-தர்மினி
கடிகாரம் பழுதடையவில்லை
ஆயினும் முட்கள் நகரவில்லை
நித்திரை நித்திரை…….
தொலைபேசி ஒலிக்காத நித்திரை.
ஆயுதங்கள் அத்தனையும்
பெரும் எரிமலை வாயில் குவிக்கப்பட்டு
சமைக்கப்படுகின்றன.
அவை உருகிக் குழம்பாகி வழிகின்றன.
திடீரென,
ஆறாக மாறிப்பாய்ந்தோடுகிறது.
“வரட்சியில்லை”
“வறுமையில்லை”
“பசியில்லை”
இந்தக் கூவல்கள் மட்டுமே கேட்கின்றன.
சித்திரவதைச்சாலைகள்
சிறைக்கூடங்களின் பூட்டுக்கள்
பஞ்சு போலப் பறக்கின்றன.
தவறுமில்லைத் தீர்ப்புமில்லை,
தண்டனைதரக் கொம்பு வைத்தவன் எங்குமில்லை.
ஆகா!
பெருஞ் சிரிப்போடு
படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தேன்
பார்த்துச் சிரித்தது இருட்டு.
கடிகாரம், தொலைபேசி, எரிமலை வாயில் உருகும் ஆயுதங்கள் – சால்வடார் டாலியின் ஒவியத்தை நினைவு படுத்தும் படிமங்கள். “தவறுமில்லை தீர்ப்புமில்லை, தண்டனைதரக் கொம்புவைத்தவன் எங்குமில்லை” – ஆக்ரோஷமான வரிகள். தர்மினி நிறைய எழுத வேண்டும். – ராஜன் குறை
ஆக்ரோசமான வரிகள்தான்.
பார்த்துச்சிரித்தது இருட்டு என்ற கடைசி வரியைநீக்கியிருந்தால் கவிதை இன்னம் கனமாய் இருந்திருக்கும்.
பெருஞ்சிரிப்போடு
உருண்டு விழுந்தேன்
அந்தக் கனவை இருட்டும் உணர்ந்திருக்குமோ?அது தான் எள்ளி நகையாடிச் சிரித்ததோ?இருட்டு மட்டுமே கண் முன் தெரிவதாகவும் யோசிக்க வைக்கிறது.
நம்பிக்கையின் அடிப்படையில் துளிர்ப்பதே வாழ்க்கை. மனதில் இருள் இல்லாவிட்டால்….இருட்டு ஒன்றும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு இரவுக்கும் நிச்சயம் ஒரு பகலிருக்கும்.
நல்லவைகள் அனைத்துமே கனவுகள்தாலன் தமிழர்க்கு மட்டும்.
வணக்கம், நல்ல கவிதை என்ற முத்திரை தரலாம்..(கொஞ்சம் மாற்றியமைத்தால்) ஆரம்பம் முதல் ஆக்ரோஷமான வரிகள் இறுதில் ஜடச் சொற்களாய் ஆகிவிட்டன… வாழ்த்துகள்..மேன்மையடைய!!!
-யுவபாரதி-