அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்

கட்டுரைகள் நேர்காணல்கள்

நேர்காணல்:அ.தேவதாசன்

தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது.
-ஷோபாசக்தி

  • ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் தேர்தல் அறிக்கை மிக எளிமையாக எழுதப்பட்ட ஒரு விண்ணப்பம் போலவே இருக்கிறது. இன்றைய தலித் அரசியலின் இயங்குதிசையையும் சமூகநீதிக் கோரிக்கைகளையும் மகாசபை புரிந்து கொண்டதற்கான தடயங்கள் அறிக்கையில் இல்லையே?

‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யும் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யும் அரசியல் வழிமுறைகளில் வேறுவேறானவை என்பதை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதி ஒழிப்புத்தான் இரு அமைப்புகளின் பொது இலக்கு எனினும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் அம்பேத்கரியலிலும் பெரியாரியலிலும் வேர்கொண்டது. இந்துமத அழிப்பும், சமூகநீதியும், கலாசார புரட்சியும் அதன் முதன்மைப் போராட்ட இலக்குகள். ஆனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மரபு மார்க்ஸியத்தில் தனது வேரைக் கொண்டுள்ளது. சாதியொழிப்புக்கு மரபு மார்க்ஸியத்தால் வழங்கப்பட்ட தீர்வுகளை மகாசபை கடந்து இன்றைய தலித் அரசியலை நோக்கி வராததற்கான நிலையை இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிகழ்ந்த யுத்தமும் யுத்தம் சார்ந்த அரசியலையும் வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை இயக்கங்கள் தலையெடுத்ததற்குப் பின்னாக ஈழத்து அரசியலில் சனநாய மறுப்பு எனபது சர்வ சாதாரணமாகிப் போனது. ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களைத் தவிர வேறெந்த அமைப்புகளும் அங்கே இயங்க முடியாத நிலையிருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் அப்போதைய புலிகளின் தளபதி கிட்டுவால் தடைசெய்யப்பட்டது. தோழர் எம்.சி.சுப்பிரமணியத்தின் வீட்டின் ஒருபகுதியில் இயங்கிக்கொண்டிருந்த மகாசபையின் அலுவலகம் புலிகளால் கொள்ளையிடப்பட்டு மகாசபையின் பெறுமதிமிக்க ஆவணங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையற்ற துப்பாக்கிகளின் முன்பு அந்தச் சாதியொழிப்பு இயக்கம் மவுனமாக்கப்பட்டது.

அதன்பின்பு ஈழத்தில் சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை மட்டுமல்ல சுதந்திர வாசிப்பைக் கூடப் புலிகள் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த முப்பது வருடங்களில் உலகளாவியரீதியில் மார்க்ஸியத்திலும் தலித் அரசியலிலும் நிகழ்ந்த மாற்றங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் எங்களைப் போன்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டித் தமிழகத்தில் புதிய அலையாய் எழுந்த தலித் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து நாங்கள் உத்வேகத்தைப் பெற்றோம். இதற்கெல்லாம் ஈழத்தில் வாய்ப்பிருக்கவில்லை. அங்கே அன்றாடம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்தான் அவர்களிற்கான அரசியலாயிருந்தது.

மே பதினெட்டுக்குப் பிறகு புலிகளின் ஆதிக்கம் தகர்ந்த சூழலில் மீண்டும் மகாசபை இயங்க முற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மகாசபை மீண்டும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு அமைப்பு வடிவமாக்கப்பட்டது. மகாசபையின் உறுப்பினர்கள் தங்களது முன்னைய போராட்ட அனுபவங்கள் என்ற பலத்துடனும் யுத்தத்தால் சிதைக்கப்பட்ட அரசியல் கலாசாரத்தின் சுமையுடனும்தான் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

சனநாயகம் வேண்டும் என வாயளவில் பேசிக்கொண்டிருந்தால் போதாது. சனநாயகச் செயற்பாடுகளில் பங்கெடுத்து சனநாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. இன்றிருக்கும் சமூக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க சனநாயகரீதியிலான தேர்தலைவிட வேறெந்த வடிவமும் லாயக்கற்றவை என்று கருதுகிறோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெரும் கட்சிகள் தலித்துகளிற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தங்களது வேட்பாளர்கள் தெரிவில் வழங்குவதேயில்லை. ஒரு இராசலிங்கம், ஒரு சிவநேசன், இப்போது ஒரு இராஜேந்திரம் என்றளவிலேயே அவர்கள் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். இன்று யாழ் மாவட்ட சனத்தொகையில் தலித்துகள் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரேயொரு தலித் வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது.

எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்ச்சைக் குழுவாகப் போட்டியிட சிறுபானமைத் தமிழர் மகாசபை முடிவெடுத்தது. இங்கே சில ஆதிக்க சாதி அரசியல் விமர்சகர்கள் ‘ஏற்கனவே அறுபத்தைந்து கட்சியிருக்கிறது நீங்கள் எதற்குப் புதிதாகக் கட்சி தொடங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அறுபத்தைந்து கட்சியிருந்தாலும் அறுபத்தைந்துக்கும் அவர்களே தலைவர்களாகயிருக்கிறார்கள். அறுபத்தாறாவது கட்சியாவது தலித்துகளின் தலைமையில் இருக்கட்டும். தலித் மக்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படட்டும்.

  • EPRLF, EPDP ஆகிய இரு கட்சிகளும் தலித் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்களல்லவா?

மிக்க நன்றி. ஆனால் அந்தக் கட்சிகளது முதன்மையான இலக்கு சாதியொழிப்போ தலித் மக்களின் முன்னேற்றமோ கிடையாது. அதற்காக அவர்களிடம் எந்தக் கோட்பாட்டுப் புரிதலோ ஆழமான வேலைத் திட்டமோ கிடையாது. எனவேதான் தலித் மக்களின் முன்னேற்றத்தையும் சாதியொழிப்பையும் முதன்மை இலக்குகளாக வரித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனித்துநின்று தேர்தலைச் சந்திக்கிறது.

  • சாதியொழிப்பை பாராளுமன்ற அரசியல் ஊடாகச் செய்துவிடலாம் எனக் கருதுகிறீர்களா?

அவ்வாறான மூடநம்பிக்கையை எங்களைப் போன்ற பகுத்தறிவு இயக்கத்திடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் எங்களது பிரச்சினைகளை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லமுடியும் என எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மூலம் தலித் மக்களின் நலனிற்கான புதிய திட்டங்களை வரைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசு தொகுதி மேம்பாட்டுக்கு என வழங்கப்படும் நிதி சிந்தாதல் சிதறாமல் மக்கள் நலத் திட்டங்களில் செலவிடப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நாடாளுமன்ற அதிகாரத்தில் எங்களுக்குரிய பங்கை நாங்கள் கோருகிறோம். நாங்கள் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் எனச் சொல்லிவிட்டுத் தேர்தல் புறக்கணிப்புச் செய்தால் என்ன நடக்கும்? எல்லா இடங்களையும் ஆதிக்கசாதியினரே கைப்பற்றுவார்கள். இதை அனுமதிக்க இனியும் தலித் மக்கள் தயாரில்லை.

  • தலித் மக்களை அரசியல்ரீதியாக ஒன்றிணைப்பதற்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் நாடாளுமன்ற நுழைவு உதவலாம் எனக் கருதுகிறீர்களா?

நிச்சயமாக! மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து கொடுப்பதும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான ஆகச் சிறந்த வழி. தத்துவம் கதைப்பதைக் காட்டிலும் செயல்களே மக்களை அணிதிரட்டும் வல்லமையைப் பெற்றவை. எங்களது இந்தத் தேர்தல் அரசியல் முன்னெடுப்புகள் – தேர்தல் வெற்றி தோல்விகளிற்கு அப்பால் – தலித் சமூகத்திற்குள் ஒரு உரையாடலையும் அதன்வழி விழிப்புணர்வையும் தோற்றுவித்திருக்கிறது. எனினும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது.

  • ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யை மகிந்த ராஜபக்சதான் தூண்டிவிட்டு நிதியும் வழங்கித் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளதே?

அது விமர்சனமல்ல அருவருப்பான வதந்தி. அயோக்கியத்தனத்துடன் ஆதிக்க சாதியினரால் பரப்புரை செய்யப்படும் வதந்தியிது. கணனி மார்க்ஸியவாதிகள் மட்டுமல்லாமல் எங்களைத் தோற்கடிப்பதற்காகத் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ போன்ற ஆதிக்க சாதிக் கட்சியினரும் இவ்வாறான பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றனர். தமது குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தைத் தன்னும் இந்த வதந்தி மன்னர்களால் வழங்க முடியுமா? ஆனால் இந்தப் பரப்புரைகளை மக்கள் நம்பத் தயாரில்லை. அவர்கள் கம்யூட்டரை நம்புவதைவிட தங்களோடு களத்தில் கூடவேயிருக்கும் தோழர்களைத்தான் நம்புவார்கள். புதிய ஜனநாயக் கட்சியோ, சோசலிச சமத்துவக் கட்சியோ தேர்தலில் நிற்கும்போது எதிர்கொள்ளாத இந்தக் குற்றச்சாட்டை இவர்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மீது சுமத்துவதை என்னவென்பது. இதை ஆதிக்கசாதித் தந்திரம் அல்லது சாதித் துவேஷம் என்றே சொல்வேன்.

நாங்கள் தேர்தல் செலவுகளுக்கே திண்டாடி விழி பிதுங்கி நிற்கிறோம். இந்த இலட்சணத்தில் எங்களிற்கு ராஜபக்ச பணம் வழங்குகிறார் எனப் பரப்பப்படும் வதந்திக்கு ஒரு துயரமான புன்னகை மட்டுமே எனது பதிலாயிருக்கும். நாங்கள் தேர்தல் செலவுகளிற்கு வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களிலேயே தங்கி நிற்கிறோம். தலித் அரசியல் மீது அக்கறைகொண்ட தலித் அல்லாதவர்கள் சிலரும் உதவினார்கள்.

எங்களது வேட்பாளர்கள் தொழிலதிபர்களோ நிலப்பிரபுக்களோ கிடையாது. எங்களது பன்னிரெண்டு வேட்பாளர்களிடம் ஒருவரிடம் மட்டுமே கணனி வசதி உள்ளது. எங்களது கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி மட்டுமல்ல ஏழைகளின் கட்சியும்தான்.

  • சிறுபான்மைத் தமிழர் மகாசபை தலித்துகளின் உட்பிரிவுகளையும் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துள்ளதா?

வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்தோம் என்பதைக் காட்டிலும் வேட்பாளர்களைக் கண்டுபிடித்தோம் என்பதே சரியானது. முதலில் தேர்தலில் நிற்பதற்குப் பலர் தயங்கினார்கள். தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே அவர்களை வேட்பாளர்களாக நிற்பதற்குச் சம்மதிக்க வைத்தோம். தலித் சமூகத்தின் உட்பிரிவுச் சாதியினர்கள் எல்லோரையும் முடிந்தளவிற்கு ஒன்றிணைத்துள்ளோம்.

  • சிறுபான்மைத் தமிழர் மகாசபை அறுபதுகளில் வீரியமாக இயங்கியது போல மறுபடியும் தீவிரமான சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கச் சாத்தியங்கள் உள்ளனவா?

உண்மையில் இப்போது சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனது பழைய உறுப்பினர்களுடனேயே இயங்கத் தொடங்கியிருக்கிறது. திரளான இளைஞர்கள் இன்னும் மகாசபைக்குள்ளே வரவில்லை. எனினும் எங்களது இந்தத் தேர்தல் பிரவேசமானது பரந்துபட்ட இளைஞர்களுடன் உரையாடல்களைத் தொடங்குவதற்கு எங்களிற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், மாணவர்களுடைய சக்தி ஒரு போராட்ட அமைப்பின் முதுகெலும்பு.

முன்னைய போராட்ட வழிகளின் போதாமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக சாதியத்தின் மூலவேரான இந்துமதத்தை மகாசபையோ, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமோ தங்களது முதன்மை எதிரியாக அடையாளப்படுத்தவில்லை. இந்துமத எதிர்ப்பு, கலாசார புரட்சி இவை இரண்டையும் முன்னிறுத்தி நாம் நமது இளைஞர்களைத் திரட்டவேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் பிற்போக்குத் தமிழ்த் தேசிய மாயையிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் தலித் பெண்ணிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. தலித்துகளிற்கான தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையுமே முப்பது வருடங்களாக அரசியல் கலாசாரமும் சனநாயமும் மறுக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்திற்குள்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்குள் சமூகம் அழுந்திக்கொண்டிருக்கிறது. எனினும் நமது கடும் உழைப்பும் தலித் மக்களின் பரம்பரை முதுசொமான போர்க்குணாம்சமும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை மறுபடியும் வீரியமான அமைப்பாகக் கட்டியெழுப்பும் என்றே நம்புகிறேன்.

  • இலங்கையைப் பொறுத்தவரை தலித் என்ற சொல்லே அந்நியமானது என்றொரு விமர்சனம் உள்ளதே?

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்கள் என்றால் இலங்கையிலுள்ள மார்க்சியர்கள் கூட பூசாரிக் கூட்டத்தைப் ‘பார்ப்பனர்கள்’ என்று சொல்லாமல் ‘பிராமணர்கள்’ எனச் சொல்வதைக் காணமுடியும். ‘ஏனெனில் பார்ப்பனர்கள் என்ற சொல் இலங்கை வழக்குக் கிடையாது’ என்பார்கள் மார்க்ஸியர்கள். அப்படியானால் பிராமணர்கள் என்பது மட்டும் யாழ்ப்பாணத்து வழக்கா? அது வடமொழிதானே. பார்ப்பனர்கள்தான் சுத்தமான தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்களில் காணப்படும் சொல். பெரியார் பார்ப்பனர்களைப் பிரமாணர்கள் என அழைப்பதை பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக வரையறுப்பார். ஏனெனில் நாம் அவர்களை பிராமணர் என்று சொன்னால் அது நம்மை நாமே இழிபிறவிகள் என்று ஏற்றுக்கொள்வதாக ஆகிவிடும். எனவே சொற்கள் வடக்கா கிழக்கா என்பதை விடுத்து அதனில் பொதிந்துள்ள அரசியலை அடையாளம் காண்பதே சரியானது.

இங்கே அய்ரோப்பாவில் நாங்கள் முதலிலே தலித் என்று சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால் இப்போது என்னவானது. தலித் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அதற்காக நாம் இடைவிடாது போராட வேண்டியிருந்தது. இதே போலத்தான் இலங்கையிலும் அந்தச் சொல் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போதே ஒருபகுதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மூத்த தலித் போராளியும் படைப்பாளியுமான தோழர் டொமினிக் ஜீவா போன்றவர்கள் தங்களைத் தலித் படைப்பாளிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். தலித் என்ற அடையாளம் தாழ்த்தப்பட்ட சாதியினரை உட்பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளம் என்ற புரிதலும் அந்த அடையாளம் பல்வேறு நிலப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் அடையாளமும் என்ற புரிதல் வரும்போது அனைத்து தலித் மக்களாலும் அந்த அடையாளம் முன்னிறுத்தப்படும்.

  • தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்துள்ளதே?

தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தேர்தல் அரசியல் சார்ந்த கட்சி கிடையாது. அது பெரியாரியலைப் பின்தொடரும் ஒரு சமூக இயக்கம். எல்லாவிதப் புனிதங்களையும் சமூக ஒழுங்குகளையும் பெரியார் சொன்னதுபோல தலைகீழாக்க வேண்டுமென்பது அதன் அரசியல் வழி. அதனாலேயே அது ஒட்டுமொத்த அதிகார சக்திகளால் தனிமைப்படுத்தப்படுகிறது. தலித் முன்னணி ஆரம்பித்தபோது அதைத் தமது அரசியல் விருப்புளுக்கேற்ப வளைத்துக்கொள்ளலாம் என முன்னணிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அமைப்புகள் தனிநபர்கள் எல்லோராலும் இப்போது முன்னணி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேர்தலில் நிற்கும் மகாசபைக்கு நாங்கள் ஆதரவை வழங்கியபோது ஆதிக்சாதி அறிவுஜீவிகளும் அமைப்புகளும் எங்கள்மீது அதிருப்தியைச் சொரிந்தார்கள்.

  • கடந்த சனாதிபதித் தேர்தலில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகிந்த ராஜபக்சவை ஆதரித்ததே?

அந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அய்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ராஜபக்சவா அல்லது அய்க்கிய தேசியக் கட்சியால் நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவா என்பதுதான் கேள்வி. அய்க்கிய தேசியக் கட்சி பச்சையான முதலாளியக் கட்சி என்பது நீங்கள் அறிந்ததே. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இடதுசாரியம் பேசும் முதலாளியக் கட்சிகளின் கூட்டுத்தான். எனினும் அய்க்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது நாட்டுக்கு மிகப்பெரும் தீமையையும் ராஜபக்சவின் வெற்றி மிதமான தீமையையும் கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்கச் சொன்னோம். இன்னொருபுறம் வரலாற்றுரீதியாகவே கம்யூனிஸ்டுகளும் தலித்துகளும் சுதந்திரக் கட்சியுடனேயே நின்றிருக்கிறார்கள். தமிழ் முதலாளிகளும் தமிழரசுக் கட்சியும் அய்க்கிய தேசியக் கட்சியுடனேயே நின்றிருக்கிறார்கள். இம்முறையும் அதுதான் நிகழ்ந்தது.

  • நடந்து முடிந்த இறுதி யுத்த நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் தமிழ்ப் பொதுமக்களை மகிந்தவின் அரசு கொன்றிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன. இன்றுவரை கைதுகளும் கடத்தல்களும் அரசால் செய்யப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் நீங்கள் பேசுவதில்லையே? நீங்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் விமர்சனங்கள் உள்ளனவே?

நாங்கள் ஒருபோதும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. நாங்கள் யுத்த நிறுத்தத்தையும் போரைப் பேச்சுவார்த்தைகளின் முலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையுமே வலியுறுத்தினோம். மகிந்த அரசின் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நாங்கள் நியாயப்படுத்தவுமில்லை. ஒரு இலங்கைக் குடிமகனாக இலங்கையின் இறையாண்மையில் அக்கறையுள்ளவனாக மகிந்தவின் அரசை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் மனிதவுரிமை என்ற பெயரிலும் அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரிலும் மேற்கு ஏகா திபத்தியங்களின் விருப்புகளிற்காகச் செயற்படுவது வேறு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இங்கு அரசு சாரா நிறுவனங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாமே அவற்றிற்கு நிதி வழங்கும் அரசுகள் சார்ந்த நிறுவனங்களே. இந்த நிறுவனங்கள் இலங்கையில் மனிதவுரிமைகள் குறித்துப் பேசுவது இலங்கையின் மக்கள் மீது கொண்ட அக்கறையிலிருந்து வருவதல்ல. தங்களை ஊட்டி வளர்க்கும் மேற்கு அரசுகளின் நலன்களிற்காகவே அவை இலங்கையில் தலையீடு செய்கின்றன. மேற்கு நாடுகளின் எதிர்ப்பாளனாக இருக்கும் மகிந்த ராஜபக்ச மீது மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை மேற்கு நாடுகளிற்குப் பணிய வைக்கும் முயற்சியையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.

  • உலகமயமாக்கலின் முழு ஆதரவாளராயும் நாட்டின் பொதுச் சொத்துகளை அந்நிய நிறுவனங்களிற்கு விற்றுத்தள்ளிக்கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவை நீங்கள் மேற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வது பொருத்தமாயில்லையே?

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகமயமாக்கல் சூழலில் ஒரு சே குவேராவிற்காக நீங்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம், ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன். இந்த உலகமயமாக்கல் சூழலில் முற்று முழுதான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் யாரையும் வரையறுத்துக் காட்டிவிட முடியாது. ஆனால் மேற்கு ஏகாதிபத்திய அணி, அதற்கு எதிரான அணி என இரு அணிகள் இருக்கின்றன. அய்க்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் முழுதும் இலங்கை மேற்கு ஏகாதிபத்திய ஆதரவு அணியிலிருந்தது. ஆனால் இப்போது இலங்கை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் மூன்றாமுலக நாடுகளின் அணியிலிருக்கிறது. சீனா, இந்தியா, வியட்நாம், லிபியா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம் இருக்கும் அணியில் இலங்கை இருக்கிறது.

  • இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதை முன்வைக்கிறீர்கள்?

இலங்கையின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு அதன் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள முதலாளிகளிடமிருந்து தமிழ் முதலாளிகளுக்கு மாற்றிக்கொடுக்கப்படும் அதிகாரக் கையளிப்பாக இருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ மற்றைய தமிழ்க் கட்சிகளோ ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரதிநிதிகளல்ல. அவர்கள் தமிழ் ஆதிக்க வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் மட்டுமே. சிங்களவர்களிடமிருந்து அதிகாரம் கைமாற்றப்பட வேண்டும் என்பது ஒரு எளிமையான கூற்று மட்டுமே. ஏனெனில் அதிகாரம் அரசின் கைகளில் மட்டுமே குவிந்திருக்கிறது அல்லாமல் கடைக்கோடி சிங்கள மக்களிடம் அது இருக்கவில்லை. தீவின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். இதை அரசியல் போராட்டத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

  • நாடு கடந்த அரசை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?

இந்த நாடு கடந்த அரசாங்கம் என்ற முனகல் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் கொள்ளையடிப்பதற்காகக் கண்டுபிடித்த ஒரு திட்டம். அவர்கள் தமிழ்த் தேசியவாதத்தை அணையவிடாமல் காப்பாற்றுவதற்கு இந்தத் திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் புலம் பெயர்ந்த மக்களிடம் பணச் சுண்டலை மட்டுமல்லாமல் கேவலமான உணர்வுச் சுரண்டலையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முன்னைய மாவீரர் தின உரைகளையும் இன்றைய தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் அறிக்கைகளையும் பார்த்தீர்களானால் அவை புலம் பெயர்ந்த தமிழ் மக்களையே இலக்காக வைத்துத் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கோ சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்கோ புலம் பெயர்ந்த மக்களைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை. எங்களது பணிகள் இலங்கையிலிருக்கும் நமது மக்களை மய்யப்படுத்தியே அமைந்திருக்கின்றன. இந்த நாடு கடந்த அரசுக் கூச்சலோ வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புப் பொறுக்கித்தனமோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி இலங்கை அரசின் கையையே வலுப்படுத்தக் கூடியவை. இவற்றைக் காரணம் காட்டியே அவசரகாலச் சட்டம் மேலும் மேலும் நீட்டிக்கப்படும். அரசின் சிறைகளிலிருப்பவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் என்ற சாட்டின் பேரில் ஆயுள் முழுதும் சிறையில் அழுந்த நேரிடும். இங்கே பூனைக்கு விளையாட்டு, அங்கே சுண்டெலிக்கு உயிர் போகிறது.

  • இலங்கை அரசின் சிறைகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான புலிகள் நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து?

இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. குறைந்தபட்சம் புலிகள் அமைப்பில் கட்டாயமாச் சேர்க்கப்பட்டவர்களையாவது அரசு உடனடியாக நிபந்தனையில்லாமல் விடுதலை செய்ய வேண்டும். மற்றவர்களிற்குப் பொது மன்னிப்பு வழங்கி
விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்விற்கான வழிகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசின் இனவாத நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் புலிகளும் இல்லை என்ற வரலாற்று உண்மையை அரசு விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.

  • வடக்கு – கிழக்கு இணைப்புக் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

கிழக்கு வெறுமனே தமிழ் மக்களின் பூமி மட்டுமல்ல. மூவின மக்களும் வாழ்ந்துவரும் பூமி. அவர்கள் தனித்திருப்பதா அல்லது வடக்கோடு சேர்வதா மேற்கோடு சேர்வதா என்பதெல்லாம் அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது. வெளியிலிருந்து அவர்களிற்கு யாரும் கட்டளை இடமுடியாது. சரி ஒரு வாதத்திற்காக அது தமிழர்களின் பூமியே என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களின் விருப்பம் தனித்திருப்பது எனின் அதைத் தடுக்க இந்த யாழ்ப்பாணிகள் யார்? சிங்களவர்களிற்கு ஏழு மகாணங்கள் என்றால் தமிழர்களிற்கு ஒன்றிற்கு இரண்டாக இரு மகாணங்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே.

  • புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்களே?

சாதி ஒழிக்கப்பட்டிருந்தால் சிறுபான்மைத் தமிழர் சபை ஏன் சுயேட்சைக் குழுவாகத் தேர்தலில் போட்டியிகிறது. புலிகள் சாதி ஏற்றத்தாழ்வுகளை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அதை ஒழிப்பதற்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. சாதியொழிப்பு நடவடிக்கைகள் பெரும்பான்மை ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என்று புலிகள் அஞ்சினார்கள். மற்றைய தமிழ்த் தேசிய இயக்கங்களின் நிலையும் இதுதான்.

நீங்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இப்போதும் வடபுலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைத் தெரிந்துகொள்ளலாம். விவசாயக் கூலிவேலைகளிற்குச் செல்பவர்களிற்கு இப்போதும் பல கிராமங்களில் சிரட்டையில் தேநீரும் பனையோலையில் உணவும் வழங்கப்படுகிறது. அதை ஏற்று வாங்கிச் சாப்பிடுமளவிற்கு தலித்துகளின் மனநிலையும் உள்ளது எனில் இதுதானா கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்கள் நடத்திய சாதியொழிப்பும் சமூகப் புரட்சியும்?

ஆலய நுழைவு அனுமதி மறுப்பு, தேநீர்க் கடைகளில் சமத்துவமின்மை, பொதுக் கிணறுகளில் நீரெடுப்பதற்குத் தடை எனப் பல வகைகளில் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் தலித்துகளிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதை நான் பாரிஸில் உட்கார்ந்திருந்து யதார்த்தம் புரியாமல் பேசுகிறேன் என்று நீங்கள் ‘சிம்பிளாக’ எடுத்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினைகளை இலங்கையிலிருக்கும் மகாசபை தான் முன்வைத்திருக்கிறது.

இன்னும் ஏராளமான தலித் குடும்பங்கள் கோயில் காணிகளில் குத்தகைக்குக் குடியிருந்து வருகிறார்கள். குடியிருப்பவர்களிற்கே நிலம் சொந்தம் எனக் குரல் கொடுக்க அங்கே ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ கிடையாது. புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் அந்த நிலங்களைக் கோயிலிடமிருந்து கைப்பற்றிக் குடியிருக்கும் தலித்துகளிற்கே வழங்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

  • தலித் இலக்கியத்திற்கு ஈழம் முன்னோடி. ஆனால் இன்று ஈழத்திலோ புகலிடத்திலோ தலித் இலக்கியம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு எழுதப்படுவதில்லையே?

ஈழத்தில் இலக்கியவாதிகளிற்கு யுத்தச் சூழல் பெரும் தடையாகயிருந்தது. கருத்து – எழுத்து மறுப்புச் சூழலுக்குள் அவர்கள் அழுந்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் புகலிடத்தில் தலித் இலக்கியம் முனைப்புப் பெறாததற்கு வேறொரு பரிதாபமான காரணமுள்ளது. இங்கிருக்கும் தலித் படைப்பாளிகள் சாதி அடையாளத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதைசொல்லியாக இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். சாதி இழிவு தங்கள்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகக் கருதிப் போரடாமல் சாதி அடையாளத்தை மறைத்து வைக்க அவர்கள் முயற்சிப்பது பரிதாபமானது.

  • தமிழகத்து தலித் அரசியல் கட்சிகள் உங்களிற்கு முன்மாதிரியாக உள்ளனவா?

ஆரம்பத்தில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனேயே தமிழக தலித் அரசியல் கட்சிகளைப் பார்த்தோம். குறிப்பாகத் தொல் திருமாவளவன் மிகுந்த நம்பிக்கை அளிப்பவராக இருந்தார். ஆனால் இன்று தமிழ்த் தேசியம் என அவர் தடம்மாறி நிற்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. கடைசிப் பெரியாரிஸ்டும் 1973ல் இறந்து போனார் என்றொரு சொல்வழக்கு இருக்கிறது. பெரியாரைத் தவிர எங்கள் முன்னோடிகளாகக் கொள்ளத் தமிழகத்தில் யாருமில்லை.

  • இலங்கையில் உங்கள் நட்புச் சக்திகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

சாதியொழிப்பில் அக்கறை உள்ளவர்கள் எல்லோருமே எமது நட்புச் சக்திகளே. ஆனால் வெறும் வார்த்தை நட்பு எதைச் சாதித்துவிடப் போகிறது. குறிப்பாக ஆயுதம் தாங்கிப் போராடிய இயக்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாயிருக்கின்ற போதும் அவற்றிற்கு மக்களிடம் ஆதரவு கிடையாது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற மிதவாதக் கட்சிகளிற்கு சாதகமாகப் போய்விடுகிறது. நான்கு பக்கமும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கும் தலித் சமூகத்திற்கு நட்பு சக்திகளை அடையாளம் காண்பதைவிட எதிர்ப்பு சக்திகளை அடையாளம் காண்பதே இலகுவாயிருக்கிறது. அது அவசியதானதும்கூட.

EPDP, EPRLF ஆகிய இரு கட்சிகளிற்கும் தலித் மக்களிடம் ஓரளவு செல்வாக்குள்ளது. அந்தக் கட்சிகளில் கணிசமான தலித் இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த வளங்களை வைத்து அந்தக் கட்சிகள் சாதியொழிப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்தால் அந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு சேர்ந்து செயற்பட நாங்கள் தயங்கமாட்டோம்.

  • முதலாவது தலித் மாநாட்டை ஃபிரான்ஸிலும் இரண்டாவது தலித் மாநாட்டை லண்டனிலும் நடத்தினீர்கள். அடுத்த தலித் மாநாடு எங்கே?

அடுத்த தலித் மாநாடு இலங்கையில்.