-சுகன்
முன்கதைச் சுருக்கம்:
கடந்த 08ம் தேதி பாரிஸில் தோழர் கலைச்செல்வனின் மூன்றாவது வருட நினைவு ஒன்றுகூடல் நிகழ்ந்தது. அது நீண்ட நாட்களிற்குப் பின்பு பாரிஸில் நிகழ்ந்த ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் நிகழ்வாய் அமைந்தது. உள்குத்துகள், வழவழத்த பேச்சுகள் என்று கூட்டம் அமளிப்படாமல் கருத்துரைத்தவர்கள் எல்லோருமே பொறுப்போடும் நிதானமாகவும் கருத்தாடினார்கள். ” தேசம் நெற் நமக்கான வலைத்தளம், அது நமக்கான களம் அதை நேர்படுத்துவது நமது கடமை” என்று ‘அம்மா’ மனோ ஒரு கருத்தாடலைத் தொடக்கி வைத்தார். தேசம் பொறுப்பற்ற முறையில் அவதூறுகளைப் பிரசுரிக்கிறது என்ற திசை நோக்கி கருத்தாடல் நகர்ந்தபோது கூட்டத்திலிருந்த எவரொருவரும் தேசம் பொறுப்பற்ற முறையில் அவதூறுகளிற்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது என்பதை மறுத்துப் பேசவில்லை. விமர்சன அழுத்தத்தின் மூலமோ அல்லது தேசம் ஆசிரியர்களுடன் உரையாடியோ தேசத்தை சரியான திசைக்குத் திருப்ப வேண்டும் என்றே கருத்துரைத்தவர்களில் அநேகர் சொன்னார்கள். ஓரிருவர் அவதூறுகளின் பலத்திலேயே தேசம் தொடர்ந்து இயங்குமானால் தேசத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்கள். தேசத்தை தடைசெய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் அங்கே பேசவில்லை. காலம் முழுதும் கருத்து எழுத்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய கலைச்செல்வனின் நினைவுகூடலில் வந்து தடை கிடையென்று யாரும் பாஸிசக் கதை பேசத்தான் முடியுமா?
“நல்லோன் எறிசிலையோ நன்னுதால்
ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு”
மன்மதனின் மலரம்புகளை விட எறிபத்த நாயனார் எறிந்த கல் தான் கடவுளுக்கு உவப்பானதென்று சுவாமி விபுலாநந்தர் தமது பாடலொன்றில் கூறுவார்.
விமர்சனங்களும் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவமும் அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்னும் வாலாயப்படவில்லை. மாற்றுக் கருத்துகளையும் எதிர் விமர்சனங்களையும் இருகரங் கூப்பி கை தொழுது வரவேற்கின்ற நிலை போயே போய்விட்டது போலத்தான் தெரிகிறது. குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள் நிறையிருந்தால் நண்பரிடம் கூறுங்கள் என்ற உணவு விடுதிக்காரரின் பக்குவம் கூடவா நமது நண்பர்களுக்கு இல்லாமல் போக வேண்டும்!
தேசத்தில் வெளியாகிய அம்மா மனோவின் தன்நிலை விளக்கம் குறித்து மிகவும் ஆழ்ந்த கவலை இப்போது எழுகிறது. நிலமையினதும் சூழ்நிலையினதும் கையறு நிலையையும் இது காட்டுகிறது.
மனோ மிகவும் பொறுப்புணர்வோடும் இடம் பொருள் ஏவல் குறித்தும் மாற்றுத் தளங்களில் இயங்குபவர். நீண்ட காலமாக சிறுபத்திரிகைத் தளத்திலும், சமூகத்திலும் செயற்படும் காரணத்தால் மாற்றுக் கருத்துகளினதும் விமர்சனங்களினதும் இன்றியமையாமையை அவர் அதிகமாகவே அறிவார்.
விமர்சனபூர்வமாக தேசம் இணையத்தளத்தை பொறுப்போடு அறிமுகப்படுத்தவும் அதன் குற்றங் குறைகளை எடுத்துப் பேசவும் மனோவை விடப் பொருத்தமானவர் புகலிடத்தில் இல்லை. தேசம் ஆசிரியர் ஜெயபாலனை விட மனோவுக்கு இந்தத் தளத்தில் அதிக அனுபவமும் புரிதலுமிருக்கின்றன என்பது உண்மை, வெறும் புகழ்ச்சியல்ல. அதை அறிந்தோர் அறிவர்.
நான் இப்படித்தான் பேசினேன்,இந்த அர்த்தத்தில் தான் பேசினேன் என ஒரு மாற்றுக் கருத்தாளர் அல்லது விமர்சகர் விளக்கம் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது ஆபத்தானது. மனம் திறந்து விவாதியுங்கள் என்பது போய் கவனமாகத் தவிர்க்கப்பட்டு சுய தணிக்கை செய்யப்பட்டு பேசியும் பேசாமலும் ஒருவர் இருப்பாரேயாமாகில்
ஊடகம் இருந்தென்ன?
சமூகம் இருந்தென்ன?
நாடிருந்தென்ன?
இந்த உலகம் இருந்துதான் என்ன?
எவ்வளவு அபத்தமான சூழலில் தமிழர்களது நல்லுலகம் இயங்குகிறது?
மனோ ‘தேசம் வலைத்தளத்தை’ முன்னிறுத்தப் போய் எழுந்த விவாதத்தில் தேசம் ஆசிரியரின் கடுமையான உழைப்புக் குறித்துப் பேசப்போய், சஞ்சிகைகளின் காலம் குறித்துப் பேசப்போய், சிறுபத்திரிகையை உழைப்புக் குறைவானதாக மனோ பேசுகிறார் என்பதாக நண்பர் பிரதீபன் புரிந்துகொண்டு மூன்று நாட்களாக மூன்று மணிநேரம் மட்டுமே தான் தூங்குவதாகவும் சிறுபத்திரிகைக்கும் கடும் உழைப்பு இருப்பதாகவும் பேசியதை அவையோர் அறிவர்.
தேசம் வலைத்தளம் குறித்து அதுவரை வேறுதளத்தில் இருந்து வந்த விவாதம் தோழர் வி.சிவலிங்கம் அவர்களின் தேசம் வலைத்தளம் குறித்த தோற்றம் – வளர்ச்சி – இயங்குதளம் இவற்றின் மீதான எடுத்துரைப்போடு வேறு தளத்திற்குப் பாய்ந்து விட்டது. தேசம் ஆசிரியர் ஜெயபாலனின் ஆரம்பப் பத்திரிகை அனுபவம் அப்படியானது (அது என்ன பத்திரிகை என்று இன்று மறந்துவிட்டது மன்னிக்க! ) அது தயாரிக்கும் அல்லது பிரசுரிக்கும் கிசு கிசுப் பாணிச் செய்திகளினால் அது அடைந்த பொப்புலாரிட்டி, அதிகம் விற்பனையானது, அதை Sun பத்திரிகையுடன் ஒப்பிட்டது, ஜெயபாலன் அவ்வகை ஜேர்னலிஸத்தையே தனக்கான பாணியாகவும் வழியாகவும் கொண்டு வருவது குறித்தெல்லாம் தோழர் சிவலிங்கம் பேசினார். உண்மையில் தோழர் சிவலிங்கம்தான் தேசம் நெற்றை நுணக்கமாக ஆராய்ந்துகொண்டிருந்தார்.
கிசு கிசுக்கள், கொசிப்புகள் இவற்றின் சக உதவியோடு முன்னைய பத்திரிகை அடைந்த பொப்புலாரிட்டியைப் பலமாகக்கொண்டே தேசம் நெற்றும் இயங்குவதாக தோழர் சிவலிங்கம் குறிப்பிட்டதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.
அவதூறுகளை நாம் கருத்துச் சுதந்திரத்திற்காக அனுமதிக்கிறோம் என்பது வேறு; பொப்புலாரிட்டிக்காகவும் பரபரப்புக்காகவும் பொய்களையும் அவதூறுகளையும் ஊக்குவிப்பதும் அதில் தங்கி நிற்பதும் வேறு.
‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்’ என்பதும் ‘எப்பொருள் யார்யார் வாய்கேப்பினும்’ என்பதும் சமூக நேர்மையும் மானிட விழுமியங்களும் சார்ந்தவை.
தோழர்கள் இரயாகரன், நிர்மலா இராஜசிங்கம், ராஜேஸ் பாலா, சுசீந்திரன், எம்.ஆர். ஸ்டாலின், ராகவன், மற்றும் தலித் மேம்பாட்டு முன்னணி, SLDF என்று தேசம் நெற்றில் ஆதாரங்களேயில்லாது போகிற போக்கில் வம்புத்தனமாக அவதூறு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மிகப் பெரிது, நேற்றைய ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:
நிர்மலாவும் ராகவனும் NGO பணத்தில் திளைக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு என்ன ஆதாரமென்றால் எதுவுமில்லை. எழுதியவருக்கும் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மையில்லை. பிரசுரித்தவருக்கும் ஆதாரமில்லாத செய்தியைப் பிரசுரிக்கிறோமே என்ற குற்றவுணர்வு குன்றுமணியளவும் இல்லை. எல்லாமே காய் புளித்ததோ வாய் புளித்ததோ கதைதான்.
இந்தச் செய்திக்கான ஆதாரத்தை தேசம் நெற் வெளியிடாதவரை இது அவதூறுதான். இவ்வாறாகத் தொடர்ச்சியாகத் தெள்ளத்தெளிவாக அவதூறுக்கு ஆளாகுபவர்கள் தேசம் வலைத்தளத்தை புறக்கணிக்க முடிவெடுப்பதில் என்ன தவறு? நீங்கள் கிசு கிசுவும் எழுதுவீர்கள் அதை எதிர்த்துக் கேட்டால் ஜனநாயக விரோதம் என்றும் சொல்லுவீர்கள். ஒரு ஊடகம் கையிலிருக்கிறது என்பதற்காகவும் பின்னூட்டம் விட பத்து முகமிலிகளும் பெயரிலிகளும் இருக்கிறார்கள் என்பதற்காகவும் இந்த ஆட்டம் ஆடக் கூடாது தோழா!
நிர்மலாவினதும் ராகவனினதும் ரிசிமூலம், நதிமூலத்தைத் தோண்டிப்பார்க்கவும் தேசம் வலைத்தளத்தில் ஒரு ‘நபர்’ புறப்பட்டிருக்கிறார். இதுவொன்றும் கடினமான காரியமல்ல. அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாகச் செயற்பட்டதும் பின்பு அமைப்போடு முரண்பட்டு வெளியேறியதும் இந்தப் போராட்டத்தில் அவர்களது தோழர்கள் சிலர் புலிகளால் கொல்லப்பட்டதும் நாடறிந்த உலகறிந்த வரலாறு. முந்தநாள் அடித்த சமாதானக் காற்றுக்கு நேற்று முளைத்த ஜனநாயகவாதிகளல்ல அவர்கள். புலிகள் இயக்கம் செல்வாக்கின் உச்சத்திலிருந்த காலத்திலேயே புலிகள் இயக்கத்திலிருந்து முரண்பட்டு வெளியேறியவர்கள் அவர்கள். கடந்த பல வருடங்களாகவே அவர்கள் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமாக குரல் கொடுப்பவர்கள். அதற்கான அமைப்புரீதியான செயற்பாடுகளில் இருப்பவர்கள். தலித் அரசியல் மீது அவர்கள் கரிசனை காட்டத் தொடங்கிய அண்மைக் காலங்களில் அவர்கள் மீது கிழிந்த புலிப் போர்வையைக் கொணர்ந்து போர்த்தும் பச்சைப் பொறுக்கித்தனத்துக்கு என்னவென்று பெயரிடுவது?
சென்ற வருடம் ‘நண்பர்கள் வட்டம்’ கலைச்செல்வனின் இரண்டாவது நினைவு ஒன்று கூடலை நடத்தியபோதும் அந்தக் கூட்டத்தில் ராகவன் உரையாற்றுவதற்கு ஒன்று கூடல் ஏற்பாட்டளர்களால் அழைக்கப்பட்டு உரை நிகழ்த்தினார். நிர்மலாவும் பங்கெடுத்தார். அந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திய அதே நபர்தான் இன்று திடீரென நதிமூலம் ரிஷிமூலம் தேடுகிறார். நிர்மலாவையும் இராகவனையும் ஹிட்லரின் வாரிசுகள் என்கிறார். இது கோயபல்ஸ் பிரச்சாரமின்றி வேறென்ன?
மாற்றுக் கருத்தாளர்களுக்குள்ளேயே எவ்வளவுதான் கருத்து முரண்கள் இருந்தாலும் ஒருவர் நடத்தும் கூட்டத்துக்கோ இலக்கிய நிகழ்வுக்கோ மற்றவரும் போய்வருவதுதான் நமது மறுத்தோடிகளின் பண்பாடும் பாரம்பரியமும். இறந்து போன ஒரு உற்ற தோழனின் நினைவு ஒன்று கூடலில் வந்து முகத்தைக் காட்டிவிட்டுப் போகக் கூடியளவுக்கு சகிப்புத்தன்மையும் நாகரிகமும் ஈரமும் இல்லாதவர்களெல்லாம் புகலிடத்திலிருக்கும் மாற்றுக் கருத்தாளர்களுக்குள் ஒற்றுமை தேவையெனத் தேசம் நெற்றில் கிளாஸ் எடுப்பது பகடி இல்லாமல் வேறென்ன?
நமது சகோதர வலைத்தளமான தேசம் விழிப்பாக இருக்க வேண்டும். விமர்சனங்களையும் முரண்பாடுகளையும் ‘அசை’யும் பகையாக மாற்றுவதில் பழுத்த அனுபவசாலிகளாக சில நபர்களை சமூகம் மாற்றியிருக்கிறது. அவர்களிடமோ குறைந்தபட்ச நேர்மை கூடக் கிடையாது. எல்லா அறங்களையும் ‘துடைத்துப்’ போட்டவர்களுக்கு உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும் என்ற முதுமொழியைத் தவிர கடைசியில் வேறொன்றுமே மிஞ்சப் போவதில்லை.
பிள்ளையானிடம் நீங்கள் ஜனநாயகம் யாசித்த பகிடியின் ஆத்தலே இன்னும் எங்களுக்கெல்லாம் அடங்கவில்லை அதுக்கிடையில் இன்னொரு பதிவு போட்டால் எப்படி?
அதைப்பற்றி இன்னும் சொல்லுங்களேன்.. எங்களுக்கு பொச்சம் தீரவில்லை…
சுகன்> எல்லாம் சரி அசையும் பகையும்- துடைத்துப்போடலும் தேவையா? இன்னா செய்தவராயினும் அவர் நாண நண்ணியம்செய்வதே நல்லது. அவா; பாணிக்கு நீங்களும் போகக்கூடாது.
//அவதூறுகளை நாம் கருத்துச் சுதந்திரத்திற்காக அனுமதிக்கிறோம் என்பது வேறு; பொப்புலாரிட்டிக்காகவும் பரபரப்புக்காகவும் பொய்களையும் அவதூறுகளையும் ஊக்குவிப்பதும் அதில் தங்கி நிற்பதும் வேறு//
இந்த ஒரு வரியே சுகனுடைய அரசியலைத் தெளிவாக்குகிறது. சுகனுக்குப்பிடிக்காதவா;கள் மீது அவதூறு பரப்பினால் அது கருத்துச்சுதந்திரம். சுகனுக்குப் பிடித்தவர்கள் மீது அவதூறு பரப்பினால் அவதூறு. இந்த ஜனநாயகத்திற்கும் கிட்லரிசம் அல்லது பாசிசத்திற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?
வாழ் மக்களே!
எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்!
எண்ணையை ஊத்தி நாலு கொள்ளியை உங்கள் பங்கிற்கு எடுத்து எறியிறது!
நீரோ மன்னன் போல் பிடில் வாசிக்கிறது!
நிறையவே தெரிவுகள் உங்களுக்கு உண்டு.
மக்களே! நீங்கள் எங்கிருக்கிறீர்கள்.?
புரிந்தது புரியாதது அறிந்தது அறியாதது அனைத்தும் அறிவோம்.
நண்பா சுகா உவங்களோட மினக்கெடுறது வீண்வேலை. நாலாம் வகுப்பிலிருப்பவர்களுக்கு பத்தாம்வகுப்பு பாடத்தை படிப்பிக்க ஆசைப்படாதே! அவர்களுக்கு விளங்கவில்லயே என்று கோபமும் படாதே! பின்னூட்டம் விடுபவர்களுக்கு அதுமட்டும்தான் தெரியும்.
நீ அங்கால போ! போ! போ!!