சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். ‘ஆபாச எழுத்துகள்’, ‘அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்’ என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது.
மாலதி மைத்ரி வெறுமனே இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடுபவரல்ல. பெண்ணியம், பெரியாரியல், தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவிர எதிர்ப்பு என அவரது அரசியல் ஈடுபாடுகள் விரிந்தவை. அவரது இந்த நேர்காணலிலும் கூட “பெண்ணியம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாக இருக்க முடியாது” எனத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார்.
பெண்ணிய இதழான ‘அணங்கு’ சிற்றிதழை நடத்திவரும் மாலதியின் மூன்று கவிதைத் தொகுப்புகளும் (சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி) ஒரு கட்டுரைத் தொகுப்பும் (‘விடுதலையை எழுதுதல்’) இதுவரை வெளியாகியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் கனடாவில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக கனடா சென்றிருந்த மாலதி மைத்ரி இந்தியா திரும்பும் வழியில் பாரிஸுக்கு வந்திருந்தார். மாலதி மைத்ரியுடன் ‘சத்தியக் கடதாசி’க்காக ஒரு நேர்காணல்:
கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் கலந்துவிட்டு வந்திருக்கிறீர்கள்.பெண்கள் சந்திப்பு அனுபவங்கள் எப்படியிருந்தன?
ஐரோப்பிய பெண்கள் சந்திப்புப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்கள் சந்திப்பு மலர்கள், சந்திப்புகள் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகள் என பெண்கள் சந்திப்பு பற்றிய விடயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் பெண்கள் கூடிக் கூடிப் பேசிக் கலைகிறார்களே எந்த விதமான ஆக்கபூர்வமான, திருப்திகரமான செயல்பாடுகள் எதுவும் இல்லையே என்று பெண்கள் சந்திப்பு மீதான ஒரு தொடர் குற்றச்சாட்டு பொதுப்பரப்பில் இருந்த வண்ணமே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன என நான் எண்ணுகிறேன்.
தமிழ்நாட்டிலோ அல்லது இலங்கையிலோ இவ்வாறாகப் பெண்கள் சந்திப்பு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஐரோப்பாவுக்கு வந்த பின்பு பெண்ணியவாதிகளுடனோ பெண்ணிய இலக்கியங்களுடனாகவோ பரிச்சயம் ஏற்பட்டு இவற்றின் மூலமாக ஒரு கோட்பாடு அறிமுகமாகும் போது நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில், ஆர்வத்தில் இப் பெண்கள் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். சாத்தியமில்லாத ஒரு விடயத்தை இவர்கள் இத்தனை தூரம் சாத்தியமாக்கியதே ஒரு பெரிய விடயம் என நான் எண்ணுகிறேன்.
தொடர்ந்து 15 வருடங்களாக பெண்கள் சந்திப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதே மகிழ்ச்சி தரும் செய்திதான். பெண்கள் சந்திப்பின் மூலம் பல நல்ல முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. சிலரின் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்க்கும் பல படைப்பாளிகளை அடையாளம் காண்பதற்கும் இச் சந்திப்புகள் உதவியாக இருந்திருக்கின்றன. மற்றும் ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கும் பல பெண்கள் ஒன்று சேர்ந்து பல விதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழல் கூட புத்துணர்சியை, உற்சாகத்தைத் தரும் விடயமாகவே நான் கருதுகிறேன்.
இருப்பினும் பெண்கள் சந்திப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு வலுவான அரசியல் பின்புலமுடைய பெண்கள் இன்னமும் வரவில்லை, அதனால் ஒரு தேக்கம் இருக்கத்தான் செய்கிறது. செயற்பாடுகளை எத்திசையில் கொண்டு செல்வது என தெரியாத ஒரு தடுமாற்றத்தையும் அவதானிக்க முடிந்தது.
இம்முறை கனடா சந்திப்பில் நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். தொடர்ந்து கூடிக் கூடிப் பேசி கலைந்து செல்வதோடு, சில பெண்ணியப் படைப்பாளிகளின் நூலை அறிமுகமோ விமர்சனமோ செய்வதோடு அல்லது பெண்கள் சந்திப்பு மலர்களை கொண்டு வருவதோடு மட்டும் நிற்காமல் எவ்வாறாகப் பெண்கள் சந்திப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, உலகளாவிய அளவில் பெண்கள் சந்திப்பு என்கிற வலைப்பின்னலை உருவாக்குவது என விவாதித்தொம். இந்த வலைப்பின்னல் மூலம் அந்தந்தப் பகுதிப் பெண்களின் பிரச்சினைப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு வேலைத்திட்டங்களை நகர்த்துவது, அந்தப் பிரச்சினைகளுக்கு நாங்கள் எவ்விதத்தில் எதிர்ப்பை கண்டனங்களை தெரிவிக்க முடியுமோ அவற்றைப் பதிவு செய்வது என முடிவெடுத்துள்ளோம். நாம் திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் எப்படி அமையும் என்பதை எதிர்காலத்தால்தான் சொல்ல முடியும். சந்திப்புக்கு வந்திருந்த பெரும்பாலானோர் இந்த அடுத்த கட்ட நகர்வுக்குத் தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துச் சென்றிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கனடாவில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு வரலாற்றில் ஒரு அடுத்த கட்ட நகர்வு எனத்தான் எண்ணுகிறேன்.
அடையாள அரசியல் குறித்த சிந்தனைகள் தீவிரமாக எழுந்திருக்கும் காலமிது. தலித் பெண்கள், சிறுபான்மையின முஸ்லிம் பெண்கள், விளிம்புநிலைப் பெண்கள் போன்றோரையும் வெள்ளாள – பார்ப்பன சாதிப் பின்புலத்தையும் மேட்டுக்குடிப் பின்புலத்தையும் கொண்ட பெண்களையும் ‘பெண்ணிய அரசியல்’ எனும் ஒற்றை அடையாளத்துள் அமுக்கிவிடுவதில் ஆபத்துள்ளது. இந்தப் பிரச்சனையை பெண்கள் சந்திப்பாளர்கள் கவனத்தில் எடுத்திருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஆரம்பத்திலிருந்தே பெண்கள் சந்திப்பில் தலித் பெண்களையும் இணைத்தே செயற்பட்டு வந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா, சிவகாமி, புதியமாதவி, வழக்கறிஞர் ரஜினி போன்றவர்களைப் பெண்கள் சந்திப்புக்களுக்கு அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். பன்முகத்தன்மையோடு செயற்பட வேண்டும் என்கிற அக்கறையும் கவனமும் ஆரம்ப காலம் முதல் இருந்தே வந்துள்ளதை நான் ஒரு முக்கியமான விடயமாகவே பார்க்கிறேன். பொதுவான ஒற்றை அடையாள அரசியல் தன்மையோடு இவர்கள் பெண்கள் சந்திப்பை நடத்தவில்லை. பன்முகத்தன்மையோடுதான் நடத்தி வருகிறார்கள்.
மிகவும் கவனமாக தெரிவு செய்து, ஒற்றை அரசியல் அடையாளமற்ற பொறுப்புணர்வுடன் செயற்படக் கூடியவர்களேயே பெண்கள் சந்திப்புக்கு வெளிநாடுகளில் இருந்து அழைக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனிக் குழு சார்ந்த அரசியல் பார்வை இருப்பினும், பெண்ணியம் என்கிற அடையாளத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த தோழர்கள் ஆகியோரை முன்னிறுத்தியே பெண்கள் சந்திப்பை நடத்திவருகிறார்கள்.
கனடா பெண்கள் சந்திப்பு வெறும் புலி எதிர்ப்புப் சந்திப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது எனச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்நதி தனது வலைப்பூவில் விமர்சித்திருக்கிறாரே?
சந்திப்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. தமிழ்நதி குறிப்பிடும் நிர்மலாவின் கட்டுரை மட்டுமே முழுக்க முழுக்க தமிழ்த் தேசியக் கட்டமைப்பில் பெண்களின் நிலை பற்றியிருந்தது. அவரின் கட்டுரையில் “அரச பயங்கரவாதம் எந்த அளவுக்கு பேசப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு புலிகளின் பயங்கரவாதமும் பாஸிச அரசியலும் பேசப்பட வேண்டும்” என்ற கருத்தை நிர்மலா முன்வைத்தார். அவரின் உரையை ஒட்டித்தான் தமிழ்நதி குறிப்பிடும் ‘புலி எதிர்ப்பு’ விமர்சனங்கள் அரங்கில் எழுந்தன. அத்தோடு அது முடிந்தது. பிற பேச்சாளர்கள் பல தளங்களில் பெண்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம், சமூகவியல், அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், மொழி – இனம் சார்ந்த ஒடுக்கு முறைகள் பற்றிப் பேசினார்கள். ஆகவே இதை ஒட்டு மொத்தமாக ‘புலி எதிர்ப்பு’ சந்திப்பு எனக் குறுக்கிவிடுவது நேர்மையான விமர்சனமாகாது.
பெண்கள் சந்திப்பைத் தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியச் சார்பற்றவர்கள், பல்வேறு மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் என அனைவரும் பங்கு பெறும் கருத்துச் சுதந்திரம் பேணும் பெண்ணிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டு ‘புலி எதிர்ப்பு’ என்று கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.
புகலிடப் பெண்களின் எழுத்துகளுக்கும் தமிழகப் பெண்களின் எழுத்துகளுக்குமிடையில் எவ்வகையான ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்கிறீர்கள்?
புகலிடப் பெண்களின் படைப்புகளுக்கும் தமிழகப் பெண்களின் படைப்புகளுக்குமிடையில் வேற்றுமைகள் பல உள்ளன. புகலிடப் பெண்கள் மட்டுமல்ல, குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன் வந்த செல்வி, சிவரமணியின் கவிதைகளை எடுத்துக் கொண்டால் காத்திரமான பெண்ணிய நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடு கொண்ட எழுத்துக்களைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் எவருமே தமிழ் இலக்கியத்தில் அரசியல் நிலைப்பாடுடன் கவிதைகளை எழுதுவதில்லை, பெண்ணிய நிலைப்பாடு கூட அல்லாத பொது நிலைப்பாடு சார்ந்த கவிதைகளே அப்போது பெரும்பாலும் எழுதப்பட்டு வந்தன. தொண்ணூறுகளின் பின்னர்தான் கவிதையின் முகம் குறிப்பான மாற்றத்தை அடைந்தது. அக்காலத்தைப் பெண்ணியம் பேசும் கவிதைகளின் ஆரம்பக்காலம் எனலாம். பெண்ணியம், பெண்ணுடல், பெண்மொழி என்னும் அரசியல் அடையாளங்களுடனான கவிதைகள் படைக்கப்பட்டன.
புகலிடப் பெண் எழுத்தாளர்களையும் தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்களையும் ஒப்பிட்டு மதிப்பிட்டீர்களேயானால் வித்தியாசங்கள் நிறையவேயுள்ளன, களங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவே உள்ளன. புகலிடப் பெண்கள் இன, தேசிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர்கள். பல்வேறு வகையிலும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துப் புகலிடம் வரும்போது இங்கே வேறுவிதமான அரசுசார் ஒடுக்குமுறைகளை எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளில் அவர்களுடைய படைப்புகள் வெளிவரும் போது அரசியல் நிலைப்பாடு உடையவையாக, வேறு களத்திலே சர்வதேச பார்வையுடையவையாகவே அவர்களுடைய இலக்கியங்கள் பயணிக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தகைய பார்வை மிகவும் குறைவு. எழுத்துகளை சூழல்தான் தீர்மானிக்கிறது. சொந்த நிலத்திலோ, அந்நிய நிலத்திலோ இப்பெண்கள் சரியான முறையில் ஒரு தடத்தைப் பிடித்து இலக்கியங்களைப் படைக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப் போனால் ஆழியாள், தமிழ்நதி, அனார், பஹிமா, ரேவதி போன்ற பல பேர்கள் சிறப்பான முறையில் எழுதி வருகிறார்கள். பெண்களுக்கான பத்திரிகை எனப் பார்க்கும் போது ‘சுவிஸ்’ ரஞ்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொகுப்புகளாக வராத போதும் கூட இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பல பேர், குறிப்பாகப் பிரதீபாவின் படைப்புகள் காத்திரமான அரசியல் நிலைப்பாடுடையவை. சர்வதேச பெண்ணிய நிலைப்பாடு அதன் அரசியல் சூழலை உள்வாங்கி எழுதும் எழுத்துகளாக உள்ளன.
பெண்களின் எழுத்துகள் தொடர்ந்து இலக்கியச் சூழலில் புறக்கணிக்கப்படுகின்றன. “இந்த இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்குவது சிரமமானது” எனக் கூறிச் சில பெண் எழுத்தாளர்கள் சோர்வடைந்து கிட்டத்தட்ட எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை இதுதான் சூழல் என்ற புரிதலோடுதான் இலக்கியத்துக்குள் வந்துள்ளேன். சூழல் அப்படித்தான் இருக்கும். சூழல் நம்மை தூக்கி நிலைநிறுத்தும் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்கக் கூடாது. மதிப்புரையோ, விமர்சனமோ, அதை ஊடகங்களின் வழி முன்னிறுத்துவதிலோ பல உள் அரசியல் காரணிகள் உள்ளன. ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் ஆண்களின் கையிலேயே உள்ளன. பெண்களின் படைப்புகளை முன்னிறுத்துவதை அவர்கள் பெரிதும் விரும்புவதில்லை. ஒரு சில பெண்கள்- அரசியல் பின்புலம் உள்ள பெண்கள்- மட்டுமே ஊடகங்களால் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய புத்தகங்களுக்கு இதுவரையில் விமர்சனக் கூட்டங்கள் நடத்தியதும் இல்லை, மதிப்புரை எழுதித் தருமாறு யாரையும் கேட்டதுமில்லை. நம்மை நாம் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் எழுதுவதைத் தவிர மற்றவையெல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டுத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். விமர்சனக் கூட்டம், மதிப்புரை, ஊடக முன்னிறுத்தல் என்று நம்மை நாம் பலிக்கடா ஆக்குவோமாயின் நமது அடையாளம் தான் அழிந்து போகும். இது தற்கொலைக்குச் சமமானது. அதனாலேயே இப்படியான செயலற்ற புலம்பல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.
“பெரியாரின் காலத்து மதிப்பீடுகளை வைத்து இன்றைய பார்ப்பனர்களை மதிப்பிடக் கூடாது இன்று பார்ப்பனர்கள் மாறியிருக்கிறார்கள். இதைப் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சில பார்ப்பனிய எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?
பெரியாருக்கு பின்னான காலம் என்று சொல்வதிலும் பார்க்க உலக மயமாக்கலின் பின்னர் அதிகாரத்தில் பார்ப்பானர் அல்லாதவர்களின் கைகள் ஓங்கியிருக்கின்றன எனச் சொல்வது இன்னும் பொருத்தமாயிருக்கும். ஊடகம் பார்ப்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த காலம் போய் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவை பார்ப்பானர்கள் அல்லாத சக்திகளின் கைகளில் வந்த பிறகு இந்த மாற்றங்களைப் பார்ப்பானர்களும் கிரகித்துக் கொள்கிறார்கள். சகல ஊடகங்களிலிருந்தும் பார்ப்பானிய ஆதிக்கம் போய் அதிகாரம் வெவ்வேறு கைகளில் இருக்கும் நிலையில் இங்கு தங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக; தங்களை மையமாக வைத்துக் கொள்ளவதற்காக; தங்களைச் சாதிப் பாசமில்லாதவர்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு முற்போக்கு முகமும் தேவையாக இருக்கும் படசத்தில் அணிசேராமை, கருத்துச் சுதந்திரம் போன்றவற்றைத் தாமும் பேசி ஒற்றை அரசியல் குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக ஒப்புக்கு அதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஓரிருவருக்கு இடமும் கொடுத்து கூட வைத்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு நிலைப்பாட்டிலேயே அவர்கள் செயற்பாடுகள் இப்போது இருந்து வருகின்றன. அவர்கள் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியே இந் நிலைக்கு இம் மாற்றங்களுக்கு அவர்களை முன் தள்ளியுள்ளது. மற்றபடி இது முற்று முழுதான மனமாற்றமோ சாதியற்ற இலக்கியச் செயல்மாற்றமோ கிடையாது.
மிகவும் முக்கியமான பெண்விடுதலை எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்பட்ட சல்மா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்கள் தி.மு.கவில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்களின் மைய நீரோட்ட அரசியல் நுழைவைச் சக படைப்பாளியாக எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
அறிவுஜீவிகள் அரசியலில் நுழைந்து அரசியலை ஐனநாயகப்படுத்த முடியுமென்றால் அது ஒரு நல்ல விடயமே. ஆனால் இங்குள்ள அரசியலில் இது எந்த விதத்திலும் சாத்தியமற்ற விடயம்.
இவர்களின் அரசியல் பிரவேசத்தை ஒரு அடையாளச் சிக்கல் சார்ந்த பிரச்சினையாகத்தான் நான் பார்கிறேன். இவ் அரசியல் பிரவேசங்களால் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம், புரட்டிப் போட்டு விடலாம் என்பது தவறான கணிப்பாகும். அவர்களால் ஒன்றும் மாற்றிவிட முடியாது. அரசியல் நுழைவால் தங்களுக்கு அரசியல் – அதிகார லாபங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் போனார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் பெண்ணியம் பற்றி சுதந்திரம் பற்றி உரக்க முழங்குவதால் மட்டுமே இவர்களால் இவ் அரசியலில் இம்மியளவு மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. இவர்களால் அங்கிருந்தபடி பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவோ அல்லது வேறெந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவோ குரல் கொடுக்கத் தங்கள் கட்சியை நிர்ப்பந்தித்து விட முடியாது. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு இவர்கள் கட்டுப்பட்டவர்கள். பொதுவாகச் சொல்லப் போனால் கட்சிக்குள் பெண் என்ற அடையாளத்தோடு நுழையும் போதே அக்கட்சியின் ‘ட்ரஸ் கோட்டை’ நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்தத் தொடக்கப் புள்ளியிலேயே நமது தனித்துவம், சுதந்திரம் கட்சிக்குள் அடிபட்டுப் போகிறது பின்பு எப்படி நமது கருத்துச் சுதந்திரம் பற்றியும் கொள்கைச் சுதந்திரம் பற்றியும் கட்சிக்குள் பேச முடியும்! பெண் என்ற பார்வையே கட்சிக்குள் வேறு விதமாக உள்ளது. ஒரு சராசரி ஆண் பொதுப்புத்தியில் என்ன மதிப்பீடு பெண்களுக்கு உள்ளதோ அதே மதிப்பீடுதான் கட்சிக்குள்ளும் உள்ளது. கட்சி ஒரு முடிவை எடுத்து பொது மனித சமூகப் பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இது ஒரு பெண் சார் விடயமென்பதால் கட்சி இவ் விடயங்களைப் பற்றிச் சிந்திப்பது கூட இல்லை. ஆகவே பெண்கள் தங்களது தனித்துவம், பெண்ணுரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை யாவற்றையும் பலி கொடுத்துத்தான் கட்சிக்குள் இயங்க முடியும்.
‘குடும்பம் என்பது வன்முறை நிறுவனம்’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘பெண்கள் கர்ப்பப் பையைத் தைத்துவிட வேண்டும், பிள்ளைகள் பெறுவதை விட்டுத் தொலைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொன்னார் பெரியார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இன்றைக்கு குடும்ப அமைப்பு சிதைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. கலப்புத் திருமணங்கள் ஜாதி அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆகையால் கலப்புத் திருமணங்களை சுயமரியாதைத் திருமணமாக ஆதரிக்க வேண்டுமென்றார் பெரியார். ஆனால் ஒரு சதவீதம் கூட சமூகத்தில் மாற்றம் ஏற்படவில்லை.
குடும்பம் தனது அதிகாரத்தை புதுப்பித்த வண்ணமே இருக்கிறது. பெண் ஒடுக்குமுறை நவீன குடும்ப அமைப்புக்குள்ளும் வெவ்வேறு வழிகளில் தனது கால்தடங்களைப் பதித்து விட்டது.
ஆகவே இந்த குடும்ப அரசியலை தகர்ப்பது என்பது பெரியார் சொன்ன முறைகளில் ஒருபோதும் சாத்தியமில்லை. வேறு விதமான ஒரு வாழ்க்கை முறையினால் மட்டுமே சாத்தியமாகும். இங்கு பெண்கள் உள் நுழைந்து பெண்ணியம் பேசும்போது சமூகம் சீரழிந்து போகிறது என்னும் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இன்று வரை உலகில் ஏற்பட்ட நடந்து கொண்டிருக்கிற அழிவுகளுக்கு எல்லாம் காரணம் ஆண்கள். இவர்களின் போர்வெறி, அதிகாரவெறி, ஆக்கிரமிப்புக் கொள்கை, இயற்கை வளங்களைக் கொள்ளை அடித்தல், போன்ற பேராசைகளால் நடந்த வன்முறையின் வரலாறே மனித சமூகத்தின் வரலாயிருக்கிறது.
இதனாலேயே உலகம் பலமுறை அழித்து அழித்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை முறையினால்தான் உலகம் அழிந்து போகும், சீரழிந்து போகும் என்ற போலியான குற்றச்சாட்டை உருவாக்கிக் காலம் காலமாக சமூகம் பெண்ணை அச்சுறுத்திக் கொண்டே, அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டே யிருக்கிறது. பெரியார் சொன்னது போல கர்ப்பப்பையை தைத்துக் கொண்டால், குழந்தை பெறாமல் இருந்தால் பெண் சுதந்திரமாக இருக்க முடியும் என்னும் கூற்றுக்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியங்கள் நிறையவே உள்ளன. அப்படியிருந்தும் பெண் ஒடுக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஏனென்றால் இந்த உலகில், நிர்மாணிக்கப்பட்ட நகரம், கிராமம், துறைகள், நிர்வாகம், அலுவலகம் எதுவாகயிருப்பினும், எந்தவொரு நிர்மாணத்திலும் பெண்களுக்கான இடமே கிடையாது. இங்கு பாரிஸ் வீதிகளில் ஒரு பொதுக் கழிப்பிடத்தைத் தேடிப் பல மணி நேரம் அலைய வேண்டியுள்ளது. ஒரு நகரத்தை வடிவமைப்பதில் கூடப் பெண்ணைப் பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. பெண் மூத்திரம் பெய்யாமல் வாழ்ந்திட முடியுமா? இந்தச் சமூகத்தில் தனியாக இருக்கிற பெண் எங்கே தூங்குவாள்? தனியாக எங்காவது தங்கிட முடியுமா? ஆகவே கர்ப்பப்பையை தைப்பதோ, குழந்தை பெறாமல் இருப்பதோ கூட பிரச்சினை கிடையாது. இங்கு பெண்ணுடலைத்தான் முக்கியமான விடயமாகக் கருதுகிறேன். யோனிதான் மையமாக உள்ளது. யோனிசார் அடக்குமுறைதான் இங்கு அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்று தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் சரி, அரச இராணுவங்களானாலும் சரி, யுத்தப் பிரபுக்களின் படையணிகளிலும் சரி, பெண்களும் குழந்தைகளும் உள்வாங்கப்படுகிறார்கள். பெண்கள் ஆயுதம் ஏந்தி அரசியல் வெளிகளுக்கு வருவதால் ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு உடைப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து?
ஒரு சமூகமே விடுதலைக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் சரிசமமாகக் கலந்து கொள்வதென்பது சரியான விடயமாகவே எனக்குப் படுகிறது. ஆனால் குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதென்பது ஒரு சமூகத்தின் சுய அழிவுக்கே சமூகத்தை இட்டுச் செல்லும். இது ஒரு போதும் விடுதலையை நோக்கி இட்டுச் செல்லாது. இளைய தலைமுறையைப் பலி கொடுத்துவிட்டு விடுதலைப் போராட்டத்தை யாருக்காக நடத்துகிறீர்கள்? எதற்காக இத்தனை குழந்தைகளின் மரணங்கள்? நாம் போராடி இளைய தலைமுறைக்கு விடுதலையைப் பெற்றுத்தருவது நமது கொள்கை, ஆனால் குழந்தைகளைப் பலியிட்டு நாம் வாழ வேண்டும் என்பதில் வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது. விடுதலைப் போராட்டம் இப்படியொரு பாதையை எடுக்குமாயின், இவ் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றாலும் அது ஒரு ஜனநாயக அரசை அமைக்க வாய்ப்பே கிடையாது, அது சர்வதிகார அரசாகவே மாறும்.
ஆனால் பெண்கள் யுத்தத்தில் பங்கேற்கும் போது அவர்கள் பல்வேறுவிதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். விடுதலைப் போராட்டம் பெண்ணிய விடுதலையும் சார்ந்த போராட்டமில்லாமல், தனியே மண் சார் விடுதலையாக, அதிகாரக் கைப்பற்றலாக மாறும் போது போராட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில் பெண்களின் நிலை பெரிய சிக்கல்களுக்குள் உள்ளாகும் வாயப்புகளே அதிகமாக உள்ளது. அதாவது பெண்கள் தங்கள் மதிப்பீடுகளை முற்றிலுமாக இழக்கிறார்கள். அவர்களுக்குப் பொதுச் சமூகத்தில் சராசரியான உறவுகள் அமைவதில் சிக்கல்கள் எழுகின்றன. இத்தருணத்தில் அவள் தனித்து விடப்படுகிறாள். ‘வீரம்’, ‘தியாகம்’ என்று பெண்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி, யுத்தம் முடிவுக்கு வரும் காலங்களில் அவர்களை அநாதைகளாக -பெற்றோர்களால் கூட ஏற்கப்படாமல் – நடுத் தெருவில் விடுவது என்ற நிலையை மாற்ற வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்ற அரசோ, அமைப்போ பொதுமக்களின் மனோபாவத்தை முதலில் விடுதலை அரசியல் மயப்படுத்த வேண்டும். யுத்தத்துக்கு முன் – பின் வாழ்க்கை முறைகளைப் புரிய வைக்க வேண்டும். பெண்களை, சக போராளிகளின் மனநிலையை, ஆண், பெண் உறவு சார் முறைகளையும் அரசியல் மயப்படுத்த வேண்டும்.
ஆகவே பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளை மாற்றாமல் போராட்டம் என்றவுடன் அவர்களைப் பிடித்துச் சென்று கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொல்லி போராட்டம் முடிவுக்கு வரும் போது துப்பாக்கியைப் பிடுங்கிப் பெண்களை தெருவில் தூக்கி எறிவது வெறுமனை பெண்ணை ஒரு கருவியாக உபயோகப்படுத்துவதேயாகும். இதில் கொஞ்சம் கூட எனக்குஉடன்பாடில்லை.
சில விடுதலைப் போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தினாலும் உதாரணமாகப் பாலஸ்தீனப் போராட்டத்தில், அங்கு அவர்கள் தனியே வாழ்வுரிமைப் பிரச்சினையை முன் வைத்தே போராடுகிறார்கள், மத ஒடுக்குமறைக்கு எதிரான பெண்கள் நிலைப்பாட்டை அவர்கள் தொடவேயில்லை, ஆகையால் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் போதும் வேறு விதமானவொரு ஒடுக்குமுறையே பெண்களுக்கு கையளிக்கப்படும்.
இன்றைய ஆபத்தான இந்துத்துவ சூழ்நிலையை பெண்ணிய அரசியலாளர்கள் எவ்வாறு அணுக வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
இந்து மத எதிர்ப்பு என்பது பெண்ணிய விடுதலையின் முதன்மையான விடயமாகவே கருதப்பட வேண்டும். பன்முகத் தன்மையற்று ஒற்றைப் பரிமாணத் தன்மையில் பொதுவாகப் பேசுவோமாயின் பெண் விடுதலை ஒரு போதும் சாத்தியமற்றது. ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையாளர்கள் தங்கள் கைகளில் நிச்சயமாக எடுக்க வேண்டும். வேறு எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் நம்மீது பிரயோகிக்கப் படுகிறதோ அத்தனைக்கும் எதிராகப் போராடும்போதுதான் பெண்ணியம் சாத்தியமாகும். எவற்றோடும் சமசரம் செய்யும் படசத்தில் பெண்ணியம் சாத்தியமற்றுப் போய்விடும்.
பெண்ணியம் என்பது வேறு பெண் நிலைப்பாடு என்பது வேறு. அதாவது பெண்ணியம் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு பெண் பொதுநிலை. பெண் நிலைப்பாடு என்பது அரசியல் நீக்கப்பட்ட ஒரு தன்நிலை. இங்கு பல பெண்கள் பெண் நிலைப்பாட்டில் இருந்தே எழுதி வருகிறார்கள். நாம் நகர வேண்டியது பெண்ணிய அரசியலை நோக்கியே!
test
பெண்களின் அரசியல் நுழைவு..
ஓர் அரசியல் தலைவரின் மகளாக, சகோதரியாக..
பெரும்பாலும் மறைந்த அரசியல் தலைவரின்
விதவை மனைவியாக மட்டுமே தொடர்ந்து நிகழ்ந்து
கொண்டிருப்பதைக் கவனிக்கும்போது
நாம் இன்னும் “பெண்களுக்கான அரசியலை:க் கண்டடைய வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஊடகங்கள் இன்று பார்ப்பனர்களின் கைகளிலிருந்து
பார்ப்பனரல்லாதவர்களின் கைகளுக்கு மாறியிருப்பது
உண்மைதான். ஆனால் ஊடகங்களில் தவிர்க்க முடியாத காட்சிகளாக, கருத்துகளாக நிரம்பி
அடி முதல் முடிவரை தன் கருத்தாக்கங்களால்
வெகு எளிதில் நம் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு
ஒவ்வொரு பார்வையாளனையும் ஏதொ ஒருவகையில்
பாதித்துக்கொண்டிருக்கிறது பார்ப்பனர்களின் கருத்துகள்.
தன் தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் செய்த பரப்புரைகளை வெகு எளிதில் காட்சி ஊடகம் தகர்த்து
தவிடு பொடியாக்கி விட்டது என்பதை நாம் இன்னும்
முழுமையாக உணரவில்லையோ என்ற அச்சம்
என் போன்றவர்களுக்கு.
அனைவருக்கும் வாழ்ந்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை-இந்தியா
//பெண்கள் சந்திப்பைத் தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல தமிழ் தேசியச் சார்பற்றவர்கள் பல்வேறு மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் என அனைவரும் பங்கு பெறும் கருத்துச் சுதந்திரம் பேணும் பெண்ணிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டு ‘புலி எதிர்ப்பு’ என்று கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.// தமிழ்நதிக்கும் சில ஆணாதிக்கவாதிகளுக்கும் கொடுத்த அடி தமிழ் நதி பெண்கள் சந்திப்பைபற்றி விமர்சிக்குமுன் வன்னியில் மக்கள் படும் அவலம் பற்றி கதையுங்கள் வெளிப்படையாக அம்மக்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிவியுங்கள் ஏன் தமிழ் நதி பெண்கள் சந்திப்பில் மண்டபம் அகதிகள் பற்றி கட்டுரையோ செய்தியோ வாசிக்கவில்லை இந்தியாவில் பல இலங்கை அகதிகள் படும் அவலம் பற்றி ஒரு வீடியோ எடுத்து காட்டியிருக்ககூடாது தமிழக கவுpஞர்களை பேட்டி எடுத்து வீடியோ பிடித்து காட்டும் அளவுக்கு இலங்கை அகதிகளின் மேல் அக்கறை கொள்ளவில்லை. என்ற கேள்வி எழும்புவது நியாயம் தானே. சும்மா பெயருக்கும் புகழுக்கும் போரைப்பற்றி கவிதை பாடியோ அல்லது சிறுகதை எழுதியோ பிரயோசனம் இல்லை எங்கு நாம் எமக்கான தளங்களை பயன்படுத்தமுடியுமோ அங்கு நாம் பயன்படுத்தி எமது மக்களயின் அவலங்களை எடுத்துக் கூற வேண்டும். இலங்கை அகதிகள் படும் இன்னல்களை புரிந்துகொள்ள முடியாத தமிழ்நதி புலிகளை ஆதரிப்பது தனது சொந்த நலன் கருதியே என்று கொள்ள வேண்டியுள்ளது.
– ஊடறுவில் ராதிகா
ஊடகங்கள் இன்று பார்ப்பனர்களின் கைகளிலிருந்து
பார்ப்பனரல்லாதவர்களின் கைகளுக்கு மாறியிருப்பது
உண்மைதான். ஆனால் ஊடகங்களில் தவிர்க்க முடியாத காட்சிகளாகஇ கருத்துகளாக நிரம்பி
அடி முதல் முடிவரை தன் கருத்தாக்கங்களால்
வெகு எளிதில் நம் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு
ஒவ்வொரு பார்வையாளனையும் ஏதொ ஒருவகையில்
பாதித்துக்கொண்டிருக்கிறது பார்ப்பனர்களின் கருத்துகள்.
/
புதிய மாதவியிடம் ஒரு கேள்வி. உண்மையில் நீங்கள் குறிப்பிடும் அந்தக் கருத்துக்கள் பார்பப்னா;களின் கருத்துக்களா அல்லது அதகாரத்தின் வடிவமா? பார்ப்பனா;களின் கையிலிருந்து அதிகாம் வேறு ஜாதியினரின் கைகளுக்குப் போன பின்னும் ஒடுக்குமுறை மற்றும் அதன் பண்புகளில் மாற்றங்கள் ஏதும் இல்லையே? ஒடுக்குமுறை அதேவழியில் தொடர்கிறதே. உதாரணமாக ஊடகங்கள் மக்களை வெறுமனே நுகர்வோராக வைத்திருப்பதில் பாரிய பங்களிப்i பவழங்குகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல இங்கு ஐரோப்பாவிலும் அதே அணுகுமுறை தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் ஊடகங்களின் பல நிகழ்ச்சிகள் அமெரிக்க ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் நகல்கள் தான் என்பதை இங்கிருந்து பார்க்கும் போது புரிந்து கொள் ளமுடிகின்றது. ஆக எந்த ஜாதியினராயினும் அதிகாரத்தைக் கையிலெடுத்தவுடன் ஆள்பவர் ஆளப்படுபவர் என்கிற பண்பு வந்து விடுகிறது. ஆக இதை அதிகாரத்தின் பண்பு என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும். இன்றைக்கு பார்ப்பனர் அல்லது பார்ப்பனரல்லாதவர் என்கிற கருத்தாக்கத்தை யாhர் அதிகம் தூக்கிப்பிடிக்கிறார்கள் என்றால் ஒடுக்கப்படட ஜாதியினரல்ல. பார்ப்பனர்களுடன் அதிகாரததிற்காகப் போட்டியிடும் அடுத்த படிநிலையிலுள்ள ஜாதியினர் என்பது புலப்படும். உண்மையில் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த தூண்டிலைப்பாவிக்கிறார்கள். அவ்வளவு தான். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அவர்களும் சவாரி விடகிறார்கள். நாம் கண்முன்னே காண்பது அதைத்தானே?
‘இன்றைய ஆபத்தான இந்துத்துவ சூழ்நிலையை பெண்ணிய அரசியலாளர்கள் எவ்வாறு அணுக வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
இந்து மத எதிர்ப்பு என்பது பெண்ணிய விடுதலையின் முதன்மையான விடயமாகவே கருதப்பட வேண்டும். பன்முகத் தன்மையற்று ஒற்றைப் பரிமாணத் தன்மையில் பொதுவாகப் பேசுவோமாயின் பெண் விடுதலை ஒரு போதும் சாத்தியமற்றது. ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையாளர்கள் தங்கள் கைகளில் நிச்சயமாக எடுக்க வேண்டும். வேறு எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் நம்மீது பிரயோகிக்கப் படுகிறதோ அத்தனைக்கும் எதிராகப் போராடும்போதுதான் பெண்ணியம் சாத்தியமாகும். எவற்றோடும் சமசரம் செய்யும் படசத்தில் பெண்ணியம் சாத்தியமற்றுப் போய்விடும்.’
கேள்வி இந்த்துவா பற்றி இருக்கும் போது பதிலில் இந்து மத
எதிர்ப்பு இடம் பெறுகிறது. இந்த்துவா= இந்து மதம் என்ற
புரிதலுடன் பேசுகிறாரா.அப்படியாயின் பிற மதங்களை
ஆதரிக்க வேண்டுமா இல்லை எதிர்க்க வேண்டுமா?
இந்து மதம் ஒழிந்து விட்டால் பெண் விடுதலை சாத்தியமாகிவிடுமா? ஏன் இந்து மத எதிர்ப்பு முதன்மையான
விடயமாக கருதப்பட வேண்டும்.இந்தியாவில் இந்துச் சட்டம்
பெண்களுக்கு வழங்கும் உரிமைகளுடன் பிற மதச் சட்டங்கள்
வழங்கும் உரிமையை ஒப்பிட்டு விவாதிக்க மாலதி தயாரா?
FGM என்பது நடைமுறையில் உள்ள நாடுகளில் இந்து மதமே
இல்லையே? ஐரோப்பாவில் ஈழப் பெண்களுக்கு இந்து மத எதிர்ப்பு
முதன்மையான விடயமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான
தேவை என்ன?
‘எவற்றோடும் சமசரம் செய்யும் படசத்தில் பெண்ணியம் சாத்தியமற்றுப் போய்விடும்.’
இது சரியான காமெடி. இதை பெண்ணியம் பேசுபவர்களுக்கும்
பொருந்தும் என்று வாதிடலாமா?
தமிழ் சூழலில் தான் ஆணாதிக்கம் அதிகம் இருக்கின்றது. தமிழ் பெண்களுக்கு கற்பித்தன பிற்போக்கு அறுவுரைகள் வழங்கு தமிழ் சினிமா, தொலைக்காட்சி தொடர் பத்திரிகளின் கலக்குவது பெறும்பாலும்தமிழர் அல்லாத பெண்கள் தான்.எந்த கேல்விக்கும் இடம் இல்லாமல் பெண்கள் சம உரிமை ஜனனாயக உரிமைக்கு எதிராக ஈவ் டீசிங் வசனங்கள் கொண்ட தமிழ் சினிமாவில் தமிழர் அல்லாத பெண்கள் கலக்குவது பற்றி மாலதி கேல்வி எழுப்பியது உண்டா?. தமிழ்நாட்டில் தமிழ் பெண்கள் விரும்மிய உடை அணியும் சகந்திரம் பற்றியும். செக்ஸ் கொள்கைகள் பற்றி வெளிப்படையக பேசும் கந்திரம் பற்றி தமிழர் அல்லாத மற்ற மாலில பெண்களின்நிலையுடன் ஒப்பிட்டது உண்டா?
தமிழ் பெண்கள்நிலை ,தமிழ் பெண் எழுத்தாலர்களின் சம உரிமை ஜனனாய உரிமைகளின்நிலை மிகவும் உயரவேண்டி இருக்கின்றது.
தமிழ் பத்திரிகைகள் தமிழ் தொலைக்காச்சி நிகழ்ச்சிகள் இவைகளின் இடம் பெரும் பிற்போக்கு ஆணாதிக்க ஆதரவு மனனல மருத்துவர்கள்{சைக்கார்டிஸ்} வாதங்கள் பற்றி விவாதித்து உண்டா? அவைகள் பெண்கள் சம உரிமை ஜனனாயக உரிமைக்கு எதிரானவை. சாலனி, ரெட்டி சைக்கார்டிஸ்டு வாத்ங்கள் எல்லாம் அத்தகையவைதான்.மாலதி, சுகர்தாரனி, குட்டி ரேவதி,லீனா மனிமேகலை போன்ற பெண்கள் சம உரிமை ,ஜனனாய உரிமை வாதிகள் இது பற்றி எல்லாம் விழிபுணர்வோடு இருக்கவேண்டும்.
சமையல் வேலை விட்டு வேலை எல்லாம் பொம்பளை வேலை என்ற தவரான தகவலுக்கு எதிராக தமிழ் பெண்கள் இடத்தில் ,அவர்கள் பெற்றவர்கள் இடத்தில் விழிபுணர்வு ஏற்படுத்தவேண்டும். அப்பொழுது தான் பெண்களுக்கு மற்ற விசையங்களில் திரமைகள் வழரும்.
தமிழ் பெண்களுக்கு கற்பித்தன பிற்போக்கு தர அறிவுரைகள் வழங்கும். பெண்கள் சம உரிமை, ஜனனாயக உரிமைக்கு எதிரான ஈவ் டீசிங் வசனங்கள் உடைய தமிழ் சினிமா, தொழைக்காச்சி தொடர்களில் கலக்குவது தமிழர் அல்லாத பெண்கள் தான் என்பது பற்றி எல்லாம் தமிழ் பெண்கள் சம உரிமை ஜனனாயக் உரிமை பேசும் எழுத்தாழர்கள் விவாதித்து விழிபுணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இவைகள் பற்றி தமிழ் பெண்கள் சம உரிமை ஜனனாயக் உரிமை பேசும் எழுத்தாலர்கள் நிரைய விவாதித்து பெண் பிள்ளைகள் பெற்றோரிடம் விழிபுணர்வு ஏற்படுத்தவேண்டும்.