அந்திக் கிறிஸ்து

கதைகள்

1. கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவேடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பறிக்கப்பட்டிருந்தது.

2. இரவு படுக்கையில் நெடுநேரம் அமர்ந்திருந்து மிதமிஞ்சி மது அருந்தியவாறே, வானொலியில் வெளியாகிக்கொண்டிருந்த அதிபர் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்த கவர்னர் பிலாத்து, ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் மதுபோதையும் சேர அப்படியே கண்களைச் சொருகிக்கொண்டு தன்னையறியாமலேயே உறங்கிவிட்டிருந்தார்.

3. இப்போது அதிபர் தேர்தலில் முன்னைய அதிபரே மறுபடியும் வென்றிருக்கிறார். வெற்றிபெற்றவருடைய எதிர் அணி வேட்பாளரிற்கு கவர்னர் பிலாத்து தன்னுடைய ஆதரவை வலுவாகவும் வெளிப்படையாகவும் வழங்கியிருந்தார். மாறாக, கவர்னருடைய மனைவி இப்போது வெற்றி பெற்றவருக்கு ஆதரவாக மேடை மேடையாகப் பலத்த பிரச்சாரம் செய்திருந்தார்.

4. ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிலாத்து சத்தம் கேட்டுச் சிரமப்பட்டுக் கண் விழித்தபோது தன்னருகே வைத்திருந்த வானொலிப் பெட்டியைக் காணாமல் சிறிது குழம்பிப்போனார். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் அதிகாலை மூன்று மணி பன்னிரெண்டு நிமிடமாகயிருந்தது.

5. அந்தச் சத்தம் மறுபடியும் கேட்டது. சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் பிலாத்து கவனித்தார். அந்தச் சத்தம் சமையலறையிலிருந்துதான் வருவது போலிருந்தது. சமையலறையிலிருந்து ஒரு நறுமணமும் எழுகிறது.

6. பிலாத்து மெதுவாக எழுந்து ஓசையெழுப்பால் நடந்துபோய் படுக்கையறைக் கதவைத் திறந்தபோது, இதுவரை இருண்டு கிடந்த அந்த வீட்டின் கூடத்தினதும் மாடத்தினதும் விறாந்தைகளினதும் அனைத்து விளக்குகளும் பளீரென எரியலாயின். வீடு முழுவதும் இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிறைந்திருந்தனர்.

7. பிலாத்து உணவு அருந்தும் மேசையில் நான்கு இராணுவ வீரர்கள் உட்கார்ந்து விஸ்கி குடித்துக்கொண்டிருந்தனர். அந்த விஸ்கியை அவர்கள் அவருடைய மதுபான அலமாரியிலிருந்து எடுத்திருக்கிறார்கள். வீடு முழுவதும் சிகரெட் புகை நிறைந்து நின்றது. வரவேற்பறை ஸோபாக்களில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து வெளியேறும் எல்லா வாசல்களினதும் கதவுகளை இறுக மூடிவிட்டு அங்கே துப்பாக்கிகளுடன் இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர்.

8. பிலாத்து அவர்களைப் பார்த்து மெதுவாகக் கேட்டார் ” இந்த நள்ளிரவில் தூங்காமல் என் வீட்டில் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

9. குடித்துக்கொண்டிருந்த ஓர் இராணுவ அதிகாரி எழுந்துநின்று உரக்கச் சொன்னான்: “அதிபரின் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் சேர்”.

10. அப்போது சமையலறையிலிருந்து ஓர் இளம் இராணுவ வீரன் அப்போதுதான் அவன் சமைத்த பாற்சோற்றை சுடச்சுட ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்துவந்து பிலாத்துவின் முன்னால் நீட்டிப் போலிப் பணிவுடன் சொன்னான்: “நமது அதிபரின் வெற்றியைக் கொண்டாடச் சிறிது பாற்சோறு சாப்பிடுங்கள் அய்யா.”

2 அதிகாரம்

1. கவர்னர் பதவி பறிக்கப்பட்டு, கடுமையான இருபத்துநான்கு மணிநேர இராணுவக் காவலோடு பிலாத்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிப்போயிற்று.

2. அவரது கைத்தொலைபேசிகள் பறிக்கப்பட்டு, வீட்டுத் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. கணினி, தொலைக்காட்சி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வானொலிப் பெட்டியைக் காணவில்லை. கடிதங்களோ பத்திரிகைகளோ அவருக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டிருந்தன.

3. மதுவகைகளும் சிகரெட்டுகளும் பாலும் சமையற்பொருட்களும் அவருக்கு ஒவ்வொருநாளும் தாராளமாக வழங்கப்பட்டன. பிலாத்து சமையலறை அடுப்பையே பற்ற வைத்தாரில்லை. நாள் முழுவதும் அவர் மதுவைக் குடித்துக்கொண்டிருந்தார். பசித்தபோது பாண் துண்டங்களை பாற்கட்டிகளுடன் சேர்த்து விழுங்கினார்.

4. அவரைக் காவல் செய்த இராணுவ வீரர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அப்படியாவது வெளியே நடக்கும் செய்திகளை தெரிந்துகொள்ள முயற்சித்துப் பார்த்தார். இராணுவ வீரர்கள் போலிப் பணிவுகாட்டி அவருடன் பேசினார்கள். ஆனால் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் தொடர்பற்ற பதில்களைத் தாராளமாக வழங்கினார்கள். அது ஒரு தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி போல நித்தமும் நடந்தது.

5. பிலாத்து இராணுவ வீரன் ஒருவனிடம் ” அதிபர் நாட்டில்தான் இருக்கிறாரா?” எனக் கேட்டால் அவன் உத்தாரமாக ” சேர்.. உங்கள் மனைவியை நான் ஏப்ரல் கார்னிவலில் பார்த்திருக்கிறேன், அவரது குண்டிப் பாகம் மிகப் பெரிதானது” என்றான்.

6. இரவுகளில் பிலாத்து சமையலறையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டே சமையலறையில் கிழக்குப் பக்கமாக நோக்கியிருந்த பெரிய சாளரம் வழியே வானத்தை வெறித்துப் பார்த்தவாறிருந்தார். வானம் எப்போதும் இருண்டே கிடந்தது. ஒரு நட்சத்திரத்தைக் கூட அவரால் ஒருநாளுமே காணமுடியவில்லை. என்றைக்கு வானில் ஒரு நட்சத்திரத்தை தான் காண்கிறாரோ அன்றைக்கு நாட்டில் ஒரு மாறுதல் நடக்கும், தனக்கு விடுதலை கிடைக்கும் எனக் குழந்தைத்தனமாகப் பிலாத்து தனக்குத் தானே சொல்லிக்கொள்ளலானார்.

7. அவரைப் போன்ற கையறு நிலையிலிருப்பவர்கள் இவ்வாறு கற்பனைக் கணக்குகளை இடையறாது போட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். பிரஞ்சு கயானா தீவாந்திரத் தனிமைச் சிறையில் வருடக்கணக்காக பட்டாம்பூச்சி அடைக்கப்பட்டிருந்தபோது இப்படியாகத்தானே கற்பனைக் கணக்குகளைப் போட்டுத் தன்னைத் தானே நம்பிக்கையூட்டியவாறிருந்தான்.

3 அதிகாரம்

1. எட்டாம் நாள் பிலாத்து நண்பகலிற்கு மேலேதான் படுக்கையிலிருந்து எழுந்தார். பல் கூடத் துலக்காமல் நேரே சமையலறைக்குச் சென்று தென்னஞ் சாராயப் போத்தலைத் திறந்து ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையை அவர் நிறைத்துக்கொண்டிருக்கும்போது சமையலறை வாசலில் ஓர் இராணுவ வீரன் தோன்றினான்.

2. ” சேர் உங்களிற்கு வடக்குத் திசையிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.”

3. அந்த இராணுவ வீரன் ஒருவிதமான எள்ளல் சிரிப்புடன் நடந்துவந்து பிலாத்துவின் முன்னாலிருந்த மேசையில் வெள்ளை உறையிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை வைத்தான்.

4. பிலாத்து அந்தக் கடித உறையைக் கையிலெடுத்து ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்தார். கடித உறை பிரிக்கப்பட்டிருந்தது.

5. அந்தக் கடித உறையில் கவர்னர் பிலாத்து எனவும் அவரது முகவரியும் பழைய ‘டைப் ரைட்டர்’ இயந்திரத்தால் ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்தன. அனுப்புனர் பகுதியில் மரியா என்ற பெயரும் முகவரியுமிருந்தன.

6. எட்டு நாட்களிற்குப் பிறகு பிலாத்துவிற்கு வாசிக்க ஒன்று கிடைத்திருக்கிறது. அவர் ஒருவித ஆர்வம் மேலிட அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டும் தனது மூக்குக் கண்ணாடியைத் தேடிக்கொண்டும் தனது படுக்கையறைக்குள் நுழைந்தார்.

4 அதிகாரம்

1. என் காதல் கவர்னருக்கு,

2. உங்களது காதலி மரியா ஈர இதழ் முத்தங்கள் ஆயிரம் கோடியுடன் எழுதிக்கொள்வது.

3. நீங்கள் என்னை அறியமாட்டீர்கள். ஆனால் உங்களிற்கு எனது ஒரே மகன் கிறிஸ்துவைக் கண்டிப்பாக ஞாபகமிருக்கும்.

4. என் பிலாத்துவே! கொஞ்சக் காலங்களாகவே என் ஆன்மா உங்களைச் சுற்றியே மிதக்கிறது. என் இதயம் ஒரு கண்ணாடிக் கோப்பையென்றால், உங்கள் மீது நான் கொண்ட இச்சை திராட்சை ரசம்போல அதில் தளும்பி நுரைக்கிறது.

5. என் கவர்னரே! என் சரீரம் உங்கள் வலிய கைகள் பட்டு உயிர்க்க வேண்டும். சில வருடங்களாகவே காமத்தை அறியாமல் கால்களிடையே ரோமம் மண்டி மூடிக்கிடக்கும் என் உயிர்ப் பூவை நீங்களே மலர வைக்க வல்லமையுள்ளவர்.

6. காமத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத இருள் முடுக்குகளில் நான் தீபம்.

7. உங்களது பெலமான கால்களின் கீழே என் தலைக்கேசம் பட்டுப் பாதவிரிப்பு.

8. உங்கள் பற்களிற்கு என் முலைக் காம்புகள் மயில் முட்டைகள். உங்கள் நாக்கு ஸம்ஸம் நீரின் மச்சம். என் நாக்கு அசையும் யோனி.

9. கவர்னரே உங்களின் ஆண்மை என்னைக் கிரணம் போல கவ்வட்டும்.

10. உங்கள் விந்து என் கருஞ்சுனையில் ஒளியெழுப்பிப் பரவும் பாதரசச் சிதறல்கள். அவை உடைந்து என் உதரத்தின் கனியாகட்டும்.

11. தங்களிற்காக ஒவ்வொரு முன்னிரவிலும் என் வீட்டின் பின்புறமிருக்கும் தோட்டக் குடிலின் வைக்கோல் படுக்கையில் நிர்வாணத்தை அணிந்தும் வேட்கைப் பூக்களை விரல்களில் சூடியும் காத்திருக்கிறேன் கவர்னரே!

12. என் இடது முலை இஞ்சி வாசம். வலது முலை எலுமிச்சை வாசம். என் பெண்மை போதிமரத் தைல மணம்.

13. இந்த நறுமணங்களால் என்னை அறிவீர்கள்.

14. வரும்போது மறக்காமல் முகமூடி அணிந்து வாருங்கள்.

15. நீர் உப்பின் வாசம். நான் அதனால் உம்மை அறிவேன்.

5 அதிகாரம்

1. மரியாவிற்குப் பதினெட்டு வயதானபோது அவரிற்கு ஜோஸப்போடு விவாக ஒப்பந்தம் நிறைவேறிற்று.

2. அப்போது ஜோஸப்பிற்கு முப்பது வயதாக இருந்தது.

3. ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் வருடம் ஜுன் மாதத்தில் தலைநகரத்தில் இனவாரிக் கணக்கெடுப்பு நடந்தது. ஜுலை மாதத்தில் தலைநகரத்தில் சனங்களை அவர்கள் தேடித் தேடிக் கொன்றபோது மரியா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார்.

4. நகரம் எரிந்துகொண்டிருந்த இரவில், ஜோசப் தனது கைகளில் மரியாவை ஏந்தியவாறு அகதி முகாமை நோக்கி இருளில் பதுங்கி நடந்தார்.

5. அந்த நள்ளிரவில்தான் குழந்தை கிறிஸ்து அகதி முகாமில் பிறந்தான்.

6. அரசு நீர்ப்பாசனத் துறையில் நிபுணத்துவப் பொறியியலாளராக இருந்த ஜோசப் அந்த இரவு முழுவதும் ஒரு கண் உறங்காமல் யோசித்தவாறிருந்தார். அவர் கொலைகாரர்களின் கைகளிற்குத் தனது மனைவியையும் குழந்தையையும் எக்காலத்திலும் ஒப்புவிக்காமல் இருப்பதற்காக நாட்டை விட்டு வெளியேற அப்போது முடிவெடுத்தார்.

7. நீண்ட நாட்களாகவே அவரிற்கு பாலைவன நாடொன்றிலிருந்து உத்தியோகத்திற்கு அழைப்பு வந்துகொண்டிருந்தது. இப்போது அந்த அழைப்பை ஏற்பதென அவர் முடிவு செய்தார்.

8. ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பின் பின்னான பத்தாவது நிமிடத்தில் பாலைவன நாட்டின் தூதரகத்தின் வண்டி காவற்துறையின் பாதுகாப்புடன் அகதி முகாம் வாசலிற்கு வந்து நிற்கலாயிற்று.

6 அதிகாரம்

1. கட்டிய துணியுடனும் குழந்தை கிறிஸ்துவுடனும் தான் ஜோஸப் குடும்பம் பாலைவனம் போயிற்று.

2. ஜோசப்பின் அலுவலகத்திலேயே மரியா ஆங்கிலத் தட்டச்சுப் பணியாளராக வேலையில் சேர்ந்தார்.

3. அங்கே அவர்கள் காலப்போகில் ஓர் அழகிய மலை வீட்டையும் கனித் தோட்டத்தையும் உண்டாக்கிக் கொண்டார்கள்.

4. கிறிஸ்துவிற்கு முப்பது வயதானபோது எல்லைப்புறத்தில் பயணித்த ஜோசப்பின் அலுவலக வண்டி குண்டுவீச்சிற்குள் சிக்கி ஜோசப் சிதறி இறந்துபோனார். பாலைவனத்தின் மலைவீட்டின் பின்னாக இருந்த கனித் தோட்டத்தில் ஜோசப்பின் தசைத்துண்டங்களைப் புதைத்த போது மரியாவின் கண்களில் வடிந்த நீரை கிறிஸ்து தனது கைகளால் துடைத்துவிட்டு “அம்மா அழாதே.. என் நேரம் வந்துவிட்டது” என்றான்.

5. கிறிஸ்து பன்னிரெண்டு வயதிற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்குப் போகவேயில்லை. அவனைக் கட்டுப்படுத்த ஜோசப்பும் மரியாவும் எடுத்த முயற்சிகள் தொடராகப் தோற்றுப்போயின.

6. பதினாறு வயதில் முதற்தடவையாக கிறிஸ்து சிறைக்குப் போனான். அதன்பின்பு அவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தான். அவனை மறுபடியும் மரியா சிறைச்சாலைகளில் கண்டுபிடித்தார்.

7. கிறிஸ்து எப்போதும் தோளில் ஒரு துணிப் பையை மாட்டியிருப்பான். அந்தப் பை நிறைய அவன் எறிவதற்கு வாகான கற்களை வைத்திருப்பான்.

8. தந்தையைப் புதைத்த புதைகுழியின் மீது ஓர் இரவில் கிறிஸ்து கைகளில் கற்களை வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருப்பதை மரியா கண்டபோது கிறிஸ்துவைத் தொலைவாக அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

9. மரியாவிற்கு தாய்நாட்டிற்கு திரும்பவே விருப்பமாயிருந்தது. அங்கே அப்போது போர் முடிந்து சமாதானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

10. முப்பது வருடங்களாகத் தேடிய செல்வத்துடனும் கிறிஸ்துவுடனும் மரியா புறப்படலானார்.

11. அவர் தனது பிரியத்திற்குரிய பழைய ஆங்கிலத் தட்டச்சுப் பொறியையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

7 அதிகாரம்

1. அந்தச் சிறிய கடலோரப் பட்டினத்தின் புராதனக் கற்கோட்டைக்கு அண்டையிலான தோட்டத்துடன் கூடிய பெரிய வீட்டில் மரியாவும் கிறிஸ்துவும் குடியேறினார்கள்.

2. மரியா தோட்டத்தில் மலர்களையும் கனிகளையும் விளைவித்தார். மற்றைய நேரங்களில் தனது தட்டச்சுப் பொறியோடு இருந்தார்.

3. நிறையச் சனங்கள் யுத்தத்தில் காணாமற்போனவர்களைத் தேடி விண்ணப்பங்களைத் தயாரித்து நாட்டின் தலைவருக்கும் அதிகாரிகளிற்கும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் அனுப்பிவைப்பதற்காக மரியாவைத் தேடி வந்தனர்.

4. மரியா ஆங்கிலத்தில் அந்த மனுக்களைத் தயாரித்துத் தட்டச்சுச் செய்து அவர்களிற்குக் கொடுத்ததுடன் சில சமயங்களில் மனு தயாரிக்க வந்தவர்களிற்குத் தபால் செலவீனங்களிற்குப் பணமும் கொடுத்தார்.

5. கிறிஸ்து எப்போதும்போல சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். சூரியன் விழும் நேரங்களில் கடற்கரையில் அவன் தனது கைகளை வேகமாக வீசியவாறே நடந்து செல்வதைப் பார்க்கும்போது அவன் கடலின் மீதே நடந்து செல்வதுபோல மரியாவுக்குத் தோன்றும்.

8 அதிகாரம்

1. கிறிஸ்துவுக்கு முப்பத்து மூன்று வயதாகிற்று.

2. சற்றே குள்ளமான தோற்றமுடையவனாக இருந்தபோதிலும் அவன் உரமான கை கால்களையும் அகன்ற தோள்களையும் கொண்ட பலசாலியாக இருந்தான்.

3. அவன் பேசும் மொழியைச் சனங்கள் அறியாதிருந்தார்கள்.

4. அக்காலத்தில் அந்தப் பட்டினத்துக் கவர்னர் மாளிகையின் முன்னாகப் பீடத்தை உண்டாக்கி அதிலே போர் வெற்றிச் சின்னமாக ஓர் எட்டடிச் சிலையை வைக்க ஏற்பாடாயிற்று.

5. போரில் வெற்றி பெற்ற இராணுவ வீரன் ஒருவன் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கும் அந்தச் சிலை அயல்நாட்டில் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு கவர்னர் மாளிகையின் முன்னே உயர்ந்த பீடத்தில் நிறுத்தப்பட்டது.

6. வெள்ளிக்கிழமையன்று காலையில் அந்தச் சிலையைக் கவர்னர் பிலாத் து திறந்து வைப்பதாகயிருந்தது.

7. வெள்ளிக்கிழமை விடிந்தபோது கவர்னர் மாளிகையின் முன்னாலிருந்த பீடம் உடைக்கப்பட்டிருந்தது.

8. வெற்றிச் சின்னச் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டுக் காணாமற்போயிருந்தது.

9. கவர்னர் மீதான அதிருப்தியிலிருந்த அரசு அதிபர், சில நாட்களிற்கு முன்னாகக் கவர்னர் மாளிகையின் இரவுக் காவலை நீக்கியிருந்தார்.

9 அதிகாரம்

1. கவர்னர் மாளிகைக்கு வந்த படையினர் சிலையின் உடைக்கப்பட்ட பீடத்தருகே ஒரு துணிப்பையைக் கண்டு பிடித்து வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினருக்குத் தகவல் கொடுத்தனர்.

2. அவர்கள் வந்து துணிப்பையைத் திறந்தபோது உள்ளே சரளைக் கற்களைக் கண்டனர்.

3. படையினரிடம் மோப்பம் அறியும் ஓநாய் ஒன்றிருந்தது. அது மெலிதாக ஊளையிட்டவாறே வெற்றிச் சின்னம் பெயர்த்தெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஓடத் தொடங்கியது. படையினர் ஓநாயைத் தொடர்ந்து சென்றபோது அந்த ஓநாய் மரியாவின் வீட்டை நோக்கிச் சென்றது.

4. படையினர் மரியாவிடம் விசாரித்தபோது மரியா சிலையை ஒப்படைத்து விடுவதாகவும் அங்கே தீங்கொன்றும் விளைவிக்க வேண்டாமென்றும் படையினரிடம் கேட்டுக்கொண்டார்.

5. படையினர் மரியாவின் பின்னே செல்ல மரியா வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்குச் சென்றார்.

6. அங்கே ஒரு புதைகுழி மீது கையில் சரளைக் கற்களோடு கிறிஸ்து உட்கார்ந்திருந்தான்.

7. படையினர் துப்பாக்கிகளை கிறிஸ்துவை நோக்கி நீட்டிப்பிடித்தவாறு, கற்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகளைத் தூக்கியவாறே எழுந்துநிற்குமாறு கிறிஸ்துவுக்குக் கட்டளையிட்டார்கள். கிறிஸ்து அசையாமல் இருந்தபோது மரியா அந்நிய பாஷையில் சத்தமிட்டவாறே ஓடிச் சென்று கிறிஸ்துவின் கன்னத்தில் முத்தமிட்டார்.

8. அப்போது மரியாவின் பிடரிமீது பலத்த ஒரு துப்பாக்கி அடிவிழ மரியா மயங்கி கிறிஸ்துவின் கால்கள் மீது சரிந்தார்.

10 அதிகாரம்

1. தனி ஒருவனாக அந்த வெற்றிச்சின்னச் சிலையை கிறிஸ்து பெயர்த்து எடுத்துவந்து தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து வைத்ததைப் படையினர் முதலில் நம்ப மறுத்தார்கள்.

2. ஆனால் நான்கு படைவீரர்களாகச் சேர்ந்து அந்த வெற்றிச்சின்னத்தைத் தூக்கிக் கிறிஸ்துவின் தோளில் வைத்தபோது அவன் அதைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

3. நகரத் தெருக்களால் அவர்கள் கிறிஸ்துவை ஊர்வலம் விட்டார்கள்.

4. அச்சத்துடனும் இரக்கத்துடனும் நகர மக்கள் பார்த்து நிற்க கிறிஸ்து வெற்றிச்சின்னச் சிலையைச் சுமந்துகொண்டு நடந்தான்.

5. அவர்கள் கிறிஸ்துவை கவர்னர் மாளிகைக்குப் பிலாத்துவிடம் அழைத்து வந்தார்கள்.

11 அதிகாரம்

1. கவர்னர் மாளிகைக்குப் பின்புற வீதியிலிருந்த தேவாலாயத்திற்குள் நுழைந்து திருட முயன்ற பெயர் போன கள்வன் பரபாஸை பிடித்துவைத்திருந்த மக்கள் கவர்னர் மாளிகைக்கு முன்னே கூடிநின்ற படையினரிடம் அவனை ஒப்படைத்தார்கள்.

2. படையினர் பரபாஸை நகர மக்கள் பார்க்கும்வண்ணம் வெற்றிச்சின்னம் பெயர்க்கப்பட்ட பீடத்தின் அருகே முழந்தாளில் நிறுத்திவைத்தார்கள்.

3. வெற்றிச்சின்னத்தைச் சுமந்தவாறு வந்த கிறிஸ்து அதை இறக்கிவைத்த பிறகு கிறிஸ்துவையும் பரபாஸுக்கு அருகில் முழந்தாளில் படையினர் நிறுத்திவைத்தார்கள்.

4. படையினரோடு நின்றுகொண்டிருந்த மதகுரு கூச்சலிட்டபடியே ஓடிவந்து கிறிஸ்துவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கிறிஸ்து முதலாம்முறை முகங் குப்புற விழுந்தான்.

5. மதகுரு கிறிஸ்துவின் நீண்ட தலைமுடியைப் பற்றி இழுத்துத் துாக்கிக் கிறிஸ்துவை மறுபடியும் முழந்தாளில் நிறுத்தினார்.

6. சுடுமணலில் முழந்தாளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருவரையும் பார்க்க மக்கள் தள்ளுமுள்ளுப் பட்டுக்கொண்டிருந்தபோது அங்கே கவர்னர் பிலாத்து விசாரணைக்காக வந்து சேர்ந்தார்.

12 அதிகாரம்

1 விசாரணையை முடித்துக்கொண்ட பிலாத்து, மதகுருவிடமும் படையினரிடம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி ” இவன் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவனாக இருக்கிறான்..இவனை விட்டுவிடலாமா” எனக் கேட்டார்.

2. மதகுரு ‘முடியவே முடியாது’ என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டார்.

3. அப்போது ஒரு படைவீரன் முழந்தாளிலிருந்த கிறிஸ்துவின் முதுகில் காலால் ஓங்கி உதைந்தான்.

4. கிறிஸ்து இரண்டாம்முறை முகங் குப்புற விழுந்தான்.

5. “வேண்டுமென்றால் இந்தக் கள்வனை விடுவியுங்கள் கவர்னரே” என்றார் மதகுரு.

6. அப்போது பிலாத்து “உங்கள் விருப்பம்போல் செய்துகொள்ளுங்கள்” என முணுமுணுத்தார். பின்னர் அவர் பரபாஸை நோக்கி அவனை எழுந்திருக்குமாறு கையைக் காட்டினார். அவன் எழுந்ததும் அவனைப் போகச் சொன்னார்.

7. பரபாஸை தடுப்பார் யாருமில்லை. எல்லோருடைய கவனமும் கிறிஸ்துவிலேயே குவிந்திருந்தது.

8. பரபாஸ் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இப்போது கிறிஸ்துவைப் பார்த்தான்.

9. கிறிஸ்துவின் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து சுடுமணலில் விழுந்தது.

10. கிறிஸ்து கூடிநின்ற மக்களை ஒருமுறை கூர்ந்து கவனித்தான்.

11. அவனின் உதடுகள் “லாமா சபக்தானி” என முணுமுணுத்துக்கொண்டன.

13 அதிகாரம்

1. அழுது அரற்றிக்கொண்டு மரியா, கவர்னர் மாளிகைக்குச் சென்றபோது அந்தியாகயிருந்தது.

2. அங்கே பீடம் திருத்தப்பட்டு வெற்றிச் சின்னம் நட்டு வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார்.

3. கவர்னர் மாளிகை உள்ளே மரியாவை நுழையவிடாமல் காவலர்கள் தடுத்துப்போட்டனர்.

4. வெற்றிச் சின்னத்தின் கீழே ஓநாய் சுற்றிச் சுற்றி நடந்து மணலை முகர்ந்தவாறிருந்தது.

5. மரியா கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றார்.

6. தன் மகன் கடலின் மேல் நடந்துவரக் கூடும் என்ற நம்பிக்கையில் அங்கேயே நின்றிருந்தார்.

7. அப்போது கடற்கரைப் புதர்களிடையே இருந்து ஒரு நீண்ட வெள்ளைச் சர்ப்பம் வெளியே வந்து மரியாவின் முன்னே தலையைத் தூக்கியது.அதன் உடல் முழுவதும் சிவந்த மண் ஒட்டிக்கொண்டிருந்தது.

8. மரியா சர்ப்பத்தையே பார்த்தவாறிருந்தார். பின்னர் “பொய்” என்றார்.

14 அதிகாரம்

1. நான்கு வருடங்களாகப் பகல் வேளைகளில் மரியா தொடர்ந்து தனது தட்டச்சு இயந்திரத்தில் மனுக்களைத் தயாரித்து வந்தார்.

2. காணாமற்போன தனது மகனைக் கண்டபிடித்துத் தருமாறு கோரும் அம்மனுக்களை நாட்டின் அரசுத் தலைவருக்கும் கவர்னர் மாளிகைக்கும் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளிற்கும் அவர் அனுப்பிவைத்தார்.

3. மரியாவைப் போலவே பிள்ளைகளைக் காணாமற்போகக் கொடுத்த பல்லாயிரம் பெண்கள் சேர்ந்து அமைத்திருந்த சங்கத்தில் மரியாவும் சேர்ந்துகொண்டார்.

4. அந்தச் சங்கத்தினர் தங்களது குழந்தைகளையும் உறவுகளையும் தேடி வீதிகளில் மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு நின்றனர்.

5. தங்களது உறவுகளுடைய புகைப்படங்களை மார்புகளில் ஏந்திப் பிடித்தவாறே நீண்ட ஊர்வலங்களை நடத்தினர்.

6. காணாமற்போனார் குறித்து விசாரிக்க நாட்டு அதிபரால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் முன்னே தனது பழைய தட்டச்சு இயந்திரத்துடன் உட்கார்ந்து மரியா சாட்சியம் அளித்தார்.

7. தனது சாட்சியத்தை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்தச் சாட்சிய வார்த்தைகளை அவர் தட்டச்சும் செய்துகொண்டிருந்தார்.

8. தன்னுடைய மகனைக் கண்டுபிடித்துவிடலாம் என்பதில் அவருக்குச் சந்தேகம் ஒன்றும் இருக்கவில்லை.

15 அதிகாரம்

1. காணாமற்போனவர்களைத் தேடும் தாய்மார்கள் கவர்னர் மாளிகையின் முன்னே, வீதியில் காலவரையற்ற உண்ணாவிரதமொன்றைத் தொடக்கினார்கள்.

2. அந்த உண்ணாவிரதப் போராளிகளை ஒன்றிணைப்பவராக மரியா இருந்தார்.

3. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தெருவில் உட்கார்ந்திருந்து மரியா பேசிக்கொண்டிருக்கையிலேயே தனது மடியிலிருந்த தட்டச்சுப் பொறியில் தட்டச்சுச் செய்தவாறேயிருந்தார்.

4. உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்றாம் நாளில் கவர்னர் பிலாத்து உண்ணாவிரதிகளிடம் வந்தார்.

5. அப்போது மரியா எழுந்து நின்று ஆங்கிலத்தில் உரக்கச் சத்தமிட்டார்.

6. “மேன்மை தங்கிய கவர்னரே! என் குழந்தையை என்னிடம் தந்துவிடுங்கள்!”

7. பிலாத்து மரியாவை உணர்சியற்ற கண்களால் பார்த்தார். பின்னர் ஒருமுறை தனது இடுங்கிய கண்களை மூடித்திறந்துவிட்டு உண்ணாவிரதிகள் முன்னிலையில் பேசலானார்

8. “காணாமற்போனவர்கள் இத்தனை வருடங்களிற்குப் பிறகும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் எந்தச் சிறைச்சாலைகளிலும் அவர்களைக் குறித்த பதிவுகளில்லை. எனவே உங்களைப் பார்த்து இந்த முடிவில்லாத போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குமாறு நான் அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்யவிருக்கிறேன்.”

9. கவர்னர் பிலாத்து இப்படிச் சொன்னதுதான் தாமதம் உண்ணாவிரதிகளிடையே பெரும் கூக்குரலும் பற்கடிப்புகளும் ஆத்திரப் பேச்சுகளும் எழுந்தன.

10. கவர்னரைப் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

16 அதிகாரம்

1. “எங்களிற்கு இழப்பீடு வேண்டாம் எங்கள் குழந்தைகளே வேண்டும்” என்ற முழக்கம் உண்ணாவிரதிகளிடையே எழுந்துகொண்டிருந்தது.

2. மரியா தனது தட்டச்சு இயந்திரத்தை உறையிட்டு மூடிவிட்டு உச்சிவெயில் தகிக்கும் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தனது கண்களை ஒளிக்குக் கூசிப்போகாதவாறு விரித்துவைத்துக் கண்மணிகளை உருட்டிக்கொண்டிருந்தார்.

3. அப்போது அவரது மார்பிலே பால் சுரப்பதை அவர் உணர்ந்தார்.

4. சுடும் தார் வீதியில் மரியா உட்கார்ந்தவாறே அப்படியே மடிந்து விழுந்தார்.

5. மரியாவைச் சுற்றி தொலைக்காட்சிக் கமராக்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தன.

6. மாலை ஆகிற்று. வீதியில் மெல்லக் கைகளை ஊன்றி எழுந்திருந்த மரியாவின் முன்னால் தொலைக்காட்சிகளின் ஒலிவாங்கிகள் நீட்டப்பட்டபோது அவர் தனது தட்டச்சு இயந்திரத்தை உறையிலிருந்து வெளியே எடுத்தார்.

7. வீதியில் கால்களை விரித்து உட்கார்ந்தவாறே தனது புடவையைத் தொடைகள்வரை வழித்துவிட்டுக்கொண்டார்.

8. தனது தொடைகளிற்கிடையே தட்டச்சு இயந்திரத்தை வைத்துவிட்டு வலது கை சுட்டுவிரலால் ஓங்கி ஒங்கி அவர் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டினார்.

9. “எனது போராட்டம் முடிந்துவிட்டது.”

17 அதிகாரம்

1. அதன்பின்பு மரியா வெளியே எங்கேயும் போகாமல் தனது வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைந்தார்.

2. சிலவேளைகளில் தோட்டத்திற்குள் சென்று சரளைக் கற்களைத் தேடித் தேடிப் பொறுக்கி அவற்றைக் கொண்டுவந்து தனது படுக்கையில் நிறைத்தார்.

3. அந்தக் கற்களிடையே அவர் படுக்கலானார்.

4. ஒரு நாள் அவர் கற்களிற்கிடையே படுத்திருக்கையில் கற்களுக்குள்ளிருந்து நீண்ட வெள்ளைச் சர்ப்பம் வெளிப்பட்டது. அது மரியாவின் மீது ஊர்ந்து அவர் முகத்திற்கு வந்தது.

5. அந்தச் சர்ப்பத்திடம் மரியா குரல் மெல்லிய குரலில் “உண்மை” என்றார். பின் அந்தப் பாம்பைத் தழுவிக்கொண்டு அரற்றலானார். பாம்பு தன்மீது நெடுநாளாக ஒட்டிக்கொண்டிருந்த சிவந்த மண்ணை மரியா மீது துடித்து உதிர்த்துப் போட்டது.

6.திடீர் திடீரென அவர் அறியாத பாஷையொன்றில் கத்திக் கூச்சலிடுகிறார் என அக்கம் பக்கத்தில் சொன்னார்கள்.

7. ஒருநாள் காலையில் அவர் தபால் நிலையத்திற்கு தனது தட்டச்சு இயந்திரத்தைக் கைகளில் சுமந்தவாறே செல்வதை மக்கள் கண்டார்கள்.

18 அதிகாரம்

1. பிலாத்துவுக்கு வந்திருந்த இரண்டாவது கடிதத்தைத் தனது படுக்கையில் சாய்ந்திருந்தவாறே அவர் படிக்கலானார்.

2. என் கவர்னரே!

3. என்னை ஏமாற்றிவிடாதீர்கள்.

4. உங்களிற்காக நிர்வாணத்தை அணிந்து ஒவ்வொரு இரவும் நான் என் தோட்டத்துக் குடிலில் வைக்கோல் படுக்கையில் தகித்திருக்கிறேன். என் உடற்சூடில் வைக்கோல்கள் கருகும் வாசனை உங்களை எட்டவில்லையா?

5. அய்ம்பத்தொரு வயதான பெண்ணென்றா என்னைத் தள்ளிவிடுகிறீர்கள்!

6. என் மாம்சம் இப்போதும் இளங் கன்றின் இறைச்சிதான் என் கண்ணாளரே.

7. ஒருமுறை என் உடலைப் ஸ்பரிசிக்க வாருங்கள்.

8. என் நாவால் உங்கள் ரோமக்கால்களில் நான் நீர் வார்ப்பேன்

9. உங்கள் உடற் சூட்டில் நான் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பேன்

10. என் குழந்தையை எனக்குத் தாருங்கள் கவர்னரே!

19 அதிகாரம்

1. பிலாத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு நாற்பதாவது நாளாகிற்று.

2. இப்போதெல்லாம் அதிகாலையிலேயே பிலாத்து எழுந்து மரியாவின் கடிதத்திற்காக நடுங்கும் கைகளுடன் காத்திருக்கலானார்.

3. இதுவரை எட்டுக் கடிதங்கள் மரியாவிடமிருந்து கவர்னருக்குக் கிடைத்திருக்கின்றன.

4. ஆனால் மரியாள் எழுதியிருந்ததன்படிக்கு மரியா ஒவ்வொரு நாளுமே கவர்னருக்குக் கடிதம் அனுப்புவதாகவே தெரிந்தது.

5. பிலாத்துவைக் காவலில் வைத்திருப்பவர்கள் அவற்றில் எட்டுக் கடிதங்களை மட்டுமே, அதுவும் கடிதங்களைப் பிரித்துப் படித்துவிட்டு எள்ளல் சிரிப்புடனும் போலிப் பணிவுடனும் பிலாத்துவிடம் கையளிக்கிறார்கள்.

6. அவர்கள் இந்தக் கடிதங்களை பிலாத்துவிற்கான தண்டனை ஓலைகளாகக் கருதியிருக்க வேண்டும்.

7. ஆனால் பிலாத்துவுடைய வாழ்க்கையில் இப்போது ஒரேயொரு பிடிமானம் மரியாவின் காதல் கடிதங்கள்தான். அவர் அந்தக் கடிதங்களை நாள் முழுவதும் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டேயிருந்தார்.

8. அந்தக் கடிதங்கள் அவருக்கு ஏனோ நம்பிக்கையை ஊட்டியவாறேயிருந்தன.

9. இரவுகளில் பிலாத்து அந்தக் கடிதங்களால் தனது கண்களை மறைத்துக்கொள்வார். பின் சிறிது சிறிதாகக் கடிதத்தை கண்களின் கீழே இறக்கி கிழக்குச் சாரளத்திற்கு வெளியே வானத்தில் நட்சத்திரம் தெரிகிறதா எனப் பார்ப்பார்.

10. இதுவரை ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பிலாத்து கண்டாரில்லை. மரியாவின் ஒவ்வொரு கடிதமும் அவருக்கு மனப்பாடமாயிருந்து.

20 அதிகாரம்

1. கவர்னரின் படுக்கையறைக்கு எதிரே அவரது மனைவியின் படுக்கையறை இருந்தது.

2. பல வருடங்களாகவே இருவரும் தனித் தனியேதான் உறங்கினார்கள். அவரது மனைவி வீட்டைவிட்டு வெளியேறி இப்போது ஆறு மாதங்களிருக்கும்.

3. ஒரு குழந்தையைக் கொடுக்க பிலாத்துவிடம் ஆண்மைச் சத்து இல்லாமலிருக்கிறது என மனைவி தொடுத்த விவாகரத்து வழக்கு நீதிமன்றில் இருக்கிறது.

4. பிலாத்துவின் ஆண்மைக் குறைவு குறித்து அவரது மனைவி பகிரங்கமாவே தேர்தல் கூட்டங்களில் நையாண்டி பண்ணியிருந்தார்.

5. பிலாத்துவின் மனைவியின் படுக்கையறை மிக அழகானதும் ஆடம்பரமானதுமாக இருந்தது.

6. ருஷ்யச் சக்கரவர்த்தி மகா ஜாரின் காலத்து அகன்ற கட்டிலும் பிரஞ்சுத் தளபாடங்களும் பெல்ஜியம் நிலைக் கண்ணாடிகளும் ஈரானியக் கம்பளங்களும் சீனத்துப் பட்டுத் திரைச் சீலைகளும் அங்கிருந்தன.

7. பிலாத்து தனது இடுப்புத் தோற் பட்டியால் அவரது மனைவியை அந்தப் படுக்கையில் போட்டு அடித்த அன்றுதான் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார். அந்தப் பெண் உதிர்த்த இரத்தம் அந்த அகன்ற படுக்கையின் வெண்பட்டுத் துணிகளில் திட்டுத் திட்டாகப் படிந்திருந்தன.

8. இப்போது மரியாவின் கடிதங்களால் அந்தப் படுக்கையை பிலாத்து நிறைத்திருக்கிறார். அந்தக் கடிதங்களின் மீது நிர்வாணமாக அவர் குப்புறப் படுத்துக்கொள்கிறார்.

9. மரியா எப்படியாக இருப்பார் எனத் தனது மனதிற்குள் பிலாத்து சித்திரங்களைத் தீட்டிக் கற்பனை செய்துகொள்கிறார்.

10. அவருடைய கற்பனையில் தலையிலும் மார்பிலும் பூக்களைச் சூடிக்கொண்டு கடற்கரையில் தனிமையில் உட்கார்ந்திருக்கும் குவேனியின் சித்திரம் தெரிகிறது.

21 அதிகாரம்

1. அன்றைய இரவில் கள்வன் பரபாஸ் கடற்கரையில் பதுங்கிப் பதுங்கி நடந்துகொண்டிருந்தான்.

2. அவனது கையில் பனை நார்களால் பின்னப்பட்ட கூடையிருந்தது. அவன் களங்கண்ணி வலைகளிலிருந்து திருடும் பெரிய இறால்களை அந்தக் கூடையில் போட்டுத்தான் எப்போதும் எடுத்துப்போவான்.

3. பரபாஸ் தனது ஆடைகளைக் களைந்து கடற்கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாகக் கடலிற்குள் இறங்கி பனை நார் கூடையை இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு முரல் மீன்போல களங்கண்ணி வலைக் கூட்டத்தை நோக்கி நீந்திச் செல்லலானான்.

4. கடலில் பாய்ச்சப்பட்டிருந்த களங்கண்ணி வலைகளை அவன் நெருங்கியபோது அங்கே இருளில் களங்கண்ணிக் கம்புகளைப் பிடித்தவாறே ஆட்கள் கடலில் பதுங்கியிருப்பது தெரிந்தது.

5. அந்த ஆட்கள் கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கிறார்கள்.

6. பரபாஸ் சடுதியில் திரும்பி கரையை நோக்கி வேகமாக நீந்தத் தொடங்கினான். அவன் பின்னே அவனைத் துரத்தி வருபவர்களின் கூச்சல் கேட்டது.

7. பரபாஸ் கரையேறிய இடம் அவன் ஆடைகளைக் களைந்து வைத்த இடமல்ல. ஆடைகளைத் தேட இது தருணமல்ல. அவனைத் துரத்தி வருபவர்கள் அவனை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

8. பரபாஸ் நிர்வாணமாக, இடுப்பில் கட்டப்பட்டிருந்த பனை நார் கூடையுடன் துரத்தி வருபவர்களின் கைகளிற்குத் தப்பி இருளிற்குள் ஓடி மறைந்துபோனான்.

22 அதிகாரம்

1. இருளில் ஓடிக்கொண்டிருந்த பரபாஸ் எதிரே ஒரு மதிற் சுவரைக் கண்டதும் ஒரே தாவாக அந்த மதிற் சுவரைத் தாண்டிக் குதித்தான்.

2. அவன் குதித்த இடம் ஒரு கனித் தோட்டமாகயிருந்தது.

3. பரபாஸ் ஒரு மரத்தின் பின்னே பதுங்கிநின்று அவதானித்தபோது சற்றுத் தூரத்தே பொட்டு வெளிச்சத்தைக் கண்டான். மெதுவாக அந்த வெளிச்சத்தை நோக்கி ஓசையெழாமல் நடந்து போனான்.

4. அந்த வெளிச்சம் ஒரு குடிலுக்குள் இருந்து வருகிறது. பரபாஸ் குடிலை நெருங்கி உள்ளே பார்த்தபோது அங்கே ஒரு வாசனை மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே தரையில் வைக்கோல் படுக்கையில் ஒரு பெண் நிர்வாணமாகக் கண்களை மூடிப் படுத்திருந்தார்.

5. பரபாஸ் ஒருகணம்தான் தயங்கினான். மறுகணம் இடுப்பிலிருந்த பனைநார் கூடையை எடுத்துத் தனது தலைவழியே கவிழ்த்துத் தனது முகத்தை மூடிக்கொண்டான்.

6. பனை நார்களின் நீக்கல்களிற்கூடாக அவனது கண்களால் பார்க்க முடிந்தது.

7. அவன் ஓசைப்படாமல் அந்தப் பெண்ணை நெருங்கி அவரது வாயைப் பொத்திவிடத் தனது உரமான நீண்ட வலது கையை வீசிய போது அந்தப் பெண்ணின் மெல்லிய இடது கரம் சட்டென நீண்டு அவன் வீசிய வலது கையைப் பற்றியிழுத்தது.

8. மரியா கண்களைத் திறந்து உதடுகளிற்குள் முணுமுணுத்தார்: ” உங்கள் வாசத்தால் உங்களை அறிவேன்!”

9. மரியா பேசியது பரபாஸிற்குப் புரியாததால் அவன் திகைத்து நின்றுவிட்டு மெதுவாகத் தனது தலையிலிருந்த கூடையைக் கழற்ற முயன்றபோது மரியா பரபாஸின் கையைப் பிடித்துத் தடுத்து “வேண்டாம் கவர்னரே முகமூடி இருக்கட்டும்” என்றார்.

10. பரபாஸ் தலையில் கூடையோடு அப்படியே மரியாவிற்கு அருகில் உட்கார்ந்தான்.

23 அதிகாரம்

1. மரியா மெதுவாகப் பரபாஸைப் படுக்கையில் சாய்த்தார்.

2. முதலில் அவனது கால் விரல்களைத் தனது நாவால் சுத்தப்படுத்தினார்.

3. பின்பு அவன் மீது முலைகளால் ஊர்ந்துசென்று குத்திட்டு நின்ற அவனது ஆணுறுப்பின் மீது தனது கால்களை விரித்து உட்கார்ந்து கொண்டு தனது கைகளை மேலே குடிலின் கூரையை நோக்கி உயர்த்திக்கொண்டார்.

4. மரியா தனது கண்களை மூடியவாறே தனது இடுப்பை அசைத்து மேலும் கீழுமாக இயங்கினார்.

5. அது ஒரு பெரிய பறவைக் குஞ்சு பறக்க எத்தனிப்பதைப் போலிருந்தது.

6. பின்பு மரியா பரபாஸைத் தழுவியவாறே அவனிற்குக் கீழாக வந்தார்.

7. பரபாஸ் தலையில் பனை நார் கூடையுடன் அப்படியே கால்களில் குத்திட்டு உட்கார்ந்து மரியாவின் இடுப்பைத் தூக்கித் தனது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு முயங்கினான்.

8. மரியா கண்களை மூடிக்கொண்டு தனது கால்களால் பரபாஸினது இடுப்பைக் கவ்விக்கொண்டார்.

9. பரபாஸ் எழுந்து வெளியே சென்றபோது மரியா மெதுவாகச் சொன்னார் “நாளை முன்னிரவில் காத்திருப்பேன் என் கவர்னரே!”

24 அதிகாரம்

1. பரபாஸ் தனது கூட்டாளிகளிகளோடு கள் அருந்திக்கொண்டிருந்தபோது மரியாவைப் பற்றிச் சொன்னான்.

2. நான் இப்படியொரு போகத்தை இதுவரை அனுபவித்ததில்லை.

3. அவள் பேசியது எதுவுமே எனக்குப் புரியவில்லை. அவள் எனது தலையிலிருந்து பனைநார் கூடையையும் கழற்றவே விடவில்லை. அதுவும் எனென்று தெரியவில்லை.

4. இரவு நடந்தது கனவா என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.

5. பரபாஸின் கூட்டாளி ஒருவன் கண்களைச் சுழற்றியவாறே ” எனக்கும் கனவு காணப் பிடிக்கும்” என்றான்.

25 அதிகாரம்

1. அன்றைய இரவு பரபாஸின் கூட்டாளி தலையில் பனைநார் கூடையைக் கவிழ்த்தவாறே நிர்வாணமாக மரியாவின் குடிலினுள் நுழைந்தான்.

2. ” வாருங்கள் கவர்னரே” என அழைத்த மரியா தனது நாவால் அவனது பாதங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

3. இப்படியாகப் பன்னிரெண்டு நாட்கள் பரபாஸின் பன்னிரெண்டு கூட்டாளிகள் மரியாவிடம் போய் வந்தனர்.

4. அந்தப் பன்னிரெண்டு கூட்டாளிகள் வழியே மரியா குறித்த செய்தி நகரத்தில் விரைவாகப் பரவிற்று.

5. மரியா விபச்சாரம் செய்கிறார் எனச் சனங்கள் கொந்தளித்து அவரின் வீட்டிற்குத் திரண்டு வந்தபோது மரியா வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயிருந்தார்.

6. சனங்கள் அந்தக் கனித் தோட்டத்தின் குடிலை எரித்துப்போட்டார்கள்.

7. அப்போது சன்னலைத் திறந்த மரியா, சனங்களை நோக்கித் தான் சேகரித்து வைத்திருந்த கற்களை வீசத் தொடங்கினார்.

8. முதற் கல்லே மரியாவிடம் கலகம் செய்த ஒருவனின் மண்டையை உடைத்துப்போட்டது.

26 அதிகாரம்

1. காவலர்கள் மரியாவைத் தம்மோடு அழைத்துப்போயினர். மரியா தனது பழைய தட்டச்சு இயந்திரத்தையும் தன்னோடு கொண்டுபோனார்.

2. காவல் நிலைய அதிகாரி கேட்ட கேள்விகளிற்கு எந்தப் பதிலையும் சொல்லாது மரியா தட்டச்சு செய்தவாறேயிருந்தார்.

3. அதிகாரி மரியாவை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

4. வைத்தியர் முன்னால் உட்கார்ந்து மரியா தட்டச்சுச் செய்து தாளை உருவி வைத்தியர் முன்னால் மேசையில் வைத்தார்.

5. அந்தத் தாளில் ‘நான் கர்ப்பவதியாக இருக்கிறேன்’ எனத் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்தது.

6. வைத்தியர் மரியாவைப் பரிசோதனை செய்துவிட்டு அவரை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

27 அதிகாரம்

1. சில நாட்களிற்குப் பிறகு மரியாவிடமிருந்து பிலாத்துக்கு கடிதம் வந்தது.

2. இம்முறை அந்தக் கடிதத்தை பெரும் கேலிக் கூச்சலுடன் காவலுக்கிருந்த இராணுவத்தினர் படித்துவிட்டு ஆளுக்காள் கைமாற்றிக்கொண்டிருந்தனர்.

3. அவர்களிடையே சிறு குழந்தைபோல ஓடி ஓடி அந்தக் கடிதத்தைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு பிலாத்து கெஞ்சித் திரிந்தார்.

4. கடைசியாக அந்தக் கடிதம் ஓர் இராணுவ அதிகாரியின் கைக்குப் போனபோது அவன் கடிதத்தையும் பிலாத்துவையும் மாறி மாறிப் பார்த்தவாறே கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு அதைத் தனது இருக்கையில் குண்டியின் கீழ் வைத்துகொண்டு , தன்னிடம் மரியாவின் கடிதத்தை இரந்துநிற்கும் பிலாத்துவிடம் “இல்லை சேர்..இந்தக் கடிதம் உங்களிற்கானதில்லை” என்றான்.

5. பிலாத்து சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு திரும்பித் தனது மனைவியின் படுக்கையறைக்கு வேகமாக ஓடிச் சென்றார்.

28 அதிகாரம்

1.அங்கே மதுபானப் போத்தல் வந்த காகித அட்டைப் பெட்டியில் அவரே வெட்டித் தயாரித்து வைத்திருந்த முகமூடி படுக்கையில் கிடந்தது.

2. பிலாத்துஅந்த முகமூடியை எடுத்துத் தனது முகத்தில் மாட்டியவாறே அந்த இராணுவ அதிகாரி முன்பு வந்து நின்றார்.

3. “இப்போது தெளிவாகிறது..இந்தக் கடிதத்திற்குரிய நபர் நீங்கள்தான் அய்யா” எனச் சொல்லிக்கொண்டே அந்த இராணுவ அதிகாரி கடிதத்தை எடுத்து பிலாத்துவிடம் கொடுத்தான்.

4. பிலாத்து நடுங்கும் கையால் கடிதத்தை வாங்கிக்கொண்டு மனைவியின் படுக்கையறையை நோக்கி ஓடிப் போனார்.

5. முகமூடிக்கு மேலாக மூக்குக் கண்டியை மாட்டிக்கொண்டு அவர் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினார்.

29 அதிகாரம்

1. மேன்மை மிக்க கவர்னரே!

2. நான் இப்போது கர்ப்பவதியாக உள்ளேன்.

3. என் வயிற்றின் கனியை நன்றாகப் பராமரிப்பதற்காக என்னை மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள்.

4. என் கனித்தோட்டத்தின் நடுவே என் குடிலின் வைக்கோல் சாம்பல் படுக்கையில்தான் நான் என் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறேன்.

5. என்னிடமிருந்து நீங்கள் பறித்த குழந்தையை என்னிடம் நீங்கள் திருப்பித் தருவது நீதியாகயிருந்தது .

6. அது நிறைவேறிற்று.

30 அதிகாரம்

1. அன்றைய இரவில் பிலாத்து கிழக்குச் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தபோது அடிவானத்திலிருந்து ஒரு வால் நட்சத்திரம் எழுவதைக் கண்டார். அந்த நட்சத்திரம் வடக்குத் திசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

2. பிலாத்து அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்தார்.

3. இராணுவத்தினர் ஒருவர் இருவராக வந்து சமையலறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுக் கேலி பேசிக்கொண்டு சென்றனர்.

4. பிலாத்து, சமையலானதும் பாற்சோற்றை ஒரு வெள்ளித் தட்டில் கொட்டினார்.

5. தனக்கு மகன் உண்டாகியிருக்கும் நற்செய்தியை அவர் இராணுவ வீரர்களிற்குப் பாற்சோறு வழங்கிக் கொண்டாடப் போகிறார்.

6. பிலாத்து பாற்சோறால் நிறைந்த வெள்ளித் தட்டோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தபோது அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை.

7. எல்லா வாசல்களும் திறந்து கிடந்தன.

3 thoughts on “அந்திக் கிறிஸ்து

  1. காலம் சனவரி 2018-ல் வெளியாகியது.

  2. இரகசிய முகாம்களென்றோ காணாமல் செய்ப்பட்டோரென்றோ இந்த நாட்டில் இப்போது யாரும் எதுவும் இல்லையென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.
    அரசியலை சொல்லும் அழகான புனைவு.

  3. தங்களின் கதைக்கு கமெண்ட் எழுதும் தகுதியை அடுத்த பிறவியிலாவது வளர்த்து கொள்ள வேண்டும் , என்னுடைய இப்போதைய வயது 43.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *