‘நான் ஒரு தேச மறுப்பாளன்’ எனப் பிரகடனப்படுத்திக்கொள்கிற ஷோபாசக்தி ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். கொரில்லா,தேசத் துரோகி, ம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்று பல படைப்புகளை எழுதியுள்ள ஷோபாசக்தியின் எழுத்துகள் எப்போதும் அதிகாரத்தை கிண்டல் செய்து கேள்வி கேட்பவை.
1983 முதல் 1986 வரை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் போராளியாக இருந்து பின் இயக்கத்தில் முரண்பட்டு வெளியேறி, இப்போது பிரான்சில் வசித்துவரும் ஷோபாசக்தி, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அங்கு குடியுரிமை வாங்கவில்லை. ஈழத்தில் போர் ஒரு துயரமான முடிவுக்கு வந்த சூழ்நிலையில், தற்போது தமிழகம் வந்திருக்கும் ஷோபாசக்தியைச் சந்தித்தேன்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது என்ன கருதினீர்கள்?
அந்த அறிவிப்பு அடிப்படையில் பிழையானது. உண்மையில் போர் இன்னமும் முடியவில்லை. வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் ஆகியவை நின்றிருக்கலாம். ஆனால்,காரணமற்ற கைதுகள், ஆள் கடத்தல்கள் ஆகியவை தொடர்கின்றன. தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளும் ஜனநாயகமும் வழங்கப்படும் போதும்தான் போர் உண்மையான அர்த்தத்தில் முடிவுக்கு வந்ததாக அர்த்தம்.
பிரபாகரன் மரணமடைந்த செய்திகள் வெளியான போது உங்கள் மனநிலை என்ன?
நான் வருத்தப்பட்டேனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், உண்மையாக மகிழ்ச்சியடையவில்லை. பிரபாகரன் மட்டுமில்லை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்ததின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 7,000 சிங்கள ராணுவ வீரர்களும் போரினால் மரணமடைந்துள்ளனர் .இந்த சிங்கள ராணுவ வீரர்கள் யார்? ராணுவ உடை போர்த்தப்பட்ட ஏழை விவசாயிகள். இப்படியாகப் பலரையும் கொன்று போட்டுத்தான் சாவை விழுங்கி யுத்தம் தன் ஆவேசத்தை முடித்திருக்கிறது. எந்தச் சாவுமே எனக்குத் துக்கமானதுதான்.
1983ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற தமிழர்களின் போராட்டங்களும், தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் தமிழர்கள் போராட்டங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் இருப்பதாகக் கருதுகிறார்கள்?
அப்போதும் இப்போதும் எப்போதும் தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் துயர்மீது கொண்ட அக்கறை நெகிழ வைப்பவை. ஈழத் தமிழர்களின் ஆதரவு என்பது புலிகள் ஆதரவாகத்தான் இருந்தது என்று எனக்கு விமர்சனங்கள் இருந்தது உண்டு. என்றாலும், அதற்காக அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்த கொளத்துர் மணி மாதிரியான தோழர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு .
ஆனால் தமிழகத்தில் அதை ஒரு அரசியல் இயக்கமாக, மக்கள் இயக்கமாக மாற்றத் தவறி விட்டார்கள். புலிகளை ஆதரித்த பலருக்கு உறுதியான அரசியல் பார்வைகள் இல்லை. ஒரு மையமான மனிதாபிமான அடிப்படையில் தான் இன்றைக்கும் பலர் ஈழ ஆதரவு பேசுகிறார்களே தவிர சித்தாந்தரீதியான நிலைப்பாடுகள் பலரிடத்தில் இல்லை. இந்தியா, இலங்கை உள்பட தன்னைச் சுற்றியுள்ள சின்ன நாடுகளின் மீதும் மேலாதிக்கத்தை விரித்துவருகிறது. இருந்தும், உருத்திர குமாரன் போன்றவர்கள் இந்தியா எங்களுக்கு நண்பன் என்றுதான் பேசுகிறார்கள்.இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்காமல் ஈழத்தமிழர்களின் உரிமை பற்றி பேச முடியாது
ஈழப் போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு எவையெல்லாம் காரணங்கள் என்று கருதுகிறீர்கள்?
ராணுவ ரீதியாக யாராலும் வெல்ல என்று கருதப்பட்ட புலிகள் இயக்கத்தின் ராணுவரீதியான படுதோல்வி யாரும் எதிர்பாராதது. கடந்த ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இன்றுவரையிலும் புலிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை . இவைதான் மாபெரும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். 90 களுக்குப் பிறகு உருவான உலகமயக்கொள்கை, ஆயுதப் போராட்டங்களை விரும்பவில்லை. எந்தப் போராட்டமும் எதிர்ப்பும் அற்ற சந்தையைத்தான் மேலை நாடுகள் விரும்புகின்றன. எனவே, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த நாடுகள் மற்ற நாடுகளின் அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன. இதில் சர்வதேச சமூகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.
இரண்டாவதாக, 2001 செப்டம்பர் 11க்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் எந்த அரசாங்கமும் எத்தகையக் கொலைகளையும் செய்யலாம் என்றாகிவிட்டது. இந்தக் கொலைகளில் இப்போது நியாயம் பேசும் அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளும் கூட்டு களவாணிகள்தான். மேலும் இப்போது இந்தியா,சீனா, ஜப்பான் நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் ஆசியப் பொருளாதரம் ஒன்று உருவாகி உள்ளது.
லத்தின் அமெரிக்க நாடுகளை சந்தைகளாகப் பயன்படுத்தி வணிகத்தை நடத்தி வருபவையே ஆசிய நாடுகள்தான். எனவே இலங்கையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. போருக்குப் பிறகு இலங்கையில் புனரமைப்புப் பணி என்ற பெயரில் இந்திய முதலாளிகள் பிஸினஸ் செய்யப்போகிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளுக்குப் பின்னணியில் இருந்த பொருளாதரப் பின்னணி குறித்து புலிகளும் சரி, புலிகளை ஆதரிப்பவர்களும் சரி கணக்கில் எடுக்கவேயில்லை.
போருக்குப் பிறகு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
எல்லா இலங்கை அரசுகளுமே இனவெறி அரசுகள்தான். தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்து இருக்கும் முகாம்களை பார்வையிட்ட சிலர், வசதியான முகாம்கள் என்று பச்சைப் பொய்யை பரப்புகின்றனர். என் அக்கா குழந்தைகள் அங்கு முகாம்களில் தான் இருக்கிறார்கள். மூன்று லட்சம் கொடுத்தால் முகாமைவிட்டு வெளியேற்றுவதாக ராணுவம் சொல்கிறதாம். முதலில் முகாம் என்பதே அயோக்கியத்தனமானது. அகதிகளாக வேறு நாட்டுக்கு வந்தவர்களுக்குத்தானே முகாம்! சொந்த நாட்டு மக்களுக்கு எதற்கு முகாம்? இலங்கை அரசிடம் ஜனநாய சக்திகளும் மனித உரிமையாளர்களும் இரண்டு கோரிக்களை வலியுறுத்த வேண்டும். ஒன்று, உடனடியாக முகாம்கள் கலைக்கப் படவேண்டும். இரண்டாவதாக, ராணுவத்தால் கைது செய்யப்பட்ட போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது, உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இனி, தமிழீழம் அமைவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா?
இல்லை
ஆனந்த விகடன்
22.7.09