சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்!
வ.அழகலிங்கம்
இலங்கை முதலாளித்துவ இராஜபக்க்ஷ அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயத்தை உண்டுபண்ணப் போவதாக சன்டேஒவ்சேவர் (15.07.2007) செய்திவெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா தொடக்கம் 30 மில்லியன் ரூபாவரை முதலிடுபவர்களுக்கு 10 வருடங்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். ஒக்டோபர் முடிவதற்குள்ளாகவே இந்த முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலீட்டுத் திணைக்கள உப முகாமையாளர் ஏற்கனவே இந்த நடவடிக்கைகளைச் செய்வதற்கு 100 மில்லியன் ரூபா தொடக்கச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பகர்ந்துள்ளார். சம்பூரையும் நிலாவெளியையும் சுற்றி ஒரு பெரியவட்ட பெருஞ்சாலை அமைகக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய நிலங்களைச் சிறீலங்காத் துறைமுக அதிகாரிகளிடம் வாடகைக்கு அல்லது விலைக்குப் பெறலாம் என்றும் அதற்கான அமைச்சின் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதென்றும் அச் செய்தி கூறுகிறது. ஏற்கனவே Tri Star Garment நிறுவனம் 3 ஏக்கர் காணியை விலைக்கு வாங்கி விட்டது. அதிலே 2000 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அது கூறுகிறது. முதலிடுவதற்கு அனேகர் முன்வந்துள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து உடுப்புகளுக்கான கேள்வி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசம் பொருளாதார தாராளமயமாக்கப்பட்ட பிரதேசமாகவும் சுதந்திர வர்த்தகப் பிரதேசமாகவும் இருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அரசியற் கற்கை நெறி நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி Saman Kelegama 1977இன் சுதந்திர வர்த்தகத் திட்டம் கல்வித்துறையையும் நிதித்துறையையும் விரைவாகத் தனியார்மயமாக்காததாலேயே தோல்வி கண்டது என்று கூறியுள்ளார். ஜே.வி.பியும் சில சிவில் சமூகத் தலைவர்களும் இந்தத் திட்டத்தால் விவசாயமும் உள்நாட்டுத் தொழிற்துறையும் கலாச்சாரமும் பாழடையும் என்று எச்சரித்துள்ளனர். பழையமுறை உற்பத்தியாலான விவசாயமும் சிறு உற்பத்தியும் அழியும்போது அது தோற்றுவித்த பண்பாடுகளும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாததென்பதை ஜே.வி.பி கருத்துக்கொள்ளவில்லைப்போலும்.
சமாந்திரமாக இதே 15 யூலை 2007 சண்டேரைம் பத்திரிகையில் இந்தத் திட்டத்திற்கு முண்டு கொடுக்கும் வகையில் சுதந்திர வர்த்தகத்தின் வெற்றி என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் 21 யூலை 1977 இல் யூ.என்.பி ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சுதந்திர வர்த்தகம் நிர்மாணிக்கப்பட்டதாக அது கூறுகிறது. அந்தக் கட்டுரையாளர் பொருளாதாரவாதிகளையும், சிவில் சமூகத் தலைவர்களையும், அரசியல்வாதிகளையும், கல்வியாளர்களையும் மற்றும் தெருவில் போன பலரையும் பேட்டி கண்டாதாகக் கூறுகிறர். அதிலே அவர்கள் தேசியவிடுதலைப் போராட்டம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் கீழே போகவில்லையென்றும், ஊழலாலும் தகைமை குறைந்த தலைமையாலும், இடதுசாரி அரசியல்வாதிகளாலும், கட்டுப்பாடின்மையாலும், தூரநோக்கின்மையாலுமே நாடு கீழே போனதாகக் கூறியுள்ளார்கள். யுத்தம் ஒரு காரணிதான், ஆனால் இடதுசாரி அரசியல்வாதிகள்தான் நாட்டின் வளர்ச்சியை ஆக நாசமாக்கியுள்ளார்கள் என்று சனங்கள் கூறியாதாக எழுதியுள்ளார். ஏன் இந்த இடதுசாரி எதிர்ப்பு கிளப்பப்படுகிறது? இது ஜே.வி.பி எதிர்ப்பல்ல. முழு மக்களது வாழ்கைத்தர வீழ்சியையும் வறுமையையும் நோயையும் மீண்டும் கொண்டுவரக்கூடிய முறையில் முழு இலங்கையையும் தனியார்மயமாக்க தடையாகவுள்ள இடதுசாரிகளுக்குக் காட்டப்படும் எதிர்ப்பாகும்.
உள்நாட்டு யுத்தத்தோடு கூட நாட்டின் மொத்த உற்பத்தி கூடியாதாகவும் உள்நாட்டு யுத்தமில்லையேல் உள்நாட்டு உற்பத்தி கூடியிராதென்றும் பாதுகாப்புச் செலவும் யுத்தம் தொடர்பான செலவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியென்றும் வேறொரு தனியார் வர்த்தகப் பிரமுகர் கூறியுள்ளார். அம்பாந்தோட்டையில் அமையப் போகும் வீரவில்ல சர்வதேசவிமான நிலைய அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி யுத்தம் நிகழும்போது பொருளாதார அபிவிருத்தி ஏற்பாடாது என்று சொல்வது தவறு என்று கூறினார்.
I will not sell the lie. I will not say that development is not possible because of heavy defence expenditure’ என்று இலங்கை ஜனாதிபதி வாய் தடுமாறி இந்தக் கூற்றைக் கூறவில்லை. இலங்கையின் ஆளும் வர்க்கங்களினுள்ளே சமரசம்காணமுடியாது முரண்பாடுகள் தோன்றி விட்டன. மேற்குலகின் நலனுக்காகத் தொடர்ந்து நாட்டில் மாமூல் நிலையைத் தோன்றவிடாது பயங்கரவாத அழிவுகளைச் செய்யும் பாசிசப் புலியோடு சமாதானப் பேச்சை நடத்தும்படி கூறும் ரணில் விக்கிரமசிங்கா கன்னைக்கும் ஆசிய மூலதனங்களோடு நேசம்பூண்டு அதற்குத்தடையாக உள்ள புலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்ற மற்றைய முதலாளித்துவக் கன்னையின் கூற்றாகவே இது காணப்படுகிறது. அதே நேரத்தில் இலங்கையில் மீண்டும் தொழிலாள வர்க்கம் சக்தி பெறவிடாமல் தடுப்பதுற்கு அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கு சாட்டாக உதவும் அனுகூலசத்துருவே புலிப் பாசிசமாகும். இருந்தபோதும் மனிதர்களைக் கொன்று குவிப்பது நாளாந்த நடவடிக்கையாகப் போய்விட்ட இந்தக் காலகட்டத்தில் வெகுஜன அழிவிலே பொருளாதாரம் கொழிப்பது, யுத்தத்தால் வரும் லாபத்தைத்தேடி அலைவது, மற்றவர்களின் உயிரைக் குடிப்பதற்காக தேசபக்தியோடு யுத்தகளத்திற்குப் போவென்று சொல்வதையெல்லாம் கேட்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இலங்கைச் சமூகம் தாழ்ந்துவிட்டது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் தெற்காசியாவில் முதன்முதலாக சுதந்திர வர்த்தக வலயம் என்ற பரிசோதனை சிறிலங்காவிலேயே ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூர், பிலிப்பைனஸ், தாய்வான், தாய்லாந்து போல எதிர்ப் புரட்சியைப் பூரணமாக்கி கொம்யூனிசவாதிகளையும் தொழிற்சங்கவாதிகளையும் தொழிலாளர் நலன் பேண் அரசியல்வாதிகளையும் கொன்று குவித்து ஜனநாயக உரிமைகள் அத்தனையையும் இல்லாமற் செய்து இலங்கையிலே சுதந்திர வர்த்தகத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையிலே 1959ல் பண்டாரநாயக்காவைக் கொன்று சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்த முயன்ற போதும், 1962ல் திருமதி பண்டாரநாயக்காவைக் கொல்ல முயன்று சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த எத்தனித்தபோதெல்லாம் இலங்கைத் தொழிலாள வர்க்கம் தெருவிற்கு இறங்கி வேலை நிறுத்தத்தால் பதிலடி கொடுத்தது. நாடும் மேலும் இடது திசையை நோக்கிப் பீடுநடை போட்டது.
1977ல் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றும் கூடப் பாரளுமன்றத்திற்குத் தேர்வாகாத சூழலைப் பயன்படுத்தியே முதலாவது சுதந்திர வர்த்தக நிலையம் கட்டுநாயக்காவில் ஏற்படுத்தப் பட்டது. ஏன் சுதந்திர வர்த்தக வலையம் என்ற போர்வையில் முதலாளித்துவ நேரடி முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும்? என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.
இலங்கை ஒரு சமூகநல அரசாக இருந்ததாலும், பல தொழிலாளர் நலன்பேண் சட்டங்கள் இருந்ததாலும், ஏற்கனவே ஏறத்தாழ எல்லாத் தனியார் நிறுவனங்களும் தனியார் வங்கிகளும் அரச உடமை ஆக்கப் பட்டதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனங்களுக்கு உத்தரவாதம் இல்லாததாலும் இலங்கையிலே நேரடியாக முதலிடுவதில்லை. பூகோளமயமாகிக்கொண்டிருந்த உலக பொருளாதாரமானது உலகின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடி தனது மேலாண்மையை நிர்மாணித்த போதும் இலங்கையில் புகுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சீனப்பெருஞ்சுவரால் ஏறிக் குதித்து தீபெத்தில் கால் பதித்து இந்தியாவைக் குரங்குப் பாய்ச்சலில் பாய்ந்த மூலதனம் இலங்கையில் தனது கைவரிசையைக் காட்டச் சிரமப்படுவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கின்றது.
இலங்கையின் இலவசக் கல்வி, இலவச அரிசி , இலவச வைத்திய வசதி போன்ற சமூகநலக் காப்புறுதிகளை அகற்றும்படி உலகவங்கி, சர்வதேச நாணயசபை, மற்றும் ஏகாதிபத்தியங்கள் சிறீமாவோ பண்டாரநாயக்க இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து பல பொருளாதார நெருக்குவாரங்களைக் கொடுத்தது. அதன் பலாபலனாய் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி கிளர்ச்சியும், பாண் கியூவும் பட்டினிச்சாவும் ஏற்பட்டது. என்.எம்.பெரேரா நிதியமைச்சர் பதவி ஏற்றவுடன் ஏகாதிபத்திய வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் கடன் உதவி அத்தனையையும் நிறுத்தியதோடு ஏற்கனவே பட்டகடனைத் திருப்பிக் கட்டும்படியும் நிர்ப்பந்தித்து தேயிலை, ரப்பர், தெங்குப்பொருள் கொள்வனவையும் பெருவாரியாகக் குறைத்ததால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்கமுடியாத அளவுக்கு கஜானா காலியாகியது. அதனோடு சேர்ந்து டொலர்–தங்க மாற்று உடன்படிக்கை உடைந்து மாபெரும் உலக நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இலங்கையும் அபாரமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட துன்பத்திற்குப் பழிவாங்கவே மக்கள் 1977 தேர்தலில் எல்லா இடதுசாரிகளையும் தோற்கடித்தனர்.
1977 ல் ஜெயவர்த்தனா ஆட்சியிலும் பொருளாதார தாராளவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தனியார்மயமாக்கலை நடாத்தும் படியும் இந்த ஏகாதிபத்தியங்களும் வங்கிகளும் நிர்ப்பந்தித்தன. அடுத்துவந்த பிரேமதாசா ஆட்சியிலும் தனியர்மயமாக்கும்படி நிர்ப்பந்தித்து அதுகூடப் பூரணமாக நிறைவேறவில்லை. ஜெயவர்த்தன, பிரேமதாச ஆட்சிகள் தொழிற்சங்கங்களையும் தொழிலாளவர்க்க இயக்கங்களையும் கணிசமாக அழித்து தனியார்மயமாக்கலை ஓரளவு செய்தபோதுங்கூட இலங்கையின் இடதுசாரிப் பாரம்ரியம் முற்றாக அழிந்து போகாதது மாத்திரமல்ல அது மீண்டும் மீட்சி பெற்றது. அடுத்துவந்த சந்திரிகா ஆட்சியிலும் இதே நிர்ப்பந்தம். சந்திரிகாவின் கடைசிக்கால ஆட்சியில் ரணில் பிரதமராக இருந்தபோது கோட்டை, மருதானை, பேருந்து நிலையங்களையும் கொழும்பிலிருந்து காலி செல்லும் இருப்புப்பாதை நிலங்களையும் இந்தியக் கொம்பனியொன்றுக்கு விற்க எத்தனித்த போது எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களே ரணில் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கான காரணமாகும்.
புலியை அரசியல் வானிலிருந்து அகற்றுவதற்கு முன்னதாகப் பூரணமாக நாட்டைத் தனியார் உடமையாக்க வேண்டும் என்பதே ஏகாதிபத்தியங்களின் திட்டமாகும். புலி அகற்றப்பட்டால் கடைசிவரையும் நீங்கள் தாராளமயமாக்கலைச் செய்யமாட்டீர்கள் என்றே ஏகாதிபத்திய ஆலோசகர்கள் தொடர்ந்து அடித்துக் கூறி வந்தனர். புலி இன்றுவரை தப்பிப் பிழைப்பதற்கும் இதுவுமே பெரிய காரணியாகும். வன்னியில் நடந்த ஒரேயொரு உலக ஊடகவியலாளர் மகாநாட்டில் பிரபாகரனது வாயாலேயே தனது பொருளாதாரக்கொள்கை சுதந்திர வர்த்தகம் என்று சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். பொருளாதாரம் என்று எழுத்துக்கூட்டவே தெரியாத பிரபாகரன் இதைச் சொன்னதே உலக அதிசயங்களில் ஒன்று.
கடந்த 30 வருட உள்நாட்டு யுத்தம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான போராட்டம். ஆனால் உலக முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை இது தாம் தங்கு தடை யின்றி நேரடியாக முதலிடுவதற்கேற்ற அரசியல் சூழலைக் கொணருவதுதான். இலங்கையிலே தனியுடமையாக்கலால் ஏற்படும் பின்விளைவு, பிரதிவிளைவுகளை நன்றேயறிந்த அனுபவம் வாய்ந்த முதலாளித்துவ அரசியல்வாதியான ஜெயவர்த்தனா சுதந்திர வர்த்தக வலயம் என்றதோர் திட்டத்திற்கு வந்தார். இதுவும் கூட மிக இலேசாக ஏற்படுத்தப் படவில்லை. 1977 இனக்கலவரத்தை மூட்டி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, தொடர்ந்து 80, 81 இனக்கலவரங்களைத் திட்டமிட்டு ஆத்திரமூட்டி ஈற்றில் 1983 இனஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு முழுத்தேசத்தையும் ஓரு குழப்பமடைந்த பீதி நிலைக்குக் கொண்டுவந்து, இந்தக் குழப்பங்களும் உள்நாட்டு யுத்தமும் நடைபெறும் பொழுதே சுதந்திர வர்த்தக வலையத்தை நிர்மாணிக்க முயற்சிக்கப்பட்டது. முதலாவது சுதந்திர வர்த்தக வலயத்தை 1978ல் ஆரம்பித்ததையடுத்து 116 வெளி நாட்டுக் கொம்பனிகள் மீண்டும் நாட்டிற்குள் நுளைந்தன. பெரிய பெரிய 4 ஸ்டார் 5 ஸ்டார் உல்லாச சுகபோக ஹொட்டேல்களும் போடப்பட்டன. சில அரசாங்கத்தோடும் உள்ளுர் முதலாளிகளோடும் சேர்ந்து செய்த கூட்டு முதலீடுகளாகும். 2003ம் ஆண்டளவில் மேலும் 6 சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட்டன. இதனோடு இலங்கை பங்குச் சந்தைக்குள்ளும் புகுந்தது. banking, finance, insurance, stock-brokerage, construction of residential buildings and roads, supply of mass transportation, telecommunications, production and distribution of energy and professional services என்று ஒரு கொள்ளை துறைகளில் வெளிநாட்டு மூலதனம் வந்து புகுந்தது. எல்லாமே உலகவங்கி, சர்வதேச நாணயசபை, ஆசிய அபிவிருத்தி வங்கி என்ற சண்டியர்களாலே உருட்டியும் மிரட்டியுமே செய்யப்பட்டன. இலங்கையின் வெளிநாட்டுச் செலவாணி நிலுவை பூச்சியத்திற்குக் கீழே இருந்த காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தால் இதை எந்த வழியிலும் எதிர்க்க முடியவில்லை. 1961 தேசியமயகல் சம்பவங்களுக்குப் பயந்து முதலிட வருவதற்குப் பயந்த வெளிநாட்டு கொம்பனிகள் எல்லாம் மீண்டும் மெல்லமெல்ல வரத் தொடங்கின.
இந்த 30 வருட காலத்தில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கைரோப்பியப் பொறிவை அடுத்து ஆசியாவில் உலகமயமாக்கல் பற்றிப்படர்ந்தது. மேற்கில் வரலாற்றால் முந்தி அபிவிருத்தி அடைந்த நாடுகள் சுரண்டலுக்கு இன்றியமையாத தமது தொழில் நுட்ப மேலாண்மையை இழக்கவே 150 வருடமாக விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அறிவு பழைய காலனித்துவ நாடுகளுக்குப் போவதைப் பல குள்ள வழிகளால் தடைசெய்த போதும் சீனா, இந்தியா மற்றும் தூர ஆசிய நாடுகளுக்குத் தொழில் நுட்பம் போய் அவைகளும் பெரிய பொருளாதார சக்திகளாகி விட்டன. இலங்கையோ தூரப் பார்வையற்று இந்தப் பொன்னான காலத்தில் சிங்கள – தமிழ் இனவாதிகளைத் தோற்கடிக்கப் பலமில்லாத காரணத்தால் சகோதரக் கொலைகளின் மூலம் ஓர் இரத்த ஆற்றைக் குறுக்கே போட்டு ஆசிய பொருளாதார அபிவிருத்திகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டது.
இந்த நாட்களில் இலங்கை முதாலளித்துவமோ தொழிலாளர் போராட்டங்கள் தோன்றாமற் செய்வதற்கான ஒரே வழியாக சகோதர யுத்தத்தை கதகதக்க வைத்திருப்பதைத் தவிர வேறுமார்க்கம் தெரியாமல் பிற்போக்குக்கு மேல் பிற்போக்கையே உற்பத்தி செய்து கொலைகளைச் சந்தைப்படுத்திக் கொண்டிருந்தது. பொலிஸ்மா அதிபர், இராணுவ ஜெனரல்கள் ஆகாயப் படைத் தளபதிகள் மற்றும் ஜனாதிபதி தொடக்கம் மற்றும் ஒவ்வொரு மந்திரிகளும் பிரபல்யம் வாய்ந்த அரசியற் புள்ளிகளும் இரகசியக் கொலைக் குண்டர்களை எண்ணுக்கணக்கற்று படைத்துவிட்டிருந்தனர். புலி கற்பித்த இனந்தெரியாத கொலை நாடு முழுவதும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் பாசிசப் புலியும் மற்றும் தமிழ் குட்டி முதலாளித்துவ இயக்கங்களும் இரகசிய கொலைக் குண்டர்களைப் படைத்துத் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டேயிருந்தனர். இன்றும் அப்படியே இருக்கின்றனர். இனிமேலும் அப்படியே இருப்பர். நாடோ சிங்கள – தமிழ் – முஸ்லீம் என்ற பேதமெதுவுமின்றியிருந்த முழுக் காலச்சாரத்தையும் வாழையடிவாழையான வழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் இழந்துவிட்டது.
அதன் பரிமாணத்தைப்பார்க்க வேண்டுமானால் ஏறத்தாள 5 லட்சம் பெண்கள் மணப்பருவக் குமர்ப் பெண்கள்கூட வறுமையின் கோரத்தைத் தாங்க முடியாமல் மத்திய கிழக்குக்கு அடிமை வேலைக்குப் போயுள்ளனர். இந்த நிகழ்வுகளின் கடைசி எச்சரிக்கையாக சவுதி அராபியாவில் ரிசானா நபீக் என்ற இளம் பெண்பிள்ளைக்கு மத்தியகாலச் சட்டத்தின் கீழ் பிரசித்தமாக தலைவெட்டும் மரண தண்டனை தீர்ந்துள்ளது. அப்படி ஒரு மரண தண்டனை நிறைவேறினால் மூதூர் முஸ்லீங்கள் மாத்திரமல்ல, அது இலங்கை தழுவிய எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்றே எதிர்பார்க்கலாம்;. வரலாற்றிலிருந்து இதுபோன்ற பல சமாந்திரங்களைக் கூற முடியும். 1887ல் ருஷ்யாவில் செண்ட் பீட்டர்ஸ்பேர்க் பல்கலைக் கழகத்தில் ஓர் இளம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து முழு ருஷ்யாவிலும் மாணவர் போராட்டங்களும் தொழிலாளர் பேராட்டங்களும் தொடர்ந்து நொதித்து பல புரட்சிகர இயக்கங்களைத் தோற்றுவித்து ஈற்றில் 1905ல் ஜார் ஆட்சியை வீழ்த்திய பின்பே ஓய்வுக்கு வந்தது. எழுபதிலே சிவகுமாரன் தற்கொலை செய்ததைத் தொடர்ந்தே மெல்ல நொதித்த வரலாறானது ஈற்றில் தமிழ் ஈழப் போராட்டமாகப் பரிணாமமெடுத்து இன்றுவரை ஓயவில்லை. 1976ல் பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் வீரசூரியாவைப் பொலிஸ் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்த மாணவர் போராட்டமானது மாதக்கணக்கில் நீடித்து ஒரு தொகை வேலை நிறுத்தங்களை உண்டுபண்ணி ஈற்றில் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை வீழ்த்தியது. பொருளாதார சமூக நெருக்கடிகளும் உள்முரண்பாடுகளும் புரட்சிகர உள்ளுடனாகத் திரண்டுபோயிருக்கும். வரலாற்றுக் காலகட்டங்களில் இப்படியான அப்பாவிகளின் அநியாய மரணங்கள் முழு மானிட நெஞ்சங்களையும் உலுப்பி உணர்ச்சிவசப் பெருக்கெடுப்பைச் செய்து புரட்சிகரக் காட்டாற்று வெள்ளத்தை மடைதிறந்து விட்டுவிடுகின்றன. ரிசானா என்ற ஒருமைக்குள்ளே இலங்கையின் ஒட்டுமொத்த முழுமையைக் காண வேண்டும். சமூக நடைமுறை அனுபவங்களின் ஒப்புநோக்குகைகள் இப்படித்தான் முடிவெடுக்கத் தூண்டுகின்றன.
வரலாற்றில் எந்தக்காலத்திலும் எந்த நாட்டிலும் ஏற்படாத மனித அவலங்கள் இலங்கையில் ஏற்பட்டதற்கான பின்புலத்தையும், அதை எப்படித் தீர்ப்பதென்பதையும் சிறிது பார்ப்போம்.
பிரித்தானியர் 1815ல் இலங்கையை ஆக்கிரமிக்கும் முன்னரே போத்துக்கேயர், ஒல்லாந்தரது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கையின் கரையோரப்பகுதியும் சில உள்நாட்டுப் பிரதேசங்களும் தமது பாரம்பரிய சுயபூர்த்திக் கிராமியப் பொருளாதாரத்தை இழந்ததோடு பெரிய அளவில் ஐரோப்பிய வர்த்தகத் தலைப்பட்டினங்களோடு வாத்தகத் தொடர்புகளை ஏற்படுத்தி விட்டன. தென்மேற்கு, தெற்குக் கரையோரப் பகுதிகள் தமது பழைய சமூக உறவுகளை இழந்துவிட்டன. கண்டியைக் கைப்பற்றியதோடு எஞ்சியிருந்த நிலப்பிரபுத்துவ உறவும் அருகிவிட்டது. நிலவுடமை வர்க்கத்தின் வர்க்க வரலாறே அதனோடு அஸ்தமித்து விட்டது. அவர்கள் முதலியார், தலையாரி வேலைகளை ஏற்றுக்கொண்டு ஐரோப்பியர்களுக்கு நிர்வாகத்தில் சேவகம் செய்பவர்களாக தம்மை மாற்றிக்கொண்டு விட்டனர். அவர்கள் ஊழல் போவழிகளாகவும் வறிய விவசாயிகளை குண்டர்களைக் கொண்டு ஒடுக்குபவர்களாகவுமே இருந்தனர். இதனால் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சமூகப் பாத்திரமே இல்லாமற்போய்விட்டது.
1834ல் பிரித்தானியா புதிய நிர்வாக முறையை உட்புகுத்தியதோடு நாடு முதலாளித்துவ ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கி விட்டது. இது 1848 ஐரோப்பியத் தொழிற்புரட்சிகளுக்கு முன்னதாகும். இதையடுத்து மலைநாடுகளில் கோப்பிச் செய்கை ஆரம்பிக்கப் பட்டது. இதற்காக இருப்புப் பாதைகளும் வீதிகளும் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து பெரும்தொகைக் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. தென்னிந்தியாவிலிருந்த குளக்கட்டு மற்றும் நீர்த்தேக்க அணைகளை உடைத்து விவசாயிகளை வெளியேற்றியதோடு அவர்களது கைத்தொழில்களையும் துவம்சம் செய்து அவர்களைக் கூலிவேலை செய்துதான் உயிர்தப்பிப் பிழைக்க வேண்டியவர்களாக்கினார்கள். பிரித்தானிய முதலீட்டோடு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பித்தது. அந்தக்காலந் தொடக்கம் தொடர்ந்து பிரசா உரிமைச் சட்டம் வரைக்கும், அதற்குப் பின்னர் ‘கள்ளத்தோணிகளாகவும்’ தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் வந்த வண்ணமே இருந்தனர். இதனோடு இலங்கை, முதலாளித்துவ உற்பத்திப் பொருளாதாரமாகிவிட்டது. உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ததோடு அனேக வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டு அது தனிப்பட்ட தீவு என்ற குணாம்சத்தையும் இழந்து பழைய பொருளாதார முறையையும் இழந்து விட்டது.
மலைநாடுகளில் கோப்பி, தேயிலை, இரப்பர் பயிர்செய்கைக்காகவும் கீழ்ப்பிரதேசங்களில் இரப்பர், தெங்கு பயிசெய்வதற்காகவும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படத் தொடங்கி தொடர்ந்து வெவ்வேறு காலங்களில் அது இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி வரைக்கும் பறிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இதை அவர்கள் தரிசு நிலச் சட்டம் (the Waste Land Ordinance) என்ற ஒரு சட்டப் போர்வையால் மறைத்து வெளிப்படையாகவே செய்தனர். இதனால் நிலமற்ற விவசாயிகள் தொகை பெருகியது. முன்னர் அரசர்களால் விவசாய அபிவிருத்திக்கென்று செய்யப்பட்ட குளங்கள், அணைக்கட்டுகள், நீர்ப்பாசன ஒழுங்குகள் எல்லாவற்றையும் பராமரியாமலும் பராமரிக்க விடாமலும் பாழடையச் செய்ததோடு விவசாயப் பொருளாதாரமும் பாழடைந்ததோடு, விவசாயிகளும் பாழடைந்தனர்.
பிரித்தானியர் இந்தியாவிலே பண்ணையார் முறையைப் புகுத்தியது போல இலங்கையிலே புகுத்தாமல் விவசாயிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்காமல் முதலாளித்துவத்தைத் தங்குதடையின்றி வளர விட்டனர். இதன் பலாபலனாய் விவசாய வர்க்கம், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் கணக்கிலெடுக்கப்படாத ஒன்றாகியதோடு வறுமையில் மூழ்கி கீரைபாத்தி நிலங்களிலும், வருவாய் போதியளவு வராத தரிசு நிலங்களிலும், தேடுவாரற்ற பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலும் ஓடைக்கரைகளிலும் வாரம், குத்தகை, அத்த முறைப் பயிர்செய்வோராகவும், பகுதிநேர விவசாயிகளாகவும் மாறி அழிவின் விழிம்பில் சதா தத்தளித்தனர். இது சிங்களத் திட்டமிட்ட குடியேற்றம்பற்றிப் சதா பேசுவோர்களுக்குத் தெரியாத வரலாறு.இது இலங்கையிலே முதலாளித்துவப் புரட்சியின் முன்நிபந்தனையான விவசாயப் புரட்சியைப் புறநீங்கலாக்கி விட்டது. விவசாயப் புரட்சியும் முதலாளித்துவப் புரட்சியும் முழுமுதிர்ச்சியோடு பிரசவிக்காததால் நிலப்பிரபுத்துவ உறவின் மிச்சசொச்சங்கள் மீதி மிஞ்சியிருந்ததோடு தேச உருவாக்கமும் குறைப்பிரசவமானது. இந்த அபிவிருத்தியே இலங்கை அரசியலில் தொழிலாளி வர்க்கத்தை சீர்திருத்தங்களின் தலைவனாக்கியது. இந்த அபிவிருத்திகள் பாட்டாளிவர்க்கத்தைப் பெருக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த 6 மில்லியன் சனத்தொகையில் 1 மில்லியன் பேர் தொழிலாளர்கள் அதிலும் 700000 பேர் வரையில் தோட்டத்தொழிலாளர்கள். 300000 பேர் மற்றய தொழிற்துறைகளிலும் போக்குவரத்து துறைமுகச் சேவைகளிலும் பணி புரிந்தனர்.
ஒரு பின்தங்கிய நாட்டிலே இந்தத் தொழிலாளார் விகிதாசாரமானது சார்பு ரீதியில் பெரியது. இலங்கையின் முக்கியமான முதலாளிகள் பிரித்தானியர்களாகவே இருந்தனர். இவர்களே பெரிய மூலதனங்களின் சொந்தக்காராக இருந்தனர். மற்றயவர்கள் இந்திய முதலாளிகள். இந்திய முதலாளிகளது கையிலேயே முழுக்க முழுக்க மொத்த விற்பனையும் மற்ற உணவுப்பொருள் விற்பனைகளும் வர்த்தகம், வங்கி, நாட்டுச் செட்டிமுறை, கந்துவட்டிக்குக் கடன்கொடுத்தல், அடைவுக்குக் கடன்கொடுத்தல் போன்றன இருந்தன. சுதேச இலங்கை முதலாளிகளோ வலது குறைந்த அற்ப பாத்திரம் வகிப்பவர்களாகவே இருந்தனர். மற்றய தேச முதலாளிகளோடு ஒப்புநோக்குமிடம் மாத்திரமல்ல இலங்கைத் தொழிலாளி வர்க்கத்தோடு ஒப்பிடுமிடத்தும், எண்ணிக்கையிலும் ஸ்தாபனப் பலத்திலும் அவர்கள் சக்தியற்வர்களாகவே இருந்தனர். சுதேச முதலாளிகளிடம் பெரிய மூலதனம் ஏதும் திரளவில்லை. ஆகவே சின்ன சுதேச முதலாளித்துவம்தான் தோன்றியிருந்தது. மூலதனத்தில் கூட பிரித்தானியரோடு மாத்திரமல்ல இந்தியாரோடு ஒப்பிடுமிடத்துக்கூட அற்பமானவர்கள். 1929 வோல்ஸ்றீற் பொறிவோடு ஏகாதிபத்தியதின் தொங்குதசையாக இருந்த சுதேச முதலாளிகள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். இந்தப் புறநிலையே இலங்கை அன்னிய முதலாளித்துவ உடமைகளைப் பறித்து அரச உடமையாக்குவதை பெரிய இரத்தளரி ஒன்றும் இல்லாமல் இலகுவாக்கியது.
சுதேச முதலாளித்துவம் ஒவ்வொரு வர்க்க முட்டி மோதலின்போதும் தொழிலள வர்க்கத்தை எதிர்ப்புரட்சியால் நசுக்க வல்லமையற்று தனது இயலாமையை இனக்கலவரங்களைத் தூண்டுவதன் மூலமே சமாளித்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் அதுவும் குறிப்பாக சுயெஸ் கால்வாய் வெட்டப்பட்டது அரபிக் கடலால் பயணம் செய்யும் அத்தனை கப்பல்களும் இலங்கையை மருவிச் செல்லவேண்டியது பூகோள நிர்ப்பந்தமாகியது. இலங்கையோ கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே கேந்திரத்தில் இருந்தது. இதன் பிரகாரம் இலங்கைக்கும் மேற்குநாடுகளுக்குமிடையேயான பரஸ்பர பொருளாதார அரசியல் கலாச்சார தொடர் தாக்கங்களினால் இலங்கையின் படித்த ஒருசாரார் நவீன சிந்தனைகளை உறிஞ்சினர். இதன்பலாபலனாய் இலங்கையின் சமுதாய அபிருத்தியானது மற்றய ஆசிய நாடுகளிலும் முந்தியதாய் அமைந்தது. ஆசியாவின் முதலாவது வானொலி, ஆசியாவின் முதலாவது ரயில் பாதை, தெற்காசியாவின் முதலாவது மிசனறிப் பாடசாலையான வட்டுக்கோட்டை Jaffna கல்லூரி, ஆசிய காலனி நாடுகளின் முதலாவது பரிஸ்டராக சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி, 1931 லேயே ஆசியாவின் முதலாவது ஜனப் பிரதிநிதிகள் சபை, ஆசியாவிலேயே முதலாவதாகச் சர்வஜன வாக்குரிமை, பெண்களுக்கான வாக்குரிமை, தொழிற்சங்கங்களின் தோற்றம் போன்ற இன்னோரன்ன மாற்றங்கள் இலங்கையிலேயே ஏற்பட்டது ஏதும் தற்செயலான நிகழ்வுப்போக்கல்ல.
முதலாவது யுத்தகாலத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பொறிவானது இலங்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 3 லட்சம்பேர் மலேரியாவாற் செத்தனர். மற்றும் பெரியம்மை, வாந்திபேதி, இளம்பிள்ளைவாதம், கசநோய், குஷ்டரோகம் பேன்ற நோய்களால் அழிந்த தொகையோ எண்ணிலடங்காது. எங்கு பார்த்தாலும் எலும்பும் தோலும் புண்ணும் சொறியும் சிரங்குமாகவே மக்கள் காணப்பட்டனர். வறுமை, வீடின்மை, வேலையின்மை என்பது முன்னொரு காலத்திலும் இல்லாததாக இருந்தது. ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஐந்தாறு பிள்ளைகளில் முக்கால்வாசிக்குமேல் இளமையிலேயே மரணமாகி விடும். பிள்ளைகளைப் பெறும் தாய்மார்களில் நூறுக்கு நாற்பது பேர் நஞ்சுக்கொடி விழாமலும், கட்டுப்படுத்த முடியாத குருதிவெளியேற்றம், இரும்புச் சத்துக்குறைவால் நிமோனியா ஏற்பட்டும் மற்றும் தாய்பேறில் ஏற்படும் தொற்று நோய்களாலும் இறந்து விடுவர். சிலவேளைகளில் பிரசவத்தின் போது தாயும் பிள்ளையுமே செத்துவிடுவர். தாய் செத்துப் பிள்ளை தப்புவதும், பிள்ளை செத்துத் தாய் தப்புவதும் சாதாரண நிகழ்ச்சி.
ஒரு பெண் தாய்மைப் பேற்றைப் பெற்றால் அவள் மரணத்திற்கும் உயிர்வாழ்வுக்கும் இடையே ஊசலாடுபவளாகவே கணிக்கப்பட்டு இரக்கத்திற்குரியவளாகவே சமூகத்தில் காணப்பட்டாள். பிரவசங்கள் அதிகமாக வீடுகளிலேயே நடைபெற்றன. பிறக்கும் குழந்தைகளில் கூட நூற்றுக்கு 30 பேர், பிள்ளைப் பராயத்திலேயே இறந்து விடுவர். கல்வி கற்றோர் எண்ணிக்கை 2 வீதம் மாத்திரம்தான். இந்தச் சூழ்நிலையானது மேற்குநாடுகளுக்குப் படிக்கச் சென்ற சிங்களவர்களான பிலிப் குணவர்த்தனா, N.M. பெரேரா, கொல்வின் R.D .சில்வா லெஸ்லீ குணவர்த்தன எஸ்ஏ.விக்கிரமசிங்கா போன்ற மனிதர்களின் சிந்தனையை நெகிழச் செய்தது. அதே நேரத்தில் இச்சம்பவங்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சீ.சுந்தரலிங்கம் போன்றவர்களின் நெஞ்சங்களிலே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தச் சிங்களவர்கள் லண்டனில் வாழ்ந்த பொழுது முதலாம் உலகயுத்த வெளிப்பாடுகள், சோவியத் யூனியன் புரட்சி, ஸ்டாலினிசத்தின் தோற்றம், ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் போன்ற மாபெரும் வரலாற்று நிகழ்வுகளில் அகப்பட்டு நெரிபட்டு மழைக்கு நனைந்து வெயிலில் காய்ந்து தப்பிப் பிழைத்து நாடு திரும்பினர். இவர்கள் சோஷலிசம் தான் சர்வவியாபகமாக பூரண மனித வாழ்வுக்கான வாய்ப்பை வழங்கும் என்பதை எந்தவித ஊசலாட்மின்றி விளங்கி ஏற்றுருந்தனர். அவர்களது ஒளிர்ந்த உள்ளமானது அப்போதிருந்த தேசிய அரசியல்வாதிகள் தமிழர், சிங்களவர், முஸ்லீங்கள் உட்பட பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலனைப் பேணி மக்களின் நலனைத் தாரைவார்த்துக்கொண்டு மக்களோடு எந்தவித ஒட்டோ உறவோ இல்லாமல் வாழ்ந்ததைக் கண்டனர். இவர்கள், இந்த நிலமையைப் போக்க பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை அகற்றி நாடு பூரண சுதந்திரம் அடையவேண்டும் என்பதை மக்களுக்குக் கூறினர். அவர்கள் தமது முதற்போராட்டமாக குழந்தை வேலையை ஒழிக்கவும், நீர்ப்பாசனவரியை நீக்கவும், காட்டிலே விறகு வெட்டக் கூடாதென்ற சட்டத்தை நீக்கவும், ஏகாதிபத்திய சலுகைகளை அகற்றவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும், பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகப் பள்ளிப் புத்தகம் வழங்கவேண்டும் என்றும் மதிய போசனம் இலவசமாக வழங்க வேண்டுமென்றும், விவசாயிகளுக்கு விதை நெல்லு இலவசமாக வழங்க வேண்டுமென்றும், மேய்சல் நிலங்கள் இலவசமாக வழங்க வேண்டுமென்றும், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கவேண்டுமென்றும், வேலைசெய்யும் பராயத்தை எட்டியவர் எல்லோருக்கும் வேலை வழங்க வேண்டுமென்றும், 8-மணித்தியால வேலை நேரத்தை சட்டமாக்க வேண்டமென்றும், காப்புறுதி வழங்க வேண்டுமென்றும், சிங்களத்தையும் தமிழையும் தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், கீழ்க் கோடுகளிலும் பொலீஸ் நிலையங்களிலும் சிங்கள, தமிழ் மொழிகளிலேயே பதிவுகள் நடைபெற வேண்டுமென்றும் அதைப் படிப்படியாக மற்றய அரச திணைக்களங்களுக்கு விஸ்தரிக்க வேண்டமென்றும் எடுத்த எடுப்பிலேயே போராடத் தொடங்கினர்.
நவீன தொழிற்சாலைகளை ஸ்தாபிக்க வேண்டுமென்றும், விவசாயத்துறையை நவீனமயமாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராடினர். விவசாயப் பட்டப்படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்த பிலிப் குணவர்த்தனா பெரிய விவசாயப் பண்ணைகளை நிர்மாணிக்க வேண்டுமென்றும், விவசாய உற்பத்தியில் இயந்திரங்களையும் நவீன தொழில் நுட்பத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் பிரேரித்தார். அவர் பராக்கிரமபாகுவைப் பற்றிய தேசியப் பெருமைகளை விட்டுவிட்டு நவீன தொடர் உற்பத்திமுறையை ஹென்றி போட்டிடம் கற்றுப் பிரயோகிக்க வேண்டும் என்றும் பகீரதப் பிரயத்தனம் செய்தார். பழைய உற்பத்தி முறைகளை விடுத்து ஜப்பானைப் போல உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை இலங்கையில் பிரயோகிக்க வேண்டுமென்று என் எம் .பெரேரா கேட்டுக் கொண்டார். சமசமாஜிஸ்டுகள் கல்விதான் மனிதனுக்குக் கிடைக்கும் மாபெரும் ஐசுவரியம் என்றும் நாடு முழுவதும் புறநீங்கல் எதுவுமின்றி இலவசக் கல்வியை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரத்தியேக ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி என்ற முறையை ஒழித்து நாட்டிலுள்ள முழுப்பாடசாலைகளும் ஆணும்பெண்ணும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலைகளாக்க வேண்டும் என்றும் போராடினார்கள். எல்லாப் பாடசாலைகளையும் அரசுடமையாக்க வேணடும் என்றும், அதன் மூலம் பள்ளி அனுமதியில் பாரபட்சம் அகற்றப்பட வேண்டும் என்றும் போராடினார்கள்.
1940ல் சமசமாஜத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டு கட்சியும் சட்டவிரோதமாக்கப்பட்ட போதுங்கூட அவர்களது தொண்டர்கள் கன்னங்கராவுக்கு உறுதுணையாக இருந்து இலவசக் கல்வியையும் இலவச மதிய போசனம் வழங்குவதையும் ஜனப்பிரதிநிதிகள் சபையில் கொணர்ந்து அமுல் நடாத்த்தினர். அவர்கள் தொழிற்சங்கம் ஏற்படுத்தும் உரிமையைச் சட்டமாக்க வேண்டுமென்றும், மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்கும் குடியேற்றத் திட்டங்களை உடனடியாக ரத்துச் செய்யவேண்டும் என்றும், விவசாயிகளுக்குக் குத்தகை ஏதும் இல்லாமல் விவசாய நிலங்களையும் மேய்ச்சற் தரைகளையும் வழங்க வேண்டுமென்றும் போராடினர். இலங்கையர்கள் பிரித்தானியப் படைகளிலே பயிற்சிக்குப் போவதைத் தடைசெய்ய வேண்டுமென்றும், அப்படிப் பயிற்சிககுப் போவது ஏதிர்காலத்தில் சகோதரர்களை நரபலி வேட்டையாடவே வழி திறக்கும் என்றும் கேட்டுக் கொண்டனர். டி.எஸ் சேன நாயக்கா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வ நாயகம் சீ.சுந்தரலிங்கம் போன்றோர் ‘மேன்மைதங்கிய’ மகாராணிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பிரேரித்த போது காலனி எஜமானர்கள் இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதையும் செய்யவில்லையென்றும் மாறாகப் பாழாக்கியதே வரலாறு என்றும் மகாராணிக்கு விசுவாசமாக இருப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கூறினார். அடிமைகள், அடிமை எஜமானர்களோடு சேர்ந்து எந்த வேலையையும் செய்யக் கூடாதென்றும், அடிமைத்தனத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் ஏகாதிபத்தியக் கொண்டாட்டங்களைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் போராடினார்கள். பிரித்தானிய காலனித்துவத்தை அனுமதித்துக் கொண்டு ஜன நாயகம் பேசுவது கேலிக் கூத்தென்றும் கூறினார்கள்.
1953ல் அரிசி விலையை UNP அரசாங்கம் இரணடு மடங்காகக் கூட்டவே அதை இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் பொதுவேலை நிறுத்தத்திலும் பெரிய போராட்டமான கார்த்தாற் போராட்டத்தால் தோற்கடித்து மக்கள் நலன் பேணினார்கள். 1953 நிகழ்ச்சியானது பாராளுமன்றப் பெரும்பான்மை அரசை பாராளுமன்றத்திற்கு வெளியில் நடாத்தும் வெகுஜன எழுச்சிப் போராட்டத்தால் தோற்கடிக்கலாம் என்று சரித்திரத்தில் நிறுவிக்காட்டிய நிகழ்ச்சியாகும். 1956ல் சமசமாஜவாதிகளின் ஒரு கன்னையான பிலிப் குணவர்த்தனா தலைமையிலான புரட்சிவாத சமசமாஜக் கட்சி பண்டாரநாயக்காவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த அரசாங்கமானது இலங்கையில் கட்டாயக் கல்வியைப் புகுத்தியது. இலங்கை முழுவதும் மத்திய மகாவித்தியாலயங்களை ஏற்படுத்தியது. 18 வயது வரை மாணவர்களைப் பொற்றோர் கட்டாயம் பாடசாலைக்கு அனுப்பவேண்டும், அப்படி அனுப்பாது விடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தது. தனியார் பாடசாலைகளை அரசுடமையாக்கியது. பாலர்வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரைக்கும் கல்வி இலவசமாக்கப்பட்டது. இலவச வைத்திய வசதியை ஏற்படுத்தியது. கருவுற்றது தொடக்கம் மூச்சுவிட மறக்கும் வரைக்கும் வைத்தியம் இலவசம். எல்லோருக்குமே இலவசமாக மருந்துகளை வழங்கியது. சுகாதாரம் என்ற புதிய பாடநெறியைப் பாடசாலைகளில் புகுத்தியது. எல்லோருமே அம்மைப்பால் குத்தவேண்டும் என்பதைச் சட்டமாக்கியது. எல்லோருக்குமே இளம்பிள்ளைவாதத் தடுப்பு மருந்து, பாடசாலைகளில் கொழுக்கிப் புழுப் பேதி மருந்து போன்ற நோய்தடுப்பு நடவடிக்கைகளினால் இறப்பு வீதத்தைப் பாரிய அளவில் குறைத்தது. வெகுசன சுகாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. எல்லா இடமும் டீ. டீ. ரீ மருந்து தெளித்து மலேரியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. மலசல கூட நிர்மாணத்திற்கு பாரிய மானியங்களை வழங்கியது. தாயாகப் போவரைப் பராமரிக்க மருத்துவத் தாதிகளை கிராமம் கிரமமாக அனுப்பியது. கோழிகளுக்கு வரும் பெரிபெரி, படுவான் நேயைத் தடுக்க இலவச ஊசிமருந்து குத்தப் பட்டது. கிராமங்கள் தோறும் ‘சனிற்றறி இன்ஸ்பெக்டர்கள்’ சேவைக்கு அமர்த்தப்பட்டனர். வைத்தியசாலைப் பற்றாமையை டிஸ்பென்சறிகளால் ஈடுசெய்தது. டாக்டர்கள் பற்றாக் குறையை அப்போதிக்கரிகளால் ஈடு செய்தனர். விவசாய போதகர்களை உருவாக்கியது. வடமாகணத்திலுள்ள பெரிய பாடசாலைகள் எல்லாவற்றிலும் விளையாட்டு உபகரணங்கள் குவிந்தன. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிரம்பி வழிந்தன. வாங்கு மேசை கரும்பலகை என்பன வந்த வண்ணம் இருந்தன. கட்டிடங்கள் பெருகின. இப்படியான சமூக சேவைகள் எதிலுமே சிங்களவன் தமிழனுக்கு வஞ்சகத்தைச் செய்யவில்லை. தமிழனுக்கொரு சட்டம் சிங்களவனுக்கொரு சட்டம் இயற்றவில்லை. சிங்களவர் படிக்க வேண்டும், தமிழர் படிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. சிங்களவர் நோயற்றிருக்க வேண்டும், தமிழர் நோயோடு உழல வேண்டுமென்று சொல்லவில்லை.
இதன் பலாபலனாய் சனத்தொகை பெருகியது. அப்பொழுது உலகில் அதிகூடிய சனத்தொகைப் பெருக்க நாடாக இலங்கை விளங்கியது. கிராம ஒழுங்கைகள் எல்லாம் பிள்ளைகள் மின்னலுக்கொன்று முழத்திற்கொன்றென்று பொரித்துக் கீரியும் நாரியுமாகக் கிலுகிலுத்து எங்கு பார்த்தாலும் குழந்தைக் குரல்களின் தேவகானத்தையும் அல்லோகல்லோல கும்மாள நடனத்தையும் இரசிக்கலாம். எழுபதுகளிலே சனத்தொகைப் பெருக்கம் கட்டுக்கடங்காமற்போய் குடும்பக்கட்டுப்பாட்டுப் ‘பிரீதி’ விளம்பரம் வரும்வரை இதே அபிவிருத்தி. இந்த சமூகநலசேவைகள் எல்லாம் ஏதோ மிக இலகுவாகச் சாதிக்கப் பட்ட விடயமல்ல. ஒரு தொகை அரசியல் மற்றும் பொருளாதார வேலை நிறுத்தங்கள், வெகுஜன வேலை நிறுத்தங்கள், எண்ணுக்கணக்கற்ற ஆர்பாட்டங்கள், பொதுவேலை நிறுத்தங்கள், சுவரெட்டிப் போராட்டங்கள், வேலையிழப்புக்கள், சிறைநிரப்புக்கள், கோவிந்தன் கொலையோடு தொடங்கிய கொலைகள், தெருத்தடைகள், இருட்டுக் கொலைகள், தேர்தற்காலக் கொலைகள், சேறடிப்புகள், பொய்பிரச்சாரங்களின் அவமானங்கள், மானபங்க வழக்குகள்,ஒருகொள்ளை கட்சிப் பிளவுகள், நித்திரையற்ற இரவுகள், நிம்மதியற்ற வாழ்க்கைகள், மனஸ்தாபங்கள், சொல்லி மாளாத தியாகங்களைச் செய்தே இவை அத்தனையும் பல தசாப்த பிரயத்தனங்களால் வெல்லப் பட்டன. இவை இரத்தச் சகதியில் தோண்டியெடுக்கப்பட்டு கண்ணீர் வெள்ளத்தால் கழுவியே எமக்குக் கொடுக்கப்பட்டது. ஏதோ முதலாளித்துவம் எதையும் இரங்கி எமக்குக் கொடுக்கவில்லை.
1977 இனக்கலவரம் வரும்பொழுது குழந்தைச் சாவு வீதம் ஆயிரத்திற்கு மூன்று. பிள்ளைப்பெறும் போது ஏற்படும் தாய்மார் மரணங்கள் ஆயிரத்திற்கு ஒன்று. நாடுதழுவிய மாதாந்த கருச்சிதைவு வீதம் பத்துக்குக் குறைவானது. எழுத வாசிக்கத் தெரிந்தவர் தொகை 97 வீதம். சுதந்திரமடைந்த காலத்தைவிடப் பல்கலைக் கழகம் புகத் தகுதியானோர் தொகை 20 மடங்காகியது. அதிகமாக அமைச்சுகளின் நிரந்தரச் செயலாளர்கள், உச்சியிலுள்ள அரச அதிகாரிகள் தமிழர்களாகவே இருந்தார்கள். சிங்களவனே தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய் தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளை பிடியைப் பரிசளித்தான். இதுதான் எங்களது சரித்திரம். இந்த ஏழை ஏதிலிகளின் வாழ்கையை உயர்த்தக் கொண்டுவந்த எந்த சமூநலச் சீர்திருத்தங்களையும் சட்டங்களையும் தமிழர் தலைவர்களான ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் ஆதரியாதது மாத்திரமல்ல அதை எப்பொழுதும் எதிர்த்தே வந்தனர். அநாதைகள், விதவைகள் போன்றோரின் பிச்சைச் சம்பளத்தைக் கூட அவர்கள் ஆதரித்தது கிடையாது. அவர்களுக்குக் கூரை வீடும் கறையான் வேலியும் மரத்தடி மலங்களிப்பும் தெரிந்ததே கிடையாது. தமிழ் நாடடிற்கூட தமிழ் மொழி கட்டாய பாடமில்லை. தமிழ்மொழி சித்தியெய்யாது விட்டால் எஸ்.எஸ்.சியோ , ஜீ.சீ. ஈ யோ சித்தியெய்த முடியாது. பல்கலைக் கழகத்திற்குப் போக இயலாது. அருவரி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தமிழ் மூலம் கல்வி கற்கலாம். இலங்கை நாணயங்களிலும் காசுத் தாள்களிலும் முத்திரைகளிலும் எல்லா அரச அலுவலகங்களிலும் தமிழ் மொழி இடம்பெற்றிருந்தது. இந்தியாவில் இன்றுவரை இதுகளில்லை. தமிழ்நாட்டுக்கு அகதிகளாகப் போன அனேகர் மருந்துக்கும் பள்ளிக்கும் காசில்லையென்று சொல்லியே இலங்கை திரும்பினர். எந்த முஸ்லீம் நாட்டிலுமில்லாத உரிமைகள் இலங்கை முஸ்லீங்களுக்கு இலங்கையிலே இருந்தது. இன்றும் இருக்கிறது.
பிலிப் குணவர்த்தனா 1956ல் விவசாய உணவு கூட்டுறவுச் சபைகளின் மந்திரியாகியதும் பிரசித்தி வாய்ந்த நெற்காணி மசோதா சட்டம் கொண்டு வந்து, நிலவுடமை உச்சவரம்பைக் கொண்டுவந்து, விவசாயிகளின் குத்தகைச் சுமையை நீக்கி காணிகளை அரசுடமையாக்கி வினியோகித்தார். கூட்டுறவுச் சபைகளை உண்டாக்கி சந்தைப்படுத்தலை மேன்மைப் படுத்தினார். கூட்டுறவு வங்கி முறையைக் கொண்டுவந்து அதை மேலும் மக்கள் வங்கியாக மாற்றியதன் மூலம் விவசாயிகளின் பயிர்செய்வதற்கான முதலீட்டுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்தினார். மக்கள்வங்கி முறை ஜேர்மனியைத் தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாகும். தமிழ் ஆயுதமேந்திகள் மக்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து தமிழ், சிங்கள, முஸ்லீம் ஏழை விவசாயிகளின் சொத்துக்களைச் சூறையாடி வாயிலே போட்டனர். கிளிநொச்சி மக்கள் வங்கி உட்படப் பொரும்பாலும் மக்கள் வங்கிகளையும் ஏறத்தாள கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் இருந்த கிராமிய வங்கிகளையும் கொள்ளையடித்தனர். காணிமசோதாவின் சில மாதங்களின் பின் தனியார் பஸ் சேவையைத் தேசியமயமாக்கி போக்குவரத்தது மானியங்களை வழங்கியதன் மூலம் பஸ் கட்டணத்தைக் குறைத்து தொழிலாளர் செலவுச் சுமையைத் தாங்கக் கூடிய மட்டத்திற்குக் கொண்டு வந்தார். அதை அடுத்து துறைமுகங்களை தேசிய மயமாக்கி பிரித்தானிய கடற்தளத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டவரப் பட்டபோதும் சீக்கிரத்திலேயே பண்டா – செல்வா ஒப்பந்த நகல் பிலிப் குணவர்த்தனாவின் முன் முயற்சியால் மாத்திரமல்ல அவரின் வழி காட்டலிலேயே எழுத்தப்பட்டது. எதிர்காலத்தில் 1966 ல் அவர் டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் இருந்தபோதும் கூட ட்ட்லி – செல்வா தமிழ் மொழி விஷேட மசோதாவின் சூத்திரதாரியாகவும் விளங்கினார். அவர் தொழிற்துறை மீன்பிடி இலாகா மந்திரியாக இருந்தபோது தொழிற்துறை அபிவிருத்தி சபையைத் தோற்றுவித்ததோடு சோவியத் யூனியனின் உதவியோடு ரயர் கூட்டுத்தாபனம் மற்றும் உருக்குக் கூட்டுத்தாபனத்தை ஏற்படுத்தினார். ரூமேனிய அரசாங்கத்தின் உதவியோடு பிளைவூட் கூட்டுத் தாபனத்தைப் பெருப்பித்து நவீனமயமாக்கினார். அதனோடு மீன்பிடிக் கூட்டுத் தாபனத்தை அங்குரார்ப்பணம் செய்து செயல்வடிவம் கொடுத்தார். சோவியத் யூனியானோடு ரப்பர் தேயிலைப் பண்டமாற்று ஒப்பந்தத்தைச் செய்து சோவியத் யூனியனிடமிருந்து இயந்திரங்களையும் தொழில் நுட்பத்தையும் மாற்றாகப் பெற்றார். முதலாவதும் கடைசியானதுமான தொழிற்துறைப் பொருட்காட்சி இக்காலத்திலேயே ஏற்பட்டது. அதற்குச் சாட்சி இப்பொழுதுமிருக்கும் பிளானற்றோறியம்.
1962 சிறீமாவோ பண்டாரநாயக்கா கொலைமுயற்சி தோல்வியை அடுத்து அதற்குப் பதிலடியாக இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெளிநாட்டு எண்ணெய்க் கொம்பனிகள் அத்தனையையும் தேசியமயமாக்கியது. அதனால் மண்ணெண்ணைய் விலை குறைந்தது. வறுமை, நோய் போன்ற சகிக்கவொண்ணா விடயங்களில் முந்தய வலதுசாரி அரசியற்தலைவர்கள் எவருமே கரிசனை ஏதும் இல்லாதிருப்பதை அம்பலப்படுத்தினர். எந்த மூன்றாமுலக நாட்டிலும் இல்லாத சமூக நலன்களும் வாழ்க்கைத் தரத்திற்குமான நிதியை இலங்கை எங்கே பெற்றது. அரசுடமையாக்கல் மூலம் எற்பட்ட உற்பத்திச் செல்வங்களையெல்லாம் இந்த ஏழைமக்களுக்காக முதலிட்டது. ஏறுமுகவரியின் மூலம் பெற்ற வரியை ஏழைகளுக்குச் செலவளித்து. முதலாளித்துவ மந்திரிகள் ஊழல்கள் மூலம் கொள்ளையடித்துக் கொண்டுபோய் வெளி நாட்டுவங்கிகளில் கள்ளமாகப் போடுவதைத் தடுத்தது. உல்லாசப் பொருட்டகளையும் மதுவகைகளையும் வாகனங்களையும் இறக்குமதி செய்யாமல் அதற்குப் பதிலாக நோய்தடுக்கும் மருந்துகளை இறக்கியது. உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ததன் மூலம் உள்ளூர் தொழிற்சாலைகளைப் பாதுகாத்தது. இலங்கையின் கல்வித்தரம் வாழ்க்கை தரம் சமூக சேவைகள் தென் கிழக்காசிய மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எந்த நாடுமே இலங்கைக்கு நிகராக அன்று இருக்கவில்லை. இலங்கையை மண்கொள்ளையடிக்க வாய்ப்புகள் இருக்கவில்லை. இலங்கை சமூக நலமுறைகள் இந்திய உபகண்டத்திற்குத் தொத்தும் நிலையிலேயே இருந்தது. எழுபதுகளிற் கூட இந்திய மக்கள் ‘கள்ளத்தோணிகளில்’ இலங்கைக்கு வந்து கொண்டே இருந்தனர். இன்றுகூட இந்தியாவில எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆரம்பப் பாடசாலைகளில் இடங்கிடைப்பதில்லை. அப்படியொரு சொல்லே இலங்கையர்களுக்குத் தெரியாது. இன்றும் கூட இந்தியாவில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் 60 வீதமானோர் தான். இன்றும் கூட அமெரிக்காவில் 90 மில்லியன் ஏழைமக்களுக்கு வைத்தியக் காப்புறுதி கிடையாது. இலங்கையிலே பிறக்கும் போதே வைத்தியக் காப்புறுதியோடேயே மக்கள் பிறக்கின்றனர். இன்றுங்கூட நவலோகா அப்பலோ டெல்மன் வந்துங்கூட இலவச வைத்தியத்தின் முக்கியத்துவத்தை அழிக்க முடியவில்லை. முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில்கூட இலவச வைத்திய சேவை என்பது காணக்கிடைக்காத அதியப் பொருளாகும். இலங்கை அரசோ இலவச உணவு, இலவச மருந்து, இலவசக் கல்வியென்ற சமூகநல அரசாக இருந்ததை ஏகாதிபத்தியங்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. இதனாலேயே ஏகாதிபத்தியங்கள் இலங்கையிலே மீண்டும் சுதந்திர வர்த்தகத்தைக் கொண்டுவரவும் பொருளாதார பாதுகாப்பு வாதத்தை அகற்றவும் தொடர்ந்து பாடுபட்டுத் தோற்றுப் போகவே அவர்கள் மிகத் திட்டமிட்டே இனங்களுக்கிடையேயான யுத்தத்தை கொண்டு வந்தனர்.
இலங்கைச் சமூகநல அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்த அத்தனை சலுகைகளையும் கேடுகெட்ட தமிழ் அரசியல்வாதிகள் தங்களது பொய் பிரச்சாரத்தின் மூலம் மூடிமறைத்தார்கள். இன்றும் இச்சரித்திரம் மறைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவர்கள் இந்த சமூக நலக் காப்புறுதிகளைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டே மற்றய தமிழ்மக்களது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் இன்று இலங்கையின் எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். அவர்கள் பிரித்தானிய, அமெரிக்கத் தூதரகப் படிகளில் ஏறி இறங்கிச் செருப்பைத் தேய்த்து இனவாதத்தால் தமிழர்களை அலரக் குளிப்பாட்டி இன்றைய தமிழர் அழிவுக்கான அத்திவாரத்தையிட்டனர். இன்றுங்கூட இந்தப் பொய்பிரச்சார அத்திவாரத்திலேயே பாசிசப்புலி உட்பட அத்தனை குட்டிமுதலாளித்துவ இயக்கங்களும் மற்றும் தமிழ்த் தேசிவாதத் தத்தாரிகளும் உயிர்வாழ்கின்றனர்.
1977 லே ஜெயவர்த்தனா அரசாங்கம் வந்தவுடன் இறக்குமதித்தடை தளர்த்தப்பட்டு வெளிநாட்டுப் பொருட்கள் வந்து குவியவே நடுத்தரவர்க்கம் “காசிருந்தால் எல்லாம் வாங்கலாம்” என்ற மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தனர். காசில்லாவிட்டால் என்ன செய்வது? கண்ணாடி ஜன்னலால் பார்த்து ‘வின்டோசொப்பிங்’ செய்வது! அன்றைய கொழும்புத் தமிழரின் மாலைநேரக் கடமை காலிவீதியில் உள்ள கண்ணாடிக் கடைகளைப் பார்த்து வீணியூற்றுவது. ஏழைகளுக்கு காசில்லாவிட்டாலும் கூப்பன் கடையில் அரிசி கிடைக்கும். முப்பது வருட உள்நாட்டு யுத்த நிலமையில் வைத்திருந்துங்கூட அவர்களால் பூகோளமயமாக்கலில் உலகச் சந்தைக்குள் புக முடியவில்லை.
மேற்சொன்ன வரலாற்றுப் பின்புலமே திருகோணமலையில் சுதந்திர வர்த்தக வலயத்தை நிர்மாணிக்க வைத்துள்ளது.
திருகோணமலையில் ஏற்படும் சுதந்திர வர்த்தக வலயத்தைச் செயற்பட வைக்க தொடர்ந்து உள்நாட்டு யுத்த நிலை வேண்டும். ஏனெனில் தொழிலாளிவர்க்கம் தான் வறுமையிலிருந்தும் துன்ப துயரங்களிலும் மீண்டு ஓரளவுக்காவது அத்தியாவசி தேவைப் பொருட்களை வாங்கிக் குடும்பம் நடத்தக் கூடிய மட்டத்திறகு சம்பளம் பெறப் போராடாமல் இருக்கமுடியாது. அது அங்கே வரும் ஆசிய முதலாளித்துவத்தை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை. சுதேச முதலாளித்தவத்திற்குப் புகட்டிய அதே பாடத்தை மீண்டும் புகட்டும். புலி தோற்கடிக்கப்பட்டபிறகு போராட்டம் வேறு வடிவத்தில் அமையுமே ஒழிய மக்கள் தமது துன்ப துயரங்களையும் அவலங்களையும் தாங்கி மிதிச்ச புல்லுச் சாகாத சாதுக்காளாக இருக்க சமூக வாழ்க்கை அனுமதியாது. புலியின் தோல்வியானது மேற்குல மூலதனத்தின் ஆதிகத்தை சிலவேளை தடுக்கக் கூடும். ஆனால் ஆசிய மூலதனத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை ஒத்திப்போடவோ பின்தள்ளவோ சமரசப்படுத்தவோ உதவப்போவதில்லை. ஆதலாலேயே பிற்போக்குவாதிகள் புலியைத் தோற்கடிக்க மாட்டார்கள். புலி ஆயுதத்தைப் போட ஒத்துக் கொண்டாலுங்கூட இந்தப் பிற்போக்குவாதிகள் அதை விடப் போவதில்லை. இலங்கை அரசாங்கம் ஓர் அற்ப தீர்வைக் கூட தருவதாக ஒத்துக் கொண்டவுடனேயே மீண்டும் மற்றுமொரு பிரச்சனை தொடங்கிவிடும். ஏதாவது ஒரு தீர்வைத் தாவென்று புலி கேட்டாலே அன்றேல் அரசாங்கம் கொடுக்கும் ஏதாவது தீர்வை ஏற்றாலோ மேலும் புலி உயிர்வாழ மாட்டாது. எந்தத் தீர்வை ஏற்றாலும் புலி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தே தீரவேண்டும். எந்த உரிமையும் வென்றெடுத்த அத்தனை சமூகக் காப்புறுதியையும் பாதுகாத்துக் கொண்டுதான் வெல்லப் படவேண்டும். தன்னை இழந்து உலகத்தை வெல்வதில் அர்த்தமேது. அப்படி இல்லாவிடில் பசியாலும் வறுமையாலும் நோயாலும் வருந்திக்கொண்டு தமிழிலே பேசி தமிழர் வாழும் பூமியிலே அழுந்த வேண்டியதுதான். பாடுபட்டு வென்றெடுத்த சமூகநலக் காப்புறுதிகளைத் தாரைவார்த்து முதலாளித்துவ அசமத்துவ அமைப்புமுறையைப் பேணிக்கொண்டு அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி, இடைக்கால சுயாட்சி அதிகாரம், இந்தியமுறைச் சமஷ்டி என்பதெல்லாம் சுத்த மோசடியாகும்.
இப்படிப் பேசும் கொச்சை ஜனநாயகவாதிகள் தமிழ் மக்களை வியாகூலப் படுத்துபவர்களாகும். மற்றய சமூகங்களோடும் வரலாற்று இயக்கத்தோடும் பின்னிப் பிணைந்த தமிழர் பிரச்சனையை ஏதோ அது ஒரு அரசியல் அமைப்புவாதப் பிரச்சனையாகவே மிக எளிதாக எந்தவித பொறுப்பணர்வுமற்றுக் காட்டுகின்றனர். தமிழ் மக்கள் மேல் மிக ‘இரக்கமுள்ள’ இந்தக் கனவான்களது அரசியலை எதிர்த்து இரக்கமில்லாமலே போராடவேண்டியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு அவமானகரமான அநீதி விழைக்கப்பட்டுள்து, என்பது போன்ற கண்ணியவான் மனப்பாங்கு முதலாளித்துவச் சொற்றொடர்களின் மூலமாக மட்டுமே பிரச்சனையைத் தீர்க்கப் பார்க்கிறார்கள்.தமிழர் விடுதலையென்ற மாபெரும் வரலாற்று நிகழ்வுப் போக்கை, அதனுள் ஏற்பட்ட தொழில்நுட்ப அபிவிருத்திகள், உற்பத்தியையும் வினியோகத்தையம் அணிவகுத்தல், வரலாறு சுமத்திய சம்பிரதாயங்கள், மரபு சுமத்திய மனச்சுமைகள், விஞ்ஞானச் சாதனைகள், நியாயாதிக்கம் சட்டம் போன்ற கருத்தியல்கள், ஒருகொள்ளை மற்றய காரணிகள் மாறிமாறி வினையாக்கம் புரிந்து வர்க்கப் பேராட்டம் என்ற இராட்சதப் போரைத் தணித்தோ அன்றேல் முடுக்கிவிட்டோ நீண்ட நோக்கில் பொருளாத காரணிகளே சமூகநிறுவனத்தை வடிவமைக்கும் நிர்ணயமான சக்திகளாகி விடுகின்றன. மேற்பரப்பிலே ஏற்படும் நிகழ்வுப் போக்கை மட்டும் பாராமல் அதன்கீழே என்ன நோக்குக்கா இச் செய்ற்பாடுகள் நடக்கின்றன, இப்போது நடக்கும் அபிவிருத்திகள் எதிர்கால அபிவிருத்தகளை எவ்வாறு வடிவமைக்கும், எப்பொழுதுமே அடுத்த கட்டத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்து அது எம்மை எங்கே இழுத்துக்கொண்டு செல்லும் என்பதைத் தீர்க்கதரிசனம் செய்து இந்த அபிவிருத்தி நடக்கும் காலத்தை எவ்வாறு சுருக்கலாம் எவ்வாறு விரைவு படுத்தலாம் என்பதைக்கொண்டே எமது உணர்மைபூர்வமான செயல்கள் நடைபெற வேண்டும்.
ஏகாதிபத்தியத்தியத்திற்கு மீளா அடிமையாய் தாமே ஆளகிப்போன இந்த கனவான்கள் சர்வதேச “சமூகம்” என்ற மோசடிச் சொல்லை அடிக்கடி அலுப்புத் தட்டுமளவு உச்சாடனம் செய்கிறர்கள். மேற்கு நாட்டு ஏகாதிபத்தியக் காட்டுமிராண்டிகளை ஈன இரக்கமின்றி ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் குண்டுமழை பொழிபவர்களின் கொடுமையை “சர்வதேசசமூகம்” என்ற சொல்லால் அலங்காரம் செய்து தமிழ் மக்களை மேலும்மேலும் நம்பி ஏமாறச் சொல்கிறார்கள். இவர்கள் அருவமாகச் சொல்லும் சர்வதேச சமூகம் ஸ்தூலமாக பிரித்தானிய, அமெரிக்க யுத்தவெறியர்களாக, ஐரோப்பிய ஏகாதிபத்திய மண்கொள்ளைக்காரர்களாக நிரந்தர தொழிலாளர் விரோதிகளாகத் தான் இருக்கிறார்கள். எந்தக் கலைச் சொல்லையுமே அதன் வரலாற்றுப் பாவனையோடும் சமூக உள்ளடக்கத்தோடும் விஞ்ஞான வியாக்கியானத்தோடுமே விளங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு, ஜேர்மன், ஜப்பான் ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதாவது எந்தநாட்டிலாவது அமைதிப் புறவாகவா செயற்பட்டிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தும் ஏதாவது வரலாற்று ஆதாரங்கள் உண்டா? ஏன் இப்பொழுது பெரிய அரசியல்வாதிகளாக விலாசமெடுத்த இந்தக் கனவான்கள் உலக மண்கொள்ளைக்காரர்களை, யுத்த வெறியர்களை, நாளாந்தம் எதிர்ப்புரட்சியை அடைகாப்பவர்களை அவர்களுக்கே உரிய அரசியற் கலைச்சொல்லால் விழிக்காது தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்தச் செயற்பாடுகள்,ஏகாதிபத்தியம் எதிர்ப்புரட்சியை முற்றாகச் செய்து இலங்கை முழுவதற்கும் பாசிசத்தைப் பரப்ப கால அவகாசம் கொடுக்கும் வழி முறையாகும். அழுகிக் கொண்டிருக்கும் உலகபொருளாதாரத்துக்குள் இலங்கை எவ்வாறு கலப்பது என்பது மாபெரும் பிரச்சனையாகும். சுதந்திர வர்த்தக வலயத்தினுள்ளே நிலைத்த மூலதனம் முடங்கக் கூடும். ஆனால் இயங்கும் மூலதனத்திற்கு கட்டற்ற சுதந்திரம் வேண்டும். இலங்கையிலே பேச்சுரிமை, கூட்டங் கூடும் உரிமை, வேலை நிறுத்த உரிமை என்பதை அனுமதித்துக் கொண்டு சுதந்திர வர்த்தகத்தை நிர்மாணிக்க இயலாது.
யுத்தம் பொருளாதாரத்தைக் கரைக்கும் ஒரு காரணி. அது வர்க்க உறவுகளை விரைவாக மாற்றும் காரணி. கிழக்கு மாகாணத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் ஸ்தாபனமாவதும் போராடுவதும் நிகழ்சி நிரலில் உள்ள விடயங்கள். திட்டமிட்டே புலியினூடு சதி செய்து மாவிலாறு பிரச்சனையைக் கிளப்பி அதைக் சூழவுள்ள மக்களை அவர்களின் விவசாய நிலங்களிலிருந்தும் குடியிருந்த மனைகளிலிருந்தும் கெல்லியெறிந்து, அவர்களது பரம்பரைத் தொழில்களைத் துவம்சம் செய்து, அவர்களை அகதிகாளாக்கி, பட்டினியால் வாட்டி, அவமானத்தோடு அடுத்தவரைக் கையேந்தி வாழும் நிலைக்குத் தள்ளி, தன்மானமும் சுயமரியாதையும் இல்லாதவர்களாக்கி, அவர்களது மகத்தான மானிட ஆளுமையை நசுக்கி, சூதாடிகள் காட்டுத்தர்ப்பார் நடாத்தும் சுதந்திர வர்த்தக வலயத்தில் பிச்சைச் சம்பளத்துக்கும் துட்டுக் காசுக்கும் வேலை செய்வதைத் தவிர வேறொரு மார்க்கம் ஏதும் இல்லாதவாகளாக ஏற்கனவே தயாரித்துவிட்டார்கள். கருணாவும் பிள்ளையானும் ஹக்கீமும் அவர்களுக்கு வாயாலே பால் வார்ப்பதால் அவர்கள் திருப்திப்படப் போவதில்லை. அவர்களது சகிக்கவொண்ணாத துன்பங்கள் அவர்களை ஸ்தாபனப்பட வைத்துப் போராட வைக்கும்.
ஆசிய பொருளாதாரம் வளர்ந்த போதும் ஒட்டு மொத்த உலக பொருளாதாரம் அழுகிக் கொண்டிருக்கிறது. முதாலாளித்துவத்தினதும் எதிர்ப்புரட்சிகளினதும் தாயான அமெரிக்க ஏகாதிபத்தியம் நைஜீரியாவிடம் கடன் வாங்குமளவுக்கு நிலைதாழ்ந்து போயுள்ளது. இலங்கையில் முதலிட இருக்கும் அன்னிய ஆசிய மூலதனங்களைப் பாதுகாக்க எந்தவித ஜனநாயகமும் இல்லாத சூழல் அவசியம். இலங்கையோ வங்கிகளையும் காப்புறுதி நிறுவனங்களையும் அரசஉடமையாக்கிய வரலாற்றைப் படைத்த நாடு. மீண்டும் ஸ்தாபனப்படக் கூடிய சுதந்திரமும் இனந்தெரியாத நபர்களால் கொலைவிழாதென்ற உத்தரவாதமும் பேச்சுச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் எப்போது கிடைக்கிறதோ அன்று அவர்கள் மீண்டும் வீறு பெற்று தமது வர்க்கப்பாஷையால் போல்சவிஷ இலக்கணத்தைப் பேசுவார்கள். இப்பொழுதோ தமிழர் அரசியல்வானில் அதுவும் குறிப்பாக புகலிடத் தமிழரிடையே எந்தவித மூலதர்மமும் இல்லாத அரசியல்வாதிகள் அடிபடையான விடயங்களில் இணங்கிப்போகாதவர்கள் இர ண்டாந்தரப் பிரச்சனைகளில் தற்காலிக உடன்பாடுகளுக்கு வந்து கூட்டாகச் சேருகிறார்கள். எந்தவித பதாகையோ வேலைத்திட்டமோ இல்லாதவர்களுக்குத் தங்களின் கதவுகளை அகலத்திறந்து கொச்சை ஜனநாயக மந்திரத்தால் தாம் ஒரு மாபெரும் சக்தியாகப் போகிறோம் என்று கனவு காண்கிறார்கள். இங்கே நுழைந்த ஒவ்வொரு குழுவும் ஒரே நேரத்திலேயே வெவ்வேறு திசைகளுக்கு இழுக்கப் போராடி அடிச்சுவடே இல்லாமல் அழிவதே நடைபெறும். இப்படியான மேற்குலகில் வாழும் தம்மை ஜனநாயகவதிகள் என்று சொல்பவர்கள் ஒரு கன்னை இந்திய முதலாளித்துவத்தின் வாலிற் தூங்கியும் மறு கன்னை ஐரோப்பிய முதலாளித்துவ வாலிலும் தூங்கி கீழ்நோக்கி வளருகிறார்கள். இவர்களிடையேயான குடும்பிச் சண்டையும் சில்லறைச் சேட்டைகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன. இவர்கள் புலி விழுந்தவுடன் தாம் இலங்கையிலே மாபெரும் ஜனநாயக சூறாவளியை வீசுவோம் என்று கனவு காண்கிறார்கள். புலி விழும்பொழுது இவர்கள் தூள்துகள்களாகிப் பவுடராகிப் பறப்பார்கள். பாசிசப் புலிகளைத் துடைத்தெறிய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களோடு சேரவேண்டுமென்ற அரசியற் தொடக்கமில்லாதவர்கள் மேற்குலக ஏகாதிபத்தியங்களோடு சேர்ந்து தமிழர் உரிமைகளை வெல்ல நினைக்கிறார்கள்.
மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஒரே நேரத்தில் புலிகளையும் புலி எதிர்ப்பாளர்களையும் கையாளத் தொடங்கி விட்டனர். இன்று இனவாத யூ.என்.பியே தனது இனவாத கறையோடு உயிர் தப்ப முடியாதென்பதைக் கண்டுகொண்டு தேசிய காங்கிரஸ் என்ற புதுஅவதாரத்தை எடுத்து தேர்தற் சூரன்போரிலே சிங்களாசூரவதம் செய்யத் துடிக்கும் வேளையிலே ஐரோப்பாவிலே தமிழ்தேசியவாத கொச்சை ஜனநாயகம் பேசுபவர்கள் மிஞ்ச மாட்டார்கள்.
ஜனாதிபதி ராஜபக்ஸ தனது “கிழக்கின் உதயம்” கொண்டாட்டத்தில் கிழக்கில் மின்சக்தி இணைப்புக்கள், பெரும்சாலைகள், போக்குவரத்தை மேம்படுத்தப் பேருந்துகள், வைத்தியசாலைகள் போடுவதற்காக நண்பர்களே வந்து நேரடியாக முதலிடுங்கள் என்று கேட்டுள்ளார். சீனா, ஜப்பான், தென்கொறியா, மலேசியா போன்ற உபரி மூலதனம் உள்ள நாடுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் கன்னி நிலமான கிழக்கில் முதலிடும் சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளது. அதற்குரிய முக்கிய காரணம் சார்க் தெற்காசிய சுதந்திர பொருளாதார ஒப்பந்தத்திற்கு அமைய மீட்சிபெறும் பொருளாதார சக்திகளான இந்தியா, பாகிஸ்தான் ,பங்காளதேசம் போன்ற விலைக்கு வாங்கும் சக்தி வளரும் புதிய சந்தைகளுக்குள் அதனூடு புகுவதற்கு வழி திறக்கும். இந்தியாவோ தனது முற்றத்து நாட்டின் சந்தையைத் தானே தனித்து அனுபவிக்க எங்ஙான்றும் பிரயத்தனப்படும். வர்த்தகம் ஏற்படும் நாடுகளுக்கிடையே யுத்தங்கள் மூள்வதும் பொருளாதார விதியாகும்.
கடைசி ஆய்வில் தமிழீழ யுத்தம் ஏற்பட்டதன் மூலகாரணமும் இதுவாகும். இருந்தபோதும் எண்ணற்ற தற்காலிக வலிப்புகளினூடு மூன்றினக் கலப்புமுள்ள கிழக்கு முன்னேறுவதற்குச் சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கிறது. இருந்தபோதும் ஆசிய பொருளாதாரத்தில் தற்காலிக வளர்ச்சி இருந்தபோதும் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமானது அழுகிக் கொண்டிருக்கிறது. அது பிரதிவிளைவுகளை ஏற்படுத்தாமல் போகாது. முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணமான ஊழல், மோசடி, மண்கொள்ளை போன்ற இன்னோரன்ன தீவினைகள் கிழக்குமக்களை வாட்டி வதைக்காமல் விடப் போவதில்லை. இந்தத் தொடர் அவலங்கள் மத்தியில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக விதைக்கப்பட்ட என்.ஜி. ஓக்களின் தயவில் கிழக்கு மக்களை அனாதரவாக விட்டுவிடக் கூடாது. மாக்ஸ்சியவாதிகள் நிபந்தனையின்றி எப்பொழுதுமே கிழக்கு மக்களின் பக்கமே நிற்க இப்பொழுதே தயாராக வேண்டும். கிழக்கு மக்களின் வரலாற்று நலனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, வேறொன்றையும் அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திர வர்த்தக வலையத்தை ஆதரிப்பதும் அதை எதிர்ப்பதும் அமைய வேண்டும். கட்டாயம் அமையப் போகும் பாடசாலைகள் தனியார் பாடசாலைகளாகவும், வைத்திய சாலைகள் நவலோகா அப்பலோ டெல்மன் போன்ற காசு ஆஸ்பத்திரிகளாகவே அமையும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். கிழக்கு மக்களின் இந்தத் தேவைகளை இட்டுநிரப்பக் கூடிய மட்டத்திற்கு என்ஜிஓக்கள் கொடுக்கும் பிச்சையால் மட்டும் ஏற்படப் போவதில்லை. சீனாவிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ ஒரு சின்ன என்ஜிஓ கூட கிழக்கில் இல்லாததே இந்த புதிசாக டை கட்டின கனவான்களின் ஏகாதிபத்தியத் திருத்தொண்டை ஊகிக்க உய்த்தறியப் பொதுமானது. லட்சக் கணக்கில் குழந்தை குட்டிகளோடு தவிக்கும் கிழக்கு மக்களுக்கு நிரந்தர வேலைக்கான உத்தரவாதம் வந்து, அவர்களது விலைக்கு வாங்கும் சக்தியும் சராசரி ஆசிய மக்களது மட்டத்திற்கு வரும் வரையும் தப்பிப் பிழைப்பதற்கும் நாகரீகத்தில் முன்னேறுவதற்குமாக இடைமருவு வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்து அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இப்பொழுதே தயாராக வேண்டும். போடப்போகும் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு அங்கே தொழில் வாய்ப்புப் பெற்று அதன்மூலம் கண்ணியமான வாழ்க்கையை தாமே உழைத்து நடாத்தும் சக்தியைப் பெறும் வரை அரசாங்கம் போதுமான சமூக சேவை நிதி அளிக்க இப்பொழுதே வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
என் ஜி ஓக்களின் ஏமாற்று வித்தைகளிலே பலியாகக் கூடாது. முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒருபொழுதுமே சொன்ன சொல்லைக் காப்பாற்றாது என்ற சர்வவியாபக விதியை ஒரு கணமும் மறக்கக் கூடாது. அதனோடு சேர்த்து ஊழல் இல்லாத முதலாளித்துவ ஜனநாயகம் என்பது உலகில் இருந்ததில்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இவை சோஷலிசப் புரட்சிக்கு முன்பான முதலாளித்துவ ஜன நாயக வேலைத்திட்டங்களாகும். ஸ்தாபனப் பட்டுப் போராடத் தயாராக இல்லாது விட்டால் முதலாளித்துவம் எந்த மட்டத்திற்குக் கசக்கிப் பிழிய முடியுமோ அந்தளவுக்குப் பி ழியும். மீண்டும் புலிப்பாசிசம் தனது கொரில்லா தாக்குதல் மூலம் குழப்பங்களை ஏற்படுத்தாமல் தடுப்பதற்காக போதிய கண்காணிப்புக் குழுக்களையும் பாதுகாப்புக் குழுக்களையும் ஏற்படுத்தத் தவறக் கூடாது.
ஒட்டு மொத்த சமூகத்திற்கும் எந்த ஆத்திரமூட்டலுக்கும் அடிபணிந்து அள்ளுப்படாமல் இருக்கத்தக்க அரசியல் உணர்மையை ஏற்படுத்த வேண்டும். புலிப் பாசிசத்தினதும் மற்றும் பிற்போக்குவாதிகளதும் மாபெரும் அரசியல் ஆயுதம் திட் டமிட்ட ஆத்திரமூட்டல்களாகும். இதுபற்றி உணர்மையடையாமல் இருப்பது அனுபவ மறுப்பும் துரோகமும் ஆகும். உழைப்பே மானிட சாராம்சமாதலால் நிர்மாணிக்க இருக்கும் புதிய தொழிற்சாலைகளிலே இயந்திரங்களையும் கணனிகளையும் இயக்க வல்ல நவீன தொழிற்கல்வியை எல்லா வயதுவந்த இளைஞர்களுக்கும் அளிப்பதற்காக தொழிற்கல்வி நிலையங்களையும், தொழிநுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் வளாகங்களையும், வங்கி வர்த்தக கற்கை நெறிகளையும் நவீன நூல் நிலையங்களையும் தேவையான விடுதிகளையும் ஏற்படுத்த, இப்பொழுதிருந்தே அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக, இப்பொழுதே கிழக்கின் முற்போக்கு மற்றும் இடைமருவு வேலைத்திட்டங்களைத் தமது அரசியற்கொள்கையாகக் கொண்ட சோஷலிச அரசியற் கட்சிகளையும் இளைஞர்கள் சங்கங்களையும், விவசாயிகள் சங்கங்களையும் மீனவர் சங்கங்களையும் மாணவர் சங்கங்களையும் மாதர் சங்கங்களையும் வயோதிபர் சங்கங்களையும் ஊனமுற்றோர் சங்கங்களையும் விதவைகள் சங்கங்களையும் தாமதமின்றிப் படைக்க வேண்டும். அனாதைக் குழந்தைகளைப் பராமரிப்பதையும் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதையும் இனக்கலப்பையும் அளவுகோலாக வைத்துக்கொண்டே கிழக்கு மக்களின் நாகரீகத்தையும் நன்நடத்தைகளையும் எடைபோட வேண்டும். ஸ்தாபனமே பலம் என்பதையும் தனிமனிதவாதமும் தனித்துவம் பேணலும் சாபக்கேடென்பதை மறந்துவிடக் கூடாது. விவசாயிகள் கூட்டுறவு அடிப்படையிலே விவசாய நிலங்களைப் பெரிதாக இணைத்து இயந்திரங்களதும் விவசாய இரசாயனத்தின் துணையோடும் இயங்கும் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரியவிவசாயப் பண்ணைகளையும் பதினிடும் தொழிற்சாலைகளையும் நிர்மாணிக்க முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். சந்தைப்படுத்தலுக்கான லொறிகளையும் தானியச் சேமிப்புக்களுக்கான பாதுகாப்புக் கிட்டங்கிகளையும் இப்பொழுதே சிபார்சு செய்ய வேண்டும். மீனவர்கள் மீன்பிடி கூட்டுறவுச் சபைகளைத் தோற்றுவிக்கவும் இறால் வளர்ப்புப் பண்ணைகளையும் நிர்மாணிக்க இப்பொழுதே பிரயத்தனப் பட வேண்டும். ஆழ்கடல் அதிஷ்டத்தை பெற்ற இந்த மீனவ மக்கள் தங்களுக்கு இயற்கை கொடுத்த அந்த வளத்தை தங்களது முன்னேற்த்திற்காகப் பயன்படுத்தாது விடுவது மாபெரும் கொடுமையாகும். தமது எந்தப் பிரச்சனைகளையும் களோடு கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் மற்ற மக்களது பிரச்சனைகளைத் தமது சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கரிசனையாகவும் விசுவாசமாகவும் விடாமுயற்சியோடும் போராடும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்களை விடச் சிறந்த நண்பர்கள் கிழக்கு மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதேநேரத்தில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளை நம்பாமல் விடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் கட்டாயம் ஏமாற்றுவார்கள். மாக்ஸ்சியவாதிகள் உலக சோஷலிசம் என்ற இயலுலக சொற்கத்தைப் படைப்பதற்காகப் பரம்பரை பரம்பரையாகப் போரடுபவர்கள். மாக்ஸ்சியவாதிகள் மாத்திரம்தான் உலகின் மிகமிகச் சரியான சக்திவாந்த தத்துவத்தால் வழிகாட்டப் படுபவர்கள். அவர்களின் எண்ணிக்கையும் சடத்துவ பலமும் குறைவாக இருந்த போதும் அவர்களிடமே சரியான தத்துவம் உள்ளது. சமூக நடைமுறைகளுக்கு சரியாக வழிகாட்டக் கூடிய தத்துவத்தைக் கொண்ட அவர்கள், தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தத் தெரிந்தவர்கள். ஆதலால் அவர்கள் தூர நோக்கில் வெற்றிவாகை சூடுவது திண்ணம்.
//…நோயா துன்பம்? மருந்தா துன்பம்?•..//
முதலாளிக்கா பசி? தொழிலாளிக்கா பசி?
//..சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்!..//
சோசலிச ரஷ்யா சமதர்மம் திணித்தான். கொமினிச சீனா பொருளாதார வளங்கள் திணித்தான். கியூபாவோ வீரமிகு போராட்டமுறை திணித்தான். தமிழனோ ரஷ்யா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கும், சீனா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கும் கியூபா ஊடாக கனடாவுக்கும் சென்று சோசலிசம் பேசுவதும் பிள்ளைகளை அமெரிக்க ஜோன் ஹொப்கின்ஸில் சேர்ப்பதற்கும் அலைகிறான். இதுதான் எங்கள் சரித்திரம்!!!!!
ரூபன்
நீ கதைக்கிறதை யோசிச்சுகதை.
தலைவர் தன்ர பிள்ளையள சொகுசு வாழ்க்கைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பேல்ல. போராடத்தான் அனுப்பியருக்கிறார். பார் சாள்ஸ் அன்ரனியை. தமழீழவிமானப்படைக்கு தலைமைதாங்கிற திறமை எப்படி வந்தது. வன்னியிலிருந்து சாத்தியமாயிருக்குமா?
காந்தன்,
யோசிச்சுத்தான் கதைக்கிறன்.
இங்க தலைவற்ற மகன் இல்லை பிரச்சினை.
புலியை வச்சு ஒப்பாரி வக்கிறவை தான் பாரும் விடிய எழும்பினவுடன சத்தி எடுக்கிறவ. மற்றது தமிழீழ விமானப்படை எண்டு வேற சொல்லுறியள். கேக்க நல்லாத்தான் கிடக்கு. நீங்களே அவங்களுக்கு நல்ல கிறடிற் குடுக்கிறியள்!!!!
ஆனந்த சங்கரி ஐயாவோ ‘வாணவீடிக்கை’ எண்டு சொல்லி ஜோக்கடிக்கிறார். நான் நினச்சன் தலைவற்ற மகன் வாண வேடிக்கை கொம்பனியில சேந்திட்டானாக்குமெண்டு.
முந்தி இப்படித்தான் தலைவர் பொடியன வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டார் எண்டு அழுதாங்கள். இப்ப என்னடா எண்டால் அவன் திரும்பி வந்து விமானப்படையில சேந்திட்டான் எண்டுறாங்கள்! ஒப்பாரி வக்கிறதே வேலையாப்போச்சு. இது ஒண்டும் புதிசில்லை. முந்தி இப்பிடித்தான் “அரசியல் வகுப்பு” எண்டு கூட்டிக்கொண்டு போய் சொலுரது முழுக்க புலிப்பாட்டு தான். புலி தனியாரை கொள்ள அடிக்குது நாங்கள் மட்டுந்தான் எங்கட ஏழ்மையை காட்ட தாடிவளக்கிறம் எண்டாங்கள். கொஞ்ச நாளில அது சரிப்பட்டு வராது எண்டு தெரிஞ்சு தாங்களும் தொடங்கினாங்கள். கேட்டால் புலி செய்யேல்லயே எண்டு மறுத்தான் விட்டாங்கள்.
காந்தன்,
இங்க பிரச்சனை புலியோ, தலைவரோ, அவற்ற மோனோ இல்ல பாரும். எங்களுக்கு உபதேசம் பண்ணிறவதான். நான் கேட்ட கேள்விக்கு நேர பதில் சொல்லுறத விட்டிட்டு அங்க இங்க ஏன் ஒடுறியள். கொமன்ற் விளங்கேல்ல எண்டால் திரும்மிப்போய் வாசியுமன். நீங்கள் குடுத்த 700 , 800 பக்க புத்தகங்கள் வாசிச்சு விளங்கினம் தானே. ஏன் உமக்கு 4 வரி கொமென்ற் விளங்க மாட்டேன் எஙிறியள்.
‘ஜோன் கொப்கின்ஸ்’ பற்றி தெரியுமே? தெரியாட்டி கட்டுரைக்காறனிட்ட கெளும். உலக நடப்பெல்லாம் தங்கேற்ற மாதிரி திரிக்க தெரிஞ்சு வச்சிருக்கிறார். இது கட்டாயம் தெரிஞ்சு இருக்கும்!!!!!
ரூபன்
புலியிட்ட காசுவாங்கிக்கொண்டு கூலிக்கு வேலை செய்யிறதுமாதிரி அலம்பவேண்டாம்.
உலக நடப்புகள திரிக்கினம் எண்டு சொல்லுறியள்
அதை பற்றி விரிவா எழுதினியள் எண்டா நாங்களும் ஏதோ ஒண்டுரெண்டு விசயம் தெரிஞ்சமாதியும் இருக்கும்.
மோஸஸ்,
காசுவாங்கி கூலி வேலை செய்யிறது எங்கட தொழில் இல்லை. ரஷ்யாவிலிருந்தும், நவசீனாவில் இருந்தும் ஆராருக்கு காசுவந்த தெண்டு உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். புலிக்கு இலவசமாக வேலை செய்ய உலகத்தில பல பேர் இருக்கினம் எண்டு உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. ஆனால் அரசாங்கத்திடம் காசுவாங்கிறம் எண்டு ‘தோழரே’ சொல்லிப்போட்டார்.
அலம்புவது நானில்லை அழகலிங்கம் அன் கோ தான். வேணுமெண்டால் ‘சத்தியக்கடதாசி’ யில வந்த அவரின்ர ‘ஆக்கங்களை’ திரும்பவும் போய் படியுங்கோ.
விரிவா எழுதி பக்கங்களை வீணாக்கத்தேவை இல்லை.
உங்களுக்கு நறுக்காக எழுதினால் விளங்காதெண்டு எனக்குத்தெரியும். ஏனெண்டால் கட்டுக்கட்டா நோட்டீஸும் , ரஷ்யநட்புறவுச் சங்கத்தில அஞ்சு றாத்தல் பாரம் உள்ள புத்தகங்களும் வாசிச்சு தெளிவடஞ்சநீங்கள் தானே. இப்பெல்லாம் பேப்பரும் பெனையும் மையும் வீணாக்கத்தேவையில்லை. முதலாளித்துவ நாடுகள் கண்டுபிடிச்ச ‘இன்ரநெற்’ இருக்கு, கொம்பியூட்டர் இருக்கு எழுதித்தள்ளலாம்!!!!!
உலக நடப்புகளை திரிக்கிற விசயம் எண்டேக்கதான் எனக்கு கியூபா, வெனிஸுவெலா பற்றி விட்ட கதை நினைவுக்கு வருது.
உங்களுக்கு வரேல்ல எண்டா நான் சொன்ன அலுவலை செய்யுங்கோ!!!!!
இப்பிடித்தான் பாருங்கோ எங்கட தோழர் அமைப்புக்கள் கொஞ்சம் ‘இணைந்து”அரசியல் வகுப்பு’ எடுத்தவை. புலி அப்ப ஒரு நோட்டீஸ் விட்டது போராட்டம் முடிய தேர்தலெண்டு. அதை நக்கலடிச்சு கதைச்சினம். போராட்டம் முடிந்ததும் அஞ்சுவருசம் தேர்தலே இல்லை சமூக சீர்திருத்தம் தான் எண்டு சொல்லிச்சினம்.அதில தமிழீழம் ஒரு சோசலிச நாடாக மலரும் எண்டவை. அடுத்த வசனம் ‘புலிகளில் உட் கட்சி ஜனநாயகம்’ இல்லை எண்டினம். அப்ப நான் கேட்டன் ஐசே ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்கும் என்ன தொடர்பு, மக்களுக்கு ஜனநாயகமில்லை அஞ்சுவருசம் தேர்தலில்லை ஆனா ஏன் அதை புலிக்குள்ள எதிர்பாக்கிறியள் எண்டு. அவரும் உடன உங்கள மாதிரித்தான் கேட்டார் அனா என்ன காசுக்குப்பதிலா ‘கசிப்பு’ எண்டார்.
விரிவா கேக்க முதல் என்ர முதலாவது பின்னூட்டத்தில இருக்கிற பொயின்ற் பிடிபட்டதே, ஜோன் கொப்கின்ஸ் கதை அறிஞ்சனியளே????????????
/*நோயா துன்பம்? மருந்தா துன்பம்? – வ.அழகலிங்கம்/*
கடந்த வாரம் ஆறுமுகம் தொண்டமான் அரசில் இருந்து விலகினார். காரணம் ஜனாதிபதியின் சகோதரர் திரு.முத்து சிவலிங்கத்தை ‘பறைத்தமிழன்’ (பற தெமிளோ) என ஏசி விரும்பினால் ராஜினாமா செய் என வெற்றுக்காகிதத்தையும் பேனாவையும் முகத்தில் எறிந்தார். அவர்களும் ராஜினாமா செய்துவிட்டனர்.
தமிழனுக்கா துன்பம்? சிங்களவனுக்கா துன்பம்?
அழகலிங்கம் தெளிவு படுத்துங்கள்! தொழிலாளர் காங்கிரசும் தொண்டமானும் முதலாளித்துவ அடிவருடிகள் என திருப்பிப்போட வேண்டாம். அதை ஏலவே ‘பாசிசப்புலி’கள் செய்துவிட்டனர்.
ரூபன்
உங்கள் மதிப்பு வைச்சுத்தான் அந்தகேள்வியைகேட்டனான். திரும்பவும் கேக்கிறன் கட்டுரையாளர் வ.அழகலிங்கம் தங்களுக்கு ஏற்றமாதிரி திரிச்ச விசங்கள் என்ன? கட்டுரையை விட்டு வெளியில போனால் அது அலம்பல் அல்லது கொசிப்பாத்தான் இருக்கும். தயவு செய்து பதில்தாருங்கள். உங்கள் பதிலுக்கூடாகவாவது அழகலிங்கம் என்னசொல்லிருக்கிறார் எண்ட தெளிவு எங்களுக்கு கிடைக்கும்.
மோஸஸ் ,
எங்களில் ஒரு மதிப்பும் நீங்கள் வைக்க வேண்டாம்.
அழகலிங்கம் எழுதிய G-8 கட்டுரையையும் மேற்கண்ட கட்டுரையையும் திரும்பவும் வாசிக்கவும். திறந்த மனத்துடன் அவரின் விமர்சனங்களை ரஷ்யாவின் ‘திருவிளையாடல்’ களுடன் ஒப்பீடு செய்யவும். எல்லாவற்றுக்கும் தீர்வு சோசலிசத்தில் தான் உள்ளது என்றால் ஏன் சோசலிசம் தாக்குப்பிடிக்க முடியவில்லை என எமக்கு விளக்கவும். அத்துடன் ‘ஜோன் கொப்கின்ஸ்’ பற்றையும் அவரிடம் அறியவும். மற்றும் ஏன் சோசலிச வாதிகள் மேற்கு ஜேர்மனி (கிழக்கு ஜேர்மனியூடாக) வந்தனர் எனவும் சொல்லவும்.
அடங் கொக்காமக்கா
அழகலிங்கத்தின்ர கட்டுரைவிளங்கினா உன்னட்டை ஏன்ரா கேக்கிறன். ஒருதர் பிழையா கருத்துவைச்சிருக்கிறதும் திரிக்கிறதும் ஒண்டில்ல. அழகலிங்கம் கட்டுரையில திரிச்ச விசயத்தை எழுதச்செல்லிகேட்டால்..
‘ஜோன் கொப்கின்ஸ்’பற்றி கொசிப் அடிக்கத்திரியிறாய்..
/*1962 சிறீமாவோ பண்டாரநாயக்கா கொலைமுயற்சி தோல்வியை அடுத்து அதற்குப் பதிலடியாக இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெளிநாட்டு எண்ணெய்க் கொம்பனிகள் அத்தனையையும் தேசியமயமாக்கியது. அதனால் மண்ணெண்ணைய் விலை குறைந்தது. வறுமை, நோய் போன்ற சகிக்கவொண்ணா விடயங்களில் */
சரி..குறைஞ்ச விலை ஏன் சிறீமா ரைமிலையே ஏறினது?
மற்றது கொலைமுயற்சியை அடுத்துத்தானோ செய்யவேணும்? ஏன் உண்மையான அக்கறை என்டால் முதலிலேயே செய்திருக்க வேண்டியதுதானே? மற்றது அண்ணை கொலைமுயற்சி அடுத்து கிறிஸ்தவரை படைகளில் இருந்தும் தலைமைப்பதவியில இருந்தும் அகற்றினது மட்டுமில்லாமல் தொடர்ந்தும் அதே விலக்கல் முறையை கடைப்பிடித்ததும் கொமினிச விருப்பத்தில எண்டு ஏன் திரிக்கிறியள்.
இது சும்மா ஒரு சாம்பிள் தான். மற்றது ஜோன் கொப்கின்ஸ் திரிப்பு பற்றி அவருக்கே தெரியும்.
ஊருக்கு கொமினிசம் உனக்கல்லடி மகளே!!!!!
/*இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெளிநாட்டு எண்ணெய்க் கொம்பனிகள் அத்தனையையும் தேசியமயமாக்கியது. அதனால் மண்ணெண்ணைய் விலை குறைந்தது. வறுமை, நோய் போன்ற சகிக்கவொண்ணா விடயங்களில் …*/
மகள் சந்திரிகாவுக்கு ‘ஸோபோர்னில்’ அட்மிசனும் கிடைத்டது…
/*இலங்கையின் இலவசக் கல்வி, இலவச அரிசி , இலவச வைத்திய வசதி போன்ற சமூகநலக் காப்புறுதிகளை அகற்றும்படி உலகவங்கி, சர்வதேச நாணயசபை, மற்றும் ஏகாதிபத்தியங்கள் சிறீமாவோ பண்டாரநாயக்க இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து பல பொருளாதார நெருக்குவாரங்களைக் கொடுத்தது. அதன் பலாபலனாய் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி கிளர்ச்சியும், பாண் கியூவும் பட்டினிச்சாவும் ஏற்பட்டது…*/
அடேங்கப்பா…புல்லரிக்குது…இரவல் கொடுத்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா???
ஏன் சோசலிச ரஷ்யாவோ செஞ்சீனாவோ உலகவங்கி, சர்வதேச நாணயசபை மூஞ்சியில் தூக்கி எறிந்திருக்க வேண்டியது தானே???
அண்னை அழகலிங்கம் பாணுக்கு வாற மாச்சாக்கில ‘அமெரிக்க மக்களின் அன்பளிப்பு’ எண்டுதான் எழுதி இருக்கிறதண்ணை. நான் ஒரு நாளும் ரஷ்யா, சீனா பெயர் பாக்கேல்ல அண்ணை.
அந்த மாவையும் ஒழுங்கா யாழ்பாணம் அனுப்பாமல் இழுத்தடிச்சு அது புழுப்பிடிச்ச பிறகுதான் அண்ணை அனுப்புறவ சோசலிச் சகோதரி ஸ்ரீமா அம்மையார். அண்ணை ஒரு கொழும்பான் சொன்னான் எடே நல்ல மா மலிபன் முதலாளிக்கு போறது ஸ்ரோரில கிடந்து புழுப்பிடிச்சதை உங்களுக்கு அனுப்புறவ சிறீமா எண்டு.
உதுக்கெல்லாம் ஏனண்ணை உலகவங்கி, சர்வதேச நாணயசபையை இழுக்கிறியள்?????
திரிக்கேக்க வடிவா திரியுங்கோ…7ம் வகுப்பு சமூகக்கல்வி புத்தக திரிப்பு திரியாதயுங்கோ…..
/*அழகலிங்கத்தின்ர கட்டுரைவிளங்கினா உன்னட்டை ஏன்ரா கேக்கிறன்….*/
உண்மை தான் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. எனக்கு மாத்திரந்தான் அழகலிங்கத்தாற்ற கதையள் விளங்கேல்ல எண்டு நினச்சன். பாத்தா எல்லாருக்கும் விளங்கேல்ல எண்டு தெரியுது. நானென்னவோ எனக்குத்தான் மண்டேக்க இல்ல எண்டு நினச்சன். இப்பா தான் சந்தோசமா கிடக்கு…..
இன்னுமொண்டு சொல்லுங்கோ அண்ணை.( 30 வருசத்துக்கு பிறகு)
ராணுவம் கடலில மீன்பிடிக்க தடை போட்டதால மீன்வளங்கள் பாதுகாக்கப்பட்டு அடுத்த சந்ததியினருக்கு அளிக்கப்பட்டதெண்டு. கேக்க நல்லா இருக்கும். அதையும் ராணுவத்தின்ர (ஏழை ராணுவம் எண்டியள் எண்டால் இன்னும் இனிக்கும்) உதவியோட உலகவங்கி நோர்வே செய்தது எண்டு விடுங்கோ. பக்கம் பக்கமாக எழுதலாம்.,,,,
/..உலகவங்கி, சர்வதேச நாணயசபை, மற்றும் ஏகாதிபத்தியங்கள் சிறீமாவோ பண்டாரநாயக்க இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து பல பொருளாதார நெருக்குவாரங்களைக் கொடுத்தது. அதன் பலாபலனாய் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி கிளர்ச்சியும், பாண் கியூவும் பட்டினிச்சாவும் ஏற்பட்டது…./
அப்பிடியா அழகலிங்கம் அண்ணை?
எண்டால் இப்ப ஏனண்னை ஜே.வீ.பி புரட்சி செய்யேல்லை? இப்ப உலகவங்கி, சர்வதேச நாணயசபை, மற்றும் ஏகாதிபத்தியங்கள் சரியான அலுப்பு குடுங்கிறாங்கள் அண்ணை. உங்களுக்கும் மோசசுக்கும் விளங்காமல் இருக்கலாம் ஆனா எங்களுக்கு விளங்குமண்ணை. உது ஒண்டும் உலகவங்கி, சர்வதேச நாணயசபை, மற்றும் ஏகாதிபத்தியங்கள் பறியதில்ல அண்ணை எல்லாம் தமிழனுக்கு அடிக்கிறது தான் அண்ணை. இல்லையெண்டால் சொல்லுங்கோ. நீங்கள் சொல்ல மாட்டியள் எண்டால் மோசஸ் இட்ட சொன்னால் அவர் சொல்லுவார்.
திரிக்கேக்க வடிவா திரியுங்கோ அரைகுறையா திரிக்காதயுங்கோ. சங்கரியார் மாதிரி திருகையில இருந்து அரைகுறையா விளபோறியள்,,,,,,,,,,
/சோசலிசம் பேசுவதும் பிள்ளைகளை அமெரிக்க ஜோன் ஹொப்கின்ஸில் சேர்ப்பதற்கும் அலைகிறான். இதுதான் எங்கள் சரித்திரம்!// ரூபன் சோசலிசம் பேசிக்கொண்டு அழகலிங்கம் தனது பிள்ளையை அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சேர்த்திருக்கிறார் என்ற தொனிப்பட நீங்கள் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். சோசலிசம் பேசிக்கொண்டு அமெரிக்காவில் பிள்ளையைப் படிப்பிப்தோ மேற்கு முதலாளிய நாடுகளில் தஞ்சம் கோருவது சரியா தவறா என்பது பற்றி நீங்கள் விவாதிக்க சத்தியக்கடதாசி உங்களுக்குத் தொடர்ந்து களம் தரும். ஆனால் உங்கள் விவாதித்தில் நீங்கள் குறிப்பிடும் தகவல் முற்றிலும் தவறானது. அழகலிங்கத்தின் பிள்ளைகள் இருவரும் ஜேர்மனியல்தான் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மகள் மருத்துவ பீடத்திலும் 16 வயதான மகன் பள்ளியிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் ஜெர்மனிய கல்வித்துறையால் ஒரு சிறிய காலத்திற்கு ஜோன் ஹொப்கின்ஸிற்கு பயிற்சிக்காக அனுப்பட்டதில் நீங்கள் என்ன தவறைக் கண்டு பிடித்துவிட்டீர்கள்? அழகலிங்கத்தைத் தாக்குவதற்கு அந்தச் சிறுவன் தானா உங்களின் துருப்புச் சீட்டு? கவலையாயிருக்கிறது!
கட்டுரைகளைப்ப படிக்காது விமர்சனம் செய்கிறஅநியாயம் எழுத்துலகில் நிறைய உண்டு. குறிப்பாக இணையங்களில் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் விட்டுக்கொண்டு. ஆனால் ரூபன் படித்து கருத்துச்சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
புலி எதிர்ப்பாளர் என்ற ரீதியில் அழகலிங்கத்தை ரூபனுக்குபிடிக்காமல் போனதில் ஒரு காரணமிருக்கு. பரவாயில்லை. மார்கசியத்தை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார் என்று புரியவில்லை. மார்க்சியத்தின் நடைமுறைபற்றி அல்லது வரட்டுத்தனம் பற்றி கேள்விகள் எழுப்பலாம். ஆனால் மனிதநேயத்த்துவமான மார்க்சியத்தின்மீது ஏன் இவ்வளவு காழ்ப்பு?
நூறுவீதமான சரியென்று எதுவுமில்லை. இருக்கவும் முடியாது. ஒப்பீட்ளவிலான கணிப்புகளோடுதான் ஓடமுடியும். இலங்கையில் சிறிமா அரசாங்கம் ஒன்றும் பரட்சிகரமான அரசாங்கமோ> சிறிமா சந்திரிகா புரட்சிப்பூக்களோ அல்லஎன்பதும் சராசரி அறிஜீவிக்கே தெரியக்ùடிய விடயம். ஆனால் சிறிமா> இடதுசாரிக்கூட்டரசாரங்கம் சில நல்லநோக்கங்கள கொண்டிருந்தது என்பதையாவது நாம் ஏற்க மறுத்தல் எம்மிடமுள்ள இனவெறியின் வெளிப்பாடே.
/*புலி எதிர்ப்பாளர் என்ற ரீதியில் அழகலிங்கத்தை ரூபனுக்குபிடிக்காமல் போனதில் ஒரு காரணமிருக்கு. பரவாயில்லை. மார்கசியத்தை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார் என்று புரியவில்லை. மார்க்சியத்தின் நடைமுறைபற்றி அல்லது வரட்டுத்தனம் பற்றி கேள்விகள் எழுப்பலாம். ஆனால் மனிதநேயத்த்துவமான மார்க்சியத்தின்மீது ஏன் இவ்வளவு காழ்ப்பு?*/
எனக்கு காழ்ப்பு இல்லை, மாறாக மாக்ஸ் மீதான அதீத பற்றுத்தான் காரணம். மாக்சிஸ்டுகள் உலகை அடக்குமுறைகளில் இருந்து விடுவிக்க கைகொடுப்பர் என்பதில் அதீத நம்பிக்கை வைத்திருந்தவன் நான்.
அது கண்முன்னே நொறுங்கியபோது மார்க்ஸ் அவர்கள் காரணமில்லை அவரை வைத்து ‘பம்மாத்து’ காட்டுவோரே காரணம் என்பது ஈழப்போர் விடயத்தில் அறியவந்தது. அது அன்றைய கொல்வின்.ஆர்.டி.சில்வாவில் இருந்து இன்றைய புலிஎதிர்ப்பாளர்வரை மாறவில்லை.
வரலாற்றில் உள்ள சமுக , கலாச்சார , அரசியல், பொருளாதாரத்தின் தற்செயலானதும் திட்டமிடப்பட்டதுமான நிகழ்வுகளையெல்லாம் சோசலிசத்தின் மகத்தான வெற்றி அல்லது முதலாளித்துவத்தின் சதி என்று மட்டுமே நிறுவுதலே இவர்களின் கைவந்த்த கலை. அதில் புலி எதிர்ப்பும் இன்று சேர்ந்துள்ளது.
இவர்களால் புலிகளை எதிர்க்க முடியயது. அதற்கு அவர்களுக்கு திரரணியுமில்லை ஸ்ரீலங்கா சிங்கள மக்களும் கைகொடுக்கிறார்களில்லை.
புலி எதிர்ப்பாளர்களின் பிரச்சினையே அவர்கள் போலியான மனிதாபிமான, சோசலிச, மாக்சிய முகமூடி போடுவதுதான். எனவே இவர்களின் முகமூடியை கிழிக்கவேண்டுமாயின் வேறுவழியில்லை. கிழிப்பதால் மாக்ஸ் தப்பித்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன்.
மாக்சியத்தின் மீதான நம்பிக்கையின்மைக்கு போலிகளே பொறுப்பேற்கவேண்டும்.
/*நூறுவீதமான சரியென்று எதுவுமில்லை. இருக்கவும் முடியாது. ஒப்பீட்ளவிலான கணிப்புகளோடுதான் ஓடமுடியும். இலங்கையில் சிறிமா அரசாங்கம் ஒன்றும் பரட்சிகரமான அரசாங்கமோ> சிறிமா சந்திரிகா புரட்சிப்பூக்களோ அல்லஎன்பதும் சராசரி அறிஜீவிக்கே தெரியக்ùடிய விடயம். */
அழகலிங்கம் அன் கோ சராசரி அறிவு ஜீவியில்லையா? நன்று 🙂 🙂
/*ஆனால் சிறிமா> இடதுசாரிக்கூட்டரசாரங்கம் சில நல்லநோக்கங்கள கொண்டிருந்தது என்பதையாவது நாம் ஏற்க மறுத்தல் எம்மிடமுள்ள இனவெறியின் வெளிப்பாடே.*/
இந்த நல்ல நோக்கங்களின் இறுதி விளைவு என்ன என்றுதான் பார்க்க வேண்டும்.
ஸ்ரீமா அரசு பல பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவந்த்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழரின் அடிப்படை உரிமைகளை திட்டமிட்டு பறித்த்தா இல்லையா? இது போலிமாக்சியவாதிகளுக்கு சரியென தோன்றலம். ஆனால் எமக்கல்ல. இவ்வாறே இந்தப்போலி மாக்சிஸ்டுகள் ஸ்ராலினையும் கூறினார்கள். ஸ்ராலின் ஆட்சியிலேயே ரஷ்யா வல்லரசாகவும் தொழிற்சாலை மயப்படுத்தப்பட்டதாகவும் வெள்ளையடிப்போர் புலிகளை பாசிஸ்டுகள் என்பர். ஆனால் ஸ்ராலின் ஆட்சியின் மனித உரிமை மீறல்களை ரஷ்ய தொளிலாளவர்க்கத்தின் கண்ணீர் இன்று சொல்வதை கேட்கிறோம். சைபீரிய கூலாக்குகளில் நடந்த விடயங்களை ஆவணப்படுத்த வேண்டிய இந்த மாக்சிச்டுகள் மாறாக G-8 மீதும் புலிகள் மீதும் சந்தர்ப்பவாத தாக்குதல் நடத்டுவது கேலிக்குரியது. இவர்களின் நீண்ட ‘அலம்பல்களை’ நீங்கள் வாசித்தீர்களாயின் 1970களில் தினகரனில் வரும் கட்டுரைகள் போலவே இருக்கும். அல்லது 7ம் வகுப்பு சமுகக்கல்வி படிப்பது போல இருக்கும்.
இடதுசாரிக்கூட்டரசாரங்கம் சில நல்லநோக்கங்கள கொண்டிருந்தது என்பதையாவது நாம் ஏற்க மறுத்தல் எம்மிடமுள்ள இனவெறியின் வெளிப்பாடே என்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். எமது கிராமம் ஒர் விவசாய, சுருட்டு குடிசைத்தொழில் கிராமம். இங்குள்ள பலர் 100ரூபா தாள் பார்த்ததே ஸ்ரீமா மிளகாய், வெண்காயம் இறக்குமதி நிறுத்தி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்த பின்னர்தான் என்றால் மிகையாகாது. அரச உத்தியோகமே கொளரவம் என இருந்த
ஊரில் லட்சாதிபதி என்றால் விவசாயி என்றாகியதை கண்ணால் கண்டவன். ஆனால் இதன் பின்னால் இருந்தது ஸ்ரீமா அல்ல அவ்விவசாயியின் இடைவிடாத உழைப்பு என்பதி பின்னாளிலேயெ தெரிந்த்தது.
ஒரு விவசாய உயர் அதிகாரி கூறியது என்னவெனில் ஸ்ரீமா அரசு இந்த விவசாயியையும் அவனது நிலத்தையும் ஒரு பரிசோதனைக்கூடமாகவே பார்த்தார்களன்றி வேறெதுமில்லை என்று. இவ்வாறு பயன்படுத்தப்பட்டவனுக்கு என்ன பரிசு கிடைத்தது. அவன் வாழ்வுரிமை பறிக்கப்பட்டது பயங்கரவாதி என்ற பட்டத்துடன் ! இதற்கு ஸ்ரீலங்காவின் சோசலிச கனவான் கொல்வின் துணை நின்றார்.
இனவெறியின் வெளிப்பாடு என்று கூறுவோர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
/*அந்தச் சிறுவன் ஜெர்மனிய கல்வித்துறையால் ஒரு சிறிய காலத்திற்கு ஜோன் ஹொப்கின்ஸிற்கு பயிற்சிக்காக அனுப்பட்டதில் நீங்கள் என்ன தவறைக் கண்டு பிடித்துவிட்டீர்கள்? */
எது எவ்வாறாயினும் G-8 ஐயும் அதன் நிறுவனங்களையும் 360பாகையிலும் தாக்கி திரிப்போர்க்கு தனது மகனையோ மகளையோ G-8 இன் அடாவடிகளுக்கே தலையாரி அமெரிக்காவுக்கு எந்தப்போர்வையிலும் அனுப்ப தகுதி கிடையாது! அவர்களை அனுப்புவது கூட G-8 நாடொன்றுதான். இதையே புலிஆதரவாளன் ஒருவன் செய்தால் விடுவாரா அழகலிங்கம்? இல்லை விடமாட்டார். மாறாக ஒரு புலியை அவரது பிள்ளைக்கு அமெரிக்காவின் அதியுயர் கலாசாலைகளில் ஒன்றாகிய ஜோன் ஹொப்கின்ஸில் இடம் வழங்கி அல்லது குறுகியகால பயிர்சி அளித்து தமிழரின் உரிமைப்போரையே பாசிச வழிக்கு இட்டுச்சென்றுவிட்டது புலிக்கூட்டமும் G-8ம் என்பார். இவ்வாறே ஐ.நா சபையில் தனது காலணியை கழற்றி மேசையில அடித்து சங்கநாதமிட்டவர் திரு.நிகிற்றா குருஷ்சேவின் மகன் சேர்கே. குருஷ்சேவ் பற்றியும் , இற்றை வரை அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் பிடல் காஸ்ரோவின் மகள் எலியானா ஃபெனாண்டஸ் போன்றோர் அமெரிக்க பிரஜைகளாக மாறியபோது எமக்கு இந்தப் போலி மாக்ஸியவாதிகள் கற்பித்தனர்.
ஆனால் என்ன குர்ஷ்சேவோ அன்றி காஸ்ரோவோ தாம் அவர்களை அனுப்பவில்லை மாறாக ஒரு கல்லூரி அனுப்பியது அது இது என்று கூறி ஒளித்தோடவில்லை. ஃபிடல் ஒரு போலி முகமூடி அணிந்த மனிதாபிமானியோ அன்றி அவலை நினைத்து உரலை இடிக்கும் கனவுகாணும் போராளியோ அன்றி நயவஞ்சகமாக முதுகில் குத்தும் மாக்சிசவாதியோ அல்ல! மாறாக அவன் நேர்மையான மாக்சிசவாதி.
/*அழகலிங்கத்தைத் தாக்குவதற்கு அந்தச் சிறுவன் தானா உங்களின் துருப்புச் சீட்டு? கவலையாயிருக்கிறது! */
/*சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்!
சிறீமாவையும் அவரின் இனவாத கொள்கைகளையும் தூக்கிப்பிடிப்பதற்கு போரினால் அல்லல்பட்டு 30 ஆண்டுகால அகதி, மரண, கற்பழிப்பு வாழ்வு என்பவற்றுக்குள் அலைபட்டு அழும் பாவப்பட்ட தமிழன் தானா அழகலிங்கத்துக்கு துருப்புச்சீட்டு. அவரின் கத்தரிப்பூ வண்ணத்தில் இட்ட கீழ்த்தரமான நாற்றமெடுக்கும் வக்கிரமமன தாக்குதல் உங்கள் கண்ணில் படவில்லை???? மதிப்புமிக்க சத்தியக்கடதாசி, நீங்கள் அவரைக்கேட்டிருக்க வேண்டிய கேள்வி.
/*புலி எதிர்ப்பாளர் என்ற ரீதியில் அழகலிங்கத்தை ரூபனுக்குபிடிக்காமல் போனதில் ஒரு காரணமிருக்கு. */
அழகலிங்கம் புலிஎதிர்ப்பாளன் அல்ல. புலி எதிர்ப்பாளர்களை எனக்குத்தெரியும் அவர்களுடன் எனக்கு மரியாதையும் நட்பும் உண்டு. ஆனால் அழகலிங்கத்தையோ இன்னும் சிலரையோ அதற்குள் சேர்க்க முடியாது. முக்கியமாக தேனீ யில் எழுதுபவர்கள் இந்த வகை வக்கிர புத்தி படைத்தவர்கள். யாராவது புலிகளைத்தாக்கினால் அவர்களின் பதிவில் இடம்கொடுப்பார்கள். இவர்களும் இடம் கிடைக்கிறதே என்று இன்னும் அவர்களை குளிரச்செய்யும் வண்ணம் திரிப்பார்கள். நான் அறிந்தவரை அழகலிங்கத்தின் எழுத்துக்கள் சத்தியக்கடதாசி, தேனீ முலமே எனக்கு பரிச்சயம். தேனீயிலாவது மட்டற்ற பின்னூட்டமிட முடியும். தேனீக்கு மின்னஞல் மட்டும் தான் இடலாம். தேனீயின் வக்கிரத்தை மறுதலித்தவர் என்பதளவில் எனக்கு ஷோபா மீது மரியாதை உள்ளது.
சத்தியகடதாசியின் கவலை கவலையளிக்கிறது. நானும் தொடர்ந்து சத்தியகடதாசி பார்த்துவருகிறேன். அதில் எங்கும் அழகலிங்கத்தின் மகன் ஜோன் ஹொப்கின்ஸில் படிப்பதாக அறியமுடியவில்லை. கட்டுரையாசிரியர் கவலைகொள்ளாது அல்லது நீங்கள் சொல்வதுபோலப்பார்த்தாலும் சில்லறைவிசயங்களுக்கு வீண் அரட்டைக்குப்போகாது பெருந்தன்மையாக தன்பாட்டில் ஒதுங்க சத்தியக்கடதாசி ஏன் வீணாக கலைகொள்கிறது…
/*தேனீயிலாவது மட்டற்ற பின்னூட்டமிட முடியும்*/
தவறு ‘சத்தியக்கடதாசியிலாவது மட்டற்ற பின்னூட்டமிட முடியும்’ என கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். நன்றி.
ரூபன் உங்களின் விமர்சனங்களில் தனிப்பட்ட தாக்குதல்களே அதிகம் தொனிக்கிறது. வ.அழகலிங்கம் கட்டுரையை சொந்தப்பெயரில் எழுதாது எ(உ)ங்களைப்போல் புனைபெயரில் எழுதியிருந்தால் என்னசெய்வீர்கள். அப்படிப்பார்த்து விமர்சனம்செய்வதே முறையானது. அரசுகள் பற்றியும்> புலிபற்றியும் விமர்சனங்களும் கருத்துப்பரிமாறல்களும் தேவை. நீங்கள் புலி ஆதரவாளராய் இருப்பதில் யாரும் குறைகூறமுடியாது. ஆனால் நீங்கள் அதையும் மீறி ரசிகநிலைக்கு சென்று விடுகிறீர்கள். பிழையென்று கண்டால் திருந்தமுயற்சியுங்கள். அல்லது என்னை மன்னித்தருளுங்கள். பட்டதை எழுதிவிட்டேன்.
சோவியத் யூனியனில் ஸ்ராலின் ஆட்சியின் ஒரு சிறுமி தனது தந்தையை உளவாளி என காட்டிக்கொட்டுத்தார். அதுவும் ஸ்ராலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில்.
இந்தக் கதையை எமக்கு எடுத்துச்சொல்லி சொல்லியே சோசலிசத்தின் மாண்பு பற்றி கூறியவர்கள் 16 வயதுச்சிறுவன் வேதனை பற்றி துருப்புச்சீட்டு விடுவது சோசலிச மனிதாபிமானத்தின் முரண்நகை வேடிக்கைகளில் ஒன்று!!!!
உதயன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
/**ரூபன் உங்களின் விமர்சனங்களில் தனிப்பட்ட தாக்குதல்களே அதிகம் தொனிக்கிறது.*//
கட்டுரை ஆசிரியரை கேட்காமல் வேறு யாரைக்கேட்க முடியும் ??
கட்டுரை ஆசிரியர் ஒட்டு மொத்த உலகையும் திருத்த முயற்சிக்கும் போது அவரின் முரண்களை சுட்டிக்காட்டினேன். அது தவறா?
மற்றும் அழகலிங்கம் தனது சோசலிச, ஸ்ரீமாவோ தூக்கிப்பிடித்தலுக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் எள்ளி நகையாடவில்லை என்கிறீர்களா?
நானாவது தனிமனித தாக்குதல் செய்தேன் என்ற குற்றச்சாடுக்குள்ளாகிறேன், அவரோ கண்ணைப்பறிக்கும் கத்தரிப்பூ வண்ணத்தில் போரினால் அல்லலுறும் தமிழர்களை எள்ளி நகையாடுகிறார். இல்லை என்கிறீர்களா??
அழகலிங்கத்தின் G-8 ஐ திரும்பவும் வாசித்து அவரின் தனிமனித தாக்குதல்கள் அறியுங்கள்.
என்னைப்பொறுத்தவரை Political Correctness ஒரு பம்மாத்து. அதை எதிர்பார்ப்பவர்கள் முதலில் தம்மை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும். அழகலிங்கம் தன்னை பலமுறை பார்க்கவேண்டியவர்.
/* வ.அழகலிங்கம் கட்டுரையை சொந்தப்பெயரில் எழுதாது எ(உ)ங்களைப்போல் புனைபெயரில் எழுதியிருந்தால் என்னசெய்வீர்கள். */
புனை பெயரில் எழுதுபவர்களுக்கும் பின்னூட்டம் இடுகிறவன் தான். அது சொந்தப்பெயர் புனைபெயர் எதுவாயினும் எழுதியவருக்கு போய்ச் சேர்ந்துதான் ஆகும் என்பது எனது நம்பிக்கை.
/**அப்படிப்பார்த்து விமர்சனம்செய்வதே முறையானது. **/
மாலனின் ‘இணைய நன்னடத்தை’ விவாதம் இப்போது தான் ஒருவாறு முடிந்திருக்கிறது. அதற்குள் ஆரம்பிக்கிறீர்களே!!!
/* ஆனால் நீங்கள் அதையும் மீறி ரசிகநிலைக்கு சென்று விடுகிறீர்கள்.*/
சோசலிச ரசிக நிலைக்கு எதிர்க்கருத்துக்கூறினேன். அதை எங்கே புலி ரசிக நிலை என்று கண்டுபிடிதீர்கள்???
/*அதன் பலாபலனாய் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி கிளர்ச்சியும், பாண் கியூவும் பட்டினிச்சாவும் ஏற்பட்டது. என்.எம்.பெரேரா நிதியமைச்சர் பதவி ஏற்றவுடன் ஏகாதிபத்திய வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் கடன் உதவி அத்தனையையும் நிறுத்தியதோடு ஏற்கனவே பட்டகடனைத் திருப்பிக் கட்டும்படியும் நிர்ப்பந்தித்து தேயிலை, ரப்பர், தெங்குப்பொருள் கொள்வனவையும் பெருவாரியாகக் குறைத்ததால் அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்கமுடியாத அளவுக்கு கஜானா காலியாகியது. *****/
சோசலிச ரசிக ஆரம்ப நிலையே இப்படி என்றால் உச்ச நிலை
எப்படியிருக்கும் என யோசிக்கிறேன்… 🙂 🙂 🙂
/*பிழையென்று கண்டால் திருந்தமுயற்சியுங்கள். */
நிச்சயமாக முயற்சிப்பேன், பிழை என்று கண்டால்!!!!!
/*அல்லது என்னை மன்னித்தருளுங்கள். பட்டதை எழுதிவிட்டேன்.*/
நானும் பட்டதை எழுதுபவன் தான் 🙂 🙂
“புனை பெயரில் எழுதுபவர்களுக்கும் பின்னூட்டம் இடுகிறவன் தான். அது சொந்தப்பெயர் புனைபெயர் எதுவாயினும் எழுதியவருக்கு போய்ச் சேர்ந்துதான் ஆகும் என்பது எனது நம்பிக்கை.”
வ. அழகலிங்கம் புனைபெயரில் எழுதியிருந்தால் ஜோன் ஹொப்கின்i@யும் மகனையும் எப்படி தொடர்பு படுத்தியிருப்பீர்கள்.?
படைப்பு படைப்பாளி பற்றியது காலங்கடந்த பழைய்ய விவாதம்.
மீண்டும் நீங்கள் அதை தொடங்குவதாயிருந்தால் அழகலிங்கம் எப்படி ஜோ;மனியில் இருக்கமுடியும் என்ற கேள்வியோடு தொடங்கவேண்டும். இதெல்லாம் ஆரோக்கியமா இருக்கமுடியுமா? ரூபன் உங்களிடமிருக்கும் நேரவளம் சலிப்பின்றிய வாசிப்பு சலிப்பின்றிய பின்னூட்டம் இவையெல்லாம் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கவைக்கிறது. ஆனால்எங்கோ உங்களிடம் சிறியதவறும் உள்ளதாகதோன்றுகிறது. கண்டுபிடிக்கமுயற்சியுங்கள்.
வ. அழகலிங்கம் அவர்களே! கட்டுரையை எழுதிவிட்டு சும்மா இருக்கமுடியாது. கட்டுரை எழுதுவதற்கு ஒரு நோக்கம் இருக்கு. திரும்பத்திரும்ப ஒரே விடயங்கள பலதடவை கதைப்பதுபோல எழுத்துக்களையும் திரும்பதிரும்ப அழுத்தவேண்டும். ரூபன் போன்றவர்கள் உங்களுக்கு ஒரு கொடை. உங்களை ஒருவகையில் எரிச்சல் படுத்தலாம். ஆனால் உங்கள் எழுத்தை கெளரவப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. இணையமும் பின்னூட்டம் பகுதியும் உங்கள் கருத்துக்களை வலிமையாக்க நல்லதொரு களம். விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாங்களும் பயன்பெறுவோம்.
அழகலிங்கத்தின் கட்டுரை தமிழ்த் தேசிய விசிறிகளுக்கு நெருடலாக இருப்பதொன்றும் அபத்தமான விடயம் அல்ல.
தமிழ்த் தேசிய கற்பிதங்களில் இன்னும் கனவுமயமாக சஞ்சரிப்போர் தம்மை தனித்துவமாக பீத்திக்கொள்ள முடியாதவாறு சிங்கள தேசிய கற்பிதங்களில் இன்னும் வாழ்வோர் விட்டுவைக்க வில்லை என்பதே நிகழ்கால நிதர்சனம்.
மொத்தத்தில் இந்த இரு அணிகளுக்கிடையில் இலங்கைதீவின் சமூகங்களின் வாழ்வு பந்தாடப்படுகிறது.
/*வ. அழகலிங்கம் புனைபெயரில் எழுதியிருந்தால் ஜோன் ஹொப்கின்i@யும் மகனையும் எப்படி தொடர்பு படுத்தியிருப்பீர்கள்.?*/
இன்று என்னால் தொடர்பு படுத்த முடியாது போயிருக்கலாம். என்றோ ஒருநாள் இந்த விடயம் வெளிவந்து தான் ஆகவேண்டும்.
அடுத்து கட்டுரையாளர் தனது பெயரைப்போடுவதற்கு இரண்டு காரணம் இருப்பதாக நினைக்கிறேன்
1) அழகலிங்கத்தின் ஆக்கங்களில் ஏலவே சொல்லப்பட்ட கருத்துகளை ‘திரிபுபடுத்துதல்’ (Spinning) தவிர புதிதாக ஏதுமில்லை. அதனால் அதற்கு ஒரு முகம் கொடுத்து புதிதாக்க தனது பெயரைப் போடுகிறார். அவர் பெயரையும் அதிலுள்ள முக்கிய குறிச்சொற்கள் ,ஆரம்ப இறுதி பந்திகள்(உ.ம்: G-8, ஸ்ரீமாவோ, தமிழர், ஜேவீபி,) எடுத்துவிட்டு படித்தால் அவை ஒரு பொதுப்ப்டையாக எழுதியது போல் இருக்கும். பின்னர் முக்கிய சொற்களுக்கும், ஆரம்ப, இறுதி வரிகளுக்கும் நீங்கள் விரும்பியதை போட்டால் அக்கட்டுரை உங்களுக்காகவே விஷேடமாக தலையை உடைத்து எழுதியது போல் இருக்கும். அவர் மட்டுமல்ல பலரின் ஆக்கங்கள் அவ்வாறானவையே.
2) தனது ‘திரிபுகளின்’ மேலானதும் மற்றும் வாசகர்களின் ‘செம்மறியாட்டு’தனம் மீதானதுமான அதீத தன்னம்பிக்கை. ஒருவேளை ஈழத்தில் (ஸ்ரீலங்காவில்) சோசலிச வகுப்பெடுத்த பழக்கமோ தினகரனில் வரும் ஸ்ரீமா அம்மையாரும் அவரது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பற்றிய ஆக்கங்களைப் பாடமாக்கி சமுகக்கல்வியில் 100 மார்க் வாங்கிய பழக்கமோ தெரியவில்லை.
அடியேனும் அதில் ஒருவன் தான்.
/*படைப்பு படைப்பாளி பற்றியது காலங்கடந்த பழைய்ய விவாதம்.
மீண்டும் நீங்கள் அதை தொடங்குவதாயிருந்தால் அழகலிங்கம் எப்படி ஜோ;மனியில் இருக்கமுடியும் என்ற கேள்வியோடு தொடங்கவேண்டும்.*/
‘அழகலிங்கம் கனடாவில் இருந்து வந்தார்…’ என சுகன் கவிபாடியிருந்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படிக்கவும்.
கவிதைக்கருப்பொருள் ஈழத்தில் தமிழ் வேண்டி புலிகளுக்கு பணம் கொடுப்போர் (ரசிக நிலை?)தமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார்கள் என்பதே. கவிதைக்காரர் அழகலிங்கத்தத மாட்டி விட்டுவிட்டார் என நினைத்து சிரித்தேன். பின்னர் G-8 எழுதினார், அதன்பின்னர் ஒட்டுமொத்த தமிழரையுமே நக்கலடித்தார். இதற்குப்பெயர்தானா இவர்கள் வாய்கிழியக்கத்தும் மனிதாபிமானம், மாக்சியம். தமிழரின் மனிதாபிமானத்தை நக்கலடித்ததை கேட்டதற்கு ‘ம்னிதநேய மாக்ஸை’ நோகவைக்கிறேன் என்று வேறு!!!
இதை கேட்கக்கூடாதென்கிறீர்களா???
மன்னிக்கவேண்டும் தோழரே!!!
/*இதெல்லாம் ஆரோக்கியமா இருக்கமுடியுமா? */
இவ்வகை எதிர்க்கேள்விகள் அற்றதனால் தான் ஈழப்போரே திசைகெட்டது என்போரிடம் கேளுங்கள்.
நான் புலிரகிச நில வாதிப்பட்டம் பெற்றுவிட்டேன் 🙂 🙂 🙂
/*ரூபன் உங்களிடமிருக்கும் நேரவளம் சலிப்பின்றிய வாசிப்பு சலிப்பின்றிய பின்னூட்டம் இவையெல்லாம் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கவைக்கிறது. ஆனால்எங்கோ உங்களிடம் சிறியதவறும் உள்ளதாகதோன்றுகிறது. கண்டுபிடிக்கமுயற்சியுங்கள். */
🙁 🙁 🙁
நன்றி
தவறு….
“நான் புலிரகிச நில வாதிப்பட்டம் பெற்றுவிட்டேன் ” அல்ல
புலி ரசிக நிலை வாதிப்பட்டம்…..
எனது ‘சிறிய தவறு’ நேரவளமும் சலிப்பின்றிய வாசிப்பும் தானோ?????
‘புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இல்லாதவர்கள் என்று சொல்லிக்கொண்டு ‘மூன்றாவது அணி’ என்று சொல்லக் கூடிய சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன’
……..
உண்மையான தமிழ் ஜனநாயக சக்திகள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் இரும் பெரும் விரோதிகள் சிங்களப் பேரினவாதமும் புலிப்பாசிசமுமே. தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் அணிகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நிற்கின்றன. ஒரு புறம் தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாள்கின்ற புலிகள் இயக்கம்இ மறுப்பக்கம் அதை எதிர்த்து நிற்கின்ற பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள். இவை தவிரஇ இதுவுமில்லை அதுவுமில்லை என்ற மூன்றாவது சக்தி எதுவுமில்லை.
சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து தமிழ் மக்கள் விடுதலையடைவதற்கான முன்நிபந்தனைஇ அதற்கு தடையாகவுள்ள புலிகள் என்ற பாசிச இயக்கம் அழிக்கப்படுவதே என்பது நிதர்சன உண்மையாகும். இந்த தெளிவான உண்மையை மறைப்பதற்காக செய்யப்படும் ‘மூன்றாவது அணி’ ‘நடுநிலைமை’ பிரச்சாரங்கள் யாவும் புலிகளுக்காக செயற்படும் ஐந்தாம் படை ஒற்றர்களின் வேலையே தவிர வேறொன்றுமில்லை.
-தேனீயில் வெளிவந்த மதில்மேல்பூனைகள்…-
“…..அதை எதிர்த்து நிற்கின்ற பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள்…..”
அதெண்டா உண்மைதான். கேக்கவே புல்லரிக்குது அண்ணை!!!!
விளையாடுங்கோ…விளையாடுங்கோ!!!!
மூன்றாவது அணிகுறித்து தேனீயில் வந்த கட்டுரை ஓரளவு தெளிவின்மை கொண்டது.
புலிகளையும் (சிங்கள பேரினவாத) அரசையும் நிராகரிக்கும் அரசியலைதான் மூன்றாவது அணியாக கொள்ளவேண்டும்.
அக்கட்டுரையாளர் சொல்வதுபோல் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இல்லாதவர்களை மூன்றாவது அணியாக இனம் காணமுடியாது. அவர்கள் புலி அரசியலை மவுனமாக இருந்து அங்கீகரிக்கிறார்கள் அல்லது புலி அரசியலை நிராகபரிப்பவர்களை விமர்சிக்கிறார்கள்.
ஆக, அவர்களை தனியான ஒரு அணியாக குறிப்பிடமுடியாது.
“..பேரினவாத அரசுடனும், இந்தியக் கைக் கூலிகளாகவும், ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்த இயங்குகின்ற இந்த கொலைகார புலியெதிர்ப்புக் கும்பல், தன்னை மறைக்க மற்றவனை ஐந்தாம்படை என்கின்றனர். இந்திய இலங்கை அரசின் கூலிப்படையாக இயங்குகின்ற ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி:டி.பி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், கருணா குழு என்று, இக்குழுக்கள் எப்படிப்பட்ட ஐந்தாம் படை. அரசியல் ரீதியாக வெறும் கூலிக் குழுக்கள். பேரினவாததத்தின் நிதி மற்றும் ஆயுததுணையில் இயங்குகின்ற கொலைகார நாசகாரக் கும்பல்கள். புலிகள் இருந்தால் தான் இவர்களுக்கு வாழ்வு என்ற நிலை. …”
-தேனியில் வெளிவந்த மதில்மேல் பூனைகள் என்ற ஆக்கத்துக்கு எதிர்வினையாக பி.இரயாகரன் தமிழரங்கத்தில் எழுதிய ‘புலியெதிர்ப்பு ஆசாமிகளின் புலியொழிப்பு அரசியலோ புளுக்கின்றது ” இல் இருந்து…..
படுகொலைஇ கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன்இ எதற்காகஇ எந்த இலட்சியத்துக்காகஇ எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பதுஇ கடைந்தெடுத்த பாசிசம்.
இவர்களின் மொழி படுகொலை தான். இதுவல்லாத வேறு எந்த ஒரு அரசியலும் கிடையாது. அதனிடம் அரசியல் தர்க்கம் கிடையாது. விவாதிக்கும் அரசியல் நேர்மை கிடையாது. இலட்சியம் என்பது வெறும் கோசமாக மாறிவிட்ட நிலையில்இ மக்களை வெறும் மந்தைகளாக மாற்றிவிட்ட நிலையில்இ அடக்குமுறையைத் தவிர அதனிடம் ஒரு அரசியல் மொழி இருப்பதில்லை.
இப்படிப்பட்ட அரசியல் அனாதைகளின் இருப்பு என்பதுஇ அரசியல் படுகொலைகள் மூலம் தம்மை தக்கவைப்பது தான். இப்படி 10000 க்கு மேற்பட்ட தமிழர்களை இனம் கண்டு கொன்றதன் மூலம் தான்இ புலியிசம் இன்று வரை நீடிக்கின்றது. அதுமட்டுமல்ல ஊர் உலகத்தில் உள்ள இலங்கைத் தமிழரை எல்லாம் புலிகளின் அதிகாரத்தின் முன் நிறுத்தினால்இ மற்றொரு 10000 பேரை உடனடியாகவே கொல்லும் ஒரு பட்டியலையும் வைத்துள்ளனர். அந்தளவுக்கு மக்களுக்கு எதிரான செயல்பாடுகள்இ வீங்கி வெம்பி காணப்படுகின்றது. உண்மையில் இதற்குள் அதன் தர்க்கம்இ அதன் அரசியல் எல்லாம். இதுவே சாரமாகி புலியிசம் உயிர்வாழ்கின்றது.
-புலியிசம் என்பது என்ன?
என்ற கட்டுரையிலிருந்து…பி. இரயாகரன்