முட்டாள்களின் ஊர்வலம்

அறிவித்தல்கள்

 இன்று (03.09.2006) பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மாணிக்க விநாயகர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான ஈரோக்களைச் செலவு செய்து முற்றுமுழுதான சமஸ்கிருத வழிபாட்டு முறையில் விடப்பட்ட தேரோட்டத்தில் தேர்களில் கடவுள் பொம்மைகளையும் உயிருள்ள பார்ப்பனர்களையும் உட்காரவைத்து நமது அகதிச் சமூகம் பாரிஸ் வீதிகளில் முதுகு முறிய இழுத்து வந்தது. இந்த ஆயிரமாண்டு கால இழிவையும் அவமானத்தையும் சுட்டிக்காட்டி விழிப்புணர்வுப் பரப்புரையில் இறங்கிய “பெரியார் கல்வி வட்டத்தினர்” தேர் இழுக்கப்பட்ட பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்திருந்தனர். இந்தத் துண்டறிக்கையையும் நமது தோழர்கள் மக்களிடம் விநியோகித்தனர்:

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி        ஈ.வே.ரா. பெரியார்

ஒரு கணம் நில்லுங்கள்! தயவு செய்து ஒரு நிமிடம் மூளையைக் கசக்கிச் சிந்தியுங்கள்; உலகத்திலேயெ உருப்படாத இருபத்தெட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது. முப்பது வருடங்களாகத் தொடரும் யுத்தத்தால் ஈழத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் சாவின் நிலமாக மனிதப் புதைகுழிகளாக மாறியுள்ளது. பெருவாரியான மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். எம் தேசத்து மழலைகள் உணவிற்காகவும் உடுக்க ஒரு முழம் துணிக்காகவும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்திக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து சென்று ரெட்பானாவும், ஒக்ஸ்போமும், செஞசிலுவைச் சங்கமும் எம் தேசத்து மக்களுக்கு வயிற்றுக்கு சோறிடும் போது, நீங்கள் இங்கிருந்து குளவிக்கல்லை ஒத்த பாழாய்ப்போன கடவுள் சிலைகளுக்குப் பாலாபிசேகமும் தேனாபிசேகமும் செய்து கூத்தாடிக்கொண்டிருப்பது நியாயமானதுதானா?  தொண்டர்படைகள் அங்கே உயிரை துச்சமென மதித்துக் கண்ணிவெடிகளை அகற்றிக்கொண்டிருக்கும்போது நீங்கள் இங்கே தெருவில் தேங்காய் அடித்து வீரவிளையாட்டுக்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பது அறிவார்ந்த செயலாகுமா? யோக்கியமாகுமா? எம் தேசத்தின் தெருக்களிலே இடையறாது பிண ஊர்வலங்கள் சென்று கொண்டிருக்கையில் நீங்கள் பணத்தை இலட்சக்கணக்கில் செலவு செய்து தெருத்தெருவாக காட்டுமிராண்டிகள்போல கையில் தீச்சட்டியும் முதுகில் அலகும் குத்தி சாமி ஊர்வலம் விடுவதில் ஏதாவது அர்த்தமுள்ளதா?

ஆயிரம் வேலும் வாளுமாக ‘போஸ்’ கொடுக்கும் இந்தச்சாமிகள் ஏன் இறந்துகொண்டிருக்கும் எம்மக்களைக் காப்பாற்றவில்லை. ஆயிரம் அற்ப்புதங்களை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்தக் கடவுள்களின் அற்ப்புதங்கள் ஏனஇ யுத்த பூமிகளில் நிகழ்த்தப்படவில்லை? எமமீது ஒரு வெள்ளைக்காரத் தொண்டு நிறுவன மருத்துவருக்கு இருக்கும் கரிசனைகூட ஏன் இந்தக் கடவுள்களுக்கு இல்லை? ஏனென்றால் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!

ஓர் அகதிச் சமூகம் தான் தஞ்சம் புகுந்துள்ள நாட்டில் தனது அரசியல் உரிமைகளுக்காக, தமது தாயக தேசத்தில் நசுக்கப்படும் உறவுகளின் உரிமைக்காகத் தெருக்களிலே இறங்கி ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் இடையறாது நடாத்தவேண்டுமே அல்லாமல், அகதியாக வந்த போது கூடவே தம்மோடு எடுத்து வந்த மூடப்பழக்கங்களையும் வந்த இடத்தில் தேடிக்கொண்ட பகட்டுகளையும் தெருக்களில் நின்று புகலிடத் தேச மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டக் கூடாது.இவை உங்களின் கலாச்சாரப் பெருமையாக ஒரு போதும் கொள்ளப்படாது. இது ஒரு பண்பாட்டு வளர்ச்சியற்ற, அரசியல் உணர்வற்ற மக்களின் கோமாளித்தனமாகவே இந்நாட்டு மக்களால் விளங்கிக் கொள்ளப்படும் என்பதை தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். கடவுள் என்ற பெயராற் கோயில் முதலாளிகளுக்கு கொடுக்கும் ஒவ்வொரு சதத்தையும் எம் தேசத்தில் அல்லலுறும் மக்களுக்குக் கொடுப்பது எப்படியென்று சிந்தியுங்கள். மூலைக்கு மூலை வியாபாரத்திற்க்காகத் தோன்றியிருக்கும் கோயில்களை நிராகரியுங்கள். இந்து மதத்தை ஒழிக்காமல் சமூக ஏற்றத் தாழ்வுகளை, பெண்ணடிமைத்தனத்தை அழிக்க முடியாது எனக் கூறிய அம்பேத்கரின் வார்த்தைகளை நெஞசில் நிறுத்தி வையுங்கள். மதம் ஒரு அபின் என்ற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆயிரம் கோயில்களைக் கட்டுவதைவிட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே உங்கள் ஆன்மாவை ஒளிரச் செய்யும்.

பெரியார் கல்வி வட்டம் – பிரான்ஸ் –
03.09.2006

7 thoughts on “முட்டாள்களின் ஊர்வலம்

  1. மிகவும் உண்மையான விடயம்… மிகவும் வெட்க்கப்பட வேண்டிய விடயமும் கூட….

  2. தகுந்த தலைப்பு,,தகுந்த நேரம்,,
    நல்ல பதிவு……

  3. நல்ல கட்டுரை
    கடவுள் என்றபெயரால் கோயில் முதலாளிகளுக்கு (ஜெயதேவனுக்கு> மற்றும் புலிஎதிர்ப்புக்கோயில்களுக்கு) கொடுக்கும் ஒவ்வோரு சதத்தையும் எம்தேசத்தில் அல்லலுறும் மக்களுக்கு எப்படிக்கொடுப்தென்று சிந்தியுங்கள்!
    உதாரணத்திற்கு இன்று லண்டன்> கனடா மற்றும் ஏனைய நாடுகளில் அவர்கள் புனர்வாழ்வுக்கழகத்தினூடகவே உதவுவதுபோல…

    எம்தேசத்து மழலைகள் உணவிற்காகவும் உடுக்க ஒருமுழம் துணிக்காகவும்
    வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் போது….
    நாங்கள் சாசம் சாமமாய் தண்ணி அடித்து பிறகு ரக்சி பிடித்து காசாய் கரைகிறோம்.
    அல்லது நாலுகாலில் நடக்கும்போது பண்பாட்டு வளர்ச்சியற்ற ஒரு கோமாளித்தனமாகவும் இந்நாட்டு மக்களால் விளங்கிக்கொள்ளப்படலாம்.

    சாp போக>
    நீங்கள் மெத்தப்படிச்சனீங்கள் உங்களிடமே எல்லாத்துக்கும் கையறு நிலை > கேள்விகளைத்தவிர வேறெதுவுமில்லை என்று நீங்களேஒப்பாரி பாடும்போது
    பாமரமக்கள் என்ன செய்வார்கள்?
    உங்களைப்போல கேள்விகேட்கவும் தொpயாது. கற்பூரச்சட்டிகளைத் தலையில் வைத்து> காவடி எடுத்து ஏதோ நம்பிக்கையோடு; அவர்கள் வாழத்தானே வேண்டும்? இவற்றை முதலில் அனுதாபத்தோடு பார்த்துப்பழகுங்கள்.

    பிழைப்பு என்பது எல்லப்பக்கமும்தானே நடக்கிறது.
    பின்நவீனத்துவக்காரர்> கலகக்காரர் இதுக்குப்போய் ஏன் கவலைப்படவேண்டும்?
    சமூகம்பற்றி உங்களுக்கு என்ன புது அக்கறை?

    கொலைகளின் பூமியிலிருந்து பிணக்குவில்களுக்குள்ளால் வந்தவர்கள் இந்த மக்கள்.
    இவர்களின் பாமரத்தனைங்களை சாடுவதன்மூலம் சில்லறைத்தனமான அரசியல்இலாபம் அடைய ஆசைப்படாதீர்கள்.

  4. அன்புடன் சக்திக்கு
    இதையெல்லாம் விளங்கிக்கொள்ளக்சகூடிய சமூகமா எங்களது சமூகம்? வீண் முயற்சி. பேய் அரசாள பிணந்தின்னும் குடிமக்கள்.

  5. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எங்கள் யாழ் சமூகத்தைப்போல் சுயநலமிகள் உலகின் எப்பகுதியிலும் இருக்க மாட்டார்கள் என்பது என் சிற்றறிவின் புலப்பாடு. காளிக்கு பலி கேட்ட புலிகளை தங்கள் தலைமையாக கொண்ட எம்மவர்கள் பலியாக பக்கத்து வீட்டானை அரோகரா சொல்லி உசுப்பேத்தும் பக்தர்கள். காளியின் பசி தீர்ந்தாலும் சூரியதேவன் வெறி தீருமா? எல்லாம் அடங்கி முக்தி கிடைக்கும்போது சுடுகாடே தரிசனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *