தலை பிளக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலையுண்டிருந்த எனது முன்னாள் தலைவரின் உடலத்தை இணையத்தளத்தில் நான் பார்க்க நேரிட்டபோது எனது கண்கள் தாழ்ந்துபோயின. அந்த உடலம் அவருடையதுதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. நாங்கள் உறுதிமொழி ஏற்றபோது உறுதிமொழியின் முதல் வாசகம் வெறும் புரட்சிகரமான வாய்ச்சொல் மட்டுமே என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உறுதிமொழியின் இறுதி வாசகத்தை மறுபரிசீலனை செய்யுமாறு என்போன்ற ஆயிரக்கணக்கானவர்களை இந்த மனிதரின் செயல்கள்தான் தூண்டிவிட்டன. ஏங்கிய கண்களும் இரத்தம் காய்ந்த முகமுமாயிருந்த அந்த உடலத்தைப் பார்க்கும்போது ஜோன் பெர்க்கின்ஸின் வார்த்தையொன்று ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த மனிதர் இரக்கத்திற்குரியவராக இருக்கலாமே தவிர, நாயகனாக கொண்டாடப்படக் கூடியவரோ தலைவராகப் பின்பற்றப்படக் கூடியவரோ அல்ல’.
ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக வாழ்வில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக முதன்மை அதிகாரச் சக்தியாகவும் மாபெரும் அமைப்புப் பலத்தைப் பெற்றதாகவும் எண்ணற்ற போரியல் சாதனைகளைச் செய்ததாகவும் உலகம் முழுவதும் கிளை அமைப்புகளைக் கொண்டிருந்ததுமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைக் குழு கடந்தமாதம் இலங்கை அரசால் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட அடுத்த விநாடியே புலிகள் அமைப்பு கலகலத்து மண்ணோடு மண்ணாகச் சரியலானது.
முள்ளிவாய்க்காலின் கடைசித்துண்டு நிலமும் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றபட்டதும், புலிகளின் தலைவரும் தலைமைத் தளபதிகளும் இலங்கை அரசிடம் ‘சரணடைந்தார்கள்’ என்ற செய்தியும், பிரபாகரன் மற்றும் முதன்மைத் தளபதிகளின் சாவும் புலிகளின் ஆதரவுத் தளத்தினரை அமைப்புரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் முடக்கிப்போட்டன. எதார்த்தமான களநிலவரத்தைப் புரிந்துகொண்டு அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளாமல் புலிகளின் அணிகள் ஒன்றில் மேல் ஒன்றாகப் பொய்களைப் பரப்பலாயின. அந்தப் பொய்களில் பெரியதும் புலிகள் இயக்கத்திற்கு எதிர்காலமே இல்லாமல் செய்ததுமான பொய்தான் ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்பதாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஒட்டுமொத்த வரலாற்றிலும் எந்தப் பிரச்சினையையும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அணுகியதே கிடையாது. 1976ல் பிரபாகரன் தனது தோழர்களும் புலிகள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களுமான மைக்கல், பற்குணம் இருவரையும் சுட்டுக் கொன்றதில் தொடங்கி 2009ல் இரண்டு இலட்சம் மக்களைப் பணயக் கைதிகளாகவும் மனிதத் தடுப்பரண்களாகவும் நிறுத்திவைத்து, அந்த மக்களில் இருபதாயிரம் பேரை இலங்கை அரசபடைகளின் இலக்குகளாக முன்தள்ளிக் கொல்லக் கொடுத்த பின்பு அதே படையினரிடம் புலிகள் சரணடைந்ததுவரை எதுவுமே வெளிப்படையாகவோ அரசியல் நேர்மையுடனோ தார்மீகத்துடனோ மக்கள்மீதான குறைந்தபட்சக் கரிசனையுடனோ நடத்தப்படவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் முற்போக்கு அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அது தனது பிறப்பிலேயே அதிவலதுசாரி இயக்கமாகத்தான் உருவெடுத்தது. அது தனது தொடக்ககாலத்தில் உச்சரித்துவந்த சோசலிஸச் சொல்லாடல்கள் அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கை’ நூலில் ஒப்புக்கொண்டவாறு தமிழ்க் குறுந் தேசியத்தை நியாயப்படுத்தவே புலிகளால் பயன்படுத்தப்பட்டன. எனினும் புலிகள் இயக்கம் ஒரு தேசியவாத இயக்கம் என்ற பாத்திரத்தைக் கூட வரலாற்றில் பெறப் போவது கிடையாது. தனது சொந்த மக்களையே கட்டாயமாக மரணக்குழிகளுக்குள் தள்ளிய அந்த இயக்கத்திற்கு அதற்கான யோக்கியதை கிடையவே கிடையாது. மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் துரோகத்தனமாக மட்டுமே கற்பித்து மாற்று அரசியலாளர்களைக் கொன்றொழித்துவிட்டு இன்று ஒட்டுமொத்தமாக இலங்கை அரசிடம் சரணடைந்து இலங்கை அரசுக்கு உளவும் அடையாளமும் சொல்லிக்கொண்டிருக்கும் அதன் அரசியல் பிரிவிற்கு வரலாற்றில் எந்த மரியாதையும் கிடையாது.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவென்றல்லாம் ஒரு தோதுக்காகத்தான் எழுதுகிறேனே தவிர விடுதலைப் புலிகளிடம் அரசியலென்றெல்லாம் எதுவுமேயிருக்கவில்லை. அதுவொரு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இராணுவவாத இயக்கம். அதன் தலைமை அரசியல் நெறிகள் குறித்தோ மாறிவரும் சர்வதேச அரசியல் சூழல்கள் குறித்தோ அக்கறைகொண்டதல்ல. தலைமையின் காட்டுமிராண்டித்தனங்களுக்கும் சாகசத் திட்டங்களிற்கும் அரசியல்சாயம் பூசி மக்களிடம் விற்பனைசெய்வதே அரசியல் பிரிவின் பணியாயிருந்தது. விடுதலைப் புலிகளின் அமைப்பு வடிவம் ஒரு அரசியல் இயக்கத்தையோ, மக்கள் யுத்தக் குழுக்களையோ ஒத்த வடிவம் கிடையாது. அதிகாரங்கள் முழுவதும் தலைமையிடம் குவிந்திருந்த, எதிர்த்துக் கேள்வி கேட்பது என்றே பேச்சுக்கே இடமற்ற, விமர்சனங்களைக் கடுகளவேனும் சகித்துக்கொள்ளாத, இரகசியமும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் பேரங்களும் திரைமறைவு ஒப்பந்தங்களும் நிறைந்திருந்த ஒரு தலைமையால் அந்த இயக்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அந்தத் தலைமைக்குழு முற்றாக அழிக்கப்பட்டதும் அந்த இயக்கம் செயலற்றுப்போனது.
அது செயலற்றுப் போகும் என்பது ஓரளவு எதிர்பார்க்கப்பட்டதுதான். எனினும் அதனுடைய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் செத்த விலங்கிலிருந்து உண்ணி கழருவதுபோல் இவ்வளவு வேகமாகக் கழன்றுகொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று. இன்னும் மிச்சமிருப்பவர்கள், பிரபாகரன் மட்டுமின்றி ஒரு பாவமும் அறியாத அவரது குழந்தை உட்பட அவரது குடும்பமே அழிக்கப்பட்டதென்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தங்களது சொந்த அரசியல், பொருளியல் இலாபங்களிற்காகப் பிரபாகரனின் சாவுச் செய்தியை மறுத்தே வந்தார்கள்/ வருகிறார்கள். வாழுங்காலத்தில் சூரியதேவனாகவும் தேசியத் தலைவராகவும் இந்தக் கூட்டத்தால் புகழப்பட்ட அந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்தி உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு மெழுகுவர்த்தி கூட இந்த நிமிடம்வரை இந்தக் கூட்டத்தால் ஏற்றப்படவில்லை. தவறான தலைமை தவறான அணிகளையும் ஆதரவாளர்களையும் சுயநலமிகளையுமே உருவாக்கும்.
ஒருபகுதி மக்கள் திரளின் ஆதரவுபெற்ற, அவர்களால் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புலித் தலைவர்கள் சரணடைந்தபோது சர்வதேசப் போர்விதிகளுக்கு முரணாக இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களும் ஈவிரக்கமின்றி அரசால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மனிதவுரிமைகள், யுத்தவிதிகள் மீறல்களாக்கி குரல்கொடுக்க புலம்பெயர்ந்த, தமிழகத்துப் புலிகளின் ஆதரவுப்படைகள் தயங்குவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது. பிரபாகரன் மறைந்து சரியாக ஒருமாதத்திற்குப் பின்பே புலிகளின் ஆதரவு இணையத்தளங்கள் தங்கள் தலைவர் களத்தில வீழ்ந்தார் என முனகி முனகி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த ஆரம்பித்திருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? தலைவர் இறந்த செய்தி ஒருமாதத்திற்குப் பின்புதான் தமக்குத் தெரியவந்தது எனப் புலிகளின் புலனாய்வுத்துறை அறிக்கையிடும் அக்கிரமத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு பொய்யை மறைக்க மேலும் பல பொய்கள்.
ஒரு தனிமனினைத் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட பிரமைகளாலும் புனைவுகளாலும் அந்த மனிதரின் இரும்புப்பிடியிலும் இருந்த அந்த இயக்கத்தின் அழிவும் அந்த மனிதரின் அழிவும் ஒன்றிலிருந்து ஒன்று பகுத்துப்பார்க்க முடியாதவை. இவ்வளவு காலமாகப் புலிகள் இயக்கத்திலிருந்து களமாடி மரணித்த போராளிகளுக்கு தவறான தலைமையால் வழிநடத்தப்பட்டு மரணித்த மனிதர்கள் என்ற பாத்திரத்தைத்தான் வரலாறு வழங்கும். இருபதாயிரம் போராளிகளின் மரணம் தலைமையின் எண்ணற்ற தவறுகளால் பொருளற்றவை ஆக்கப்பட்டிருக்கின்றன.
புலிகள் இயக்கத்தின் தரித்திர அரசியல் வெறுமனே அவர்களை மட்டும் அழித்துவிடவில்லை. கடந்த முப்பது வருடங்களில் புலிகள் இயக்கம் ஈழத் தமிர்களிடையே சனநாயம், கருத்துரிமை போன்ற விழுமியங்களை ஒட்ட அழித்திருக்கிறது. சிவில் சமூகத்தின் ஒருபகுதியை அது பாஸிசத்தின் ஆதரவாளர்களாக்கியிருக்கிறது. தொழிற்சங்கம், சாதியொழிப்பு இயக்கங்கள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் போன்ற அத்தனை முற்போக்கு இயக்கங்களையும் புலிகள் இயக்கம் அழித்து அரசியலற்ற ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிய புதிய தலைமுறைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. புலிகளுக்குப் பின்பு என்ன என்ற கேள்வியை அணுகும்போது இந்தச் சீரழிவுகளையும் இந்தச் சீரழிவுகளிலிருந்து தோன்றப்போகும் விளைவுகளையும் கவனத்தில் எடுத்தே நாம் பேசவேண்டியிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகப் புகலிடத் தேசங்களில் இளையோர் அமைப்புகள் புலிகளிற்கு ஆதரவாகத் தெருக்களில் இறங்கியதை அடுத்த தலைமுறைகளின் தேசிய எழுச்சியாக சித்திரிக்கும் முயற்சியையும் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் முன்னெடுத்தன. அந்த இளைஞர்களின் முயற்சி எழுச்சியல்ல. அவை தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வீழ்ச்சி. மத்திய கிழக்கிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தேசியப் படுகொலைகளை நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் இலங்கையில் பஞ்சாயத்துப் பண்ண அழைத்த அவர்களின் பேதமையை வேறு எப்படிச் சொல்வது? நடந்த ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டங்களிலும் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஒரு சொல் கூட ஏவப்படவில்லை. ‘எங்களுக்குத் தமிழீழம் வேண்டும்’, ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்ற வெற்று முழக்கங்களுக்கு அப்பால் இந்த இளையோர் எந்த அரசியலும் பேசினார்களில்லை. ஒரு இலட்சம் பேர்கள் எந்தவித அரசியல் பிரக்ஞையுமற்று வெற்று முழக்கங்களுடன் வீதிகளில் இறங்கியதை அரசியல் எழுச்சியெனச் சொல்லாமல் வீழ்ச்சி எனச் சொல்வதே சரியானது. யுத்த முனைகளில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையே சிக்கியிருந்த மக்களை அங்கிருந்து விடுவிக்குமாறு இலங்கை அரசிடம் மட்டுமல்லாமல் புலிகளிடம் கோருவதை விடுத்து ‘அவர் லீடர் பிரபாகரன்’ என்று முழக்கமிட்ட இந்த இளையோர்களின் துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்?
இலங்கை அரசு யுத்தத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இந்த வெற்றிக்கான திட்டம் இந்திய அரசு உட்பட பல்வேறு அந்நிய அரசுகளால் வகுக்கப்பட்டு அவற்றின் பூரண ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ‘இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்’ என்று மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். புலிகளை ஒழிப்பதற்காக நடந்த இறுதி யுத்தத்தில் இருபதாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அறுபதாயிரம் மக்கள் காயமடைந்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் வாழ்விடங்ளை இழந்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களே தங்களுடைய பீரங்கி வாய்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள் என அரசு கவலைப்படவில்லை. அவ்வாறாக மக்களை உயிருள்ள தடுப்புச் சுவர்களாக நிறுத்தி வைக்கப் புலிகளும் தயங்கவில்லை. தடுப்பு முகாம்களில் மக்களோடு மக்களாகக் கலந்து நுழைந்துவிடுவதில் புலிகளும் சளைக்கவில்லை. புலிகளைக் களையெடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள்மீதும் அரசு கடுமையான ஒடுக்குமுறையையும் கண்காணிப்பையும் செலுத்தத் தயங்கவில்லை. அரசு, புலிகள் என இரண்டுதரப்புகளுமே மனிதவுரிமைகளை மீறியபோது உண்மைகளைப் பேசுவோர்களைச் சகித்துக்கொள்ள அரசும் தயாராகவிருக்கவில்லை புலிகளும் தயாராகவிருக்கவில்லை. புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் குண்டர்படைகளும் தயாராகவிருக்கவில்லை.
யுத்தத்தில் இந்திய அரசின் பாத்திரமும் இந்திய உளவுத்துறையின் வகிபாகமும் முதன்மையானவை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்குவதற்கு ஒருவாரத்திற்கு முன்னாகவே இலங்கை அரசபடைகள் தமது தாக்குதலை மட்டுப்படுத்திக்கொண்டன. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் மீண்டும் முழுமூச்சில் படைகள் புலிகள் மீது தமது இறுதித் தாக்குதலைத் தொடங்கின. டெல்லியில் புதிய அரசு பதவியேற்கும் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக மகிந்த ‘இலங்கையில் யுத்தம் முடிவுற்றது’ எனக் கொழும்பில் அறிவித்தார். ராஜீவ் காந்தியின் நினைவுதினத்துக்கு மூன்றுநாட்கள் முன்னதாகப் பிரபாகரன் கொல்லப்பட்டது தற்செயலானதா அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலா என்றொரு கேள்வியுமிருக்கிறது.
சனாதிபதி ராஜபக்ச இன்று பெரும் வலிமைபெற்றுவரும் ஆசியப் பொருளாதாரத்தின் பங்காளியாகச் சித்திரிக்கப்படுகிறார். இந்தியா, சீனா, மலேசியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் உறுதியான ஆதரவு அவருக்குக் கிட்டியிருக்கிறது. டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழ் அரசியல் சக்திகளும் இலங்கை அரசுடன் இணைந்தேயிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போதுதான் அரசின் பக்கம் தாவ ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவிலேயே சாதித்துவிடுவார்கள். ஒட்டுமொத்த தேசமும் ராஜபக்ஸவின் கட்சியாலும் அய்க்கிய தேசியக் கட்சியாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இருகட்சி முறையை நோக்கி மிகவும் தந்திரமாக அரசு காய்களை நகர்த்திவருகிறது. எதிர்காலத்தில் எந்த விதத்திலும் தமிழ்த் தேசிய அரசியல் முனைப்புறாமலிருக்கச் செய்வதில் இலங்கை அரசு தனது முழுச் சக்தியையும் செலவு செய்கிறது. தமிழ்க் கட்சிகளிலிருப்பவர்களை அது தன்னிடம் இழுத்துக்கொள்கிறது.
ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்காமல் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வராது என்ற முன்னைய அனுமானங்களை மே 18 சிதறடித்திருக்கிறது. புலிகளின் ஒட்டுமொத்தச் சரணடைவும் அது நடந்த விதமும் பிரபாகரனின் மறைவுக்குப் பின்னே புலிகளின் அணிகள் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நடத்திய நாடகங்களாலும் செய்த நேர்மையீன அரசியலாலும் புலிகள் இராணுவரீதியாக மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் முற்றாகத் தோல்வியடைந்திருக்கிறார்கள். இப்போது சனநாயமுறையிலான போராட்டத்துக்குத் திரும்புதல் என்ற விதத்தில் அவர்களிடையே ஒரு உரையாடல் தோன்றியிருப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் எவ்வாறு சனநாயத்திற்குத் திரும்பப்போகிறார்கள், அவர்களின் அரசியல் வேலைத்திட்டம் என்ன என்பதையெல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் திரும்பவும் திரும்பவும் ‘வணங்காமண் திட்டம்’, ‘நாடு கடந்த அரசாங்கம்’ போன்ற வெறும் பம்மாத்துகளைச் சொல்லியே தமது ஆதரவுத் தளத்தினரையும் நிதியாதாரங்களையும் தக்க வைக்க நினைத்தால் தமிழர்களைத் தமிழர்களே காப்பாற்றிக்கொள்வார்கள், புலிகளைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
வடக்கில் தேர்தலை நடத்த அரசு இயந்திரம் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள், சரணடைந்த புலி உறுப்பினர்களின் மீள்வாழ்வு, குறிப்பாக அரசபடையினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் போராளிகளிற்கான பாதுகாப்பும் உரிமைகளும் என எண்ணற்ற மனிதவுரிமைப் பிரச்சினைகள் இன்னும் தீர்த்துவைக்கப்பட வேண்டியிருக்கின்றன. யுத்தத்தில் இலங்கை அரசு புரிந்த கூட்டு மனிதப் படுகொலைகள், மனிதவுரிமை மீறல்கள் என எல்லாவற்றிற்கும் நாம் நியாயம் கேட்க வேண்டியிருக்கிறது. அதே வேளையில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்து ஒரு இலங்கைக் குடிமகனாக நான் நிம்மதியடைகிறேன். ஆனால் இவ்வளவு பொதுமக்களும் போராளிகளும் இராணுவ வீரர்களும் கொல்லப்படாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தால் ஒட்டுமொத்தத் தேசமே மகிழ்ந்து கொண்டாடியிருக்கும். அரசுக்கும் புலிகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நடுவராக முதன்மைப் பாத்திரம் வகித்த எரிக் சொல்ஹெய்ம் ‘இரு தரப்புகளுமே ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன’ என இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
‘கிழக்கின் உதய’த்தைப்போல ‘வடக்கில் வசந்த’த்தை அரசு கொண்டுவந்துவிடும். இனி விமானத் தாக்குதல்களோ எறிகணை வீச்சுகளோ அங்கு நடத்தப்படப் போவதில்லை. புலிகளின் வரித் தொல்லையோ பிள்ளைபிடிப்போ அங்கு இருக்கப்போவதில்லை. அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அரசுதரப்பு சொல்கிறது. அதுவே போதுமானது என்பதுதான் தமிழ் மையக்கட்சிகளினதும் பெரும்பாலான தமிழ் அறிவுஜீவிகளினதும் கருத்தாகயிருக்கிறது. இந்தச் சட்டத் சீர்திருத்தம் எப்போது நடக்கும்? முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? பொதுமக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து எப்போது இராணுவத்தினர் அகற்றப்படுவார்கள்? விசாரணைகளின்றி நீண்டகாலமாகச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் கதியென்ன? என்று பதிலில்லாத கேள்விகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.
இன்று இலங்கை பெரும் கடன்சுமையில் திணறிக்கொண்டிருக்கிறது. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற பொருளாதாரப் பிசாசுகளின் நிபந்தனைகளால் இலங்கையின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் இலங்கையின் மீதான நேரடித் தலையீடு சகிக்க முடியாதவாறிருக்கிறது. இந்தியாவின் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கையில் அமைக்கப்படவிருக்கின்றன என்பது கடைசிச் செய்தி. சிறுபான்மை இனங்கள் மீதான அரசின் இன ஒடுக்குமுறையும் இந்த அந்நிய வல்லாதிக்கசக்திகளின் தலையீடும் தனித்தனியானவை அல்ல. இந்த இனவாத அரசாங்கத்திற்கு அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் இராணுவ நிகழ்ச்சி நிரல்களையும் இந்த வல்லாதிக்கவாதிககளே வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் கொடிய சூழலை தமிழர்கள் x சிங்களவர்கள் என்ற தமிழ்க் குறுந்தேசிய அரசியலால் ஒருபோதும் எதிர்கொள்ளவே முடியாது.
தமிழ்த் தேசியவாத அரசியல் கடந்த முப்பது வருடங்களாகத் தமிழர்களுக்கு அதிகாரத்தையும் மரணத்தையும் அடிமைத்தனத்தையுமே பரிசளித்திருக்கிறது. தோல்வியையும் அவமானத்தையும்போல கண்டிப்பான ஆசான் யாருமில்லை. இந்தத் தமிழ்த் தேசிய அரசியலை துல்லியமாகப் பிரேதப் பரிசோதனை செய்வதின் முலமே அடுத்த அரசியல் அடியை வைக்க முடியும். அது முடியாதெனில் தமிழர்கள் கிழக்கின் உதயத்துடனும் (கிழக்கு மகாணத்தைப் புலிகளிடமிருந்து அரசு கைப்பற்றிய நிகழ்வை அரசு ‘கிழக்கின் உதயம்’ எனப் பெயரிட்டு அழைத்தது) வடக்கின் வசந்தத்துடனும் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். கடைசிவரை தமிழர்களின் வாழ்விடங்களில் இராணுவம் நிலைகொண்டிருக்கும். நடுநிசிக் கைதுகளையும் கடத்தல்களையும் வாயை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். கடைசிவரைக்கும் ஒருதொகை தமிழ் மக்கள் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களிலேயே தங்கியிருக்கவும் நேரிடும்.
வெற்றியின் எக்களிப்பிலிருக்கும் இனவாத இலங்கை அரசைச் சவால் செய்வதற்கு இன்றைய சிறுபான்மையினக் கட்சிகள் அமைப்புரீதியாகவோ சிந்தாந்தரீதியாகவோ பலமற்றவை. சொல்லப்போனால் அவை அரசின் சலுகைகளிலேயே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒருபேச்சுக்காக நாளைக்குப் புலிகளின் அணிகள் ஒரு அரசியல் கட்சியை நிறுவிக் களத்தில் இறங்குவதாக வைத்துக்கொண்டாலும் சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளுக்கு இடையேயான போட்டிகளாகவும் பேரங்களாகவுமே இலங்கையின் அரசியல் சீரழியும். யுத்தகாலத்திலேயே பிரேமதாசவுடனும் ராஜபக்சவுடனும் டீல் போட்டுக்கொண்டிருந்தவர்கள் புலிகள் என்பது வரலாறு.
உலக இடதுசாரி இயக்கங்களால் இலங்கை ஆசியாவின் வெடிமருந்துப் பீப்பா என்று வர்ணிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. இனம் கடந்து ஒன்றிணைந்த இலங்கையின் உழைக்கும் மக்கள் டட்லி சேனநாயக்காவை அரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விரட்டிய பாரம்பரியமும் இலங்கை மக்களிற்குண்டு. அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்காமல் வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் விடிவு ஏற்படப்போவதில்லை. ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டுவர வேண்டும்.
ஆனால் அதுவொன்றும் சுலபமோ அல்லது அடுத்தடுத்த வருடங்களில் சாத்தியப்படக் கூடிய அரசியல் மாற்றமோ அல்ல. தமிழின வெறியாலும் ஆயுதக் கலாச்சாரத்தாலும் தனிநபர் வழிபாட்டாலும் மூழ்கடிக்கப்பட்ட ஒருதொகை மக்களிடையே, குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே இன்னும் பலகாலங்களுக்குப் பிரபாகரன் ஜீவித்திருக்கப் போகிறார். யுத்தம் முடிந்ததாக அறிவித்த பின்பும்கூட இலட்சம்பேரை இராணுவத்திற்குப் புதிதாக சேர்க்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. படைவீரர்களுக்கான குடியிருப்புகளைத் தமிழ்ப் பகுதிகளில் அமைப்பதற்கான முயற்சிகளிலும் அரசு இறங்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் மட்டுமல்லாமல் நாட்டில் வேறெந்த சனநாயக் கோரிக்கைகள் எழுந்தாலும், போராட்டங்கள் முனைப்புப் பெற்றாலும் அதை அரசாங்கம் பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி நசுக்கிவிட முயலும். அதற்காகவே பிரபாகரனை இலங்கை அரசு ஜீவிக்க வைத்திருக்கும். இன்னும் ஒரிரு தசாப்தங்களுக்காவது பிரபாகரன் ஜீவிப்பார்.
(‘தீராநதி’ இதழில் வெளியாகிய கட்டுரை)