தலித் பிரச்சினை – முன்னோக்கிய பாதை

கட்டுரைகள்

ஆசிரியர்: து. ராஜா,
தமிழில் : ந. முத்துமோகன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.

– அ.மார்க்ஸ்

ம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான து. ராஜா. அவரது பேட்டிகள், கருத்துக்கள், அமெரிக்கா நம் மீது திணிக்கும் அணு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை நாளிதழ்களின் வாயிலாக அறியும்போது ‘ஆகா நம்மூர்க்காரர்’ என்கிற மகிழ்ச்சி கூடுதலாக உருவாவது தவிர்க்க இயலாது. ‘தலித் பிரச்சினை: முன்னோக்கிய பாதை’ என்கிற இந்நூல் நமது சமூகத்தை ஆட்டிப் படைக்கும் மிக அடிப்படையான ஒரு சிக்கல் குறித்த அவரது ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. பெரியவர் தோழர் நல்லக்கண்ணுவின் முன்னுரையும் பேராசிரியர் முத்துமோகனின் மொழியாக்கமும் நூலின் முக்கியத்துவத்தைக் கூடுதலாக்குகின்றன.நூலுடன் இணைக்கப்பட்ட மூன்று பின்னிணைப்புகள், குறிப்பாக 1989ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் தமிழாக்கம் நூலுக்கு வலுசேர்ப்பவை.

சாதியை ஒழிக்காமல் இங்கே அரசியல் சீர்த்திருத்தத்தையோ, பொருளாதாரச் சீர்த்திருத்தத்தையோ கொண்டுவர இயலாது என்கிற அம்பேத்கரின் மேற்கோளுடன் தொடங்கும் இந்நூல் கம்யூனிஸ்ட்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இடையே உடைந்து போயுள்ள உறவுகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று முடிகிறது. கயிர்லாஞ்சி தொடங்கி இங்கே தலித்துகள் மீது நடைபெற்று வரும் வன்கொடுமைகளின் பரிமாணங்கள், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக நிலைகளில் தலித்துகள் பின் தங்கியுள்ள நிலையை வெளிப்படுத்தும் புள்ளி விவரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் தலித் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது குறித்து எழுதுகிறார் ராஜா.

தலித்துகள் ‘தமது சுயபாதுகாப்பிற்காகத் தனித்த இயக்கங்கள்’ கட்டுவதை ஏற்கும் நூலாசிரியர், “இருப்பினும் தலித்துகளும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்” என்கிறார். தலித் கட்சிகள் தமது முதலாளிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைக் கூர்மைப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

அம்பேத்கரின் சாதி, வர்க்கம் குறித்த கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆசிரியர், அம்பேத்கரின் ஆய்வு முறை மார்க்சியமல்ல என்றாலும் அவரது ஆய்வுகளில் வெளிப்படும் காலனிய, ஏகாதிபத்திய நிலவுடைமை எதிர்ப்புக் கருத்துக்கள் தீவிர ஜனநாயகத் திசை வழிகளைக் காட்டுகின்றன என்கிறார். எனினும் தலித் கட்சித் தலைவர்கள் சிலர் முதலாளிய, ஏகாதிபத்திய எதிர்ப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் கம்யூனிஸ்டுகளையும், மார்க்சியத்தையும் விமர்சிப்பதும் ஆர்வம் காட்டுவதையும் இந்துத்துவ சக்திகளுடன் சில வேளைகளில் கூட்டுச் சேர்வதையும் சுட்டிக் காட்டி வருந்தும் ராஜா இடதுசாரிகளும் தலித்துகளும் இணைந்து களத்தில் நிற்பதையே ‘முன்னோக்கிய பாதை’யாக முன் வைக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் சாதிப் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு மாறாகச் சமீப காலமாக இது குறித்து அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தலித்துகள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் விளைவாக இங்கே தனித்துவத்துடன் கூடிய தலித் கட்சிகள் உருவாயின. கருத்தியல் மட்டத்திலும் அரசியலிலும் இது வரவேற்கத்தக்கப் பல மாற்றங்களை உண்டு பண்ணியது. எனினும் சில அமைப்புகள் ஏதோ தலித்தியத்தின் பிரதான எதிரி மார்க்சியமும் பெரியாரியமும்தான் என்பது போல கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருந்தன. இரு தரப்பினருக்குமே இது பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

எனினும் சமீப காலங்களில் தலித் இளைஞர்கள் மத்தியில் இது குறித்த ஒரு மறு பரிசீலனை உருவாகியுள்ளதை அவதானிக்க இயல்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆனந்த் டெங்டும்டேயின் நூலுக்கு தலித் இளம் அறிவு ஜீவிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தோழர் ராஜா விரும்புவது போல எதிர்காலத்தில் தலித் அமைப்புகளும் இடதுசாரிகளும் ஓரணியில் இணைந்து நிற்பதற்கு இந்தப் புதிய தலைமுறை இளைஞர்கள் அளிக்கும் அழுத்தம் வழி வகுக்கும் என நம்பலாம்.

வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள் என்கிற வகையில் அவர்களை ஒழுங்கு திரட்டி, அமைப்பாக்கி, அதனூடாகத் தீண்டாமைக் கொடுமைகளைப் பேரளவிற்கு அழித்தொழித்த பெருமை அவர்களுக்குண்டு. தஞ்சை மாவட்டத்துக்காரன் என்கிற வகையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும். இன்று கோட்பாட்டு ரீதியாகவே சாதிப் பிரச்சினையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிற நிலைபாட்டிற்கு அவர்கள் வந்துள்ளது எதிர்காலத்தில் மேலும் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

அம்பேத்கர் நூற்றாண்டிற்கு முன்னதாகவே வர்க்கச் சாதிப் பிரச்சினையில் அக்கறை காட்டிய ஒரு மார்க்சியப் பாரம்பரியம் இங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கெயில் லும்வெத், சூரத் பட்மீல், பெங்களுர் குணா முதலியவர்கள் இந்த வகையில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். சாதியை மேற்கட்டுமானமாகப் பார்க்காமல் எல்லா வகையான உற்பத்தி உறவுகளின் ஊடாகவும் உபரியை உறிஞ்சும் ஒரு கருவியாகச் செயல்படும் வகையில் உற்பத்தி உறவுகளில் ஒன்றாகவே கூட வைத்துப் பார்க்கலாம்.அதாவது, அடித்தளத்தின் ஓரங்கமாகவே கூடக் கருதலாம் என்கிற கருத்துக்களெல்லாம் கூட இங்கே பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் “உழுபவனுக்கு நிலம்” என்ற கொள்கை கூட நடுத்தர சாதிகளுக்குத்தான் பயனளிக்கும் என்றெல்லாம் கூடக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிலமில்லாதவர்களுக்கு நிலம், தலித்துகளுக்கு நிலம் என்ற இக்கோரிக்கைகள் திருத்தம் பெற வேண்டும் எனச் சிலர் வாதிட்டனர். கார்ல் மார்க்சின் ‘ஆசிய உற்பத்தி முறை’ குறித்த அறிமுகமும், விவாதங்களும் இங்கே மேற்கொள்ளப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான்.

சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் அகில இந்தியப் புரட்சிப் பண்பாட்டு இயக்கம் (AILRC) என்கிற அமைப்பு சென்னையில் நடத்திய ‘சாதியும் வர்க்கமும்’ என்ற இரு நாள் கருத்தரங்கும் இந்த வகையில் முக்கியமானது. வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுப் பின்பு நூலாகவும் இரு பதிப்புகள் வெளிவந்தன.அதே போல வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்திப் பேராசிரியர் கல்விமணி போன்றவர்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செய்து வரும் பணிகள் முக்கியமானவை. இச்சட்டத்தை முழுமையாக மொழியாக்கி மலிவுப் பதிப்பாக வெளியிடும் பணியும் இங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேற்கொண்ட பணிகள், பேசப்பட்ட கருத்துக்கள் எல்லாமே சரியானவை என நாம் ஏற்க வேண்டியதில்லை என்ற போதிலும் இவற்றை முற்றாகப் புறக்கணித்தல் நியாயமில்லை என்பதைவிட நமக்கு இழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் எதற்காக நாம் ‘0’ விலிருந்தே தொடங்க வேண்டும்!அம்பேத்கருக்கும் நமக்கும் இடைக் காலத்தில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்களிப்புகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் அவசியம். அம்பேத்கரின் வாழ்வில் அவர் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சியை’ (ILP) உருவாக்கிய காலகட்டம், அப்போது அவரது செயற்பாடுகள், எழுதிய கருத்துக்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தலும், கணக்கில் எடுத்துக் கொள்ளுதலும் தோழர் ராஜாவின் உயரிய நோக்கை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் பெரிதும் பயன்படும். ஒரு அரசியல் கட்சியாகப் பரிணமித்தல் குறித்து அண்ணல் அம்பேத்கர் முயற்சிசெய்த போதெல்லாம் அவரது இணைவு கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகள் ஆகியோருடனே இருந்தது. கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றதும் அம்பேத்கரும் டாங்கேயும் ஒரே மேடையில் பேசியதும் இங்கே நினைவு கூரத்தக்கன. தலித்கட்சிகள் + கம்யூனிஸ்டுளின் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்நூல் இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது.

(நன்றி: உங்கள் நூலகம் மற்றும் கீற்று இணையம்.)

11 thoughts on “தலித் பிரச்சினை – முன்னோக்கிய பாதை

  1. மவோ சார்பு மார்க்ஸிஸ்டுக்கள் தேசிய சக்திகளை அணிதிரட்டத்தவறி அன்னியப்பட்டுப் போனநிலையில், பேச்சுவார்த்தை அரசியல்நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே மூன்றாமுலக நாடுகளில் தேசியக் கோஷங்களை முன்வத்தன.என்.எம். பேரேரா போன்றோரின் காலகட்டத்திலேயே இலங்கையில் தேசிய மூலதனம் வளர்ந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். மார்க்கஸியம் தொடர்பாக அடிப்படையிலேயே தவறான பார்வை கொண்ட இவர்களின் ஏகதிபத்திய எதிர்ப்புக் கோஷங்களின் வெற்றியை இடதுசாரிகள் கருத்திற்கொள்ள வேண்டும்.

  2. இந்த புத்தகத்தை வாசிக்காவிடினும் மார்க்சின் அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கிறது.’ சாதியை மேற்கட்டுமானமாகப் பார்க்காமல் எல்லா வகையான உற்பத்தி உறவுகளின் ஊடாகவும் உபரியை உறிஞ்சும் ஒரு கருவியாகச் செயல்படும் வகையில் உற்பத்தி உறவுகளில் ஒன்றாகவே கூட வைத்துப் பார்க்கலாம்.அதாவது, அடித்தளத்தின் ஓரங்கமாகவே கூடக் கருதலாம் என்கிற கருத்துக்களெல்லாம் கூட இங்கே பேசப்பட்டுள்ளன’ என மார்க்ஸ் கூறுகிறார். அம்பேத்கார் மற்றும் பெரியார் போன்றவர்களின் சிந்தனை முறையை வெறும் சீர்திருத்தம் சாதி மேல்கட்டுமானம் என கூறிக்கொண்டிருக்கும் வரட்டு வைதீக மார்க்சிய வாதிகளுக்கு இது ஒரு பதிலாக இருக்கும் எனநம்புகிறேன்.

  3. அமரிக்கா , பிரித்தானிய போன்ற புலம்பெயர் நாடுகளிலும் சாதீயம் இருப்பதாகக் கூறி சாதியதிற்கும் அடிக் கட்டுமானத்தையும், தொடர்பு படுத்துவட்தே வரட்டு வைதீக மார்க்ஸியம் எனக குற்றம்சாட்டிய நீங்கள், திடீரென யாரோ ஒருவர் சாதீயத்தை நேரடியாகவே அடிக்கட்டுமானத்துடன் தொடர்புபடுத்தும் போது அதை ஒத்துக்கொள்ளாதவர்களை வரட்டுமார்க்ஸிஸ்டுக்கள் என அழைக்கிறீகள். நீங்கள் குழம்பிப் போயுள்ளீர்களா அல்லது மார்க்ஸிஸத்திற்கு எதாவது ஒரு எதிர்த் தத்துவத்தைத் தேடுகிறீர்களா?
    சிறு குறிப்பு: து.ராஜா அவர்கள் ஒரு தீவிர ஸ்டாலினிஸ்ட்!!

  4. மேல்கட்டுமானத்தின் கீழ் இருக்கும் கீழ்கட்டுமானமானம் காலகாலம் புரியாத புதிராகவே இருக்கிறது. இது நாவலனுக்கும் புரியாமற் போனது ஆச்சரியமானதுதான். வளர்முகநாடுகளின் சோசலிச மேற்கட்டுமானம் என்பது வேறு. இதை இராகவனும் கொஞ்சம் ஊன்றிப்படிப்பது நல்லது. கீழ்கட்டுமானம் தகரும்போது சாதியமும் நொருங்கும் என்று ரயாகரனும எங்கோ எழுதியாக நினைவு.

  5. /கீழ்கட்டுமானம் தகரும்போது சாதியமும் நொருங்கும் என்று ரயாகரனும எங்கோ எழுதியாக நினைவு//
    அதாவது பில்டிங் ஸ்ராங்கு பேஸ்மண்ட் வீக்கு

  6. மேல் கட்டுமானம் அடித்தளம் என்பது மார்க்சிய அணுகுமுறையில் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அதன் அரசியல் கருத்தியல் அரசநிர்வாக அமைப்புகளையும் பார்க்கும் விதமாகும். மேல் கட்டுமானம் அடித்தளம் என்பவை கருதுகோள்கள்; அவை அருவமானவை. கீழ்கட்டுமானம் தகரும் போது கருத்தியலும் தகருமென்பது ஒரு பிரச்சனைக்குரிய விவாதமாகவே தொடர்கிறது. இந்திய மர்ர்க்சிச்டுகள் சாதி மேற்கட்டுமானம் என மார்க்சின் அய்ரோப்பியநிலபிரபுத்துவ அமைப்பை அப்படியே இந்தியாவில் பொருத்திப்பார்த்து அது தோல்வியுற்றதை உணர்ந்து இன்று சாதி மேல்கட்டுமானம் மட்டுமல்ல அது உற்பத்தி முறை உற்பத்தி உறவுகள் சம்பந்தமாகவும் சாதியம் ஆதிக்கம் செலுத்துகின்றது என் கின்ற பார்வை இந்தியாவில் இன்று தலைதூக்கியிருக்கிறது. சாதியத்தை ஒழிக்காவிட்டால் வர்க்க உணர்வுக்கு இடமேயில்லை என்றுகூட சில ஆய்வுகள் முன்மொழிகின்றன. இந்திய உபகண்டத்தின்நில பிரபுத்துவ அமைப்புமுறை சாதிய மேல்கட்டுமானத்தையும் அடித்தளத்தையும் கொண்டிருக்கிறது. இது இந்திய முதலாளித்துவ மாற்றத்தில் கூட ( உதாரணமாக வேலைத்த்ளஙகளில் காரியாலயங்களில்) தனது அடித்தளத்தை உறுதியாக வைத்துள்ளது. எனவே புரிதலின்றி அய்ரோப்பிய சமூக அமைப்புமுறையை அப்படியே ஈயடிச்சான் கொப்பி பண்ணி இந்திய சமூகத்திற்கு பிரயோகிப்பது மார்க்சியமல்ல விஞ்ஞானமுமல்ல என பல மார்க்சிய அறிஞரகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல மேல் கட்டுமானம் அடித்தளம் ஆகியவை ஒன்றையொன்று தொடர்ந்து பாதிக்கின்றன அவை வேறான இரு தனி விடயஙளல்ல அவற்றை முழுமையாக பார்க்க வேண்டும் எனவும் பல விவாதங்கள் வந்துள்ளன. இவ்விவாதஙக்களின் காரணம் இந்தியாவில் ஏன் வர்க்க ஒற்றுமை வர மறுக்கிறது. இந்திய மார்க்சிஸ்டுகளின் தவறுகள் என்ன. தலித் அமைப்புகளின் தோற்றத்திற்கான வரலாற்று காரணிகள். அம்பேத்கார் போன்றவர்கள் சாதியை ஏன் முத்ன் முரண்பாடாக பார்த்தார்கள். இடது சாரிகள் ஏன் இவற்றை கருத்தில் கொல்ளவில்லை. இது போன்ற பல் வேறு கருத்துக்கள் விவாத்ங்கள் இந்திய முற்போக்கமைப்புகளில் அறிஞர் மத்தியில்நிகழ்ந்து சாதியை வர்க்கத்துடன் பார்ப்பதா சாதி அழியாமல் வர்க்க ஒற்றுமை வருமா என்ற பலவித சிந்தனைகள். கம்யுனிஸ்ட் கட்சி எம் எல் போன்றவை தஙகளது பழைய வரட்டு வாத மார்க்கியநிலைகளை பரிசீலித்து வரும் இவ்வேளை நாம் அந்த வரலாற்று படிப்பினைகளை கிரகிக்காமல் ஆரம்ப பாடசால பிள்ளைகள் போல் அடிக்கட்டுமானம் தகருமா அது தான் தீர்மான கரமான சக்தி. மார்க்ஸ் விஞ்ஞான பூர்வகமாக சகல உலகெங்கும் தனது தத்துவம் சரியென்றுநிரூபித்துவிட்டார். இந்த ஒப்பற்ற தத்துவத்தில் குறை கண்டு பிடிப்பவர்கள் கருத்து முதல் வாதிகள் வரலாற்று மபொருள்முதல் வாதத்தின் முன்னேற்ற பாதையை விளங்கி கொள்ளாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். சாதியத்தின் வீச்சை அது சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு கேடு விழைக்கிறது. அதனை ஒழிப்பது எப்படி என்பது தான் இங்கு தேவை.

  7. ராகவனுக்கு மார்க்சியம் புரியப்போறதே இல்லை. புலி துரேகக் கும்பல் துரோகக் கும்பல் எண்டு சொன்ன மாரி, ராகவன் வரட்டு மாக்சியம் வரட்டுமாக்சியம் எண்டு சொல்லியே காலத்த ஓட்ராரு. ராகவன்ட மாக்ஸியம் புலி மாக்ஸியமோ? அப்ப புலி மாக்சியத்தின்ட சொலூஷன் தான் என்ன?

  8. pessimism of the intelect is optimism of the will- Gramsci

    Marxism is a tool not a bible. If the tool is not working properly you need to change the tool. I do not have any magic or solution for the future.

  9. //**If the tool is not working properly you need to change the tool….***//

    Why this ‘ IF’ ? There is no need for this ‘if’ word! We clearley see this ‘tool’ is NOT working at all, let alone it’s perfection.
    I stood infront of the mirror one day, saw myself and asked a question. Why a marxist like me (the old PLOTE, EPRLF, EROS varitey) ended up in a Capitalist country even before the colapse of USSR?
    Same goes to all Eelam marxists. All ended up in capitilist places without exception!
    There it is Ragavan !!!

  10. னுழன்’வ வநடட யடட நனெநன ரி இன் உயிவையடளைவ ப்டயெளந. பாசிசத்திற்கு முகம்கொடுத்தபடி வாழ்வை நேசிக்கும் எத்தனையோ பேர் இங்கேயே இருக்கின்றோம். உங்களைப்போல் தப்பிப்பிழைத்து மனச்சாட்சிக்கும் வாழ்விற்குமிடையில் போராடி வெறும் இருப்பை மட்டும் உறுதி செய்ய நாட்டமில்லை. விதைத்தோம்> அறுப்போம். சேறு பிறழ்வது விளைச்சலை அதிகரிக்கவே என்பதை தெரிந்துள்ளோம். சட்டை மடிப்பு குலையாமல்>வேர்வை சிந்தாமல் விளைச்சலை மட்டும் எதிர்பார்க்கும் பண்ணை முதலாளிகள் அல்ல நாங்கள். வாருங்கள் களம் திறந்தே இருக்கிறது. வேண்டாம் இந்த கஸ்டம் என்று நினைத்து வெளியேறியிருந்தால் போன இடத்தில் இன்னும் நாலுகாசு சம்பாதிக்கும் வழியில் நேரத்தை செலவழியுங்கள். அதைவிடுத்து தத்துவ வித்தக வியாதியில் விழுந்து குறண்டிக் கொள்ளாமல் சுயநலத்தையாவது சரியாக செய்யுங்கள்.

  11. பாசிசத்திற்கு முகம் கொடுத்தபடி வாழும் மனிதர்கள் மேற்குனாடுகளில் வாழ்பவர்களை விட பிரச்சனைக்கு முகம் கொடுப்பவர்கள் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் பேற்குநாடுகளில் வாழுபவர்கள் அனைவரையும் பொதுமை படுத்தி பார்ப்பது சரியல்ல. இங்கு வாழும் பலர் பொறுப்பற்று மற்றவர்களின் பிள்ளைகளின் மரணத்தில் சந்தோசப்படுவதும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதும் தமிழர் பிரச்சனையை சொல்லி காசு சம்பாதிப்பதும் நிகழ்கிறது. வெளிநாடுகளுக்கு ஓடி வந்தவர்கள் எல்லோரும் மனவிருப்பினால் வந்தவர்களல்ல. அவர்களை விரும்பினால் கோழைகள் என்று கூட அழத்து கொள்ளுங்கள். தங்களது இருப்பை பாதுகாத்து கொள்ளல் என்பது மனித வாழ்வில் அவசியம். இதனால் அவர்களுக்கு அரசியல் உரிமை இல்லை என்று மறுப்பது நியாயமற்றது. நீங்கள் சொல்கிற மாதிரி சட்டை மடிப்பு குலையாமல் வேர்வை சிந்தாமல் இருக்க வெளிநாடுகள் ஒன்றும் தங்க சுரங்கம் இல்லை. எங்களுக்கான வேலைகள் இன்னாட்டு மக்கள் செய்ய முன்வராத வேலைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இதன் மத்தியிலும் சில சமூக உணர்வு உள்ளவர்கள் தங்களால் முடிந்த அளவு எழுத்தாலோ அல்லது வேறு வடிவங்களாலோ தம்மால் முடிந்ததை செய்கின்றனர். ராமர் அணை கட்டும் போது அணில் செய்த பங்கென்றாவது வைத்து கொள்ளுங்களேன். அதற்காகநாட்டில் பேச்சுரிமை மறுக்க பட்டவர்களுக்கு வெளிநாட்டிலாவது பேசுவதற்கான் உரிமை உண்டு என்பதையாவது ஏற்று கொள்வீர்களெனநினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *