-சுகன்
சாதிக்கொரு ஊர், சாதிக்கொரு சுடலை,சாதிக்கொருகோயில், சாதிக்கொரு பள்ளிக்கூடம், சாதிக்கொரு தொழில் ஆகியன சிறப்பே அமையப்பெற்ற வடமாகாணத்திலே 60 ஆண்டுகட்கு முன்னர் அன்றைய சமூக ஒழுங்குகளை மீறி நடைபெற்ற ஒரு போராட்டத்தை தோழர் டொமினிக் ஜீவா தனது ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற தன்வரலாற்றுப் பதிவில் காட்சிப்படுத்துகின்றார்.
அடிக்கட்டுமானம், மேற் கட்டுமானம் இவற்றின் அனைத்துத் தளங்களிலும், பரந்தும் சாதிக்கட்டுமானமே யாழ்ப்பாண சமூகக் கட்டுமானமாக இறுகிப்போய்விட்ட பகைப்புலத்துள் பல்நூற்றாண்டுகளாக மாறிவரும் எல்லா மாற்றங்களிற்கும் விறுத்திகளிற்கும் சவால்விட்டு வாழ்ந்துபோதிரும் யாழ்ப்பாண சாதிய சமூகத்தை ‘நான்காம் உலக காலனித்துவம்’ என்று பிறயன் போபெல்லர் குறித்துக் காட்டத் தவறவில்லை.
துவக்கும் வன்முறையுமென இன்றுவரை தொடரும் இந்த ஆயுதப் பண்பாட்டின் தொடக்கப்புள்ளியாக தோழர் ஜீவா வில்லூன்றிப்படுகொலையை தீர்க்கமாகவே பிரகடனம் செய்கிறார்.அன்றைய நினைவழியா நாட்களின் நினைவுக் குறிப்புகள் பற்றிய பதிவு:
“1944 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியை என் உள்நினைவு என்றுமே பதிய வைத்து வந்திருக்கிறது.மறக்கமுடியாத தினமது.யாழ்ப்பாண நகருக்கு உட்பட்ட சுடலையின் பெயர் வில்லூன்றி மயானம் என்பது. அன்று, அந்த நகரில் அந்தச் சுடுகாட்டில் பிரேதத்தைத் தகனம் செய்யச் சென்றவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. *முதலி சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உயர்குடியினரைத் தகனம் செய்யப் பயன்படுத்தப்படும் அந்தச் சுடுகாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனுசியின் பிணம் இறுதிக் கிரியைகளிற்காக கொண்டுவரப்பட்டு தீயிடப்பட்டிருந்த வேளையில் இதை ஏற்கனவே மனசார வெறுத்த ஒரு வெறிபிடித்த சாதிக்கும்பல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அந்தச் சுடலையிலேயே ஒரு கொலையை நடத்தி முடித்துவிட்டது.இரத்த வேள்வி நடந்து முடிந்துவிட்டது.
துப்பாக்கிக் கலாசாரத்திற்கு அன்றே அந்த மண்ணில் அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என இன்று நான் கருதுகிறேன். வில்லூன்றி மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிணம் எங்கள் கடைத்தெரு வழியாகத்தான் போனது. நான் கடையின் வெளிப்படிக்கட்டில் நின்றபடியே அந்தச் சவ ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டுதான் நின்றேன். எதிர்ப் பக்கத்திலிருந்த தேனீர்க் கடையிலும் சயிக்கிள் கடையிலும் வெற்றிலைக் கடைப்படிகளிலும் நின்ற ஒருசிலர் குசுகுசு எனத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டதை நான் அவ்வளவு பெரிசாக அப்போது கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் அப்போதே அவர்களுக்கு அந்தச் சம்பவத்தின் பின்னனித் தகவல்கள் தெரிந்திருக்கவேண்டும் எனச் சம்பவம் நடைபெற்றதன் பின்னர் என்னால் உணர முடிந்தது. இதை ஊகித்துக்கொண்டேன்.
‘சுட்டுப்போட்டான்கள்! சுடலையிலே சுட்டுப்போட்டான்கள்’ எனக் கூவிக்கொண்டு சனக்கும்பலின் ஒருபகுதி தெருவழியாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு, சில கடைகளின் கதவுகள் சாத்தப்படுவதைப் பார்த்து நானும் உள்ளுக்குள் பயந்தவண்ணம் கடைக்குள் நுழைந்து ஒதுங்கியிருந்துகொண்டேன். ‘என்ன நடந்திருக்கும்?’அன்று சாயங்காலம்வரை பலவிதமான வதந்திகள் பரவியபடியே இருந்தன. மக்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி ஆரியகுளத்தடியைச் சேர்ந்த ஒரு கிழவி இறந்துவிட்டார். அந்தப்பகுதிக்கு வெகு அண்மையில் உள்ள சுடலைதான் இந்த வில்லூன்றி மயானம். நீண்ட நெடுங்காலமாகவே அப்பகுதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தச் சுடலையில் அவர்களது பிணங்களை எரியூட்ட மறுக்கபட்டு வந்தது, தடுக்கப்பட்டிருந்தது. படித்தவர்களும் இளைஞர்களும் இந்தச் செயலைக் கண்டித்து வந்தனர். இந்த ஜனநாயக யுகத்தில் தங்களது மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இழிவான இச்செயல்களை துடைத்தெறிய முன்முயற்சி எடுத்து உழைத்துவந்தனர், ஒடுக்கப்பட்ட மக்கள்.
தங்களது அடிப்படை உரிமையை வென்றெடுத்து நிலைநாட்ட முனையும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வில்லூன்றிச் சுடலைப் போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு முன்நின்று தலைமைதாங்கியவர்களில் ஒருவர்தான் பின்னர் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் தலைவராகவும் சிறீமாவோ அரசாங்கத்தில் இந்தப்பகுதி மக்களின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்ற நியமன அங்கத்தவராகவும் விளங்கிய தோழர் எம்.சி.சுப்பிரமணியம் என்பவர் என்பதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவரது போராட்ட வரலாறே தனியானது.
இந்த மனித உரிமைப் போராட்டம் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. உரிமை கேட்டுப் போராடிய மக்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தச்சுடலையிலேயே பிணமாகச் சரிக்கப்பட்டார். இந்தக் கொடூரச் செயலைக் கேள்விப்பட்ட நல்லெண்ணம் படைத்த மக்கள் கொதிப்பேறிப்போயிருந்தனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்து அன்று தமிழ்ச்சமூகமே அப்படியே உறைந்துபோய்விட்டது. நல்லவர்கள், படித்த கனவான்கள், பண்பாடான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசுவது என்னவென்றே தெரியாமல் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். நமது கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் என வடபுலத்துக் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டவர்கள் வாயடைத்துப்போய் மெளனியாகிவிட்டனர். குற்ற உணர்வால் குமைந்துபோய்க்காணப்பட்டனர்.
இந்த மனித சங்காரத்தை எதிர்த்து எதிர்நடவடிக்கை எடுக்கப் பெரும் மனப் பண்பு கொண்டவர்கள் முன்வந்தனர். அறிக்கைவிட்டனர், கண்டித்தனர். தமது எதிர்ப்பைச் செயல்முறையில் நிரூபித்தனர். பொதுக்கூட்டம் போட்டனர்.
அன்று யாழ்ப்பாணப் பட்டினசபைத்தலைவராக விளங்கிய கனவான் சி.பொன்னம்பலம் என்பவர் ஒடுக்கப்பட்ட மக்களின்பால் உறுதியாக நின்று பல்வேறு நடவடிக்கைகள் அரசுரீதியாக எடுக்க முன்நின்று உழைத்தார். அவருடன் பல சமூகப் பெருமக்கள் இந்த மனுக்கொடுமைக்கு எதிராகச் செயற்பட்டனர். இவர்களில் செனட்டர் ஏ.பி.இராஜேந்திராவும் ஒருவர். அந்தக் காலகட்டத்தில் தினசரிப்பத்திரிகைகளில் எல்லாம் இது சம்பந்தப்பட்ட செய்திகளே தலைப்புச்செய்திகளாக மிளிர்ந்தன. எதிர்ப்புச் செய்திகளை விரிவாகப் பிரசுரித்தன.
இந்த மானுடச் சங்கார நிலையிலுங்கூட ‘இதுகளுக்கு, இந்த எளியதுகளுக்கு நல்லபாடந்தான் படிப்பிச்சாங்கள்! ‘ என சில கீழ்நிலை மன நோயாளிகள் தமது சாதிவெறிப் புலம்பலைப் புலம்பினர். சிலரது வாய்ப் பேச்சின்மூலம் என்னால் இதைக் கிரகிக்க முடிந்தது. அவர்களை நான் மனசார வெறுத்தேன். இந்த மனித உரிமைப்போராட்டம் இந்தச் சுடலைப் போராட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட உரிமைப் போராட்டமல்ல. இதற்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு…”
***
தோழர் டொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி பிறந்தவர். மொஸ்கோ லுமும்பா பல்கலைக்கழக மாணவர்கள் இவரது மணிவிழாவை இருமுறை கொண்டாடி மகிழ்ந்தனர். இலங்கை அரசின் அதிஉயர் இலக்கிய விருதான ‘இலக்கிய ரத்னா’ விருது சிலவருடங்களுக்கு முன்னர் இவரிற்குக் கிடைத்தது. அதே காலத்தில் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் பொற்கோயிலும் சிந்தனைத்தளமுமான யாழ் பல்கலைக்கழகம் இவரிற்கான கெளரவ கலாநிதி கெளரவத்தை நிராகரித்து தோழரை அவமானப்படுத்தியது.
தமிழினி 2000 இல் இவர் அதிதிகளில் ஒருவராக தவிர்க்க முடியாமல் அழைக்கப்பட்டிருந்தபோதும் அங்கு சிறப்பான கெளரவங்கள் ஏதுமின்றி பார்வையாளர் தகுதியில் இருந்தார். தமிழில் 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிற்றிதழ் வெளியிட்டுவரும் சாதனையாளார் என்று சுந்தர ராமசாமிக்கு இவர் அங்கு அறிமுகம் செய்யப்பட்டபோது சுந்தர ராமசாமி அத்தவறிற்காக இவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இன்றுவரை தலித்துகளிற்கான இடம் ‘இலக்கியத் தகுதி’ அடிப்படையில் வெள்ளாளர்களால் நிராகரிக்கப்பட்டே வருகிறது. கனடா ‘இயல் விருது’ இதுவரை எந்த ஒரு தலித்திற்கும் கிடைக்கவில்லை என்பதை இங்கு நினைவுறுத்த வேண்டும். ஒரு கவிதைத் தொகுதியுடனேயே வெள்ளாளர்களால் தூக்கி நிறுத்தப்பட்டு விருதிற்குத் தயார்ப்படுத்தப்படும் சூழலில் தலித்துகளின் இலக்கிய சாதனை நிராகரிக்கப்படுதல் சாதி சார்ந்ததுதான்.
தோழர் டொமினிக் ஜீவாவின் தொகுப்புகள்:
1.தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைத்தொகுதி)சிறீலங்கா சாகித்திய மண்டலப்பரிசு பெற்ற நூல்
2. பாதுகை (சிறுகதைத் தொகுதி)
3. சாலையின் திருப்பம் (சிறுகதைத் தொகுதி)
4. வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைத் தொகுதி)
5 . ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்)
6. அனுபவ முத்திரைகள்
7. தூண்டில் (கேள்வி-பதில்)
8. டொமினிக் ஜீவா சிறுகதைகள் (50 சிறுகதைகளின் தொகுப்பு)
9. தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்)
10. முன்னுரைகள் சில பதிப்புரைகள்
11. அட்டைப்பட ஓவியங்கள் (தொகுப்பு நூல்)
12. எங்களது நினைவுகளில் கைலாசபதி (தொகுப்பு)
13. மல்லிகை முகங்கள் (தொகுப்பு)
14. பத்தரே பிரசூத்திய (தொகுப்பு சிறுகதைகள்) சிங்கள மொழிபெயர்ப்பு
15. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஒரு பாமரனின் பரிணாம வளர்ச்சி)
***
வேலியில் இருக்கும் கறட்டி ஓணான்கள் உருமறைப்புச் செய்வதுபோல தமது யாழ்ப்பாண வெள்ளாள அடையாளத்திற்கு இட்டல் இடைஞ்சல் வந்துவிடக் கூடாதென்பதற்காக மார்க்சியம், தமிழ் பேசும் மக்கள் இன்னோரன்ன தோற்றப்போலிகளில் ஒளித்தோடும் தன்நிலைகளுக்கிடையில் தோழர் ஜீவா அவர்களின் தலித்தியம் குறித்த அவதானம் இங்கு குறித்துக்காட்டப்படவேண்டிய ஒன்று:
“தலித் என்ற சொல் மிக மிக வலிமை வாய்ந்தது, ஆழமானது,அர்த்த புஸ்டி வாய்க்கப்பெற்றது. இந்தச்சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக, இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக, இது புழக்கத்தில் வந்துவிட்டது. இந்தத் தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் பரவலாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்பட்டு வருகிறது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது. அந்தச் சொல்லின் வலிமை என்னையும் ஆட் கொண்டகாரணத்தினாலேயே நான் எனது சுயசரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன். நாங்களும் மனுசங்கடா! தலித் இயக்கம் கற்றுத் தந்த மூல மந்திரம் இது!”
__________________________________________________
*அவர் மனைவியார் அன்னப்பிள்ளை அவர்கள் பின்னர் அங்கிருக்க முடியாமல் தும்பளைக்கு இடம்பெயர்ந்து வந்திருந்தார்.அவர் மகன் தற்கொலை செய்து இறந்தார்.
டொமினிக் ஜீவா அவர்களின் நூல்கள்.
http://noolaham.net/wiki/index.php?title=பகுப்பு:டொமினிக்_ஜீவா
டொமினிக் ஜீவா அவர்களால் வெளியிடப்படும் மல்லிகை இதழ்கள்
(190 இதழ்கள் காணப்படுகின்றன.)
http://noolaham.net/wiki/index.php?title=பகுப்பு:மல்லிகை
இன்றுங்கூடச் சாதியத்தைக்கண்டித்துப் பொதுமேடையில் யாரும் பேசினால் “அவர் என்ன பகுதி”என்றவிதமான விசாரனைகள் காதோடுகாதாகச் செய்யப்படுகின்றன. கல்வி அறிவு நம்மைக் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீட்கப்போதுமானதல்ல. பலசிங்களப்பேரினவாதிகளும் இனவெறியர்களும் படித்தவர்களாக உள்ளனர் என்று அறிவோம். அவ்வாறே தமிழ்ச்சாதிவெறீயர்களிடயே படித்தவர்கள் பலர் உள்ளனர் என்பது உண்மை.பிரதேச வாதம், ஊர் அடிப்படையிலான குழுவாதம் என்பனவும் அவர்களிடையே உண்டு.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் அனாதை மடங்களில் தாழ்த்தப்பட்ட சாதிக்குழந்தைகட்குஇடம் மறுக்கப்பட்டது என்பதை அண்மையில் அறிந்தபோது எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் அதுபற்றி இவ்வளவுகாலமும் ஏன் விரிவாகப் பேசப்படவில்லை என்று ஏமாற்றமாக இருந்தது.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாதி அடிப்படையில் ஒரு இளம் போதனாசிரியரை நிந்தித்த கதையும் எனக்கு அதிர்ச்சி தரவில்லை. இப்படிப்பட்டவர்கள் சந்திரமண்டலத்துக்குப் போனாலும் அவர்களுடைய கிராமம் (அல்லது காட்டுமிராண்டிச்சனத்தின் காடு) அவர்களுடனேயே போகும் என்பதுதான் உண்மை.
-பேராசிரியர். சிவசேகரம்._தினக்குரல்_24.08.2008
” எந்த வில்லூன்றி மயானத்தில் சிறுபான்மையினரின் உடலைத்தகனஞ்செய்யக்கூடாது என சாதிவெறி தலைவிரித்தாடியதோ அதே வில்லூன்றி மயானத்திற்கு அமரர் எம்.சி யின் உடல் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது” என்று கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்மாவட்டக் கிளை ஸ்தாபக உறுப்பினரும் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் தலைவருமான எம்.சி .சுப்பிரமணியத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான திரு டொமினிக் ஜீவா குறிப்பிட்டார்.
17.01.1989 முரசொலி.
அன்புடன் இணையத்தள நிர்வாகிகளுக்கு வணக்கம்.இக் கட்டுரையை வாசித்துப் பார்த்தேன். தமிழன் அதுவும் யாழ்ப்பாணத்துத் தமிழன் என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கின்றது. இக் கட்டுரையைப் பிரசுரித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.