எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!
எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்புற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் – முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது.
கிழக்கு மாகாணத் தேர்தல் அங்கு வாழ்கின்ற பல்லினங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும், சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் தோற்றுவிக்கும் தேர்தலாக இத் தேர்தல் அமையவேண்டும். ஆனால் இத்தேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடப்படும் கருத்துக்களும், பிரச்சார உத்திகளும் இனங்கள் மத்தியில் பிளவுகளையும், விரிசல்களையுமே பெறுபேறாகத் தரும் நிலைமைகளே காணப்படுகின்றன.
சில வாரங்களுக்கு முன் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் அங்கு ஓர் ஜனநாயக இடைவெளியை உருவாக்குவதற்கான புறச் சூழலைத் தந்தது என்பது ஏதோ உண்மைதான். புலிகளின் கொடிய வன்முறைகளிலிருந்து மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அவகாசம் கிடைத்திருப்பதும் முன்னிருந்ததை விட முன்னேற்றகரமானதுதான். ஆனால் கிடைக்கப்பெற்ற இந்த ஜனநாயக இடைவெளியை நிரப்ப முயற்சிக்கும் அரசியல் சக்திகள் குறித்தே எமது கவனங்கள் திரும்பவேண்டும். ஆயுதங்கள் இன்னமும் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ளதாகக் கூறி தேர்தலில் ஈடுபட்டுள்ள சில கட்சிகள் இன்னமும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன.
கடந்த கால அனுபவங்களிலிருந்து மக்கள் இன்னமும் விடுபடவில்லை. கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற விருப்புடனும் கூட அப் பிரதேசம் சட்ட விரோத ஆயுதங்களின் இருப்பிடமாக இருக்கக்கூடாது என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூன்று இன மக்களும் இணைந்து வாழும் அப் பிரதேசம் ஜனநாயகத்தின் மாதிரியாக அமைதல் வேண்டும். ஆனால் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரங்கள் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழரா? ஏன்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மாற்றப்படும் அபாயம் காணப்படுகிறது. இனங்கள் மத்தியிலே பிளவுகளை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு இனவாத சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டுவரும் இக் காலகட்டத்தில் இச் சூழ்ச்சிகளுக்கு மக்கள் இரையாகாமல் தடுக்கப்பட வேண்டும்.
புலிப்பாஸிஸ இயக்கத்திற்குள் எழுந்த உள் அதிகாரப் போட்டியை பாவித்து பிரபாகரன் அணியை கிழக்கின் ஆதிக்கத்திலிருந்து தனக்கு சாதகமாக பலவீனமடையச்செய்தது அரசாங்கம். ஆனால் கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக சூழலையும் வழங்காது இராணுவ பகைப்புலத்தை வைத்துக்கொண்டு கிழக்கு மக்களுக்கு நம்பிக்கையான எந்தவித சமிக்ஞையையும் ஏற்படுத்தாது சூட்டோடு சூடாக கிழக்கு மாகாணச்சபைத் தேர்தலை நடாத்த முன்வந்திருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இருந்தும் ஏற்கெனவே இருந்த நிலமைகளை விட தேர்தல் நடந்து நிலைமைகள் மாறி அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு புதிய சூழல் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் கிழக்கிலங்கை மக்கள் வாழ வேண்டியுள்ளது.
கிழக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களிடம் இத்தேர்தல் தொடர்பாக கருத்தறிந்தபோது அவர்களது மன உணர்வுகளிலிருந்து வெளிப்படுகின்ற கருத்துகள் மிகப் பாதகமான சமூக, அரசியல் விளைவுகளை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தோற்றுவிக்க காலாக இத்தேர்தல் அமைந்து விடுமோ என்ற அவர்களின் அச்சத்தையே குறிகாட்டி நிற்கின்றன. தேசிய இனப்பிரச்சினை உக்கிரம் அடைந்த காலத்திலிருந்து கிழக்கு வாழ் மக்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பத்தையும் இழப்பையும் சந்தித்து வந்திருக்கின்றனர்,வருகின்றனர்.
உயிரழிவு, உடமையழிவு என அவர்கள் அதிக விலையை தமது வாழ்வைப் பாதுகாக்க செலுத்தியிருக்கின்றனர்.நீண்ட காலமாக கிழக்கு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாக அரசின் சிங்கள குடியேற்றம், இராணுவமயமாக்கம், ஆயுத அடக்குமுறை மற்றும் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையேயான முரண்பாடுகள் மோசமாகி வருதல் போன்ற பிரச்சினைகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவது அவசியமாகும். இவற்றிற்கு நீண்ட கால நோக்கில் அரசியல் தீர்வொன்று காணப்படும் பொழுது தான் கிழக்கு மக்களின் வாழ்வில் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் கொண்டுவர முடியும்.
தமிழ் – முஸ்லிம் மக்களின் இதயபூர்வமான எதிர்பார்ப்பும் இதுதான். இத்தேர்தலினால் மாகாணசபை கிழக்கில் இயங்கத்தொடங்குவது ஒருபக்கமிருக்க நாடளாவிய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் நீண்டகால நோக்கிலான அரசியல் தீர்வொன்றை அடைவதற்குமான அரசியல் நடைமுறையொன்று சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். கிழக்கு வாழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளைச் சிதைத்து மேலும் அடக்கு முறையையும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலையும் ஆயுதம் தரித்த தரப்போரின் கைகளை மேலோங்கச் செய்யவும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இனப்பகைமையையும் போட்டா போட்டியையும் மேலும் கொழுந்து விட்டெரியச் செய்யவும் இத்தேர்தல் வழிவகுக்கும் அபாயம் காணப்படுவது குறித்து மக்களை எச்சரிக்க விரும்புகிறோம்.
மக்களை விழிப்போடு செயற்படும்படும்படி வேண்டுகிறோம்.தேசத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும், நாட்டில் காணப்படும் அரசியல் போக்கினைக் கவனத்தில் கொண்டும் பார்க்கையில் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள் மிகவும் பலமான ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டுவதன் மூலமே தீவிரமடைந்துவரும் சிங்கள அதி தீவிர தேசியவாதத்திற்கு பலமான சவாலாக செயற்பட முடியும். இவ்வகையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கட்டப்படக்கூடிய பலமான முன்னணியொன்று சகல சிறுபான்மையினரையும் ஒன்று கூட்டி இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை கோரி நிற்கும் முயற்சியில் விரைவில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஓர் பலமான நிர்வாகம் தோற்றுவிக்கப்படுவது அவசியமானதே. அது தமிழ்-முஸ்லிம் இனங்களின் பலமான இணக்கத்தின் அடிப்படையிலான நிர்வாகமாக அமையுமாயின் இலங்கை அரசியலில் பல தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமையும்.
*தமிழ் சமாதான ஒன்றியம் (Tamil Forum for Peace- TFP)
*இலங்கை ஜனநாயக ஒன்றியம் (Sri Lanka Democracy Forum – SLDF)
*இலங்கை இஸ்லாமிய அமைப்பு (Sri Lanka Islamic Forum- SLIF-UK)
*இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி(Social Development Organisation of Sri Lankan Dalits -SDOSLD)
தேர்தல் ஒரு கேடு நாடு கெட்ட கேட்டுக்குள்ள…
இனப்பிரச்சகனக்கு என்ன தீர்வு வைக்கலாம் அதை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்கிற கருத்தகளை அரசியல் மூலமாகத்தான் வைக்க வேண்டுமோ அப்படியென்றால் ஏன் இத்தனை வருடங்கள் அவற்றை நடை முறைப்படுத்த முடியவில்லை…
தீர்வு அரசியலில் இல்லை மக்களிடம் இருக்கிறது என்பது என் கருத்து…
எம்மை சூழ்திருந்த இருள் மெல்ல மெல்ல அகலப்போவதையே!
இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன.உங்கள் பணிதொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.காலத்தைவென்றிடுவோம்.
இவ்வளவு குழப்பமான ஒரு அறிக்கையை இதுவரை படித்தில்லை. தேர்தலை பகிஷ்கரிக்க சொல்கிறார்களா? இல்லை வாக்களிக்கச் சொல்கிறார்களா? வாக்களிப்பதானால் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள்? தமிழரா முஸ்லீமா முதல்வராவது என்ற கேள்வி இனங்களின் ஐக்கியத்தை குலைக்குமென்றால் ஒரு சிங்களவரையா முதல்வராக ஆதரிக்கச் சொல்கிறார்கள்?