ப.வி.ஸ்ரீரங்கன்
ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது.
அதுபோலவேதாம்கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை.இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது.மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ,ஸ்ராலின்மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை!அரசியல்ரீதியாகவும்,வியூக ரீதியாகவும் தவறுகளென்பது எவரும் செய்யக் கூடியதே.
எது தவறு,எது சரியென்பதை வர்க்க ரீதியான சமூகமைப்பில்வைத்துப் புரிவதென்பது பரந்தபட்ட மக்களது கொலைகளை நியாயப்படுத்தித்தாம் சாத்தியமாகுமா?அதுபோன்றேதாம் இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது,”கம்யூனிச ஆசான்கள் என்பவர்கள்மீதான விமர்சனங்கள் யாவும் முதலாளித்துவ எதிர்ப் பிரச்சாரமாகுமா?”என்பது.
பைபிள்மீது விமர்சனம் வேண்டாம் என்பதும்,குரான்மீது அவ நம்பிக்கை கொள்ளக் கூடாதென்பதும் பலதரப்பட்ட தர்க்வாதத்தைப் புதைப்பதன் அடிப்படையைக்கொண்டது.
கம்யூனிசத் தலைவர்கள் மாசற்ற பிதாமக(ள்)ன்கள் என்று எவர் பேச முனைகிறாரோ அவர் ஆபத்தான பேர்வழியென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.தவறுகள் எங்கும் நிகழும்.அது,தவறா அல்லது சரியாவென்பது நாம் கொண்டிருக்கும் உலகப் புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இங்கே,மார்க்சோ அல்லது லெனினோ தமது குடும்ப வாழ்வில் பலதரப்பட்ட சூழலில் காதல் வயப்பட்டிருப்பது அவர்களைப் பொறுத்தமட்டிலும்,உலக-இயற்கைக்குட்பட்ட முறமைகளுக்கமையவும் தவறில்லை.அது,இயற்கையான மனித-உயிரின நடவடிக்கை.இங்கே,இந்தக் கருத்தியல் உலக- அமைப்புகளுக்குச் சாந்திட்டு காக்க அல்லது அடியொற்றிப் பேச முற்படுபவர்களுக்கு இது பெரும் சர்ச்சை. புனித நடாத்தையின் “தூய்மை” வாதப் பிரச்சனை.
இன்று,மனித சமூகத்தில் பல பிரச்சனைகள் குறித்து ஆராயப்படுகிறது.இதுள் பொருளாதார மற்றும் அரசியல்-பௌதிகமென ஆய்வுகள் தொழில்ரீதியான முன்னேற்றத்துக்காகவும் மனித விடுதலைக்காகவும் செய்யப்படுகின்றன.நமது சூழலில் ஒன்றையொன்று மறுத்துத் தனிப்பட்ட நடாத்தைகள் சேறடிப்புகளென எழுத்துக்கள் மலிந்து விடுகிறது.
நண்பர் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத்துக்காகத் தனது கொரில்லா நாவலைஅர்பணித்திருக்கிறார்.சந்தோஷமான விடயம்.மார்க்ஸ் அவர்களது வாழ்வில் கெலேனா அம்மையாருக்கான இடம் என்னவென்பது ஒரு முக்கியமான விஷயமே.இது குறித்து ஜேர்மனிய மார்க்சியர்கள்-இடதுசாரிக்கட்சிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளார்களென்பது பலமாக ஜேர்மன் மொழிக்குள் இயங்குபவர்களால் அறிந்திருக்கக்கூடியதே.
அவ்வண்ணமே ஜேர்மனியைப் பூர்வீகமாகக்கொண்ட ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்வு-சாவு,தியாகம்-விருப்பு வெறுப்புகளென எல்லா ஆசாபாசங்களும் ஜேர்மனிய மொழிக்குள் இருக்கிறது.ஹெலேனா அம்மையாரது கையெழுத்துப் பிரதிகள்கூட ஆவணக்காப்பகங்களில் இருக்கிறது.அவர் குறித்து வேலைக்காரியெனப் புரிதல் அரை குறை மார்க்சியப் புரிதலாளர்களிடம் இருக்கலாம்.ஆனால்,அந்த”வேலைக்காரி”இன்றி மார்க்சினது மூலதனம் சாத்தியம் இல்லை என்பது எனது புரிதல்.ஹெலேனா அரசியல்-வர்க்கப் போராட்டம்,அது குறித்த வியூகங்களென மார்க்சுடன் விவாதித்து இருக்கிறார்.அவரது தியாகம் நிறைந்த உழைப்பின்றி மார்க்ஸ் குடும்பம் ஒருபோதும் இயங்கி இருக்க முடியாது.மார்க்சும் உழைப்பாளர்களது தந்தையாகி இருக்க முடியாது.எனவே,ஷோபாசக்தி தனது நாவலை ஹெலேனா அம்மையாருக்குக் காணிக்கையாக்கியது சரியானதே!எவர் மார்க்சின் மூலதனத்தை மெச்சுகிறாரோ அவர் நிச்சியம் ஹெலேனாவையும் மெச்சுகிறார் என்பதே எனது முடிபு-துணிபு!
மார்க்ஸ் அவர்களுக்கும் ஹெலேனா அம்மையாருக்கும் இடையிலான தொடர்புகள்,உறவுகள்,திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமையவும் நிகழ்ந்தவை என்பதும்,மார்க்ஸ் தனது சட்டபூர்வமான துணைவிக்கு எழுதிய கடிதத்திலிருந்து நம்மால் வாசித்தறியக்கூடியதாகவே இருக்கிறது. ஹெலேனாவின்மீதான காதலில் சிக்குண்டிருந்தபோது மார்க்ஸ் அதிகமாகக் காதல் வயப்பட்ட கடிதங்களை ஜென்னியோடு பகிர்ந்துள்ளார்.நாவோடு நா வைத்து முத்தமிடும் காதல் நடாத்தைகள் குறித்து மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருக்கிறார்.குடும்பம் பிரியாதிருப்பதற்காக அவர் பல முறைகள் காதலுணர்வின் உச்சத்தை ஜென்னி வெஸ்பாலினோடு செய்திருக்கிறார்.
ஹெலேனா டெமுத் அவர்கள் மார்க்சினது மனைவி ஜென்னி ஃபொன் வெஸ்ற்பாலென் அவர்களது பெற்றோரிடம் வீடு பராமரிக்கும் தொழிலை ஆரம்பித்து இறுதிவரை அத்தொழிலை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்வரை செய்து,மடிந்திருக்கிறார்.தான் விரும்புவது,விரும்பாததென அவரது கடிதம்கையெழுத்து எடுகளென(Poesiealbum)எழுதப்பட்டு ஆதாரமாக இருக்கிறது.
ஹெலேனா அவர்களது கையெழுத்து ஏட்டை வாசிப்பவர்களுக்கு அவரது உள்ளத்தைப் புரியக்கூடியதாகவிருக்கும்.அவர் வீட்டு வேலைகளால் அதிகம் சுமையடைந்திருப்பதும், வெளியில் சென்று ஒரு நேரவுணவை ஒரு ரெஸ்ரேன்டில் உண்ணவும் விரும்பி இருக்கிறார்.தான் தனது கையால் சமைக்காத உணவை உண்பதே அவரது அதி விருப்பாகவும்-உலகத்தில் வாழ்வுப் பயனாகவும் கண்டிருக்கிறார்.மார்க்ஸ் குடும்பம் மிக ஏழ்மையோடு உழைப்பாள வர்க்கத்துக்காக ஆய்வுகளில்-போராட்டத்திலிருந்தபோது ஹெலேனாவுக்கும் மார்க்ஸ் அவர்களுக்கிடையிலான காதலின் பொருட்டுப் பிறந்த குழந்தை 1851 இல்இன்னொரு குடும்பத்தில் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ஹெலேனாவின் விருப்பின்பொருட்டானதாகவே இருக்கிறது.
மார்க்சினது குடும்பத்தில் ஏலவே ஆறு குழந்தைகள் வறுமையினால் வாடும்போது தனது குழந்தையும் அவருக்குச் சுமை கொடுக்குமென்பதால் ஹெலேனா அம்மையார் தனது சொந்தக் குழந்தையை மார்க்சினது ஒப்புதலோடு வேறொரு குடும்பத்தில் வளர்க்கக் கொடுத்துவிடுகிறார்.இது வரலாறு.
இங்கே,மார்க்ஸ் குறித்தோ அன்றி ஹெலேனா அவர்கள் குறித்தோ எவரும் சேறடிக்க முடியாது.
அதைச் செய்தவர்கள் இடதுசாரிகளது வட்டத்திலிருந்த அதி துதிபாடிகளே.
முதலாளியக் கருத்தியலாளர்கள்கூட ஜேர்மனியச் சூழலில் அதை மார்ஸ்-ஹெலேனா இருவரது சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் மார்க்சின் வரலாற்றை மீளப் பார்த்த சையிற் பத்திரிகைகூட மிக நாணயத்தோடு ஆவணங்களை முன்வைத்து இத்தகைய விவாதத்தை மிக அழகாகவும்,நீதியாவுஞ் சொல்லி இருக்கிறது.
இங்கே,ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.
ஒருபெரும் குடும்பம்(மார்க்ஸ் குடும்பம்)தொழிலாளர்களுக்காகத் தியாகஞ் செய்தபோது,அவர்களுக்காக அம்மையார் ஹெலேனா டெமுத் தனது வாழ்வையே அக் குடும்பத்துக்குத் தியாகித்து எமக்கு மூலதனம் எனும் அரிய விஞ்ஞானப் பாடத்தைத் தந்திருக்கிறார்.இதன் ஆணிவேர் மார்க்ஸ் மட்டுமல்ல.அங்கே, ஏங்கெல்சுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு ஹெலேனாவுக்கு,ஜென்னி வெஸ்ற்பாலினுக்கு,ஜென்னி மார்க்சுக்கு உண்டு.அவ்வண்ணம் ஹெகலுக்கும் உண்டு.இதை எவரும்-எதன் பெயராலும் மறுக்க முடியாது.
நன்றி: தமிழரங்கம்