சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

கட்டுரைகள்

மகேஸ்வரி வேலாயுதம் -ராகவன்

மகேஸ்வரி வேலாயுதம்

மகேஸ்வரி வேலாயுதம்

மகேஸ்வரி வேலாயுதம்
(1953- 2008)

அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் அவர் துரோகியென்று!

1983 இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கங்களுக்கு ஓடிப்போன காலத்தில் ஒரு வீட்டில் கலந்தாலோசனை நடக்கிறது. அது மகேஸ்வரி அக்காவின் வீடு. மகேஸ்வரி அக்காவின் தாயும் பிள்ளைகளுமாக அனைவரும் தமது குடும்பத்திலிருந்து யாரை இயக்கத்துக்கு அனுப்புவதென்று விவாதிக்கிறார்கள். கடைசியாக மகேஸ்வரியக்காவின் தம்பி கணேஸை இயக்கத்துக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட கணேஸ் TELOவில் இணைகிறார். இதுதான் அந்த குடும்பத்தின் அரசியல் வரலாறு. நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

அதே 1983 காலபகுதியில் மகேஸக்காவும் அவரின் இன்னொரு சகோதரர் கம்பனும் கணேசை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவைசெய்ய தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இது இயக்கங்கள் அதிகாரமயமாக்கப்படாத காலகட்டம், வியாபார ஸ்தாபனக்களாக்கப்படாத காலகட்டம், சரியோ பிழையோ அனைவரும் விடுதலை என்பதை நம்பி இயக்கங்களில் இணைந்த காலகட்டம். அவர்களின் வீடு இயக்க உறுப்பினர்கள் வந்து போக விருந்து படைத்தது. இந்த வரலாறுகள் துப்பாக்கிதாரிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம் ‘ துரோகம்’. அதற்குப் பரிசு மரணம். நீஙகள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேசக்கா ஒட்டுக் குழுவைச் சேர்ந்தவரென்று!

வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை அய்ரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் தஞ்சம் கோர அனுப்ப, இராமேஸ்வரமும் மதுரையும் திருச்சியும் நாதியற்றவர்களின் தஞ்ச மடங்களாயின. மகேசக்கா நாதியற்ற அகதிகளின் நல்வாழ்வுக்காகத் தனது பணியை இந்தியாவில் தொடர்ந்தார். இலங்கை அகதிகள் புனர்வாழ்வு அமைப்புக்கூடாக செயற்பட்டு, பின்னர் தனியான அமைப்பொன்றை ஆரம்பித்து தன்னாலான அகதிகள் நலன் காக்கும் பணிகளைத் தொடர்ந்தார். நாதியற்றவர்களின் நலனுக்காக உழைத்த அவருக்கு நீஙகள் கொடுக்கும் வரைவிலக்கணம் ‘தேசத்துரோகி’!

1990களில் ஆயிரக்கணக்கான வாலிபர்களும் யுவதிகளும் அரசபடையினரால் காணாமல் ஆக்கப்பட்டபோது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டபோது மகேசக்கா வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நிற்காமல் களத்திலிறங்கிக் கருமமாற்றினார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமிழ் சட்டதரணிகள் பலர் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் சூழலில் பணம் பற்றிய சிந்தனையற்று, விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுக்கத் தவறவில்லை. சிறைப்பட்டிருந்தவர்கள் எந்த அமைப்பு, யாருக்கு வேண்டியவர்கள் என அவர் பாகுபாடு காட்டவில்லை. சிறைப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் அரசியற் பேதங்களைக் கடந்த ஒரு சமூக சேவகி. நீங்கள் வாய் கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு கைக்கூலி!

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைச் சங்கங்களுக்கு எடுத்துரைத்தவர் மகேசக்கா. தனக்கென்று எதையும் அவர் சேர்த்து வைக்கவுமில்லை. ஐரோப்பாவிலும் கனடாவிலும் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த தமிழர்கள் பலருக்கு ‘அவர்கள் நாடு திரும்பினால் ஆபத்து’ எனக் கூறி தனது கைப்பட கடிதங்களை எழுதி அனுப்பியவர் அவர். அவரது அமைப்ப்பான மனித கௌரவத்துக்கான அமைப்பின் இக்கடிதங்கள் எத்தனையெத்தனை தஞ்ச வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்! நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு அரசாங்க எடுபிடி’!

மகேஸ்வரி அரசாங்கத்தோடு நின்றவர், EPDPக்கு ஆதரவாக நின்றவர் என்று என்னெனவோ எல்லாம் சாக்கு போக்குச் சொல்லி நீங்கள் கொலையை நியாயப்படுத்துங்கள். பிரேமதாஸ அரசுடன் சேர்ந்து நின்று மாற்று இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுட்டு கொல்ல ஒருபோதும் மகேஸ்வரி அக்கா துணை போகவில்லை. ‘சமாதான’ காலகட்டத்தில் நோர்வேயும் ரணில் விக்கிரமிசிங்க அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாற்று அமைப்புகளிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுங்கி குடும்பம் குட்டிகளுடன் இருந்து தம் வாழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட நிராயுதபாணிகள் பலரை மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே குற்றத்திற்காக கொலை செய்வதற்கு உடந்தையாக மகேசக்கா ஒருபோதும் இருக்கவில்லை.

ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்த பரிசு நான்கு துப்பாக்கி சன்னங்கள்! மகேசக்கா அடிக்கடி சொல்வாராம்: “என்னை ஏன் சுடப்போகினம், எனக்கு யாருடனும் பிரச்சனை இல்லை” என்று. அவர் அதீத கடவுள் நம்பிக்கை உடையவர். கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என அவர் முழுமையாக நம்பியவர். தனது தாய் நீண்ட நாள் சுகமில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது தான் தனது தாய்க்கு முன்பே போகப் போகிறேன் என்று தெரியாமல் தான் அவர் தனது சொந்தக் கிராமத்துக்குத் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். எந்தச் சமூகத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்து பணிபுரிந்தாரோ அதே சமூகத்திலிருந்து வந்த இரும்பு வைத்திருந்த ஒரு இரும்பு மனத்தினன் ஒரு செக்கனுக்குள் உத்தரவை நிறைவேற்றினான். அவன் ஒரு இனந் தெரியாதவனாம். இனந் தெரியாதவர்களெல்லாம் இனப் போராட்டம் புரியும் காலமிது. நீங்கள் கொலை நிகழ்ந்த இடம், காலம், மகேசக்காவின் அரசியல் பின்னணி அனைத்தையும் துப்புத்துலக்கி உடனடியாக அச்சில் ஏற்றுகிறீர்கள்… ஒருவிடயத்தை தவிர – அது இனந்தெரியாத ஆயுததாரி!

மகேசக்கா உங்களைப்போல் எத்தனையோ பேர் துரோகப் பட்டத்துடன் எம்மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நீங்களும் இப்பட்டியலில் இவ்வளவு சீக்கிரம் வருவீர்களென நீங்கள் எதிர்பார்க்கவில்லை.. நாங்களும் தான். உங்களைக் கொலை செய்தவனை விடக் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கூட்டத்தின் மேல் நாம் காறியுமிழ்கிறோம் உங்கள் ஞாபகமாக. இதுவே உங்களுக்கு எமது இறுதி அஞ்சலி.

6 thoughts on “சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

  1. மகேஸ்வரியின் மரணம் கவலை தருகிறது. நான் அவரை ஒருமுறை
    பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவரால் காப்பாற்றப் பட்ட இளைஞர்களைச்
    சந்திதிருக்கிறேன். அந்த பெருமை எப்போதும் அவருக்கு இருந்தது.அவர் தன்னுடய தொடர்புகளையெல்லாம் இயக்க வேறுபாடில்லாமல் சிறைப்பட்ட தமிழர் நலனுக்கே பன்படுத்தியவர் என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.எவ்வகையில் பார்த்தாலும் அவரது உழைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்கே பயன்பட்டுள்ளது. இதுபோன்ற விடுதலைப் போராட்டமற்ற தனிமனிதக் கொலைகளை எல்லா தரப்புகளும் கைவிடவேணும்..
    வ.ஐ.ச.ஜெயபாலன்
    [email protected]

  2. Of Course LTTE will listen to Poet”eer” and former PLOTeer Jeyapalan, and from now on LTTE would not invole in Assasinations anymore. What a pathetic request from Jeyapalan, who remain a LTTE sympathiser himself.

    -Heela

  3. ஜெயபாலனுக்கு,தமிழ்ருக்கு அரசாங்கம் சலுகைகள் என்ற எலும்பு துண்டை தந்து உரிமைகள் கொடுக்கப்பட்டதாக காட்டியமாதிரி,மகேஸ்வரியும் யாருடன் சேர்ந்துநிண்ரு இதையெல்லாம் செய்தார்? அது போக ஜெயில் போனவர்கள் எல்லாம் யார்,100வீதம் அப்பாவி இளாயவர்கள் இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டவர்கள் மகேஸ்வரி சேர்ந்து திரிந்த அரசாங்கத்தாலும்,அவரது கட்சியாலும்,நானே பிடிச்சு கொடுத்து நானே வெளீயில் எடுப்பது போல் இல்லையா? தாங்கள் சந்தித்தவர்கள் எல்லாம் சூழ்னிலைக்கு ஏற்ப கதைத்துக்கொள்வார்கள்.கடந்த 2வருசத்தில் கொல்லப்பட்ட 1000க்கும் அதிகமான தமிழருக்காக அரசாங்கத்திலிருந்து என்னத்தை கிழித்தவர் சொல்லுங்கள். நிமலராயன் கொல்லப்பட்டபோதும் அவரது கட்சியாலேயே,அரசாங்க படைகளீன் தாக்குதலில் பாதர்.பாக்கியரன்சித் கொல்லப்பட்டபோது பேசாமடைந்தையாய் இருந்த மனிதம் எங்கே போனது மகேஸ் அக்காவுக்கு.அதைவிடுங்கள் அண்மைக்காலங்களீல் கொழும்பிலும்,புத்தளத்திலும்,ஏன் வெளீனாடுகளீலிருந்து சென்றவர்களூம் கடத்தப்பட்டு காணமல் போனபோது தோழரையும் சக தோழியையும் சம்பந்தப்பட்டவர்கள்நாடிய போது விடுவித்து தந்தால் எமக்கு எவ்வளவு? டீல் பேசியதும்,இது எமமால் முடியாது,எமக்கு அதிகாரமில்லை என சொன்னதும்,கைவிரித்ததும் எந்த மனித உரிமைக்குள் அடங்குகிறது.யாருடன் சேர்ந்து இருந்து மனித உரிமைவாதி பட்டம்.

  4. //இதுபோன்ற விடுதலைப் போராட்டமற்ற தனிமனிதக் கொலைகளை எல்லா தரப்புகளும் கைவிடவேணும்..//
    வ.ஐ.ச.ஜெயபாலன்

    Dear Jayabalan,

    If you look at your life as a task
    then you can always endure it.A foggy morning is not yet a cloudy day (Mr.) Jayabalan!

    regards

    P.V.Sri Rangan

  5. மகேஸ்வரி கொலயை கண்டு பயந்தவர் எல்லாம்(கண்டித்த மனித உரிமைவாதிகள் எல்லாம்)அவரின் எல்லையை தாண்டியவர்கள். ஒருவர் ஆரம்பத்தில் என்ன செய்தார் என்பது முக்கியமில்லை. இறுதியாக என்ன செய்தா என்பதே முக்கியம். சாவினால் யாரும் தூய்மைப்படுவதுமில்லை, விமர்சனத்திற்கு அப்பாற்படுவதுமில்லை.

  6. ஒருவருடைய மரணத்தை சரியென்று வாதிடுவது தமிழ் சமுதாயத்திற்கு நல்லதல்ல. 1970 களில் மகஸ்வரியின் சேவையை மதுரைக்கு வந்து கேட்டுப்பாருங்கள். சொல்லத்தயாராய் இருக்கிறோம். சக இனத்தவரை கொல்லத்துணிந்தவர்களிடம் ஞாயத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *