மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனைமுறைமைகளாக நிலைபெற்றுவிட்டன.
இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் எனக்கொண்டால் தமிழவன், எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், ரவிக்குமார், பிரேம் போன்றவர்கள் இந்தப் பிரிவினரில் முதன்மையானவர்கள்.
அறிவுத் துறையில் நிரம்பத் தேர்ச்சிகளைப் பெற்றிருந்தபோதிலும் வரட்டுத்தனமான மார்க்ஸிய நிலைப்பாட்டிலிருந்து இப்புதிய சிந்தனைமுறைகளை ஒருவித காழ்ப்புணர்வுடன் நிராகரித்தவர்கள் இரண்டாம் பிரிவினர். இந்த இரண்டாவது பிரிவில் ந. முத்துமோகன், கா.சிவத்தம்பி பூரணச்சந்திரன், பெர்லின் தமிழரசன் ஆகியோரை முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம்.
ஒரு மண்ணும் விளங்காமல் வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதத்தம் செய்து வருபவர்கள் மூன்றாவது பிரிவினர். இந்த மூன்றாவது பிரிவில் எம்.ஜி.சுரேஷ், யமுனா ராஜேந்திரன், ரியாஸ் குரானா போன்றவர்கள் தூள்கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்புதிய சிந்தனைகளைக் குறித்து ஆழ்ந்த புரிதலுடனும் கடுமையான உழைப்புடனும் எழுதப்பட்ட நூல்களைவிட மேலோட்டமாக எழுதப்பட்ட நூல்களே தமிழில் அதிகமாக வெளியாகியுள்ளன. இந்த மலிவான நூல்களின் பரவலான புழக்கம் இப் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவருக்கு மயக்கத்தையும் இந்நூல்களின் திருகலான மொழிநடை சலிப்பையும் கொடுத்துவிடுகிறது. இந்தத் தெந்தெட்டுச் சூழலில் ஏறக்குறைய தொடர்சியாக நாற்பது வருடங்களாய் அறிவுச் சூழலில் இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ்.வி. ராஜதுரை. கடுமையாக உழைத்து அரிய பல நூல்களை உருவாக்கியவர் அவர். ‘ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்’, ‘பெரியார்: மரபும் திரிபும்’ மற்றும் அவர் வ.கீதாவுடன் இணைந்து எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’, ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ மற்றும் எண்ணுக்கணக்கற்ற கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் தமிழ்ச் சூழலில் பல புதிய சிந்தனைப் போக்குகளிற்கு ஆதாரமாய் அமைந்திருக்கின்றன. வெறுமனே எழுத்துப்பணியோடு நின்றுவிடாமல் களச்செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர் எஸ்.வி.ஆர். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மரணத்திலிருந்து மீட்பதற்காகத் தமிழகத்தில் நடத்தப்பபட்ட போராட்டத்தில் எஸ்.வி.ஆரின் பங்கு முக்கியமானது.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய சிந்தனையாளரான ஜோன் போல் சார்த்தர் குறித்து எஸ்.வி.ஆர் எழுதியுள்ள Political Biographyயான ‘சார்த்தர்: விடுதலையின் பாதைகள்’ என்ற நூல் தமிழ்ச் சூழலுக்குக் கிடைத்துள்ள ஒரு அறிவுக் கொடையாகும். எஸ்.வி.ஆரின் நீண்டகால எழுத்து அனுபவம் நூல் முழுவதும் தெரிகிறது. எந்தவிதத் திருகலோ மயக்கமோ இல்லாமல் தெள்ளிய மொழிநடையில் 224 பக்கங்களில் நூல் விரிகிறது.
‘ஜோன் போல் சார்த்தர் (1905-1980) நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள், எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். மேற்கத்தியச் செவ்வியல் இசையிலிருந்து ஜாஸ் வரை சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகள் முதல் காலனியாதிக்கம்வரை பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரஞ்சுப் புரட்சியிலிருந்து இருபதாம் நூற்றாண்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிவரை பல்வேறு விஷயங்கள் அவரது அக்கறைக்குட்பட்டிருந்தன. அவர் எழுதியவை அனைத்தும் சேர்ந்து அய்ம்பது பெரும் தொகுதிகளாகியிருக்கின்றன.’
1964ல் சார்த்ருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை அவர் நிராகரித்தார். தனது எழுத்துகளுக்காக வழங்கப்பட்ட எல்லா விருதுகளையும் பரிசுகளையும் சார்த்தர் நிராகரித்தே வந்துள்ளார். பிரஞ்சு காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற அல்ஜீரிய விடுதலைப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்தவர் சார்த்தர். கியூபா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டைக் கண்டித்து Hurricane Over Sugar என்ற நூலை எழுதிய அதே சார்த்தர் பிடல் கஸ்ரோவின் அரசு கெர்பெர்ட்டோ படில்லா என்னும் கவிஞரை சிறையிலடைத்தபோது கியூப அரசுக்கு எதிரான கண்டனக் குரலையும் எழுப்பினார்.
1943ல் சார்த்தரின் மிகப்பெரும் நூலான Being and Nothingness (இருத்தலும் இல்லாமையும்) வெளியானது. ஒரு நாளுக்குக் குறைந்தது ஆறு மணிநேரங்களாவது எழுதும் வழக்கமுடைய சார்த்தரின் இடைவிடாத எழுத்துப்பணி பிரான்ஸில் மட்டுமல்லாது உலகெங்கிலுமுள்ள இளைஞர்களை அவரிடம் இழுத்துவந்தது. சார்த்தாருக்கு இளைஞர்கள் மத்தியிலிருந்த செல்வாக்கைக் கண்டு கடுப்பாகிப்போன இனவாதி லூ பென் 1950லேயே சார்தரைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டாராம்: “இன்று பிரான்ஸ் சார்த்தர், காம்யு, மரியாக் ஆகிய ஓரினச் சேர்க்கையாளர்களால் ஆளப்படுகிறது.”
சர்த்தாரின் எழுச்சியை மட்டுமல்லாது அவரின் கடைசிக் காலங்களில் அவரது செல்வாக்கு மங்கத்தொடங்கியதையும் எஸ்.வி.ஆர் கவனமாக ஆய்வு செய்கிறார். இருத்தலியல் குறித்து விரிவாகவும் எளிமையாகவும் பேசும் இப்படியொரு பிரதி இதுவரை தமிழில் வந்ததில்லை. நுண் அரசியல் சிந்தனைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வப்படும் ஒரு ஆரம்ப வாசகருக்கு நல்ல தொடக்கமாகவிருக்கும் அதேவேளையில் தமிழ் அறிவுச் சூழலில் இதுவரை அறியப்படாத ஒரு சிந்தனை முறைமையை ஆழமாக வீரியத்துடன் அறிமுகப்படுத்துவது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
கீழே வருவது நூலிலிருந்து ஓர் அத்தியாயம்:
ஸ்தானோவிசமும் சார்த்தரும்
சார்த்தரை ஒரு பிற்போக்கவாதியாகக் காட்டுவதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மேலோங்கியிருந்த ஒர் போக்கு முக்கியப் பாத்திரம் வகித்தது. ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆந்ரே ஸதானோவ் (Andrei Zdhanov) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட இப்போக்கு பாப்லொ நெரூடா போன்றவர்களால், ஏன் 1952இலிருந்து சோவியத் தத்துவ வட்டாரங்களாலும்கூட நிராகரிக்கப்பட்ட இப்போக்கு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும்கூட சில கம்யூனிஸ்ட் கட்சிகளால் கைவிடப்படவில்லை. இது வேறு வடிவங்களில் சில தலித் அமைப்புகளிலும் குடிபுகுந்துள்ளது. எனவே அதைப் பற்றி மீண்டும் இங்கு எழுதுவது அவசியமாகிறது.
சோவியத் யூனியனில் 1940களில் ஸ்தானோவால் தோற்றுவிக்கப்பட்ட இப்போக்கு ஒரு தத்துவத்தை ‘பூர்ஷ்வா தத்துவம், ‘கருத்து முதல்வாதம்’ என்று வருணிப்பதுடன் விஷயங்கள் முடிவடைந்துவிட்டதாகக் கருதியது. இது எப்போதேனும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் உள்ளடக்கத்தை ஆழமாகப் பரிசீலிக்க முயற்சி செய்கின்றது என்றால் அது அத்தத்துவத்தைப் பற்றி ஏற்கனவெ முடிவு செய்யப்பட்டுவிட்ட பொதுவான மதிப்பீட்டை விவரிக்க ஓரிரண்டு எடுத்துக்காட்டுகளைத் ‘தோண்டி’எடுப்பதேயன்றி வேறல்ல.
குறிப்பிட்ட தத்துவத்திலுள்ள உடன்பாட்டுவகையான கூறுகள், எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு அது தரும் ஓரளவுக்கு நியாயமான தீர்வுகள் ஆகியவற்றை இப்போக்கு முற்றாகப் புறக்கணிக்கிறது. ஏனெனில் இவை முன்கூட்டியே வகுத்துக் கொள்ளப்பட்ட பொதுவான மதிப்பீட்டில் பொருத்தப்பட முடியாதனவாக உள்ளன. திறனாய்வுக்குட்படுத்தப்பட்ட தத்துவத்தின் உடன்பாட்டுவகையான பிரச்சினைகளை அங்கீகரிப்பதை ஏட்டுச் சுரைக்காய்வாதம் என்று ஸ்தானோவியம் கருதியது. எதிராளியின் கருத்துகளை மேற்கொள் காட்டாமலோ அல்லது அதைத் திருத்திக்கூறியோ அவரைத் தாக்குவது நியதியாகியது. நேர்மையான முறையில் எதிராளியின் கருத்துகளை எடுத்துக்காட்டினால் அது ‘எதிராளிக்கு மேடை அமைத்துக் கொடுத்தல்’ எனத் தாக்கப்பட்டது. இப்போக்குடன் கொச்சைச் சமூகவியலும் சேர்ந்துகொண்டது ( ‘இவர் குட்டி பூர்ஷ்வா, எனவே இவரது சிந்தனையும் இப்படித்தான் இருக்கும்’). அடையாளச் சீட்டுகளை எதிராளியின் மீது ஒட்டுவதே ஸ்தானோவியத் திறனாய்வுக்குப் போதுமானதாக இருந்தது. தான் ஒரு மார்க்ஸியன் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் என்னும் நினைப்பே ஒருவனை மற்றவர்களைக் காட்டிலும் புனிதமானவனாகவும் உயர்ந்தவனாகவும் ஆக்கிவிடும் என இப்போக்குக் கருதியது. இப்போக்கு ஆதிக்கம் செலுத்திய சூழ்நிலையில் நுனிப்புல் மேய்ந்தவர்களே கொட்டமடித்தனர்.
இத்தகைய போக்கு மார்க்ஸியத்துக்கு சேவை புரிவதல்ல மாறாக மாற்றுத் தத்துவங்களுக்கு குறிப்பாக பூர்ஷ்வாத் தத்துவங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஊறு விளைவிக்கவே செய்யும். வெறும் எதிர்மறைத் திறனாய்வு அல்லது வெறும் மறுப்பு அல்லது அவதூறு ஏற்கனவே நமது கூடாரத்தில் இருப்பவர்களின் கைதட்டலைப் பெற்றத் தரலாம். ஆனால் திறனாய்வு செய்யப்பட்ட கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களை, அக்கருத்துகளின் தாக்கத்துக்குட்பட்டவர்களை வென்றெடுக்காது (விவாதத்தின் குறியிலக்கு இவர்கள்தானேயன்றி நமது ஆதரவாளர்களல்லர்). மாற்றுக் கருத்துள்ளவர்களின் படைப்புகளைப் படிக்க முயற்சி செய்யாத அவர்களைத் திரித்துக்கூறுகிற அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள இயலாத ‘மார்க்ஸிய’ விமர்சகர்களுக்கு அவர்கள் கட்டிவைத்துள்ள குட்டி முகாம்களிலிருந்த பாராட்டுகள் வரலாம். இந்த விமர்சகர்கள் தம் அம்பறாத் துணியிலிருந்து எடுத்து வீசுகிற மொண்ணை அம்புகள் எதிராளியின் அல்லது நம்மால் வென்றெடுக்கப்பட வேண்டியவர்களின் முகாமுக்குள் சிறு சலனத்தையும்கூட ஏற்படுத்தாது. மேலும் எதிராளியின் தத்துவத்தை பற்றிய ஆழமான நேர்மையான படிப்பும் ஆய்வும் நம்மால் வழங்கப்பட வேண்டிய மாற்றுத் தீர்வுகளும் இல்லாமல் நமது உள்நம்பிக்கைகளை, ஏற்கனவே நாம் ஏற்றுக்கொண்ட கருத்துகளை வலுப்படுத்த முடியாது.
எதிர்மறைத் திறனாய்வு இலக்கைத் தவற விட்டுவிடுகிறது. துவக்கத்திலிருந்தே நமக்குத் தோல்வியை உருவாக்கிவிடுகிறது. நமது சிந்தனையை வறட்சிக்குட்படுத்தி அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது. எதிர்மறைத் திறனாய்வும் கொச்சைச் சமூகவியலும் (இது ‘கருத்துநிலை’ -Idealogy- பற்றிய மார்க்ஸிய வரைவிலக்கணத்தை மிகவும் எளிமைப்படுத்துகிறது) மாற்றுத் தத்துவங்களில் ஆய்வுக்குரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை எனக் கருதுகின்றன. மார்க்ஸியத்திற்கு வெளியே உண்மையான பிரச்சினை (சாதியம், சுற்றுச்சூழல் கேடு, பெண்ணடிமைத்தனம் போன்றவை) ஏதும் இல்லை என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஆக்கபூர்வமான தீர்வு மார்க்ஸியத்திற்குள்ளேயே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் (நடைமுறை உண்மைகளுக்கு மாறாக) இத்திறனாய்வு கருதுகிறது. இதன் காரணமாக புதிய பிரச்சினைகளை புதிய சவால்களை எதிர்கொண்டு தன்னை மேலும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை மார்க்ஸியத்திற்கு மறுக்கிறது. இந்த நிலைப்பாடு மார்க்ஸியத்தை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்வதிலிருந்து தோன்றுவதல்ல. மாறாக அதை வறட்டுத்தனமாகத் திரிப்பதிலிருந்தும் வாய்ப்பாடுகள் மூலமாக மார்க்ஸியத்தைக் ‘கற்றுக்கொள்ள’ முயற்சி செய்வதிலிருந்தும் தோன்றுவதாகும். எனவே இது வலிமையின் அறிகுறியல்ல வலுக்குறைவின் அடையாளமே.
சார்த்தர்: விடுதலையின் பாதைகள்
எஸ்.வி. ராஜதுரை
பக்:224, விலை: 120 IRS
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
email:[email protected]
அருமையான ஆழமான கருத்துக்கள். ஆனாலும் நணபரே, இருத்தலியல் என்று தாங்கள் கூறுவது எக்சிஸ்டென்சியலிசம் தானே. அது மர்க்சியத்துக்குப் பின் வந்த சிந்தனையா?! அட்கு மட்டுமே இடர்கிறது எனக்கெட்டியவரையில்.
அன்புடன்
ஓசை செல்லா
எங்களுக்கு அமைப்பியல்வாதமும் தெரியாது இருத்தலியில் பி.ந.வும் தெரியாது. ஆனால் சிலர் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளையும் தத்துவங்களையும் தங்களுக்கு ஏற்றவாறுபாவித்துக்கொள்வார்கள் என்பது தெரியும்.
எங்களுக்கு எஸ்விஆரைத்தெரியாது. ஆனால் சமகால ஈழப்போரட்டம்பற்றி ஓரளவு தெரியும். இது பற்றி எஸ்விஆரின் பார்வைகள் என்ன என்பது அவசியமாய்படுகிறது. முடிந்தால் தாருங்கள். சேர்த்துப்படித்துப் புரிந்துகொள்கிறோம். ரூபன் அண்ணா சொன்னதுபோல எழுத்தாளர் நேர்மை என்பது முக்கியம். அவர்கள் விடயங்களை தங்களுக்கு ஏற்றவாறு திரித்துவிடுவார்கள்.
இந்தக்கட்டுரையாளர் யார்? அடையாளம் பதிப்பகமா? அல்லது சத்தியக்கடதாசியா?
“வெறுமனே எழுத்துப்பணியோடு நின்றுவிடாமல் களச்செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர் எஸ்.வி.ஆர். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மரணத்திலிருந்து மீட்பதற்காகத் தமிழகத்தில் நடத்தப்பபட்ட போராட்டத்தில் எஸ்.வி.ஆரின் பங்கு முக்கியமானது.”
//எங்களுக்கு எஸ்விஆரைத்தெரியாது. ஆனால் சமகால ஈழப்போரட்டம்பற்றி ஓரளவு தெரியும். இது பற்றி எஸ்விஆரின் பார்வைகள் என்ன என்பது அவசியமாய்படுகிறது. முடிந்தால் தாருங்கள்//
பிரகாஸ் ஈழப்பொராட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள் அப்பொது எஸ்.வி.ஆர் என்ற ஆளுமையையும் அது ஈழப்போராட்டம் பற்றி கொண்டுள்ள நிலைப்பாடும் தெரியும் உங்கள் மூத்த நண்பரிடம் கேட்டபாருங்கள் எஸ்.வி.ஆர் பற்றி சரி உங்களுக்கு சு.வி என்ற கவிஞனைத் தெரியுமா அப்படி தெரியாவிட்டால் அறிந்துகொள்ள முயற்சியுங்கள் சு.வியுடன் ஈழம் வந்து வன்னிபெருநிலப்பு வரைசென்று அறிஞா;களைச் சந்தித்தவர் புதுவை மு.திரு கருணாகரன் நிலாந்தன் போன்றவர்களின் நண்பர் இப்பொது தெரிந்திரக்கும் அவரின் நிலைப்பாடு பற்றி பரவாயில்லை நண்பா எஸ்.வி.ஆரை.வாசியுங்கள் மனிதநேயமள்ளவரை சந்தித்த உணர்வுகிடைக்கும்
எஸ்.சத்யன்