கியூபா – செப்டம்பர் 16/17

கட்டுரைகள்

அழகலிங்கம்

 புதிய சக்தியாகப் பரிணமிக்கும் அணிசேரா நாடுகளின் இயக்கம் mce_tsrc=

புதிய சக்தியாகப் பரிணமிக்கும் அணிசேரா நாடுகளின் இயக்கம்

அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16 – 17 இல் கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் நடைபெற்றது. இதிலே ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் கலந்துகொண்டன. 118 நாடுகளின் இராஜதந்திரிகள், 55 நாடுகளின் இராஜியத் தலைவர்கள், 90 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இம் மாநாட்டில் பங்குகொண்டனர்.

சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பிய சோஸலிசத்தினதும் வீழ்ச்சிக்குப் பிறகு அணிசேரா நாடுகள் ஸ்தாபனத்தின் முக்கியம் அதிகரித்துள்ளது. 1990 க்குப் பிறகு அணிசேரா நாடுகளின் ஸ்தாபனம் வலிமை இழந்திருந்ததை அரசியல் உணர்மையாளர்கள் நன்கே அறிவர். ஆனால் இன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைவிட இந்த அணிசேரா நாடுகளின் ஸ்தாபனம் முக்கியத்துவம் அடைந்துவிட்டது. இதிலே ஆசியாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சி கண்டதே முதன்மையானதாகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், வடகொரியா போன்றன அணுசக்தி நாடுகளாகி விட்டன. எகிப்து அணுசக்தித் தொழிற்துறையை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. ஈரான் வெனிசுலாவில் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் ஒரு தொகைப் பொருளாதார ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாநாட்டாளர்கள் 500 பக்கங்கள் அடங்கிய ஒரு பிரகடனத்தை 8 மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த மகாநாடு லத்தீன் அமெரிக்க நாடுகளை என்றுமில்லாத மட்டத்திற்கு ஐக்கியப்படுத்தியுள்ளது. நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பிடல் கஸ்ட்ரோ பங்குபற்றியிருந்தால் மாநாட்டின் தாக்கம் மேலும் அதிகமாகியிருக்கும். ஈரான், பிரேசில், இந்தியா, தென்ஆபிரிக்கா மற்றும் முக்கியமான ஆபிரிக்க நாடுகள் இதிலே பங்குபற்றியிருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரிய எதிரியாக விளங்கும் வெனிசுலா ஜனாதிபதி கூஹோ சாவெஸ் மாநாட்டில் பங்குபற்றியிருந்தார். ஈரானுக்கும் வேனிசுலாவுக்குமிடையே 24 பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஈரான் அணுசக்தித் தொழில் நுட்ப உதவியை வெனிசுலாவுக்கு வழங்க ஒத்துக்கொண்டுள்ளது. மாநாட்டில் உரையாற்றிய பேராளர்களிடம் ‘ஐக்கிய நாடுகள் சபையிலே 5 வல்லரசு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை வைத்துக் கொண்டு மூன்றாமுலக நாடுகளைத் தங்களது தாளத்திற்கு ஆடும்படி நிர்ப்பந்திக்கின்றன’ என்ற அபிப்பிரயமே மேலோங்கி ஒலித்தது. 25 நேட்டோ நாடுகளுக்குள்ள மரியாதைகூட இந்தக் கூட்டுச் சேரா மகாநாட்டுக்கு இல்லையே என்று பல இராஜியத் தலைவர்கள் வேதனையோடு எடுத்துக் கூறினர்.

கியூபாவின் பாதுகாப்பு அமைச்சர் ரவுல் கஸ்ட்ரோ தொடக்க உரையை வழங்கினார். ‘அணிசேரா நாடுகளின் தொடக்ககால கோட்பாடுகளிலிருந்து பிறழாமல் புதிய பிரச்சனைகளை உயிர்த் துடிப்போடு தீர்க்க நாம் ஒற்றுமையாகப் பாடுபடுவோம்’ என்று அவர் பிரகடனப்படுத்தினார். வளரும் நாடுகள் தங்களது முக்கிய பிரச்சனைகளுக்காகப் போராடாது விட்டால் அவர்கள் ஏகாதிபத்திய நாடுகளால் ஓரங்கட்டப்படுவார்கள் என்று ஏறத்தாள எல்லோரும் எடுத்தியம்பினார்கள். ‘நாம் வரலாற்றிலே ஓர் அடி முன்னேற விரும்பினால் எல்லோரும் ஒருமித்துச் சேர்ந்தே முன்னேற முடியும். ஆதலால் நாம் எல்லோரும் ஒவ்வொருவரின் முக்கிய தேவைகளுக்காகச் சேர்ந்து செயற்பட்டு எங்கள் நலன்களைப் பேண உத்தரவாதம் பெறவேண்டும்.உலக நாடுகளுக்கிடையே நீதியும் சமத்துவமுமான உறவுகளைக் கொணரப் பாடுபடவேண்டும்’ என்று ரவுல் கஸ்ட்ரோ மாநாட்டில் முழங்கினார்.

‘இன்றைய புதிய சகாப்தத்தில் ஒற்றை வல்லரசின் சர்வாதிகாரத்தை நிராகரித்துப் பல்நாட்டுக் கூட்டதிகாரத்தை வற்புறுத்த வேண்டும். மனித உரிமைகளைப் பேணவேண்டும். அதிலே முக்கியமானது ஒவ்வொரு பின்தங்கிய நாடும் தனது நாட்டை பொருளாதாரரீதியில் வளர்த்தெடுக்க வரலாற்றால் முந்தி அபிவிருத்தி அடைந்த நாடுகள் நேர்முக, மறைமுகத் தடைகளைப் போடாமல் இருக்க வேண்டும். பாதுகாப்புக்கான முன் யுத்தம், நல்லநாடு x பிசாசுநாடு என்று சொல்லி ஓரங்கட்டுதல் போன்றவற்றை எதிர்க்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அரசியல் நிர்ப்பந்தங்களைத் தங்களால் தாங்க இயலாது என்று ஒரு நாடு கூறிவிட்டால் அது உடனே பிசாசு நாடாகிவிடும்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் புதிய காலனிகளை அமைப்பதையும் பிற நாடுகளின் ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. காலனி ஆதிக்கத்துக்கு எதிராக,அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, தேசிய விடுதலை என்பதற்காகப் போராடுபவர்களை மதவெறியர்கள், தேசியவெறியர்கள், பூர்வீகப் பழங்குடிகள் என்று சேறடிக்கக் கூடாது’ என்று கியூபா வெளிவிவகார அமைச்சர் தனது பத்திரிகையாளர் செவ்வியின்போது கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனோடு ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் அநேக கூட்டுச்சேரா அங்கத்துவ நாடுகளுக்கு மிரட்டலாகவுள்ளது. ஏன் கியூபாவை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாத நாடாகக் கூறியுள்ளது? கியூபா தனது இறைமையைப் பாதுகாப்பதாலேயே அமெரிக்கா இப்படிக் கூறுகிறது. ஏன் இஸ்ரேல் பயங்கரவாதப் பட்டியலில் இல்லை? ஏனெனில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளி. இன்று இங்கு கூடியுள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் அடாத்தாகத் தாக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று உலகத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது அணுகுண்டுகளே பெரிய அச்சுறுத்தலாகும். ஐக்கியநாடுகளின் பாதுகாப்புக்குழு இந்த அமெரிக்க அணுகுண்டுப் பேராபத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானின் ஆக்கத் தொழில் வளர்ச்சிக்கான அணுசக்தி உற்பத்தி பற்றி சதா கண்டிக்கும் வேளையில் இஸ்ரேலை அணுகுண்டு செய்ய உற்சாகப்படுத்துகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இக் குயுக்தி நடவடிக்கைகளை நாம் ஒருமித்துக் கண்டிப்போம்’ என்றும் அவர் கூறினார்.

முழு மகாநாட்டுப் பேருரைகளிலும், சிற்றுரைகளிலும் அமெரிக ஏகாதிபத்தியம் உலகத்திற்குச் செய்யும் கொடுமைகளே சுட்டிக்காட்டப்பட்டன. முன்புபோல் சோவியத் யூனியனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை. மகாநாட்டுப் பிரகடன அறிக்கையிலே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுதிய எந்த ஒரு வசனத்தையும் மாற்றும்படியோ திருத்தும்படியோ அகற்றும்படியோ எவரும் கோரவில்லை. இஸ்ரேலைக் கண்டித்தது சம்பந்தமாகச் சிறு ஆரவாரம் ஏற்பட்டது. ஏனெனில் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை ஒருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஒரு தேசமாக அங்கீகரியாதது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது. அதனோடு இரு அங்கத்துவ நாடுகளான அல்ஜீரியாவுக்கும் மொறோக்கோவுக்கும் இடையேயான மேற்கு சகாராப் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சிகளும், பாகிஸ்தான் இந்தியப் பிரச்சனையும் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்க இந்தியப் பிரதிநிதிகளும் இலங்கைப் பிதிநிதிகளும் கலந்துரையாடவேண்டும் என்றும் கேட்டு அவர்களின் சந்திப்பு களுக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டது. சந்திப்பும் நிதர்சனமாகியது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முதன்முதலாக இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை என்ன வடிவில் தீர்க்கவேண்டும் என்று கூறியதாகவும் அதை இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஈரானின் தொழிற்துறைக்கான அணுசக்தித் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதுதான் தாமதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானை மிரட்டுவதிலிருந்து ஒருபடி இறங்கியிருக்கிறது. ஈரானின் யுரேனியச் செறிவாக்கலையும் ஆதரித்துள்ளது. ஈரான் செய்யும் அணுசக்தி உற்பத்தியையும் பலஸ்தீன விடுதலையையும் ஆதரித்து 100 பக்கமடங்கிய தீர்மானம் எழுதப்பட்டுள்ளது. வெனிசுலா, பொலிவியா சட்டபூர்வமான அரசாங்கங்களை தகர்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முனைவதையும் புரட்சியாளன் கஸ்ட்ரோ தலைமையிலான கியூபா அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க எகாதிபத்திதியம் தொடர்ந்து செயற்படுவதையும் அணிசேராநாடுகளின் ஸ்தாபனம் நிராகரித்துள்ளது. வரப்போகும் மூன்று வருடங்களுக்கான அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை கியூபா ஏற்றுள்ளது. நடந்து முடிந்த மகாநாடு சரித்திரத்தை மாற்றுவதற்கென்றே கூடியது. ஏனெனில் இன்று ஐக்கிய நாடுகள் சபையைத் தனது பிற்போக்கு அரசியலுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்துகிறது என்பதும் அதைத் திருத்த முடியாது என்பதும் உலகநாடுகள் ஒத்துக்கொண்ட உண்மையாகும். அதற்கு மாற்றாக வேறொரு அமைப்பை ஏற்படுத்தக் கூடிய சூழல் இல்லை. ஆனால் அணிசேரா நாடுகளின் அமைப்பை உண்மையான ஒரு உலக சமாதான அமைப்பாகப் பரிணாமம் அடையச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகிவிட்டது.

கனகாலமாக மறக்கப்பட்ட மூன்றாமுலக நாடுகள் பற்றி இங்கே மீண்டும் பேசப்பட்டது. 1961 தொடக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாமேல் திணித்திருக்கும் பொருளாதாரத் தடையை இம் மாநாடு நிராகரித்துள்ளது. யூகோஸ்லாவியாவை ஏகாதிபத்திய – நேட்டோ சதிகளால் தகர்த்தெறிந்ததால் உருவாகிய குரேசியாவின் ஜனாதிபதி மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார். அவர் “பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும் விட எவ்வளவோ சிறந்தது” என்று கூறினார். பல தேசங்கள் வாழும் இவ்வுலகில் தேசங்கள் தங்களிடையே பேரம் பேசித் தம் நலனைப் பேண முயற்சிக்கும். ஆனால் முதலாளித்துவ தேசிய முறையிலான சமூக அமைப்பில் உலகப் பொருளாதார நெருக்கடியானது தேசங்களிடையே விட்டுக் கொடுக்க முடியாத நிலமைகளைச் சிருஷ்டித்து முட்டல் மோதல்களை ஏற்படுத்தும் என்பதுவே யதார்த்தம்.

உண்மையிலேயே யூகோஸ்லாவியாவின் தோற்றமே கூட்டுச் சேரா எண்ணக் கருவை உருவாக்கியதெனலாம். டிற்றோ x ஸ்டாலின் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து யூகோஸ்லாவியா சோவியத் யூனியனோடும் இணங்கிப் போக முடியாமற் போனது. மேற்கு உலக ஏகாதிபத்தியங்களோடும் இணங்கிப் போக முடியாமற்போனது. ஏகாதிபத்திய காலனிப் பிடியிலிருந்து இரண்டாம் உலக யுத்தத்தையடுத்து விடுதலைபெற்ற நாடுகள் மேற்கு நாடுகளின் சதிகளிலிருந்து தப்ப வேண்டி இருந்தது. மறு பக்கத்தில் ஸ்டாலினிச கிழக்கைரோப்பிய ஆளுமைக்குள்ளும் சிக்காமல் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலமைகளே கூட்டுச்சேரா இயக்கத்தைத் தோற்றுவித்தது.

இரணடொரு காலத்தால் முந்தி வளர்ச்சி அடைந்த நாடுகளால் அதிகாரம் பண்ணப்படும் உலக வர்த்தகம், கட்டுப்படுத்த முடியாத மதவெறி, பயங்கரவாதம், முன்தடுப்பு யுத்தம் என்ற பேரிலான ஆக்கிரமிப்பும் புதிய கொலனிபிடிப்பும், ஓரங்கட்டப்படும் கண்டங்கள், கட்டுப்பாடற்ற நுகர்வால் அழிந்துகொண்டிருக்கும் உலகம் பற்றியெல்லாம் மாநாட்டில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.1961 இல் அணிசேரா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் அங்கத்துவ நாடுகளின் பொருளாதாரம் கருத்திற் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. மூன்றாமுலக நாடுகள் ஓரங்கட்டப்பட்ட காலம் அது. மூன்றாமுலக நாடுகள் அற்ப விவசாய உற்பத்திகளையும் மூலப் பொருள்களையும் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தன. அவைகள் தொழிற்துறையில் வளர்வதைத் திட்டமிட்டே ஏகாதிபத்தியங்கள் தடைசெய்தன. இன்றோ அதன் சில அங்கத்துவ நாடுகள் பொருளாதாரத்தில் உலகை ஊடறுத்துக் கொண்டிருக்கின்றன. சீனா 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் ஏற்றுமதி செய்கின்றது. அது தென் அமெரிக்காவில் பாரிய முதலீடுகளைச் செய்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சவால் செய்கிகிறது.
பொலிவியாவும் வெனிசுலாவும் இம்மகாநாட்டு நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியதின் அழுங்குப்பிடியிலிருந்தும் மற்றய ஏகாதிபத்தியப் பிடியிலிருந்தும் மீட்டெடுக்கவே முயற்சித்தன. பெரு நாட்டுப் பிரதிநிதி மூன்றாமுலக நாடுகளிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் அமைப்பாக இது பரிணமிக்கவேண்டும் என்று கூறினார்.
‘எங்கள் சகோதரர்கள் லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பின் நாம் இங்கு கூடுகின்றோம். எமது சகோதரர்கள் இஸ்ரேலால் நாளாந்தம் இன அழிப்புச் செய்யப்பட்டுக்கொண்டிருக்கையில் நாம் இங்கு கூடுகின்றோம். ஈரான் தனது பொருளாதார அபிவிருத்திக்காக அணு சக்தித் தொழில் நுட்பத்தைக் கட்டியெழுப்புவது ஏகாதிபத்தியத்தால் அச்சுறுத்தப்படும்போது நாம் இங்கு கூடுகின்றோம். மூன்றாமுலக நாடுகள் அழிவுக்காகவல்ல ஆக்கத்திற்காக அணுசக்தியைப் பயன்படுத்த முனையும்பொழுதும் யுத்தத்தடுப்புக்கான முன்யுத்தமென்றபேரில் அழிக்கப்படும்பொழுதும் கூடுகின்றோம்’ என்று கியூபா பாதுகாப்பு அமைச்சர் ரவுல் கஸ்ட்ரோ கூறினர்.

1979 லும் அணிசேரா நாடுகளின் மகாநாடு ஹவானாவில் நடைபெற்றது. அப்பொழுது அணிசேரா மகாநாட்டின் குரல்கள் வேறுவிதமாக ஒலித்தன. பிடல் கஸ்ட்ரோ சோவியத் யூனியன் இயற்கையாகவே ஏகாதிபத்திய விரோதிகளோடு ஐக்கியப்படும் என்ற எண்ணக் கருவை வைத்திருந்தார். அப்பொழுது சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை அடுத்து அணிசேரா நாடுகளின் இயக்கம் பிளவுபட்டது. ஈற்றில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு பனிப்போர் முடிவுக்கு வந்ததால் அணிசேரா நாடுகளின் இயக்கம் அர்த்தமற்றதும் முக்கியமற்றதுமாகியது. அமெரிக்க ஜனாதிபதி புஷ்சின் அதீத வலதுசாரி அரசியலும் அவரது வெளிப்படையான இஸ்ரேலின் முண்டும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்பும் அணிசேரா நாடுகள் இயக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இந்தப் புறநிலைமைகளால் இன்று அணிசேரா நாடுகளின் இயக்கம் புத்துயிர் பெற்று நிற்கிறது.

இந்த மகாநாட்டின்போது ஒரு கருத்து ஓங்கி ஒலித்தது. பெரும்பான்மைக் கிறீஸ்தவ நாடுகள் இஸ்லாமுக்கும் கிறீஸ்தவத்திற்குமிடையே மோதல் நடைபெறுவதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்சே கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்குமிடையேயான மோதலை முடுக்கிவிடுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிறீஸ்தவ நாடுகளான தென் அமெரிக்க நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் இஸ்லாமுக்கு எதிராக முட்டி மோதுவதில்லை. இப்பொழுது உலகில் நடைபெறும் பெரும்பான்மையான முட்டிமோதல்கள் கிறீஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையேயான மோதல்கள் அல்ல. மாறாக வளாச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை வளர்ச்சியடைய விடாமல் தடுத்துச் சுரண்டுவதற்கான சதி முயற்சிகளால் ஏற் படுத்தப்பட்ட மோதல்களேயாகும்.

அணிசேரா நாடுகளானது தமது கொள்கையாகப் <<பஞ்சசீலக்>> கொள்கையையே கடைப்பிடிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கொள்கையை மறைந்த இந்தியப் பிரதமர் ஜவர்கர்லால் நேரு மா-சே-துங்கைச் சந்தித்தபோது முதன் முதலாக வலியுறுத்தினார். இந்தக் கொள்கையானது ஒவ்வொரு நாடுகளதும் நாட்டு எல்லைகளையும் இறைமையையும் பரஸ்பரம் மதிப்பது, ஒரு நாடு மற்ற நாட்டின்மீது ஆக்கிரமிக்கக் கூடாது, மற்றய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது, சமத்துவம், பரஸ்பர நலன்பேணல் சமாதான சகஜீவனம் என்பனவாகும். ஏனெனில் ருஷ்யப் புரட்சியை அடுத்து ருஷ்யாவின் அயல் நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளும் சேர்ந்து (14 நாடுகள்) அதை ஆக்கிரமித்தன. அதே நிலமை மக்கள் சீனத்திற்கு எதிராக ஏற்படாமல் தடுத்ததில் அணிசேரா கொள்கைக்கும் முதன்மையான பங்கிருக்கிறது.

இந்த மகாநாட்டின் பிரதான பேச்சாளர் வெனிசுலா ஜனாதிபதி கூஹோ சாவேஸ் ஆகும். அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூன்றாமுலக நாடுகளுக்கு மேலான நெட்டூருங்களை மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார்.’அமெரிக்க சாம்ராச்சியம் கியூபாவுக்கும் வெனிசுலாவுக்கும் மேலும் பல நாடுகளுக்கும் எதிராகத் திட்டங்களையும் சதிகளையும் மேற்கொண்டுள்ளது. அது தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பையும் சதியையும் செய்யும். இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு ஈரானுக்குமேல் ஒரு அணுகுண்டு யுத்தத்தைத் திணிக்கச் சதி செய்துள்ளது. அப்படி நடைபெறக் கூடாது என்று நம்புவோமாக. அப்படி ஒரு யுத்தம் ஏற்பட்டால் நாம் எல்லோரும் ஈரானின் பக்கம் நிற்போம். எப்படி நாம் இதுநாள் வரை கியூபாவின் பக்கம் நின்றோமோ அப்படியே நாம் ஈரானோடு நிற்போம். அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமித்தால் அங்கே வெனிசுலாவின் இரத்தமே பாயும் என்று நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன். இந்தப் பிரச்சனை ஒரு கடினமான பிரச்சனை. உலகம் எல்லாம் சேர்ந்து அமெரிக்க சாம்ராச்சியத்திற்கு எதிராகப் போராடும் பிரச்சனை. வெனிசுலா ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் அங்கம் பெறுவதற்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல நாடுகளுக்குக் கடிதங்களை எழுதியுள்ளது. அதை ஆதரிக்கக் கூடாது என்று பலநாடுகளை நெருக்கியுள்ளது. பல நாடுகளை மிரட்டியுள்ளது. உண்மையில் நாங்களும் பல நண்பர்களைக் கொண்டுள்ளோம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிரந்தரக் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் போராடிய கியூபாவின் உதாரணத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அணிசேராநாடுகளின் சர்வதேச அமைப்பு 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அமெரிக்க சாம்ராச்சியம் வீழ்ந்துகொண்டிருக்கும்பொழுது கூடுவதால் இந்தக் கூட்டமானது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று ஜனாதிபதி சாவெஸ் கூறினார்.

நாங்கள் வாளும் இன்றைய இந்த நீதியற்ற உலகத்திலே நாட்டிற்கும் நாட்டிற்கும் சமத்துவம் அற்ற உலகத்திலே, மக்களுக்கும் மக்களுக்கும் சமத்துவமற்ற உலகத்திலே இதற்கெதிராகப் போராடுவதற்கு அணிசேரா அமைப்பு முக்கியமானது.
சமுதாயரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் தப்பிப் பிழைக்க இலாயகில்லாத அமைப்பு முறைகளை வருடாவருடம் பில்லியன் கணக்கான டொலர்களை ஆயுதங்களுக்குச் செலவழித்துப் பலாத்காரத்தின் மூலம் காப்பாற்றலாம் என்று ஐக்கிய அமெரிக்கா நினைக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது சாவெஸ் 30 நாடுகளோடு மேலும் கூட்டங்களை ஏற்படுத்திக் கலந்துரையாடிக் கொண்டார். கடந்த இரணடு மாதங்களினுள் அவர் சீனா, ரஷ்யா, பெலோரஷ்யா, ஈரான், இந்தோனேசியா, வியட்னாம், அலேசியா, போர்த்துக்கல், கட்டார், சிரியா, மாலி, பெனின், அங்கோலா, ஆர்ஜெண்டீனா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார். கியூபாவுக்கு மூன்று முறை பயணம் செய்தார். பிடல் கட்ஸ்ரோவின் படுக்கையின் பக்கத்திலிருந்து கலந்துரையாடிக் குறிப்புக்களை எடுத்தார்.

மார்ச் 19 தேதி சாவெஸ் வேனிசுலாத் தொலைக்காட்சியில் உரையாற்றியபொழுது அமெரிக்க ஜனாதிபதியை ‘ நீ ஒரு மூடன், நீ ஒரு வெற்றுக் கோம்பை,நீ ஒரு பயங்கரம், நீ ஒரு கழுதை, நீ ஒரு கோழை, நீ ஒரு கொலைகாரன், நீ இனக் கொலை செய்பவன், நீ ஒரு பொய்யன், ஒரு கெட்டவன் உன்னாலேயே இந்தப் பூகோளத்திற்கு ஆபத்து என்று திட்டித் தீர்த்தார். இன்றோ உலகத்தில் போதுமான அளவுக்குப் புஷ் எதிர்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் சாவெசுக்கு உலகம் முழுவதும் அமோக அதரவு வளருகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் சாவெஸ் அதன் வரலாற்றில் ஒரு காத்திரமான உரையை நிகழ்தினார். ஐக்கிய நாடுகள் சபையே உலகத்தில் அநேக ஆக்கிரமிப்புப் போர்களுக்குக் காரணம் என்றும், அது ஐக்கிய அமெரிக்காவில் இருப்பதனால் அதற்கொரு சுயாதீனம் இல்லையென்றும், அதை அமெரிக்காவிலிருந்து ஏதோ ஒரு தென் நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் உலகத்தில் மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்பட்ட அத்தனை கொடுமைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையே காரணமென்றும், நேற்று இங்கு வந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி பேயென்றும் 24 மணித்தியாலங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி இதே இடத்தில் நின்று பேசினாரென்றும் அவர் நின்று பேசிய இடத்தில் இப்பொழுதும் வெடிமருந்துக் கந்தக வாடை வீசுகிறதென்றும் கூறினார். ஐக்கியநாடுகள் சபை 1944 ல் பிறிட்டன் வூட் ஒப்பந்தத்திற்கு அமையவே ஏற்பட்டது. அது தொடங்கி இவ்வளவு காலமும் ஒரு நாட்டுத் தலைவனும் தங்களது ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால் அதன் கொடுமைகள் அனைத்தும் தெரிந்திருந்த போதும் அதை எதிர்க்கவில்லை. சாவெஸ் ஒரு தாராள முற்போக்குவாதி. ஆதலாலேயே அவரால் இப்படிப் பேச முடிந்தது. இருந்த போதும் அவர் ஒரு சீர்திருத்தவாதியாகும். பேர்ண்ஸ்டைனின் சீர்திருத்தவாதத்திற்கு எதிராக ரோசா லக்சம்பேர்க் போராடும் பொழுது ‘ஒவ்வொரு சீர்திருத்தங்களுக்கும் எதிர்காலத்தில் மாபெரும் வட்டியைச் செலுத்த வேண்டி வரும்’ என்று கூறினார். பிஸ்மாக் மற்றும் சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஜேர்மனி இரணடு யுத்தத்தால் விலைகொடுத்தது. 1956 பண்டாராநாயக்க – இடதுசாரி ஐக்கிய முன்னணி கொண்டு வந்த சீர்திருத்தத்திற்காக இலங்கை மக்கள் கடந்த மூன்று சகாப்தமாக வட்டியும் முதலும் செலுத்துகிறார்கள். இன்னும் அது ஓய்ந்தபாடில்லை. சீர்திருத்தமல்ல, சமுதாயப் புரட்சி மூலம் பழைய நிலப்பிரபுத்துவக் குப்பைகூழங்களையெல்லாம் துடைத்தெறிந்து சமுதாயத்தை ஒரு புதிய சமுதாயமாக முதலிருந்து கட்டியெழுப்புவதே சரியான பணியாகும். வெனிசுலாவில் பன்னாட்டுக் கொம்பனிகள் தொடர்ந்து செயற்பட்டுச் சுரண்டிக்கொண்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவிலே எப்போதாவது இடதுசாரி அமைப்புக்கள் ஆட்சிக்குவந்தால் அவைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவச் சதிகளினால் தூக்கி எறிந்ததே வரலாறு. நிலவும் அரச எந்திரங்களைத் தகர்த்தெறியாமல் முதலாளித்துவ அமைப்பு முறையைக் கெட்டியாக இருக்கவிட்டால் சிலியில் அலெண்டேக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று சோஷலிசவாதிகள் பயப்படுகிறார்கள். இங்கே வந்த அநேக நாடுகளின் அரசாங்கங்கள் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தமது நாடுகளில் நூற்றாண்டு காலமாகத் திரண்ட பஞ்சம், பட்டினி, கடன்சுமை,மூலதனம் இன்மை கல்வியின்மை, சுகாதாரம், போக்குவரத்துப் போன்ற பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வுகாண வழி தேடுகிறார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலே அண்மைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் புதியதோர் சகாப்தம் பிறக்கிறது என்பதன் சமிக்ஞையாகும். நூறாண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவச் சதிகளால் அடக்கி ஒடுக்கிச் சுரண்டப்பட்ட இந்த நாடுகள் பெர்லின் மதில் உடைந்து பனிபோர் முடிந்ததன் தாக்கத்தால் மேலும் கட்டுப்படுத்த முடியாதவையாகிவிட்டன. 2000 இன் பின் மாத்திரம் இந்த நாட்டு அரசாங்கங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் 10 இராணுவச் சதிகளால் தூக்கியெறிய முனைந்தது.

இந்த வரலாற்றுச் சக்கரம் மீண்டும் எதிர்த் திசையில் சுழலாது என்பதே உண்மை. கிழகைரோப்பிய நாடுகளுக்கும் இதுவே யதார்த்தமாகும். இவைகளிடையே வர்த்தக கலாச்சார இராணுவ உறவுகள் நிலவும் பொழுதுங்கூட இவைகளைப் பழைய அரசியற் பொருளாதார முறையில் கட்டுப்படுத்த முடியாது.ஆர்ஜண்டீனா, பொலிவியா, பிறேசில், எக்குவடோர், உருகுவே, வெனிசுலா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் புதிய தாராள பொருளாதாரத்தை நிராகரித்து அதைத் திணிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இடது திசையில் பவனிவரத் தொடங்கிவிட்டன. இதைச் சீர்குலைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் கொலம்பியாவில் கண்டுகேட்டிராத இராணுவ முதலீடுகளைச் செய்துகொண்டிருக்கிறது. அது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலாகும். வெனிசுலாவை ஈராக்கைப் போல ஆக்கிரமித்துப் பிடிப்பதற்கே அமெரிக்க ஏகாதிபத்தியம் தயாரிப்புக்களைச் செய்கின்றது.

மூலவளங்கள் நிறைந்த இந்த நாடுகளை சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி போன்றன எவ்வாறு பொருளாதாரரீதியில் வறுமைக்குள் திணித்தன என்பதை இந்த நாடுகள் நன்றே அறிந்தன. வெனிசுலாவில் ஏகாதிபத்திய மண்கொள்ளை நிறுத்தப்பட்டதால் அதில் திரண்ட உபரி மூலதனத்தினால் அந்த நாட்டின் தனித்த உதவியோடு இந்த நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மீண்டுவிட்டன. ‘வங்குறோட்’டடைந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த ஆர்ஜண்டீனாவை வெனிசுலா 2.5 பிலியன் டொலர்கள் கொடுத்து விடுதலை செய்துள்ளது.

இந்த மகாநாட்டில் அணிசேரா அங்கத்துவ நாடுகளிடையே நடைபெறும் மனித உரிமை மீறல்களை நிறுத்தும்படியும் கேட்கப்பட்டது. ‘தங்கள் நாட்டு மக்களுக்குக் கடமை செய்யும் அரசாங்கங்கள்தான் தேவை. எதிர்க் கட்சிகளையும் ஊடகங்களையும் ஒடுக்காத அரசாங்கங்கள் தேவை. ஊழல்களுக்கு எதிராகக் கரிசனையாக விசுவாசமாகப் போராடவேண்டும். அரசாங்கங்களுக்கு தன்னுடைய நாட்டில் ஏற்படும் இனக்கொலைகளை நிறுத்தவேண்டிய கடமைப்பாடுகள் உண்டு. உங்களுடைய மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் அதீத கொடுமைகளிலிருந்தும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்தும் இனக் கொலைகளிலிருந்தும் யுத்தக் குற்றங்களிலிருந்தும் இனத் தூய்மைப்படுத்தல்களிலிருந்தும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும். சர்வதேச சமூகங்கள் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க அனுமதிக்க வேண்டும். பூகோளத்தின் தெற்கிலுள்ள நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள ஊழல்களைப் போக்கவேண்டும்’ என்று ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் கோபி அனான் கேட்டுக்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவானாது பலங்குறைந்த நாடுகளின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் அபிவிருத்தி அடையும் நாடுகளின் நலன் பேணும் விதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நீங்கள் தெற்கு நாடுகளின் அடையாளமாகவும் அங்கு நிலவும் பல்கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாகவும் அபிவிருத்தி சக்திகளாகவும் விளங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வடகொரியாவின் இரண்டாம் நிலைத் தலைவர் கிங்-யொங்-நாம் பின்வருமாறு கூறினார்:’அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிரந்தர நித்திய மிரட்டல்கள் இல்லையானால் எங்களுக்கு ஒரு சின்ன அணுகுண்டும் தேவையில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையானது நிலைமைகளை இன்னும் பாரதூரமாக்கியுள்ளது. உலகசமாதானம் ஏற்படாததற்கான முதற்காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றய நாடுகளின் இறைமையை மதிக்காமல் சர்வதேச சமாதானத்தை உடைத்தெறிந்ததே.கூட்டுச்சேரா அமைப்பைச் சேர்ந்த 118 நாடுகள் அமெரிக்க வல்லரசின் தனி ஆதிக்கச் செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பலநாடுகளைப் பார்த்தோமானால் அவர்களது சுயாதீனமான அபிவிருத்திகளுக்கு அமெரிக்கா இடைஞ்சல்களை ஏற்படுத்திவிட்டதே வழக்கமாகும். அமெரிக்க அரசியலானது உலக அரசியல் சமநிலையைப் பிறழச் செய்து உலக சமாதானத்தைச் சீர்குலைக்கிறது’.

அணிசேரா நாடுகளின் மகாநாட்டிற்கு அமெரிக்க அரசும் அழைக்கப்பட்ட போதும் அமெரிக்கா அதை நிராகரித்து விட்டது. அதனோடு அங்கே நடந்த பேச்சுக்கள், அறிக்கைகள், பிரகடனங்களைப் பற்றித் தனது மதிப்பீட்டைச் சொல்லவும் மறுத்துள்ளது.அநேக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் அமெரிக்காவுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா பாதுகாப்புச் சபையைப் பாவித்து அதனது அரசியலை மற்றய நாடுகளில் திணிக்கின்றது.’ஏன் உலக மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணுகுண்டு மிரட்டலுக்கு மத்தியில் வாழ வேண்டும்? என ஈரான் ஜனாதிபதி முகமட் அகமடீன்யாட் கேள்வி எழுப்பினார்.

இங்கே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் முசெரப்பும் மீண்டும் காஷ்மீர் பிரச்சனை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உடன்பட்டுள்ளனர். பொலிவியன் ஜனாதிபதி ஈவோ மொறாலெஸ் பிரேசிலோடுள்ள சக்தி உற்பத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க உடன்பட்டுள்ளார். வடகொரியா தனது அணுசக்தி அபிவிருத்தியைத் தொடர்ந்து மேற்கொள்வதாகக் கூறியுள்ளது. சூடான் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் படையையைச் சூடானில் டார்பூர் பிரச்சனை சம்பந்தமாக அனுமதிப்பதில்லை என்று கூறியுள்ளார். ஈரான் ஜனாதிபதி அகமடீன்யாட் ஈரானுக்கு ஆக்கபூர்வமான அணுசக்தி அபிவிருத்தியைச் செய்யும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.மகாநாட்டில் ஈராக்கின் உப ஜனாதிபதி தறீக் அல்-ஹசிமி எல்லா நாடுகளும் ஈராக் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாதென்றும் ஈராக்கின் இறைமையையும் ஈராக்கின் ஆகாயவெளியையும் அங்கீகரிக்கும்படியும் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றும்படி கேட்டுள்ளார். அவர் தனது தேசத்தில் மானிட நாகரீக வாழ்வானது சீர்குலைந்து விட்டதென்றும் ஒரு யுத்த எந்திரம் ஈராக்கின் கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறிந்ததால் ஈராக் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

ரவுல் கட்ஸ்ரோவும் வேனிசுலா ஜனாதிபதி சாவெசும் அமெரிக்க அரசாங்கத்தின் யுத்தவெறி மற்றும் மிரட்டற் கொள்கைகளைக் கண்டிக்கும் பொழுது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சமரசப்படுத்தும் பேச்சைப் பேசினார். முன்பெல்லாம் இந்தியா அணிசேராநாட்டின் முக்கிய பிரதிநிதியாக இருந்தது. அணிசேரா நாடுகளின் அமைப்பு என்ற எண்ணக் கருவை முதன்முதலில் ஜவர்கர்லால் நேருவே 1954 ல் கொழும்பில் பிரேரித்தார். இன்றோ அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கண்டு கேட்டிராத பொருளாதார அரசியல் உறவுகள் ஏற்பட்டுவிட்டன. அதனால் மன்மோகன் சிங் சமரசப் பேச்சையே பேசினார். அவர் நடுநிலையாகவும் அமைதியாகவும் பகுத்தறிவோடும் நடக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் அணிசேரா நாடுகளின் அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னணியிற் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டுச்சேரா அமைப்பு நிலவும் யதார்த்த சூழலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டும் என்றும் பயங்கரவாதம் பற்றி ஏனோதானோ என்று நடக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இலங்கைத் தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்குமுகமாகக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. அதிலே மன்மோகன் சிங் வடகிழக்கு மாகணங்கள் இணைந்தபடிக்கு தமிழ்மக்களுக்கு உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கத்தைக் கொடுக்கும்படியும் சிறிதுகால நடைமுறையின் பின் ஓர் வெகுஜன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் அதை அரசியற் சட்டத்திற் சேர்க்கும்படியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மதிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதிலே இந்தியப் பிரதமர் புலிப் பயங்காரவாதம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றமும் இல்லையென்றும் புலிகளின் கோரிக்கைகள் வேறு தமிழ் மக்களின் பிரச்சனைகள் வேறு என்று குறிப்பிட்டதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.

கியூபா இந்த மாநாட்டின் பிரதிநிதிகளுக்குப் பல படிப்பனவுகளைக் கற்பித்திருக்கும். அங்கேயே கறுப்பின மக்கள் சம உரிமைகளை அனுபவிக்கிறார்கள். கறுப்பினத் தலைவர்கள் ஆட்சி செய்யும் ஆபிரிக்க அரசுகளிலோ, ஐக்கிய அமெரிக்காவின் கறுப்பின் மக்களுக்கோ இல்லாத உரிமைகள் எல்லாம் கியூபாவில் உள்ளது. அங்கே சொறி சிரங்கோடும் ஈரும் பேனோடும் மக்களைக் காண முடியாது. மக்கள் எல்லோருக்கும் உலகில் எங்குமில்லாத கல்வி, மருத்துவ வசதி. பிச்சைக்காரர்களையோ சேரி குப்பங்களையோ காண முடியாது. வாழ்க்கைத்தரத்திலே அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏன் அரசியற் தலைவர்களுக்குங் கூடப் பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. உல்லாசக் கார்களையோ பெரிய தனியார் பங்களாக்களையோ காண முடியாது. உலக முதலாளித்துவ நாடுகள் கியூபாவை உலகச் சந்தைக்குள் நுழையவிடாமல் பாரிய தடைகளைப் போட்ட போதும் கியூபாவின் வாழ்க்கைத் தரம் உலக சராசரிக்கும் மேற்பட்டதாகும். சோவியத் யூனியனும் கிழக்கைரோப்பாவும் வீழ்ந்து கியூபா தன் காலிலே தான் தனித்து நின்றபோதும் அந்தமக்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆப்கானிஸ்தான், ஈராக்கை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் கியூபாவை ஆக்கிரமிக்கத் துணியவில்லை. காரணம் கியூபா உலகின் எந்த மக்களுக்கும் எந்தத் துரோகத்தையும் செய்யாத நாடு. உலகின் எந்த நாட்டையும் விடக் கியூபாவுக்கு நண்பர்கள் அதிகம்.

அங்கே ஸ்பானிய வழித் தோன்றல்களும் செவ்விந்தியர்களும் சீனர்களும் கருப்பர்களும் முலோட்டக்களும் முழு உரிமையோடு வாழ்கிறார்கள். பிடல் கஸ்ட்ரோ, குருசேவ் தொடக்கம் கோபி அனான் வரை மற்றும் அத்தனை தென்னமெரிக்கத் தலைவர்களையும் சந்தித்த ஒரே உலகத் தலைவராவார். பிடல் எந்த மக்களின் ஒடுக்குமுறையையும் ஏற்றுக் கொண்டவர் அல்லர். பிடல் இன்றுவரை பிறந்து வளர்ந்த சோஷலிசத் தலைவர்களிலேயே அதிகூடிய இராஜதந்திரிகளையும் அதிகூடிய நாடுகளையும் தரிசித்தவராவார். கியூபா மத ச்சார்பு அற்ற நாடு. எந்தச் சிறிய மதத்திற்கும் பெரும்பான்மைக் கத்தோலிக்கருக்கு உரிய உரிமை உண்டு. கியூபா போப்பாண்டவருக்குக் கியூபாவைத் தரிசிக்க அனுமதி வழங்கிய மட்டத்திற்கு மதச் சுதந்திரம் உள்ள நாடாகும். எதிர் வரும் மூன்று வருடங்களக்குக் கியூபா அணிசேரா இயக்கத்தின் தலைமையில் இருப்பது மூன்றாமுலக நாடுகளிலே பல பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு முன்பிலும் அனுகூலமாக இருக்குமென்றே எண்ணத் தோன்றுகிறது.

கூட்டுச் சேரா நாடுகளின் துன்ப துயரங்களை நெருக்கடிகளை விளங்க வேண்டுமாக இருந்தால் 1980 களிலிருந்து அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நிதி நிறுவனங்களின் மண்கொள்ளைகளையும் அது கோரும் சுதந்திர வர்த்தக சர்வரோக நிவாரணியையும் ஆய்வுசெய்தால் மாத்திரமே தெளிவாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நாடுகளில் நிலவும் நெருக்கடிகளைத் தீர்கலாம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகிளின் துரோகத்தை வறுமையிலும் துன்பத்திலும் வாழும் மக்கள் விளங்கி அவர்களை ஒட்ட வெறுக்கும்வரை மக்களுக்கு விடுதலை இல்லை. கடந்த ஐம்பது வருட எமது நாட்டு வரலாறும் முதலாளித்துவம் வேண்டும் என்று அடம் பிடித்த எமது அரசியற் கோமாளிகளும், அவர்கள் அதன்மூலம் எமக்குத் தேடித்தந்த துயரங்களும் ஏமாற்றங்களுமே இதற்குச் சான்று. இதுபற்றி இன்னுமொரு படிப்பனவு தேவை இல்லை.
கியூபாவுக்கு வந்த அரச தலைவர்கள் கியூபா சமூகத்தை நன்றே மதிப்பிட்டிருந்தால் ஒன்றை மட்டும் ஒத்துக் கொள்ளுவர். அமெரிக்க தலைமையிலான உலக முதலாளித்துவ நாடுகள் கியூபாவை உலகப் பொருளாதாரத்தில் நுழையவிடாமல் இன்னோரன்ன தடைகளைச் செய்தபோதும் கியூபாவின் வாழ்க்கைத் தரம் கணசமானது. பஞ்சம் பசி, வறுமை, சிரங்கு சொறி, பிச்சையெடுப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், அனாதைகள் தற்கொலைச்சாவு மனநோய், விரக்தி, வீதிவிபத்துக்கள், சேரி குப்பம் இல்லாத ஒன்றாகும். அமைதியும் நிம்மதியும் தவழும் நாடு. எல்லோரும் எல்லாமும் பெற்று வள்ளல்களும் வறிஞர்களும் இல்லாத நாடு.

அங்கே அரச அதிகாரிளுக்கும் புத்திஜீவிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையேயுள்ள வாழ்வு வித்தியாசம் பெரிதாக இல்லை. எல்லோருக்கும் கல்வி வசதி மருத்துவ வசதி உறைவிடவசதி என்பன உத்தரவாதத்தோடு இருக்கிறது. தேசிய இனங்கள் இரண்டறக் கலப்பதால் மாத்திரமே ஒரு நாடு விடுதலை அடையலாம், வளர்ச்சி பெறலாம் என்பதற்கு கியூபாவே எடுத்துக் காட்டாகும். தேசப்பிரிவினை பின்னடைவுக்கே வழிகோலும். ஒருகாலமும் பிரிந்த தேசம் வளர்ச்சி காணாது. அங்கே வாழ்க்கைத் தரம் உயராது.ஒடுக்கு முறை, சிறுபான்மைத் தேசிய இனத்தின்மேல் பாரபட்சம் போன்றவை இருந்தபோதும் அப்போது அங்கே நிலவிய வாழ்க்கைத் தரத்திலும் பார்க்கப் பிரிந்து போன சிறிய தேசத்தில் வாழ்க்கைத் தரம் உயராது. ஒரு ஒடுக்குமுறை ஆட்சியாளனை மாற்றித் தன் இனத்தைச் சேர்ந்த இன்னுமொரு ஒடுக்குமுறையாளனை அங்கே பிரதியிடுவதுவே நிகழும். அது ஒரு பொழுதும் விடுதலை ஆகாது. ஓட்டுமொத்தக் கீழ்தட்டு மக்கள் ஒடுக்கிச் சுரண்டி ஆட்சி செய்கின்ற ஒட்டுமொத்த மேல் தட்டினர்க்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதே விடுதலையாகும்.

பிடல் கஸ்ட்ரோ இன்று உயிர் வாழும் அரசியற் தலைவர்களுள் உலக மக்களால் ஆக விரும்பப்படும் தலைவராவார். அவர் ஒரு மாக்சியத் தத்துவார்த்த விற்பன்னர் அல்லர். ஆனால் ஒருகாலமும் எந்த நாட்டையோ எந்த மக்களையே ஆக்கிரமிக்க எண்ணங் கொண்டவர் அல்லர். அவர் உலகில் நடக்கும் எந்த ஒடுக்குமறையையும் ஏற்றவர் அல்லர். இந்த நவீன உலகத்திலே மனித சமுதாயம் வென்ற அறிவியல் தொழில் நுட்பப் பிரயோகங்கள் மூலம் வளங்களையும் அடிப்படைத்தேவைக்கான உற்பத்திப் பண்டங்களையும் பாரபட்சமற்ற முறையில் விநியோகிக்கும் சமுதாய முறையை ஏற்படுத்தினால் போர்கள் ஒடுங்கி எல்லோருமே நல்லவண்ணம் வாழலாம் என்பதில் உறுதியாக இருந்து அதைத் தனது நாட்டில் செவ்வனே பிரயோகித்து அந்த நாட்டு மக்களின் சொந்தத் தாயும் தந்தையுமாக விளங்குபவர். அந்த நாட்டு மக்களின் நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குபவர். அவர் 80 வயதில் தனது நோயிலிருந்து குணம் அடைகிறார் என்றே செய்திகள் கூறுகின்றன. அவர் இன்னும் ஒரு தசாப்தம் உயிரோடு திடகாத்திரமாக வாழ்ந்தால் உலக சரித்திரத்தை மாற்றப் பாரிய பங்களிப்பைச் செய்வதோடு உலக சோஷலிசத்தைத் தரிசிப்பார் என்பதில் ஐயமில்லை. தென் அமெரிக்காவின் இராணுவச் சதிக் ‘கொன்சேட்’டுகள் முடிந்து தென் அமெரிக்காவின் அபிவிருத்திகள் அந்தத் திசையிலேயே முன்னேறுகின்றன.

ஆதலாலேயே இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கியூபாவை அணுக முடிவதில்லை. ஒரு சமத்துவமில்லாத நாட்டிலே அதனால் ஏற்பட்ட உட்பகை வளர்ந்து போய்விடுவதால் அந் நாட்டிலேயே ஆக்கிரமிப்பாளர்களும் அந்நியர்களும் சுலபமாகப் புகுவார்கள். இங்கு வந்த தலைவர்கள் இதை விளங்கினாலே அது உலகுக்குச் செய்யும், தமது மக்களுக்குச் செய்யும் பெரிய கைங்கரியமாகும்.

2 thoughts on “கியூபா – செப்டம்பர் 16/17

  1. உருப்படியாக சிலதை சொல்ல முனையும் பதிவுதான். ஆனாலும் 10 வருடத்தில் நிகழப்போகும் உலக சோசலிசத்தைக் காண பிடல் காஸ்ரோ இருக்கவேண்டும் என்ற கனவு ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கலாய்த்தபடி மீண்டும் ஒரு சோசலிச புரட்சி வெடிக்கும் என சில மார்ச்சியவாதிகள் (10 ஆண்டுகளை ஒரு உத்தேசமாக தமிழக ஞானி சொல்லிவைத்தவர்) கனவுகண்டதையே ஞாபகப்படுத்துகிறது. இந்த மார்க்சிய சாத்திரத்தை கார்ல் மார்க்ஸ் உயிரோடிருந்தால் கேட்டு சலிப்படைந்திருப்பார். விமர்சனங்களையும் ஆய்வுகளையும் கோரும் ஒரு தத்துவத்தை கனவுகளால் மட்டும் நிரப்பத் துடிக்கும் ஆற்றாமையை என்னவென்பது. முதலாளித்தவத்தின் அட்டகாசங்களையெல்லாம் சரியாகவே சுட்டிக் காட்டிவிடுவது ஒன்றும் சோசலித்துக்கான நியாயங்களைத் தந்துவிடாது. கியூபா பற்றிய விபரிப்புகள் எல்லாம் முன்பு சோவியத் யூனியனைப் பற்றிய விபரிப்புகளை எம்மை முன்னால் இருத்தி மார்ச்சியர்கள் கதைசொன்ன சங்கதியை ஞாபகப்படுத்துகிறது. சோவியத் உடைந்த சிதறியபின் எல்லாம் புஸ்வாணமாய்ப் போனது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகம் மீண்டும் எழும் என்று சொன்னார்கள். நம்பியபடி இருந்தோம். அது ஒரு காலம்.

    இந்தக் கட்டுரையாளர் கியூபாவின் சாதனைகளை பட்டியலிடும்போது சந்தோசமாகத்தான் இருக்கிறது. உண்மைநிலையை யாமறியோம். பிடல் கஸ்ரோ மதிப்புக்குரிய தலைவர்தான். சந்தேகமேயில்லை. அதுவும் ஒரு இலங்கைத் தமிழனாக பிறந்துவிட்ட எமக்கு பிடல் பிரமிப்பானவர்தான். ஆனாலும் ஒரு கேள்வி என்னிடம் எப்போதுமே எழுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிப் பொறுப்பை தன்னிடமே வைத்திருப்பதை எந்த ஜனநாயகக் கோட்பாட்டால் விளக்குவது?. கியூபாவின் சோசலிச அரசியல் போக்கு வளர்ச்சியடைந்திருந்தால் தனிமனிதன் பிடல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கான விடை பிடலின் மரணத்தின் பின் தெரிந்துவிடும்.

    “ஆப்கானிஸ்தான்இ ஈராக்கை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் கியூபாவை ஆக்கிரமிக்கத் துணியவில்லை. காரணம் கியூபா உலகின் எந்த மக்களுக்கும் எந்தத் துரோகத்தையும் செய்யாத நாடு…“ என்கிறார் கட்டுரையாளர்.
    இது ஒருவகையில் அமெரிக்காவின் “நியாயத்தை“ ஒத்ததாகும். அநியாயங்கள் செய்தால் ஆக்கிரமிப்பை நடத்துவதற்கான நியாயத்தையும் அது தந்துவிடுகிறதா? அத்தோடு ஈராக் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்ததிற்;கான அரசியலையும் கியூபாவை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கான அரசியலையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தம் உலர் ஆய்வுமுறையோ கட்டுரையாளரது என்று எண்ணத் தோன்றுகிறது.

    எப்படியோ கனகாலத்துக்குப் பிறகு (சொந்தப் பெயரில்) வந்து இப்படியான கட்டுரைகளைத் தருவது நல்ல விசயம். சும்மா புனையெரிலை வந்து அவதூறுகளை தனித்தும் சேர்ந்தும் எழுதுற குசும்புகளைவிட இது பிரயோசனமானது. இந்தக் குசும்பகளிலை தரப்பட்ட தப்புத்தப்பான தகவல்களைப் போன்று இந்தக் கட்டுரையின்ரை கியூபா பற்றிய தகவல்களும் அமையாமல் இருக்கக் கடவதாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *