இயங்கியல், அமைப்பியல் மற்றும் தேசம்

தோழமைப் பிரதிகள் ராஜன் குறை

ராஜன் குறை


பேராசிரியர் தமிழவன் தீராநதி ஜனவரி 2010 இதழில் எனது “மொழியுணர்வும், தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்” என்ற நவம்பர் 2009 தீராநதி இதழ் கட்டுரை குறித்து பொறுமையாகவும், பெருந்தன்மையாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதையொட்டி, இந்த உரையாடலைக் கவனித்து வரும் வாசகர்களின் பொருட்டு என்னுடைய சில சிந்தனைகளை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக எனக்கும் தமிழவனுக்கும் இருக்கும் கருத்து மாறுபாடுகளை விளக்கக்கூடிய சில தத்துவப் பின்னனிகளைக் காண வேண்டும்.

அமைப்பியல் என்பது ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி இணைந்தது. ஆனால் நல்ல செய்தி வலுவற்றது, கெட்ட செய்தி வலுவானது. நல்ல செய்தி என்னவென்றால் அது வரலாற்றை இயக்கும் காரணிகள் மற்றும் காரணங்களைக் குறித்த மயக்கங்களை தகர்த்தது. தனி நபர், மக்கள் தொகுதிகள், வரலாற்றின் ஆன்மா போன்ற காரணிகளையும், காரணங்களையும் அது புறமொதுக்கியது; அதன் ஒரு பகுதிதான் “ஆசிரியனின் மரணம்” என்று பரபரப்பாக தமிழில் சர்ச்சைக்குள்ளான பார்த்தின் சிந்தனை. இதன் பொருள் ஆசிரியன் என்று அடையாளமாகும் தனி நபரை மூலமுதற்காரணியாகக் கொள்ளாமல் இருப்பது. ஆனால் கெட்ட செய்தியாக அது காலங்கடந்த அர்த்த உருவாக்கத் தளங்களைக் கற்பித்தது. வித்தியாசங்களை உறையைச் செய்து, நிலைபெறச் செய்து, இருமை எதிர்வுகளை எங்கும் கட்டமைத்து அவற்றை காலங்கடந்த “அமைப்பாக”, அர்த்த/செயல் உருவாக்கத் தளமாக பரிந்துரை செய்தது. அமைப்பியல் உருவாக்கிய மீமெய்யியல் (methaphysics) வரலாற்றுவாதத்தின் மீமெய்யியலைவிட ஆபத்தானது என்றே நான் கருதுகிறேன். அமைப்பியல் உறைநிலைக்கு கொண்டு சென்ற வித்தியாசத்தை விடுதலை செய்து கட்டற்ற விளையாட்டில் ஈடுபடும் வித்தியாசமே தற்செயலாகவும், விபத்தாகவும், வம்சாவழித்தொடர்ச்சியாகவும் காலந்தோறும் அர்த்தத்தையும், செயலையும் நிகழ்த்துவதாகக் காட்டினர் தெரிதா, தெல்யூஸ் மற்றும் ஃபூக்கோ ஆகியோர். இவர்கள் சிந்தனையை அமைப்பின்மைவாதம் அல்லது தோற்ற-வரைவியல் (onto-graphology) என்று கூறலாம். இதை பின் – அமைப்பியல் என்று கூறுவதனாலேயே மிகுந்த குழப்பம் விளைகிறது. தமிழவனும், நாகார்ஜுனனும் அமைப்பியலுக்கெதிராக, மீண்டும் சொல்கிறேன், அமைப்பியலுக்கு எதிராக, தெரிதா நிகழ்த்திய மகத்தான சிந்தனைப் புரட்சியை தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருவதுடன், அமைப்பியலை தொடர்ந்து பரிந்துரை செய்தும் வருகின்றனர். இவ்வாறு கூறுவதன் பொருள் தெரிதா சொல்வதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். இதுவே நான் தமிழவனுடன் கருத்து மாறுபாடு கொள்ளக் காரணமோ எனத் தோன்றுகிறது. அவர் அமைப்பியலை அனுசரித்து சிந்திக்கிறார்; நான் தோற்ற-வரைவியலை அனுசரித்து சிந்திக்கிறேன்.

அமைப்பியலின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் சசூர் (1857-1913) என்பவரின் மொழி மற்றும் குறிகள் பற்றிய பலவீனமான சிந்தனை. அவர் குறிப்பான், குறியீடு என்ற ஈரங்க குறியினை சிந்தித்ததே அமைப்பியலின் கிடைக்கோடுப்பார்வைக்குக் (synchrony) காரணம். அவரைவிட மூத்தவரும், சமகாலத்தவரும், குறியியலின் தந்தை என்றறியப்படுபவருமான அமெரிக்க தத்துவாசிரியர் சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ்,Charles Sanders Peirce (1839-1914), மூவங்க (Sign, Object, Interpretant) குறிகளை சிந்தித்து குறியியலுக்கு மிகச்சிறந்த அடித்தளமிட்டது துரதிர்ஷ்டவசமாக உலகின் பரவலான கவனத்திற்கும், ஆய்விற்கும் உள்ளாகாமல் போய்விட்டது. ஆனால் தெரிதா பர்ஸிடம் (Charles Sanders Peirce) தனது சிந்தனைகளின் தடத்தை, முன்மாதிரியைக் காண்கிறார். (பார்க்க: Derrida, Jacques. Of Grammatology, Baltimore:John Hopkins University Press, 1976/1997, p.49) இந்த சந்தர்ப்பத்தில், என்னுடைய இன்றைய சிந்தனைகள் பர்ஸ், தெரிதா, தெல்யூஸ் மற்றும் ஃபூக்கோ ஆகியோரை அனுசரித்தே அமைகின்றன என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதன் பொருள் தங்களுக்குள் வேறுபடும் அவர்கள் கூறுவதனைத்தையும் ஏற்கிறேன் என்பதோ பிற சிந்தனையாளர்களிடமிருந்து எதுவும் பெருவதில்லை என்பதோ அல்ல. சில அடிப்படை சிந்தனைப் புலங்களை அவர்கள் சிந்தனைகளிலிருந்து பெறுகிறேன்.

இப்போது இதுவரை கூறியதிலிருந்து மூன்று அம்சங்களை அட்டவணையாகத் தொகுத்துக்கொள்வோம்.

வரலாற்றுவாதம் காரணி, காரணங்களை மையப்படுத்தியது; இயங்கியல்
அமைப்பியல் காலங்கடந்த அர்த்த உருவாக்க தளங்களை மையப்படுத்தியது; கிடைக்கோட்டுப் பார்வை
வரைவியல் தற்செயல், நிகழ்வு, வம்சாவழியியல்; முரணியக்கம்

வரைவியல் நோக்கிலிருந்து வரலாற்றுவாதத்தை அணுகும்போது கதையாடல்களாக அணுகுகிறோம். சொல்லாடல்கள் மற்றும் கதையாடல்கள் என்ற அளவில் தேசியம் எப்படியெல்லாம் செயல் வடிவம் கொள்கிறது என்பதையும், பொருளுற்பத்தி, சந்தை முதலிய செயல் வலைப்பின்னல்கள் இச்சொல்லாடல்களுடன் எப்படி ஒரு நிறைவற்ற இயங்கியல் உறவு கொள்கின்றன என்பதையும் காண முடியும். இங்கு இயங்கியல் என்பது ஹெகலிய, மார்க்ஸிய இயங்கியல் இல்லை. Aufhebung என்று ஜெர்மானிய மொழியிலும், sublation என்று ஆங்கிலத்திலும் வழங்கப்படும் ஹெகலிய இயங்கியலின் விளைபொருளை நாம் ஏற்கவேண்டியதில்லை. அதற்கு பதிலாக முரணியக்கம் பல மையங்களில் செயல் வழித்தொடர்ச்சியை, வலைப்பின்னலை நிகழ்த்துவதாகக் காணமுடியும். எனவே நான் தமிழவனை பழைய மார்க்ஸியவாதியாக அல்ல, புதிய தோற்ற-வரைவியல்வாதியாகவே எதிர்கொள்கிறேன்.

தேசம் என்பது வரலாற்றுவாதத்தின் இன்றியமையாத விளைவு. எப்போது வரலாற்றிற்கு பதிலாக காலங்கடந்ததாக எது ஒன்றையும் தேசத்தின் மையத்தில் வைக்கிறோமோ அப்போதுதான் தேசியம் பாசிசமாகிறது. மொழி உட்பட எதுவுமே, ஆம், எதுவுமே காலங்கடந்ததல்ல. காலமேகூட காலங்கடந்ததல்ல. காலம் என்பது ஒவ்வொரு அணுவிலும் நிகழும் ஒயாத மாற்றம், அதாவது வித்தியாசத்தின் தொடருற்பத்தி. தமிழவன் மொழியை, தமிழை, வரலாறு கடந்ததாக கூறும்போதுதான் அமைப்பியல் சாராம்சவாதமாக தோற்றம் கொள்கிறது. தமிழையும், தமிழரையும் காலங்கடந்த குறிகளாக (தெரிதாவின் மொழியில் Transcendental Signifieds) கட்டமைக்கும் எந்த முயற்சியும் ஆபத்தானவையே என்பது எனது கருத்து. அது மட்டுமல்ல அண்ணாவும், ஆண்டர்சனும் அப்படிச் செய்யவில்லை என்பதே எனது வாதம். அவர்கள் வரலாற்றுவாதிகள். ஆண்டர்சன் மொழி மூலாதாரமாக காட்டப்படுகிறது, உணரப்படுகிறது என்றுதான் கூறுகிறாரே தவிர இயங்குகிறது என்றல்ல. எனவேதான் நான் என் கட்டுரையில் மொழியுணர்வு என்பதை முன்னிலைப் படுத்தினேன். மொழியை அல்ல. நான் “மொழியுணர்வு பாசிசமாகத் தேங்கக்கூடாது” என்று எழுதியதை தமிழவன் “மொழி பாசிசமாகத் தேங்கக்கூடாது” என்று மாற்றி வாசித்தால்/எழுதினால் என்ன செய்வது என்று புரியவில்லை. வருத்தப்படுவதைத் தவிர. துல்லியமற்ற வாசிப்புகளே மொழியைக் கொலை செய்கின்றன என்பது தமிழவன் அறியாததல்ல.

தன்னுடைய நூலில் மொழியுணர்வு குறித்து பேசும் அந்த பலவீனமான தருணத்தில் ஆண்டர்சன் தவறிழைக்கிறார். அதாவது Imagined Community நூலின் எட்டாவது அத்தியாயத்தில். ஆண்டர்சனுக்கும், பார்த்தா சாட்டர்ஜிக்கும் இடையிலான உரையாடலை கவனிப்பவர்கள் நான் கூறுவதை உடனே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலில் எட்டாவது அத்தியாயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் மொத்த சிந்தனையையும் வகைப்படுத்துவது தகாது. ஆண்டர்சன் “காலங்கடந்த தன்மை” என்பதை முன்மொழியவில்லை. Vacant Time என்ற சொற்றொடரை உபயோகிப்பதில்லை. அவர் முன்மொழிவது, நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி வால்டர் பெஞ்சமினிடமிருந்து பெற்ற “homogenous empty time” என்ற கருத்தாக்கம். அதன் ஆழ்ந்த பொருள் நவீன வரலாற்றெழுதியலின் கற்பித மையத்தை கேள்விக்குள்ளாக்குவது. தேசம் என்பதும், நவீன வரலாற்றெழுதியல் என்பதும் உடன் பிறந்த சகோதரர்கள். இரட்டைகள் என்று கூடக் கூறலாம். எனவே பொதுவில் ஆண்டர்சனும், அண்ணாவும் வரலாற்றுவாதிகள் எனக்கூறுவதே எனது நோக்கம். அமைப்பியலை வைத்துக்கொண்டு அண்ணாவையும், ஆண்டர்சனையும் அணுகுவதைவிட தோற்ற-வரைவியல்கோணத்தில் அவர்கள் வரலாற்றுவாதத்தில் வேர்கொண்டதை முன்னிறுத்துவதே பயனுள்ள  சிந்தனை என்றெனெக்குப்படுகிறது. பாரதிதாசனையே எடுத்துக்கொள்ளுங்கள். “புதியதோர் உலகம் செய்வோம்” என்றுதானே பாடினார். காலங்கடந்த தமிழ்ப்பண்பாட்டை மீட்போம் என்றா பாடினார்? வேறொரு சந்தர்ப்பத்தில் தமிழவன் சுட்டிக்காட்டிய ஒரு முரண்பாடு: காந்தியும் ராமன் என்றார்-அத்வானியும் ராமன் என்கிறார். தமிழவன் அவர் கோணத்தில் இரண்டிற்குமான வித்தியாசத்தை எப்படி அணுகுவார் என்று யோசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் காந்தி வரலாற்றுவாதத்தை தோற்ற-வரைவியல் நோக்கில் அணுகியவர். அவருடைய ராமன் ஒரு உருவாகும் குறி (emergent sign). அத்வானியின் ராமன் காலங்கடந்த ராமன் (transcendental signified). அதனால்தான் காந்தியால் “ரகுபதி ராகவ ராஜாராம்…ஈஸ்வர அல்லா தேரோ நாம்” என்று எல்லா தெய்வங்களையும் இணைத்து பாடமுடியும். அத்வானியால் முடியாது.

அண்ணாவையும், பிரபாகரனையும் தமிழ் என்ற குறியின் கீழ் இணைத்துச் சிந்திக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்று கூறி, எம்.என்.ராய் முதல் நேரு, ராஜாஜி ஈராக பல்வேறு தலைவர்களுடன் உரையாடி அவர்கள் நன் மதிப்பைப் பெற்றவர் அறிஞர் அண்ணா. பின்னவரைப் பற்றி ஷோபா சக்தி உள்ளிட்ட இலங்கை சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், கல்விப்புலம் சார்ந்தோரும் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.(பார்க்க: “கொலைநிலம்”: தியாகு- ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல், சென்னை, வடலி வெளியீடு, டிசம்பர் 2009.) அண்ணாவிற்கும் தமிழ் என்பதோ, திராவிடம் என்பதோ உருவாகும் குறிகள்தான் (emergent signs). ஆனால் இராணுவ வாதமும், பாசிச மனப்போக்கும் எந்த உருவாகும் குறியையும் காலங்கடந்த, வரலாறு கடந்த குறியாகக் கண்டு சாராம்சம் கற்பிக்கும். அப்போதுதான் ஒரு மக்கள் தொகுதி தமிழர்கள் அல்ல என்று கூறி அவர்களை வெளியேற்றும் சிந்தனை பிறக்கும்.

தமிழவன் தமிழ் இலக்கிய வரலாறு குறித்து பல தகவல்களைக் கூறுகிறார். வீரமாமுனிவர், நாவல் எழுதுதல் போன்ற தருணங்களுடன் தேசியத்தை இணைத்துச் சிந்திக்கும்போதே வரலாற்றுவாதத்திற்கும், இயங்கியலுக்கும் வந்து விடுகிறோம். எனவே அமைப்பியலா, இயங்கியலா என்று தமிழவனுக்குள் கேள்வி இருந்தாலும் அவர் இலக்கியம், மொழியியல் ஆகியவற்றிலிருந்து நகர்ந்து வரலாறு, அரசியல் போன்ற இடங்களுக்கு வரும்போது தவிர்க்கவியலாமல் இயங்கியல் அவரிடம் பற்றிக்கொண்டுவிடும். இலக்கியத்திலும் கூட அவர் அறிமுகப்படுத்திய உடல்xபாடல் போன்ற இருமை எதிர்வுகள், நான் அமைப்பியலை ஏற்காவிடிலும்கூட, பயனுள்ளவை என்று கூறுவேன். அவர் இலங்கையின் சோக வரலாற்றால் தூண்டப்பட்டு அரசியல் கோட்பாடுகளுக்குள் அவசரமாக புகவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

ஏனெனில், தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்த்தேசியம் முதிர்ச்சியடைந்து தமிழகம் முழு இறையாண்மை பெறாத ஒரு தேசமாகத் திகழ்கிறது. “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தீர்க்கதரிசனமிக்க ஒரு தீர்வை அண்ணாவே கண்டடைந்தார். இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் வலுவடைய மேலும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், உலகெங்கும் இறையாண்மை எனப்படும் நவீன அரசத்துவத்தின் தன்மை வேகமாக மாறிவருகிறது. தமிழவன் கூறுவது போல “EMPIRE” என்ற ஆன்டோனியோ நெக்ரி, மைக்கெல் ஹார்ட் நூலின் முக்கியச் சரடு “அறிவு முதலாளியம்” அல்ல. மாறிவரும் இறையாண்மையின் வடிவங்கள்தான். தமிழவன் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொஞ்சம் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். இலங்கைத் தமிழர்களின் சோக வரலாறு தமிழகம் தப்பிவிட்ட ஒரு கொடுங்கனவு. இப்பவும் கூட பல இளைஞர்கள் தேசிய விடுதலை என்று கிளம்பி காவல் நிலையங்களில் சித்திரவதைக் குள்ளாகும் சூழலில் நாம் தேசியம் குறித்து எச்சரிக்கையுடன் கோட்பாட்டாக்கம் செய்யவேண்டும். நான் தோற்ற வரைவியல்வாதி என்ற முறையில் “திட்டவட்டமாக” சொல்கிறேன். தேசிய இன விடுதலை என்ற பெருங்கதையாடலின் காலம் முடிந்துவிட்டது. இருபத்தோராம் நூற்றாண்டின் மைய முரண்பாடு முதலீட்டியத்திற்கும், ஒட்டுமொத்த மானுடத்தின் வாழ்வுரிமைக்கும்தான்.

(தீராநதி பிப்ரவரி 2010 இதழில் வெளியானதன் முழுமையான வடிவம்)