தேசத்தின் எல்லை கடந்த அவதூறுகள்

கட்டுரைகள்

‘TBC’ களவும் தேசத்தின் உளவும்: புனையப்பட்ட பொய்களும் கற்பனைச் சாட்சிகளும்

– கீரன்

தேசம்நெற் வாசகர் கருத்துப் பகுதியில் ‘TBC’ வானொலி நிலையக் களவில் SLDF சார்ந்தவர்கள் சிலரது தொடர்பு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த வதந்திகள், 12 நவம்பர் 2008ல் ‘தேசம்நெற்’ இணையத்தளத்தில் ஜெயபாலன் – கொன்ஸ்ரன்ரைன் இருவரும் இணைத்து எழுதிய ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை: பகுதி -2’ல் எல்லை கடந்த அரசியல் அவதூறுகளாக அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளது. நடராஜா சேதுரூபன், ஜெயபாலனுடன் தொலைபேசி உரையாடலில் கூறிய ‘கற்பனைக் கதைகளை’ பதிவு செய்து, தமது ‘குற்றச்சாட்டுக்கு’ ஆதாரமாக தேசம்நெற்றில் வெளியிட்டுள்ளனர்.

நோர்வேயில் வசிக்கும் நடராஜா சேதுரூபன் பற்றிய அறிமுகத்தைப் புகலிடத் தமிழ் இணையங்களைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. மூல மூர்த்திக்கு லண்டனில் ஈழபதீஸ்வரம் எனும் பெயரில் கோவில் கண்ட ஜெயதேவன் 2005 காலப் பகுதியில் வன்னிக்குச் சென்று வீரகத்தி மணிவண்ணனிடம் ‘பிரணமத்தின்’ பொருள் அறிந்து, மீண்டு வந்து, எம்மையெல்லாம் மகாவியப்பில் ஆழ்த்திய காலத்தில், அவர் ‘இன்ரநெற்’றில் நடராஜா சேதுரூபன் பற்றி எழுதிய நூற்றுக்கணக்கான பக்கங்களை ஒரு சொடுக்கில் இன்னும் தேடிக் கண்டெடுக்க முடியும். நடராஜா சேதுரூபனை செல்லமாக ஜெயதேவன் எமக்கெல்லாம் ‘ஊத்தை சேது’வாக அறிமுகப்படுத்திய பதிவுகள் இன்னும் பல இணையங்களில் அநாதரவாகக் கிடக்கின்றன. ஆக, நான் எழுதித்தான் நடராஜா சேதுரூபனைத் அறிய வேண்டிய நிலையில் யாரும் இருப்பின் அவர்கள் குறைந்தது ஆறேழு வருடங்கள் ‘உள்ளுக்கு’ இருந்து இப்போதுதான் ‘வெளியில்’ வந்திருக்க வேண்டும்.

‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை’ என்ற தலைப்பில் வந்த இரண்டு பகுதிகளிலும் எனக்கு முரண்பாடான பல மாற்று அபிப்பிராயங்கள் உண்டு. அதே போல TBC தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி குறித்தும் எனக்கு மாறுபட்ட பார்வைகள் நிறைய உண்டு. SLDF முன்வைக்கும் அரசியல் உள்ளடக்கம், இயங்கும் அரசியல் தளம், திசை, வேகம் குறித்தும் ஜெயபாலனும் கொன்ஸ்ரன்ரைனும் தமது சொந்த கருத்துகளை தெரிவிக்கவும் மற்றவர்கள் அவர்கள் கருத்துகளுடன் மாறுபடவும் பல்வேறு நியாயங்கள் உண்டு. அதுவே கருத்துச் சுதந்திரமும் ஆகும்.

ஆனால் அவர்கள் இருவரதும் சொந்த அபிப்பிராயங்கள் குறித்து நான் முரண்படும் – உடன்படும் கருத்துகளை இங்கு முன் வைத்து அவர்களுடன் ஒர் உரையாடலைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில், அவற்றை எல்லாம் விட, அவர்களால் எம்மீது வைக்கப்பட்டுள்ள அவதூறுகள் அதனை மெருகூட்ட புனையப்பட்ட கற்பனைக் கதைகள், ‘பொய்’ச் சாட்சிகள் குறித்துதெல்லாம் முதலில் நான் பேச வேண்டியுள்ளது. அவைகளை அம்பலப்படுத்த வேண்டியதொன்றே பாக்கியாக இருப்பதால், அவர்களுடன் இனி விமர்சன உரையாடல் சாத்தியமற்றது. ‘வெட்டொன்று துண்டு இரண்டாக’ பேசக்கூடிய மொழியொன்றைத் தவிர அவர்களின் எல்லை தாண்டிய அவதூறுகளுக்கு பதிலடி வேறொன்றும் இருக்க முடியாது.

‘பேமிங்காம் சிக்ஸ்’ (Birmingham Six) தாம் குற்றமற்றவர்களென நீரூபிக்க 16 ஆண்டுகள் சிறையில் இருந்து நீதிக்காக போராட்டத்தைத் தொடர வேண்டியிருந்தது. ‘கில்ஃபேர்ட் ஃபோர்’ (Guildford Four) தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை அல்ல என நிறுவ 20 ஆண்டுகள் சிறையில் நீதிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜெயபாலன்-கொன்ஸ்ரன்ரைன் எமக்கு எதிரான சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வெளியிட்ட நடராஜா சேதுரூபனின் ‘ஒலிப்பதிவு’ வாக்குமூலம் முற்று முழுதாக மோசடியானதென எமக்கு இருபது நிமிடங்களில் தெரிய வந்தது.

எமது சட்டதரணியின் ஆலோசனையின் பேரில் நடராஜா சேதுரூபனை தொடர்ப்பு கொண்டு தேசம்நெற் வெளியிட்ட ‘ஒலிப்பதிவு’ குறித்து கேட்ட போது, ”சில மாதங்களுக்கு முன் ஜெயபாலன் என்னுடன் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு TBC களவு குறித்து பேசினார். ஜெயபாலன் அந்த நிகழ்வில் கீரனையும், ராகவனையும் தொடர்பு படுத்த வேண்டுமென கூறினார். கீரன், ராகவன், காண்டி போன்றோர் இதைச் செய்ததாக ஆரம்ப காலத்தில் தேசம் ஜெயபாலனே எனக்கு சொல்லி இருந்தார். ஆகவே அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பல விடயங்களை அவருடன் கதைத்து இருந்தேன். அவரிடம் உள்ள எனது ஒலிப்பதிவுகள் அனைத்திலும் நான் கூறிய விடயங்கள் கற்பனையாகவே இருக்கும். குறிப்பாக அவரது இணையத்தில் அண்மையில் போடப்பட்ட எனது ஒலிப்பதிவில் எந்த உண்மையும் இல்லை” எனச் சேது சாதுபோலப் பேசினார். அந்த ஒலிப்பதிவை வாசகர்கள் இங்கே கேட்கலாம்.

சேதுவின் மறுப்பு வாக்குமூலத்தின் ஒரு பகுதியை மட்டுமே இங்கே மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். மிக விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் அந்த மறுப்பு வாக்குமூலத்தை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். அப்போது தேசம் நெற்றின் யோக்கியதை சந்தி சிரிக்கத்தான் போகிறது.

ஜெயபாலன்-கொன்ஸ்ரன்ரைன் அரங்கேற்றிய இந்த ‘ஒலிப்பதிவு’ நாடகத்தில் ‘சேது’ ஒரு நடிகன் என்பது அப்போது எமக்குத் தெரியவந்தது. இப்போது உங்களுக்கும் தெரிய வந்திருக்கும். அந்த ஒலிப்பதிவு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செய்யப்பட்டிருந்தால் ஜெயபாலன் எம்மீது இந்த அவதூற்றை திட்டமிட்ட சுமத்த இரசியமாக பல மாதங்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழக் கடுமையாக ‘உழைத்துள்ளார்’ என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

“மூன்று உடைப்புச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட ஒருவருடன், ஓகஸ்ட் இறுதிப் பகுதியில் ‘ஈஸ்ஹாம்’ சிந்துமஹாலில் இடம்பெற்ற சந்திப்பின் போது நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது” எனக்குறிப்பிட்டு ‘அந்த நபரின்’ அடையாளத்தை மூடிமறைக்கும் ஜெயபாலன்-கொன்ஸ்ரன்ரைன், நீயூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் TBC வானொலி நிலையத்தில் மூன்று முறை திருடியவருடன்’ உணவருந்தியதாக காட்சிப்படுத்தி இன்னொரு சாட்சியை அரங்கேற்றியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிய துணை மேயர் போல் சத்தியநேசனை அவரது கைபேசிக்கு தொடர்ப்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர், ”எனக்குத் தெரிய TBC வானொலியை மூன்று முறை திருடிய எவருடனும் தான் சிந்துமஹாலில் உணவு உண்ணவில்லை” என முற்று முழுதாக மறுப்புத் தெரிவித்தார். ஜெயபாலன் -கொன்ஸ்ரன்ரைன் வைத்த இரண்டாவது சாட்சியமும் இவர்கள் இருவராலும் புனையப்பட்ட அப்பழுக்கற்ற முழுப் பொய்யாகிப் போனது.

வானொலியை மூன்று தடவைகளும் களவாடியதில் சம்மந்தப்பட்டதாக ஜெயபாலனிடம் ஒப்புக்கொள்ளும் நபரின் பெயரை மறைப்பதும் அந்த உடைப்பில் எதுவித தொடர்புமில்லை எனத் தொடர்ந்து கூறிவரும் எங்களை அந்தத் திருட்டில் கோர்த்துவிடுவதும் அயோக்கியத்தனமான ஊடகவியல். உண்மைகளை அம்பலப்படுத்துவோம் என ‘பிலிம்’ காட்டும் தேசம் ஜெர்னலிஸ்டுகள் மூன்று தடவையும் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் அந்த நபரின் முகத்தை மறைப்பதின் பின்னாலுள்ள உள்நோக்கம் என்ன?

லண்டனில் சட்டத்தரணியான எமது நண்பரொருவரிடம் மேற்குறித்த சாட்சியங்களின் எதிர்வினையைக் காட்டி கருத்து கேட்ட போது, ‘பொதுவாக ஒருவரின் வாக்கு மூலத்தில் உள்ள ஒரு பொய்யை கண்டு பிடித்து நிரூபித்து விட்டால் போதும் அவரின் மொத்த வாக்குமூலமும் உண்மைதன்மை அற்றதென நீதிமன்றம் கருதி, அவரின் ஒட்டு மொத்த வாக்குமூலத்தை நிராகரிப்பது போல ஜெயபாலன் -கொன்ஸ்ரன்ரைன் முன் வைத்த சாட்சியங்கள் இரண்டும் முற்று முழுதான பொய்யென்பதால் அவர்களின் குற்றச்சாட்டு திட்டமிட்டு புனையப்பட்ட அவதூறுகள் ஆகிவிட்டன’ என்றார்.

தேசம்நெற்றில் ஜெயபாலன் – கொன்ஸ்ரன்ரைன் வெளியிட்ட ‘ஒலிப்பதிவு’ சாட்சியமான சேதுவுடன் செய்த தொலைபேசி சம்பாசணையின் இறுதியில் ஜெயபாலன், ‘ கீரன் உதைத் தவிர மற்றும் படி நல்லது, நல்ல பொடியன், கீரன் ரென்சனாகுமே ஒழிய, கீரன் சோஃவார் ஓ.கே.’ என்றும் சொல்லியுள்ளார். ஜெயபாலன்! எனது நெஞ்சையே நக்கிவிட்டீர்கள் போங்கள். இந்த ஒலிப்பதிவை ஜெயபாலன் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன் செய்திருந்தும் அது குறித்து வெளியில் மூச்சுக் காட்டவில்லை.

சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த எனது தாயாரின் மரணவீட்டில் இந்த ஒலிப்பதிவு நாடகத்தின் இன்னொரு அசிங்கமான காட்சியொன்றும் அவைகாற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த ஒலிப்பதிவின் பிரதிகள் சிலருக்கு கொடுக்கப்பட்டு, மரணவீட்டில் கலந்து கொண்ட சிலரிடம் போட்டுக்காட்டி தமது வக்கிரமான மனவுளைச்சலுக்கு ஒரு வடிகாலும் தேடிக் கொண்டனர். ஒரு மரண நிகழ்வில்கூட தமது குரோதங்களை தீர்த்துக்கொள்ளும் இவர்கள்தான் மக்களுக்காக் குரல் கொடுக்கும் ‘ஜேர்னலிஸ்டுகள்’. மகாமட்டமான பாவப்பட்ட பத்திரிகையாளர்கள் இவர்கள். மற்றவர்களின்’பாவ’ வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதே தனது ஊடகத் திருப்பணி என்று முழங்கிய ஜெயபாலனின் ‘பாவத்தை’ இனி எந்தக் கங்கையிலும் கரைத்துத் தொலைக்க முடியாது. கூரையேறி கோழி பிடிக்க முடியாத சங்கரியாருக்கு வானமேறி வைகுந்தம் போக வழி காட்டிய கொன்ஸ்ரன்ரைனின் பழிவாங்கும் அரசியல் கயமை எல்லை தாண்டிய அவதூறாகி விட்டது.

TBC பிரச்சினயில் எம்மை தொடர்ப்பு படுத்த ஜெயபாலனும் கொன்ஸ்ரன்ரைனும் எவ்வளவு மினக்கெட்டு இருக்கிறார்கள் என்பற்கு தேசம்நெற்றில் இருவரும் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அதற்கு அவர்கள் செய்த ‘ஹோம்வேர்க்’கும் வெளிப்படையாக பல இரகசியங்களை போட்டுடைத்துள்ளன. எம்மீதான இருவரினதும் இந்த அவதூற்றுக்கு பின்னால் பலமான ஒரு அரசியல் சதி வலை பின்னப்பட்டுள்ளதென பலர் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளனர். காலம் அதை வெகுவிரைவில் அம்பலப்படுத்தும்.

1 thought on “தேசத்தின் எல்லை கடந்த அவதூறுகள்

  1. நண்பா, நீ ஜெயபாலன் என்று மொட்டையாக எழுதுவதால் அது நானோ என்று பலர் குளம்பி உனக்கேன் இந்தவேலை என்று கேட்கிறார்கள். தவுசெய்து இன்னார் என்பதை குறித்து எழுதடா.
    வ.ஐச.ஜெயபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *