முரண்வெளியை முன்வைத்து

கட்டுரைகள்

-சுகன்

சாதி அடையாளத்தை இழப்பது எப்படித் தற்கொலைக்குச் சமமானதென்று ஹரிஹரஷர்மாவின் நான் ஒரு வெள்ளாளன்/ பிராமணன் கட்டுரை ஈட்டுறுதி காட்டிவிட்டுப் போயிருக்கிறது.
தமிழ்ச்சமூகம் எப்படிச் சாதியச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜேர்மனிய நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாண சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்புநோக்கும்போது காற் தூசிக்குச் சமமானதென்றும் சொல்லிச் செல்கிறது.
ஒரு துயரத்தை இன்னொரு துயருடன் ஒப்பிட்டுச் ‘சீர்தூக்கிப் பார்ப்பது‘ சிக்கலானதுதானெனினும் இதைவிட வேறு எப்படிச் சாதியக் கொடூரத்தைச் சொல்லிவிடமுடியும்.அனுபவித்துப் பார்த்தாற்தான் அதன் அழற்சி தெரியும்.
சாதிய அடிமைத்தனத்திற்குள் வாழ்ந்து பார்த்தாற்தான் அதன் வலி தெரியும்.
சில வருடங்களிற்கு முன் ஒருநண்பர் எனக்கு அறிமுகமானார்.

”உங்களுக்கு என்ன பேர்” என்றேன்.
“சர்மா” என்றார்.
“இல்லை, உங்களுக்கு என்ன பேர்” என்றேன் .
” சர்மா” என்றார்.
”இல்லை, எங்களை மாதிரிப் பேர்” என்றேன்.

ஏதோ குற்ற உணர்ச்சியிலும் கொலைக் குற்றத்திலும் சம்பந்தப்பட்ட பெயர் மாதிரி , அருவருக்கத்தக்க, வெறுத்தொதுக்கப்பட்ட பெயர் மாதிரித் தயங்கித் தயங்கி மெதுவாகச் சொன்னார்; தேவகாந்தன்.

ஐரோப்பாவில் பல ஐயர்களும் சர்மாக்களும் இருக்கிறார்கள். நாசிகள் இன்றும் இருக்கிறார்கள் தானெனினும் அவர்கள் தங்களை நாசிகள் என்று அடையாளப்படுத்துவதை விரும்புவதில்லை.
ஆனால் அவர்கள் விரும்புகிறார்கள். அம்பேத்கர் சொன்னார்: உலகிலேயே கொடுமையான ஒடுக்குமுறை சாதி ஒடுக்குமுறைதானென்று.

அவர்களிற்குத்தான் தெரிகிறது மேற்சாதி அடையாளத்தை இழப்பது எவ்வளவு கொடூரமான சூழலிற்குட் தம்மைத் தள்ளிவிடுமென்று.

மேற்சாதிய அடுக்கின் உச்சியில் இருப்பவர்கள்,அதிகாரம் செய்பவர்களிற்குத்தான் தெரியும் அதன் வசதிவாய்ப்புகள்,சலுகைகள்,பவிசுகள்,கெளரவங்கள், புனிதங்கள்,சுதந்திரம்,
அதிகாரம் தரும் சந்தோசம் எல்லாவற்றையும் உயர்சாதி அடையாளம் தந்துவிடும், தலைமுறை தலைமுறையாகத் தந்துவிடும், பிறக்குமுன்னே உத்தரவாதப்படுத்தப்பட்டுவிடும்.

துபேயின் ஆய்வுகள் சமூகத்திற் பிராமணர்க்குரிய இடம் எதுவென்று விஸ்தாரமாகவே ஆழ  அகலங்களுடன் அணுகுகிறது. கடவுளிற்கும் அரசனிற்கும் இடையில் தம்மை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள் .. அரசனிற்கும் மேலே
கடவுளிற்கு நிகராக..

ஹரிஹரஷர்மாவின் கட்டுரையும் யாழ்ப்பாணத்தில் பிராமணர்களின் இடம் கடவுளிற்குநிகராக நிறுத்தப்படிருப்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறது.ஆனால் இதுவரை வாய்மொழி , செவிவழிச் செய்தியாக இலங்கையில் பிராமணர்கள் தலித்துகளிலும் கேவலமாக , தீண்டத்தகாதோராக வறுமையில் வாழ்கிறார்கள், உழல்கிறார்கள் , யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் தலித்துகளிற்குச் சமம் என்ற மேற்சாதிப் பரப்புரையைப் புரட்டிப்போட்டிருப்பதில் மிகவும் மிகவும்முக்கியமான ஆய்வும் அவதானமும்.எந்த வெள்ளாளர்களிற்கும் பிராமணர்களிற்கும் இதுவரை இந்நோக்குநிலை சாத்தியமானதில்லை.

கள்ளர், மறவர் , காடர், அகம்படியார் மெல்ல.. மெல்ல..
வந்து வேளாளராயினரே..! ,,,,,பள்ளத்தமிழர், போன்ற மேற்சாதிஆய்வு உளவியலிலிருந்து பேராசிரியர் சிவத்தம்பியே விடுபடாதபோது ஏனையோரை என் சொல்ல!

பிராமணர்களும் வெள்ளாளர்களும் வறுமையிலிருந்தால்
ஐயையோ!!!!! ஐயையோ!!!என்று உலகத்தைக் கூட்டி ஒப்பாரிவைக்கும் அறிவுப்புலத்தினர் தலித்துகள் வறுமையிலிருந்தால் அது அவர்கள் இயல்பு என்று விட்டுவிடுகிறார்கள்.
அன்றேல் அபத்தமாக ஓரிரு சிறுகதை , கவிதை எழுதுவார்கள் .
கஞ்சிக்கு வழியிலார்…அதன் காரணமும் என்னதென்று அறிகிலார்…என்பதைப்போல.
கொஞ்சம் காசுவந்தால் புதுப்பணக்காறர் என நையாண்டிவேறு செய்வார்கள்.

தற்போதைய சூழல்நெகிழ்ச்சியில் தலித்துகளின் பொருளாதார நிலை
யில் அதையொட்டி எற்படும் புதிய அவமானங்களைத் தோழர். தெணியானின் ” வெளியில் எல்லாம் பேசலாம்”,, தீண்டத்தகாதவன்”ஆகிய சிறுகதைகளைப் படித்தாவது புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் ஹரிஹரஷர்மாவின் ஆய்வு வறுமைகூட வெள்ளாளர்களிற்கும் பிராமணர்களிற்கும் மேலதிக கெளரவத்தைத் தந்துவிடுவதை , சிலநாட் பொருளாதாரக் கஸ்ரங்கள் அவர்கள் சாதி அடக்குதலுக்கு மேலதிக ஆயுதமாக மாற்றப்படுவதைத் துல்லியப்படுத்துகிறது.

அரிவரிப் பள்ளிக்கூடத்திலிருந்து அரசியற்தலைமைகள்வரை மேற்சாதிய அதிகாரத்தைக் காப்பாற்றுவதிற் குறியாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலிற் கல்விநிறுவனங்களின் சாதிமுகத்தை நோக்கி மீண்டும் மீண்டும் காறித்துப்பவேண்டியிருக்கிறது.

கல்வியின்மூலமாக மட்டுமே மேற்சாதியதிகாரத்தைத் தகர்த்தெறியமுடியுமென்று தலித் அரசியல் முன்மொழிகிறது.தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி ‘ என்று ஓர் ஆய்வு முன்னர் வெளிவந்தது .1945ல் தலித்துகளிற்குக் கல்வியில் விசேடசலுகை/ உரிமை வழங் கவேண்டுமென்பது பிரதான அரசியற் கோரிக்கையாகவே அன்று இருந்தது.
அறுபது வருடங்கள் கழித்தும் நிலைமையில் எந்த மாற்றமும்
ஏற்படுவதை விரும்பாத தன்மையையே சூழ்நிலைக்கேற்றவாறு
நாடகமாடும் வெள்ளாளர்கள் விரும்புவதையே மேற்படி ஆய்வும் சுட்டுகிறது.

யாழ்ப்பணத்தின் எல்லாக் கல்லூரிகளிலும் நிலைமை இவ்வாறுதானிருக்கிறது. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் சில தலித் மாணவர்கள் படித்தார்கள்.
முன்னாலுள்ள கோவிலுள் திருவிழாவிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். தலித் மாணவர்களை பாடசாலையிற் கோவிலிற்குப் பஞ்சாமிர்தம் செய்யச்சொல்லி இருத்திவிட்டு ஏனையோரை கோவிலிற்குள் அழைத்துச் சென்றதாக
அக் கல்லூரி மாணவர் என்னிடம் வேதனையோடு கூறினார்.

பேராசிரியர் பத்மமனோகரன் படிக்கும்போது தனது வகுப்பில் செல்லன் எண்ற மாணவரை நளக்குட்டி என்று மாணவர்களூடன் சேரவிடாது தனியே இருத்தி வைத்துப் படிப்பித்ததாகக் கூறினார்.

ஒரு சில தலித் மாணவர்களைக் கல்லூரிகள் அனுமதிப்பது தம்மை உயர் வெள்ளாளர்களென்று ஒப்பு நோக்கிக் கெளரவம் காக்கவும் சாதிவெறி வன்முறையாட்டத்தை நிகழ்த்தவுமேதவிர வேறெதற்குமல்ல.

சுப்பிரமணியம், அலெக்ஸாண்டர் போன்ற பெரும் கல்வியியல்
அறிவர்களை யாழ்ப்பாண சாதிய சமூகம் தன்னருகில் இன்னும் வர அனுமதிக்காதநிலையே காணப்படுகிறது. இவர்கள் திறமைகளைச் சிங்கள சமூகம் மிகவும் மதித்துப் போற்றிக் கெளரவப்படுத்துகிறது. ஒருவரை என்ன சாதி என்று எப்போதும் நினைக்க விரும்பாத அற்புதமான சமூகமது. பெளத்தத்தின் பெருங் கருணையும் தர்மமும் அது.

சிங்கள சமூகத்தில் சாதியம் “”குறித்து பல “தமிழ் அறிஞ்ர்களும் ” முயன்று பார்த்தார்கள்தானெனினும் சட்டியில் இருந்தாற்தானே அகப்பையில் வருவதற்கு.

சாதியைத் தவிர வேறொன்றில்லை, என்னும்படியாக இருக்கிற யாழ்ப்பாண சமூகத்தில் சாதியைக் குறித்துப் பேசாமற் சிங்கள சமூகத்தில் சாதியம் குறித்த கவன ஈர்ப்பு சிரிப்பிற்கிடமானதும் அயோக்கியத்தனமானதும்.

யாழ் பல்கலைக் கழகத்தில் சாதியம் பல இடங்களிற் பேசப்பட்டவொன்று. இது போலவே மருத்துவ மனைகள்,கோவில்கள்,அரசியற் கட்சிகள்,கச்சேரிகள், …..என்றவாறாக ஒவ்வொரு அதிகார அலகுகளிலும் சாதியம் குறித்த ஆய்வுகளும் எதிர்ப்புகளும் பதிவுபண்ணப்பட வேண்டியது இன்று முக்கியமானது. முரண்வெளி இதற்குக் களமாகமுடியும்.

19 thoughts on “முரண்வெளியை முன்வைத்து

  1. மேலும்,,,,

    எழுதுமட்டுவாளில் தலித் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடம் போகும்போது அவர்கள் கொப்பிகள், புத்தகங்கள் அனைத்தையும்
    வெள்ளாள வெறியர்கள் பறித்துக் தீக்கிரையாக்கிய அநியாயத்தைத் தந்தை டானியல் யாழ் . பொது நூல் நிலையத்தைத் தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் ஒப்பிட்டார். ‘சிலர்’ ” இதுவேறு அது வேறு ” என்றனர். டானியல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டும் சாரம்சத்தில் ஒன்றுதானென்றார்.
    மேலும்,, என். கே. ரகுநாதனின் ” ஒரு பனம்சோலைக் கிராமத்தின் எழுச்சி” எனும் தன் வரலாற்று நாவலில் அவர் தன் சகோதரியோடு பாடசாலை திரும்பும்போது எதிர்கொள்ளும் வன்முறை, பள்ளிக்கூடம் சேர்ந்ததிலிருந்து பென்சனாகி வரும்வரை ஒரு தலித் சாதியின்பேரால் எதிர்கொள்ளும்நிரந்தர அவமானங்கள் …என கூர்மையாகவும் நுண்மையாகவும் பதிவாகியிருக்கிறார். சாதிவெள்ளாளர்களின் பார்வையில் ஒரு பனம்சோலைக்கிராமத்தின் எழுச்சி பேசப்படாதிருப்பதை புரிந்துகொள்ளலாம்,, ஆனால் தாங்கள் சாதியைக் கடந்தவர்களென்று பசப்புவோரின் மெளனம் , கள்ளமெளனமன்றி வேறென்ன.

    முடிவாக ,
    இஸ்லாமியராகவோ, பெளத்தர்களாகவோ மாறும்பட்சத்திலேயே தலித்துகள் தமக்கான கல்வியைப் பெறமுடியுமென்பது அனுபவம் தந்த பாடம். மதம்மாறும் அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்ற சூழ்நிலையிலேயே தலித்துகள் தங்கள் உரிமைகளுக்கு அருகில் நெருங்கிவரமுடிகிறது.
    எல்லாப் பாடசாலைகளும் வெள்ளாளர்களிற்கானதாகக் காபாந்து பண்ணப்படும்போது தலித்துகளிற்கு மட்டுமானதாக ஒரு பெரும் சர்வகலாசாலையை ஏன் நிறுவக்கூடாது. நாளந்தா, கேம்பிறிச், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தலித் கல்லூரியை நிறுவமுடியும். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் தோற்றத்தை இங்கு நினைவில் நிறுத்துவது பொருந்தும்.

    இது கற்பனாஅவஸ்த்தையாகத் தோன்றலாம், ஆனாற் தலித்துகளிற்கு அதன் அருமை தெரியாமற் போகாது.

  2. சுதந்திரத்திற்கான பாதை

    …………………….

    சுதந்திரத்திற்கு உண்டு நீண்ட நெடிய பாதை

    உன் பதற்றம்

    நெடும்பாதையைச் சுருக்காது தோழனே

    உன் எண்ணம் அறிவேன்

    கோபத்துடன் வெடித்துக்கொண்டிருக்கும்

    உனது மூளை எரிந்துகொண்டிருக்கும்

    பழிவாங்கும் எண்ணத்துடன்

    சித்ரவதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கும்

    இங்குமங்கும் , எங்கும் , எல்லாவிடமும்

    ஆர்வத்துடன்

    நீடிக்கும் கேள்விகள்

    சந்தேகம்

    யார் இருக்கிறார்; யார் இல்லை என

    உன் வலியை நானறிவேன்

    எல்லோரும் உணர்ந்துவிட்டனர்

    அது ஆரம்பித்ததிலிருந்து.

    புலம்பலற்ற அமைதியான அடக்கம்

    இப்பாதையில் பயந்துவிட்டவர்கள் பலர்

    உனக்கு முன்பு

    அடிக்கடி பதிந்துள்ள ரத்தச் சுவடுகள்

    அடையாளங்கள்

    உனக்காகவும் எனக்காகவும்

    பின் தொடர

    நீண்ட , கடுமையான பாதை ஒன்று

    சுதந்திரத்திற்காக.

    :::::::::::::::::

    (பிரெட்டி ரெட்டி…(இந்தியா) )
    தமிழில்:: அ. ஜ . கான்.

    (தோற்றுத்தான் போவோமா..01..மே..1999)

  3. //தமிழ்ச்சமூகம் எப்படிச் சாதியச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜேர்மனிய நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாண சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்புநோக்கும்போது காற் தூசிக்குச் சமமானதென்றும் சொல்லிச் செல்கிறது..
    …….//

    //சிங்கள சமூகம் மிகவும் மதித்துப் போற்றிக் கெளரவப்படுத்துகிறது. ஒருவரை என்ன சாதி என்று எப்போதும் நினைக்க விரும்பாத அற்புதமான சமூகமது……./////

    அறிவுக்கொழுந்து நீங்கள்!!!!!!
    ஈழம் உங்களை இழந்து நிற்கிறது!!!!!!!
    எவ்வாறாயினும் உலகத்துக்கு நீங்கள் ஒரு கொடை தான்!!!!
    நன்றி தோழரே!!!!!!

  4. இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல்

    கே. டானியல் பேட்டியிலிருந்து!
    …………………………

    கேள்வி:
    இலங்கையில் சாதிகொடுமைகளைப் பற்றிக் கொன்சம் சொல்லுங்களேன் ?
    பதில் :
    சென்ற ஆண்டு மாசிமாதம் எழுதுமட்டுவாள் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் போன தாழ்ந்த ஜாதிப்பிள்ளைகளின் புத்தகங்கள்,*
    நோட்டுகள், சிலேட்டுகள் ஆகியவற்றை
    பிடுங்கி நொருக்கிக் குவித்து எரித்திருக்கிறார்கள் உயர்சாதி வகுப்பு வெறியர்கள். யாழ்ப்பாண நூல்நிலையத்தைச் சிங்கள இனவெறியர்கள் கொழுத்துவதற்குக் காட்டுகிற நியாயம் _ தமிழர்கள் படித்து முன்னேறி சிங்களவர்களுக்கு மேலாக வந்துவிடுவார்களென்பது. தாழ்ந்த சாதி மக்கள் படித்து முன்னேறி உயர்ந்த சாதியினருக்கு மேலாக வருவதைத் தடுப்பதற்காக அவர்களது புத்தகங்களைப் பிடுங்கிக் கொழுத்துவது நியாயமென்றால் ; யாழ்ப்பாண நூல் நிலையத்தைக் கொழுத்திய கொடுமையும் நியாயம்தானே! காரியாம்சத்தைப் பொறுத்தமட்டில் இரண்டும் ஒன்றுதானே!

  5. அச்சுவேலி மத்திய கல்லூரியில் சாதிவெறி

    :::::::::::::::::::::::::::::::::::::::::

    அச்சுவேலி மத்திய கல்லூரி வலிகாமம் கிழக்கில் ஒரு முக்கியமான பாடசாலையாகும்.

    கணவன் அதிபராகவும் மனைவி ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியையாகவும்
    கடமைபுரியும் இக் கல்லூரியில் அவ்வப்போது சாதிய வக்கிரச் செயற்பாடு தொழிற்படத் தவறுவதில்லை.
    அண்மைய உதாரணமொன்று புதியபூமிக்குக் கிடைத்துள்ளது.
    அதே பாடசாலையில் மற்றொரு தம்பதியினர் ஆசிரியர்களாக உள்ளனர்.
    அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த அவர்கள் தமது ஏக புத்திரிக்குப் பூப்புனித நீராட்டுவிழா நடாத்தியபோது
    தமது சக ஆசிரிய குழாமிற்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.
    அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட ஆசிரிய குழாத்தினர் அவ் விழாவிற்கு முதல்நாள் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றும் சிரேஷ்ட
    ஆசிரியர் ஒருவரை விழா நடாத்திய ஆசிரிய தம்பதியினர் வீட்டிற்கு அனுப்பி “” நாங்கள் நாளைக்கு வருகிறோம், எங்களிற்கு நீங்கள் வீட்டில் செய்த சிற்றுண்டிகள் வழங்கவேண்டாம், சோடாவும் பிஸ்கற்றும் வாங்கி வைத்திருங்கள் “” எனக் கூறிவிட்டு அடுத்தநாள் விழாவிற்குச் சென்றனர்.

    இவ்வாறு சென்ற ஆசிரியர்குழாத்தினர்க்கு வீட்டிற் தயாரித்த குளிர்பானமும் சிற்றுண்டிகளும் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.
    இதனைக் கண்ணுற்ற ஆசிரியர் குழாத்திற்கு முகங்கள் ஓடிக்
    கறுத்துக்கொண்டன.
    ஒருவரை ஒருவர் பார்த்து நெளியவும் செய்தனர் .
    சிலர் அவற்றைத் தொடவேயில்லை.
    ஓரிருவர் பலகாரத்தைக் கையில் வைத்திருந்துவிட்டு பலரும் பார்க்க வெளியில் வீசியெறிந்துவிட்டுத்திரும்பினர்.

    எப்படியிருக்கிறது ஆசிரியர்களின் மனோபாவம் .
    சாதியும் தீண்டாமையும் இப்போது எங்கே இருக்கிறது எனக் கேட்பவர்கள் இச் சம்பவம் பற்றி என்ன சொல்வார்கள் .
    “” கல்வியும் பொருளாதாரமும் இருந்தால் சாதியம் தானாக மறைந்துவிடும்”” என்று கூறுவோருக்கு இவ் அச்சுவேலி ஆசிரியர் குழாமின் சாதிய வக்கிரச் செயல் சமர்ப்பணம்..

    நன்றி : புதிய பூமி டிசம்பர் 2004.

  6. சாதிய முரண்பாடுகள் சமூகத்தில் நிலவும் துணைமுரண்பாடுகள்! பெண்ணடிமைத்தனமும் அப்படித்தான். அடிப்படை முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை இத்தகைய சமூக முரண்பாடுகளும் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக அது வரை இது ஒன்றும் பேசாப்பொருள் அல்ல! சமூகமுரண்பாடுகளை தூண்டிவிடுவது போல் கருத்துக்களை முன்வைப்பது மட்டும் தவிர்க்கப்படுவது நன்று. புதிய சமுதாயம் ஒன்றின் தோற்றத்தை நடந்து முடிந்த போராட்டாச்சூழல் உருவாக்கி தந்திருப்பதையும் உணரவேண்டும். அந்த புதிய சமுதாயம்தான் இன்று மேலாதிக்க சமூக அமைப்புக்குள் இருந்தும் சமூகப்பார்வைகளை தந்து கொண்டிருக்கின்றன. இந்த கருத்தியல் இடை நிலையில் இருந்து முழுமையை நோக்கி வளர்ந்து கொண்டும் இருக்கின்றது. அந்த முயற்சிகளையும் முளையில் கிள்ளி விடக்கூடாது. இது குறித்து தேவை ஏற்படின் இன்னும் பேசலாம்…

  7. பரன்,
    மேலாதிக்க சமூக அமைப்பென்றால் எந்த மேலாதிக்க சமூக அமைப்பு,?
    ஒரேயொரு மேலாதிக்கம்தான் எமக்குமுன்னே உள்ளது.
    அது வெள்ளாள மேலாதிக்கம். … வெள்ளாள மேலாதிக்கம்.

  8. //…அடிப்படை முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை இத்தகைய சமூக முரண்பாடுகளும் இருந்து கொண்டே இருக்கும். ….//

    உண்மைதான். இங்கு ஒன்றைக்குறிப்பிட விரும்புகிறேன். புகழ்பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணரும் நோபல்பரிசு பெற்றவருமான காலம்சென்ற மில்ரன் ஃபிரீட்மன் கூறுகிறார் ” சுதந்திரம் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப்பேசுவோர் இறுதியில் சுதந்திரமோ அன்றி சமத்துவமோ அடைய மாட்டார்கள் ”

    //…..நாளந்தா, கேம்பிறிச், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தலித் கல்லூரியை நிறுவமுடியும். …

    இது கற்பனாஅவஸ்த்தையாகத் தோன்றலாம்///

    நிச்சயமாக இல்லை சுகன். இது கற்பனை அல்ல. ஆனால அப்படியான கல்லூரிகளில் நீங்கள் முன்னர் கூறியது போல் ‘யாழ்ப்பாண சாதியம்” கிட்லரின் ‘நாஸியத்தின்’ கால்தூசுக்கும் வராது என்றோ, “சிங்கள ச்முதாயம் என்ன சாதி என்று எப்போதும் நினைக்க விரும்பாத அற்புதமான சமூகம்..” என்றோ கற்பித்தால் நாலு நாளுக்குள் மூடவேண்டி வரும்.

  9. புத்தூரில் பெரும்சொத்துடமைபெற்ற மழவராயரின் பாடசாலையான சிறீ சோமாஸ்கந்தா கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை, அரசாங்கம் பாடசாலைகளைத் தேசியமயமாக்கி பதினைந்து ஆண்டுகளின் பின்பே ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தாறிலேயே அங்கு அனுமதி கிடைத்தது, இச் சூழலிலே புத்தூர் பெளத்த பாடசாலை உருவாக்கப்பட்டமை நியாயப்படுத்தப்பட்டது, சோமாஸ்கந்த பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மக்களை உடன் அனுமதித்திருக்கவேண்டும், அப்படிச் செய்திருந்தால் உடனேயே புத்தூரில் உருவாக்கப்பட்ட பெளத்த பாடசாலையை மூடியிருக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை, அதற்குப் பதிலாக அன்றைய தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதி உறுப்பினராகவிருந்த திரு , கதிரவேற்பிள்ளையால் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வேறொரு கிராமத்தில் சிறீ முருகன் தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த வேடிக்கை மிக்க வேலையைத்தான் செய்யமுடிந்தது , சாதி தீண்டாமைப் பிரச்சனையில் தமிழரசுக் கட்சியின் இரட்டைவேடத்திற்கு இது ஒரு
    சிறந்த உதாரணமாகும்,

    நன்றி : சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

  10. ஜேர்மனிய நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாண சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்புநோக்கும்போது காற் தூசிக்குச் சமமானதென்றும் சொல்லிச் செல்கிறது என்று சுகன் கூறுகிறார். முயன்று முயன்று பார்த்தும் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நாசிகளின் அழிப்புப் பொறிமுறை இனஅழிப்பைக் கோரி நடைமுறைப்படுத்தியது. யாழ்ப்பாண சாதியமைப்பில் வேளாள ஆதிக்கம் தலித்துகளின் அழிவைக் கோருகிறதா அல்லது தலித்துகளை தலித்துகளாகவே பேணுவதில் குறியாக இருக்கிறதா? தலித்துகளின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை சகிக்காத வேளாள ஆதிக்கம் தலித்துகளின் ஆயுதப்போராட்டத்தை ஆயுதத்தால் ஒடுக்கிய நிகழ்வுகளை தலித் இன அழிப்பாகக் கொள்ள முடியுமா? அல்லது இன்று புலிகளின் “துரோகிகள்” பட்டியலுக்குள் அகப்பட்டுப்போய் கொல்லப்பட்ட தலித்துகளை வைத்துக்கொண்டு தலித் இன அழிப்பாகக் கொள்ளமுடியுமா?

    நாசிகள் இன்றும் இருக்கிறார்கள் தானெனினும் அவர்கள் தங்களை நாசிகள் என்று அடையாளப்படுத்துவதை விரும்புவதில்லை என்கிறார் சுகன். நீங்கள் ஐரோப்பாவில்தான் இருக்கிறீர்களா? அல்லது லாச்சப்பலில் இருக்கிறீர்களா? நாசிகள் என்ற பெயரை அவர்கள் பாவிப்பதில் சட்டரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அதை அவர்கள் பகிரங்கமாகச் சொல்வதில்லை. தம்மை நியோ நாசிஸ் என்று அவர்கள் தம்மை (உடை, சப்பாத்து, இலச்சினை உட்பட) அழுத்தமாக அடையாளப்படுத்தியே தாக்குதல் தொடுப்பது யேர்மன் சுவிஸ் நாடுகளில் நாம் பெறும் அனுபவம்.

    “இதைவிட வேறு எப்படிச் சாதியக் கொடூரத்தைச் சொல்லிவிடமுடியும். அனுபவித்துப் பார்த்தாற்தான் அதன் அழற்சி தெரியும். சாதிய அடிமைத்தனத்திற்குள் வாழ்ந்து பார்த்தாற்தான் அதன் வலி தெரியும்.” உண்மைதான். இதில் மாறுபட்ட கருத்துக்கே இடமில்லை. அந்தவகையில் அதை சுகனும் உணர வாய்ப்பில்லையல்லவா. இதை நிரூபிக்க தம்மை தலித்துகள் என்று நிறுவ முயலும் போக்கு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று கொள்ளலாம். அந்த வலியை உணர்வுப+ர்வமாகப் பெறுவது என்பதும் மனிதாபிமான அடிப்படையில் அல்லது அறிவுசார் நிலையில் அல்லது ஒடுக்குமுறைகளுக்கெதிரான போர்க்குணாம்சத்தில் உணர முயற்சிப்பதும் ஒன்றல்லத்தான். அதற்காக தலித்துகளின் பிரச்சினையை தலித்துகள் அல்லாதோர் பேசமுடியாதென்றில்லை. தலித்துகளாக இல்லாதவர்கள் வலிந்து தம்மை தலித்துகளாக அடையாளம் காட்டி தலித்தியம் பேசவேண்டுமென்றுமில்லை.

    இந்துத்துவத்திடமிருந்து தம்மை விடுவித்து தலித்துகள் புத்தமதத்துக்கோ கிறிஸ்தவ மதத்துக்கோ மாறியது முற்போக்கான ஒன்றுதான். அதற்காக இன்றைய புத்தமத்தை அன்பு கருணை உள்ள மதமாகக் காட்டுவது ஒரு எதிர்வாதம் மட்டுமே. நான் நடைமுறை சார்ந்தே இதைக் கூறுகிறேன். சிகல உறுமயவை விட்டுவிவோம். இலங்கையின் அரசியல் மேலாண்மை புத்தமதத் துறவிகளின் இயங்குதளத்துக்குள்ளேயே செயல்படுகிறது என்பதை மறுக்க முடியுமா உங்களால். போகட்டும். ஒரு நேரச் சோத்துக்கு தவண்டையடிக்கும் குடிசையில் வாழ்பவளும் புத்தபிக்கு விருந்தினனாக வந்தால் தமது வயிற்றை கட்டிப்போட்டு தானம்செய்யிறாள். இதை எந்தக் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்துவது?. புத்தமதம் செழித்து வளரும் தாய்லாந்து போன்ற இடங்களில் குழந்தைகளை அதன் அறியாப் பருவத்திலேயே புத்தமதத் துறவிகளிடமே -நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு- ஒப்படைப்பதை மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் அல்லது குழந்தை உளவியல் கண்ணோட்டத்தில் விளக்குங்கள் பார்க்கலாம்.

    யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் தலித்துகளிற்குச் சமம் என்ற துக்ளக்கிய மேற்சாதிப் பரப்புரை நாம் அறிந்ததுதான். அது நலிந்துபோன உளறல். இதை கெட்டியானதாய் காட்டி அடிப்பது ஒன்றும் புரட்டிப்போடலல்ல. புலுடா.

  11. மாதவன்,

    சிகல உறுமய, ஏழைச் சிங்கள விவசாயி, தாய்லாந்துக்காரர்கள் எல்லோரையும் தான் விடுங்கள். மாற்றுக்கருத்து எண்று சொல்வோர் ஜே.வி.பி தோழர்களின் சிங்கள-பொளத்த மேலாதிக்கத்தையும் பொளத்த பிக்குகளின் காலில் விழுவதையும் பற்றி என்ன சொல்கிறார்கள்? நீங்கள் சொன்னதுமாதிரி புலுடாதான் விடுவார்கள்!!!!

  12. மாதவன் ,
    சாந்தியும் சமாதானமும் உங்களிற்குண்டாகட்டும்!
    போதிமாதவன் புத்தரின் பெயரைச் சொன்னாலே அன்பும் கருனையும் வந்துவிடுகிறது.
    நாசிகள் தம்மை நாசிகளென்று பகிரங்கமாக அறிவிப்பதைத் தவிர்ப்பது சட்டச் சிக்கல்களினால் மாத்திரமேயென்ற உங்கள்
    நம்பிக்கைக்கு நான் என்ன சொல்ல!
    எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.புதிய சூழ்நிலைக்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொண்டும் தகவமைத்துக்கொண்டும் அவர்கள் இன்னும் வளர்ந்துவருவது உடை, சப்பாத்து, இலட்சனை ஆதியனையோடு
    தாக்கும், வன்முறைசெய்யும் செயலினால் மாத்திரந்தானா?
    அவர்கள் பாடத்திட்டதில் மார்க்ஸியமும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இவர்களின் தோழரான பக்கூனின் சிந்தனையும் நடைமுறையுமான அனார்க்கிஸமும் இருந்தது பழைய செய்தி.
    அவர்களின் கற்கைக்கான புதியபாடத்திட்டத்தில் பின்நவீனத்துவ சிந்தனைகள் இருப்பது ஜேர்மன், சுவிஸ் நாடுகளில் அனுபவம் பெறும் தமிழர்கள் அனேகமாக அறிந்துதானிருக்கிறார்கள். நீங்கள் எப்படி அறியாமல் விட்டீர்கள் மாதவன்?
    எல்லாமே மாறும்,
    யேர்மனி, சுவிஸ் நாடுகளில் உள்ள தமிழர்களில் வெள்ளாளர்களயும் பிராமணர்களையும் தாக்குங்கள் , எங்களத்தாக்காதீர்களென்றால் அந்த வித்தியாசத்தையும் அவர்கள் குறித்துவைத்திருப்பார்கள்.
    கிட்லரை நோக்கிக் கேட்டார்களாம்!
    இந்தியாவிலிருக்கும் பிராமணர்கள் தங்களை ஆரியர் என்று சொல்கிறார்களேயென்று!
    கிட்லர் சொன்னானாம் அவர்கள் ஆரியருள் பறையரென்று!
    சும்மா எதுவும் நீண்டகாலம் இருக்கமுடியாதென்பதும் தாக்குப்பிடிக்க முடியாதென்பதும் தெரியுந்தானே!
    இன்று இனத்தூய்மையும் உயரடையாளமும் பேணுபவர்கள் யார்?
    தமிழ்ப்பத்திரிகை படிக்கும் பழக்கம் தங்களிற்கிருக்குமாயின்
    (படிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை) தயைகூர்ந்து இரண்டாம்பக்க மேல்மூலையில் எப்போதும் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கும் திருமண விளம்பரத்தைப் பாருங்கள்.
    யாழ் இந்து உயர்வேளாள …, கனடா, லண்டன், அவுஸ்திரேலியா…..இப்படி.
    அப்பால் தமிழ் இணையத் தளத்திற்குப் போய் அப்படியே யாழ்ப்பாணத்தில் உதையன் (உதயன்) பத்திரிகைக்குப்போய் திருமணவிளம்பரத்தைப் பார்த்தீர்களெனில் யாழ்ப்பாண உயர் இந்து
    வெள்ளாள …யாழ்ப்பாணம் உங்களிற்குக் காணக் கிடைக்கும்.
    இது வெறும் திருமண விளம்பரந்தானா? அகமண முறை மட்டுந்தானா? இதற்கு வேறுபரிமாணமில்லையா?
    இதைக் காண்பதற்குக் குறியீட்டியல் , குறிப்பான் களைப் படிக்கவேண்டுமா? தூ!
    உங்கள் கவனத்திற்கு இன்னொன்று ! அறிவதிலேதுந்தப்பில்லை!
    புலிகள் ஆதரவுப் பத்திரிகைகள் திருமண விளம்பரம் செய்கின்றன.
    ஆனால் சாதிப் பெயர்கள் போடுவதில்லை. இதிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
    புலிகள் சாதிக்கெதிரானவர்களென்றா? அல்ல தோழரே அல்ல!
    புலிகள் சாதிய சமூகத்தில் தம்மைத் தகவமைக்கிறார்கள்,
    அவர்களிற்கு வெள்ளாளனும் வேணும் தலித்தும் வேணும்,
    விளம்பரம் கொடுக்கும் வெள்ளாளன் புலியைப் படிச்சவன்,
    விளம்பரத்திற்கான இலக்கத்தில் வெள்ளாளன் கவனமாயிருக்கிறான். அவ் விளம்பரங்களில் மதம் தவறாதிடம் பெற்றிருக்கும், திருமூலர் இதற்காகத்தான் ” இறைச்சி தோல் எலும்பிலே இலக்கமிட்டிருக்குதோ” என்று அப்பவே பாடினார்.

  13. சிலவருடமுன் நடந்தது இது,
    செத்த வீட்டுக்குப் பறை அடிக்கக்கூடாதெண்டு அதுவும் ஒருஇடத்தில் மட்டும் சட்டம் கொண்டுவந்தார்கள் புலிகள்.

    வீடுகளுக்குப்போய் குடிமைத்தொழில் செய்ய தலித்துகள் மறுத்த நேரமது . ஒரு எத்தனம் தானே!
    புலிகள் இதுக்குப் பதில் சொல்ல வேண்டிவந்தது.
    சரி! சரி ! செத்தவீட்டுக்கு மேளம் அடிக்கக்கூடாது!
    ஒரு செத்தவீடும் வந்தது. மேளமும் வந்துஅடிச்சு செத்தவீடும் முடின்சிது. புலியும் வந்துது.
    உங்களுக்குத்தெரியாதோ! செத்தவீட்டை பறைமேளம் அடிக்கக்கூடாதெண்டு?
    தெரியுந்தம்பி! உங் கடை அபராதம் இருபத்தையாயிரத்தை நான் கட்டிறன்.

    மாதவன்,
    புலியை எப்போது, எப்படிக் கவிழ்ப்பதென்று வெள்ளாளனுக்குத்தெரியும், தெரியாதென்று புலுடா விடவேண்டாம் . சும்மா உதார் விடவேண்டாம்.
    வெள்ளாளர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஐரோப்பா எங்கனும் என்சினியர், டொக்ரர், எக்கவுண்டன் ,கம்பியூட்டர் , நிபுணர்கள் என்று அப்பவும்சரி இப்பவும்சரி அசுமாத்தமில்லாமல் அகலக் கால்பரப்பி ஆல்போற்தழைத்து அறுகுபோல் வேரூன்றி ஆரவாரமில்லாமல் இருக்கிறார்கள். ஜனநாயகமும் பேசுகிறார்கள்.
    தலித்துகள் இராணுவத்தின் முன் நிறுத்தப்பட்டு அழிக்கப்படுகிறார்கள் .இன்றுவரை முஸ்லிம் மக்கள் மீதான இன அழிப்பு நிறுத்தப்படவில்லை.
    திருவாளர் ஆனந்தசங்கரியவர்கள் ஸ்ருட் கார்ட் அரசியல்தீர்வுத்திட்ட விவாதத்தில் அங்கு சாதி ஒடுக்குமுறையே இல்லையென்றார்.
    இல்லைஐயா! அங்கு நூற்றிஐம்பதுக்குமேற்பட்ட கோயில்கள் தலித்துகளிற்காக மூடப்பட்டிருக்கிறதே!என்றபோது
    அது இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசமாயிருக்குமெண்றார்.
    நீங்கள் ஆனந்தசங்கரி அவர்களின் இணையத்திற்குச் சென்றீர்களெனில் அவரது பத்து அம்சத்திட்டத்தில் சாதிஒழிப்புப்பற்றி ஏதாவது வாய்ச்சொல் இருக்கிறதா?
    முன்னர் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பேன்,
    வெள்ளாளர்கள் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களுமென்று!
    அவர்கள் நாசிகளும் !
    மீண்டும் வெள்ளாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றத்தான் போகிறார்கள் !
    இன அழிப்பில் அழிந்தவர் போக தலித்துகளிற்கான எதிகாலம் எதுவென்று உங்களிற்கு விண்டுகாட்டத்தேவையில்லை.
    யேர்மனியில் நடந்ததைப்போல அப்படியே வெள்ளாளன் விசவாய்வு
    க் கூடத்தை நிறுவவில்லைத்தானே;என்றுகேட்டால் அதற்குப் பதில் இல்லை! நீங்கள் அப்படித்தான் சுற்றிவருகிறீர்கள்.
    இதற்குப் பதிலில்லைத்தோழரே! பதிலில்லை.

  14. திடுக்கிடுமாப்போல் திடுக்கிட்டு திண்ணைக்கு மண்ணெடுக்கிற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ( தீவு வெள்ளாளன் திடுக்கிடுவான்., திண்ணைக்கு மண்ணெடுப்பான்.)
    நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாணச் சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்பிடும்போது காற்தூசிக்குச் சமம் என்று சொன்னவுடன் ஏன் நீங்கள் திடுக்கிடுகிறீர்கள்.? பதற்றமடைகிறீர்கள்.?
    மூவாயிரம் வருடமாக ஒருஇனம் தன்னை அதிகாரத்தின் உச்சியில் இருத்திவருவதும் இனத்தூய்மை பேணிவருவதும் எப்படிச்சாத்தியமாகிறதென்ற அணுகலில் பல்வேறு நோக்குகளீற்கும் இடமுண்டு. புலுடா என்பது விவாதக்களத்திற்கு
    வலுச்சேற்காது.
    பெளத்தத்திற் குழந்தைப் போராளிகளைச் சேர்ப்பது, பிக்குவானவருக்குத் தானம் கொடுப்பது இத்தியாதிகள் பெளத்தத்தின் சாதியத்திற்கெதிரான போராட்டங்களையோ சமூக சமத்துவ நெறிகளையோ அணுகுவதற்குத் துணைக்குவராது.
    உனக்கு நீயே விளக்கு! என்றார் புத்தர் . நீங்களாகவே முயலவேண்டியதுதான். இஸ்லாம் குறித்தும் இப்படியான வெளியார் அணுகுதல்கள் இருக்கின்றன.
    மேலும்,
    நான் பிறந்த சாதியை எப்படி அறிந்தீர்கள் தோழர்?
    மிகக் கவனமாகப் பின்னப்பட்டு வீசப்பட்ட விசவலையில்
    அறியாமல் வீழ்வேனென்று மனப்பால் குடிக்கவேண்டாம்.
    நீங்கள் அறிந்தும் அறியாமலும் மாதிரிக் கேட் காத மாதிரி அப்பாவிமாதிரி . சிலர் அப்படித்தான் இன்னும் கேட் கிறார்கள்.
    நான் இதை எப்போதும் மறைப்பதில்லை.
    ஸ்ருட் கார்ட் டில் எனது அறிமுகத்தில் கேட்டிருப்பீர்களே.
    “இன்னுமொரு ஜாதி” என்றொரு ஆய்வுப்புத்தகம் 1983ல் வெளிவந்தது, படித்தீர்களா? நோர்வே ஆய்வாளர் எஸ்லே எழுதியது.அதில் இருக்கிறது.

  15. இனம் குறித்து உங்களிற்குக் குழப்பமேதுமிருக்காதென்று நினைக்கிறேன்!
    சமூகத்தளத்திலும் பத்திரிகைத்தளத்திலும் தங்களை உயர் வேளாளர்கள் இனமாக அடையாளப்படுத்துவதை திமிராகவும் பெருமையோடும் செய்கிறார்கள். அதேவேளை தமிழர் என்ற இன அடையாளத்தையும் மறுகையில் வைத்திருக்கிறார்கள்.
    இதில் ஏதாவதொரு அடையாளத்தை இழக்கச்சொல்லி யாராவது வெள்ளாளர்களைக் கேட் க முடியுமா? அதற்குக் குழப்பமில்லாமல்
    மிகத்தெளிவாக பதில் சொல்கிறார்கள் .
    ” கொழும்பில் நான் தமிழன், நானொரு வெள்ளாளன்”
    கரிகர சர்மாவின் கட்டுரைத்தலைப்பிற்கு மீண்டும் போகவும்,
    உங்களிற்கு சேரனின் கவிதை ஒன்றை யாபகப்படுத்துகிறேன்,

    தென்மராட்சியில் உள்ள கிராமத்தில் அங்குள்ள பொதுக்குளம் ஒன்றில் தலித் ஒருவர் குளிக்க, அவர் தாக்கப்பட்டார். அவர் ஓடிப்போய் அங்குள்ளா தென்னைமரம் ஒன்றில் ஏறியவேளை அவர் மரத்தில் இருக்கக் கூடியவாறே வெள்ளாளார்கள் மரத்தைத்
    தறித்துவீழ்த்தி அவரைக் கோடாலி கொண்டுவெட்டிக் கொன்ற
    முறை குறித்து சேரன் பாடினார்!
    ” இது தமிழர்களுக்கு அவமானம்”
    தமிழர்கள் வேறு, தலித்துகள் வேறு என்று அன்றே பாடியவர் சேரன் .
    தலித்துகள் இதில் அவமானப்பட ஏதும் இல்லை.
    தமிழர்களென்பது தலித்துகளல்லாதார் என்பதும் இக்கவிதையின் சொன்முறை.
    இக் கவிதையின் முன்னும் பின்னும் தலித்துகள் கொல்லப்பட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலை. முன்னோ பின்னோ தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுவது குறித்து பாடவுமில்லை,
    இதனாலறிவது யாதெனில் ,
    1 ; தமிழர்கள் வேறு தாழ்த்தப்பட்டோர் வேறு.

    2 ; மரத்திலேற்றியெல்லாம் வெட்டிக் கொல்லாதீர்கள்.

    இதைவேறு அவர் கவிதைத் தொகுதி முன்னுரையில் புகழ்ந்திருக்கிறார் ஒருவர்.
    தமிழ் அரசியல் சாதி அரசியல்.

  16. தலித்துகளை தலித்துகளாகவே பேணுவது வேறு இன அழிப்பு வேறு என்று மேற்சாதிப் பரப்புரை சொல்லும்.
    கேட்போம் !!!!!!!

  17. தள்ளிநில்லென்றால் தட்டியை அவிட்டு வைக்கிறீங்க. மாதவன் ஒரு சாதிமான் என்று தொடர்ந்து எழுதி நிறுவிவிடுங்கள்.

  18. எனது கட்டுரை பற்றிய சுகனின் கருத்துக்களுக்கு நன்றி.
    சுகனுடைய கட்டுரையுடன் எனக்கு நிறையவே உடன்பாடின்மைகள் உண்டு.
    நேற்றிரவு நான் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென அலறல். அய்யோ அய்யோ என்று இரண்டு பெண்களின் குரல். வான் விரையும் ஒலி. நாய்க் குரைப்பு. இத்தனைக்கும் அவர்கள் விட்டிற்ற்கு முன்னால் படை நிலை. நாம் எதிர்கொள்கிற முதல் பிரச்சனை சாதியம் தானா?
    தயவு செய்து இங்கு இருக்கிற நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
    96இன் பின்னர் நிலமைகள் மிகவும் மாறியிருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். அந்த முக்கிய மாற்றங்களில் ஒன்றை ஆவணப் படுத்தும் அமௌனனின் கதையுடன் (பலவீனமான புனிதப் படுத்தலைக் கொண்டதெனினும் அதன் பேசும் பொருள் முக்கியமானது) யாரும் குஸ்தி போட வரவில்லை. ஏன் அந்த மௌனம்? மிக முக்கியமான அந்த சிக்கல் கவனிக்கப் படாதிருக்க ஏன் சாதியம் குறித்த தொகுப்பு கவனப் படுத்தப் படுகிறது? எனக்குத் தெரித்து என்னுடைய அனுபவப் பகிர்வு தேவைக்கு அதிகமாக கவனப்படுத்தப்பட்டுள்ளது. பல தோழர்கள் அதை மீள் பதிவு செய்து கவனப் படுத்தியிருந்தார்கள். ஆனால், முரண்வெளியின் இதர விடயங்கள் கவனப்படுத்தப்படாததன் காரணம் என்ன?

    பிராமணர்களையும் வெள்ளாளர்களையும் பொதுமைப்படுத்தி நாசிகள் என்று அடையாளப்படுத்துவது மிகவும் கொடுமையாக இருக்கிறது. பல கொடுமைகளை வெள்ளாளர்கள் செய்திருக்கிறார்கள். நூலக எரிப்பை எழுதுமட்டுவாள் சம்பவத்துடன் ஒப்பிட்ட டானியலுடன் என் மனம் முழுமையாக உடன் படுகிறது. அதே போல சாராம்ச ரீதியில் நாசிகளும் நாங்களும் ஒன்றுதான் என நீங்கள் கூறுவது மனக்கஷ்டத்தைத் தருகிறகு. எ
    திரும்பவும் நீங்கள் செய்கிற காரியம் சாதி வெறியைத் தூண்டுவதாக அல்லவா இருக்கிறது. நீங்கள் பத்மனாப ஐயரைப் பார்த்து சனதரும போதினியில் எழுதிய விடயங்களையே நாங்கள் ஒரு பனையேறிக்குடியைச் சேர்ந்தவரைப் பார்த்துக் கூறிவிட்டால் விட்டுவிடுவீர்களா?
    தலித்துகளின் வன்முறைகளை, அவர்களிடையே பரத்து கிடக்கிற பல உடன்பாடற்ற அம்சங்களைக் கூட தலித் அழகியல் எனக் கொண்டாடி தூஷணத்தால் மனம் புண்படுமளவு ஏச முடிகிறதென்றால், நானும் வெள்ளாள அழகியல் என்று கூறி மஞ்சள் தண்ணி தெளித்துக் கொண்டு திரியலாம் தானே?
    இப்படியான உங்களின் கடூரத் தனத்தாலேயே ( அதற்கு ஒரு வரலாற்று நியாயம் உண்டெனினும்) பலர் எதிர் – இயல்பு வாதிகளாகச் சமைந்து போகிற அபாயம் உண்டல்லவா?
    வெள்ளாளரையோ பிராமணர்களையோ பொதுமைப் படுத்தாதீர்கள். அவர்களுக்கும் வலி உண்டு. ஊருக்குள் நடந்தால் முதியவர் கூட தோள்த் துண்டை இறக்குமளவுக்கு ஆதிக்கம் செலுத்திய என் அம்மாவின் விளிம்பு நிலை எனக்கு மட்டும் தான் தெரியும். கோவிலுக்குள் சாத்துப்படி செய்கிற பண்டாரங்கள் அங்கு பொம்மைகள், எடுபிடிகள். வெளியில் வந்து கூறுவார்கள் தலித்துகளை வடம் பிடிக்காதே என்று. இரவில் தலித் பாலியல் தொழிலாளியிடம் போவார்கள். இத்தனை இடியப்பச் சிக்கல்கள் கொண்ட அமைப்பு முறையைப் பொதுமைப் படுத்தி முத்திரை குத்த வேண்டாமே…
    எனக்கு ஒரு நாவலையாவது எழுதிவிடும் எண்ணமிருக்கிறது. நான் நினைக்கிறேன்; அதிலே இந்த குழப்பங்கள் ஓரளவாவது வெளிப்பாடடையும் என.
    தலித்துக்கள் வறுமையிலிருப்பது அவர்கள் இயல்பு, முன்னேறத் தெரியாது என்பதெல்லாம் பம்மாத்து. மிக நுண்ணிய செயன்முறைகளால் அடக்கி வைத்திருக்கிறார்கள் உயர்குடி ஆதிக்கவாதிகள். இந்த நுண்ணிய செயன்முறைகள் குறித்து மேலும் கவனப் படுத்தலாம் தான், ஆனால் கணனியில் டைப் செய்து அதைப் பிறகு யுனிகோடில் மாற்றி இங்கி இருக்கிற நத்தை வேக நெற் கனெக் ஷனில் அப்லோட் செய்வதென்றால் போதும் என்றாகி விடுகிறது. முன்னைய சூழலில் என்றால் ஓரளவு முடிந்திருக்கும். இப்போதெல்லாம் வெளியில் திரிவதே தற்கொலைக்குச் சமம் என்றாகி விடுகிறது.
    சிங்கள சமூகத்தில் சாதி இல்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது சுகன். ஆங்கில வார ஏடுகளில் வரும் மட்ரிமோனியல்களில் கோவி புட்டிஷ்ட் என்ற வகையான பதங்கள் வருகின்றனவே?
    இன்னுமொன்று இருக்கிறது, முரண்வெளி குறித்து என்று தலைப்பிட்டு விட்டு ஏன் என்னைப் பற்றிய கட்டுரை? முரண்வெளி=ஹரிஹரஷர்மா என்று உலவிக் கொண்டிருக்கும் வதந்திகளை நீங்களும் நம்புகிறீர்களா? வதந்திகளில் இருந்தல்லாமல் முரண்வெளியின் பிரதிகளில் இருந்து விவாதங்களை எழுப்பலாம். முரண்வெளி=நான் அல்ல.

    –நான் வரலாற்றின் கைதியாக, சூழலின் கைதியாக இருந்த்தேன்.நுண்ணிய அதிகார அலகுகளால் வடிவமைக்கப்பட்ட என் மனம் வெள்ளாள மனமாயன்றி வேறெப்படி இருத்தல் கூடும்?
    சாதி விடுவிப்பை நான் அவாவுவது எனது வாசிப்புகளால்நிகழ்ந்த்து. அவ்வாறு ஏதுமில்லாத வெள்ளாளர்கள் மிகவும் பரிதாபமானவர்கள். அவர்களுக்கு சாதித் திமிரரண்றி வேறொன்றும் தெரியாது. அந்த சாதித்திமிர் சமூகனிறுவன்ங்களின் வழி வந்த்தது. யாழ் இந்த்துவில் படிக்கும் ஒருவன் வேறெப்படி வர முடியும்,
    வரலாற்றின் கைதிகளாக, மரபின் பிடிக்குள் சிக்குண்டவர்களாக எம்மை அணுகுவதற்கு ஏதும் இடமுண்டா எனப் பரிசீலியுங்கள்…உங்களுடைய விமர்சனம் மிகவும் சுடுகிறது.

  19. ஹரிஹரஷர்மா கவனப்படுத்தியுள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஒரு வாசிப்பாளி என்ற முறையில் சுகனுடைய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். முரண்வெளியின் ஏனைய பல முக்கிய பிரதிகள் கவனிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படாததன் காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *