G-8: – வ.அழகலிங்கம் – தமிழரசன்

கட்டுரைகள்

அடுத்த G-8 மகாநாடு அந்நியக் கிரகத்தில்

வ.அழகலிங்கம்
தமிழரசன்

g-8,alagalingam,thamilarasan

G-8 மகாநாட்டில் ஓர் அரசுத் தலைவர் இரண்டு நிமிடங்கள் உரையாற்றுவதற்கிடையில் நாற்பது குழந்தைகள் பசியால் இறந்துவிடுகின்றனர்.

G-8 மகாநாட்டில் உலகின் மக்கள் தொகையின் பன்னிரெண்டு சதவீதத்தையுடைய 8 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுகூடிய இந்த ஏகாதிபத்தியவாதிகள் உலக மக்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களை அரசியல் – பொருளாதார- இராணுவரீதியில் கையாள்வது பற்றித் திட்டமிட்டார்கள்.

இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, இந்த உற்பத்தி ஆற்றலைக்கொண்டு இன்றைய உலகின் மக்கள் தொகையைப் போல் இரண்டு மடங்கினருக்கு அதாவது 12 பில்லியன் மக்கள் தொகையினருக்கு உணவு வழங்க முடியும். மருத்துவம் கல்வி வதிவிட வசதி வழங்க முடியும். ஆனால் ஏகாதிபத்தியப் புள்ளி விபரங்களே உலகின் ஒரு பில்லியன் மக்கள் தினசரி 1 டொலருக்குக் குறைவாகவும் 2 பில்லியன் மக்கள் தினசரி 2 டொலருக்குக் குறைவாகவும் வருமானம் பெறுவதாகக் கூறுகின்றன.அதேசமயம் செல்வச் செழிப்பால் சீராட்டப்பட்டதாய் சொல்லப்பட்ட ஜேர்மனியில் வேலை இழந்தவர்கள் சமூக உதவியில் வாழ்பவர்களுக்கு மணித்தியாலத்திற்கு 1 யூறோ சம்பளம் பெறும் கட்டாய வேலைகள் வழங்கப்படுகிறன. கடந்த 100 வருடங்களில் ஜேர்மனியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் ஒருசில மணித்தியால விவாதங்களுடன் பாராளுமன்றத்தில் பறிக்கப்படுகின்றன.

நோய்வாய்ப்பட்டால் மருந்து வாங்கப் பணம் தேவை. ஏழைகள் தமது நோயைத் தீர்க்கும்படி கடவுளை மட்டுமே பிரார்த்திக்க முடியும். முதலாளித்துவ சமுதாயத்தில் மனிதர்கள் நோய்வாய்ப் பட்டால் அவர்கள் மருத்துவர்கள் முன்பு பணம் தரும் வாடிக்கையாளர்களாவர். உணவு வாங்கப் பணமில்லாதவன் உலகில் உள்ள 800 மில்லியன் பசிபட்டினியுடைய மனிதர்களுடன்தான் சேர வேண்டும். PDSன் இளந்தலைவர்களில் ஒருவரும் ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதியும் எழுத்தாளருமான Sahra Wagen Knenht எழுதிய ‘Armut und reichturm heute ‘ என்ற நூலில் உலகில் 85000 கோடிஸ்வரர்கள் சொந்த விமானங்கள், பொழுதுபோக்குக்கான வேட்டையாடும் காடுகள்கள், பொழுதுபோக்குக்கான சொந்தக் கப்பல்கள், பெரும் படகுகள், கோல்ப் விளையாட்டு மைதானங்கள், ஆடம்பர மாளிகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். இவர்கள் திருமணங்களைக் கூடத் தம்மிடையேதான் செய்து கொள்கின்றனர். இதுவே முதலாளித்துவ பொருளாதார சுதந்திரத்தின் விதியாகும். G-8 உச்சி மகாநாடு இவைகளை மறைத்து உலகில் பசியை ஒழித்தல், ஆபிரிக்காவுக்கு உதவுதல், சுற்றாடல் பாதுகாப்பு, போன்ற விடயங்களைப் பேசியது. உண்மையில் அவர்கள் மூலதனத்திற்காக அதிக சுதந்திரம் கேட்டார்கள். வளங்கள், சந்தை நுகர்வு இவைகட்காக உள்நாட்டுப் போர்களை மூட்டி விடுபவர்கள், சர்வாதிகார அரசுகளை ஏற்படுத்துபவர்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் புரிந்துகொண்டிருப்பவர்கள் இந்த G- 8 நாடுகளின் ஆட்சியாளர்களே. ஜேர்மனியின் அதிபரான அங்கேலா மார்க்கெல் முதலீடு செய்வதற்கும் எல்லோரும் விலைக்குவாங்கும் சக்தி பெறுவதற்குமான சுதந்திரமான வாய்ப்புகள் பற்றியே பேசினார்.

ஆபிரிக்காவுக்கு உதவி என்பது G-8 மகாநாட்டுக்கு எதிர்ப்புக் காட்டுவோரைப் பலவீனப்படுத்த கண்டறியப்பட்ட ஏகாதிபத்தியப் பிரச்சார ஆயுதமாகும். வளம் நிறைந்த ஆபிரிக்க தேசத்தின் வறுமைக்கு ஏகாதிபத்தியங்களே நேரடிக் காரணிகளாகயிருந்தன. காய்த்த மரம் கல்லெறி வாங்குவதுபோல வளம் அதிகம் நிறைந்த ஆபிரிக்க நாடுகளிலேதான் இன்று தீவிரமான உள்நாட்டு யுத்தங்களும் சர்வாதிகார ஆட்சிகளும் நடைபெறுகின்றன. G-8 நாடுகளிடையே கூட பெருமளவு முரண்பாடுகள் நிலவின. அமெரிக்காவின் ஈராக்கிய தலையீடு குறித்து எந்த G8 நாடும் பேசவில்லை. ருஷ்யாவுடன் பெரும் பிணக்கு நிலவியது. அமெரிக்கா போலந்திலும் செக் குடியரசிலும் புதிய அணுவாயுத ஏவுகணைகளை ருஷ்சியாவுக்கு எதிராக நிறுத்துவதை G-8 நாடுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மறுபுறம் G-8க்கு எதிரான மேற்குலகின் மக்கள் இயக்கங்கள் இதுவரை இல்லாத வடிவில் தீவிரமாக வளர்கின்றன. உலகமயமாதலால் மூன்றாமுலக நாடுகள் மட்டுமல்ல மேற்குலக மக்களும் பெரும் பாதிப்புற்றனர். மேற்கு நாடுகள் யுத்தங்களில் ஈடுபட்டிருக்கும் செலவைத் தொழிலாளர் தோள்களிலே பொறிப்பது, பல தொழிற்சாலைகளை மூடுதல், மூடபட்ட தொழிற்சாலைகளை ஆசிய – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக்கு நகர்த்துதல், உள்நாட்டில் பெருமளவு வேலை இழப்பு, உற்பத்தி வீழ்ச்சி, சம்பள வீழ்ச்சி, நுகர்வு வீழ்ச்சி, நீண்ட நேர உழைப்பு என்பவையே உலகமயமாக்கல் கோட்பாடு மேற்குலகின் தொழிலாளிக்கு அளித்த கொடையாகும்.

ஜேர்மனியில் மட்டும் மூன்று மில்லியன் தொழிலாளர்கள் உலகமயமாதலால் வேலை இழந்துள்ளனர். ஜேர்மனியில் வேலை நிறுத்தம் நடவாத நாளென்று ஒன்றில்லை. எந்த முதலாளித்துவ மந்திரங்களாலும் தீர்க்கப்பட முடியாத நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறது. பழைய கட்சிகள் தொழிற்சங்கங்கள் பலமிழப்பதும் பிளவு படுவதும் அதிகரித்து புதிய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் தொடக்கப்படுகின்றன. மார்க்ஸியத்திற்கு மரணச் சடங்கு முடிந்துவிட்டது என்று கூறிய முதலாளிய ஊடகங்கள் முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் ஆகியோர் இடதுசாரிகள் அபாயகரமாக வளர்ந்து வருவதாய்க் கூறத் தொடங்குகிறார்கள். தற்போதைய G-8 எதிர்ப்பு இயக்கங்களை இந்தப் பகைப்புலத்தில் பொருத்திப் பார்க்க முடியும். 40 வருடங்களுக்கு முன்பு 2 யூன் 1967ல் ஜேர்மனியில் Benno Ohnesorgs என்ற மாணவன் ஈரானிய சர்வாதிகாரி ஷாவின் பேர்லினுக்கான வருகையின்போது நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் பொலிசாரால் பின்புறமாக இருந்து சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தத் தினமான 2 யூனில் இன்றய G-8 எதிர்ப்பு இயக்கங்கள் முதன் முதலாக எழுச்சியைத் தொடங்கின. 1967 – 1968 காலப்பபகுதி நேட்டோ நாடான கிறீஸில் இடதுசாரிகளை ஒழிக்க நடந்த இராணுவ சதிப் புரட்சி, இஸ்ரேலின் அரபு நாடுகளுக்கு எதிரான 6 நாள் யுத்தம், பொலிவியாவில் சேகுவேரா கொல்லப்பட்டது, பிரமாண்டமான வியட்நாம் யுத்த எதிர்ப்பு, அல்ஜீரிய யுத்தம், பிரான்ஸில் மாபெரும் மாணவர் எழுச்சி போன்ற வரலாற்றுத் திருப்பங்கள் நிறைந்த காலம். ஜேர்மனிய வலதுசாரி ஊடகப் பயங்கரவாத நிலையமான அக்சல் ஸ்பிறிங்க நிறுவனத்திற்கு எதிரான கிளர்ச்சி நடந்த காலமது. இஸ்ரேலின் 6 நாள் யுத்தத்தை ஹிட்லர் கால இராணுவ மொழியில் மின்னல் யுத்தமென்று ஜேர்மனிய ஊடகங்கள் வர்ணித்தன. Die DDR das sind unsere Araba.(கிழக்கு ஜேர்மனியே எங்களது அரபுக்கள்) என்று அக்சல் ஸ்பிறிங்க ஊடகங்கள் எழுதின.

வியட்னாம் எதிர்ப்பு இயக்கங்கள் CDU,CSU,SPD கூட்டரசால் தீவிரமாக ஒடுக்கப்பட்டன. அமைதியான யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் போலீஸ், வன்முறை, கைது, சிறை என்பன இளைஞர்களை ஆயுத வன்முறையை நோக்கித் தூண்டின. நாசிகால வெளிநாட்டு அமைச்சு நபரான Georg Kiesinger அரசுத் தலைவனாக இருந்த காலமது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சட்டம், போலீஸ் ,உளவுத்துறை, இராணுவம், ஊடகத்துறை சகலதிலும் நாசிகாலப் பாசிஸ்டுகள் பெருமளவில் நிரம்பியிருந்த காலமது. அக்கால வெகுஜன எழுச்சியின் ஞாபகங்களோடும் படிப்பினைகளோடும் G-8 எதிர்ப்பு இயக்கம் ஜேர்மனியில் உதித்தது.

G-8 எதிர்ப்பு இயக்கம் மீதான தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்பு என்பன மேதின நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டன. G-8 எதிர்ப்பு இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிய விவாதங்கள் ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து நடாத்தப்பட்டன. செம்படை உறுப்பினர்கள் சிலர் சிறையில் 20 வருடங்களுக்கு மேலாக இருந்து சிறைத் தண்டனை முடிவுற்று அவர்கள் விடுதலையாவதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது அவர்கள் திரும்பவும் பயங்கரவாதம் செய்யப் போகிறார்கள், ஆயுதமேந்தப் போகிறார்கள், வரவுள்ள மேதின நிகழ்வு G-8 எதிர்ப்பு இயக்கங்களின் பெரும் வன்முறைக்கும் கலகத்துக்கும் தொடக்க களமாய் மாறப் போகிறதென ஊடகங்கள் அடியெடுத்துக் கொடுத்தன. முழுத் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவ்விவாதங்களில் கலந்துகொண்டன. சகல முதலாளித்துவக் கட்சி அரசியல்வாதிகளும் இடதுசாரிப் பயங்கரவாதம் பற்றி முறையிட ஆரம்பித்தனர். மக்கள் தொடர்புச் சாதனங்கள் பொய்களின் கொடியை ஏந்தி வந்தன. அக்ஸ்சல்ஸ் ஸ்பிறிங்க நிறுவனப் பத்திரிகைகள் இடதுசாரிகளை மக்கள் விரோதிகளாக பயங்கரவாதிகளாக வர்ணனை செய்யும் விஷப் பிரச்சாரங்களை ஆரம்பித்தன. இதன்மூலம் இடதுசாரிகளுக்கு எதிரான பொலீஸ் நடவடிக்கை உளவுத்துறைச் செயற்பாடுகளுக்கான சமிக்ஞைகள் தரப்பட்டன.

G-8 மகாநாட்டுப் பாதுகாப்பு என்ற பேரில் மகாநாடு நடப்பதற்கு ஒருமாதம் முன்னதாகவே மே மாதத் தொடக்கத்திலேயே ஜேர்மனி முழுவதும் இடதுசாரிக் குழுக்களின் அலுவலகங்கள் வீடுகள் உட்படப் பல இடங்களில் தேடுதல்கள் நடாத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். G-8 மகாநாட்டைக் குறிவைத்து இடதுசாரித் தீவிரவாதிகள் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தயாராவதாகவும் ஆயுதந் தாங்கிய அமைப்புகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் உளவுத்துறையால் கட்டப்பட்ட பொய் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் புதிய இடதுசாரிப் பயங்கரவாதம் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்குச் சமனென்று சிலுவையில் அடித்துச் சத்தியஞ் செய்தன. இதன் மூலம் G-8 எதிர்ப்பாளர்களை வேவு பார்த்து ஒடுக்கும் பொலீஸ் நடவடிக்கைக்குச் சார்பான பொது உளவியல் உருவாக்கப்பட்டது.

ATTAC மற்றும் இடதுசாரி அமைப்புகளினதும் கடிதம் தொலைபேசி ஈ-மெயில் சகலமும் ஒற்றறியப்பட்டன. அந்த அமைப்புகள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. ATTAC அரசுநிதி பெறும் அமைப்பாக இருந்த போதும் அது ஒரு வெகுஜன இயக்கப் பண்பைக் கொண்டிருந்தது. அது ஜனநாயக சக்திகள், சுற்றாடல் பாதுகாப்பு இயக்கங்கள், போர் எதிர்ப்புச் சக்திகள், இடதுசாரிகள, பெண்ணிலைவாதிகள், பாசிசஎதிர்ப்புக் குழுக்கள், கிறீஸ்தவ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பனவற்றால் கட்டப்பட்ட அமைப்பு. விஷேட போலீஸ் படைகள் இராணுவம் இவைகளைப் பாதுகாப்புக்காக வீதிகளில் இறக்குவது பற்றியும் அரசியில்வாதிகள் பேசினார்கள். இவை G-8 எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக மட்டுமின்றி உள்நாட்டில் வளரும் சமூக நெருக்கடிகளுக்கு எதிரான போர்த் தயாரிப்பாகவே இருந்தன.

1970 முதல் 1990 வரை நிலவிய, இனி ஒருபோதும் திரும்பாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் எல்லாப் பொருளாதார அதிசயங்களும் வாழ்க்கைக்தரமும் முடிந்து விட்டன. 400 வருடகால பொருளாதார தொழில் நுட்பரீதியான மேற்குலகின் முன்னிலை முடிவடைந்து விட்டது. இனி இது திரும்ப வராது. மேற்குலக மக்களின் உயர் நுகர்வு உலகின் மற்றெந்த மக்களுக்கும் ஒருபோதும் கிட்டியிராத வாழ்க்கை வசதிகள், இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பறிபோய்க் கொண்டிருக்கிறன. ஏறத்தாழ எல்லா மேற்குலக மக்களதும் வாழ்வில் நிரம்பி வழிந்த உல்லாசப் பொருட்கள் இப்பொழுது கைச்சிறங்கையளவு மக்களாலும்கூடப் பெறமுடியாத மட்டத்திற்கு விலைக்கு வாங்கும் சக்தி வீழ்ந்து விட்டது. எனவேதான் மக்கள் கிளர்ச்சிகள் தோற்றம் கொள்கின்றன. தொழிலாளர்களின் வலிமை மிகுந்த எழுச்சிகளின் முன்னறிவிப்பே G-8 இயக்கமாகும். G-8 எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகள் இனி அடுத்து வரவுள்ள தொழிலாளர் வேலை நிறுத்தங்கள, நாடு தழுவிய, கண்டம் தழுவிய, உலகம் தழுவிய பொதுவேலை நிறுத்தங்களுக்கும் வெகுன அரசியல் எழுச்சிகள் போன்றவைகட்கும் எதிரான ஆயத்தங்களேயாகும்.

Hamberg நகரில் மே மாத இறுதியில் நடைபெற்ற ஐரோப்பிய ஆசிய (ASEM) நாடுகளது மகாநாட்டுக்கு எதிராக 6000 பேர்கள் திரண்டபோது 1000 பொலிசார் அவர்களுக்கு எதிராக இறக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி G-8 மகாநாட்டு எதிர்ப்புக்கான மாதிரி என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் எழுதின. G-8 மகாநாடு நடந்த இடம் Rostock நகருக்கு அண்மையில் உள்ள கைலிக்கன் டாம் என்னும் இடத்திலுள்ள Kempinski Grand Hotel ஆகும். இது 1937ல் ஒரு யூதக் குடும்பத்திடமிருந்து ஆரிய மயமாக்கலின் கீழ் நாசிகளால் பறித்தெடுக்கப்பட்ட இடமாகும். இது பின்பு நாசித் தலைவர்களின் பிரதான வதிவிடங்களில் ஒன்றாக இருந்தது. கிழக்கு ஜேர்மனியின் காலத்தில் அங்கவீனர்கள் உளப் பாதிப்புற்றவர்களுக்கான பராமரிப்பு நிலையமாக இதுயிருந்தது. G-8 மகாநாடு நடைபெறுவதற்கான இப் பகுதியை ஒட்டிய 16 கிலோமீட்டர் சுற்றளவு பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதைச் சுற்றிப் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு 527 தொன் உருக்கைக் கொண்ட 3 மீட்டர் உயரங்கொண்ட 5000 உருக்குத் தூண்களாலான தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் வேவு பார்க்கும் கமராக்கள் மனிதர்களின் அசைவுகளை அறிவிக்கும் இலத்திரனியல் சாதனங்கள் பொருத்தப் பட்டன. இந்த இரும்புச் சுவரைச் சூழவர 2000 பொலீசார் நாய்களுடன் காவலுக்கு நியமிக்கப்பட்டனா.; அப்பகுதியில் வாழும் மக்களுக்கு விஷேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கைலிக்கன் டாமுக்கான ரயில், பஸ், கார் போக்குவரத்துக்கள் அத்தனையும் நிறுத்தப்பட்டு சகல பாதைகளும் மூடப்பட்டன. 17000 போலீஸ் 2100 இராணுவம் முதல்முறையாக உள்நாட்டில் தாக்குதலுக்கான தயார்நிலையில் நிறுத்தப்பட்டன. அதைவிடத் தனியார் பாதுகாப்புச் சேவைகளும் செயற்பட்டன. கைலிக்கன் டாமைச் சுற்றியுள்ள கடல், கால்வாய், நிலம் எங்கும் படைகள் நிறுத்தப்பட்டன. விமானப்படையும் கண்காணிப்பில் ஈடுபட்டது. ரோஸ்ரோக் விமானநிலயத்தில் ஆர்ப்பாட்டம் கூடத் தடைசெய்யப்பட்டது. ஜேர்மனிய இராணுவம் 20 வினாடிகளில் எதிர்த்தாக்குதல் நடாத்தும் தயார்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜேர்மனிய விமானப் படையின் ரோனார்டோ விமானங்கள், கெலிக்கொப்டர்கள் வானத்தை நோடட்மிட்டுக்கொண்டே இருந்தன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பத்தாயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த கூடாரங்களின்மேல் இவை இரவு பகலாய்ப் பறந்தன. ஜேர்மனியின் அதிநவீன யுத்த விமானமான ரொனார்டோ 330 மீட்டர்களுக்குத் தாழ்வாகப் பறக்கக் கூடாது என்பது விதியாகும். அது அமைதியான எதிர்ப்பு இயக்கத்தை நடாத்த வந்து கூடாரமிட்டிருந்த இடங்களுக்கு மேலாக 150 மீட்டர்களுக்கு கீழாகப் பறந்து ஆத்திரமூட்டியது.

சோவியத் யூனினின் கேஜிபி கிழக்கு ஜேர்மனியின் STASI இவைகளைக் காட்டிக் காட்டி மக்களைப் பயமுறுத்திய ஏகாதிபத்தியங்கள் அவற்றைவிட பல நூறுமடங்கு பாதுகாப்புக்களைக் கட்டியடைத்தனர். கிழக்கு ஜேர்மனியின் மதிலைக் காட்டிக் காட்டி கொம்யூனிச எதிர்ப்பை வளர்த்தவர்கள் தாமே புதிய இரும்பு மதில்களை அமைத்து அதனுள் பதுங்கிக்கொண்டனர். உச்சி மகாநாட்டின் 8 கதாநாயகர்களும் 8 கிரிமினல்களைப் போல இரும்புக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டனர். கைலிக்கன் டாம் ஜனநாயகமற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சுதந்திர மேற்குலகின் ஜனநாயகத் தலைவர்கள் இரும்பு வேலிகளை அமைத்து போலிஸ் இராணுவ உளவுப் படைகளைச் சுற்றிக் காவலுக்கு வைத்து மகாநாடு நடத்தும் நிலமை ஏன் ஏற்படுகிறது? ஏன் சொந்த மக்களுக்குப் பயந்து இரும்பு மதில் எழுப்புகிறார்கள்? அரச ஊடகங்கள் ஏன் மக்கள் மத்தியில் வன்முறையாளர்களையும் கலகஞ்செய்பவர்களையும் தேடுகிறார்கள்?

முதலாளித்துவக் கட்சிகள் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் எல்லாம் ஒருமனதாக மக்களை நோக்கி Kein Gewalt (வன்முறை வேண்டாம்) வன்முறைகளைத் துறக்க வேண்டும், கைவிட வேண்டும் என்று கேட்டார்கள். காவல்துறைக்கு மட்டும் 10 மில்லியன் யூறோக்கள் பாதுகாப்புச் செலவு நிதியாக ஒதுக்கப்பட்டது. முழு மகாநாட்டுக்கும் 100 மில்லியன் யூறோவுக்குமதிகமாகச் செலவு செய்யப்பட்டது. ஆனால் ஜேர்மனி ஆபிரிக்காவுக்கென்று வழங்கிய உதவி நிதி 800 மில்லியன் யூறோ மட்டுமே.

புஷ்சுக்கு வயிற்றுவலி. புஷ் மதுசாரம் கலவாத பியரை விஷேடமாக அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து குடித்தான். வயிற்றுவலி காரணமாக அடிக்கடி மற்ற தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்டு வெளியே சென்று வந்தான். புஷ் சைக்கிள் ஓட்டினான், அதற்காக விஷேடமான Mountain Bike ஒன்றை அமெரிக்காவிலிருந்து காவி வந்தான். அங்கேலா மார்க்கல் தனது விருந்தினருக்கு விஷேடமாக தருவிக்கப்பட்ட செரிப் பழங்களைப் பரிமாறினார். ஜேர்மானிய அதிபர் தன் கெட்டித்தனத்தால் புஷ்சுக்கும் விளாடிமீர் புட்டினுக்கமிடையே முரண்பாடுகளைத் தீர்த்து வைத்தார் என்ற சிறுபிள்ளைச் செய்திகளே ஊடகங்களில் பேசப்பட்டன.

ஐரோப்பிய கூட்டமைப்புபோல் G-8கூட்டு நாடுகளும் தகர்ந்து அழிவது முதலாளித்தவத்தின் சொந்த விதியாகும். இது மேற்குலக எகாதிபத்தியங்கள் தகரும் காலம். மேற்குலகத் தொழிலாள வர்க்கம் தனது பழைய போராட்டப் பாரம்பரியங்களையும் புரட்சிகர வரலாறுகளையும் மீண்டும் தேடிக் கண்டெடுக்கும் காலம். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க வளர்ச்சிகள் கட்டாயமாக மேற்குலக வல்லாதிக்கத்த பறித்துவிடும் காலம். டைனசோர் மாதிரி மறைந்தொழிந்து விட்டதாகக் கூறப்பட்ட சோஷலிசத்தின் இடிமுழக்கங்கள் இனிக் கேட்கத் தொடங்கும். பொருளாதார வாழ்வு பறிக்கப்பட்ட மக்கள் சரிகளோடும் பிழைகளையும் இணைத்துப் போராடுவார்கள். தோல்விகளில் இருந்து வெற்றிக்கான வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். இதன் மூலம் அரசியல் மயப்படுவார்கள். மாணவர்கள், வேலையற்றவர்கள், உதிரிகள் எனப் பல்வேறு ஒடுக்கப்படும் சக்திகளும் தொழிலாளர்கள் தலைமையில் இணையும்பொழுதே பலம்பெறலாம் என்ற படிப்பனையைப் பெறுவார்கள். அரசியற் போராட்டத்தில் கற்கால வகைப்பட்ட கல்/போத்தல் எறிதல், பொலீசை அடிப்பதல்ல போராட்டம். பிரமாண்டமான பொது வேலை நிறுத்தங்களும் அரச பொறியமைப்பை முடக்குவதும்தான் உண்மைப் போராட்டத்தின் மையமென்பதை எதிர்காலம் காட்டும். தொழிலாளி வர்க்கம் மற்றய சித்தாந்த வியாகூலங்களிலிருந்தும் மற்றைய வர்க்கங்களின் ஆளுமைகளிலிருந்தும் நீங்கி வர்க்க சுயாதீனமடைந்து போல்ஷவிச முன்னுதாரண ஜனநாயக மத்தியத்துவ உருக்குறுதியாக ஸ்தாபனப் டுவதுதான் பலம் என்பதை மீண்டும் தேடிப் பிடிக்கும். G-8 எதிர்ப்புப் போராட்டமானது ஓர் உலக இயக்கமாகவே கருக்கொண்டு வளர்ந்துகொண்டு வந்தது. அது தொடர்ந்த பல போராட்டங்களின் மூலம் மாக்ஸ்சிய விமர்சன மரபு வழிகாட்ட, உலக சோஷலிசமாகப் பரிணாமம் அடையும்.

கடந்த முப்பது வருடங்களாக G- மகாநாடு நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா, ஜேர்மனி ,பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான், கனடாவுடன் ருஷ்யாயாவும் ஐரோப்பியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளும் இதில் பங்கெடுக்கின்றனர். உண்மையில் G-8 உலக வங்கி, சர்தேச நாணய நிதியம் போன்றவற்றின் வேறோரு முகமாகவே இருக்கிறது. இந்த நாடுகளின் வருடாந்த இராணுவச் செலவீனம் 750 பில்லியன் டொலர்களாகும். அமெரிக்கப் பொருளாதாரச் சஞ்சிகையான Fobes இன் ஆய்வுப்படி உலகில் 946 பில்லியனேயர்களும் 750000 மில்லியனேயர்களும் உள்ளனர். இந்த 946 பில்லியனேயர்களின் சொத்துமட்டும் 3.5 றில்லியன் டொலர்களாகும். இது 2006 ஆம் ஆண்டைவிட 35 வீதத்தால் அதிகரித்ததென்று இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. உலக மக்கள்தொகையில் 10 வீதமானவர்களிடம் 70 வீதமான உலகச் செல்வமுள்ளது. 80 வீதமான வங்கிகள், பெரு நிறுவனங்கள் இவர்களிடம் உள்ளது. மறுபுறம் உலகில் 1 பில்லியன் மக்கள் தினசரி 1 டொலர் வருமானம் பெறுகிறார்கள். உலகின் மக்கள் தொகையில் 40 சதவீதமான 2.6 பில்லியன் மக்களின் நாளாந்த வருமானம் 2 டொலரிலும் குறைவாகும். 1996 இல் 801 மில்லியனாக இருந்த வறுமைக்கோட்டுக்குக் கீழானவர்களின் தொகை 2003ல் 834 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டில் அபிவிருத்தியடையும் நாடுகளின் மொத்தக் கடன்தொகை 1980 இல் 600 பில்லியன் டொலர்களாக இருந்தது. 2006 ஆம் ஆண்டில் இது 3.2 றில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

42 வறுமைப்பட்ட நாடுகளால் தமது மக்களுக்கு கல்வி சுகாதாரம் உணவுற்பத்தி வீட்டுவசதி தொழில் இவைகளை ஏற்படுத்தித் தர முடியவில்லை. உலகமயமாதலால் இந்த நாடுகளிலுள்ள அரசுத் துறைகளைத் தனியார் மயமாக்குவது தீவிரமடைந்துள்ளது. கொஞ்ச நஞ்ச உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தேசியப் பொருளாதாரமும் இல்லாது ஒழிந்துவிட்டது. 1980களுக்கு முன்பு வருடம் 5 பில்லியன் டொலர் அளவென்றிருந்த தனியார்மயமாக்கல் 1980களுக்குப் பின்பு 20 முதல் 30 பில்லியன் டொலர்களாக வருடாந்தம் அதிகரித்தது. இது 1991- 1996 க்கு இடையில் 60 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. கிழக்கைரோப்பாவில் இது மிகத் தீவிரமாக நடைபெற்றது. 1970 இல் 20 செல்வந்த நாடுகளின் தலா வருமானமானது 20 ஏழை நாடுகளது மக்களது தலா வருமானத்தை விட 19 மடங்கு மட்டுமே அதிகமாக இருந்தது. இது 1990இல் 82 மடங்காகவும் 2000 ஆண்டுகளில் 131 மடங்காகவும் அதிகரித்துள்ளது. இன்று ஏழை நாடுகளில் 30 000 குழந்தைகள் தினசரி பட்டினியால் இறக்கிறார்கள். 3 செக்கனுக்கு ஒரு குழந்தை இறக்கிறது. G -8 மகாநாட்டில் ஒர் அரசுத்தலைவர் 2 நிமிடங்கள் பேசுவதற்கிடையில் 40 குழந்தைகள் பசியால் இறந்துவிடுவார்கள்.

உள்நாட்டு யுத்தம், பட்டினி, சுரண்டல் இதுதான் G -8 நாடுகள் இந்த ஏழைநாடுகளுக்குத் தந்த பரிசாகும். 2005ல் G-8 நாடுகள் கூடிய போது தமது தேசிய வருமானத்தில் 0.7 சதவீதத்தை அபிவிருத்தி உதவியாகத் தருவதாக ஒத்துக் கொண்டன. ஆனால் 0.4 வீதம் மட்டுமே வழங்கின. அதிலும் ஜேர்மனி 0.3 வீதம் மட்டுமே ஒதுக்கியது. ஐநாவின் உணவுக்கான உரிமை அமைப்பைச் சேர்ந்த GEAN ZIEG, G -8 பற்றிக் கருத்துக் கூறுகையில் இவர்களின் வறுமைக் கெதிரான போராட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்கிறார். உலகச் சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வறிஞரான TIAS MUENCH MAYER, G -8ன் சூழல் பாதுகாப்புப் பற்றிய தீர்மானங்கள் கடந்தகாலத் தீர்மானங்கள் போலவே எழுதி வைப்பதோடு மட்டுமே நின்றுவிடும் என்கிறார். சீனா, இந்தியா, பிரேசில் உட்பட சில ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சி G -8 உறுப்புரிமை நாடான ருஷ்யாவை அவர்களை நோக்கி இழுத்துச் செல்கிறது. ருஷ்யாவுக்கு எதிராகப் போலந்து செக் குடியரசுகளில் நிறுத்தப்படவுள்ள ஏவு கணைகள், இதற்கெதிரான மேற்குலகின் பயமுறுத்தலாகும்.

உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் பிடியிலிருந்து லத்தீன் அமெரிக்க மூன்றாமுலக நாடுகள் விடுபட்டு ஆசிய மூலதனப் பிடியில் வருகின்றன. 2004ல் லத்தீன் அமெரிக்க நாடுகள் உலக வங்கியிடம் பட்டிருந்த கடன் 81 பில்லியன் டொலர்களாகும். இப்போது 14 பில்லியன் டொலர்களாக அது குறைந்துள்ளது. ஏழைநாடுகளுக்கான அபிவிருத்தி உதவி பற்றிய ஆய்வாளரான Ulrich post மற்றும் ATTAC அமைப்பின் ஆபிரிக்கா விவகாரங்கள் குறித்த நிபுணர்களான BOB GELDOF , BONO போன்றோர் இன்றய G -8ன் வாக்குறுதிகள் எல்லாமே வெறும் பிரச்சார வகைப்பட்டவை என்றே கூறுகின்றனர். கத்தோலிக்க உதவி நிறுவனமான CAFOD குழந்தைகட்கான உதவி நிறுவனமான World vision என்பனவும் இக் கருத்துக்களையே கொண்டுள்ளன. G-8 நாடுகள் அறிவித்துள்ள 60 பில்லியன் டொலர் அபவிருத்தியுதவி நிறைவேறாத வாக்குறுதி என்று Die Deutsche Welt Hunger Hilfe போன்ற முதலாளித்துவ தன்னார்வ நிறுவனங்களே அவநம்பிக்கைப் படுகின்றன. G -8 மகாநாடு உலக சமாதானம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் Stockholm நகரில் இயங்கும் SIPRI ஆய்வு நிறவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2006ல் உலகில் 1.204 றில்லியியோன் டொலர் ஆயுதத்திற்குச் செலவு செய்யப் பட்டுள்ளதென்றும் -இதில் அமெரிக்கா மட்டும் 42 சதவீதத்தை அதாவது 528.7 பிலியன் டொலர்களை இராணுவத்திற்காகச் செலவிட்டுள்ளது- இந்த வருடம் அமெரிக்காவின் இராணுவச் செலவீனம் உலகின் முழு இராணுவச் செலவீனத்தின் 50 வீதத்தையும் தாண்டிவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

G – 8 எதிர்ப்பு அணிகள்:

G – 8 எதிர்ப்பு இயக்கம் தனது நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தனது அரசியல் நோக்கம், போராட்ட வழிமுறைகள் பற்றிய பிரச்சாரங்களைச் செய்து வந்ததுடன் கடுமையான பொலிஸ் அடக்குமுறைக்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதால் போராடும் மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டநிபுணர் குழுக்களையும் அமைத்திருந்தனர். ஜேர்மனியின் சட்டத்தரணிகளின் அமைப்பான RAV உடன் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஊர்வலத்திற்கான அடிப்படை உரிமைப் பாதுகாப்புக் குழு ஒன்றை அமைத்தது. G-8 எதிர்ப்பு இயக்கத்திற்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் இந்தக் குழு பொலிசின் வன்முறைகளைக் கண்காணித்தனர். RAV வின் சட்ட வல்லுனர்கள் ‘LEGAL TEAM ‘என்று பொறிக்கப்பட்ட சீருடைகளை அணிந்திருந்தனர். பொலீசால் கைது செய்யப்படுவோர், பொலிசால் தாக்கப்படுவோர் போன்றவர்களை இவர்கள் கண்காணித்து சட்டரீதியான உதவி புரிந்ததுடன் சகலவற்றையும் ஆவணப்படுத்தினர். கைதுசெய்யப்படும் போது ஊர்வலக்காரர்கள் தமது பெயரைச் சட்டத்தரணிகளுக்குக் கேட்கும்படி உரத்துக் கூறவேண்டும் என்ற ஒழுங்கையும் செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அல்லது பொலிசால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தம்பேரைச் சொல்லி உரத்துச் சத்தமிட்ட போது பொலிசார் அவர்களின் வாய்களை அடைத்தனர். கண்காணிக்கவும் சட்ட உதவி புரிவதற்காகவும் Legal Team உறுப்பினர்கள் மேலும் பொலீஸார் தாக்குதல் நடாத்தினர். அவர்கள் கீழே தள்ளப்பட்டனர். பயமுறுத்தப்பட்டனர். பொலிஸார் அவர்கள் மேல் வசைச் சொற்களைப் பொழிந்தனர்.

தமது சட்டபூர்வமான நடவடிக்கைகள், இந்த வகையில் தடுக்கப்பட்டன என்று RAV வின் சட்டத்தரணிகள் குழுவில் ஒருவரான Michael E Hofmann இடதுசாரிப் பத்திரிகையான Jungewelt பத்திரிகைக்குத் தெரிவித்தார். பொலிசால் அநீதியாக, சட்டவிரோதமாக 1200 எதிர்ப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆறு நாட்கள்வரை அவர்கள் சிறைவைக்கப் பட்டனர். இக்காலத்தில் சட்டத்தரணிகளைச் சந்திக்கக்கூட கைதிகள் அனுமதிக்கப்படவில்லை. தமது தோழர்களைப் பொலீஸ் வன்முறையிலிருந்து காக்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை, உடற்காயம் ஏற்படுத்தியமை என்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மேல் சுமத்தப் பட்டன. Legal Team 24 மணிநேரமும் செயற்பட்டது. மற்றய சமஷ்டி மாநிலங்களிலிருந்து வந்து தங்கியுள்ள பொலிசாருக்குப் போதிய தங்குவசதி இல்லை, சுடுதண்ணீர் வசதியில்லை, அரசு மோசமான ஏற்பாடுகளைப் பொலீசுக்குத் தந்துள்ளது என ஊடகங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் பொலீஸார் 5 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓய்வெடுத்தும் உறங்கியும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால் G – 8 எதிர்ப்பு இயக்கத்திற்காக ஜேர்மனியில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தாமே அமைத்த தற்காலிகமான கூடாரங்களில் மின்சாரம், போதிய உணவு வசதி, நீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மேல் பொலீஸ் உலங்குவானூர்திகள் அடிக்கடி பறந்தன. ஜேர்மானிய விமானப் படை விமானங்கள் அடிக்கடி தாழப் பறந்து சென்றன. பொலீஸ் சுற்றிவளைத்துத் தண்ணீர் பீச்சியடித்தது. பொதுவாகவே போலீஸ் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்திலிருந்து ஒரு கல்லெறியப்பட்டாலே தேனீக் கூட்டம்போல் சகலரையும் தாக்கியது. பொலீஸ் கிட்டத்தட்ட ஒவ்வொருவரையும் வீடியோப் படம் எடுத்தது. பொலிஸ் மற்றும் உள்நாட்டு அமைச்சின் செய்திகள், படங்கள், அறிக்கைகளே தினசரி எல்லா ஊடகங்களிலும் வெளிவந்தன. G -8 எதிர்ப்பு இயக்க சக்திகளின் கருத்துக்கள் விதிவிலக்காகவும் அரைகுறையாக அழித்தும் திருத்தியும் வெளியிடப்பட்டன. 80000 பேருக்கு மேல் கலந்து கொண்ட ஊர்வலத்தை 25000 பேர் கலந்துகொண்டதென்ற பொலிசாரின் பொய் அறிக்கையையே செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.

வழக்கமாக குழப்பகாரர்கள் பற்றி எழுதி வந்த ஊடகங்கள் எதிர்ப்பு இயக்கங்கள் தொடங்கியவுடன் Zwarzen Block பற்றி திகில் கதைகளை எழுத ஆரம்பித்தன. கறுப்பு உடையணிந்து தலைகளையும் முகத்தையும் மூடிக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் படங்கள் தொலைக்காட்சியில் தோன்றி மக்களை அச்சுறுத்தின. அவர்களை முழுத் தேசத்தையம் அழித்துவிடும் பயங்கரவாதிகளாக ஊடகங்கள் காட்டின. போலீஸார் தலைக்கவசமணிந்து உடல் முழுவதையும் மத்தியகாலப் போர்வீரன் போல ஆடைகள் அணிந்து முகந்தெரியாத கோலத்திலே தோன்றினர். ஊர்வலக்காரர்களை விடப் பத்துமடங்கு ஆடை ஆயுதம் தரித்த பொலீசுக்கு மக்கள் அஞ்ச வேண்டுமென்று ஊடகங்கள் சொல்லித்தரவில்லை. கறுப்பு ஆடையணிந்த தலைகளையும் முகங்களையும் மூடிய ஆர்ப்பாட்டக் காரர்களை தடைசெய்வது பற்றி பொலீசும் ஊடகங்களும் பேசின. உள் நாட்டு செனட்டர் Ehrhad koerting கறுப்பு ஆடைகளைத் தடைசெய்வது பற்றிப் பேசினார். கறுப்பு ஆடை அணிந்தவர்களை அடக்க வன்முறை தேவை என்று வாதிக்கப் பட்டது.

ஆப்கானிஸ்தானில் 900 கிலோகிராம் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றவர்கள் ஜேர்மனியுள் கறுப்புடையணிந்து கல்லும் போத்தலும் வைத்திருந்தவர்களை தலிபான்களைப் போன்று வேட்டையாட முயன்றனர். ஒரு குண்டூசி ஏந்தியவர்கூட ஜேர்மனிய மண்ணில் பயங்கரவாதியாக நின்றார். பெரும்பகுதி ஊடகங்கள் அனைத்தும் பொலீசுக்குச் சார்பாக இருந்தன. G -8 எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கம், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டு, அவர்கள் ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பயன்படுத்தி கலகம் விளைவிப்பவர்களாக, பொதுச் சொத்துக்களைச் சேதம் விளைவிப்பவர்களாக, போலீஸ்சைத் தாக்கி காயம் விளைவிப்பவர்களாக காட்டப்பட்டனர். பொலீஸார் மக்களையும் பொதுச் சொத்துகளையும் பாதுகாப்பவர்களாக ஜனநாயகத்திற்காகத் தியாகம் செய்பவர்களாக ஆக்கப்பட்டனர். 19 யூனில் Bild பத்திரிகைக்குப் பேட்டியளித்த Patrick .P என்ற பொலீஸ்காரன் தான் கடமையைச் செய்ய முயன்ற போது ஊர்வலக்காரர்கள் தன்மேல் 25 கற்களை வீசி எறிந்ததாக கற்களை எண்ணிக் கணக்கைச் சொன்னான். பல நூற்றுக்கணக்கான ஊர்வலக் காரர்கள் படுகாயமடைந்திருந்தனர். அவர்களால் பொலீஸ் – அரச வன்முறைக்கெதிராக எந்த முறைப்பாட்டையும் பத்திரிகையாளர்களிடம் கூற முடியவில்லை. எந்த வழக்கும் கணக்கும் போலீஸ்மேல் இல்லை. காயம்பட்டோர் சிகிச்சை செய்வது போன்ற ஒரு படமும் வெளியிடப் படவில்லை. சந்திரமண்டலத்திற்குச் செல்பவர்கள்போல் ஆடையணிந்து தலை, முகம், கைகால், மார்பு சகல இடமும் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலீஸ்காரர்களே காயத்திற்கு மேல் காயம் அடைந்ததாக சிகிச்சை பெறுவதாக ஊடகச் செய்திகள் கூறின.

பொலிஸ் கூட்டாக அணியணியாக வலைப்பின்னலைப்போல் மக்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். கைது செய்தார்கள். இங்கு அவர்கள் காயப்படுவதற்கான சாத்தியம் மிக மிக அரிதாகும். விதிவிலக்காக தனியாக அவர்கள் அகப்பட்ட சமயங்களில் மட்டுமே அவர்கள் காயமடைந்தார்கள். G -8 எதிர்ப்பு இயக்கத்திலிருந்த இளைஞர்கள் மாணவர்கள் பொலீசாருடன் எப்பொழுதும் மோத முயன்றார்கள் என்றது மிகைப்பட்ட செய்தியாகும். தற்காப்பு, தப்பிச் செல்வது தம் தோழர்களை மீட்பது இவைகட்கே அவர்கள் பெரும்பாலும் முயன்றனர். Zwarzen Block பொலீசை ஊர்வலத்தில் ஊடுருவவிடாமல் கூட்டத்தைக் குழப்பவிடாமல் தடுக்கும் முன்னணிப் படையாகவே செயற்பட்டது. ஒரு பொலீஸ் காயப்படுவதெனில் ஆகக் குறைந்தது 10 ஊர்வலக்காரர்கள் காயப்பட்டால் மாத்திரம் சாத்தியப்படக் கூடியது. ஆயுதமற்ற ஒழுங்கமைக்கப்படாத அனுபவமற்ற இந்த இளம் மனிதர்கள் ஆயுமேந்திய வன்முறையைத் தொடர்ச்சியாகப் பிரயோகிப்பதில் அனுபவமுடைய பொலீசாருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை விடப் பச்சைப்பொய் எதுவுமில்லை.

கலவரம் செய்பவர்கள் தடி, கல், போத்தல், பெற்றோல் குண்டுகள், உருளைக்கிழங்கு போன்றவற்றால் ஆயுதபாணியாகி உள்ளதாக ஊடகங்கள் திரும்பத் திரும்ப மக்களுக்குச் சொல்லி வந்தன. இவையே உலகத்தின் மிகப் பயங்கரமான ஆயுதங்கள் என்று நம்ப ஜேர்மானியர் ஆரம்பித்தார்கள். ஜேர்மனியில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் உள்ள அணு ஆயுதங்களை விடவும், ஜேர்மனிய நிறுவனங்கள் தயாரிக்கும் இராசயன உயிரியல் ஆயுதங்களை விடவும் இவைகளே பயங்கரமானவை என்று ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். கலவரஞ் செய்பவர்கள் ஆஸ்திரியா, பல்கேரிய, ஜப்பான், சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ருஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளதாக இந்தப் பத்திரிகையாளர்கள் எழுதியதுடன் அவர்கள் கலவரஞ் செய்யவே சொந்தப்பணம் செலவழித்து நேரத்தை ஒதுக்கி நீண்ட தூரம் பயணித்து நாடுவிட்டு நாடு வந்துள்ளதாய் சகல அறிவார்ந்த மக்களும் நம்ப வேண்டும் என்று கேட்டார்கள். எதிர்ப்பு இயக்கக்காரர்கள் முதுகில் சுமந்துவந்த பைகளுள் கற்கள் நிரப்பப்பட்டிருப்பதாக ஊடகக் கற்பனைகள் விரிந்தன. G -8 நிகழ்ச்சிகள் யூன் 2ம் தேதி தொடங்கின. அடுத்த நாளே பத்திரிகைகள் ஆயிரம்பேர் காயமடைந்ததாக எழுதின. ஆதில்433 பொலீஸார் காயடைந்துள்ளதாகவும் 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 16 வெளிநாட்டவர் அடங்குவர் என்றும் செய்திக் குறிப்புக்கள் இடம்பெற்றன. இதில் காயப்பட்ட பொலீஸ் தொகை பல மடங்கு திரித்துச் சொல்லப்பட்டது. பொதுவாகவே காயம்பட்டதாய் எழுதும் போது அவர்கள் எந்த வகையில் காயமடைந்தார்கள், கை கால் முறிந்ததா, கழுத்து திருகுப்பட்டதா என்ற விவரணங்கள் பத்திரிகையில் வெளிவருவது வழக்கம். ஆனால் போலீஸ் காயப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தபோது இத்தகைய தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

காயம்பட்டு மருத்துவநிலையங்களில் நீண்ட சிகிச்சை பெறுவதான தகவல்களும் இடம்பெறவில்லை. குழப்பம் விழைவிப்பவர்களுக்கு 10 வருடச் சிறைத் தண்டனை காத்திருப்பதாக 4.6.2007 ல் BZ எழுதியது. பொலீஸ் அறிக்கைகஞம் குறிப்புகளும் எந்த ஊடகம் சார்ந்த சுதந்திரத் தன்மையோ விமர்சனமோ இன்றி வெளியிடப்பட்டன. உண்மைகள் பற்றிய கவலையால் எந்த ஊடகங்களும் பாதிக்கப்படவில்லை. ஒருபகுதி மக்கள் குழப்பம் விழைவிப்பவர்களைச் சபிக்க ஆரம்பித்தார்கள். ஜேர்மனியில் சுதந்திரம் அதிகரித்து விட்டதாலேயே இது நடைபெறுவதாக எண்ணுபவர்களும் தென்பட்டார்கள். ஓட்டோநோமன் குழுக்களுடன் சேர்ந்து தாம் செயற்படப் போவதில்லையென்று G -8 எதிர்ப்பு அமைப்பான Attac செய்தி வெளியிட்டதுடன் பொலீசையும் கண்டித்திருந்தது. ஆனால் ஊடகங்கள் இவர்களுடனான முரண்பாட்டை விரிவு படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டன. Attac பொலீசைக் கண்டனம் செய்ததை வெளியிடாமல் ஓட்டோநோமன்களைக் கண்டித்ததை மட்டுமே பல ஊடகங்கள் வெளியிட்டன.

ஓட்டோனோமன்கள் அல்லது Zwarzen Block ஆகியோர் அரசியல் மயப்படாத இளம் பருவ அரசியற் கிளர்ச்சியாளர்களாக இருந்தனர். இவர்கள் Realen Socialismus (மெய்யான சோஷலிசம்) பேசிய போதும் உழைப்பாளர்கள் தொழிற்சங்கங்கள் மக்கள் எழுச்சிகள் இவைகட்காகக் காத்திருக்கப் பொறுமை போதாத மாணவர்கள் இளைஞர்கள் வேலையற்றவர்கள் மற்றும் நடுத்தரவர்க்க பொறுமையின்மை வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் சாகசவாதிகள் இவர்களிடையே நிரம்பியிருந்தனர்.இவர்கள் பாசிச எதிர்ப்புக் குழுக்களோடு ஒற்றுமைப்பட முடியாதிருந்தனர். 1970களில் எழுந்த பசுமைக்கட்சியின் அரசியற் கட்சியின் குணாம்சங்களை உடையவர்களாக 1980களில் இவர்கள் மேற்கு பேர்லினில் உருவாகினர். அணுசக்தி உற்பத்திக் கழிவுகளுக்கு எதிரான போராட்டங்களில் இவர்கள் முன் நின்றனர். ஓட்டேனோமன் அமைப்பைச் சேர்ந்த Geronimo என்பவர் தமது வன்முறை போலீஸ் வன்முறைக்கு எதிராக மட்டும் எழவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். வன்முறையில் நாட்டமுள்ள சக்திகள் தம்அமைப்பில இருப்பதை அவர் ஏற்றார். பத்திரிகைகள் Zwarzen Blick இன் எண்ணிக்கை 2000 என்று எழுதியிருந்த போதும் இவர்கள் தொகை ஆயிரம் மட்டிலேயே இருந்தது. ஜி-8 எதிர்ப்பு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது இவர்களின் தொகை சொற்பமாகும். ஆனால் ஊடகங்கள் இவர்களையே சுற்றிச் சுற்றி வந்தன. இவர்களுள் பெருமளவு அரச உளவாளிகள் புகுந்திருந்ததற்கான ஒரு தொகை ஆதாரங்களும் வெளிவந்தன.

ஓட்டோனோமன்கள்போல் கறுப்பு ஆடைகள், தலையை முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தபடி பொலீஸ் உளவாளிகள் ஊர்வலங்களில் புகுந்து பொலீசுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டனர். இதன்மூலம் G-8 எதிர்ப்பு இயக்கங்களே பொலீசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாகவும் இதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பொலீஸ் இருப்பதாகவும் அபிப்பிராயங்கள் உருவாக இவை உதவின. போலீஸ் உளவாளிகளைத் தேடிப்பிடிப்பதில் G – 8 எதிர்ப்புக் குழுக்கள் ஈடுபட்டன. இவர்கள் ஒரு பிறேமனைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல் ஆடைஅணிந்திருந்த உளவுப் பொலீசைப் பிடித்தனர். அவனுடன் இருந்த மேலும் 4 உளவுப் போலீசார் தப்பி ஓடி பொலீஸ் இருந்த பகுதிகளில் புகுந்து கொண்டனர். தாம் பிடித்த பொலீஸ் உளவாளியைச் சட்டத்தரணிகள் மூலம் பத்திரிகையாளரிடம் அறிமுகம் செய்து பின்பு எதிர்ப்பாளர்கள் அவனைப் போலீசில் ஒப்படைத்தனர். பொரும்பாலான ஜேர்மனிய ஊடகங்கள் இச் செய்தியைப் பொருட்படுத்தவில்லை. இடதுசாரி ஊடகங்கள் மட்டுமே செய்திகளையும் உளவாளிகளின் படங்களையும் வெளியிட்டன. பொரும்பாலான பொலீசுடனான மோதல்கள் போலீஸ் உளவாளிகளின் ஆத்திரமூட்டல்களால் ஏற்பட்டன என்று இடதுசாரிப் பத்திரிகைகள் எழுதின.

G -8 எதிர்ப்புக் கலகக்காரர்களைக் கட்டுப் படுத்த ஜேர்மனியின் விஷேட பொலீஸ் அதிரடிப் படையான GSG -9 தாக்குதலுக்கு இறக்க வேண்டுமென்று CDU – CSU போன்ற கட்சிகள் கேட்டன. பொலீஸ் வாகனங்களின் மூலம் தண்ணீர் பீய்ச்சப்பட்டதில் பலரின் கண்கள் பாதிக்கப்பட்டன. வழக்மாக CN,CS போன்ற இராசாயனங்கள் நீருடன் கலந்து வீசி அடிக்கப்படுவது வழக்கம். கண்ணீர்ப் புகைக் குண்டுகளோடு வாயுக் குண்டுகளும் ஊர்வலக்காரர்கள் மீது வீசப்பட்டன. இது உடல் நலனுக்குக் கேடானதோ உயிராபத்து விளைவிப்பதோ அல்ல என்று பொலீஸ் கூறியது. இதை வீசியடித்ததால் கண் திறக்க முடியாது. மூச்சுவிட முடியாது. அதிர்ச்சி ஏற்படும். இதை ஊர்வலக்காரர்களோ சாதாரண பொது மக்களோ போலீசுக்கு எதிராகப் பிரயோகித்தால் அதைப் பறித்துப் போலீசுக்கு எதிராக வீசியடித்தால் அது போலீசுக்கெதிரான கொலை முயற்சி என்று சட்டசான்றுகள் கூறுகின்றன. பொலீசுக்குக் கல் எறிவது கூட கொலை முயற்சியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசியல்வாதி ஒருவன் கூறினான்.

பொலீஸ் வன்முறையால் காயமடைந்த G -8 எதிர்ப்பில் கலந்துகொண்ட மக்களுக்கு முதலுதவி அளிக்கவிடாமல் போலீசார் மருத்துவர்களைத் துரத்தினர். பெர்லினைச் சேர்ந்த மருத்துவரான Dr.Med Michael Kronawitter போலிசாரால் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது போலீசார் அதைத் தடுத்து அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு வைத்தியசாலையோடு இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டபோது மருத்துவருக்கான உடையுடனும் விஷேட மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது அணியும் மேலங்கியும் அணிந்திருந்தார். அவரைக் கைதுசெய்து தற்காலிகமாக உருவாக்கப் பட்ட ஒரு பழைய தொழிற்சாலை ஒன்றின் பகுதியிலே அடைத்தனர். “நாம் நாய்களைவிட மோசமாக நடாத்தப்பட்டோம். நான் ஒரு குவான்ரனமோ கைதியைப் போல் உணர்ந்தேன். ஜேர்மனியிலும் இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை”யென்று Jungewelt பத்திரிகையின் நேர்காணலின்போது அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட எல்லோர் மீதும் பொது அமைதியைக் குழப்பியது, உடற்காயம் விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. கைது செய்யப்பட்ட ஒரு பகுதியினர் அடுத்த நாளே நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அன்றய தினமே விசாரித்து உடனடியாகத் தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆறு மாதம் முதல் 10 மாதம் வரையிலான ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தபோது சட்டத்தரணிகளைச் சந்திக்கும் உரிமை மறுக்கப்பட்டதுடன் நீதிமன்ற விசாரணையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சாட்சிகள் எவரையும் ஏற்க நீதிமன்றம் மறுத்து பொலீஸ் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துத் தண்டனைகள் வழங்கப்பட்டன.

சித்திரவதை, யுத்தம் மற்றும் இராணுமயப்படுத்தலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த Judith Demba கூறுகையில் மாதக் கணக்கில் G -8 எதிர்ப்பாளர்கள் கிரிமினல்களாகக் கட்டமைக்கப்பட்டனர். பொலீஸ் சீருடையுடனேயே எதிர்க் கலகம் செய்தது. இது மக்களின் உரிமை நிறைந்த தேசமா? அல்லது போலீஸ் சர்வாதிகார நாடா? ஒரு சாதாரண எதிர்ப்பு இயக்கத்தை நடாத்த முடியாத அளவுக்கு ஒடுக்குமுறைகள் மக்கள்மேல் அரச வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. உலகில் ஒவ்வோரு 5 செக்கனுக்கும் ஒரு குழந்தை பசியால் அல்லது வறுமையால் இறக்கும்பொழுது எண்ணிக்கையற்ற மக்கள் யுத்தத்தில் இறக்கும்பொழுது சித்திரவதை செய்யப்படும்போது இங்குமட்டும் சமூக அமைதி நிலவுமென்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று அவர் கேட்டார்.

உண்மையில் பொலீஸார் சீருடை அணிந்த கலகக்காரர்களாக இருந்தனர். கலகஞ் செய்பவர்கள் அமைதிகாக்கும் சாதாரண பொது மக்கள் என்று ஊர்வலத்தில் அவர்கள் யாரையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரையுமே எதிரிகளாகக் கருதினர். கலகக்காரர்களுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பதவி பொலீசுக்கு ஏற்கனவே ஊடகங்களால் வழங்கப்பட்டு இருந்தது. கோமாளிகள் போல் வேடமணிந்து G -8 அரசுத் தலைவர்களுக்கு எதிராக வேடிக்கை புரிந்தவர்களைக் கூடக் GLOWNS ARMY என்று ஊடகங்கள் அழைத்தன எனில் ஊடகங்களின் பொது மனோபாவத்தை விளங்கிக்கொள்ள முடியும். Dredon நகர மக்கள் முதல்முறையாக DDR அரசைச் சர்வாதிகார அரசு என்று சொல்லிவந்த மேற்கு ஜேர்மனியின் முதலாளித்துவப் பொலீஸ் அரசை கண்டஞ்சித் தமது வீடுகளில் பதுங்கிக் கொண்டனர். Dreston நகரம் உள்நாட்டு யுத்தம் போல் தெருக்கள் பாலங்கள் சந்திகள் எங்கும் பொலீசாலும் இராணுவத்தாலும் நிரம்பிக் காணப்பட்டன.

Green Peace தொண்டர்களின் படகுகள் G-8ன் சுற்றாடல் பாதுகாப்புக் கொள்கையை எதிர்த்து தடை செய்யப்பட்ட நீர்ப்பரப்பில் பிரவேசித்தபோது ஜேர்மனியப் போலீஸ் படகொன்று அதை மோதி அதன்மேல் ஏறி நின்றது. அதிலிருந்து 4 Greenpeace தொண்டர்கள் காயமடைந்தனர். தொலைக்காட்சியில் இது ஓர் யுத்தப் படம் பார்ப்பது போல் இருந்தது. அமைதியான ஆயுதம் எதுவுமற்ற Greenpeace தொண்டர்களின் முயற்சி ஆயுதமேந்திய போலீஸ்சாரால் மோதித் தடுத்து நிறுத்தப் பட்டது. பெரும்பான்மை ஊடகங்கள் இதைக் கண்டிக்கவில்லை. சில ஊடகங்கள் பொலீசும் அதில் காயப் பட்டிருப்பதாக வருத்தத்தோடு செய்தகள் வெளியிட்டிருந்தனர்.

மோதிய பெரிய படகிலிருந்த போலீசின் கைவிரல் நகம் கூட கிழிந்திருக்குமா என்பது சந்தேகமே. இராணுவத்தின் Fennek புதிய அதிநவீன தாங்கிகள் விமான நிலையம் பாலங்கள் எங்கும் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தன. G -8 எதிர்ப்பு இயக்கக்காரர்களின் பஸ் கார் சைக்கிள் அணிகள் நிறுத்தப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனைகள் செய்யப்பட்டன. குண்டுகள் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலமும் மோப்ப நாய்கள் மூலமும் ஒவ்வொருவராக உடற்சோதனை நடத்தப்பட்டது. எழுத்தாளரும் ஊடகவியலாளரும் ஆவணப்படக் கலைஞருமான மார்டின் கெஸ்லர் ஜேர்மனிய தொலைக்காட்சிகளைப் பற்றி கூறுகையில் எல்லாவற்றிலும் ஒரேவிதமான படம், ஒரேவிதமான செய்தி சொல்லுதல் நிலவியதையும் G -8 எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்ற இடங்களில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர் என்றும் கூறினார். சுதந்திர ஊடகமாக எதுவும் செயற்படவில்லை என்றும் கூறினார். ARD,ZDF,RTL,N24, NTV, Phonix, ARTE, CNN சகலதும் ஒரேவிதமான படங்களையும் செய்திகளையும் வெளியிட்டன.

ஊடகங்களின் இந்தப் போக்குக்கு எதிராக பெர்லினில் ARD என்ற அரச தொலைக்காட்சி நிலைய முன்பு Polizei schlached Zu, AR D Schaut Zu.. என்ற அட்டைகளுடன் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். G-8 மாகாநாட்டுக்கு உலகெங்கிருந்தும் வந்த 5300 ஊடகவியலாளர்களில் இடதுசாரி ஊடகவியலாளர்கள் உட்பட G -8 எதிர்ப்பு ஊடகவியலாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போஸ்ட்டாமைச் சேர்ந்த ஊடகங்களுக்கான சட்டம் மற்றும் உரிமை சார்ந்த ஆய்வாளரான Normann Lenz போலீஸ்சார் சீருடை அணிந்தபடியே தமது செந்த சட்டங்களை மீறி நடந்தனர் என்றும் எந்த ஜனநாயக நடைமுறையையும் பேணவில்லை என்றும் கூறினார். இது குறித்து ஒரு பகிரங்க விசாரணை தேவை என்றும் அவர் கூறினார்.

பசுமைக் கட்சியின் இடதுசாரி அணியைச் சேர்ந்த Kristian Strobele, “G -8 2001ல் ஜெனிவாவில் நடைபெற்ற போது பொலீஸ் உளவாளிகள் புகுந்து ஊர்வலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். இது போலவே Rostock லும் நடைபெற்றதற்கான சான்றுகள் தென்படுகின்றன” என்று கூறினார். இதேசமயம் பசுமைக் கட்சியின் பத்திரிகையான TAZ கலகக்காரர்களை அடக்க இன்னும் அதிக போலீசையும் தண்ணீர் சீறிஅடிக்கும் வண்டிகளையும் பயன்படுத்தி இருக்கவேண்டுமென்று அரசைக் குறை கூறியது.

G -8 மகாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த இறுதி வேளையில் 16 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி 10000 இற்கு மேற்பட்ட மக்கள் செங்கொடிகளையும் சமாதானத்திற்கான கொடிகளையும் ஏந்தியபடி வயல்களையும் காடுகளையும் தாண்டிக் கடந்து G -8 நடக்கும் இடத்தை நோக்கி முன்னேறினர். இந்த அற்புதமான காட்சியை வர்ணித்து Jungwelt கவிதை நடையில் “Der Wald ist Freund und Beschutzer der manschen ” என்று தீட்டியது. மக்கள் தொலைவிலுள்ள கைலிகன்டாமை நோக்கி நடந்தார்கள். போலீசார் நாய்களுடனும் குதிரையில் வந்தும் தண்ணீர் வீசியும் அவர்களை முன்னேற விடாமல் தடுத்தார்கள்.

பெர்லினிலிருந்து வெளி வரும் BZ பத்திரிகை Akiton Danke என்ற பொலிசுக்கு ஆதரவும் நன்றியும் கூறும் ஒரு சேவையை ஆரம்பித்தது. பொலீசாருக்கு ஜேர்மானிய அதிபர் மேர்க்கல் நன்றி கூறினார். பெருநிறுவன உரிமையாளர்களான Peter Dassmann, Peter Schwenkou ஆகியோர் பொலீசாருக்கான பரிசுகள் சலுகைகள் பற்றி அறிவித்தனர். பொருட்கள் மலிவாக வாங்கக் கூப்பன்கள் சினிமா நாடக அரங்குகளுக்கான இலவச நுழைவுச் சீட்டுக்கள் என வழங்கப்படயிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதே சமயம் எதிர்ப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான இயக்கங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் Berlin, Manheimm, Leipzig, Stuttquart, Offenburg, Kemmnitz எனப்படும் பழைய கார்ல் மாக்ஸ் நகரம் Lubeck , Bochum, Neuerupin போன்ற இடங்களில் நடாத்தப் பட்டது. பெர்லினில் நடந்த எதிர்ப்பு இயக்கத்தைச் சூழ 1000 பொலிசார் முற்றுகையிட்டனர். வானில் படைகளின் ஹெலிகொப்டர்கள் பறந்தன. G-8 மகாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கியூபா வெளிநாட்டு அமைச்சரான Pelilp Peres Roque ஜேர்மானிய வெளிநாட்டு அமைச்சர் Stein Mayer க்கு அனுப்பிய செய்தியில் உலகில் போர், வறுமை, சுற்றாடல் மாசடைவதற்கு G -8 நாடுகளும் உலகமயமாக்கலுமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

G -8 மகாநாட்டுக்கு மாற்றாக G -8 எதிர்ப்பு மகாநாடு நடைபெற்றது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த 2000 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 120 குழுக்கள் 7 அரங்குகளில் விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் நடாத்தின. இதில் இந்தியாவிலிருந்து வந்த திருமதி வந்தனா சிவாவும் கலந்து கொண்டார். அவர் பிரமாண்டமான G -8 எதிர்ப்பு இயக்கத்தை நடாத்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சுவிஸ் பத்திரிகையான WOZ தனது 14.06 2007 செய்தியில் ஜி-8 எதிர்ப்பு இயக்கம் ஜேர்மனியில் இடதுசாரிகளை மக்கள் இயக்கங்களாக்கி விட்டது என்று எழுதியது.

G -8 மகாநாடு முடிந்த மறுநாளே அந்த நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நிலவிய இசைவும் இணக்கமும் உடைந்து கொட்டுப்பட்டது. போலந்திலும் செக்குடியரசிலும் அமெரிக்கா நிறுவ இருக்கும் அணுஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு விளாடிமீர் புட்டின் எதிர்ப்புத் தெரிவித்தார். லண்டனுக்கு வந்ததுதான் தாமதம் ரொனி ப்ளேயர் ருஷ்சியாவோடு உள்ள பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டார். ஐரோப்பாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டுமானால் ருஷ்யாவோடு இணக்கம் ஏற்படுவது இன்றியமையாதது என்றார். புட்டின் அசபசானில் ருஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டாக அணுஏவுகணைப் பாதுகாப்பொன்றை ஏற்படுத்த வேண்டுமெனப் பிரேரித்தார். அதையடுத்து போலந்து இத்தாலிக்குப் போய் மீண்ட புஷ் அல்பெனியாவுக்குச் சென்று கோசோவாக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என்றும் அதை இழுத்தடிக்கக் கூடாதென்றும் ஒருதலையாகப் பிரகடனப்படுத்தினார். இது ஐரோப்பிய நாடுகளையும் ருஷ்யாவையும் சிக்கலில் ஆழ்த்தியது.

புட்டின் நாடு திரும்பும் வழியில் சென்ற் பீற்ரர்ஸ்பேர்க்கில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்கையில் G -8 நாடுகளுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்தார். இந்த நாடுகள் ஜனநாயக மில்லாத, வளைந்து கொடுத்தல் இல்லாத சுயநலத்தைக் கொண்டவையாகும் என்பதோடு பொருளாதார பாதுகாப்பு வாதத்தையும் கடைப்பிடிக்கின்றன என்று கூறினார். அதனோடு உலக நிதிச் சந்தையானது அமெரிக் டொலராலும் ஐரோப்பிய யூறோவாலும் கட்டுப் படுத்தப்படுகின்றது என்று குற்றம் சாட்டினார். இதிலிருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு, ஓர் புதிய உலகப் பொது நாணயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். உலகவங்கியிலிருந்தும் சர்வதேச நாணயச் சபையிலிருந்தும் பூரணமாகச் சுதந்திரம் அடைந்த ஓர் புதிய நிதி அமைப்பு முறை வேண்டுமென்று புட்டின் கூறினா.

G -8 மகாநாடு முடிந்து கடைசி நாளன்று புதிதாகப் பொருளாதர நாடுகளாக வளர்ந்துவரும் சீனா, இந்தியா, பிறேசில், மெக்சிக்கோ, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளை வரவழைத்துக் கலந்துரையாடி அவர்கள் சூழல்பாதுகாப்புக்கு பொறுப்போடு செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படவே அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். அவர்களைக் கௌரவமாகவும் ஜி- 8 நாடுகள் நடாத்தவில்லை. G -8 உச்சிமகாநாட்டுக்கு எதிராக நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பட்ட வன்முறை, ஜேர்மானிய அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும் என்ற உரத்த முறைப்பாடுகள் எழுந்துள்ளது. பல ஆர்ப்பாடக்காரர்கள் மற்றும் எதிர்ப்பு அமைப்பாளர்கள் மீது வரம்பு கடந்த செயற்பட்டார்கள் என்ற குற்றத்தைச் சுமத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மற்றும் மக்கள் கூட்டங் கூடும் உரிமை போன்றவற்றைத் தடைசெய்ய எத்தனிக்கும் செயற்பாடுகள் தொடங்கியுள்ளன. இவையெல்லாம் எப்படியிருந்த போதும் அண்மைய G -8 எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது எவ்வாறு அமைதியான ஊர்வலங்களுள் பொலீஸ் ஆத்திரமூட்டல் உளவாளிகள் எப்படி உட்புகுந்து செயற்கையாகக் கலவரங்களை ஏற்படுத்தி ஜனநாயக உரிமைகளைப் பறிப்பார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றியே கற்பித்துச் சென்றுள்ளது. ஜேர்மனியின் செய்தி நிறுவனமான DPA தனது செய்தியில் G -8 மகாநாடு நடைபெற்ற கைலிக்கே டாம் பகுதியில் வெடிபொருட்களுட ன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையும் அக்காரில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜேர்மனியப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்த செய்தியை வெளியிட்டது. இந்தச் செய்திபற்றி ஆய்ந்த புலனாய்துறைப் பத்தரிகையாளரான Mathias Broeckgrs இந்த வெடிபொருள் கண்டுபிடித்துப் பகிரங்கப்படாமல் விட்டிருந்தால் அது பயங்கரவாதிகளின் வேலையென்று பிரச்சாரப்பட்டிருக்கும் எனக் கூறினார்.

ஐரோப்பாவில் எந்த ரூப அமைதியான ஜனநாயகப் போராட்டங்களும் கூடிய சீக்கிரத்தில் பிரகடனப்படுத்தாத உள்நாட்டு யுத்த வடிவத்தை எட்டும் என்பதை பரிஸ் கலவரம் முடிந்து ஒருமாதம் கூட முடியாத நிலையில் G -8 எதிர்ப்பாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

“பத்தொன்பதாம் நூற்ண்டின் பேருண்மையொன்றுண்டு. அதை எவராலும் மறுதலித்துவிட முடியாது. முன்பு எந்தச் சகாப்தத்திலும் வாழ்ந்த மனிதன் கற்பனையே பண்ணியிருக்க முடியாத மட்டத்திற்கு தொழிற்துறையினதும் விஞ்ஞானத்தினதும் வளர்ச்சி. மறுபக்கத்தில் சமூகமே அழுகிக்கொண்டிருப்பதற்கான புலப்பாடுகள். ரோம சாம்ராச்சியத்திலும் கூட நடைபெற்றிராத பயங்கரங்கள் நடைபெறுகின்றன. நாங்கள் வாழும் இந்நாளில் எல்லாமே முரண்பாடுகளையும் எதிர்ப்புக்களையும் உடனடியாகக் கருத்தரித்து விடுவதாகத் தோன்றுகிறது. மனித வேலைப் பழுவைக் குறைத்து மனித உழைப்பானது ஆகக்கூடிய உற்பத்தித்திறனை அளிக்கத் தோன்றிய இயந்திரங்கள் வறுமையையும் வேலைச்சுமையையும் படைக்கின்றன. புதிய செல்வ வசந்தமானது வறுமையை உற்பத்தி செய்யும் ஜால சூத்திரமாக மாறிவிட்டது. மனித நன்னெறிகளை விலையாகக் கொடுத்தே கலைகள் வெல்லப்பட்டுள்ளன. எந்த மட்டத்திற்கு மனிதன் இயற்கையைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தானோ அந்த மட் டத்திற்கு ஒரு மனிதனை மற்ற மளிதன் கட்டுப்படுத்துவதும் அவன் தன்னைத் தானே பாழாக்கிவிடுவதும் நடைபெறுகிறது. கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் ஆன்மீக வாழ்வையும் மனித வாழ்வையும் சித்திரவதை செய்யும் சடத்துவக் காரணிகளைத் தோற்றியதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. நவீன தொழிற்துறைக்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் எதிராக நவீன ஏழ்மையும் நவீன சீர்குலைவும் உருவாகியுள்ளதோடு மறுபக்கத்தில் உற்பத்திச் சக்திகளுக்கு எதிரும் புதிருமாக சமூக உறவுகள் தோன்றியிருப்பதே எம்காலத்தில் வெளிப்படையாகவும் எங்கு பார்த்தாலும் நிரம்பி வழிவதாகவும் காணப்படுவதே மறுதலிக்க முடியாத உண்மையாகும். இதை எண்ணிச் சிலர் ஓலமிடுகின்றனர். சிலர் நவீன திறமைகளை இல்லாமற் செய்வதன்மூலம் இந்த முட்டிமோதல்களை இல்லாமற் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். சிலர் தொழிற்துறையின் அபார முன்னேற்மானது நாகரீகப் பின்னடைவைப் பூரணப் படுத்த வேண்டும் என்று நம்புகிறார்கள்.”

( கார்ல் மார்க்ஸ் சாட்டிஸ்ட் மக்கள் பத்திரிகையின் 4 வது ஆண்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து ஒருபகுதி 1856)

மார்க்ஸ் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டகட்கு முன்பு நிகழ்த்திய உரை இன்றைய உலகமயமாக்கலுக்கு உள்ளான மனித சமுதாயத்தை விளகக்கச் சக்தி படைத்துள்ளது என்பதே மார்க்ஸியத்தின் சிறப்பாகும்.

3 thoughts on “G-8: – வ.அழகலிங்கம் – தமிழரசன்

  1. ஐரோப்பாவில் எந்த ரூப அமைதியான ஜனநாயகப் போராட்டங்களும் கூடிய சீக்கிரத்தில் பிரகடனப்படுத்தாத உள்நாட்டு யுத்த வடிவத்தை எட்டும் என்பதை பரிஸ் கலவரம் முடிந்து ஒருமாதம் கூட முடியாத நிலையில் பு -8 எதிர்ப்பாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் 900 கிலோகிராம் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றவர்கள் ஜேர்மனியுள் கறுப்புடையணிந்து கல்லும் போத்தலும் வைத்திருந்தவர்களை தலிபான்களைப் போன்று வேட்டையாட முயன்றனர். ஒரு குண்டூசி ஏந்தியவர்கூட ஜேர்மனிய மண்ணில் பயங்கரவாதியாக நின்றார். பெரும்பகுதி ஊடகங்கள் அனைத்தும் பொலீசுக்குச் சார்பாக இருந்தன. பு -8 எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கம்இ கருத்துக்கள் தவிர்க்கப்பட்டுஇ அவர்கள் ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பயன்படுத்தி கலகம் விளைவிப்பவர்களாகஇ பொதுச் சொத்துக்களைச் சேதம் விளைவிப்பவர்களாகஇ போலீஸ்சைத் தாக்கி காயம் விளைவிப்பவர்களாக காட்டப்பட்டனர். பொலீஸார் மக்களையும் பொதுச் சொத்துகளையும் பாதுகாப்பவர்களாக ஜனநாயகத்திற்காகத் தியாகம் செய்பவர்களாக ஆக்கப்பட்டனர். 19 யூனில் டீடைன பத்திரிகைக்குப் பேட்டியளித்த Pயவசiஉம .P என்ற பொலீஸ்காரன் தான் கடமையைச் செய்ய முயன்ற போது ஊர்வலக்காரர்கள் தன்மேல் 25 கற்களை வீசி எறிந்ததாக கற்களை எண்ணிக் கணக்கைச் சொன்னான். பல நூற்றுக்கணக்கான ஊர்வலக் காரர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

  2. மக்களின் போர்த்திறமை மங்கிப்போவதில்லை. அவை சிலவேளை அமைதியயாக உறங்கியபடி இருக்கம். எப்போஒருநாள் மக்கள் எழுவர். அப்போது தெரியும் வ.அ.வுக்கும் த.அ.வுக்கும் மக்கள் யாரென்று..

  3. மனித நன்நெறிகளை விலையாகக் கொடுத்து கலை வெல்லப்படுகிறது என்பதன் அடிப்படையில் பார்த்தால் மக்களுக்கான போராட்டங்களும் ஆரம்பங்களில் நன்நோக்கங்களோடுதான் ஆரம்பிக்கப்பட்டது ஆகவே அதுவும் வெல்லப்படுகிறது!வெல்லப்படும்.மக்களால் மக்களுக்காக என்றொரு ………….நீங்கள் சொல்லும் மார்க்சீயம் போன்று.;;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *