச் சிறையில் சிறையதிகாரிகளின் ஆதரவோடு சிங்களக் கைதிகளால் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்தாயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதில் அரசுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. யூலை 27ம் தேதி தேசியத் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா நடைபெற்ற இனப்படுகொலை குறித்து எவ்விதமான வருத்தத்தையோ அனுதாபத்தையோ தெரிவிக்காமல் “நடந்து முடிந்தவை சிங்கள மக்களது இயல்பான மன உணர்வுகள்” என்றார். தொடர்ந்து 1983 ஓகஸ்ட் 4ம் தேதி இலங்கை அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச் சட்டத்தின்படி தனிநாடு கேட்டுப் போராடுவதும் அதற்கு ஆதரவு அளிப்பதும் கடும் தண்டனைக்குரிய குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கை அரசபடைகள் மிகத் திட்டமிட்ட வகையில் இனப்படுகொலைகளில் இறங்கின. வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களின் கிராமங்களும் நகரங்களும் அதிகாலைவேளைகளில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டன. இராணுவத்தால் தமிழ் மக்கள் கூட்டுப் படுகொலைகள் செய்யப்பட்டனர். இஸ்ரேலிய மொசாட் அமைப்பு “பத்துத் தமிழர்களைக் கொலை செய்யுங்கள், அதிலொரு போராளி இருப்பான்” என்று ஜே.ஆருக்கு தந்திரம் சொல்லிக் கொடுத்தாக அப்போது தமிழர்களிடம் ஒரு கதை உலாவியது. ஆனால் சுற்றிவளைப்பில் நூறு தமிழர்கள் கொல்லப்பட்டால் அதில் ஒருவர்கூடப் போராளியாக இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுவிட்டு பயங்கரவாதிகளைத் தங்களது படையினர்கள் அழித்ததாக அரசு சொல்லிக்கொண்டது. கைதுகள், கொலைகள் என்பவை 1985 காலப்பகுதியில் விமானக் குண்டுவீச்சுகளாகவும் எறிகணை வீச்சுக்களாகவும் வளர்ந்தன. பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் வைத்தியசாலைகளிலும் குண்டுகளை வீசிவிட்டு இலங்கை அரசு ‘பயங்கராவாதிகளின் இலக்குகளைத் தாங்கள் தாக்கி அழித்ததாகப்’ பொய்களைச் சொன்னது. இலங்கை அரசின் செய்திச் சேவையான ‘லங்கா புவத்’ தமிழ் மக்களால் ‘லங்கா பொறு’ ( இலங்கைப் பொய்) என்றழைக்கப்பட்டது.
1956ல் நடத்தப்பட்ட இக்கினியாகலப் படுகொலையிலிருந்து கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள்வரை ஈழத் தமிழர்கள் ஏராளமான உயிர்களை இழந்திருக்கிறார்கள். அந்தப் படுகொலைகளிலிருந்து தப்பிப் பிழைந்தவர்களில் கணிசமானோர் அவயங்களை இழந்திருக்கிறார்கள், பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், தொடர் சித்திரவதைகளாலும் அச்சத்தாலும் மனநோயாளர்களாகச் சிதைந்திருக்கிறார்கள். பெரிய நகரங்களிலும் சிறுநகரங்களிலும் மட்டுமல்லாமல் கிராமங்கள், எல்லையோரப் பகுதிகள், காட்டுப்புறங்கள், கடற்பரப்பு எனத் தமிழர்களின் நிலப்பரப்பு முழுவதும் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான கொலைகள் செய்திப் பத்திரிகைகளில் கூட இடம்பெறாமல் மறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட படுகொலைகளைத் தொகுத்து ஒரு இனப்படுகொலை ஆவண நூலை வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) உருவாக்கியுள்ளது. வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இந்தப் பணி பெறுமதி மிக்க வரலாற்றுப் பங்களிப்பாகும் ( தமிழினப் படுகொலைகள் 1956- 2008 : வெளியீடு/ மனிதம் வெளியீட்டாளர்).
இப்பணிக்காகக் கடுமையாக உழைத்துத் தரவுகளைத் திரட்டிய வடகிழக்கு புள்ளிவிபர மையமும் (SNE) தரவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வெளியிட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகமும் விடுதலைப் புலிகளின் அனுசரணனையுடனும் வழிகாட்டலிலும் இயங்கிவந்த அமைப்புகளாகும். வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் தலைவரான பாதிரியார் மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் 20 ஏப்ரல் 2008ல் இலங்கை அரசபடையினரால் கொல்லப்பட்டார். 2005ல் கருணா அணியினரால் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திர நேருவும், ஜோசப் பரராஜசிங்கமும் வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பிரதிநிதிகளாவுமிருந்தார்கள்.
வடகிழக்கு புள்ளிவிபர மையம் 2003ல் இனப்படுகொலைகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் பணியை ஆரம்பித்தது. மையத்தின் பணியாளர்களுடன் உயர்தர வகுப்பு மாணவர்களும் யாழ்ப்பாண / கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் தகவல்களைத் திரட்டி மையத்தினருக்கு உறுதுணை செய்துள்ளார்கள். அவ்வாறாக அவர்கள் கிராமம் கிராமமாக வீடு வீடாக அலைந்து திரட்டிய விபரங்கள் யாவும் வன்னியில் சேகரித்து வைக்கப்பட்டபோது அவை மொத்தமாக 2009ல் விமானக் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன. எனினும் வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் அந்தத் தரவுகளை தனது இணையத்தளத்தில் பாதுகாத்து வைத்திருந்தது. இணையத்தளத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட அறிக்கைகளை அடியொற்றி இந்நூல் உருவாக்கப்பட்டள்ளது.
இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றைக் குறித்துப் பேசுகையில் 1958ம் வருடப் படுகொலைகளிலிருந்து ஆரம்பித்துப் பேசுவதே வழக்கமாயிருக்கிறது. ஆனால் தமிழர்கள்மீது சிங்கள இனவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முதலாவது இனப்படுகொலைச் சம்பவமாக இக்கினியாகலப் படுகொலையை ஆதாரங்களுடன் இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைக்கான ஆதாரத் தகவல்கள் அக்கால கட்டத்தில் இலங்கையில் தங்கியிருந்த பிரபல பத்திரிகையாளரான டாசி வித்தாச்சியால் எழுதப்பட்ட ‘அவசரகாலச் சட்டம்- 58’ என்ற நூலிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களில் ஒரு பகுதியினரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கினியாக்கல என்ற இடத்திலிருந்த கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கரும்புத் தொழிற்சாலையில் வேலைசெய்துவந்த நூற்றைம்பது வரையிலான தமிழ்த் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களத் தொழிலாளர்களால் வெட்டப்பட்டும் தீமூட்டியும் கொலைசெய்யப்பட்டார்கள். இதுவே சுதந்திரத்திற்குப் பின்பு பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவமாகும்.
இதற்கு இரண்டு வருடங்கள் கழித்து நடந்த 1958ம் வருடப் படுகொலைகள் குறித்து இந்த நூல் அதிகம் அறியப்படாத மேயர் செனிவிரட்ண குறித்த ஒரு தகவலை ஆவணப்படுத்தியிருக்கிறது. “பண்டாரநாயக்கா, பண்டா- செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறிந்ததைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு மே மாதம் 24,25,26 ஆகிய திகதிகளில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வவுனியா மாநாட்டிற்கு வருகை தந்துகொண்டிருந்த மட்டு – அம்பாறையைச் சேர்ந்த தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் பயணம் செய்த தொடருந்து பொலநறுவை மாவட்டத்தில் கிங்குராகொட என்னும் தொடருந்து நிலையத்தில் வழிமறிக்கப்பட்டு அதிலிருந்த தொண்டர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார்கள். இதே காலப்பகுதியில் நுவரெலியா மாநாகரசபையின் மேயர் செனிவிரட்ண மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வைத்துத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டார். பிரதமராக இருந்த பண்டாரநாயக்கா இதைப் பெரிதுபடுத்தி இலங்கை வானொலியில் பரப்புரை செய்தார். இதைத் தொடர்ந்து தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வெடித்தது” (பக்: 04).
தமிழர்கள் ஆயுதப் போராட்டம் குறித்தெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பாகவே தமிழர்கள்மீது இரண்டு பாரிய இனப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்த 159 கூட்டுப் படுகொலை நிகழ்வுகள் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுப் படுகொலைகளைத் தவிர்த்து நடந்த தனிநபர் கொலைகளோ சிறுதொகையினர் கொல்லப்பட்ட சம்பவங்களோ இந்நூலில் ஆவணப்படுத்தப்படவில்லை. கூட்டுப் படுகொலைகள் தொடர்பான பதிவுகளும் முற்றுமுழுதானவை அல்லவென்றும் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் ஏராளமான கூட்டுப் படுகொலைச் சம்பவங்கள் எஞ்சியுள்ளன என்றும் தொகுப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக 2009ல் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலை குறித்து ஒரு பொதுவான சித்திரத்தைத்தான் தொகுப்பாளர்களால் தரமுடிந்திருக்கிறதே அல்லாமல் துல்லியமான விபரங்களை அவர்களால் திரட்டித் தரமுடியவில்லை. அவ்வாறான ஒரு வேலையைச் செய்வதற்கு இன்றைய இலங்கைச் சூழல் அவர்களை அனுமதிக்கப்போவதுமில்லை.
எனினும் கிடைத்த வளங்களை உபயோகித்துத் தொகுப்பாளர்கள் தமது பணியினை நிறைவாகச் செய்திருக்கிறார்கள் என நூலை வாசிக்கும்போது உணரக் கூடியதாயிருக்கிறது. நூலில் குறிப்பிடப்படும் ‘குமுதினிப் படகுப் படுகொலை’ (பக்:50), ‘மண்டைதீவுக் கடல் படுகொலை’ (பக்: 93) ஆகிய இரு சம்பவங்களின்போதும் நான் அங்கே சாட்சியமாக நின்றிருக்கிறேன். எனது சொந்தக் கிராமமான அல்லைப்பிட்டியில் நிகழ்ந்த மூன்று கூட்டுப்படுகொலைச் சம்பவங்கள் குறித்து (பக்கங்கள்: 162,297,311) நான் தனிப்பட்ட முறையில் துல்லியமாக விபரங்களைத் திரட்டி வைத்துள்ளேன். அந்தப் படுகொலைகள் குறித்துத் தொகுப்புளார்கள் மிகச் சரியாகவே எந்த விபரங்களும் தவறுப்படாமல் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இது என்னளவில் நூலின் நம்பகத்தன்மைக்குச் சாட்சியமாகும்.
நூலின் பின்னிணைப்பாக யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தின் வாக்குமூலம் பதிவாகியுள்ளது. நவாலி இராயப்பர் ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 152 மக்கள் கொல்லப்பட்டு 60 மக்கள் காயமடைந்தது குறித்தும் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் குண்டுகளை வீசி 13 பொதுமக்களை இலங்கைப் படையினர் கொன்றதைக் குறித்தும் அவர் சொல்கையில் “போர்க்காலங்களிலே எவ்விதமாக மக்கள், இராணுவத்தினர், போராளிகள் நடந்துகொள்ள வேண்டுமென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அது ஜெனிவாவிலே எல்லோராலும் (நாடுகளாலும்) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது மக்கள் கூடும் பொது இடங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்களெனப் பொதுவான கட்டடங்கள் மீது குண்டுத் தாக்கதல் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகும். பொதுவாக இராணுவத்தினர் இதை அனுசரிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இலங்கைத் தீவில் போர் நிகழும்போது இவற்றைப் பற்றியெல்லாம் இராணுவம் அக்கறைப்பட்டதாக இல்லை. எத்தனை ஆலயங்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவம் குண்டுகளை வீசிச் சுக்குநூறாக இடித்தது மட்டுமல்லாமல் அதில் தஞ்சங்கோரிவந்த மக்களும் மரிக்கவேண்டியேற்பட்டது” என்கிறார் ஆயர் (பக்: 356).
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இனப் படுகொலைகளைத் தொகுப்பாகப் படிக்கையில் நெஞ்சு பதைபதைக்கிறது. வடக்கை விடக் கிழக்கிலேயே அதிகமான கூட்டுப் படுகொலைகளை இலங்கைப் படையினர் செய்து முடித்திருக்கிறார்கள். வந்தாறுமூலை, சத்ருகொண்டான், ஏறாவூர், கிளிவெட்டி, நிலாவெளி, மூதூர் கடற்கரைச்சேனை, கொக்கட்டிச்சோலை,சித்தாண்டி, பொத்துவில் படுகொலைகள் என நூல் முழுதும் கிழக்கின் இரத்தம் உறைந்து கிடக்கிறது. பொத்துவில் இரத்தன்குளத்தில் 17.09.2007ல் பத்து இஸ்லாமிய இளைஞர்கள் ஸ்ரீலங்கா அதிரடிப் படையினரால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட சம்பவம் இந்நூலின் 317வது பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
1956ல் இக்கினியாகலயில் ஆரம்பித்து இன்றுவரை இலங்கை அரசால் ஈழத்தமிழர்கள்மீது, முஸ்லீம்கள்மீது, மலையகத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து துல்லியாமான ஆவணங்கள் ஏதும் நம்மிடமில்லை. முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தின்போது இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம்வரையிலான பொதுமக்கள் கொல்லப்படட்டுள்ளார்கள் என்று வெவ்வேறு தகவல்கள் தெரிவித்தபோதும் துல்லியமான விபரங்கள் ஏதுமில்லை. இத்தகையை படுகொலைகள் காலப்போக்கில் மறைக்கப்படடுவிடாமலும் திரிக்கப்பட்டுவிடாமலிருக்கவும் இந்நூல் ஒருபகுதி உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்நூல் மிக முக்கியமான வரலாற்று ஆவணம்.
1987 – 1990 காலப்பகுதிகளில் இந்திய அமைதிப் படையினரின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பிரம்படி ஒழுங்கைப் படுகொலை, யாழ் பொது வைத்தியசாலைக்குள் நிகழ்த்தப்பட்ட படுகொலை போன்ற கூட்டுப்படுகொலைகளையும் சிங்கள இனவாதிகளால் மலையக மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் ஆவணப்படுத்தாதது மட்டுமல்லாமல் அவைகுறித்து தகவலாகக் கூட எதையும் பேசாததை இந்நூலின் முக்கியமான குறைபாடாகச் சொல்லலாம்.
55 வருடங்களாக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் படுகொலைகள்மீது, தாக்குதல்களின்மீது, கொள்ளையிடல்களின்மீது, பாலியல் சித்திரவதைகளின்மீது கைதடி மாணவி கிருஷாந்தி வழக்கு நீங்கலாக வேறெந்தச் சம்பவத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில்லை. சிறிலங்காக் காவற்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டடிருந்த தமிழ்க் கைதிகள் வெலிகடயிலும் (1983) பிந்துனுவேவவிலும் (2000) கொல்லப்பட்டபோதும் சம்பவங்கள் குறித்துத் தெளிவான சாட்சியங்கள் இருந்தபோதும் குற்றவாளிகளில் ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை.
360 பக்கங்களாலான இந்த நூலைப் படித்து முடிக்கையில் நூலின் முன்னுரையில் எலின் சாந்தர் குறிப்பிடும் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன: “இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் விடுபடாமலும் பாதிக்கப்படடோருக்கு உரிய மரியாதையுடனும் வணக்கத்துடனும் குற்றம் புரிந்தும் தண்டிக்கப்படாமல் இருப்போரின் மீதான ஆத்திரத்துடனும் வாசிக்கப்படல் வேண்டும்”.
( www.lumpini.in -ல் வெளியாகிய கட்டுரை )
1 thought on “இனப்படுகொலை ஆவணம்”
Comments are closed.