மதிப்பு மறுப்பறிக்கை

கட்டுரைகள்

“எனக்கு இப்போது ஐம்பத்தொரு வயது, என்றாலும் நான் தொடர்ந்தும் பாலியல் தொழிலாளியாகவே இருக்க விரும்புகிறேன்” என்பதுதான் அந்தச் சுயசரிதை நூலின் தொடக்க வரிகள். மலையாளத்தில் ஒரு ‘லைமீக தொழிலாளியினுட ஆத்ம கதா’ என்ற தலைப்பில் நளினி ஜமீலா எழுதி வெளியிட்ட சுயசரித நூலைத் தமிழில் குளச்சல் மு.யூசுப்பின் மொழிபெயர்ப்பில் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது.

கடந்த முப்பது வருடங்களாகப் பாலியல் தொழில் செய்துவரும் நளினி ஜமீலா பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தலைவி, குறும்பட இயக்குனர், எழுத்தாளர், பெண்ணியவாதி. நூலின் ஆரம்பவரிகளே பாலியல் தொழில் குறித்த அவரின் மதிப்பீட்டைக் கூர்மையுடன் தெளிவாக்கி நிற்கின்றன. தான் இந்த நூலைப் பாலியல் தொழிலாளர்களுக்காகவே எழுதியதாகவும் தனது எழுத்துக்கள் மூலம் பாலியல் தொழிலாளர்களைக் குற்றவுணர்விலிருந்து விடுவிப்பதே தனது நோக்கமென்றும் அறிவிக்கிறார் நளினி ஜமீலா. மலையாளத்திலும் தமிழிலும் விற்பனையில் சாதனை படைத்த நூலை ஆயிரக்கணக்கான வாசகர்களும் விமர்சகர்களும் ‘கண்ணீரும் கம்பலையுமாக’ எதிர்கொண்டார்கள். ஆனால் இரக்கமோ பரிதாபமோ தங்களுக்குத் தேவையற்றன என முழங்கும் நளினி ஜமீலா தங்களுக்குத் தேவை சமூக அங்கீகாரம் மட்டுமே என்கிறார்.

நமது தமிழ்ச் சூழலில் மார்க்ஸியர்களும் தீவிர பெண்ணியவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் ஒருபுறமாகவும், கண்ட இடத்தில் பாலியல் தொழிலாளர்களை மண்டையில் போடும் கலாசாரக் காவலர்கள் மறுபுறமாகவும் பாலியல் தொழில் குறித்து முன்னிறுத்தும் மதிப்பீடுகளையும் அறச் சீற்றங்களையும் தன் எழுத்தால் ஒருங்கே கலைத்துப்போட்டிருக்கும் நளினி ஜமீலாவின் நூலிலிருந்து இரண்டு அத்தியாயங்கள் இங்கே வெளியிடப்படுகின்றன.

nalini jameela

மறுவாழ்வு:

கேரளாவில் எங்களை நோக்கி, மற்றப் பிரிவினர்களைப் பார்த்துச் சொல்வதைவிட அதிகமாகச் சொல்லப்படும் ஒருவார்த்தை ‘மறுவாழ்வு’. இந்த வார்த்தையைப் பல்வேறு தரப்பினர் உச்சரிப்பதுண்டு. மாதா அமிர்தானந்தமயி இப்படிச் சொல்கிறாரே என்று பத்திரிகைக்காரர்கள் பலரும் என்னிடம் கேட்டதுண்டு. அவரிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்… பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அழிக்கவேண்டும் என்று சொல்லும் நீங்கள் அவர்களது சமூகத்தொடர்புகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?” அவர்களது சமூகத் தொடர்புகளை வகைப்படுத்தும் விதமாக ‘மறுவாழ்வு’ அளிப்பது பற்றி உங்களில் யாராவது சிந்தித்திருக்கிறீர்களா ?

இந்த மறுவாழ்வு என்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இடத்தை மாற்றித் தங்கவைப்பதைத் தவிர அவர்களுக்கு உத்தரவாதமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க உங்களால் இயலுமா? அதுமட்டுமல்ல பாலியல் தொழில் என்பது இப்போது ஈடுபட்டிருப்பவர்களுடன் நின்றுவிடும் ஒன்றல்லவே. இது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் விசயமல்லவா? கொஞ்சப் பேர்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளும்போது அந்த இடத்தில் வேறு ஆட்களும் வருவார்களே. அவர்களுடைய விடயத்தில் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?

எங்களுடைய கோரிக்கை, பாலியல் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவதிலிருந்து விடுதலை தரவேண்டும் என்பதுதான். லைசென்ஸ் முறையைக் கொண்டு வரவேண்டும் என்பதல்ல இதன் பொருள். லைசென்ஸ் முறையைக் கொண்டுவரும் பட்சத்தில் மருத்துவத்துறை மற்றும் காவற்துறையினரிடம் அங்கீகாரம் பெறவேண்டும். சட்ட விதிகளின் சிடுக்குகளிலிருந்து விடுதலையடையவேண்டும் என்பதுபோன்ற நிறைய புதிய பிரச்சனைகளை இது ஏற்படுத்தும். லஞ்சம் அதிகரிக்கும். குற்றச் செயலாக இது கருதப்படாத பட்சத்தில் நம்மால் புரிந்துகொள்ளப்பட வேண்டியது; இரண்டுபேர்கள் பரஸ்பர உடன்பாட்டின்பேரால் உறவுகொள்கிறார்கள். இதனால் மூன்றாவது ஒரு நபருக்கு பிரச்சனைகள் எதுவும் வரப்போவதில்லை எனும் நிலையில் இதனைக் கேள்விக்குட்படுத்துவது சரியல்ல என்பதையே நாங்கள் சொல்ல விரும்புகின்றோம் .

கேரளத்தைப் பொறுத்தவரை இது குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே பாலியல் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இல்லை.அமைப்பு சார்ந்த பணிகளுக்காக நான் நமது தேசத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள இதுபோன்ற இடங்களைப் பார்வையிட்டிருக்கிறேன் .இதில் மிக நன்றாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இடங்கள் கர்நாடகாவும் கல்கத்தாவும்தான். இங்கே ஓரளவு வரையிலான அங்கீகாரங்கள் அவர்களுக்கு இருக்கிறது.மும்பையிலும் மற்றப்பகுதிகளிலும் இருப்பவர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் . மிக அதிகமான சிரமங்களை அனுபவிக்கும் பகுதி மும்பைதான் . மும்பையிலிருப்பதுபோன்ற பாலியற் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமுடியாது . கல்கத்தாவிலும் மங்கலாபுரத்திலும் கர்நாடகாவிலுமிருக்கும் குடியிருப்புகளில் வாடிக்கையாளர்களைத் தேர்வு செய்வதற்கும் நேரத்தை முடிவுசெய்வதற்கும் கூலியைத் தீர்மானிப்பதற்குமான உரிமைகள் பாலியற் தொழிலாளர்களுக்கு இருக்கின்றது.

பாலியற் தொழிலாளர்களுக்கான ஒரு பகுதி என்றாலே மக்கள் மனதில் பதிந்துகிடக்கும் ஒரு பயமுறுத்தும் சித்திரம்தான் மேலெழுந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் இவர்களிற் பெரும்பாலானவர்களுக்கு மும்பையின் சிவப்புவிளக்குப் பகுதிகள்தான் பார்த்ததும் கேட்டதுமான இதுகுறித்த அனுபவங்கள். பல்வேறு விதமான புனைவுகளும் யதார்த்தங்களும் கலந்த கதைகள்தான் மும்பையின் சிவப்புவிளக்குப் பகுதிகளைப் பற்றி நிலவிவருகின்றன.படித்தவர்களுங்கூட இதைக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்.

சிவப்புவிளக்குப் பகுதிகளில் பாலியல் தொழிலுக்கு லைசென்ஸ் கொடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம். அங்கே உடல்நிலையைப் பரிசோதனைசெய்து சான்றுவழங்கப்படுகிறது. இந்தப்பகுதி நல்லபகுதியா மோசமான பகுதியா என்பதற்குச் சான்று வழங்கப்படுகிறது. இதைத்தவிர லைசென்ஸ் முறையெதுவும் அங்கே கிடையாது. பெண்கள் மீதான வன்முறை இங்கே மிகவும் அதிகம். எந்தவிதமான உரிமைகளும் சுதந்திரமும் இல்லாமல் இங்கே கொண்டுவருபவர்களுக்குத் தங்களை முழுவதுமாக அடிமைப்படுத்தியேயாக வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது.
கேரளத்தில் இதுபோன்ற பகுதிகள் இல்லை. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புவரை இங்கே கம்பனிவீடுகள் இருந்தன.

எதிர்ப்புகள் ஊடகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மட்டுமல்லை எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்களாக நாங்கள் கருதியிருந்தவர்கள் கூட தெரிந்தோ தெரியாமலோ எங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார்கள் . ஆரம்ப காலத்தில் திருச்சூரில் ஒரு நாடகக் கலைஞர் எங்களைப் பற்றி ஒரு நாடகம் தயாரித்தார். பாலியற் தொழிலாளர் வியாதி வந்து தெருவிற் கிடந்து அழுகிச் சாவதாக அதில் சித்திரித்திருந்தார் .

எங்களுக்கு மற்றவர்களது பரிதாபமோ தயவோ தேவையில்லை,
எங்களுக்கு அங்கீகாரந்தான் வேண்டுமென்று நான் கருதியதால் அந்த நாடகத்தை முன்னிட்டு எனக்கும் அவருக்கும் விவாதம் மூண்டது. இதைத்தொடர்ந்து நான் அவரை அவமானப்படுத்தியதாகச் சொல்லி அமைப்பின் சார்பாகச் சிலர் எனக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்தான் பாலியற் தொழிலாளர்களை அவமானப் படுத்தினார் என்னும் கருத்தில் நான் உறுதியாக நின்றேன். இதன் காரணமாகச் சிறிதுகாலம் அமைப்புக்கும் எனக்குமிடையே விரிசலும் ஏற்பட்டிருந்தது.

ஜெயசிறீயைப் போன்ற ஒருசிலர் எங்களுக்கு ஆதரவாக இருந்ததைத் தவிர, பெண்ணியவாதிகள் பொதுவாக பாலியற் தொழிலாளர்களை அங்கீகரிக்கவில்லை. இதற்கான காரணமாக நான் நினைப்பது பாலியல் என்பதைப் பெண்களுக்கும் தேவைப்படும் ஒன்றுதான் எனும் கண்ணோட்டத்தில் பார்க்க இவர்களால் இயலவில்லை என்பதுதான்.
அமைப்புச் செயற்பாடுகளில் நான் தீவிரமாக இருந்தபோது நிறையப்பேர் என்னிடம் கேட்டதுண்டு, “பாலியல் என்பது ஆணுக்கான தேவையென்றால் அதை நிறைவேற்றிவைப்பது பெண்ணியத்திற்கு உடன்பாடான விடயந்தானா?” பாலியல் ஆணுக்கான தேவை மட்டுந்தான் என்பதை என்னால் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளமுடியாது.சாதாரண பெண்ணிலிருந்து எவ்வகையிலும் பெண்ணியவாதிகள் வேறுபட்டவர்களில்லை. ஆகவேதான் இப்படிப்பட்ட கேள்விகள் உருவாகின்றன.

பாலியற் தொழிலும் பாலியற் சுரண்டலும் வெவ்வேறானவை. பாலியற் தொழில் செய்பவர்களைத்தான் நாங்கள் ஒரு அமைப்பாக ஐக்கியப்படுத்துகின்றோம். சிலர் சுரண்டுதலுக்குள்ளாகி இந்தத் தொழிலுக்கு வர நேர்ந்திருக்கலாம். ஆனால்,இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் மட்டுந்தான் அமைப்பில் பங்கு சேர்கிறார்கள்.

வீதியில் இதுபோன்ற ஒரு பெண்ணை நாங்கள் காண நேர்ந்தால் முதலில் அவளுக்கு ஒரு ‘கவுன்சிலிங்’ கொடுப்போம். சொந்த விருப்பத்தின் காரணமாக வந்திருக்கிறாளா, அல்லது இதில் தள்ளப்பட்டு விலகிவிட முடியாமல் இருப்பவளா? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வோம். விலகிவிட விரும்புகிறவர்களுக்குத் தகுந்த உதவிகள் மேற்கொள்ளப்படும். வேலை வாங்கித்தருவது முடியாதென்றாலும் வீட்டுப் பிரச்சனைகளோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ இருந்தால் உதவுவோம்.

பெண்வாணிபம் என்று சொல்லப்படுவதுடன் பாலியற் தொழிலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. வாணிபம் என்பது பலவந்தமாகப் பிடித்துக்கொண்டுபோய் விருப்பப்பட்டவர்களிடம் விற்பனை செய்வது. அது முழு அளவிலான பலாத்காரத் தன்மை கொண்டது. மனரீதியிலான, உடல் ரீதியிலான எந்த உரிமைகளுமே அதில் சிக்கிக் கொண்டவர்களுக்குக் கிடையாது.பாலியற் சுரண்டல் என்பது சிலர் தங்களது ஆசைகளுக்காகக் கொண்டுபோய் உபயோகிப்பது. விருப்பமில்லாமலோ, வேலைதருவதாகவோ திருமணம் செய்துகொள்வதாகவோ வாக்குறுதியளித்து ஏமாற்றுவது.

பெண்வாணிபம் இதுபோன்றதல்ல. மும்பை சிவப்புவிளக்குப் பகுதிகளில் நடப்பதைவிட அதிகமான கொடுமைகள் இதில் நடக்கும். இங்கே சொந்த லாபங்களுக்காகவேனும் பெண்களுடைய ஆரோக்கியம் பேணப்படுவதுண்டு. ஆனால் இந்த வியாபாரத்தில் சிறுமிகளைக்கூட தயவுதாட்சணியமில்லாமல் மனதையும் உடலையும் சீரழித்து ஓய்வோ மருத்துவ உதவியோ கொடுக்காமல் கொடுமைப்படுத்துவார்கள். பாலியற் சுரண்டலுக்கும் பெண்வாணிபத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் இதுதான். பாலியற் சுரண்டலிற்குள்ளான பெண் பாலியற் தொழிலாளியாக மாறுவதுண்டு.

நாங்கள் செய்வது ஆகா ஓகோவென்று பேசப்படும் ‘மறுவாழ்வு’ இல்லையென்றாலும் இந்தத் தொழிலிலிருந்து விலகிவிட நினைப்பவர்களுக்குப் பல்வேறு வகைகளில் நாங்கள் அமைப்பு சார்ந்து உதவி செய்வதுண்டு. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் சுயவிருப்பத்தின் பெயரால்தான் அதைச் செய்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியாது.
பெரும்பாலானவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத தொழிலையே செய்துகொண்டிருக்கிறார்கள். கட்டுமானத் தொழிலாளர்களை எடுத்துகொள்வோம். ஒரு கட்டடம் அழகாக எழும்பிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதென்பது எனக்குப் பேரானந்தம் தரும் உணர்வு என்ற எண்ணத்துடன் யாரும் வேலைக்குச் செல்வதில்லையே? நகரசபை சுத்திகரிப்புத்தொழிலாளி வாழ்வதன்பொருட்டுத்தான் அத்தொழிலைச் செய்கிறார்.

இந்த இரண்டு தொழில்களை விடவும் சில காரணங்களினால் உயர்வானது பாலியற்தொழில். கட்டடத்தொழிலாளியின் ஒருநாள் வருமானத்தை இப்போதைய நிலையில் மறுநாளைக்கென்று மிச்சம் வைக்க முடியாது. அதேசமயம், தொழிலுக்கான சுதந்திரம் கிடைக்கும் பட்சத்தில் ஒரு பாலியற் தொழிலாளிக்கு வாரத்தில் மூன்று முறை தொழிலில் ஈடுபட்டாற்கூட உடல் ஆரோக்கியத்தில் எந்தவிதப் பிரச்சனைகளும் ஏற்படாமல் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டமுடியும். முழுக்க சுகாதாரமற்ற சூழ்நிலையில் நின்று செய்யவேண்டிய நகரசுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டிய தேவை குறித்து யாருமே வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதைச் செய்தால் ஊரே நாறிப்போய்விடும். அதைப்போன்ற ஒரு நாற்றம்தான், நோண்டுவதையும் உரசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இங்கே உள்ள ஆண்களால் ஏற்படுகிறது. சமூக சுகாதாரத்திற்கு இது நல்லதுமல்ல.

பாலியலை விற்கலாமா?

பாலியல் என்பது ஆழ்ந்து அனுபவிக்கவேண்டிய உன்னதமான விடயமல்லவா? அதை விலைக்குப் போடுவது சரியானதாகுமா? என்பது சில இலக்கியவாதிகளின் கேள்வி. ‘வித்தியாதனம் ஸர்வதனால் பிரதானம் ‘ அல்லவா? ஆசிரியரிடம் கல்வியை இனாமாகப் புகட்டச் சொன்னால் புகட்டுவாரோ? அதற்கு அவருக்குச் சம்பளம் தரவேண்டும். சொந்த வாழ்க்கையை நடாத்துவதற்காக அவர் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருக்கிறார். ஜேசுதாஸ் பாடுவதற்குப் பணம் வாங்குகிறாரே? இசையென்பது அனுபவிக்கத் தகுந்த உன்னதமான கலை இல்லை என்பதா இதற்குக் காரணம்? இதைபோன்றதுதான் பாலியலும். எல்லாத் தொழில்களிலுமே உள்ள சில இடர்ப்பாடுகள் இதிலுமிருக்கின்றன. பாடுபவன் தனது குரலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடுவராமல் பாதுகாத்துக்கொள்வது போன்ற கவனம் பாலியற் தொழிலாளர்களூக்கும் தேவைப்படுகிறது. இதில் இவர்கள் வாங்கும் கூலி மட்டும் மற்றவர்களுக்குப் பெரிய குறைபாடாகப்படுவது ஏன் ?

வேசி என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நான் இதன் பொருளை ‘வசீகரிப்பவள்’ என்பதாகப் புரிந்துகொள்கிறேன். இது ஏளனமான பொருள் தொனிக்கும்படி மற்றவர்களின்மீது பிரயோகிக்கப்படுவதால் பாலியற் தொழிலாளி எனும் புதியசொல்லை நாங்கள் பிரயோகிக்கவேண்டியதாயிற்று. ‘சிரைப்பவன் ‘ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பார்பர்’ எனக் குறிப்பிடுவதைப்போல், பெயரில் எந்த வேறுபாடுகளுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை . அதன் பயன்பாட்டுப்பொருளிற்தான் ஏளனம் தொனிக்கிறது.

பாலியற் தொழில் என்றால் அது பாலியலோடு மட்டுமே தொடர்புடையதல்ல. பாலியலை வாங்குவது என்று சொன்னால், நமது ஒரு வருடுதலிற்கூட அது ஏற்படலாம் . எதிர்ப்பாலினரிடையில் மட்டுமல்ல சுயபாலினரிடையிலும் இது ஏற்படலாம்.லெஸ்பியனரிடையே எப்படி பாலியல் இன்பம் சாத்தியமாகிறது என்ற சிந்தனையில் மூளையைப் போட்டுப் பிசைந்துகொள்பவர்களை எனக்குத் தெரியும் . இப்படிப்பட்ட ஒரு கேள்வியே மிகத் தவறானது. அன்பு, பரிவு, ஆறுதல் போன்றவை உடல் சம்பந்தப்பட்டதா, மனம் சம்பந்தப்பட்டதா என்று சிந்தித்து மூளையைக் குழப்புவது தேவையற்ற வேலை. பாலியலில் உடல் ரீதி இவ்வளவு எடை, மனரீதி இவ்வளவு , சமூக அங்கீகாரம் இவ்வளவு என்றெல்லாம் தூக்கிப் பார்த்துத் தலையைப் புதைத்துக் கொள்பவர்களின் நிலை அனுதாபத்திற்குரியது .

3 thoughts on “மதிப்பு மறுப்பறிக்கை

  1. மேற்கு நாடுகளில் பாலியல் தொழிலாளர்களின் பிரத்தியேக இடங்களில் போய் எவ்வளவு காசு என்றுதான் கேட்கிறது வழமை.
    ஆனால் வாடிக்கையாளர்கள் தெருக்களில் சந்தித்து பாலியல் தொழிலாளி என்று சரியாக நிச்சயிக்க முடியாத நிலையில் நீங்கள் வேலை செய்பவரா? என்றுதான் கேட்கிறார்கள். நீங்கள் புறொஸ்ரிரியூட்டா என்று கேட்பதில்லை. சிலவருடங்களுக்குமுன் ஒரு பாலியல் தொழிலாளியின் கணவரை பேட்டிகாண தொலைக்காட்சிபோனது. உங்கள் மனைவி விபச்சாரம் செய்வது குறித்து உங்க்கள் கருத்தென்ன என்று கேட்டபோது அவர் அது என் மனைவியின் தொழில் , எனக்கு என் மனைவி வேலைக்குப் போய்விட்டு வருபவர் என்ற நினைப்பைத்தவிர வேறு மாதிரி உணார்வதில்லை என்று பதில் சொன்னார். அழகு நிலையங்களில் மசாஜ் நிலையங்களில் நடைபெறுவதுபோல் தான் இதுவும். ஆண்குறியை உள் நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவதுபோல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

  2. குறியாயிருந்தாலென்னஇ மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

    செயசிறி> உப்பிடி லூசுத்தனமா எழுதாதேங்கோ. ப்ளீஸ்
    உங்களுக்கு உறுப்புக்கள் பற்றியும் உணா;வுகள் பற்றியும் விளங்கவைக்கிறது கஸ்ரம் எண்டும் விளங்குது.

  3. முகுந்தன்,மேலே உள்ள கட்டுரையில் ஒரு வரி வருமே! லெஸ்பியன் களிடையில் எப்படி பாலியல் இன்பம் சாத்தியமாகிறது என்று மூளையைப்போட்டு பிசைபவர்களை எனக்குத்தெரியும் என்று , வாய்வழிப்புணர்ச்சி, ஆசனவாய்ப்புணர்ச்சி, இப்படி ஆயிரத்தெட்டு புணர்ச்சிவகைகள் இருக்கு. முன்னர் ஒரு பத்திரிகையில் ஒரு லெஸ்பியன் பெண் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் இயங்கியும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கமுடியாத திருப்தியையும் சந்தோசத்தையும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேரும்போது அடைய முடியும் என்று. ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவருக்கு விளங்க வைக்கிறது கஸ்ரம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *