–ராஜன் குறை
‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் கூட.
மேற்கு வங்காளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி “முதலீடு, முதலீடு” என்று கதறுவதும் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தரமறுக்கும் விவசாயிகளை கொன்று தீர்ப்பதும் “என்ன கொடுமை சார் இது” என்று பலரையும் சொல்ல வைத்துள்ளது. ஆனால் முதலீடு இல்லாமல் வளர்ச்சியும் வரலாறும் இல்லை என்று புத்ததேவ் ஏன் கூறுகிறார் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
நினைவிலிருந்து: ‘அவன்தான் மனிதன்’ (என்று நினைக்கிறேன்) திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வி.கே.ராமசாமி கையில் சிவப்பான திரவத்துடன் சோபாவில் அமர்ந்திருப்பார். வெளியே தொழிலாளர்கள் “தொழிலாளர்கள் ரத்தத்தை உறிஞ்சாதே!” என கோஷம் போடுவார்கள். அவர்களையும், விகேயாரையும் மாறி மாறிப் பார்க்கும் சுருளி(?) ஓடிச்சென்று விகேயாரின் காலில் விழுந்து “வேண்டாம் முதலாளி, தொழிலாளர்கள் ரத்தத்தை உறிஞ்சாதீர்கள்” என கெஞ்சுவார். விகேயார் “இது தக்காளி ஜூஸ்டா” என்று அவருக்கேயுரிய விதத்தில் சொல்வார்.
இது போன்ற தொழிலாளர் பிரச்சினைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை ரசிப்பதா? இதுதான் பின் நவீனத்துவம் (!) என்று யாரும் கோபிக்கலாம். ஆனால் முதலீட்டியத்தையும், தொழிலாளி வர்க்கம் அதை கடந்து செல்வதையும் வரலாற்றின் கதியாக அல்லது விதியாக மார்க்ஸீயம் கூறியது. இது தொழிற்சங்க வாதத்தில் கூலிப்பிரச்சினையாக கொச்சைப்பட்டதை எப்படி எதிர்கொள்வது என்பதே எனது பிரச்சினை.
தொழிற்சங்கங்கள் சாத்தியப்படுத்திய கெளவரமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை மறுப்பதல்ல. வரலாற்றில் தொழிற்சங்கவாத்தின் எல்லைகளை சிந்திப்பது தத்துவத்தின் தேவை. (சிகாகோவின் தெருக்களிலே இன்னுயிரீத்த தியாகிகளே! உங்களுக்கெங்கள் வீர வணக்கம்! வீர வணக்கம்!)இருபதாம் நூற்றாண்டில் முதலீட்டியம் சர்வ வியாபக சக்தியாக மாறியதற்கு நிலத்தடி எரிபொருள் பயன்பாடே முக்கியக் காரணம். நிலக்கரி மற்றும் பெட்ரோலே மனிதர்களும் பொருட்களும் முன்னெக்காலத்திலும் நினைத்துப் பார்க்க முடிந்திராத அளவு பயணப்பட காரணம் என்பது மட்டுமன்றி பண்டங்களின் உற்பத்தியும் நுகர்வும் மனித வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்தற்கும் அடிப்படை (உதாரணம் பிளாஸ்டிக்). இதற்கு சிகரமாக அமைந்தது மின்சாரம். அனைத்தும் சேர்த்துப்பார்த்தால் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளை எரிபொருள் கனவுக்காலம் என்று கூறலாம். ஏன் கனவு? அது யதார்த்தம்தானே? யதார்த்தம்தான். ஆனால் சுவடின்றி காணாமல் போகக்கூடிய ஒன்று கனவு போலத் தோன்றுமல்லவா?
நிலத்தடி எரிபொருட்கள் பல்லாயிரமாண்டுகளில் சேகரமானவை. அவற்றை நூறாண்டுகளில் தோண்டியெடுத்து புஸ்வாணம் விட்டால் பிறகு ஆற்றலுக்கு எங்கே போவது? சென்னை ஆசியாவின் டெட்ரய்டாக மாறப்போகிறது. பல்லாயிரக்கணக்கான கார்கள் உற்பத்தியாகி உலகெங்கும் ஓடப்போகின்றன. பெட்ரோல் முப்பது அல்லது அய்ம்பது ஆண்டுகளில் தீர்ந்துவிட்டால் கார்கள் எப்படி ஓடும்? விமானங்கள் எப்படி பறக்கும்? ஆமணக்கு விதை அல்லது “ராமர்பிள்ளை மூலிகை” எதையாவது பல்லாயிரம் ஏக்கர்களில் பயிரிட்டால் அதற்கு நிலவளம் இடம் கொடுக்குமா? உயிர்ப்பொருள் எரிசக்தி என்பதும் நிலத்திலிருந்துதானே வரவேண்டும்? அகழ்வாரைத்தாங்கும் நிலம் எரிசக்தியை அள்ள அள்ளத் தரும் அட்சய பாத்திரமா?
அடுத்த சாத்தியம் அணுசக்தி. கார்களும், விமானங்களும், ரயில்களும் அணுசக்தியில் ஓடும் காலத்தை நினைத்தால் அடிவயிற்றில் குளிர்கிறது. முதல் முறையாக என்னை பத்தாம்பசலியாகவும், பிற்போக்குவாதியாகவும் உணர்கிறேன். அவ்விதமான அணுவாகனங்களில் உருவாகும் கழிவுகளை பிரத்யேகமாக தயார் செய்யப்படும் இரும்புப்பெட்டிகளிலிட்டு கடலுக்கடியில் போட்டுவிடலாம் என பரிந்துரை செய்யும் கட்டுரை ஒன்றை படித்தேன். மானுடம் வரலாற்றை நிகழ்த்தும் மாண்பினை நினைத்தால் புல்லரிக்கிறது. ஈங்குள பிறவற்றுடன் தன்னையும் சேர்த்து மானுடம் அழித்ததம்மா என்றெழுத புலவர்கள் இருக்கமாட்டர்கள் என்பதால் முதலிலேயே எழுதிவிடலாம்.
அறிவியல்வாதிகள் இயற்கை புதிய ஆற்றல் வடிவங்களை காட்டித்தரும் என நம்பலாம். வரலாற்றுவாதிகள் மானுட ஆற்றல் புதிய சாத்தியங்களை கண்டடையும் என நம்பலாம். இதெல்லாம் ஏதோ இறைநம்பிக்கை போலத் தோன்றுகிறதே தவிர, தர்க்கபலம் கொண்ட வாதமாக எனக்கு படவில்லை. காரணம் முதலீட்டியம் மனிதனின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் செயல்படுவதாகத் தோன்றவில்லை. குதிரைக்கு முன்னால் புல்லைத்தொங்கவிட்டு அதை ஓடவைப்பதைப்போல, வெற்றுக்குறியான பணத்தை மனிதனுக்கு முன்னால் தொங்கவிட்டு கண்டதையும் உற்பத்தி செய்து நுகரவிடுவதில் என்ன பெரிய விடுதலையோ, வெங்காயமோ இருக்கிறது எனத்தெரியவில்லை.
முதலீட்டிய பேய்க்கு வாழ்க்கைப்படாவிட்டால் எந்த சமூக மாற்றமும், சமத்துவமும் சாத்தியமில்லை என்று நினைப்பது உண்மை வரலாற்றுப் பார்வையற்ற வரலாற்றுவாத மூடநம்பிக்கை. முதலீட்டியம் என்பது மனிதன் இயற்கையை வெல்லும் கதையல்ல. இயற்கையென்றால் என்னவென்று தெரிய ஒரு சுனாமி அல்லது காத்ரீனா போதும். இயற்கையின் முன்னால் மனிதன் இன்றும் ஒரு அற்பப் பூச்சிதான். முதலீட்டியத்தின் கதை மனிதனை பண்டங்களுக்கும், நுகர்வுக்கும் அடிமையாக்கிய கதை.
இந்த எரிபொருள் கனவுக்காலத்தின் இன்னொரு பிரச்சினை புவி வெப்பமடைதல், ஓசோனில் ஓட்டை, கடல் நீர் மட்டம் அதிகரிப்பு போன்றவை. இவற்றைக் கூறுவதும் அறிவியலாளர்கள்தாம். இவற்றை அறிவியல் பிரச்சினையாக பார்ப்பது தவறு, அரசியல்-அறிவியல் இணைந்த பிரச்சினையாக பார்க்கவேண்டும் என புரூனோ லதூர் (Bruno Latour) வலியுறுத்தி வருகிறார். இன்று ஹெகலும் மார்க்ஸும் இருந்திருந்தால் எப்படி அவர்கள் தத்துவத்தில் இப்பிரச்சினையை அணுகுவார்கள் என யோசிக்கத் தோன்றுகிறது.
மானுட கூட்டு சக்தி தேசிய அரசுகளாகவோ (ஹெகல்), பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவோ (மார்க்ஸ்) பரிணமித்து, இயற்கையை கட்டுப்படுத்தி வரலாற்றை நிறைவு செய்யும் என கருதினார்கள். இன்றைய நிலையில் முதலீட்டியம் என்ற கபந்த பூதமே வரலாற்றை கையெலெடுத்துக்கொண்டு தலைதெறிக்க ஒடுவதாகப்படுகிறது. அதனிடமிருந்து வரலாற்றை மானுட கூட்டு அரசியல் சக்தி எப்படி கைப்பற்ற முடியும் எனத் தெரியவில்லை. இவ்வாறு யோசிப்பது மார்க்ஸீயமா, பின் நவீனத்துவமா, அல்லது இரண்டுமா எனபது நிச்சயமாகப் புரியவில்லை. இசங்களென்று பெயரிடுவதே தத்துவத்தை கூண்டிலடைக்கும் முயற்சிதானே.
பின் குறிப்பு: இது ‘சத்தியக் கடுதாசி’ என்பதால் அடிக்குறிப்பு, சான்றாதாரங்கள் எதுவும் போடவில்லை. கூகிள் செய்தால் இக்கருத்துக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய தகவல்கள் கிடைக்கும். தமிழில் ஏற்கனவே இக்கட்டுரையின் பொருள் தொடர்பாக எனது நண்பர்களும், வழிகாட்டிகளும் பதிவு செய்துள்ளவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால் என்னிடம் பிரதிகள் கைவசம் இல்லை என்பதுடன் விரிவஞ்சியும் பெயர்களைத் தவிர்த்துள்ளேன். என்னுடன் தினசரி விவாதித்து வரும் ரவீந்திரனுக்கும், மோனிகாவிற்கும் அவர்களது கருத்துக்களுக்காகவும், தகவல்களுக்காகவும் நன்றி தெரிவிப்பது முறை. கட்டுரையின் கூற்றுகள் மற்றும் பிழைகள் என் பொறுப்பு.
இதை எதற்காக எழுதினார் என்று புரியவில்லை.இடதுசாரிகளும்,
மார்க்ஸியவாதிகளும், இன்ன பிறரும் விவாதித்த,விவாதித்துக்
கொண்டிருக்கும் ஒன்றை ஒரு அரைகுரை அறிமுகமாக எழுத
வேண்டிய தேவை என்ன.மானுடர் முதலாளிய காலகட்டத்திற்கு
முன்பும் எரிபொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.ஆற்றல் தேவைக்காக பல வழிகளை கையாண்டுள்ளனர்.இதில் முதலாளித்துவம்,அறிவியல் தொழில் நுட்பம் கொண்டுவந்த மாற்றங்கள் என்ன, உற்பத்தி உறவுகளுக்கும் இவறிற்கும்
என்ன தொடர்பு.ஏன் லெனின் Communism is Soviet power plus the electrification of the entire country என்று சொன்னதின்
காரணம் என்ன. இப்படி விவாதிக்க பல இருக்க இப்படி ஒரு கட்டுரை எதற்கு?.
ராஜன் குறை!
உள்ளத்தில் ஒளியுண்டானால் வாக்கினிலே தெளிவு வரும்.
கடுந்தமிழ் தெரியும்.. ஆனால் இது கொடுந் தமிழாயிருக்கே!!
எமது புரட்சிகர மேதின வாழ்த்துகள் தோழர். ராஜன் குறை!
நல்ல கவிதையைப்போல் செறிவாகவும் சுருக்கமாகவும் இலகுவாகவும் எழுதியுள்ளீர்கள்.
மிகவும் மிகவும் தொலைநோக்கோடு பார்த்திருக்கிறீர்கள். எதிர்கொண்டேயாகவேண்டும்.
ஆனால் குருவியின் தலையில் பாறாங்கல்.
நன்றி தோழர் சுகன். உங்களுக்கும் எனது புரட்சிகர மேதின வாழ்த்துக்கள். நவீன காலமே குருவி தலையில் பனங்காய் ஏற்றுவதுதானே! வெந்ததையும், வேகாததையும் தின்று விடியலைப் பார்த்து மகிழ்ந்து வாழ்ந்தவர்களை அரசியலை நடத்து, உற்பத்தியைப் பெருக்கு, வரலாற்றை நிறைவு செய் என்று எத்தனை கட்டளைகள் ! அரசியலும், அறவியலும் கூட்டு வாழ்க்கையின் பரிமாணங்களாக இராமல் வரலாற்று ராக்கெட்டின் எரிபொருளாக மாறி முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து முழுமூச்சாய் அதற்காக தினமுழைக்கச் சொல்லும்போது குருவிகள் பனங்காய் சுமந்துதானே ஆகவேண்டும்?
ஓ! பாறாங்அல் என்றீர்களோ? பனங்காயாக இருந்தாலென்ன, பாறாங்கல்லாய் இருந்தால் என்ன? குருவிக்கு இரண்டும் ஒன்றுதானே?
எனது வலை தளத்தையும் பார்கவும்.
http://www.cinemaanma.wordpress.com
marie mahendran
from sri lanka