கடிதம்: பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு‏

கடிதங்கள்

பா.செயப்பிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது.

ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு.

இன்று உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் “வீரப் போராட்டத்திற்கும்” அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதற்குக் காரணம், புலிகள் மட்டுமே ஆண்மையுடையர்கள், களத்தில் இறங்கி போர்ப் புரியக்கூடிய வீரர்கள் என்கிற வசீகரக் கட்டுமானம் இருக்கிறது. அந்தக் கட்டுமானம் புலிகளின் தவறுகளைச் செல்லாமாகக் கூட கண்டிக்க விடாதபடி மிக இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுருக்கிறது. இன்று புலிகளைத் தவறாக பேசினாலோ, அல்லது அவர்களுக்கு முரணாகப் பேசினாலோ, “பச்சை துரோகி” என்கிற பெயர் கிடைக்கும் அளவிற்கு ஈழப் போராட்டத்தின் மீது புலிகளின் ஆளுமை படிந்துள்ளது.

ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றாவர்கள் ஈழப் போராட்டத்தை, புலிகளின் அந்த வசீகரக் கட்டுமானத்தை உடைத்து, நியாயமான அரசியல் அணுகுமுறைகளுடன் வெளிப்படுத்துவதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. புலிகள் மட்டுமே வீரர்கள், உயிர் தியாகம் செய்து தனி ஈழத்திற்காக போராடியவர்கள் என்கிற விமர்சனத்துடன் மட்டுமே ஈழப் போராட்ட்டத்தைக் கடந்து போக வேண்டும் என்கிற அவசியம் சமூகத்தால் வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் மீள்பார்வையும் மறுபரிசீலனையும் அவசியம் வேண்டும்.

கே.பாலமுருகன்
மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/