ஓயாத அலைகள்

கட்டுரைகள்

‘எழுதுவதால் கொல்லப்படக்கூடிய சூழலில் நாங்கள் வாழ்கிறோம்’ என்றொருமுறை ஷோபாசக்தி எழுதியபோது, புலிகள் ஆதரவு எழுத்தாளர்களும் புலி ரசிகர்களும் இது கற்பனை, தேவையில்லாத அச்சம் என்றெல்லாம் அறிவுரைகளை எழுதினார்கள். பாஸிசத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர்களைச் சூழவும் நுணுக்கமாக விரிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு வலையையும் ஒரு பாஸிச எதிர்ப்பாளராக வாழ்வதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அட வெட்கங்கெட்டவர்களா! உங்கள் சகோதரன் ஒருவன், உங்கள் சகோதரி ஒருத்தி தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வைத்த ஒரேயொரு காரணத்துக்காகவே அச்சுறுத்தப்படும்போது, தாக்கப்படும்போது, கொல்லப்படும்போது அதை நியாயப்படுத்துமளவிற்கு உங்களுக்குப் புலிக் கிறுக்குப் பிடித்துக்கிடக்கிறதா?

புலம்பெயர் இலக்கியத்தின் மறுத்தோடிக் குரலுக்கு ஓர் ஆழமான மரபிருக்கிறது. அது வெறுமனே புலி எதிர்ப்புடன் மட்டும் தன்னைக் குறுக்கிக்கொண்டதில்லை. ஏறத்தாழ அய்ம்பது சஞ்சிகைகள், நூற்றுக்கணக்கான வெளியீடுகள், எண்ணற்ற எதிர்ப்புக் கூட்டங்கள்,கருத்தரங்குகள், முப்பத்துமூன்று இலக்கிய சந்திப்புகள் என எந்த அதிகாரத்தின் முன்னும் பணியாத உறுதியான பாரம்பரியம் எங்களுடையது.

மிரட்டல்களாலோ தாக்குதல்களாலோ எங்கள் எதிர்ப்புக் குரல்களை நிறுத்திவிட முடியாது. மரணம் மட்டுமே எங்கள் குரல்களை நிறுத்தும். அதைப் பாஸிஸ்டுகளும் தெளிவாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். எனினும் மரணித்தவனின் குரலைக் கையிலெடுத்துத் தொடர இன்னொருத்தன், இன்னொருத்தி தயாராகவேயிருக்கிறான்/ள் என்பதுதான் புலிகளுக்குப் புரிவதேயில்லை.

சத்திய கடதாசி
30.03.2007

உயிர்நிழல் ஆசிரியரின் இருப்பிடத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு
லக்ஷ்மி

எக்ஸில்’ வெளியீட்டகத்தின் வெளியீடாக காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘உயிர்நிழல்’ சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மியின் வீட்டில் ‘விடுதலை’ப் புலிகள் திருடர்களாகப் புகுந்து வீட்டைச் சூறையாடி அங்குள்ள ஆவணங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முக்கியமான ஆவணங்களில் ஐரோப்பா தழுவி நடைபெறும் இலக்கியச் சந்திப்புத் தொடர்களின் பதிவுகளும் அடங்கும்.

மாற்றுக் கருத்து அல்லது ‘ஒற்றை’க் கருத்தற்று வேறு கருத்துகள் சொல்வதைக் கேட்பதிலோ அல்லது அவை பரவலாகிச் செல்வதிலோ தாங்கள் உடன்பாடற்றவர்கள் என்பதில் இவர்களிற்கு என்றைக்குமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.

1990ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், மறைந்த மலையக எழுத்தாளர் என். எஸ். எம். இராமையா அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று பாரிஸில் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது மறுத்தோடிகளால் நடத்தப்பட்டபோது அங்கு உளவு பார்ப்பதற்காக ‘விடுதலை’ப் புலிகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்த மறுத்தோடிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பதால் இது தங்களால் ‘போடப்பட்ட’ ஒரு துரோகிக்கான அஞ்சலிக் கூட்டமாயிருக்கலாமோவென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

இப்படித்தான் ரஜனி திரணகம விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு ஓராண்டின் பின்னர் ஒரு கூட்டத்தை அவர் நினைவாக இந்த மறுத்தோடிகள் ஒழுங்குபடுத்தியிருந்த பொழுது, கூட்டம் ஆரம்பித்து சில மணிகளிலேயே அங்கிருந்த பேச்சாளரையும், கூட்டத்தில் இருந்தவர்களையும் நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற பாணியிலும் மக்கள் ‘வேறு’ கருத்துக்களைக் கேட்டால் குழம்பி விடுவார்கள் என்னும் தோரணையிலும் நடந்து கொண்டார்கள். ‘நீங்கள் மக்களைக் குழப்புகின்றீர்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது’ என்னும் ரீதியில் அவர்களின் வெளிப்பாடுகள் இருந்தன. அவர்கள் ஆவேசப்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும்போது புகைப்படம் பிடித்ததனால் அவ்விடத்திலேயே புகைப்படக்கருவி பறிக்கப்பட்டு அதனுள்ளிருந்த ‘பிலிம்’ சுருள் அவர்களால் அவ்விடத்திலேயே அபகரிக்கப்பட்டது. புகைப்படம் என்றால் என்ன, ஆவணம் என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாகவே அறிந்திருந்தார்கள்.

இந்தரீதியில், இந்த மறுத்தோடிகள் நடத்தும் சந்திப்புகளிலும் கலந்துரையாடலிலும் இவர்கள் வந்து கலவரம் செய்ததனால், ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து இந்த மறுத்தோடிகளின் ஒரு பகுதியினரால் 1992ம் ஆண்டு பாரிஸில் முதல்முதலாக நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு இவர்களின் வருகைக்கு அனுமதியளிக்கப் பின்நின்றது. மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதென்பதும் அடாவடித்தனங்களை அனுமதிப்பதென்பதும் வெவ்வேறானவை என்பதை இவ்விடத்தில் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். பின்பு சில இடைத் தரகர்களினால் இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டும், தாங்கள் சந்திப்பில் வந்து எந்தக் குழப்பங்களும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியின் பின்னரும் அவர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் இந்த இலக்கியச் சந்திப்பில் தந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘பள்ளம்’ சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கலைச்செல்வனை 1990ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி என் கண்முன்னாலேயே என் இருப்பிடத்தில் இருந்து சில குண்டாந் தடியர்கள் கடத்திச் சென்று ஏறத்தாழ 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான சித்திரவதைக்குப் பின், பொலிஸ் முறைப்பாடு தீவிரமாகி இருக்கின்றதென்ற செய்தியை அறிந்து கொண்டு, அந்தி மயங்கும் மாலை வேளையில் ஒரு சாலையோரத்தில் கொண்டு வந்து வீசி எறிந்து விட்டுப் போனார்கள். அதன் பின்னர் பள்ளம் சஞ்சிகை நிற்பாட்டப்பட்டது. புகலிடத்திலும் அச்சத்தில் உயிர் வாழ்தல் என்பது என்னவென்று புரிய வைத்தல் முடியாதது. சித்திரவதையின் பின்னிருந்த மரண ஓலம் என்னுள் ஊடுருவி அதிர்ந்தொலித்ததை இன்றும் என்னால் உணர முடிகின்றது.

ஒரு உயிரைக் கொய்தலின் கொடுமை அல்லது மரணம் துரத்தும் அவலத்தைத் தெரிந்தபடி வாழ்தல் என்பதன் கொடூரத்தை கையில் ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதுவே கோட்பாடாகக் கொண்டவர்களால் என்றைக்குமே புரிந்து கொள்ளப்பட முடியாதது.

1994ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அன்று தோழர் சபாலிங்கம் அவருடைய வீட்டில் வைத்துப் பட்டப் பகலில் வேட்டு வைத்துத் தீர்க்கப்பட்டதென்பது ஒவ்வொரு மறுத்தோடியினதும் ஈரல்குலையையும் நடுங்க வைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. குரல்கள் மட்டும்தானுள்ளன என்று இந்த மறுத்தோடிகள் தொடர்ந்தார்கள்.

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான்; ஆனால் அதை நிரணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எமன் காரியாலயத்தில் தூதுவர்களாக தொழில் புரிவதற்கான விசா பெற்றுக் கொண்டு இருப்பதுபோல்தான் இவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எமதூதுவர்களாகத் தங்களை இந்த மறுத்தோடிகள் அடையாளம் காண வேண்டும் என்பதைச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலெல்லாம் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இவர்களிற்கு யானைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரிவதில்லைப் போலும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாதுதான். ஆனால் யானை பற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. துப்பாக்கியை விடப் பேனா வலிமை வாய்ந்ததென்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

பேனாமுனைகளுக்கெதிரான தொடர்ந்த துப்பாக்கி தூக்கல்களும், ஒரு நபரை அழிப்பதன் மூலம் ஒரு கருத்தை அழித்துவிட முடியும் என்னும் இவர்களின் கொச்சைத்தனமான விளக்கங்கள் எவ்வளவு நுண்ணறிவுடன் மறுத்தோடிகளால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

விமர்சனம் என்பது யாராலும் எப்போதும் எங்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைக்கப்படலாம் என்பதும் அதை எதிர்கொள்ள குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் தேவையில்லை என்பதை இப்படியான அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சபாலிங்கத்தின் கொலைக்குப் பின் புகலிடத்தில் இருந்து வெளிவந்த எண்ணற்ற பத்திரிகைகள் அடக்கி வாசித்தன. பல படிப்படியே நின்று போயின. ‘புகலிடத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு எதுவும் இல்லை, யாரும் இல்லை. நாங்கள் இருக்கும்வரை உலகின் எந்த மூலைக்கு நீங்கள் ஓடினாலும், எங்களுக்கு ஒத்தூதினால் உங்களது உயிர் உங்களுக்கு, அன்றேல் அது எங்களுக்கு’ என்ற சுலோகத்தை கோட்பாடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘அன்பான’ மிரட்டல்கள், ‘செல்லமான’ தட்டிக் கொடுப்புகள் ‘இரகசியமான’ பொட்டு வைப்புகள் என்று இவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒருவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவர் இல்லாதபொழுது பூட்டை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்து அந்தரங்க ஆவணங்களைத் திருடிச் சென்றிருப்பதற்கு இவர்களுடைய வழக்காடு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்ததுபோல் இவர்களின் கோட்டைக்குள் உத்தரவின்றிப் புகாது, அங்கு கொன்று புதைத்தவர்களின் தகவல்களில் ஓரிரண்டையாவது எங்களுக்குச் சொல்வார்களா?
நாங்கள் உங்களிடம் எங்கள் தோழன்கள், தோழிகளுக்கு என்ன நடந்தது, அவர்களை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் என்று துரத்தித் துரத்திக் கேட்டோம். அந்த ஓல விழிப்புகள் தேய்ந்து தேய்ந்து, இப்போது அந்தத் தோழன்களும் தோழிகளும் பிறந்தார்களா? வாழ்ந்தார்களா? என்னும் நிலைக்கு ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்தக் கோழைத் திருட்டானது எந்த அசைவையாவது ஒரு கணம் நிறுத்தி வைத்து விடக் கூடும் என்று நீங்கள் ஏதாவது கனவு கண்டால் அதற்கு இந்த மறுத்தோடிகள் என்றும் தலை சாய்க்க மாட்டார்கள் என்பதைப் பகிரங்கமாக உங்களிடம் சொல்வதற்கு மீளவும் ஒரு சந்தர்ப்பத்தை நீங்களாக உருவாக்கித் தந்திருக்கின்றீர்கள்.

கலந்துரையாடல்களின், சந்திப்புகளின் ஆவணங்களை நீங்கள் ஒன்றும் அதிலுள்ள விடயதானங்களுக்காகத் திருடிச் சென்றிருக்கமாட்டீர்கள் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.
மனிதநேயம், மனிதாபிமானம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் கோட்டைக்குள் இருந்து சிறிதாவது வெளியே வரவேண்டும்.

ரஜனி திரணகமவின் ஓராண்டு நினைவாக பாரிஸில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் ‘விடுதலை’ப் புலிகளின் பிரதிநிதி ஒருவர் எழுந்து “ரஜனியைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நேரில் பார்த்தீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார். கேட்டவரைப் பார்த்து அனுதாபப் படலாமேயன்றி ஆத்திரப்படமுடியாது. பாவம் அவர்கள். எய்தவரிருக்க அம்பை ஏன் நோவான் எனபதுபோல்தான்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் (இன்று 16 வருடங்களின் பின்னும்) அவர்கள் இதே கேள்வியைக் கேட்கக் கூடும். இப்படிக் கேட்பவர்களிற்கு விடை தெரிய வேண்டுமானால்,
1. பாரிஸில் சபாலிங்கத்தின் செயற்பாடுகள் யாருக்கு வேண்டப்படாததாக இருந்தன?
2. ‘பள்ளம்’ சஞ்சிகை எவருக்கு இடைஞ்சலாக இருந்தது?
3. ரஜனியின் எழுத்தும் செயற்பாடும் யாருக்கு உவப்பானதாக இருக்கவில்லை?
4. இன்னும் இலக்கியச் சந்திப்பு மற்றும் இங்கு மறுத்தோடிகள் நடாத்தும் கருத்தரங்குகள், நினைவுகூரல்கள் யாருக்கு விசனத்தைக் கொண்டு வருகின்றன?
என்பது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலைத் தேடினால், அதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

It is a simple logic

உயிர்நிழல் சஞ்சிகையானது வெறும் தனிநபர் அரசியலையோ அல்லது இயக்க அரசியலையோ கொண்டிராது பாசிசத்துக்கெதிரான, ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவு கொடுக்காத ஒரு அரசியலைக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் தெளிவுபடுத்தி, இந்த ஆவணக் கொள்ளையானது வெறுமே தனிநபருக்கெதிரானதாகக் கொள்ளாது, இது மறுத்தோடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்மீதும் இந்த ‘விடுதலை’ப் புலிகளின் கோரக்கரங்கள் நீண்டிருப்பது குறித்த எச்சரிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று உயிர்நிழல் மறுத்தோடிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் விழிக்கின்றது.

உயிர்நிழல் சார்பாக
லக்ஷ்மி

6 thoughts on “ஓயாத அலைகள்

  1. இப்படியொரு ஜனநாயக மறுப்பையே நாம் தெரிந்துகொள்ள ஒருவாரம் தேவைப்பட்டது ஐரோப்பாவில் இருந்துகொண்டும்கூட என்பது ஒருபுறம் கேள்விகளை எழுப்புகிறது. இது ஏன்? இலக்கியச் சந்திப்பாளர்களின் மறுத்தோடும் குரல்களுக்குள்ள வலிமையை இது கேள்விகேட்பதாயில்லையா?. ஆளையாள் அடித்துக்கொண்ட பிரச்சிகைகளில்கூட பிரசுரங்கள் மொட்டைகள் என விட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் வட்டம், இலக்கியச் சந்திப்பு எங்கே?. களவுபோன ஆவணங்கள் இலக்கியச் சந்திப்புகளினதுதான் என்று லக்சுமி கூறும்போதும்கூட இலக்கியச் சந்திப்பின் மறுத்தோடல் எங்கே? குரல் எங்கே?. புலிகளிடம் சுவிஸ் இலக்கியச் சந்திப்பு கசெற் போய்ச் சேர்ந்ததென்று ஊகங்கள் நடத்தி புனைபெயரில் எழுதி பின்னியெடுத்த வீரவான்கள் இந்தச் சம்பவத்தில் மௌனம் சாதிப்பதேன்? சோபாசக்தி வரதராசப் பெருமாளை சந்தித்தார் என்று நிதர்சனம் எழுதியவுடனே எழுந்த சிலிர்ப்புக் குரல்கள்கூட இந்த விடயத்தில் ஈனித்துக் கிடக்கிறது. இது ஒரு தனிமனிதருக்கு நடந்ததல்ல. பெண்ணென்பதால் நடந்ததல்ல. புகலிட நாடுகள் பூராவும் வலைபின்னும் புலிகளின் ஓடலுக்கு எமது மறுத்தோடல் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த மௌனம் அச்சம்பகர்கிறதா அல்லது சாட்சிபகர்கிறதா?? தமது இருப்பைத் தக்கவைக்கும் குறுக்குவழிகளில் புலிகள் கொண்டுள்ள இந்தவகை நடைமுறைகள் அவர்கள் தம் இருப்புமீது கொண்டுள்ள அச்சத்தின் போக்கைத்தான் குறிக்கிறது. இதற்கான எமது மௌனத்தை எதிர்காலத்தின் தீர்ந்துபோன வரலாறுகள் மறுத்தோடலாகக் குறித்துக்கொள்ளாது.

  2. ரகு அண்ணா
    உங்கள் விரல்களில் நகசுத்தி வந்ததென்று கேள்விப்பட்டனே
    விரைவல் குணம்பெற வாழ்த்துக்கள்

  3. பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,”கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்டு வரும் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது,’என்றனர்.
    http://www.dinamalar.com/

  4. ஒரு கனவுக்காக அஞசுகிறோம்; நமது வண்ணத்துப்பூச்சிகளை
    நம்பாதீர்.

    நீர் விரும்பினால் நமது தியாகங்களை நம்புக. ஒரு குதிரையின் திசைகாட்டியை, வடக்கிற்கான நம் தேவையை நம்புக.

    நாம் நமது ஆன்மாக்களின் அலகுகளை உங்கள்பால் உயர்த்தியுள்ளோம். நமக்கு ஒரு கோதுமை மணியை, நம் கனவைத் தருக, அதை நமக்குத் தருக.

    ஒரு கருத்தினாலோ அல்லது மணலிடைப்பாறை ஒன்றின்மீது அலைகளிரண்டின் முறையற்ற கலவியினாலோ பிறந்து பூமிக்கு வந்தது முதலாக நாம் நமது கரையோரங்களை உங்கட்குச் சமர்ப்பித்துள்ளோம்.

    வெறுமை, வெறுமை, ஒருஅடி காற்றில் மிதக்கிறோம்.
    நமக்குட் காற்றுப் பிளவுபடுகிறது.

    நீர் நம்மைக் கழுவி, நமக்காகச் சிறைக்கூடங்களைக் கட்டிச் அவற்றைத் தோடைச் சுவர்க்கமென அழைத்தீரென நாம் அறிவோம்.

    நாம் கனவு கண்டவாறே இருக்கிறோம்.
    ஓஇ ஆசைக்கனவு. நமது கட்டுக்கதைகளாற் போற்றப்படுவோரிடமிருந்து நமது நாட் களை நாம் திருடுகிறோம்.

    நாம் உமக்காக அஞ்சுகின்றோம். நாம் உம்மை அஞ்சுகின்றோம். நாம் உம்மை அஞ்சுகின்றோம் . நாம் ஒன்றாகவே அம்பலமாகியுள்ளோம். நீர் நமது மனைவியரின் பொறுமையை நம்பலாகாது.

    அவர்கள் இரண்டு ஆடைகளை நெய்வார்கள் .
    பின் நமது பிள்ளைகட் கு ஒருகிண்ணம் பால்வாங்கப் பிரியத்திற்குரியவர்களின் எலும்புகளை விற்பார்கள்

    நாம் அவனிடமிருந்து, நம்மிடமிருந்து ஒரு கனவிற்காக அஞ்சுகிறோம். நாம், நமது கனவு கனவு கண்டவாறே இருக்கிறோம் .
    நமது வண்ணத்துப்பூச்சிகளை நம்பாதீர்.

    மகமூத் தார்வீஸ் கவிதைகள்:
    தமிழில்; சிவசேகரம்
    நன்றி; ‘அ ஆ இ’

  5. கண்டனம்
    பிரான்சின் பாரிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள „உயிர்நிழல்“ ஆசிரியர் லக்ஷ்மி அவர்களது வீட்டில் சுமார் இருபது வருடங்களாகப் பிரக்ஞை பூர்வமாகச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிட்டவர்கள் முக்கியமாக இலக்கியச் சந்திப்பு மற்றும் சுதந்திரமான அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களின் பதிவுகள் போன்றவற்றையே குறிப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளயிட்டவர்களின் நோக்கம் கருத்துப் பரிமாற்றத்தின் மீது பயப்பீதியினை ஏற்படுத்துவதும் மற்றும் புலிகளின் சர்வதேச புலனாய்வுத்துறைக்கான ஆளடையாள ஆவணங்கள் போன்றவற்றுக்கே என்பதும் எங்களுக்குப் புரியவேண்டும் என்ற வகையில் தான் கொள்ளையர்கள் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். கொள்ளையின்போது எவராவது எதிர்ப்பட்டிருந்தால் இவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதுவும் எங்கள் புரிந்துகொள்ளப்படுகின்றது. எங்களில் ஒருவனான சபாலிங்கத்தைக் கொன்ற போதும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் மற்றும் மனித இறைமைக்கும் குரல் கொடுக்கும் அனேகரைக் கொன்ற போதும் கூட நாங்கள் ஓய்ந்துவிடவில்லை. எழுந்து நிற்பதற்கான ஆத்ம பலமும் தார்மீகமும் இன்னும் எத்தனை உத்தரிப்புக்கள் வந்தாலும் எங்களிடமிடருந்து கொள்ளையடிக்கப்படமுடியாது என்பதை இன்னும் ஒருமுறை பாசிசப் புலிகளுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

    சுசீந்திரன்
    „நூல்“ வெளியீட்டகம் சார்பாக

  6. லச்சுமி கலைச்செல்வன்
    இவரிற்கு ஒரு கடிதம்

    அன்புள்ள லச்சுமியக்கா வணக்கம்
    முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் உங்கள் கணவரின் பெயரை உங்கள் பெயருடன் இணைத்து எழுதியதற்கு. எனக்கு தெரியும் அது உங்களிற்கு பிடிக்காது காரணம் அதுபெண்ணடிமைத்தனம் எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள். சரி சமீபத்தில் உங்கள் வீட்டை உடைத்து பல விலை மதிப்பற்ற உங்கள் ஆணவங்களை மன்னிக்க ஆவணங்களை சிலர் திருடிகொண்டு போய் விட்டாகளாம் அதுவும் நீங்கள் இல்லாத சமயம் என்று செய்தி அறிந்தேன். அது புலிகள்தான் என்று நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீங்கள். நீங்கள் இல்லாத சமயம் வந்தது புலிகள் தான் என்று புலிகள் எப்படி அவ்வளவு திட்டவட்டமாக உங்களிற்கு தெரியும் . வந்தவர்களே பின்னர் தொலைபேசியடித்து தாங்கள் புலிகள் தாங்கள் தான் ஆவணங்களை எடுத்ததாக சொன்னார்களா?.

    மற்றது இலக்கிய சந்திப்பு பற்றிய பெறுமதி மிக்க ஆவணங்கள் என்று கூறியிருக்கிறீர்கள் இலக்கிய சந்திப்பு என்றால் இந்த திகதி இடத்தில் இந்த திகதியில் இன்னார் இன்னார் வந்து பேசினார்கள் என்கிற பதிவுகளும் அந்த சந்திப்பிற்காக நீங்கள் அடித்த துண்டுபிரசுரங்களும் தானே உங்கள் பெறுமதி மிக்க ஆவணங்கள். அது மட்டுமல்ல இலக்கிய சந்திப்பு என்பது என்ன அதியுயர் பாதுகாப்புடன் இரகசியமாக நடக்கும் ஒரு விடயமா? இல்லையே அது பகிரங்கமாக விழம்பரம் செய்து இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வந்து கூடுகினற ஒரு நிகழ்வுதானே அதைவிட அந்த சந்திப்பு பற்றி அது நடந்து முடிந்த பின்னர் பகிரங்க அறிக்கை விடுவதுடன் அந்த செய்தி இணைய தளங்களிலும் ஏன் சஞ்சிகையாகவும் வருகிறதுதானே.

    அதைவிட அந்த சந்திப்புகள் பற்றிய ஆவணங்கள் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரிடமும் இருக்கும் அப்படி இருக்கும் போது இத்தனை சிரமபட்டு அதுவும் நீங்கள் இல்லாத வேளை புலிகள் உங்கள் வீட்டை உடைத்து ஏன் எடுக்கவேண்டும்.அப்படியாயின் வெறும் இலக்கிய சந்திப்பு பற்றி ஆவணங்களை விட உங்களிடம் வேறு ஏதோ இரகசியங்கள் இருந்திருக்க வேண்டும் என்கிற கேள்வியே எழுகிறது. சரி இதை புலிகள் எடுத்துகொண்டு போய் என்ன செய்ய போகிறார்கள்??. அவர்களிற்கு இன்று உலக அளவில் ஆயிரம் தேவைகள் பிரச்சனைகள் இருக்கும் போது லச்சுமியின் வீட்டை உடைத்து அங்கிருந்த பழைய நோட்டீசை எடுத்து கொண்டு போய் சுருட்டி என்ன காது குடையவா?? அது மட்டுமல்ல உங்கள் வீடு உடைக்கபட்டது இது முதல் தடைவையல்லவே முன்னரே உங்களுடன் பிரச்சனைப்பட்ட உங்கள் உறவு காரர்களாலும் பின்னர் உங்களுடன் இணைந்து எக்சில் என்கிற இணைய சஞ்சிகையை நடத்தியவர்களாலும் தானே உங்களுடன் முரண்பட்டு உங்கள் வீட்டை அடித்து உடைத்தனர்.

    ஆனாலும் எனக்கு தெரியும் உங்கள் வைன் கிளாஸ் தட்டுபட்டு விழந்து உடைந்தாலும் நீங்கள் இழுத்துவிட்ட மல்போறோ சிகரற்றின்புகை வட்டம் வட்டமாக வரவில்லையென்றாலும் கூட அது புலிகள்தான் என்று அறிக்கை விடுகிறவர் நீங்கள். அது இன்றைய உங்கள் தேவையும்கூட ஏனெனில் கலைச்செல்வனின் தோழில் நீங்கள் பயணம் செய்த காலங்களில் உங்களிற்கும் ஏதோ இலக்கியம் தெரியுமென்று சிலர் மரியாதை தந்தனர். உங்கள் இம்சை தாங்காமலேயே கலைச்செல்வன் மனவிரக்தியால் தவித்து மாரடைப்பில் மரணமடைந்தபின்னர் உங்களை மொத்தமாக எல்லாருமே மறந்து போயிருந்த நேரத்தில்தான் மீண்டும் உங்களை இனம்காட்ட இலக்கிய வாதிகள் என்றாலே ஏதோ புலிஎதிர்ப்பாளர்கள் தான் என்கிற ஒரு மாயையை உருவாக்கி இலக்கிய சந்திப்பு என்றாலே அங்கு புலியெதிர்ப்புகள்தான் பேசப்படும் என்கிற ஒரு தோற்றத்தையும் உருவாக்கி அதற்கு நீங்களே தலைமை தாங்குபவராக வர விரும்புகிறீர்கள்.அதற்கு உதவியாக உங்கள் தோழி ராஜேஸ்.பாலா என்பவர்.(ராஜேஸ்வரி என்பது அவர் பெயர் பாலா என்பது யார்ரென்று எனக்கு இதுவரை தெரியாது)கை கோர்த்திரக்கிறார். அதன் ஆரம்பம் தான் இந்த வீடுஉடைப்பு நாடகம் .அடுத்ததாக உங்களிற்கு கிடைத்தது அண்மையில் பாரிசில் நடைபெற்ற புஸ்பராசா அவர்களின் அஞ்சலிகூட்டம். தொடருங்கள் பார்க்கலாம் உங்கள் நாடகத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறோம். அதுவரை உங்கள் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட சாத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *