தமிழில்: அனுசூயா சிவநாராயணன்
ஒரு குரங்கு
-விளாடிஸ்லாவ் கொடசேவிச்
ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: விளாடிமிர் நபோகோவ்
அன்று வெப்பம் தகித்தது
பெரும் காடுகள் பற்றி எரிகின்றன
நேரம் தன் கால்களைப் புழுதியில் இழுத்தது
பக்கத்து முற்றத்தில் ஒரு சேவல் கூவுகின்றது.
நான் தோட்டத்துப் படலையைத் திறக்கும் போதுதான் கவனித்தேன்
தெருவோரத்து பெஞ்சின் மீது
ஒரு சேர்பியன் தூங்கிங்கொண்டிருக்கிறான்
மெலிந்தும் கறுத்துமிருந்த அவன் மேனியில்
பாதி திறந்த மார்பில்
ஒரு பெரிய வெள்ளிச் சிலுவை
வழியும் வியர்வையை
பாதை மாற்றி விட்டது
அவன் தலைக்கு மேலே
வேலியில் அமர்ந்து
சிவப்பு அங்கி அணிந்த ஒரு குரங்கு
பசியுடன்
தூசி படர்ந்த இலைகளை மென்றுகொண்டிருந்தது.
சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த தோல்பட்டி
அதன் கழுத்தை இழுத்தது.
என் காலடிச் சத்தம் கேட்டவுடன்
அந்த மனிதன் மெல்ல எழுந்து
முகத்தைத் துடைத்துக்கொண்டு
என்னிடம் தண்ணீர் கேட்டான்
ஒரு மிடறு குடித்து
அந்தத் தண்ணீரின் இதம் பார்த்து
ஒரு கோப்பையில் ஊற்றி
பெஞ்சின் மேலே வைத்தான்
உடனே அந்தக் குரங்கு
கீழே இறங்கி வந்து
அந்தக் கோப்பையைக் கைகளால் ஏந்தி
பெருவிரல்கள் தண்ணீரைத் தொட
அதன் முழங்கால்களைப் பெஞ்சின் மீது இருத்தி
அதன் தாடை கிட்டத்தட்டப் பலகையைத் தட்ட
முதுகைத் தன் மொட்டைத் தலைக்கு மேலாக
நெளித்துக் குடித்தது.
இதுபோலத் தான்
அலெக்ஸாண்டரின் கொடிய படைகளிடமிருந்து
தப்பிவந்த டேரியஸ்
பாதைக் குழிகளில் நிரம்பியிருந்த நீரை
தரையில் படுத்துக் குடித்திருக்க வேண்டும்
கடைசிச் சொட்டுவரை நக்கிவிட்டு
அந்தக் குரங்கு கோப்பையைக் கீழே தள்ளிவிட்டு
தலை நிமிர்ந்தது
அதன் ஈரமான சிறிய கையை
என்னிடம் நீட்டியது
ஆகா!
நான் பெரும் கவிஞர்களின், தலைவர்களின்
பேரழகிகளின் விரல்களை அழுத்தியிருக்கிறேன்
ஆனால்
இவ்வளவு நேர்த்தியாக அமைந்த கையையோ
அல்லது
என்னை இத்தனை ஆழமாகப் பார்த்த கண்களையோ
நான் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.
தொலைந்துபோன பழைய காலக் கதைகள்
என் நெஞ்சினில்
அந்தக் களைத்த மிருகத்தால்
எழத் தொடங்கின
திடீரென வாழ்க்கையின் முழுமை
பிரளயத்தின் இசையாய் அதீத வேகத்தில்
என் காதில் ஒலித்தது.
அந்தச் சேர்பியன் எழுந்து
தன்னிடமிருந்த சலங்கைகள் தொங்கிய மேளத்தை
தட்டிக்கொண்டே
தன் வழியில் சென்றான்
அவனின் இடது தோளில் அமர்ந்து
ஒரு இந்திய இளவரசன்
யானையில் அமர்ந்து செல்வதுபோல
அந்தக் குரங்கு அசைந்து சென்றது.
ஒரு பிரமாண்டமான தகிக்கும் ஒளியாக
சூரியனற்ற சூரியன் மேலே தொங்கினான்
அந்தக் கொடுமையான வெப்பகாலம்
காய்ந்துபோன கோதுமை வயல்களிலே
சிரமமேயின்றி ஓடியது
அன்றுதான்
அதே அந்த நாளில்தான் போர் தொடங்கியது.
***
கிழட்டு மார்க்ஸ்
-அலன் ஸாகஜேவ்ஸ்கி
போலிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: க்ளேர் காவனாக்
நான் அவனின் கடைசி வருடத்தைக்
கற்பனை செய்து பார்க்கிறேன்.
லண்டன் நகரம் குளிரில் நனைகிறது
வெறுமையான முற்றங்கள், யாருமில்லாத தெருக்கள்
தேம்ஸ் நதியின் கறுப்பு நீர்
உறைந்துபோன வேசிகள் பொதுப் பூங்காவில்
தீ வைத்துக் குளிர் காய்கிறார்கள்
பிரமாண்டமான ரயில்கள் இரவில்
எங்கோ விம்முகின்றன
மதுக் கடைகளில் தொழிலாளர்களின்
வேகவேகமான உரையாடல்கள்
இவனுக்கு ஒரு வார்த்தை கூடப் பிடிபடவில்லை
ஒருவேளை அய்ரோப்பா நிம்மதியாக இருக்கலாம்
இப்போது அது செல்வத்தில் திளைக்கலாம்
ஆனால் பெல்ஜியர்கள் இன்னும் காங்கோவை வதைக்கிறார்கள்
அந்த ருஷியா? அங்கிருக்கும் கொடுங்கோலாட்சி?
சைபீரியா?
அவன் தன் மாலை நேரங்களை
யன்னல் கதவுகளை
வெறித்துப் பார்த்துக் கழித்தான்.
அவனால் மனதை ஓருநிலைப்படுத்த முடியவில்லை
பழைய எழுத்துகளைத் திரும்பவும் எழுதினான்
இளமைக்கால மார்க்ஸை திரும்பத் திரும்ப
பல நாட்களுக்குப் படித்தான்
அந்தப் பெருந்திட்ட எழுத்தாளனை
நெஞ்சின் ஓரத்தில் மெச்சினான்
அவனுக்கு இன்னும் நம்பிக்கையிருந்தது
ஆனால் சில நேரங்களில்
அவனின் அசாதாரணமான கனவில்
அந்த அவநம்பிக்கை ஏற்படும் தருணங்களில்
ஒருவேளை இந்த உலகிற்கு
இன்னுமொரு
நொந்துபோன நினைவையா கொடுத்திருக்கிறேன் என
அவன் கவலையுற்றான்
பின்பு அவன் கண்களை மூடி
வெறுமனே மூடிய இமைகளின் உள்ளே
ஒரு நெடிய இருண்ட
சிவப்பைக் காண்பான்.
ரொம்பவும் அகவயமான சோகங்களோடு தன்னைத்தானே சொரிவதில் இன்பம் காணும் இன்றைய நவீன தமிழ் கவிதைச் சூழலில் இவ்வாறான விரிந்த தரிசனங்களைக் காண்பிக்கும் அரசியல் கவிதைகளை வாசிக்கையில் தமிழில் கவிதை செத்துவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.