தமிழ்நதிக்கு மறுப்பு

கட்டுரைகள்
நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி.

அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” என்று கேட்டிருந்தேன். உடனே ‘அய்யோ நான் நொந்து கிடக்கிறேன், வெந்து கிடக்கிறேன்’ எனத் தன் கழிவிரக்க அரசியலைத் தொடங்கிவிட்டார் தமிழ்நதி.

அவர் அவ்வாறு பொய்யுரைத்ததைக் குறித்தும் மக்களிற்குப் புலிகள் செய்த துரோகத்தை நியாயப்படுத்தியதைக் குறித்தும் அவரிடம் சுயவிமர்சனமோ குற்றவுணர்வோ கிடையாது. அதுகுறித்து அவர் கள்ள மவுனம் சாதித்துக்கொண்டு குடித்துவிட்டு நான் கற்பனை செய்கிறேனென்றும் எனக்கு மனநிலை சரியில்லையா என்ற தொனியிலும் விவாதத்தை திசை திருப்பப் பார்க்கிறார்.

தான் அவ்வாறு புலிகளின் துரோகத்தை நியாயப்படுத்தவில்லை என்று தமிழ்நதி சொல்லவில்லை. ஆனால் தான் பல ஊடகங்களில் அவ்வாறு சொல்லவில்லையென்றும் கீற்று இணையத்தளத்தில் மட்டுமே அத்தொனியில் சொன்னதாகவும் அவர் சொல்கிறார். இடத்துக்கு ஒருமாதிரி தமிழ்நதி பேசுவார் போலிருக்கிறது. புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகக் கட்டாயமாகத் தடுத்து வைத்திருக்கவில்லையென்றும் மக்கள் விரும்பியே புலிகளோடு இருக்கிறார்களென்றும் தமிழ்நதி சொன்னதை அவர் இப்போதும் சரியென்கிறாரா?

தவறென்றால் அதற்காக இப்போதாவது வருந்துகிறாரா? தான் ஒரு எழுத்தாளராக உதிர்த்த கருத்துகள் புலிகளிடமிருந்து தப்பிவரும்போது கொல்லப்பட்ட, புலிகளால் பணயமாகப் பிடிக்கப்பட்டிருந்து இராணுவத்தின் குண்டுவீச்சுகளுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவிச் சனங்களிற்கு இழைக்கப்பட்ட மன்னிப்பேயற்ற துரோகம் என்பதைத் தமிழ்நதி ஏற்றுக்கொள்கிறாரா? ஒரு இடத்தில் பேசினால் என்ன பத்து இடத்தில் பேசினால் என்ன துரோகம் துரோகம்தானே. இதற்கு தமிழ்நதியின் பதிலென்ன? இதைச் சொல்வதை விட்டுவிட்டு குடிகாரன் என்றெல்லாம் திட்டி விவாதத்தைத் திசைமாற்றித் தமிழ்நதி தப்பிப்பதைத்தான் கபடம் என்றேன். ‘மதியுரைஞர்’ அன்ரன் பாலசிங்கத்தை ‘மதுவுரைஞர் ‘எனத் தேனி இணையத்தளம் எழுதியபோது அரசியல் பிரச்சினையை இவ்வாறான தனிமனிதப் பழக்கங்களை முன்வைத்தது எதிர்கொள்வது தவறென நான் கடுமையாக எதிர்வினை செய்திருந்தது தமிழ்நதிக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை. எதிரிகளிடம் கூடக் கற்றுக்கொள்வதற்கு ஏதாவதிருக்கும் தமிழ்நதி.

இன்றுகூட புலிகள் மக்களைப் பணயமாகப் பிடித்து வைத்திருந்ததில்லை என டி. அருள் எழிலன் எழுதியிருந்தார். நேற்றும் தமிழ் மணம் திரட்டியில் அவ்வாறன ஒரு கட்டுரை படிக்கக் கிடைத்தது. அதுதான் இப்போதும் தமிழ்நதியின் கருத்தெனில் இதில் தமிழ்நதியோடு விவாதிக்க ஏதுமில்லை என நான் ஒதுங்கிவிடமாட்டேன். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகள் அய்.நா. அவையின் அறிக்கைகள் முதற்கொண்டு வன்னியின் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் வாய்மொழி வாக்குமூலங்களின் தொகுப்புவரை நான் திரட்டித் தருவேன். புலிகள் மக்களை விடுவிக்காதது பெரும் தவறென்று கவிஞர் சேரன் அண்மையில் ‘தீபம்’ தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னார். நண்பர்களிடமாவது கற்றுக்கொள்ளங்கள் தமிழ்நதி.

வால்பாறை, வட்டப்பாறையின் அழகையெல்லாம் வழித்தெடுத்து ஒயிலான அருவி, மயிலான மழை என்றெல்லாம் தமிழ்நதி ஒரு கட்டுரையில் அனுபவித்துப் பின்னியிருந்தார். நான் அதைக் கிண்டல்செய்து எழுதியிருந்தேன். “அழுதால் எப்போதும் அழுதுகொண்டிருக்க வேண்டுமா வால்பாறைக்கெல்லாம் போய் அழகை இரசிக்கக் கூடாதா” என்பது தமிழ்நதியின் கேள்வி. நிதானமாய் படித்துப் பாருங்கள் தமிழ்நதி. நான் நீங்கள் அழுவதாகச் சொல்லவில்லை. நீங்கள் அழுவதாக நடிக்கிறீர்கள் என்றுதான் சொலிலியிருந்தேன். உங்களுடைய கண்ணீர் போலிக்கண்ணீர். மாமிசம் விறைத்துப் போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர். ஒருவேளை உங்களின் பதிவொன்றில் எழுதியிருந்தது போல நீங்கள் பிரபாகரனிற்காக வேண்டுமானால் அழுதிருக்கலாம். நீங்கள் மக்களை நினைத்து அழுவதாகச் சொல்வது உள்நோக்கமுடையது. புலிகள் இஸ்லாமிய மக்களை கொன்றபோதும் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோதும் மாற்றுக் கருத்துள்ள அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் கொன்றபோதும் நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) மீது புலிகள் தாக்குதலைத் தொடங்கிய நாளில் வெருகல் ஆற்றுப் படுகையில் நூற்றுக்கணக்கான கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பாஸிசப் புலிகளால் வதைத்துக் கொல்லப்பட்டபோது நீங்கள் அழுதீர்களா? நீங்கள் அப்போது இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்களை கண்டித்தீர்களா? மாறாக நீங்கள் கொலைகாரர்களை விடுதலை வீரர்களாகக் கொண்டாடினீர்கள். கொலைகாரர்களைக் கண்டித்தவர்களை புலிக் காய்ச்சல் என்று நக்கலடித்தீர்கள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி பிரபாகரனை நீங்கள் கடவுள் என்றீர்கள். இப்போது மக்கள் செத்த துயரத்தில் மாசக்கணக்காய் அழுகிறேன் என்கிறீர்கள். உங்கள் அழுகை உண்மையானதென்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா தமிழ்நதி? புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளிற்காக அழமாட்டீர்களாம். கொன்றவர்களையே குலதெய்வம் என்பீர்களாம். ஆனால் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட மக்களுக்காக அழுதுகொண்டேயிருப்பீர்களாம். ஒரு கண்ணில் மட்டும் நீர் வரவழைக்க எங்கு கற்றீர்கள் தமிழ்நதி?

இதையெல்லாம் கேட்டால் தமிழ்நதிக்கு விவாதிக்க நேரமில்லையாம். அவருக்கு வேறு பணிகள் காத்திருக்கின்றனவாம். என்னைப் போன்றவர்களோடு விவாதித்தும் பலனில்லையாம். எனவே அவர் நான் ராஜபக்ஸசவிடம் காசு வேண்டுகிறேன், மதுவருந்தி உளறுகிறேன் என்றவாறான கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியல் பிரசுரிக்கிறார். மதுவருந்துவதற்கும் நடக்கும் விவாதத்திற்கும் என்ன தொடர்பு? நீங்கள் மதுவருந்தவதில்லையா தமிழ்நதி? நான் அரசாங்கத்திடமிருந்து பணம் வாங்குகிறேன் என்பதெல்லாம் எவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டு. இதற்குப் பெயர்தான் அவதூறு என்பது. இதற்குப் பெயர்தான் தனிநபர் தாக்குதல் என்பது. இதற்கப் பெயர்தான் கருத்தைக் கருத்தால் அடிக்காமல் காலால் அடிப்பது என்பது. இதற்குப் பெயர்தான் எத்துவாளித்தனம் என்பது. இதற்குப் பெயர்தான் அயோக்கியத்தனம் என்பது. இந்தப் அவதூறுப் பின்னூட்டை அனுமதித்த தமிழ்நதி இந்த அவதூறை நிரூபிக்க வேண்டும். முடியாவிடில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுதான் நேர்மையான செயலாயிருக்கும்.

2

கூடல் நகரில் தமிழ்நதி நீதி கேட்ட கதைக்கு வருவோம். தமிழ்நதியின் வழக்கே பிழை. வலுவற்ற அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கது. ஈழத்து அவலம் குறித்து எழுத்திலோ, நேர் பேச்சிலோ அக்கறைகாட்டாத தமிழக எழுத்தாளர்களை நான் அரிதாகவே சந்தித்திருக்கிறேன். தமிழ்நதியோ தமிழக எழுத்தாளர்கள் அக்கறை காட்டுவதில்லை என்கிறார். தருமனும் துரியோதனனும் நகர்வலம்போன ஒரு பாரதக் கதை ஞாபகத்திற்கு வருகிறது.

கூட்டத்திலிருந்த தமிழ்நதியைத் திடுக்கடிமடக்காகக் கலந்துரையாடலில் கலந்தகொள்ள அழைத்திருக்கிறார்கள். எழுந்துபோன தமிழ்நதிக்கோ என்ன பேசுவதென்றே முதலில் புரியவில்லை. பதற்றப்பட்டுப் பிரபஞ்சனிடம் கேட்டிருக்கிறார். பிரபஞ்சனோ ஏதாவது ஆம்/ இல்லை என்று சொல்லிச் சமாளியுங்கள் என்றிருக்கிறார். இது தமிழ்நதியே அன்று நடந்ததைக் குறித்துத் தனது பதிவில் எழுதியிருப்பது. ‘சமாளிப்பதற்காக’ ஏன் தமிழகத்துப் படைப்பாளிகள் ஈழப் பிரச்சினை குறித்து கண்டுகொள்வதில்லை என்றொரு வலுவற்ற கேள்வியை தமிழ்நதி வீசியிருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன் தனது அகப் பக்கத்தில் ஈழப் பிரச்சினையில் அக்கறைகொண்ட எழுத்தாளர்களின் பெயர்களை தமிழ்நதியின் கேள்வியை முன்வைத்துப் பதிவுசெய்திருக்கிறார். ஆனால் ஈழப்பிரச்சினையில் ஈடுபாடுகொண்ட, அதை எழுதியவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமானது. எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், மங்கை, மறைந்த வள்ளிநாயகம், கே.ஏ. குணசேகரன், ரவிக்குமார், கண்ணன் எம், கவிதாசரண், ம. மதிவண்ணன், சுகுணா திவாகர், ஜமாலன், குட்டி ரேவதி என்று பட்டியல் போட்டு மாளாது. குறிப்பாகத் தமிழ்நதியால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஆதவன் தீட்சண்யா புதுவிசை நேர்காணல்களிலும் தலையங்கங்களிலும் அதைச் செய்தார். இலங்கை அரசு செய்வதை இனப்படுகொலை என வரையறுக்க முடியாது என்ற சுசீந்திரனின் நேர்காணலை மட்டுமல்ல இலங்கை அரசு செய்தது இனப்படுகொலையே எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் எனது நேர்காணலையும் புதுவிசைதான் வெளியிட்டது.

தமிழ்நதி விதிவிலக்காயிருக்கும் எழுத்தாளர்களைக் குறித்து அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தாலும் கூட அந்த விதி விலக்குகள் தமிழகத்தில் மட்டுமல்ல நம்மிடையேயும் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அ. முத்துலிங்கம் பொ. கருணாகரமூர்த்தி என இங்கேயும் ஒரு பட்டியல் உண்டு. அதேபோல ஆதவன் தீட்சண்யா கேட்ட கேள்விகளின் நியாயத்தை அதிர்ச்சி என தமிழ்நதி புறந்தள்ளவும் முடியாது.

முன்பு மலையகத் தமிழர்களை நாம் வஞ்சித்தது உண்மை என்கிறார் தமிழ்நதி. முன்பல்ல இப்போதும் அதுதான் நடந்தகொண்டிருக்கிறது. தமிழ்நதியின் கடவுள் வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் சொன்ன அருள்வாக்கு எனக்கு இன்னமும் மறக்கவில்லை. தமிழீழம் அமைந்ததன் பின்னாகத் தமிழீழத்திற்கு வெளியே வாழும் மலையக மக்கள்மீது இனவாதிகள் ஒடுக்குமுறைகளை நிகழ்த்தினால் என்ற கேள்விக்கு “அதை அந்தப் பகுதி சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என மலையக மக்கள் தங்கள் பாதுகாப்பை இலங்கை அரசிடம் தேடிக்கொள்ளமாறு பதில் சொன்னார் பிரபாகரன். இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை என்று ஆதவன் எழுப்பிய கேள்விகள் சமகாலத்திற்குமான கேள்விகளே. இதற்கெல்லாம் தமிழ்நதி பதில் சொல்ல முயலாமல் “எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்” என்று தமிழ்நதி நாடகீயத்தனமாகப் பேசுவதற்கெல்லாம் பொருள் ஏதுமில்லை. முதலில் திறந்த மனதோடு கேள்வியை எதிர்கொள்ளப் பழகுங்கள் தமிழ்நதி.

“நீங்கள் கேட்காததால் நாங்களும் கேட்கமாட்டோம்” என்ற தொனிப்பட தான் பேசவில்லையென்று ஆதவன் விரிவாக எழுதியிருக்கும் பதிற் கட்டுரைக்கும் அவர் அதில் எழுப்பியிருக்கும் கேள்விகளிற்கும் தமிழ்நதி பதிலளிக்க வேண்டும். ஏனெனில் விவாதத்தைத் தொடக்கி வைத்தவர் தமிழ்நதிதான். அதைவிடுத்து ஆதவன் தனிநபர் தாக்குதல் செய்கிறார், நேரமின்மை என்றெல்லாம் தமிழ்நதி ஒளிந்துகொள்ள முயற்சிப்பதையே கபடம் என்கிறேன்.

அனுதாபம் என்ற ஆயுதத்தின் துணைகொண்டு பொறுப்பற்று தமிழ்நதி பேசிவருவதற்கு இன்னொரு உதாரணம் ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் அவர் சமீபத்தில் பிராண்டி வைத்தது. உலகளவில் ஆயுதப் போராட்டத்தின் தோல்விகள், சாத்தியமின்மைகள், நியாயமின்மைகள் குறித்தெல்லாம் ஆழமான விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. காந்தியார் மறுவாசிப்புச் செய்யப்படுகிறார். பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ் போன்றவர்கள் ஆயுதப் போராட்டத்தின்மீது இப்போது வேறு நிலைப்பாடுகளிற்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலைப்பாடுகள் மா.லெ. குழுக்களால் கடுமையாக விமர்சிக்கவும் விவாதிக்கவும்படுகின்றன. அதிகாரத்தைப் பலாத்காரத்தால் கைப்பற்றுவது என்பது செவ்வியல் மார்க்ஸியத்தின் பாலபாடம். ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை ஒரு மார்க்ஸிய இயக்கம் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மாபியா இயக்கத்தை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தை தமிழ்நதி முன்னிலைப்படுத்துவது அட்டூழியம். ஆயுதப் போராட்டம், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்றெல்லாம் தமிழகத்துத் தமிழ்த் தேசியத் தம்பிகள் பேசுவது வக்கிரம். அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்த நெருப்பில் குளிர்காயத் துடிக்கும் அயோக்கியத்தனம்.

மறுபடியும் மதுரைக்கே வருவோம். ஆதவன் ஷோபாசக்தியின் குரலில் பேசினார் என்று யாரோ சொன்னார்களாம். அதையும் தமிழ்நதி தனது கட்டுரையில் பதிவு செய்கிறார். ஆதவன் போன்ற ஒரு ஆளுமைக்கும் களப்பணியாளருக்கும் என்னிடமிருந்து எதையும் இரவல் வாங்க வேண்டிய தேவையில்லை. இப்படிச் சொல்வது தமிழ்நதியின் குரலில் தியாகு பேசுகிறார் என்று சொல்வதைப் போன்றது. இது தமிழ்நதிக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் ஆதவன் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் என்றவாறான நச்சுத்தனங்களைத் தனது வலைப்பதிவில் தமிழ்நதி கசியவிடுகிறார். என்ன அயோக்கியத்தனம் இது.. த்தூ!

ஆதவன் உங்கள் நண்பர்தானே ஆதவன் பேசியதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று தமிழ்நதி என்னிடமே நேரடியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதெல்லாம் என்ன லொஜிக் என்றே எனக்குப் புரியவில்லை. அன்று அங்கே ஆதவனை எதிர்த்துப் பேசியவர்களான பேராசிரியர் வீ.அரசுவும் லெனா குமாரும் எனக்கு ஆதவனைக் காட்டிலும் மிக நெருங்கிய பழக்கமும் நட்புமுடையவர்கள். தி.கண்ணனும் நண்பர்தான். அதற்காக அவர்களும் எனது குரலில் பேசினார்கள் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் என்ன மண்ணாங்கட்டி விவாதம் என்றே எனக்குப் புரியவில்லை. ஆதவன் பேசியது தவறென்றால் அதை மறுத்துப் பேசுவதை விடுத்து அவர் எனது குரல் என்றெல்லாம் சொல்வது கபடமானது.

தமிழ்நதி மக்களுக்காக அழுவது போலித்தனமானது என்பதைப் புலிகளால் செய்யப்பட்ட பாஸிசச் செயற்பாடுகளை முன்வைத்து விளக்கினேன். தமிழ்நதி துடிக்கப் பதைக்க பொய் பேசுவார் என்பதை அவரின் கீற்று நேர்காணலை முன்வைத்துச் சொன்னேன். அவர் அவதூறுகளைக் கட்டமைப்பதின் மூலம் தன்மீதான விமர்சனங்களைத் திருப்ப முயல்கிறார் என்பதை அவர் அனுமதிக்கும் ஆதாரங்களற்ற பின்னூட்டங்களை வைத்துச் சொன்னேன். ஈழத்துப் பிரச்சினையில் தமிழகத்துப் எழுத்தாளர்களின் ஈடுபாட்டைப் பட்டியலிட்டுக் காட்டி தமிழ்நதி எழுப்பிய கேள்வியே தவறானது எனவும் சொன்னேன்.

புலிகளை நியாயப்படுத்துவது, அரசியல் புரிதலோ மிலிட்டரி சார்ந்த அடிப்படை அறிவோ இல்லாமல் ஆயுதப் போராட்டம் குறித்துக் கருத்துரைப்பது, தமிழகத்து எழுத்தாளத் தோழர்களின் ஈழப் பிரச்சினையின் மீதான சீரிய பங்களிப்பைப் புறக்கணித்துக்கொண்டே சீமான், சுபவீ போன்ற உணர்ச்சிகரப் பேச்சாளர்களை முன்னிலைப்படுத்துவது போன்ற தமிழ்நதியின் கருத்துகளை அரைகுறை என்று மட்டுமே மதிப்பிட முடியும்.

“நான் அழுகிறேனே” என்பதற்கு அப்பால் பொருட்படுத்தத்தக்க அரசியற் கருத்துகள் எதையும் தமிழ்நதி இதுவரை வைத்ததில்லை. அழுவதெல்லாம் ஒரு அரசியலா என்ன! ஆனால் அந்தப் வெற்றுப் புலம்பலிலிருந்து ஒரு அனுதாப அரசியலைத் தன்னைச் சுற்றிக் கட்டமைக்க தமிழ்நதி முயல்கிறார். அனுதாப அலையில் தேர்தல் அரசியலில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். விடுதலை அரசியலுக்கு அழுவாச்சியும் பொய்யும் உதவாது. விடுதலை அரசியலுக்கு உண்மையும் தார்மீகமுமே அடிப்படையானவை.