-ஷோபாசக்தி
முற்றுகைக்குள் சிக்கியிருந்த கிளிநொச்சி ஜனவரி 2ம் தேதி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தது. அதே நாளில் கொழும்பில் வான்படைத் தலைமையகம் முன்பாக மனித வெடிகுண்டு வெடித்தது. அன்று முழுவதும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கச் சென்று ஒருகண் மூடியபோது ‘த சண்டே இந்தியன்’ பத்திரிகையிலிருந்து போன் செய்து ‘பொங்கல் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா’ எனக் கேட்டார்கள். பொங்கல் வரப்போவது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது.
போருக்கு முந்தைய ஈழத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் குறித்த சித்திரத்தை எஸ்.பொ. தனது ‘நனவிடை தோய்தல்’ நூலில் சுவைபட எழுதியிருப்பார். பொங்கல் நாளின் குதூகலமும் கிளர்ச்சியும் அந்தச் சித்திரத்தில் விரிந்து கிடக்கும். நான் சிறுவனாயிருந்தபோது நாங்கள் வேதக்காரக் குடும்பம் என்பதால் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. பக்கத்திலிருந்த சைவக்கார வீடுகளிலிருந்து பொங்கலும் சுண்டலும் சுடச்சுட எங்கள் வீட்டுக்கு வரும். எண்பதுகளில் சர்ச்சுகளில் பொங்கலிடும் வழக்கம் தொடங்கியது. தைப்பொங்கல் இந்துப் பண்டிகை கிடையாது அது தமிழர்களின் பண்டிகை என்றார்கள் பாதிரிகள்.
பொங்கல் தமிழர்களின் பண்டிகை கிடையாது என்பதோடு எந்தப் பண்டிகையையும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையாகக் கருத முடியாது என்பதே எனது கருத்து. இல்லை பொங்கல் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையே என்றால் எப்போதிருந்து அது அவ்வாறிருக்கிறது?
ஈழத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தலித் பெண்களுக்கு மேலாடை அணியத் தடையிருந்து. ஆண்களுக்கு முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டத் தடையிருந்தது. கோயிலுக்குள் போக முடியாது, வெளியேயிருந்து தேங்காயும் உடைக்கக் கூடாது. நகை அணியக்கூடாது, மங்கல வாத்தியங்கள் உபயோகிக்க முடியாது. அப்படியானால் தலித் மக்கள் அரைநிர்வாணிகளாகக் கூனிக் குறுகி நின்றா தமிழர் பண்டிகையில் பொங்கலிட்டிருப்பார்கள்! உண்மையில் அந்த தமிழ்ப் பண்டிகையின் போது அவர்கள் கமக்காரர்களின் வீட்டின் பின்புறம் குந்தியிருந்து சிரட்டையில் ஆறிப்போன பொங்கலை இரந்து தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இதற்குப் பெயர் தமிழ் விழாவா? இல்லை, சாதி இந்துக்களின் விழாவா?
அப்போது ஈழத்தில் பொங்கல் பண்டிகை சைவ வெள்ளாளர்களின், இடைநிலைச் சாதிகளின் பண்டிகையாக மட்டுமேயிருந்தது. 1950களில் தலித் மக்களின் போராட்டத்தால் நகரங்களிலிருந்த சில இந்துக் கோயில்கள் திறந்துவிடப்பட்டதன் பின்னாக நகரம் சார்ந்த தலித் மக்களிடமும் இந்துப் பண்டிகைகள் கொண்டாடும் வழக்கங்கள் உருவாகின. அப்படியாரு தலித் குடும்பத்தில் நடந்த பொங்கல் பண்டிகையைத்தான் எஸ்.பொ. தனது நூலில் சித்திரிக்கிறார்.
தமிழ்ச் சமூகத்தில் ஊரும் சேரியும் பிரிந்திருக்கும்வரை, கோயில் கருவறைகளுக்குள் தலித்துகளும் பெண்களும் பிரவேசிக்காதவரை, தீண்டாமையும் தீட்டும் ஒழியாதவரை தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்டிகை என்றெல்லாம் பேசுவது அயோக்கியத்தனம். ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தையும் மரபுகளையும் அவர்கள் மெல்ல மெல்லத் தமிழ்க் கலாச்சாரமாக நிறுவ முயல்வார்கள். நாம் தான் துள்ளத் துடிக்கக் கேள்விகளை எழுப்பி அவற்றை மறுக்க வேண்டியிருக்கிறது.
அய்ரோப்பாவில் தை மாதத்தில் மதியத்திற்குப் பின்புதான் சூரியன் எழும். சிலசமயம் நாள்முழுதும் வராமலேயேயிருந்துவிடும். சூரியன் வரும்வரை நாம் வேலைக்குப் போகாமல் காத்திருக்க முடியுமா! வேலை இல்லாதவர்கள் வீட்டுக்குள் காஸ் அடுப்பில் பொங்கல் செய்ய வாய்ப்புண்டு. அதிலொன்றும் கெடுதலில்லை. ஏனெனில் பெரும்பாலான அய்ரோப்பியத் தமிழர்களிடம் காலையுணவு அருந்தும் வழக்கம் கிடையாது. அன்றொரு நாளிலாவது அவர்கள் காலையில் சாப்பிடட்டும். ‘அல்சர்’ தள்ளிப்போகும்.
பொங்கல் பண்டிகையால் புலம் பெயர் நாடுகளிலுள்ள இந்துக் கோயில்களுக்கும் தமிழர்கள் கடைகளுக்கும் ஓரளவு வியாபாரம் நடக்கும். இப்படியான விழாக்களில் இங்குள்ள தமிழர் கலாச்சார அமைப்புகள் கணிசமான காசு பார்த்துவிடுவதுண்டு. போரிலேயே இலாபம் சம்பாதிக்கத் துடிக்கும் அவர்கள் பொங்கலை விட்டுவிடுவார்களா என்ன. இம்முறை லண்டனில் நடக்கவிருக்கும் பொங்கல் விழாவுக்கு தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களும் ‘கலக்கப்போவது யாரு’ கோமாளிகளும் வந்து தமிழர் பண்பாட்டை வளர்க்கவிருக்கிறார்கள். பொங்கல் விழாக்களைக் கொண்டாடும் அய்ரோப்பியத் தமிழ் கலாச்சார அமைப்புகள் இது தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் நிகழ்வெனக் கூறி நகரசபைகளில் இருந்து பணத்தைச் சுருட்டிச் சட்டைப்பையில் வைத்துவிட்டு விழாவுக்கு வருபவர்கள் நக்குவதற்கு நாலு பருக்கை பொங்கல் கொடுப்பார்கள். திரையரங்குகளில் பொங்கல் படங்கள் வெளியாகும். ‘ஐங்கரன்’ முதலாளி இன்னொரு சுற்றுப் பெருப்பார். அய்ரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். கமல்ஹாஸன் உலகமகா கலைஞர், ஷங்கர் உலக மெகா கிழிஞர் போன்ற நகைச்சுவை நிகழ்வுகளும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இருக்கும்.
இங்கே வியாபாரிகளுக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கும் மதத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களுக்கும் நம் தாயகத்திலே ஒரு கொடிய போர் நடந்துகொண்டிருக்கிறது என்ற சூடு சொரணை இல்லாதவர்களுக்கும் மட்டுமே பொங்கல் தினம் பண்டிகை நாள். மற்றவர்களுக்கு அது மற்றுமொரு நாள்.
அய்ரோப்பிய தமிழர்கள் மத்தியிலிருக்கும் கலாச்சார அமைப்புகள் அயோக்கியத்தனத்தின் உச்சங்கள். உணர்வுபூர்மாக மாவீரர் நாளை அனுட்டிப்பது மாதிரி நடிப்பார்கள். ஏதாவது ஒரு போர் முனையில் அய்ம்பது புலிகள் செத்து விட்டார்கள் என்ற செய்திவரும்போது இவர்கள் தமிழர் விளையாட்டு விழா நடத்தி, அங்கே கொத்து ரொட்டியும் ஒடியற் கூழும் விற்றுக் கேளிக்கை நடத்திக்கொண்டிருப்பார்கள். வன்னியில் பசியால் சனங்கள் செத்துக்கொண்டிருக்க இவர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை வீதியில் உடைத்துத் தேரில் குளவிக்கல்லை வைத்து இழுத்து வருவார்கள். அன்றைய ஒரு நாள் செலவில் முழு வன்னிக்கும் ஒரு வாரத்திற்கு உணவு வழங்க முடியும். தாயகத்தில் குழந்தைகள் பாலில்லாமல் மடியும்போது இந்தக் கொழுப்பேறியவர்கள் பிரான்ஸ் லூர்து மாதா சர்ச்சிலும் ஜெர்மனி கேவலார் மாதா கோயிலிலும் புளியேப்பக்காரப் பக்தர்களுக்குப் பிரியாணிப் பொட்டலங்கள் வழங்கிக்கொண்டிருப்பார்கள்.
யுத்தத்தின் பொருட்டும் அகதி வாழ்வின் பொருட்டும் ஒவ்வொரு தனி மனிதனும் தனது இயல்பான விருப்புகளை ஒறுப்புச் செய்ய வேண்டுமென நாம் சொல்ல முடியாது. ஆனால் தமிழர் பண்பாடு, தமிழர் கலை வளர்ச்சி என்று சொல்லிச் சொல்லியே ஊர்ப்பணத்தில் கூத்தடிக்கும் அமைப்புகளின் அட்டகாசத்தைத்தான் நம்மால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொங்கலுக்கு இந்தப் பாவிகள் இன்னும் என்னென்ன கூத்தடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
ஈழத்தின் வடபகுதி முழுவதும் நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரத் தடை அமுலிலுள்ளது. வேலைகள் கிடையாது, கடலில் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு, அதீத விலைவாசி உயர்வு, மருத்துவ வசதியின்மை, கல்வியின்மை, காரணமற்ற கைதுகள், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், விமானக் குண்டு வீச்சுகள் என்று ஒரு தேசமே திறந்தவெளிச் சிறைச்சாலையில் தவித்துக்கொண்டிருக்கையில் நமக்குப் பொங்கல் ஒரு கேடா எனபதுதான் புலம்பெயர்ந்த சுரணையுள்ள தமிழர்களின் மனநிலை. இதை உணருவதற்கு சுரணைகூடத் தேவையில்லை கொஞ்சம் மனிதநேயம் இருந்தாலே போதுமானது.
ஈழத் தமிழர்களுக்குப் பண்டிகைகளும் கேளிக்கைகளும் களியாட்டங்களும் பழைய கதைதான். பண்டிகை நாட்கள் வழங்கும் கிளர்ச்சியும் இனிமையும் இனி இல்லையா எனக் கேட்பீர்களானால் இருக்கிறது நண்பர்களே என்பதே எனது பதில். பொங்கல் நாளில் எஸ்.பொவின் ‘நனவிடை தோய்தல்’ நூலில் வரும் பொங்கல் குறித்த சித்திரத்தைப் படியங்கள். இப்போது படித்தாலும் அது திகட்டாது. அப்படியானால் சித்திரைப் புத்தாண்டுக்கு என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள். அது குறித்தும் எஸ்.பொ. ‘தேர்’ என்று அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தீபாவளிக்கு? இருக்கவே இருக்கிறது கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’.
சன் டே இந்தியனுக்கு எழுதியதற்கு பதில் துண்டறிக்கை போட்டு தமிழ்நாட்டு கோமாளிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டுரை
‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்றது’ என்றொரு பழமொழி நம்மவர் மத்தியில் வழக்கத்தில் உண்டு. இன்று அது எனக்கு மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.
வருசக்கணக்கா செத்தவீடு கொண்டாடினது காணும்
செத்த எல்லாருக்கும் பொதுவா பொங்கித் தெளிச்சுப்போட்டு ஆகவேண்டியதைப்பாருங்கோ!
உங்கள் கட்டுரையின் பல செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது…
வடகிழக்குத் திசைகாட்டியில்
“சுடுகாடு இங்கே”.
எப்போதும் கைகாட்டி ஒரு திசை தான் காட்டும்,நீங்கள் கவிதையில் சொன்னது போல வடக்கும் கிழக்கும் சுடுகாடுதான், அதனை எவராலும் மறுக்க முடியாது.கற்பிட்டி சுடலைக்குள் எரிந்த டெலோ போராளிகள்,கண்நோய் வந்திருந்து படுத்திருந்த போராளிகள்,கழுத்தில் டயர் போடப்பட்டு கல்வியன்காட்டில் அரைகுறை உயிர்களாக எரிகப்பட்ட ரெலோ போராளிகள் இப்படியான மரணங்கள்,அருணா என்கிற போராளி காட்டிய விசுவாசம், புளட் இயக்கம் போட்ட தீப்பொறி உறுப்பினர்கள்,இந்திய கைகூலி ஈரோசால் மலையக மக்களை புரட்சிக்காக அணி திரட்டும் வேலையில் ஈடுபட்ட வேளையில் சுட்டு கொல்ல பட்ட நெப்போலியன், வடமராட்சியில் தாஸ் குரூப்பால் கொல்லப்பட கச்சான் வியாபார குடும்பம்,
ஜெகன் டெலெ தலைவர் , சுடப்பட போது அவரை தூக்கி சுமந்த மக்களை சுட்டது,இதனை எல்லாம் மறந்துவிட கூடாது. அடிப்படையில் வடக்கு கிழக்கு என்பது சுடுகாடுதான்.இன்றும் அதே வாடை வீசுகிறது,மாற்றுவோம் விதியை ,எம்ஜீ ஆர் புலிகளை வளர்த்தார்.கருணாநிதி டெலோ வை வளர்த்தார்,கம்னீசிய அமைப்புக்கள் ஈபிரல்வ் வை வளர்த்தன,ஆனால் ரோஓ போராளி இயக்கத்துக்கிடையில் பகைமையை வளர்த்தது,,,,,,,
இன்றும் அறுவடை செய்கிறோம்
Eccelent essay MR. Shoba Sakhi, a must read blog for every srilankan tamil
Brilliant post shoba. Although you are correct about the Tamil ‘cutural’ organisations, members of the ordinary Tamil diaspora are looking for distractions from their mechanical existence here in the West and their pain and anguish is in no way less than that of people from the war ridden Tamil homelands.
ஷோபா அண்ணா !
உங்கள் கோபம் மற்றும் வலி பெரியது.
அயல்நாட்டை விடுங்கள்…எங்கள் தமிழ்நாட்டில் புலிகளுக்கு குரைக்கும் பல அரசியல்வாதிகள்,திடீர் தமிழுணர்வாளர்களைப் பார்க்கும்போது எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும்.இப்போதெல்லாம் தமிழ்நாட்டுப் சுவரொட்டிகளில் பெரியார், அண்ணாவுடன், பிரபாகரனின் படமும் ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. இதில் சிலர் ஒரு படி மேலே போய் ராணுவ சீருடையில் பொம்மைத் துப்பாக்கியுடன் போஸ் தருகிறார்கள்.
இவர்களை காமெடி பீஸ் என்று அப்படியே விடுவதா ? இல்லை என்ன செய்வது என்றே ஒன்றும் விளங்கவில்லை.
ரமணர் சொன்னது போல் மெளனமாக பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றூம் எனக்கு தெரியவில்லை.
shoba anna every clown tamil politicians(india) and those who forget the humanity must read this article.
Your article was exclleent and erudite.