வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதிலிருந்து தொடங்கி சர்வதேசியம் வரை
-வ. அழகலிங்கம்
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடகீழ்மாகாணத்தை அண்மையில் இலங்கையின் உயர்நீதிமன்றம் சட்டவிரோதமென்று தீர்ப்பளித்துள்ளது. இதையிட்டு தமிழ் இனவாதிகள் கொதிப்படைந்துள்ளார்கள். 2004 வெருகல் நரபலியின்போது இந்தத் தீர்ப்பு நிகழ்ந்திருந்தால் யாழ் குடாநாட்டுப் பெருமை பிடித்த கனவான்களைக் கிழக்கு மக்கள் வாய் திறக்க விட்டிருக்கமாட்டார்கள். உலகயுத்தகாலத்தில் என்ன மாதிரி சிங்கப்பூரில் இந்தியத் துருப்புக்கள் பிரித்தானிய
எஜமானர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ, ஆபிரிக்கப் பிரெஞ்சுக் கொலனியான அன்னாமில் பிரெஞ்சு எஜமானனுக்கு எதிராக என்ன மாதிரி ஆபிரிக்கத் துருப்புக்கள் கிளர்ந்து எழுந்தார்களோ, என்னமாதிரி கமறூனில் கமறூன் துருப்புக்கள் ஜேர்மானிய எஜமானுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ, என்ன மாதிரி செக் துருப்புக்கள் ஆஸ்திரிய எஜமானனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ அதேபோலவே கீழ்மாகாணத்தில் கிழக்குப் போராளிகள் யாழ்ப்பாண எஜமானனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். வன்னிப் பங்கரில் குடிகொண்டுள்ள பாசிசப் புலிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்குமிடையே ஓர் இரத்த ஆறு ஓடுகிறது. கிழக்குப் போராளிகளைக் கொன்று குவித்து சடலங்களையும கூடக் காட்டாது எங்கோ புதைத்ததை ஆதரித்த அத்தனைபேரும், அதை மௌனத்தால் அனுமதித்த அத்தனைபேரும, கிழக்குவாழ் மக்களது அரசியல் பற்றிச் சரிபிழை சொல்ல அருகதை இல்லாதவர்களாகும். கிழக்கு மக்களின் எழுச்சியானது இவ்வளவு காலமும் யாழ்ப்பாண மேலாதிக்கத்தினரோடு மரபுரீதியாக இருந்த ஒழுங்கு முறைகளைக் களைந்தெறிந்துள்ளது. வெளிப்போர்வைகளையும் முகமூடிகளையும் பிய்த்தெறிந்துள்ளது. வழக்கொழிந்தவற்றைத் துடைத்தெறிந்துள்ளது. உள்ளூற்றுக்களையும் அடித்தளத்தில் இயங்கிக்கொண்டிருந்த புதிய சக்திகளையும் கண்ணுக்குப் புலப்படுத்துகிறது. கிழக்குவாழ் மக்கள் கௌரவமும் பெறுமதியும் நிறைந்த மனிதர்கள்தான் என்பதை நிறுவிக் காட்டியுள்ளது.
உண்மையிலே வரலாறு கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கவில்லை. இந்தப் பிளவானது மாறாகக் கிழக்கு மாகாணத் தொழிலாளர்களையும் வறிய விவசாயிகளையும் மீண்டும் தென் மாகாணங்களின் தொழிலாளர்களோடும் வறிய விவசாயிகளோடும் இணைத்துள்ளது, கிழக்கு முஸ்லீம் மக்களோடு புலிகள் விதைத்த பகைமைகளை முடிவுக்குக் கொண்டு வருகிறது என்பதுவே உண்மை. இது மீண்டும் வடமகாண மக்களை மீண்டும் தாய் இலங்கை நாட்டோடு இணைப்பதற்கான முதல் அடியெடுப்பாகும்.வெகு சீக்கிரத்தில் புலிப் பாசிசத்தின் நித்திய சர்வாதிகாரக் கொடுமைமையிலிருந்தும் நிரந்தர எதிர்ப் புரட்சிச் சதிகளிலிருந்தும் மீண்டும் வடக்கு மக்களும் கிழக்கு மக்களின் வழியில் தென்னிலங்கையோடு இணைந்து ஓர் ஐக்கிய இலங்கையை உருவாக்குவார்கள்.
சிங்கள இனவாதிகள் கால் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் மக்களுக்குச் செய்த தவறைப் பற்றி சதா முணுமுணுப்பவர்கள் தமிழப் பாசிசவாதிகள் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை அதன்பின்பு கொன்றபோதும் அதை உடனே மன்னித்து மறக்கும்படி சதா உளறுகிறார்கள். புலிச் சித்திரவதைச் சிறைக் கூடங்களில் இன்னும் வதைபடும் தமிழர்களை விடுதலை செய்யும்படி ஒரு வசனம் எழுதாத பிற்போக்கு வாதிகள் ‘தாமும் ஒரு மனிதராம் தவிடும் ஒரு புட்டாம்’ என்று கிழக்குப் பிரிவினை பற்றி வாயாலே மலங் கழிக்கிறார்கள். கிழக்கு, புலிப்பாசிசத்தின் அழுங்குப் பிடியிலிந்து அதிஷ்டவசமாகவே தப்பிப் பிழைத்தது. ஒருகாலமும் ஒருமக்களையும் ஒடுக்கிச் சுரண்டி அடக்கி ஆண்ட வரலாறு இல்லாத கிழக்கு மக்களை வரலாறு விடுதலை செய்தது ஏதும் புதுமை அல்ல.
வடக்குக் கிழக்குப் பிரிவினையை எதிர்ப்பவர்கள் அந்தக் ‘குற்றத்தை’ ஜேவிபி மேலே போட்டு இலகுவாகத் தமது வர்க்க வாஞ்சையால் இனவாத யூ.என்.பியோடும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடும் தாம் இணைந்து பிணைந்து இரண்டறக் கலக்க விரும்புவதைச் சமிக்ஞை செய்துள்ளார்கள். கற்பனைக்கெட்டாத காலத்திலிருந்து முழு இலங்கையோடும் ஒன்றாக இருந்த வடகீழ்மாகாணத்தைப் பிளந்தெறிய வேண்டுமாம். ஆனால் கீழ்மாகாணத்தை அங்கு வாழ் மக்களின் விருப்புக்கு மாறாக கட்டாயமாக வடமாகாணத்தோடு இணைக்க வேண்டுமாம். கேட்டியளோ இந்தச் சங்கதியை!
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் எதையும் இம்மியத்தனையும் விட்டுவைக்காத புலிப் பாசிசத்தோடு போராடாது ஜே.வி.பியோடு போராட வேண்டுமாம். “ஜேவிபி வடகீழ் மாகாணத்தைப் பிரிக்கப் போராடும் அதே வேளையில் இலங்கை ஐக்கியப்பட வேண்டுமென்று கூறுகிறதாம்” என்று வர்க்கப் போராட்டப் பாஷை பேசாது ரிபிசி வானொலியில் வந்து எதிர்மறையாகப் பேசுகிறார்கள். இன்னோரு ரிபிசி அரசியல் ஆய்வாளர் 26.10.2006ல் ஜேவிபி புலியை தொலைத்துக் கட்ட முனைகிறதேயொழிய தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்க ஏதும் வழியைக் கூறவில்லையாம். ஆதலால் ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சியோ இல் லையோவென்று சந்தேகம் ஏற்படுகிறதாம். என்ன வேடிக்கை! பாசிசப் புலியைத் தொலைத்துக் கட்டினாற் போதாதா? பாசிசப் புலி அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் தோற்கடிக்கப் படும்பொழுது அது இனவாதத்திற்கு அடித்த கடைசி ஆணியாகும். அது புலியை மாத்திரம் தோற்கடிக்காது. இது இனவாத யூஎன்பியையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்த்துத்தான் தோற்கடிக்கும். இலங்கையிலே பாசிசப் புலி தோற்கடிக்கப்பட்டு யுத்தம் நிறுத்தப்பட்டு ஜனநாயகம் வந்த மறு செக்கனில் வர்க்கப் போராட்டமானது மறுபடியும் முன்னிலைக்கு வரும். எப்பொழுது ஜனநாயகம் வருகிறதோ அது வர்க்கப் போராட்டத்திற்கு அனுசரணையாகி விடும். ஜனநாயக விரோதச் சட்டங்களை முதலாளித்துவ அரசுகள் கொணருவது வர்க்கப் போராட்டங்களை நசுக்கவே. புலிப் பாசிசத்தை வளர்த்தது இலங்கையில் வர்க்கப் போராட்டங்களை நசுக்கவே.
கட்டுரை வாசிக்க சிரமமாக உள்ளது.(எழுத்தும் ஒழுங்கமைப்பும்)
இலங்கை இனப்பிரச்சினை பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாத பார்வையில் வரலாற்றையும் அதன் எதிர்கால போக்கை சரியான திசையில் சுட்டி நிற்கும் சிறப்பான கட்டுரை.
ஆழமான விடயத்தை ஆய்வு செய்திருக்கிறீர்கள். முரண்பாடுகளும் உண்டு! உடன்பாடுகளும் உண்டு! முரண்பாடுகளும் உடன்பாடுகளும் தந்துவம்… நடைதமுறை… ஆகிய இரண்டிற்கம் இடையிலான முரண்பாடு சார்த்ததே>>
எனது பார்வையுடன் விரைவில்…..
கிழக்கு மக்களின் அரசியல் முன்னுக்குவரும் பொற்காலம் இது.நாடு,இனம்,தனிமனிதர் என்றென்றுமே கைவிரல்களால் மேலுதடைத் தொட்டு அழிந்து போவதில்லை. அல்த்தூசர் சொல்வார்,வரலாற்றில் எதுவுமே பழம் செருப்புகளல்ல ,எறிந்தபின் மீண்டும் வராமலிருப்பதற்கு… கேணல் கருணாவின் மிகப்பலம் வாய்ந்த எதிர்ப்பு கிழக்கு மக்களிற்கான சுயமரியாதையயும் தன் மானத்தையும் இலஙகை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்க நீ அம்மான் .பிள்ளையான் தம்பியின் பின் கேணல் கருணா மாபெரும் அரசியல் போராளி, நம் காலத்து நாயகன் . ஆனால் தமிழ் அரசியலென்பது யாழ் மேலாதிக்க அரசியலாக ஆகிவிட்டபின் யாழ்ப்பாணத் தலைமையாகியபின் மாற்றுத்தலைமைகளுக்கான இடமும் காலமுமெப்படி மாறும். மாறாதையா …மாறாது ,மணமும் குணமும் மாறாது.. கேணல் கருணாவின் அரசியல் கட்சியை அரசியல்நேர்மை கொண்டஎவரும் ஆதரிக்கவேண்டும், கிழக்கின் அரசியல் ஒரு அற்புதம் .ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்,முஸ்லிம் மக்கள்,சிஙகள மக்கள்,மலையக மக்கள் என இணைந்து வாழ்க்கைக்காகப் போராடும் பிரதேசம். இன்றய இடதுசாரிகள்,சனநாயகர்கள் எல்லோரதும் ஆக்கமும் உழைப்பும் அஙகே இருக்கவேண்டும். அவ் அரசியலைப் பாதுகாக்கும் உஙகள் மார்க்ஸியப் பாரம்பரியத்துக்கு வாழ்த்துக்கள்.எனது மரியாதயை ஏற்றுக்கொள்ளூஙகள் தோழர்.
மேலும் முக்கியமானதொன்று, கிழக்கின்நிலஙகளின் பெரும்பகுதி அஙகிருக்கும் நில உடமையாளர்களது ஆக்கிரமிப்பில் உள்ளது,அவற்றை புரட்சிகரமான முறையில் நிலமற்ற முஸ்லிம் மக்களுக்கும்,வறிய கூலி விவசாயிகளுக்கும் வழஙக வேண்டும். புரட்சிகர அமைப்பிற்கானநடைமுறை இது. இதை அரசும் பூர்ஸுவாக் கட்சிகளும் செய்யாது,
பலரும் பலதையும் எழுதலாம். ஆனால் சிலரால் மட்டும்தான் பலவற்றினதும் உண்மைகளையும் அதன் அனுபவத்தையும் எழுதலாம். அதற்கு அழகலிங்கம் ஓர் எடுத்துக்காட்டு! பழையதும் புதியதும் கலந்த எல’லோருக்கும் பொதுவானவர் அழகலிங்கம். தொடர்ந்து எழுதுங்கள்! சங்கரி குறித்த உங்களது பார்வை சரியானது.