எம்.சி: வழியும் வழிகாட்டியும்

கட்டுரைகள்

“எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி” தொகுப்பிற்கு எஸ்.பொ.அளித்த முன்னீடு:

எம்.சி. இலங்கையிலே தோன்றிய சமூகப்போராளிகளுள் ஒரு முன்னோடி: முதன்மையானவர்.யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுதமுயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையில் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கை வாழ் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் அதிகாரத்தினதும், அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினதும்,உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

இந்தவரலாறு,சேர்.பொன்னம்பலம் இராமநாதன் படித்த இலங்கையருக்கான ஏக பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது. தமிழர்களுடைய தலைவர்களெனத் தலைநிமிர்த்தியோர் சைவ வேளாளர்களுடைய அதிகார மையங்களை சிக்காராகப் பிடித்துக்கொள்வதற்கான முயற்சிகளையே தமது அரசியலாக்கிக்கொண்டனர்.சைவ வேளாளர்களினது அதிகாரம் என்பது தம் மத்தியில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழர்களைத் தமது அடிமை குடிமைகளாக அடக்கி ஒடுக்கி, அடிமைத்தனம் என்னும் நுகத்தடிகளிளே கட்டிவைக்கும் ஜாதித்துவத்திலிருந்துதான் பெறப்பட்டது. இது தேச வழமைக் காலத்திலிருந்தே தமது முதுசொம்மெனவும் பாராட்டி, ஆண்டு அநுபவித்தனர்.

ஆங்கில மொழிப் பயிற்சிகாரணமாக, யாழ்ப்பாண வேளாளர் ஆங்கிலேயரின் கீழ் இடைநிலை அதிகாரப்பதவிகளைக் கைப்பற்றிச் சுகித்தது, அவர்களுடைய மேலாண்மைக்கு அலங்காரக் குஞ்சங்கள் சேர்ப்பதற்கு சிங்களக் கிராமங்களிலிருந்து ஆயாக்களையும் ‘போய்’ களையும் தருவித்துக்கொண்டார்கள்.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் முதலானோர் இலங்கைவாழ் தமிழர்களுள் பெரும்பான்மையராக வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்களுடைய பிரஜா உரிமையைப் பறித்த செயலும் இந்த அதிகார வெறியின் பாற்படும். ‘காடு சுடும்’ என்று நாடாளுமன்றத்தில் ‘சவடால்’ பேசிய ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம்,மாவைக் கந்தனைச் சிறுபான்மைத் தமிழர் தரிசிக்கலாகாது என்று சண்டித்தனஞ் செய்ததும் யாழ்ப்பாண வேளாளர்களின் ஆதிக்கவெ றியின் பாற்படும்.

இந்த ஆதிக்கவெறியின் எதிர்வினையே 1983 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட ஈழத்தமிழர் சங்காரம். இந்த உண்மையை இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழும் தமிழர்கள் பலர் மறந்து, ‘தீக்கோழி’ சாகஸம் புரிதல் அவலக் கோலமே!

சிங்கள இனவெறியர்கள் வேளாளத் தமிழர்களைக்கூட ‘பறைத்தமிழன்’என்று அழைத்தே துரத்தித் துரத்தி அடித்தார்கள். இந்த சோகத்தை உலகெலாம் கொண்டுசென்று அகதி அந்தஸ்த்துப் பெற்று புதிய வாழ்க்கை தொடங்கியோர், புலம்பெயர்ந்து செல்லுகையில் கடாசப்படவேன்டிய யாழ்ப்பாண வேளாள மேட்டிமைகளின் அனைத்து நோய்களையும் சுமந்து சென்று பரப்பிவாழுதல் தமிழருடைய ஒட்டுமொத்த வாழ்வியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

இந் நிலையிலேதான் ‘எம்.சி.ஓரு சமூகப்போராளி’ என்கிற இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கைத்தமிழர்களுள் மிக ஒடுக்கப்பட்ட ஒரு பகுதியினரின் விடுதலை நோக்கிய அனைத்துச் செயற்பாடுகளிலும் கலகங்களிலும் எம்.சி. முன்னுதாரணமான ஆழ்தடம் பதித்துள்ளார்.இதனை மறுதலிக்கும் விதமாக புதிய யாப்பின்போது அவர் தமிழர் நலனைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றெல்லாம் பிரச்சாரம் செய்தல்,அறியாமை சார்ந்தது; அபக்குவமானது; அயோக்கியத்தனமானது. தமிழர் உரிமைகளுக்காக வாதாடிய மேட்டுக்குடியினர்,முதலில் தம்மத்தியில் வாழ்ந்த சிறுபான்மைத்தமிழர்க்குச் சம உரிமை வழங்கப்படுதல் வேண்டும் என்கிற தார்மீகக் கடமையை ஏன் மறந்தார்கள் என்பதற்கான காரணங்கள் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை என்பதை நாம் உணருதல் வேண்டும்.

நிற பேதங்களூக்கு அப்பால்,மொழி பேதங்களுக்கு அப்பால்,கடின உழைப்பால் வளமான வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்கிற பொருளாதார மேம்பாடு சார்ந்த கலாசாரம் பேணப்படும் புலம்பெயர்ந்த நாடுகளிலே ‘நாம் தமிழர்கள்’ என்று கூறாது, நம் தமிழர்களுள் சாதி குறைந்தவர்களும் இருக்கிறார்கள் என்று காலாவதியான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல் எவ்வகையில் புத்தாயிரத்திற்குப் பெருமை சேர்க்கும்?

இன்றும் தமிழர்களுக்கு மத்தியில், சரிநிகர் சமானமாக வாழமுடியாத அபபாக்கியர்களானசிறுபான்மைத் தமிழர்களுக்கு கெளரவமான முகத்தைப் பெற்றுத்தருவதற்கு எம்.சி.மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் பாடுகளும் புத்தாயிரத்தில் புதிய வெளிச்சத்தில் தரிசிக்கப்படுதல் வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சி ‘தமிழ்பேசும் இனம்’ என்ற கோசத்தில் முஸ்லிம்களை இணைத்துக்கொள்ளலாம் என்று எடுத்த அரசியல் முயற்சி மிகப்பரிதாபமாகத் தோல்வியைத் தழுவிற்று!காரியப்பர்களும், முஸ்தபாக்களும், மசூர் மெளலானாக்களும் வெட்கமின்றித் தந்தை செல்வாவின் முகத்திலே கரியைப்பூசித் தமது அரசியல் வியாபாரத்தை அமோகமாக நடாத்தினார்கள்.

காலப்போக்கிலே தன்னைத் தேசியக்கட்சியாக மாற்றிக்கொள்வதற்கான ஞானங்கள் பெரும்பாலானவற்றை எம்.சி. யின் அரசியற் செயற்பாடுகளிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் பெற்றார்கள் என்ற உண்மை ஈழத் தமிழர் வரலாற்றில் இடம்பெறாமை வரலாறு எழுதுவதிலே நேர்மையும் நடுநிலைமையும் பேணப்படாமை காரணமாக இருக்கலாம்.அறிவின் சந்நிதானத்திலே இந்த வழுக்கள் நேர் செய்யப்படுதல் வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்திலே சிறூபான்மைத் தமிழர்களின் பிரதிநிதியாக எம்.சி.சுப்பிரமணீயத்தின் குரலே முதலில் ஒலித்தல் வேண்டும் என்பது சரித்திர நியதியாக அமைந்தது, கால் நூற்றாண்டுகாலம் முழுநேர அரசியல் ஊழியனாக யாழ் மண்ணிலே மார்க்ஸிய இயக்கத்தை வளர்த்ததற்கான அங்கீகாரமாகவும் அஃது அமைந்தது.தனது சமூகத்தின் நிமிர்விற்கு அவர் உழைக்க முடிந்தபோதிலும் தன்னை நியமன உறுப்பினராக்க உதவிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நியமித்த அரசாங்கத்திற்கும் கீழ்ப்படிவுள்ள ஓர் உறுப்பினராக இயங்குதல் நாடாளுமன்ற அரசியல் பாராட்டும் மரபாகும். இதனை அறிந்திருந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் அவர் தமிழர் நலனைக் காட்டிக்கொடுத்தார் என்று தூசண மழையை அவர்மீது பொழிவதற்குக் கொஞ்சமும் பின்நிற்கவில்லை. ஆனாலும் அந்த அகந்தையாளர் சிறுபானமைத் தமிழனின் குரல் நாடாளுமன்றத்தில் ஆகுமானது என்கிற ஞானத்தை எம்.சி.யின் நாடாளுமன்ற ஊழியத்திலிருந்தே பெற்றார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளவும் கூச்சப்படுகிறார்கள்.

மூப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் கல்வி அதிகாரியாக எம்.சியால் முன்மொழியப்பட்ட இராஜலிங்கத்தை அவசர அவசரமாகத் தத்தெடுத்து தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதின் உண்மை வரலாறும் இப் பின்னணியில் மீள எழுதப்பட வேண்டியதொன்றாகும் . தமிழர் தேசியம் என்பதிலே சிறூபானமைத்தமிழரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள் என்று மேடைகளிலே பிரச்சாரம் செய்வதற்காக அவசரக் கோலத்திலே, தமிழரசுக்கட்சியினரால் செல்லத்துரை, நல்லையா, இராசலிங்கம் ஆகியோர் தலைவர்களாக அ றிமுகப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறு தலைவர்களாக்கப்பட்ட அவர்கள் தனிப்பட்டவகையில் ஆதாயம் பெற்றிருக்கலாம் ,அவர்களுடைய ஊழியத்தினால் சிறூபானமைத்தமிழர்கள் வாழ்வியல் ரீதியில் அடைந்த நிமிர்வுகள் பற்றி ஒரு பந்தி எழுதுவதற்குக்கூட மூளையை மிகுந்த பிரயாசைகளுக்கும் கசக்குதல்களுக்கும் உட்படுத்த நேரிடும்.

இவற்றை நாம் கவனத்திலே எடுத்துக்கொள்ளும்போது ஈழத்தமிழர்களுடைய அரசியல் வரலாறு மீள்பார்வை செய்து நடுவு நிலைமை பேணி எதிர்காலத்தில் எழுதப்பட்ட வேண்டிய ஒன்று என்பது புலப்படும்.இந்த வரலாற்றின் நீட்சியாகத்தான் தமிழ் ஈழத்தின் போராட்ட வரலாறு அமையும். ஆறுமுகநாவலர்,ஜீ. ஜீ. பொன்னம்பலம் என வழக்கிலுள்ள வாய்ப்பாடுகள் கிழித்தெறியப்பட்டு, தோழர் .எம்.சி. சுப்பிரமணியத்தின் பெயரும் சேர்க்கப்படும் ஒரு புதிய வாய்பாடுதான் உண்மைத்தேடலுக்கான வழியைக் கோலும்.

இரண்டு பாடசாலைகளைத் தோற்றுவித்து,சைவ வேளாளரின் கல்வி முன்னேற்றத்திற்கு மட்டுமே உழைத்த ஆறுமுக நாவலரின் கல்வித் தொண்டு பற்றி உம்பாரமாக எழுதித் தள்ளியுள்ளார்கள்.சிறுபான்மைத் தமிழர்கள் சமத்துவமும் சமநீதியும் சுகிக்கும் மனிதர்களாக எழுச்சி பெறுவதற்குக் கல்வி அபிவிருத்தியே திறவுகோலைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதை அடிநாளிலேயே உணர்ந்து சிறுபானமைத்தமிழர்கள் அதிகமாக வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே பதினைந்து புதிய பாடசாலைகளை ஆரம்பித்தும், சிறுபான்மைத் தமிழர்கள் மத்தியிலே நூற்றுக்கணக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கியும் அவர்கள் மத்தியிலே கல்வி அதிகாரிகள் தோன்றிடச் சகாயித்தும் யாழ்ப்பாண மண்ணிலே, சிறூபான்மைத் தமிழர்கள் மத்தியிலே கல்வியின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த எம்.சி.யின் பங்களிப்பும் இணைந்ததுவாக ஈழத்தின் தமிழர் கல்வி வரலாறு மீள எழுதப்படும் தேவையும் ஏற்பட்டுள்ளது.’பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்’ என் கிற பாரதி கனவைத் தமிழ்நாட்டில் காமராஜரும் ஈழத்தில் எம்.சி.யும் நனவாக்கினார்கள் என் கிற உண்மை அப்போதுதான் வெளிச்சத்திற்கு வரும்.

வரலாற்றில் நேர்ந்துள்ள இந்த அசட்டைகளையும் பிறழ்வுகளையும் நேர்செய்து எழுதுவதற்கான ஓர் ஆவணமாக இந்நூல் அமைகின்றது.பல கட்டுரைகள் சம்பவங்களை நேரில் கண்டவர்களின் சாட்சியமாக அமைந்துள்ளன.எனவே அவை நம்புதிறனுக்கு வலுச்சேர்க்கின்றன.

என்னுடைய சுய சரிதம்போன்றும், நான் வாழ்ந்த மண்ணினதும் சமூகத்தினதும் வரலாற்றினை சுமார் இரண்டாயிரம் பக்கங்களீலே விரியும் ‘வரலாற்றில் வாழ்தல்’ என்னும் நூலினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்டேன் .அந்நூல் ஒரு அறுபது ஆண்டு வரலாற்றின் ஆவணம்.

அந்நூலின் பல்வேறு இடங்களில் எம்.சி.பற்றிக் குறித்துள்ளேன். அவை அவருக்குச் சொல்மாலை சூட்டும் முயற்சியில் எழுதப்பட்டன அல்ல. அவரின்றி நான் இலக்கிய ஊழியனாய் உயர்ந்திருக்கமுடியாது என்பதை நான் சத்தியமாகவே இங்கும் பிரசித்தப்படுத்துவதில் மனநிறைவு அடைகிறேன்.அவருடைய மகன் சந்திரபோஸின் வேண்டுகோளிற்கிணங்க அவற்றை ஓரளவு தொகுத்துத் தந்துள்ளேன். அது தனிக்கட்டுரையாகவே இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

எம்.சி. தீர்க்கதரிசனம் மிக்க தலைவன். கோஷதாரியாக அல்லாமல் களத்திலே தொண்டனாய், சேவகனாய், தோழனாய், நண்பனாய், நல்லாசிரியனாய், மந்திரியாய் பலபரிமாணங்களிலே பல தசாப்தங்களாக நிமைப்பொழுதும் சோராது, உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் உழைத்தார்.தன்னலங்களிலும் பார்க்க,தான் பிறந்த ஒடுக்கப்பட்ட சமூகம் சமத்துவமும் சமநீதியும் பெற்று உத்தம குடிமக்களாக உயருதல் வேண்டும் என்கிற ஊழியத்தையே தன்வாழ்க்கையின் அர்த்தமாக்கிக்கொண்டார்.பேச்சிலும் செயலிலும் வாழ்க்கையிலும் எளிமையின் ஆராதனையாளராகவே வாழ்ந்தார் . இவற்றினாலேதான் என் அத்தான் என்கிற உறவுமுறைகளூக்கு அப்பாலாக அவர் ஓர் அபூர்வனாய் வாழ்ந்தார் என்று என் மனம் அஞ்சலி செய்கிறது.

இந்த அஞ்சலி அணுக்கமானது, ஆத்மார்த்தமானது, விசுவாசமானது.பதவிகள் எதுவுமே அவரிடம் நத்தாது ,அவர் ஏற்றிய கல்வித் தீபத்தால் நிமிர்ந்து வாழும் பரமார்த்த தொண்டன் ஒருவனின் மனப்பூர்வமான அஞ்சலி!

எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி
தொகுப்பாளர்: எஸ். சந்திரபோஸ்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்

2 thoughts on “எம்.சி: வழியும் வழிகாட்டியும்

  1. எஸ்.பொ குறிப்பிடும் சிங்கள இனவெறீயர்கள் வெள்ளாளத் தமிழர்களைக்கூட பறைத் தமிழர் என்றே துரத்தித் துரத்தி அடித்தார்கள்_ என்று குறிப்பிடுவதில் பறைத்தமிழர் என்ற பதம் சிங்கள இனவாதிகளால் அந்நியர்கள் என்ற அர்த்தத்திலேயே குறீப்பிடப்படிவதாகவும் அது சாதி அடிப்படையில் கீழானவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல என்றும் நமது சிங்களத்தோழர் சுட்டிக்காட்டுகிறார். சிங்கள சமூகத்தில் பறையர்கள் சாதி அடிப்படையில் கீழானவர்கள் என்ற புரிதல் தெரியாது என குறீப்பிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
    தமிழ்ப்படையெடுப்புடன் ஒப்புநோகும்போது இலங்கையின் இறைமைக்கு தமிழர்களால் அச்சுறூத்தல் வரும்போது தமிழர்களை அந்நியர்களாகக் காண்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

  2. ஆனால்’ எங்களைப் பறையர்கள் என்று சொல்லவோ! ‘எனக் கேட் கும் தமிழ் மேற்சாதிப்புத்தி பறையர்களை சாதியில் இழிவானவர்களாகவே கருதுகிறது.வேறெதற்காகவும் இல்லாவிட்டாலும் பறைத்தமிழர்களெனச் சொல்லும்போது ஆக்ரோசமாகக் கொதித்தெழுகிறது.பறைநாய்,பறைக்கோழி இப்படி எப்போதும் குறித்துக்காட்டுகிறது.

Comments are closed.