‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘தலைகீழ்’ எனும் தந்தை பெரியாரின் 35ஆவது நினைவேந்தல் 28-12-2008 ல் பாரிஸில் நடைபெற்றது. நிகழ்வு பி.பகல் 2மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தபோதும் ‘வழமைபோல’ தாமதித்தே நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளவென லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர்.
தோழியர். விஜி தலைமை வகித்து நிகழ்வை நெறிப்படுத்தினார். அவர் தனது தலைமையுரையில் “பெரியாரை நினைவு கூர்வதும் பெரியாரியல் குறித்த ஆய்வுகளும் புகலிடத்தில் இது வரை நடைபெறாத நிகழ்வுகளாகும். அந்தவகையில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியானது இன்று பெரியார் நினைவேந்தலைச் செய்வதும் பெரியாரியல் குறித்துப் பன்முகப் பார்வைகளில் உரைவீச்சுக்களை நெறிப்படுத்தியிருப்பதும் முக்கியமானது” எனக் குறிப்பிட்டார். “எம் சமூகத்தில் இடதுசாரிகளால் கடக்க முடியாத புள்ளிகளைப் பெரியார் கடந்தவர். குறிப்பாக சாதிக்கும் இந்துமதத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பை இடதுசாரிகள் அடக்கிவாசித்த நேரத்தில் அதைப் பகிரங்கமாகப் போட்டுடைத்தவர் பெரியார். அவரது கொள்கைகளும், சிந்தனைகளும் சமூகத்தில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அந்தவகையில் பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை” எனப் பெரியாரின் பெண்களின் மேம்பாடு குறித்த சிந்தனைகளை நினைவுபடுத்தி விஜி பேசினார்.
அடுத்தாக இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (SLDF) முன்னணிச் செயற்பாட்டாளரான நிர்மலா ‘பெண்ணியமும் பெரியாரும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்தியத் தேசியவாதம், காலனிய எதிர்ப்பு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என விரிந்த அவரது உரையில் தேசியவாத்தில் பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை மிக விரிவாகவும் அதன் எதிர்மறை கருத்தியல்களையும் கேள்விக்குட்படுத்திப் பேசினார். “அய்ரோப்பிய தேசியவாதக் கருத்தியலின் மறு பிரதியாக்கச் செயல்பாடாகவே இந்தியாவிலும் தேசியவாதம் கட்டமைக்கப்பட்டது. இந்தியத் தேசியவாத உள்ளடக்கத்துள் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி எந்தவிதமான கரிசனையும் இருந்ததில்லை. இந்தியக் கலாச்சாரத்தின் காவிகளாக பெண்களை முன்னிலைப்படுத்தும் செயல்களையே இந்தியத் தேசியவாதம் மேற்கொண்டுள்ளது. இந்தியப் புனிதங்கள் அனைத்தையும் பாதுகாப்பதும், போற்றுவதும் பெண்களின் கடமை என்றே கொள்ளப்படுகின்றது. சாதியம் சார்ந்த பிரச்சனைகளிலும் இந்தியத் தேசியவாதம் பிற்போக்குப் பாத்திரத்தையே வகித்தது. 1920-30 களிலேயே பெரியார் பெண்கள் உரிமை குறித்தும்,அவர்கள் விடுதலை குறித்தும் மிக ஆழமான பார்வை கொண்டவராக இருந்துள்ளார். சாராம்சவாதத்தில் பெண்கள் வேறு, ஆண்கள் வேறு எனும் கருத்தியலையும் பெரியார் மறுத்துப் பேசியும், எழுதியும் உள்ளார். பெண்க ளை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் கருவிகளில் பிரதான ஒடுக்குமுறைக் கருவியாக இருப்பது குடும்ப உறவுமுறை தான் என்பதை பெரியார் இனம் கண்டு கொண்டார். பெரியாரின் சமகாலத்து அய்ரோப்பியச் சிந்தனையாளர்களிடம் கூட பெரியாரின் பெண் விடுதலைக் குரலுக்கு நிகராக எவரையும் நாம் கண்டுவிட முடியாது. எழுபதுகளில் மேற்கில் எழுந்த புதிய அலைப் பெண்ணியவாதிகள் சொன்ன கருத்துகளைக் காலத்திற்கு முந்தியே பேசிய வியத்தகு சிந்தனையாளர் பெரியார்” என மிக விரிவான ஒப்பீடுகளுடன் நிர்மலா உரையாற்றினார்.
அடுத்ததாக என்.சரவணன் ‘பெரியார் என்ற பத்திரிகையாளர்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். “பெரியார் ஊடகங்களின் முக்கியத்துவம் பற்றி மிக நன்றாக புரிந்து கொண்ட மனிதர். ஊடகங்களினூடாக எவ்வளவு தூரம் மக்களை விழிப்புணர்வுக்கு தூண்டினார் என்பதை பெரியார் நடத்திய ‘குடியரசு‘ பத்திரிகைக் குறிப்புகளை நாம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அன்றைய காலத்தில் பார்ப்பனிய பத்திரிகைகளின் கருத்தியலுக்கு எதிராக பெரியார் ‘குடியரசு‘ பத்திரிகையை நடத்தினார்.நம் மத்தியிலே பல்வேறு பத்திரிகைகள் வெளிவருவது மிக அவசியமானது” எனக் குறிப்பிட்டார். மேலும் பெரியார் அவர்களின் ஒரு சில பத்திரிகைக் குறிப்புகளையும் வாசித்துப் புரியவைத்தார். அவர் பெரியார் பற்றி இறுதியாக குறிப்பிடும்போது “பெரியார் ஒரு பன்முகச் சிந்தனையாளர்” எனக்கூறினார்.
அடுத்ததாக ‘கலகக்காரத் தோழர் பெரியார்’ எனும் தலைப்பில் அசுரா உரையாற்றினார். “பெரியாருக்கு கலகக்காரன் என்ற அடையாளமே மிகப் பொருத்தமானது, அவரை ஒரு அரசியல்வாதியென்றோ, ஒரு சமூகப் போராளியென்றோ அழைப்பதைவிட கலகக்காரன் என்பதே அவருக்குப் பொருத்தமான பெயர். சாதியச் சமூகம் என ஒன்று இருக்கும்வரை அச்சாதியச் சமூகத்த்தை எதிர் கொள்ளும் ஆயுதமாக, ஆயுள்காலச் சிந்தனையாக இருக்கப்போவது பெரியார் சிந்தனை ஒன்றே. அறிவுத்துறை சார்ந்தவர்கள், ஜனநாயகப் பாதுகாவலர்கள், மாற்று இலக்கியம் பேசுபவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சாராரிடமிருந்து பெரியார் குறித்து இரண்டு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றதை நாம் அறிவோம். ஒன்று, பெரியாரும் தனிநாடு கேட்டவர் ஆகவே அவர் பேசியதும் தேசியமே என்பதாகவும், இரண்டாவதாக பார்ப்பனர் அல்லாத மேல்நிலைச் சாதியினருக்காகவே, அவர்களின் மேம்பாடுகளுக்காகவே பெரியார் போராடியதாகவும், டாக்டர். அம்பேத்கர் போன்று அடித்தட்டு மக்களான தலித்துக்களின் மேம்பாடு குறித்துப் பெரியார் அக்கறை கொள்ளவில்லை என்பதுமே அவர்மீதான விமர்சனங்களாக உள்ளது. அவ்விரு குற்றச்சாட்டுக்களும் தவறானவை.” தொடர்ந்த அசுரா பெரியார் திராவிட நாடு கோரியதற்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடுகளை பெரியாரின் உரையாடல்கள் மூலமாக விளக்கியதோடு பெரியார் எவ்வாறு தேசியவாதத்திற்கு முரணாகச் செயல்பட்டார் என்பதை விளக்கினார். அதேபோல் தலித் மக்களின் நலன்களுக்கான அவரது செயல் பாடுகளையும் பெரியாரின் உரையாடல்கள் மூலம் விரிவாக எடுத்துரைத்தார். ( அசுராவின் முழு உரையும் விரைவில் ‘தூ‘ இணையத்தத்தில் வெளியிடப்படும்.)
அடுத்த நிகழ்வாக சாதியொழிப்பையும் பெரியாரியச் சிந்தனைகளையும் முன்னிறுத்தி நோர்வேயிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களான ‘உயிர்மெய்’, ‘பறை’ சஞ்சிகைகளின் விமர்சன நிகழ்வு நடைபெற்றது. இதழ்கள் மீதான திறனாய்வை எம். பெளசர் நிகழ்த்தினார். முதலில் பெரியாரியலின் பன்முக வீச்சுக்களை நினைவுபடுத்தி இதழ்கள் மீதான திறனாய்வை அவர் தொடக்கினார். ‘”பறை’ சஞ்சிகை உள்ளடக்கத்தில் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கின்றபோதும் சிங்கள தேசியவாதத்தை கடுமையாக எதிர்க்கின்றது. ‘உயிர்மெய்‘ சஞ்சிகை மாறாக பெண்ணியக் கருத்தியலுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு தமிழ் தேசியத்தை கேள்விக்குட்படுத்தும் போக்கையும் மேற்கொள்வதையும் தமது திறனாய்வின் மையப்புள்ளியாக பெளசர் முன்னிறுத்தினார். புலம் பெயர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும் பெளசர் பேசினார். அந்தவகையில் ‘அம்மா’,’உயிர்நிழல்’, ‘எக்ஸில்’, ‘வடு’ ‘தூண்டில்’ போன்ற புகலிட ப் பத்திரிகைகள், சஞ்சிகைளின் முக்கியத்துவம் பற்றியும் விபரமாகக் கூறினார்.
“பறை சஞ்சிகையின் ஆசிரியர் இங்கு வந்துள்ளார். தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் வகையில் பறையில் கட்டுரை கவிதைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. புலிகளின் தனி ஈழக் கொள்கைகளை ஆதரிக்கும் வகையில் கூட கட்டுரைகள் வெளிவருவதை நீங்கள் அவதானிக்க முடியும்” என்ற பெளசர் ‘உயிர்மெய்’ சஞ்சிகையில் பானுபாரதியின் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் தமயந்தியின் சில கவிதைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். தமயந்தியின் புகைப்படங்கள் மிக அழகாக வந்துள்ளதையும் குறிப்பிட்டார். இறுதியாக பார்வையாளர்களின் கலந்துரையாடலுக்காகச் சில கேள்விகளை பெளசர் முன்வைத்தார். “தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஏன் தொடர்ந்து நிகழவில்லை? இதற்கான பதில்கள் எமக்கு தெரிந்தாக வேண்டும். அப்போராட்டத்தை தொடர்ந்தும் தக்கவைக்க முடியாததன் காரணம் என்ன? தமிழ்த் தேசியத்தையும் அதன் ஆயுதக் கலாச்சாரத்தையும் நாம் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தவேண்டும்” என்று மிக விரிவாக பெளசர் பேசினார்.
அடுத்த நிகழ்வாக பெரியர் நினைவுப் பேருரையை ஷோபாசக்தி நிகழ்த்தினார். “வறுமையும் துன்பமும் அடிமைத்தனமும் சமூக இழிவுகளும் இயல்பானவை, மாற்ற முடியாதவை என்ற நிலையில் அழுந்திக்கொண்டிருந்த ஒரு பின்தங்கிய கிராமத்திலிருந்த, கொம்யூனிஸ்ட் கட்சிகளினதோ வேறெந்த சீர்திருத்தவாதிகளினதோ குரலோ எட்டாத தீவிலிருந்த எனக்கு திராவிட இயக்கத்தினரது சினிமாக்களே இந்த இழிவுகளும் துன்பங்களும் இயல்பானவையல்ல என எனக்கு முதலில் சொல்லிக்கொடுத்தன. பராசக்தியும், இரத்தக்கண்ணீரும், நாடோடிமன்னனும்தான் அரசியல் வெளியில் எனக்குப் பாலபாடங்களாக அமைந்தவை” எனத் தனது உரையைத் தொடக்கிய ஷோபாசக்தி பெரியாரின் காங்கிரஸ் இயக்கச் செயற்பாடுகளில் தொடங்கி வைக்கம் போராட்டம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், பெரியாரின் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கை, பொதுவுடமைக் கொள்கைகளுக்கும் பெரியாருக்குமிருந்த உறவும் முரணும், பெரியாரின் எதிர்க் கலாச்சார செயற்பாடுகள், பெரியாரின் பெண்விடுதலைக் கருத்துகள் என்று விரிந்த தடத்தில் பேசினார்.
“பெரியாரின் தனிநாட்டுக் கோரிக்கையை வெறுமனே இனவழித் தேசியமாகவோ, மொழிவழித் தேசியமாகவோ நாம் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. பெரியாரின் தனிநாட்டுக் கோரிக்கை மொழிவழிச் சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள், தலித்துகள் போன்றவர்களை உள்ளடக்கியே எழுப்பப்பட்டது. அந்தக் குரல் இன்றைய ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின் குரல்போல இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் விலக்கிவைத்தோ அல்லது இன்றைய தமிழகத்துத் தேசியவாதிகளின் குரல்போல கலாச்சாரப் பாஸிசக் குரலாகவோ ஒலிக்கவில்லை. பெரியாரை வெறுமனே பகுத்தறிவாளராகவும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வகுப்புரிமைப் போராளியாகவும் மட்டுமே இன்று மைய அரசியலிலுள்ள பெரியாரிஸ்டுகள் அடையாளப்படுத்துகிறார்கள். இன்று பேசுவதற்கு எளிதான அந்த டிப்பார்ட்மென்டுகளை நாம் அவர்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு பெரியாரியலின் மற்றைய வீச்சுக்களான தேசியவாத எதிர்ப்பு, கலாச்சார மறுப்பு, குடும்பமுறை மீதான பெரியாரின் விமர்சனங்கள், கற்பு, காதல், ஒழுக்கம் மீதான அவரின் எள்ளல்கள் அந்த எள்ளல்களில் பொதிந்து கிடக்கும் ஆண்மை அழிவு மற்றும் பெண்விடுதலை போன்ற ஆயுதங்களை நாம் எமது கைளில் எடுக்கவேண்டியிருக்கிறது. பொதுப்புத்தியும் மரபும் சொல்லும் அரசியல் நாகரிகமும் தளுக்குப் பேச்சும் நமக்கானவையல்ல. அன்பே சிவமென்றால், சிவமே வெங்காயம் என்பார் பெரியார். கவிஞர் மதிவண்ணன் பெரியார் குறித்துச் சொன்னதுபோல வார்த்தைகளில் தேளை ஒளித்து வைத்திருக்கும் சாதுரியமும் தைரியமும் நமக்கு வாய்க்கவேண்டும்” என்று ஷோபாசக்தி தனது உரையை முடித்தார்.
நிகழ்வுகளை நெறிப்படுத்திய விஜி தனது நிறைவுரையாக தமிழ்நாட்டில் அண்மையில் காலமான தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அவர்களை நினைவு கூர்ந்தார். வள்ளிநாயகம் அவர்கள் பெரியார் சிந்தனைகளிலும், தலித் சமூகங்களின் விடுதலையிலும் ஈடுபாடுகொண்டவர் என்பதையும் கூறி அவரை நாம் இந்த நேரத்தில் நினைவு கோருவது அவசியமானது என்று கூறி தனதுரையை நிறைவுசெய்தார்.
இறுதி நிகழ்வாக ‘வெங்காயத் தேசியம்‘ எனும் பொருளில் கூட்டு விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வை தேவதாசன் நெறிப்படுத்தினார். “தேசியத்தை பெரியார் வெங்காயம் என்று பலதடவைகள் கேலி செய்துள்ளார். உலகத்திலே தேசப்பற்று என்பதே ஒரு ஒடுக்குமுறையாகவே இருந்துள்ளது. இந்தியாவில் இந்துத்துவக் கருத்துக்களே தேசியமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. இதில் இலங்கையில் சிங்கள அரசியல் தலைமைகளும், தமிழ் அரசியல் தலைமைகளும் தமது பங்கிற்கு தேசியத்தை முன்வைப்பவர்களாக உள்ளனர். இவர்கள் இருவருமே தமது அதிகார நோக்கங்களுக்காகவே தேசியம் பேசுபவர்களாக இருந்து வருகிறார்கள். யுத்தம் நடத்துபவர்கள் யாவருமே தேசிய வெறியர்களாகவே இருந்து வந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது” என தேவதாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
கூட்டு விவாதத்தில் முதலாவதாகக் கருத்துரைத்த புஸ்பராணி அவர்கள் பேசும்போது. புகலிடத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களே சாதிய உணர்வுகளை ஊட்டி வளர்ப்பதை தனது அனுபவத்தில் கண்டுவருவதாக கூறினார்.
வி.ரி இளங்கோவன், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஏன் தொடராமல் போனது என்ற பெளசரின் கேள்விக்குப் பதில் கூறினார். போராட்டம் இடை நிறுத்தப்பட்டதற்கான காரணங்களின் பின்னணிகள் பலவாறாக இருந்தபோதும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிளவுகளும். தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஆயுத மிரட்டல்களுமே தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் தடைப்பட்டதற்கான பிரதான காரணம் எனத் தெரிவித்தார்.
மனோ அவர்கள் தனது கருத்தைக் கூறுகையில் “பெரியாரின் சிந்தனைகளை நாம் எவ்வாறு வளர்த்தும் தாண்டியும் செல்வது என சிந்திக்கவேண்டும். பெளசர் கேட்ட கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியவாகளாக இருக்கின்றோம். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது சிந்தனைகளுக்கு இருந்த மதிப்பும், அதன் பயன்பாடுகளும் இன்று தமிழகத்தில் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது” என்றார்.
மனோ அவர்களின் கருத்துக்கு மாறாக கோவை நந்தன் அவர்கள் “தமிழகத்தில் பெரியாரின் வீச்சு மங்கிப் போயிருப்பதாகக் குறிப்பிட முடியாது. வட மாநிலங்களும் கர்நாடாகாவும் இந்துத்துவவ அரசியலால் ஆட்டிப் படைக்கப்படுவதைப் போல தமிழகத்தில் இந்துத்துவவாதிகள் செல்வாக்குப்பெற வாய்ப்பே கிடையாது. தமிழ் மண்ணை இந்துத்துத்துவ ஒவ்வாமையும் சகிப்புத்தன்மையும் வாய்ந்த நிலமாகப் பெரியாரியல் பண்படுத்தியிருக்கிறது” என்றார்.
தோழர் யோகரட்ணம் அவர்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர்வதற்கு தமிழ் ஆயுத இயக்கங்களே முதற் தடையாயிருந்தன என்றும் தமிழர் ஒற்றுமை என்ற வெற்று முழக்கத்தின் கீழே ஒடுக்கப்பட்ட சாதியினரின் போர்க்குரலை இயக்கங்கள் துப்பாக்கிமுனையில் அடக்கியதே வரலாறு என்றார்.
ராகவன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது. ஆரியம், திராவிடம் என்பதெல்லாமே கற்பிதம்தான். பெரியாரின் தேசியமும் வன்முறை உள்ளடக்கம் கொண்டதாகவே கருத இடமுண்டு, காரணம் தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர்களை விலக்கி வைத்த பெரியாரின் கொள்கைகளில் ஜனநாயகத்தன்மையை நாம் காணமுடியாது எனக் குறிப்பிட்டார்.ராகவனுடைய கருத்தையே நிர்மலா அவர்களும் ஆதரித்துப் பேசினார். அத்துடன் “பெரியாரின் திராவிடக் கருத்தை தவறாக கருதுபவர்கள் ஒன்றில் பார்பபனப் புத்தி கொண்டவர்களாகவும் அல்லது வெள்ளாளப் புத்தி கொண்டவர்களாகவுமே இருப்பார்கள்” என்னும் அசுராவின் பேச்சுக்கு தான் மறுப்புக் கருத்துடையவர் எனவும் கூறினார்.
அடுத்ததாக சுகன் கூட்டு விவாதத்தில் பங்கெடுத்து நீண்டதொரு உரையை வழங்கினார்: “நிர்மலா அக்கா, தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு முன்னுக்கு ஒரு முகமும் பின்னுக்கு ஒருமுகமுமாக இருமுகக்கடவுளை அழகாக உதாரணப்படுத்தினார். நமது வெள்ளாளர்களிற்கு ஆறுமுகம் கொண்ட கடவுள் உண்டு. கோவில் என்பது வெள்ளாளர்களிற்கு வணக்கத்தலம் மட்டுமல்ல. அது சமூக அதிகாரத்தின் அதிஉச்சமான வடிவம். அதிகாரமற்றவர்களாக ஏனைய சமூக மக்களை தொடர்ந்து வைத்திருப்பதன் ஆயுதவடிவம்.
அதிகார மறுப்பிற்கும் மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளும் பக்குவத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம் பெரியார். இரண்டு கோணங்களிலும் இங்கு பேசப்படவில்லை.ஈழச் சூழலில் எந்த வெள்ளாளன் அதிகார மறுப்பாளனாக இருந்திருக்கிறான்? இன்று இடதுசாரி அரசியல் பேசும் அல்லது சனநாயத்திற்கான அரசியல் பேசும் வெள்ளாளப் பின்னணியிலிருந்து வந்த, போராட்டப் பின்னணியிலிருந்து வந்த தோழர்கள் ஈழத்து அரசியலைப் பொறுத்தவரை கடைசிவரை அதிகாரத்தில் பங்குகொள்ளாத பெரியாரின் சுயமரியாதை இயக்கம்போல் தமக்கு நாத்திகத்தையும் தலித்துகளிற்கு அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தவேண்டும்” என்றார்.
பெரியாரின் 35வது நினைவேந்தல் நிகழ்வு முடிந்தபோது தோழர் ஒருவர் “இங்கே பேசப்பட்ட கருத்துகளெல்லாம் பதினைந்து வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் பேசப்பட்டவைதான்” என்று சலித்துக்கொண்டார். “அவர்களுக்கு புத்தர், சமணம், சித்தர்கள், ஜோதிபா பூலே, பாபாசாகேப் அம்பேத்கர், நாராயணகுரு என ஆழமான எதிர் அரசியல் மரபுண்டு. நமக்கு அவ்வாறான முன்னோடிகள் யாரும் கிடையாது, நாம் பெரியாரிலிருந்துதான் தொடங்கவே வேண்டியிருக்கிறது” என்றோம் நாம்.
-இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
02 ஜனவரி 2009
.
பார்ப்பனர்களின் குருகுலமான ஐஐடியில் இன்னமும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நுழைய முடியவில்லை. ஆசிரியர்களின் நிலையும் இதேதான். தெய்வ நம்பிக்கை உள்ள எஸ்.சி. எஸ்.டி. பி.சிக்கள் கோயிலில் அர்ச்சகராக முடியாது. பெண்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. அரசு சட்டம் போட்டாலும் பார்ப்பன உச்ச நீதிமன்றம் தடுத்துவிடும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்து செத்துப்போன வி.பி. சி மறைவைப்பற்றி எழுதும் இந்தியா டுடே பத்திரிகை சமுக அடுக்கை குலைத்தவர் என்று வசைதான் பாடியது. சாதி தீண்டாமை என பார்ப்பனரல்லாத 97 சதவீத மக்களை விலக்கி வைத்துவிட்டு ஒரு சமூக அநீதியை பார்ப்பனர்கள் செய்தது ராகவனுக்கும் நிர்மலாவுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் பேசும் போது கூட பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3 சதவீதம் கொடுக்க வேண்டும் என்பார் பெரியார். “பார்ப்பனர்கள் ஒழிய வேண்டும் பார்ப்பனர்கள் ஒழிய வேண்டும் என்றால் ஏதோ பார்ப்பனர்களை துப்பாக்கி எடுத்து சுட்டுவிடுவதோ கொன்றுவிடுவதோ அல்ல. பார்ப்பன தன்மை ஒழிய வேண்டும் என்பதுதான்.” – பெரியார்
தமிழ்நாட்டில் பெரியார் சிந்தனை பாலாறு தேனாறாக ஓடவில்லை.
பெரியார் வழிவந்த திராவிட இயங்கங்கள் பெரியாரின் பகுத்தறிவுக்கொவ்வாத காலில் விழும் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்ததையும் மத்க்கொள்கையை காலில் போட்டு மித்தபடி கருணாநிதி காஞ்சிக்காமகோடிக்கு வாழ்ப்பா பாடுவதையும் இன்னொரு தலைவர் ஜெயலலிதா மகா கம்பாபிசேக நீராடுவதையும் கண்குளிரக்கண்டு மகிழ்கிறோம். பெரியார் ஒரு தனிமனிதரல்ல. பெரியார் ஒரு இயக்கம். அந்த இயக்கம் வெற்றிபெறவில்லை. நினைவேந்தலில் சோபா சக்தி குறிப்பிட்து போல இருந்த கடைசிப்பெரியாரிஸ்டும் 19373 லஇ இறந்து விட்டார்தான். ஆனாலும் இன்றைய தமிழுலகு பெரியாரின் தேவையை வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. அசுராவைுயம் சோபாசக்தியைும்போல நாமும் பெரியாரை புனிதராக்கி சிலையாக்கிவிடமுடியாது. பெரியார் மீதான விமர்சனங்களிலிருந்துதான் பெரியாரைக் கற்கமுடியும்.