நாங்கள் பொதுக்கூடத்துக்குள் பிவேசித்த போது D3 பிரிவிலிருந்து நான்கு காவலர்களும் ஒரு நாயும் உடற்பயிற்சிக்காகக் குட்டிமணியை அழைத்து வருவதைக் கண்டோம். தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதிகளைத் தனித் தனியாகத்தான் உடற்பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்கள். அதுவும் நன்றாக வெட்ட வெளிச்சமாக விடிந்த பின்னே தான் அழைத்துச் செல்வார்கள்.குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்கள் உடற்பயிற்சி செய்யும் இடத்தின் மேலே இரும்பு வலைபோட்டு மூடியிருப்பார்கள். கைதிகள் ‘ஹெலிகொப்டர்’ மூலம் தப்பிச் செல்வதைத் தடுக்கவே இந்த ஏற்பாடாம். குட்டிமணி எங்களைக் கண்டதும் தனது இரு கைகளையும் அகல விரித்து மார்பைச் சற் றே பின்சரித்து முகத்தை மேலே தூக்கி வலது கைப் பெருவிரலை நிமிர்த்தி ‘வெற்றி’ எனச் சைகை செய்தார். பின் “தின்னவேலியில் பதின்மூன்று ஆமி சரியாம்” என்று கூவினார். “பேச வேண்டாம்” என்று தடுத்த காவலர்களை அவர் கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. அப்போது குட்டிமணி நீர்வேலி வங்கிக்கொள்ளை, தொண்டைமானாற்றில் இரண்டு பொலிஸ்காரர்களைக் கொன்றது உட்பட பல வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனைக்காகக் காத்திருந்தார். தண்டனை தீர்க்கப்பட்ட கைதிகளுக்கு செய்திப் பத்திரிகைகள் வாசிக்கக் கிடைக்கும்.
நான் சிறைச் சுவர்களின் மூலைகளில் குத்தியிருந்து அந்தப் பதின்மூன்று உயிர்களுக்குப் பதிலாக எத்தனை ஆயிரம் உயிர்கள் பழி தீர்க்கப்படுமோ என நினைத்து நினைத்து அஞ்சிச் சாகலானேன். டீசல் வாசம் கமழும் என் தீவிலிருந்து என்னைக் கிளப்பிய தருணங்களைப் பழித்தேன்.ஒரு கணம் பாவமன்னிப்புத் தடுப்பின் அந்தப் பக்கமாகவும் மறுகணம் பாவமன்னிப்புத் தடுப்பின் இந்தப் பக்கமாகவும் அமர்ந்து முழந்தாளிட்டுப் பேசினேன். ஆகக்குறைந்தது எழுபத்தியொரு உயிகள் பலியிடப்படும் என்று எனது சுட்டுவிரல் எரிய எரியச் சிறையின் புழுதித் தரையில் கீறினேன். அந்த எழுபத்தொன்றில் நானும் ஒன்றாகவிருந்தேன். சாவு ஆடுகிறது. C3 பகுதியிலிருந்த நாங்கள் எல்லோரும் நம்பிக்கையைப் பேச முயன்றோம். ஆளை ஆள் தைரியங்கள் உரைத்தோம். எல்லோருமே சிறிதரனின் வருகைக்காகக் கசங்கிய மூளைகளொடு காத்திருக்கலானோம்.
பூநகரியைச் சேர்ந்த சிறிதரனைப் ‘பிறவி விஞ்ஞானி’ என்றே தோழர்கள் சொல்வதுண்டு. சிறிதரன் சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்கும் கம்பிகள் வழியே மிதக்கும் பாதையின் தொழில் நுட்ப பராமரிப்பாளராய் வேலை செய்தவர். அந்தக் கறள் கட்டிய மிதவையில் பல வித ஒட்டுகளையும் தையல்களையும் சாதுரியமாகப் போட்டு வந்தவரை பொடியள் அணுகி நீர் மூழ்கிக் கலமொன்றைச் செய்வதற்கான திட்டங்களைக் கேட்டிருக்கிறார்கள். மாதிரி நீர் மூழ்கிக் கப்பலொன்றை வடிவமைத்த வரைபடத்துடன் சிறிதரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பதினொரு மாதங்களாகக் காவலில் இருக்கிறார். நீர் மூழ்கிக் கப்பல் சதிவழக்கின் முதலாம் எதிரியான சிறிதரன் மீதான முதலாவது நீதி விசாரணை இன்று காலையில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்காகச் சிறிதரன் அதிகாலையிலேயே வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
மதியம் சிறிதரன் திரும்பி வந்தார். அவரின் மூஞ்சி காய்ந்து கருவாடாய்க் கிடந்தது. அவர் தனது கூண்டுக்குள் நின்று எங்களுக்குக் கதைகளைச் சொன்னார். நாங்கள் ‘ம்’ கொட்டிக் கேட்கலானோம். சிறிதரன் நீதிமன்றத்திலிருந்து வெலிகட சிறைக்கு அழைத்து வரப்பட்ட வழியிலுள்ள புதுக்கட, ஆமர்வீதி, பஞ்சிகாவத்த, மருதான, புஞ்சிபொரள பிரதேசங்கள் முழுவதும் – சிறிதரன் கொழும்பு நகரத்தை நன்கு அறிந்தவர் – தமிழர்களின் கடைகளும் வீடுகளும் எரிகின்றன. புதுக்கடயில் நீதிமன்ற வாசலுக்கு முன்பாகவே ஒரு காருக்குள் நான்கு சடலங்கள் எரிந்து தீய்ந்து கிடப்பதையும் சிறிதரன் கண்டிருக்கிறார். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் வீதியில் கொல்லப்பட்டுக் கிடந்தாளாம். வீதி முழுவதும் இளைஞர்களும் சிறுவர்களும் கொண்டாட்டத்துடன் திரிகிறார்களாம். அவர்கள் பெற்றோல் குண்டுகளைக் காவித் திரிகிறார்களாம். சிறிதரனை அழைத்துச் சென்ற பொலிஸ் வாகனத் தொடரணியைப் பார்த்துக் கலவரம் செய்பவர்கள் கைகளை அசைத்ததாகவும் பதிலுக்கு பொலிசாரும் கைகளை அசைத்துச் செல்லம் பொழிந்ததாகவும் சிறிதரன் எங்களுக்குக் கூறினார். சிறிதரனை நீதிமன்றத்துக்கு அழைத்தச் சென்ற அதிகாரியான நிஸ்தார் ஒரு முசுலீமாக இருந்ததே தான் கலவரக்காரர்களின் கையில் சிக்காமல் உயிர் தப்பி வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருப்பதற்க்கான ஒரேயொரு காரணம் என்றும் சிறிதரன் சொன்னார். நாங்கள் எல்லோரும் குழப்பமான வழிகளில் சிறிதரனிடம் கேள்விகளைக் கேட்கலானோம். அறிவுக்குப் பொருந்தாத கேள்விகளைக் கேட்கக் கூட நாங்கள் வெட்கப்பட்டோமில்லை. ஏனெனில் அப்போது எங்கள் உதடுகளை இதயம் இயக்கிக்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட பதின்மூன்று இராணுவ வீரர்களது உடல்களும் சவப்பெட்டிகளில் இல்லாமல் வெறும் பொலித்தீன் உறைகளில் சுற்றி கொழும்புக்கு எடுத்து வரப்பட்டு பின் அவை நேற்றிரவு ‘கனத்த’ மயானத்தில் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அங்கே அமைச்சர்கள் பழிக்குப் பழி தீர்க்கும் உரைகளை நெருப்புகளுக்கு நடுவில் நிகழ்தியிருக்கிறார்கள். நேற்றிரவு ‘கனத்த’ மயானத்தில் பொறி கிளம்பி அது இலங்கை முழுவதும் தீயாய்ப் படர்கிறது.
மதியம் கம்பிகளுக்குள்ளால் அலுமினியக் கோப்பை தள்ளிவிடப்பட்ட போது என்னால் சாப்பிட முடியவில்லை. சுவருள் முடங்கியிருந்தேன். இரண்டு மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருவதாக ஒரு சிறைக்காவலன் போகிற போக்கில் கூறிச் சென்றான். இப்போது நேரம் இரண்டரை மணியிருக்கலாம். நாங்கள் அடைக்கப்பட்டிருந்த சிலுவை வடிவக் கட்டடத்தின் மேற்தளங்களில் பெரும் ஆரவாரங்கள் எழக் கேட்டேன். அதே நேரத்தில் சிலுவைக் கட்டடத்தை வெளியிலிருந்து ‘ஜெயவேவா’ அசைக்க ஆரம்பித்தது. C3 தொகுதியில் எனது சிறைக்கூண்டு முதலாவதாய் இருந்தால் என் அறையின் உயரே இருந்த சதுர யன்னல் மூலம் என்னால் பொதுக்கூடத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியும். ஒரே தாவலில் யன்னல் கம்பிகளைப் பற்றினேன். கால்கள் அந்தரத்தில் கிடந்தன. நான் பொதுக்கூடத்துள் பார்த்தபோது பொதுக்கூடத்தின் பிரதான வாயில் வழியே நூற்றுக்கணக்கான வெள்ளை உடைகளை அணிந்திருந்த சிங்களக் கைதிகள் கைகளில் பொல்லுகள் சகிதம் சிலுவை வடிவக் கட்டடத்தினுள் பரவுவதைப் பார்த்தேன். அவர்கள் மூர்க்கத்தனமாக ஆனால் ஒரே நேரத்தில் தங்கள் நாக்குகளை வாயிலிருந்து வெளியே சுழற்றினர்; ‘ஜெயவேவா!’
யன்னலிலிருந்து வழுவி ஒரு பல்லி மாதிரித் தரையில் வீழ்ந்தேன். C3 தொகுதியின் சிறைக்காவலர்கள் அவசர அவசரமாக எமது சிறைக்கூண்டின் பூட்டுகளை இழுத்துச் சரிபார்த்தனர். எங்களைக் கூண்டின் கம்பிக்கதவு அருகே நிற்க்காது பின்னே போய் சுவரோடு ஒட்டிப் படுக்குமாறு அவர்கள் கத்தினார்கள். நிசங்க என்ற இள வயதான சிறைக்காவலன் என்னிடம் வந்து “பயப்படாதே எனது பிணத்தைத் தாண்டித்தான் கொலைகாரர்கள் உங்களிடம் வர முடியும்” என்றான். நான் எல்லாவித நம்பிக்கைகளையும் இழந்து கையறு நிலையில் அவனைப் பார்த்து “போமஸ்துதி மாத்தையா” என்றேன்.
சிறைக்காவலர்கள் பொதுக் கூடத்திலிருந்து C3 தொகுதிக்குள் பிரவேசிக்கும் வாசல் கதவையும் இழுத்துச் சரிபார்த்தார்கள். பின் அவர்கள் உள்ளே வந்து மலசலகூடத்துள் சாவிகளை ஒழித்து வைத்துவிட்டு C3 தொகுதிக்குள் நுழையும் வாசலில் பூட்டிய கம்பிக்கதவுகளின் பின்னே நெஞ்சுகளை நிமிர்த்தி நின்றிருப்பதைக் கண்டேன்.
நான் மீண்டும் யன்னலில் தொற்றிப் பார்த்தபோது ஜெயிலர்களான ரெஜஸ், சமிதரத்ன, பாலித ஆகியோரின் வழிகாட்டுதலில் மாரிகால மதகுகளில் பாயும் கெளிறுகள் போல படிகளை மொய்த்துப் பிடித்தபடி சிங்களக் கைதிகள் படிகளின் வழியே மேற்தளங்களிலிருந்து இறங்கி வந்தார்கள். சாவு இறங்குகிறது. ஒரு துணி மூட்டையைப் பிரித்து ரெஜஸ் ஆயுதங்களை எறிய கைதிகள் தாவிப் பிடித்து கூக்குரலிட்டார்கள் ‘ஜெயவேவா’! இப்போது ஜெயிலர் சமிதரத்ன D3 தொகுதியின் பிரதான கதவைத் திறந்துவிட்டான்.
கைதிகள் ‘ஜெயவேவா’ சொல்லிக்கொண்டே D3 தொகுதியினுள் நுழைந்தார்கள். அங்கேதான் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்டர், நடேசுதாசன் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். அதற்கு அப்பால் D3 தொகுதியினுள்ளே என்ன நடக்கிறதென்று என்னால் பார்க்க முடியவில்லை. பின்பு B3 தொகுதியின் வாயிலையும் சிறைக்காவலர்கள் திறந்துவிடுவதைக் கண்டேன். பின் ரெஜஸும், பாலிதவும் C3 தொகுதியின் சாவிகளைக் கேட்டு நிசங்கவுடன் தர்க்கப்பட்டார்கள்.
நான் ஜன்னலை விட்டுக் கீழே குதித்து என் சிறைக்கூண்டு கம்பிகள் வழியே கண்ணைச் சாய்த்துப் பார்த்தபோது நிசங்க கால்கள் நடுங்க நின்றிருப்பதைப் பார்த்தேன். யாரோ “தமிழனுக்கு வம்பிலே பிறந்த பயல்” என்று நிசங்கவைத் திட்டுவதையும் நான் கேட்டேன். சிலுவை வடிவக் கட்டடம் முழுவதும் ‘ஜெயவேவா’வும் ஓலமும் அலறலும் எக்காளமும் எழுகின்றன. 25 ஜுலை 1983 சாவின் நாள்.
நான் பதற்றத்துடன் எனது தொகுதியிலிருந்த மற்றைய கைதிகளின் பெயர்களைக் கூவினேன். யாரும் எதையும் கேட்கும் நிதானிக்கும் சூழ்நிலையில் இல்லை. சீனா தன் நெற்றியை விரல்களால் கசக்கியவாறு விறுமனாகக் கால்களை அகல விரித்த நிற்கிறான். பக்கிரி கண்கள் குத்தி நிற்க எங்கேயோ பார்க்கிறார். நான் மறுபடியும் ஜன்னலிலில் ஏறிப் பார்த்தபோது B3 தொகுதியிலிருந்த கைதிகள் வெளியே பொதுக் கூடத்துக்கு இழுத்துவரப்பட்டு வெட்டப்படுகிறார்கள். சுரேஸ் மாஸ்டரின் தலையில் கண்டக்கோடரி வெட்டு விழுகிறது. உதயசீலனும் சுதாகரனும் ஏற்கனவே கொல்லப்பட்டு பொதுக்கூடத்துக்கு அவர்களின் உடல்கள் இழுத்துவரப்பட்டன. கொழும்பானை அவர் திமிறத் திமிற இழுத்து வந்து அவுடாவின் பிரேதத்தின் மீது தள்ளுகிறார்கள்.
D3 தொகுதியிலிருந்து சிங்களக் கைதிகள் வெளியே ஓடி வந்தார்கள். அவர்களின் உடல்களிலிருந்தும் இரத்தம் வடிகிறது. மறுபடியும் உள்ளே ஓடுகிறார்கள். உள்ளேயிருப்பவர்கள் சிங்களக் கைதிகளை எதிர்த்துத் தாக்குகிறார்களா? இறுதியில் ‘ஜெயவேவா’ கோஷங்களுடன் ஆறு உடல்களைக் குற்றுயிரும் குலையுயிருமாகப் பொதுமண்டபத்திற்கு இழுத்துவருகிறார்கள். ஜன்னலிலிருந்து நான் கீழே விழுந்தேன்.
மாணிக்கதாசன் தன் சிறைக்கூண்டின் ஜன்னலிலே ஏறிப் பார்த்துவிட்டு சிறைவாயிலில் உள்ள புத்த விகாரையின் முன்பாகப் பிணங்களை இழுத்துப்போய்க் குவிக்கிறார்கள் என்று சொன்னார். அன்றுDB3 தொகுதியில் இருபத்தொன்பது உயிர்களும் D3 தொகுதியில் ஆறு உயிர்களுமாய் முப்பத்தைந்து உயிர்கள் கொல்லப்பட்டன.
சுழிபுரத்தைச் சேர்ந்த மயில்வாகனம் சின்னையா ஒரு கோயில் பூசாரியின் மகன். அவனுக்குப் பதினெட்டு வயதுக்கு மேலேயே இருக்குமென்றாலும் அவனின் தோற்றத்தை வைத்து மயில்வாகனத்துக்கு பதின்மூன்று அல்லது பதின்நான்கு வயதே மதிக்கலாம். செக்கச் செவெலென்ற சின்னப் பொடியன். 1982ல் சுழிபுரத்தில் கடற்படையினரின் தண்ணீர் வண்டி மீது துப்பாக்கியால் சுட்டான் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அவனின் தோற்றத்திலும் குரலிலும் பெண்மை வழிந்தது. அவன் தேவாரங்களையும் பட்டினத்தார் பாடல்களையும் சீர்காழி கோவிந்தராஜனின் பக்திப் பாடல்களையும் உருகி உருகிப் பெரும் இனிமையுடன் பாடக் கூடியவன். B3 தொகுதியில் அடைக்கப்பட்டடிருந்த அவன் அந்தத் தொகுதியிலிருந்த மற்றவர்கள் கொல்லப்படும்போத எப்படியோ தப்பியோடி சிலுவை வடிவக் கட்டடத்தின் மாடிப்படிகளின் கீழே ஒளிந்திருக்கிறான். படிகளின் கீழ் மறைந்திருந்த அவன் ஒரு சிறையதிகாரியைக் கண்டதும் மறைவிலிருந்து ஓடிப்போய் சிறையதிகாரியின் கால்களில் விழுந்து தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறான். உயிருக்கு அஞ்சிக் கெஞ்சியவனைச் சிறையதிகாரி புத்த கோயிலக்கு அழைத்துச் சென்றான். மயில்வாகனம் புத்த கோயிலுக்குப் போகும்போது கைகளைத் தலைமேல் குவித்தபடியே போனானாம். அப்போது அவன் கடவுளைத் துதித்திருக்கலாம். பின்பு புத்த கோயிலின் முன்பாக அவன் மூன்று துண்டுகளாகத் தறித்து வீசப்பட்டான்.
கொலைகாரர்களின் அடுத்த இலக்கு நாங்கள் அடைக்கப்பட்டிருக்கும் C3 தொகுதிதான் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எல்லாக் கொலைகாரர்களும் புத்த கோயிலைச் சூழக் கூத்தாடுகையில் அந்த இடைவழியைப் பயன்படுத்தி எமது தொகுதியின் சிறைக்காவலர்கள் மூவரும் வெளியே ஓடிவிட்டார்கள். அவர்கள் ஓடும்போது சாவிகளையும் தங்களோடு கொண்டு போய்விட்டார்கள். இருளும் செக்கல் பொழுதில் கொலைகாரர்கள் மீண்டும் C3 தொகுதியின் கதவை அலவாங்குகள் கொண்டு மோதினார்கள்.
அப்போது எமது தொகுதியின் தலைப்பகுதி உடைபடத் தொடங்கியது. C3 தொகுதிக்கும் அதன் மேலேயுள்ள C2 தொகுதிக்கும் இடையில் பலகைகளால் இணக்கப்பட்ட தளமேயிருந்தது. இப்போது அந்தத் தளத்தை உடைத்து மேலிருந்து உள்ளே குதிக்கக் கொலைகாரர்கள் முயற்சித்தார்கள். C3 தொகுதியின் தலைப்பகுதியை உடைப்பதில் அவர்களுக்குப் பெருத்த சிரமங்கள் ஏதுமில்லை. முதலில் இருவர் உள்ளே இறங்கினார்கள். அவர்கள் நிதானமாகச் சிறையின் கம்பிக் கதவுகளைப் பற்றியே உள்ளே இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய இடம் பரந்தன் ராஜன் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் முன்புறமாய் இருந்தது. அப்போது சிறைச்சாலை முமுவதும் விசில்கள் ஊதப்பட்டன. அவை அன்றைய சங்காரம் நிறைவேறிற்று என்று கொலைகாரர்களுக்கு அதிகாரிகள் அறிவிக்கும் சமிக்ஞையாக இருக்க வேண்டும். உள்ளே இறங்கிய இருவரும் “குட்டிமணியைக் கொன்றுவிட்டோம் என்பதை யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் சொல்லுங்கள்” என்று கத்திக்கொண்டே உள்ளே இறங்கிய வழியாலேயே மேலே ஏறிப் போனார்கள். சற்று நேரம் அமைதி. மிகச் சரியான அர்தத்தில் மயான அமைதி.
( ‘ம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம்)